— முனைவர்.ச.கண்மணி கணேசன்
முன்னுரை:
தாய்த்தெய்வ வழிபாட்டிற்குரிய கும்மிப் பாடல்களில் முளைப்பாரி வளர்க்கும் முறை இடம்பெறுகிறது. களஆய்வில் சேகரித்த தனிப்பாடல், முத்தாலம்மன் கதைப் பாடல் இரண்டிலும் முளைப்பாரிக்குரிய பயிர்கள் எவை என்பது பற்றிய செய்திகள் உள்ளன. இச்செய்தி சங்க இலக்கியத்தில் இடம்பெறும் மாங்குடி கிழாரின் புறநானூற்றுப் பாடலை நினைவூட்டுகிறது. குறிப்பிட்ட புறப்பாடலில் இடம்பெறும் பயிர்களுக்கும்; முளைப்பாரிக் கும்மிப்பாட்டில் உள்ள பயிர்களுக்கும் ஒப்புமை இருப்பதன் காரணம் காண முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும். “Who Are Dravidians?” என்ற தன் ஆய்வுக்கட்டுரையில் (ப.- 1-32) முனைவர் ஆண்ட்ரே எஃப் .ஜோபெர்க் ‘திராவிட நாகரிகம் அழிந்துவிட்டது’ என்று முடிபாகக் கூறியிருப்பதால் இத்தகைய ஒப்பாய்வு தேவையாகிறது.
முதல்நிலைத் தரவாக முத்தாலம்மன் கதைப்பாடல் செய்தி, புறம் 335ம் பாடல் செய்தி இரண்டும் அமைய; இரண்டாம்நிலைத் தரவாகத் தனிக் கும்மிப்பாட்டுச்செய்தியும் பிற புறநானூற்றுச் செய்திகளும் அமைகின்றன. இருவேறு காலமும் வகையும் சேர்ந்த இவ்விலக்கிய ஒப்பாய்வு தமிழ்ச் சமூகவரலாற்றில் தெளிவு காண உதவுகிறது.
முளைப்பாரி வளர்ப்பதற்குரிய பயிர்கள்:
புன்செய்ப் பயிர்களே முளைப்பாரிக்கு உரிய பயிர்களாகும். முத்தாலம்மன் கதைப் பாடலில் முளைப்பாரி வளர்ப்பதற்குரிய பயிர்களாகச் சொல்லப்படுபவை காராமணி, தட்டைப்பயறு, சிறுபயறு ஆகிய மூன்றாகும்.
"சின்னகொட்டான் பெட்டிகொண்டு
தெருக்களெல்லாம் பயிரெடுத்து
வாங்களம்மா தோழிமாரே அம்மாவுக்கு முளைபோட
என்தாயே ஈஸ்வரியே
காரா மணிபயிறு கலந்துவைச்ச தட்டப்பயறு
சிறு பயறும் தானெடுத்து
என்தாயே ஈஸ்வரியே… [219]
(https://kanmanitamil.blogspot.com/2019/11/blog-post.html) மூன்றையும் ஒன்றாகக் கலக்கின்றனர். மண்பானை ஓட்டை எடுத்து; ஆட்டுப்புழுக்கை, மாட்டுச் சாணம் இரண்டையும் கலந்து; கம்பந்தட்டை, வைக்கோலாகியவற்றைச் சேர்த்துப் பரப்பி; அதன் மேல் பயறுகளை விதைக்கின்றனர். இப்பயறுகள் புன்செய்ப் பயிர்வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முளைப்பாரி பற்றிய தனிக் கும்மிப்பாட்டில் மேற்சுட்டிய மூன்று பயறுகள் மட்டுமின்றி இன்னும் சில சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளன. அவரை, துவரை, ஐந்துவகை மொச்சை(கருப்பு மொச்சை, வெள்ளை மொச்சை, பச்சை மொச்சை, புள்ளி மொச்சை முதலியன இன்று நமக்குத் தெரிந்த வகைகள்), ஆமணக்கு, எள், சிறுபயறு, கொண்டைக்கடலை, காராமணி என்று பட்டியல் சிறிது நீள்கிறது (https://kanmanitamil.blogspot.com/2020/02/blog-post.html).
"என்னகச்ச இடுப்பிலிட்டு வண்ணப்பொட்டி தலையிலிட்டு- அங்க
பெரியவீடு‘ன்னு சொல்லி பிச்சை கேட்டு வந்தோம் அம்மா- அந்த
பூமியிலே வெளஞ்ச பண்டம்; புதுப் பண்டம் போடுங்கம்மா- அந்த
நாட்டிலே வெளஞ்ச பண்டம் ;நல்ல பண்டம் போடுங்கம்மா- நம்ம
காணியிலே வெளஞ்ச பண்டம் ; கலந்த பண்டம் போடுங்கம்மா
அவர துவர மொச்ச அஞ்சுவகை ஆமணக்கு
எள்ளு சிறுபயறு ஏத்த மணிப்பயறு
கடல சிறுபயறு காரமணிப் பயறு
வாங்கிவந்த பயறுகள வாளியில ஊறப்போட்டு
கொண்டுவந்த பயறுகள கொடத்துல ஊறப்போட்டு……………”
என்ற பாடற்பகுதியைத் தொடர்ந்து செய்முறையும் நுட்பமான விவரம் கொண்டுள்ளது. எல்லாப் பயறுகளையும் ஊறப் போட்டு; மண்பானை ஓட்டில்; ஆட்டுச்சாணம், மாட்டுச்சாணம், கம்பந்தட்டை, வைக்கோல்; சோளத்தட்டை எல்லாம் சேர்த்துப் பரப்புகின்றனர். சாணம் கட்டியாக இல்லாதபடி பொடிக்கின்றனர். நன்கு விளைய ஏதுவாகத் தட்டைகளின் கணுக்களை நெரிக்கின்றனர். சாணத்துடன் அமுக்கி விதைக்கின்றனர். பயறுகள், எள், ஆமணக்கு அனைத்தும் புன்செய்ப் பயிர்களே.
மாங்குடி கிழார் பாடலில் இடம்பெறும் பயிர்கள்:
“அடலருந் துப்பின் ……………
குரவே தளவே குருந்தே முல்லையென்
றிந்நான் கல்லது பூவுமில்லை
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையோடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை…………
கல்லே பரவின் அல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே” (புறம்- 335)
இப்பாட்டு தமிழ்ச்சமூக வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. வருணத்தார் வருகைக்குப் பின் தமிழகச் சூழல் எப்படி மாறியது என்று தொகுத்துரைக்கிறார் புலவர். குரவு, தளவு, குருந்து, முல்லை முதலிய பூக்கள் தவிர்ந்த பிற பூக்களின் பயன்பாடு போர்முறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது; வேந்தர்க்கும் குறுநில மன்னர்க்கும் இடையே உருவான அதிகாரப் போட்டியில் திணை மாந்தர்க்கு; வெட்சி முதலாக வாகை ஈறாகப் போரின் பல நிலைகட்குரிய அடையாளப் பூக்களின் தேவை ஏற்பட்டது. மரபு வழிப்பட்ட வரகு, தினை, கொள், அவரை முதலிய புன்செய்ப்பயிர்களின் வேளாண்மையோடு நெல் வேளாண்மையும் செய்ததைக் குறிப்பாகச் சுட்டுகிறார். கள்ளைப் படைத்து நடுகல்லை வழிபட்ட நிலைமாறிக்; கடவுளர்க்கு நெல்தூவி வழிபடும் வழக்கம் தோன்றிய மரபு மாற்றத்தையும் ஆவணப்படுத்துகிறார். இப் பாடலைச் சமூகவரலாற்று அடிப்படையில் விளக்க பதிப்பித்தவரும் உரையாசிரியரும் முற்படவில்லை. மாங்குடிகிழார் குறிப்பிடும் தமிழர் உணவு அனைத்தும் புன்செய்ப் பயிராகும். அவரை என்பது பயறு வகைகளுக்குரிய பொதுப்பெயர் ஆகும். திணைமாந்தரான தொல்தமிழர் புன்செய் வேளாண்மையை மரபாகக் கொண்டவர் என்பதை எடுத்துக்காட்டும் பிற புறப்பாடல்களும் உள.
கரும்பனூர் கிழானது ஊர்;
“வன்பாலாற் கருங்கால் வரகின்
அரிகாற் கருப்பை அலைக்கும் பூழின்
அங்கட் குறுமுயல் வெருவ அயல
கருங்கோட்டு இருப்பைப் பூவுறைக்குந்து ”- (புறம்.- 384)
என வருணிக்கப்படுகிறது. காட்டில் விளையும் வரகும், அரிகாலில் வாழும் எலியைப் பிடிக்க முயலும் குறும்பூழ்ப் பறவையின் ஆரவாரமும், அதன் காரணமாக அஞ்சி ஓடும் முயலும், அதன் ஓட்டத்தில் இருப்பை மரத்துப் பூக்கள் உதிர்வதும்; அவனது புன்செய் வேளாண்மையை உறுதிப்படுத்தும் சான்றுகளாம். அவனிடம் விருந்தயர்ந்த கிணைப்பொருநன்;
"பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி ………….
இருநிலம் கூலம் பாறக் கோடை"யில் (புறம்.- 381)
இருந்ததாகப் பாடுகிறான். ‘மன்னர் மனை சென்று ஊனுணவிற்காகக் காத்துத் துன்புற வேண்டாம்; எவ்வளவு தொலைவிலிருந்தாலும்; வறட்சிக்காலத்தில் என்னிடம் வந்து பாலிற்கரைத்தும், பாகுடன் சேர்த்தும் வயிறார உண்டு செல்க’ என்கிறான். பாகிற் கொண்டதாவது உளுந்தங்களி ஆகும்.
"உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை" (அகம்.- 86)
என்று நல்லாவூர் கிழார் பாடும் உளுந்தங்களி இன்றும் கருப்பட்டிப் பாகுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு உணவுவகை ஆகும். பாலிற் பெய்த உணவு பாலுடன் கூடிய வரகரிசிச் சோறாகும்.
ஆலத்தூர் கிழார் புன்செயில் விளைந்த வரகுச்சோற்றைப் பாலோடு உண்பதை;
"................................புன்புல வரகின்
பாற்பெய்…………………………………..
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்" (புறம்.- 34)
என்று விரிவாகப் பாடியுள்ளார்.
கிள்ளிவளவன் பஞ்சகாலத்தில் பண்ணன் மக்கள் பசியாற்றிய தன்மையைக் கூறி அவனைப் ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று போற்றிப் புகழ்ந்தமைக்கும் (புறம்- 173) இப்புன்செய் வேளாண்மையே காரணம் எனலாம். நீர்வளம் குன்றிய போதும்; அதாவது நெற்கழனி பயன்தராத போதும்;
“வெள்ளி தென்புலத் துறைய விளைவயற்
பள்ளம் வாடிய பயனில் காலை……….
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணன்” (புறம்- 388)
என்ற அடிகள் புலவர்க்குப் புல்லின் விளைநிலத்தைத் தானமாகக் கொடுக்கக் கூடியவன் என்கின்றன.
வலார்கிழான் பண்ணன்;
"பெருங்குறும் புடுத்த வன்புல இருக்கை"- (புறம்.- 181)
உடைய தலைவன் என்று பாடல் பெற்றுள்ளான். இங்கு வன்புலம் புன்செய் ஆகும். இதனால் தொல்தமிழகத்து இனக்குழுத் தலைவராகிய கிழார்கள் புன்செய்ப்பயிர் செய்தவர் என்பதும்; வேளாளர் வந்தேறிய பின்னரே அவர் நெற்பயிர் விளைவித்தனர் என்பதும்; புன்செய் வேளாண்மை மரபின் எச்சமே முளைப்பாரி வளர்த்து வழிபடும் வழக்கம் என்பதும் புலனாகிறது.
முடிவுரை:
பயறுவகைகள், எள், ஆமணக்கு ஆகியவற்றை முளைப்பாரியாக வளர்த்துப் படைத்துக் கும்மியடித்து வழிபடுவது; தொல்தமிழராகிய இனக்குழுச் சமுதாயத்தின் மரபாகும். திராவிட நாகரிகம் அழிந்துவிட்டது என்ற முனைவர் ஆண்ட்ரே எஃப் .ஜோபெர்கின் முடிவு மீளாய்விற்குரியது.
துணைநூற்பட்டியல்:
1. அகநானூறு- களிற்றியானை நிரை- ந.மு.வேங்கடசாமி நாட்டார்& ரா.வேங்கடாசலம் பிள்ளை (உ.ஆ.)- கழக வெளியீடு- முதல் பதிப்பின் மறு பதிப்பு- 2009
2. புறநானூறு l& ll - ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.)- கழக வெளியீடு- 438& 598- முதற்பதிப்பின் மறுஅச்சு- 2007
3. Symposium On Dravidian Civilization- Andre F.Sjoberg (editor)- publn. no.1- ASIAN SERIES of the Center for Asian Studies of the University of Texas, Austin- 1971
குறிப்பு: இது திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் 24.02.2020 அன்று நடந்த ஒப்பிலக்கிய பண்பாட்டு ஆய்வுக் கருத்தரங்கிற்கு அனுப்பிய ஆய்வுக்கட்டுரை.
தொடர்பு:
முனைவர். ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி
No comments:
Post a Comment