Showing posts with label முனைவர். ச.கண்மணி கணேசன். Show all posts
Showing posts with label முனைவர். ச.கண்மணி கணேசன். Show all posts

Monday, April 13, 2020

நாட்டார் வழக்காற்று முளைப்பாரிப் பாடலும் மாங்குடி கிழார் புறப்பாடலும்


—   முனைவர்.ச.கண்மணி கணேசன்


முன்னுரை:
      தாய்த்தெய்வ வழிபாட்டிற்குரிய கும்மிப் பாடல்களில் முளைப்பாரி வளர்க்கும் முறை இடம்பெறுகிறது. களஆய்வில் சேகரித்த தனிப்பாடல்,  முத்தாலம்மன் கதைப் பாடல் இரண்டிலும் முளைப்பாரிக்குரிய பயிர்கள் எவை என்பது பற்றிய செய்திகள் உள்ளன. இச்செய்தி சங்க இலக்கியத்தில் இடம்பெறும் மாங்குடி கிழாரின் புறநானூற்றுப் பாடலை நினைவூட்டுகிறது. குறிப்பிட்ட புறப்பாடலில் இடம்பெறும் பயிர்களுக்கும்; முளைப்பாரிக் கும்மிப்பாட்டில் உள்ள பயிர்களுக்கும் ஒப்புமை இருப்பதன் காரணம் காண முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். “Who Are Dravidians?” என்ற தன் ஆய்வுக்கட்டுரையில் (ப.- 1-32) முனைவர் ஆண்ட்ரே எஃப் .ஜோபெர்க் ‘திராவிட நாகரிகம் அழிந்துவிட்டது’ என்று முடிபாகக் கூறியிருப்பதால் இத்தகைய ஒப்பாய்வு தேவையாகிறது.   

      முதல்நிலைத் தரவாக முத்தாலம்மன் கதைப்பாடல் செய்தி, புறம் 335ம் பாடல் செய்தி இரண்டும் அமைய; இரண்டாம்நிலைத் தரவாகத் தனிக் கும்மிப்பாட்டுச்செய்தியும் பிற புறநானூற்றுச் செய்திகளும் அமைகின்றன.  இருவேறு காலமும் வகையும் சேர்ந்த இவ்விலக்கிய ஒப்பாய்வு தமிழ்ச் சமூகவரலாற்றில் தெளிவு காண உதவுகிறது. 

முளைப்பாரி வளர்ப்பதற்குரிய பயிர்கள்:
      புன்செய்ப் பயிர்களே முளைப்பாரிக்கு உரிய பயிர்களாகும்.  முத்தாலம்மன் கதைப் பாடலில் முளைப்பாரி வளர்ப்பதற்குரிய பயிர்களாகச் சொல்லப்படுபவை காராமணி, தட்டைப்பயறு, சிறுபயறு ஆகிய மூன்றாகும்.    
            "சின்னகொட்டான் பெட்டிகொண்டு 
            தெருக்களெல்லாம் பயிரெடுத்து 
            வாங்களம்மா தோழிமாரே அம்மாவுக்கு முளைபோட 
            என்தாயே ஈஸ்வரியே
            காரா மணிபயிறு கலந்துவைச்ச தட்டப்பயறு 
            சிறு பயறும் தானெடுத்து 
            என்தாயே ஈஸ்வரியே… [219]

(https://kanmanitamil.blogspot.com/2019/11/blog-post.html) மூன்றையும் ஒன்றாகக் கலக்கின்றனர். மண்பானை ஓட்டை எடுத்து; ஆட்டுப்புழுக்கை, மாட்டுச் சாணம் இரண்டையும் கலந்து; கம்பந்தட்டை, வைக்கோலாகியவற்றைச் சேர்த்துப் பரப்பி; அதன் மேல் பயறுகளை விதைக்கின்றனர். இப்பயறுகள் புன்செய்ப் பயிர்வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.          


      முளைப்பாரி பற்றிய தனிக் கும்மிப்பாட்டில் மேற்சுட்டிய மூன்று பயறுகள் மட்டுமின்றி இன்னும் சில சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளன. அவரை, துவரை, ஐந்துவகை மொச்சை(கருப்பு மொச்சை, வெள்ளை மொச்சை, பச்சை மொச்சை, புள்ளி மொச்சை முதலியன இன்று நமக்குத் தெரிந்த வகைகள்), ஆமணக்கு, எள், சிறுபயறு, கொண்டைக்கடலை, காராமணி என்று பட்டியல் சிறிது நீள்கிறது (https://kanmanitamil.blogspot.com/2020/02/blog-post.html).  

"என்னகச்ச இடுப்பிலிட்டு வண்ணப்பொட்டி தலையிலிட்டு- அங்க 
பெரியவீடு‘ன்னு சொல்லி பிச்சை கேட்டு வந்தோம் அம்மா- அந்த
பூமியிலே வெளஞ்ச பண்டம்; புதுப் பண்டம் போடுங்கம்மா- அந்த 
நாட்டிலே வெளஞ்ச பண்டம் ;நல்ல பண்டம் போடுங்கம்மா- நம்ம 
காணியிலே வெளஞ்ச பண்டம் ; கலந்த பண்டம் போடுங்கம்மா 
அவர துவர மொச்ச அஞ்சுவகை ஆமணக்கு 
எள்ளு சிறுபயறு ஏத்த மணிப்பயறு 
கடல சிறுபயறு காரமணிப் பயறு 
வாங்கிவந்த பயறுகள வாளியில ஊறப்போட்டு 
கொண்டுவந்த பயறுகள  கொடத்துல ஊறப்போட்டு……………” 
என்ற பாடற்பகுதியைத் தொடர்ந்து செய்முறையும் நுட்பமான விவரம் கொண்டுள்ளது. எல்லாப் பயறுகளையும் ஊறப் போட்டு; மண்பானை ஓட்டில்; ஆட்டுச்சாணம், மாட்டுச்சாணம், கம்பந்தட்டை, வைக்கோல்; சோளத்தட்டை எல்லாம் சேர்த்துப் பரப்புகின்றனர். சாணம் கட்டியாக இல்லாதபடி பொடிக்கின்றனர். நன்கு விளைய ஏதுவாகத் தட்டைகளின் கணுக்களை நெரிக்கின்றனர். சாணத்துடன் அமுக்கி விதைக்கின்றனர். பயறுகள், எள், ஆமணக்கு அனைத்தும் புன்செய்ப் பயிர்களே.    

மாங்குடி கிழார் பாடலில் இடம்பெறும் பயிர்கள்:
            “அடலருந் துப்பின் ……………
            குரவே தளவே குருந்தே முல்லையென் 
            றிந்நான் கல்லது பூவுமில்லை 
            கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே 
            சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையோடு 
            இந்நான் கல்லது உணாவும்  இல்லை…………
            கல்லே பரவின் அல்லது 
            நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம்- 335) 
இப்பாட்டு தமிழ்ச்சமூக வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. வருணத்தார் வருகைக்குப் பின் தமிழகச் சூழல் எப்படி மாறியது என்று தொகுத்துரைக்கிறார் புலவர். குரவு, தளவு, குருந்து, முல்லை முதலிய பூக்கள் தவிர்ந்த பிற பூக்களின் பயன்பாடு போர்முறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது; வேந்தர்க்கும் குறுநில மன்னர்க்கும் இடையே உருவான அதிகாரப் போட்டியில் திணை மாந்தர்க்கு; வெட்சி முதலாக வாகை ஈறாகப் போரின் பல நிலைகட்குரிய அடையாளப் பூக்களின் தேவை ஏற்பட்டது. மரபு வழிப்பட்ட வரகு, தினை, கொள், அவரை முதலிய புன்செய்ப்பயிர்களின் வேளாண்மையோடு நெல் வேளாண்மையும் செய்ததைக் குறிப்பாகச் சுட்டுகிறார். கள்ளைப் படைத்து நடுகல்லை வழிபட்ட நிலைமாறிக்; கடவுளர்க்கு நெல்தூவி வழிபடும் வழக்கம் தோன்றிய மரபு மாற்றத்தையும் ஆவணப்படுத்துகிறார். இப் பாடலைச் சமூகவரலாற்று அடிப்படையில் விளக்க பதிப்பித்தவரும் உரையாசிரியரும் முற்படவில்லை. மாங்குடிகிழார் குறிப்பிடும் தமிழர் உணவு அனைத்தும் புன்செய்ப் பயிராகும். அவரை என்பது பயறு வகைகளுக்குரிய பொதுப்பெயர் ஆகும்.   திணைமாந்தரான தொல்தமிழர் புன்செய் வேளாண்மையை மரபாகக் கொண்டவர் என்பதை எடுத்துக்காட்டும் பிற புறப்பாடல்களும் உள. 

கரும்பனூர் கிழானது ஊர்; 
            “வன்பாலாற் கருங்கால் வரகின் 
            அரிகாற் கருப்பை அலைக்கும் பூழின் 
            அங்கட் குறுமுயல் வெருவ அயல 
            கருங்கோட்டு இருப்பைப் பூவுறைக்குந்து  ”- (புறம்.- 384) 
என  வருணிக்கப்படுகிறது. காட்டில் விளையும் வரகும், அரிகாலில் வாழும் எலியைப் பிடிக்க முயலும் குறும்பூழ்ப் பறவையின் ஆரவாரமும், அதன் காரணமாக அஞ்சி ஓடும் முயலும், அதன் ஓட்டத்தில் இருப்பை மரத்துப் பூக்கள் உதிர்வதும்; அவனது புன்செய் வேளாண்மையை உறுதிப்படுத்தும் சான்றுகளாம். அவனிடம் விருந்தயர்ந்த கிணைப்பொருநன்;

            "பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும் 
            அளவுபு கலந்து மெல்லிது பருகி ………….
            இருநிலம் கூலம் பாறக் கோடை"யில் (புறம்.- 381) 
            இருந்ததாகப் பாடுகிறான். ‘மன்னர் மனை சென்று ஊனுணவிற்காகக் காத்துத் துன்புற வேண்டாம்; எவ்வளவு தொலைவிலிருந்தாலும்; வறட்சிக்காலத்தில்  என்னிடம் வந்து பாலிற்கரைத்தும், பாகுடன் சேர்த்தும் வயிறார உண்டு செல்க’ என்கிறான். பாகிற் கொண்டதாவது உளுந்தங்களி ஆகும்.

       "உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை" (அகம்.- 86) 
என்று நல்லாவூர் கிழார் பாடும் உளுந்தங்களி இன்றும் கருப்பட்டிப் பாகுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு உணவுவகை ஆகும். பாலிற் பெய்த உணவு பாலுடன் கூடிய வரகரிசிச் சோறாகும்.   

ஆலத்தூர் கிழார் புன்செயில் விளைந்த வரகுச்சோற்றைப் பாலோடு உண்பதை;
            "................................புன்புல வரகின் 
            பாற்பெய்…………………………………..
            அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்" (புறம்.- 34) 
என்று விரிவாகப் பாடியுள்ளார்.

      கிள்ளிவளவன் பஞ்சகாலத்தில் பண்ணன் மக்கள் பசியாற்றிய  தன்மையைக் கூறி அவனைப் ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று போற்றிப்  புகழ்ந்தமைக்கும் (புறம்- 173) இப்புன்செய் வேளாண்மையே காரணம்  எனலாம். நீர்வளம் குன்றிய போதும்; அதாவது நெற்கழனி பயன்தராத போதும்;
            “வெள்ளி தென்புலத் துறைய விளைவயற் 
            பள்ளம் வாடிய பயனில் காலை……….
            வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம் 
            பெயர்க்கும் பண்ணன்” (புறம்- 388) 
என்ற அடிகள் புலவர்க்குப் புல்லின் விளைநிலத்தைத் தானமாகக் கொடுக்கக் கூடியவன் என்கின்றன.  

            வலார்கிழான் பண்ணன்;
            "பெருங்குறும் புடுத்த வன்புல இருக்கை"- (புறம்.- 181) 
உடைய  தலைவன் என்று பாடல் பெற்றுள்ளான். இங்கு வன்புலம் புன்செய் ஆகும்.   இதனால் தொல்தமிழகத்து இனக்குழுத் தலைவராகிய கிழார்கள்  புன்செய்ப்பயிர் செய்தவர் என்பதும்; வேளாளர் வந்தேறிய பின்னரே அவர் நெற்பயிர் விளைவித்தனர் என்பதும்; புன்செய் வேளாண்மை மரபின் எச்சமே முளைப்பாரி வளர்த்து வழிபடும் வழக்கம் என்பதும் புலனாகிறது.   

முடிவுரை:
      பயறுவகைகள், எள், ஆமணக்கு ஆகியவற்றை முளைப்பாரியாக வளர்த்துப் படைத்துக் கும்மியடித்து வழிபடுவது; தொல்தமிழராகிய இனக்குழுச் சமுதாயத்தின் மரபாகும். திராவிட நாகரிகம் அழிந்துவிட்டது என்ற முனைவர் ஆண்ட்ரே எஃப் .ஜோபெர்கின் முடிவு மீளாய்விற்குரியது.  


துணைநூற்பட்டியல்:
1.  அகநானூறு- களிற்றியானை நிரை- ந.மு.வேங்கடசாமி நாட்டார்& ரா.வேங்கடாசலம் பிள்ளை (உ.ஆ.)- கழக வெளியீடு- முதல் பதிப்பின் மறு பதிப்பு- 2009   
2.  புறநானூறு l& ll - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.)- கழக வெளியீடு- 438& 598- முதற்பதிப்பின் மறுஅச்சு- 2007
3.  Symposium On Dravidian Civilization- Andre F.Sjoberg (editor)- publn. no.1- ASIAN SERIES of the Center for Asian Studies of the University of Texas, Austin- 1971 


குறிப்பு:  இது திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் 24.02.2020 அன்று நடந்த ஒப்பிலக்கிய பண்பாட்டு ஆய்வுக் கருத்தரங்கிற்கு அனுப்பிய ஆய்வுக்கட்டுரை.




தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி




Saturday, February 29, 2020

தொல்காப்பியத்தில் நவீன சிந்தனைகள்


—   முனைவர்.ச.கண்மணி கணேசன்


          ஆசிரியர் நூலுக்கு மாணவர் கருத்துரை கூறுவது மரபுவழிப்பட்ட பணி; எனினும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இப்பணியை மேற்கொள்கிறேன். புதிய சிந்தனை, புதுப் பார்வை, புதுக்கருத்து இவற்றிலெல்லாம் மிகுந்த நாட்டம் கொண்டவர் எம் ஆசிரியை திருமதி பொ.நா.கமலா அவர்கள். ஆராய்ச்சிக்கு வயதோ உடல்நலமோ வரம்பு கட்ட முடியாது. மனத்தின் ஆர்வம் ஒன்றே ஆய்வுப்பணியைத் தொடர வைக்கவும், நிறைத்து வைக்கவும் இயலும். அந்த மனத்திட்பத்தைச் சரிவர எடுத்துக் காட்டுவதாக இந்தக் கருத்துரை அமைய வேண்டுவது இன்றியமையாதது. எனவே பொறுப்பின் கனம் மிகுதியானது என்பதைப் புரிந்து கொண்டு நூலைப் பயின்றேன். 

          தொல்காப்பியம் ஒரு படைப்பு நூல் என்று சொல்வதைக் காட்டிலும்; 'பிரதி' என்று சொல்லக் கூடிய தகுதி உடையது என்னும் கருத்தை முதல் கட்டுரை சான்றுகளுடன் விளக்கிக் காட்டுகிறது. பிரதிக்குரிய பல பண்புகளுள் இசை திரிந்திசைத்தல், ஆடையின் உற்பத்தியை ஒத்திருத்தல், தந்திக் கம்பியைப் போன்ற செயற்பாடு, உபபிரதிகள் உருவாக இடந்தருதல், பல குறிகளின் சேர்க்கையாக அமைதல், மனிதமன விடுதலைக்கு வித்திடுதல், சமூக இயக்கத்திற்கு ஆதாரமாதல் என ஏழு பண்புகளைத் தொகுத்துத் தருகிறார். குறியியல், தொடர்பியல், அமைப்பியல் என்ற மூன்று கொள்கைகளை அடியொட்டிய பிற ஆறு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. 

          இலக்கிய ஆய்வைப் பொருத்தவரை தொல்காப்பியர் உலக முன்னோடி என்பதை நிலைநாட்ட 'தொல்காப்பியமும் குறியியலும்' என்ற ஆய்வு துணை செய்கின்றது. மேனாட்டார் ஆய்வியல் வழி நம் தாய்மொழி இலக்கியத்தை நோக்க வேண்டிய தேவை என்ன என்ற சிலரது காரமான விவாதங்களுக்கு இத்தகைய ஆய்வுக்கட்டுரைகள் நல்ல சாரத்தைப் பதிலாகத் தருகின்றன. நூலாசிரியரின் நுட்பமான நோக்கும் ஆழ்ந்த சிந்தனையும் தனித்திறனும்; அவர் குறி பற்றிப் பதினைந்து கருத்துக்களைத் தொகுத்தளிப்பதிலிருந்து புலப்படுகின்றன.

          'தொல்காப்பியத்தில் அரங்கக் குறிகள்'- இக்கட்டுரையில் இடம் பெறும் புதுக் கலைச்சொற்கள் மட்டுமே தொல்காப்பியத்திற்கும் சங்க இலக்கியத்திற்கும் புறம்பானவை. ஆனால் மேலைநாட்டாரின் திறனாய்வுப் பார்வை 2000 ஆண்டுகட்கு முன்னர் நம் தொல்காப்பியர் கொண்டிருந்த பார்வை. அவரது பார்வையைத் தொடர்ந்து 2000 ஆண்டுகளாக நம் தமிழுலகம் வளர்த்துக் கொள்ளவில்லை என்ற உண்மை மனதிற்குள் கசக்கிறது. இன்று தமிழிலக்கியத்தில் மேலைநாட்டுத் திறனாய்வாளர் பின்பற்றிய பார்வைகளை மேற்கொள்வதால் இந்த நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்துள்ள வளம் கலைச்சொல்வளம் என்று சொன்னால் அது மிகையாகாது. இக்கலைச் சொற்களைக் கட்டுரையின் போக்கில் ஆங்காங்கு; ஆங்கிலக் கலைச்சொற்களை அடைப்புக்குறிக்குள் இட்டு; நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார். தொடக்க நிலையில் இது கட்டுரையைப் புரிந்து கொள்ளத் துணை செய்கிறது. கட்டுரைச் செய்தியை நன்கு புரிந்து கொண்ட பின்னரோ சீரான ஓட்டத்திற்குச் சிறுதடையாக உள்ளது. பரற்கற்கள் உறுத்தும் பாதசாரியின் நிலையில் தவிக்க வேண்டியுள்ளது. இந்நிலை தவிர்க்க முடியாதது. எனினும் நூலின் இறுதியில் நூலாசிரியர் தமிழ் ஆய்வியலின் புதுக்கலைச்சொற் பட்டியல் ஒன்றைத் தயார் செய்து கொடுத்தால் அது இனி வரும் ஆய்வாளர்க்கு மிக்க பயனைத் தரும். 

          'தொடர்பியல் - சில நோக்குகள்' என்ற கட்டுரை இருவகைப் போக்குகளைக் கொண்டுள்ளது. முற்பகுதி மேனாட்டார் ஆய்வுக் கொள்கைகளைத் தொல்காப்பியத்தில் தேடிப் பொருத்தும் முயற்சியாக அமைகிறது. அம்முயற்சியில் முழுமையாக வெற்றியடைந்தும் உள்ளார். பிற்பகுதியில் ஒரு புது முறை; ஆய்வுக் கட்டுரையின் தரத்தை மேம்படுத்தித் தனித்துவப்படுத்துகிறது. அகப்பாடலில் ஆண்பாற்கவிஞர் அம்மூவனார் பாடலில் இடம்பெறும் தொடர்பியல் உத்தியையும் பெண்பாற் கவிஞர்கள் ஔவையார், நக்கண்ணையார் ஆகியோர் பாடல்களில் இடம் பெறும் தொடர்பியல் உத்தியையும் ஒப்பிட்டு ஆராய்கிறார். இரத்தினச் சுருக்கமாக அமையும் இவ்வாய்வுக்கு மிக ஆழமான நுட்பமான அறிவும் பயிற்சியும் தேவை. தமிழ் ஆய்வுலகில் சங்க இலக்கிய அகப்பாடல் ஆய்வு புதுக்கோணத்தில் திருப்பம் பெற இப்பார்வை துணை செய்கிறது. 

          'முன்னம்- தொடர்பியல் பணி' என்ற கட்டுரை தொல்காப்பியம் சுட்டும் 'முன்னம்' என்ற உறுப்பு பற்றிய முழுமையான விளக்கக் கட்டுரையாக அமைகிறது. அதன் பல்வேறு பரிமாணங்களைத் தொகுத்துத் தருகிறார் ஆசிரியர். பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும் முன்னம் தொடரியல் அமைப்பின் அலகாகவும்; பொருளியல் அமைப்பின் அலகாகவும் செயல்படுகிறது. அது மட்டுமின்றி இலக்கியத்தில் உடல்மொழித் தொடர்பியல் அலகாக; அதாவது மெய்ப்பாட்டியல் அலகாகப் பயின்று வருவதையும் எடுத்துக் காட்டுகிறார். 

          'இலக்கியக் கலையில் முன்னக்கோட்பாடு' பற்றி ஆராய்ந்து எழுதும் போது புறஇலக்கியத்தில் இடம் பெறும் குறிப்புப்பொருள், அக இலக்கியத்தில் இடம் பெறும் உள்ளுறை உவமமும் இறைச்சியும், குறிப்புமொழி எனும் இலக்கிய வகை, புதுக்கவிதையின் இருண்மை நீக்கம் ஆகியவற்றைச் சான்றுகளோடு விளக்கிச் செல்கிறார். 'முன்னம்' என்ற உறுப்பை ஒரு கருவியாக அளவுகோலாகக் கொண்டு உள்ளுறை உவமத்தையும் இறைச்சியையும் விளக்கி ஒப்பிடும் போது அவ்விரண்டும் கவர்மொழியில் கருத்தை விளக்கும் சிறந்த வாயில்கள் என்ற ஒற்றுமையை முதலில் எடுத்துக் காட்டுகின்றார். பின்னர் இரண்டிற்கும் இடையே உள்ள நுட்பமான வேறுபாடுகளைத் தெளிவாக வரையறை செய்து இனம் பிரித்துக் காட்டியிருப்பது இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ள ஒரு புதையல் என்றால் அது மிகையாகாது. வரிக்கு வரி இருண்மை நிறைந்த புதுக்கவிதை ஒன்றைத் தெரிவு செய்து முன்னத்தின் மூலம் பொருள் விளக்கம் கொடுக்கிறார். இனிச்செய்ய வேண்டியன இன்னின்ன என்று என்று தொகுத்தும் தந்துள்ளார். இந்த ஆய்வின் மூலம் பல வளமான புது ஆய்வுகளுக்கு வழி கிட்டுகிறது. அதனால் முன்னம் பற்றிய ஆய்வின் மதிப்பு உயர்கிறது. 

          'தொல்காப்பியத்தில் அமைப்பியல் சிந்தனைகள்' உள்ளன என்று பலவேறு கோணங்களில் நோக்கிக் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார். அமைப்பியல் கோட்பாடு மேனாட்டில் தோன்றி வளர்ந்து வரும் கொள்கையாகும். நம் சமூகத்தின் பரம்பரைச் சொத்தான தொல்காப்பியத்தில் அக்கோட்பாடுகளைப் பொருத்திக் காண்கிறார். அமைப்பியல் கோட்பாடுகளில் பல கருத்து வேறுபாடுகட்கு உட்படக்கூடியவை தாம். எனினும் அவற்றை ஒதுக்கி வைக்க வேண்டிய நியதி ஏதுமில்லை. 

          மேலைநாட்டுத் திறனாய்வுக் கொள்கைகளைப் பயிலவேண்டும் என்ற முனைப்பு ஏற்படுவதே குறிப்பிடத்தக்க அம்சம் தான். முனைப்பு ஏற்பட்டபின் அவற்றைப் பயின்று புரிந்துகொண்டு நம் இலக்கியத்தில் அத்தகைய ஆய்வுகளைச் செய்து பார்ப்பது பெரிய சாதனையே. ஆராய்ச்சி உலகைப் பொருத்தவரை மரபை மீறுவது என்பது எளிதில் யாரும் ஏற்றுக் கொள்ள இயல்வது அன்று. இப்பிரதியில் உள்ள ஏழு கட்டுரைகளும் தத்தம் போக்கில் புதுக்கருத்துக்களைத் தருகின்றன. நம்முள் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றன. நம் முன்னோர் மறந்தவற்றை நினைவூட்டுகின்றன. தமிழ் ஆய்வுலகில் இந்நூல் ஒரு மைல்கல்லாக அமையும் என்பது உறுதி. 

(குறிப்பு: டிசம்பர் 1997ல் முனைவர் பொ.நா.கமலா எழுதி பெங்களூர் காவ்யா பதிப்பகம் மூலம் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பிற்கு 20.10.1997ல் நான் அளித்த கருத்துரை)




தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி