— முனைவர் தேமொழி
அறிவுடைமை (அதிகாரம் 43) என்றே 10 குறள்கள் கொண்ட ஒரு அதிகாரத்தை அறிவுக்காக ஒதுக்கியுள்ளார் வள்ளுவர். மேலும் அறி, அறிய, அறிவு, அறிக, அறியும், அறிந்து, அறிந்த, அறிவது, அறியா, அறியாமை, அறியார், அறிந்தார், அறிவார், அறிவான், அறியான், அறியேன், அறிவுடையார், அறிவிலார், அறிவிலான், அறிவினவர் போன்ற அறிவு குறித்த 50க்கும் மேற்பட்ட சொற்களை (54 சொற்கள்), 100க்கும் மேற்பட்ட முறை (163 முறை) அறிவின் இன்றியமையாமை, அது இல்லாவிட்டால் ஏற்படும் துன்பம் ஆகியவற்றைக் குறித்து அறிவுறுத்தும் நோக்கில் வள்ளுவர் கையாண்டுள்ளார். இவற்றில் அறிந்து (39 முறை) மற்றும் அறிவு (22 முறை) ஆகிய இரு சொற்களும் அதிக முறை அதிக அளவில் குறள்களில் இடம்பெற்றுள்ளன. அறிவின் தேவை குறித்து வள்ளுவர் அறிவுடைமை அதிகாரம் மட்டுமின்றி மேலும் பல அதிகாரங்களிலும் தேவைக்கேற்ப குறிப்பிடுகிறார்.
அறிவுடைமை என்பதன் விளக்கம்:
அறிவுடைமை அதிகாரம் அறிவு என்பதைக் கீழ் வருமாறு விளக்குகிறது;
பகைவரிடம் இருந்து நம்மைக் காக்கும் அரண் அறிவு (421),
மனதை அலையவிடாமல் தீமையை விலக்கி நன்மையைத் தெரிந்தெடுக்க உதவுவது அறிவு (422),
சான்றோர் அறிவுரைப்படி இன்பம் துன்பம் ஆகியவற்றை ஒரே போன்று கருதும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவது அறிவு (425),
அவர்கள் வழிகாட்டியபடி உலகவழக்கை ஒட்டி நடக்கச் செய்வது அறிவு (426),
தனது செயலினால் விளையக் கூடியவற்றை அறிந்திருக்க உதவுவது அறிவு (427),
அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சி நடக்கச் செய்வது அறிவு (428),
எதிர்கொள்ளக்கூடிய துன்பத்திலிருந்து தடுத்துக் கொள்ளும் வகையை அறியச் செய்வது அறிவு (429),
இவ்வாறாக அறியும் திறன் பெற்றவருக்கு அறிவே எல்லா செல்வத்துக்கும் இணையாக அமையும் (430) என்று அறிவின் சிறப்பை குறள்கள் வழியே கோடிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.
மேலும், அந்த அறிவை எவ்வாறு அடைவது என்பதையும் அறிவுடைமை அதிகாரத்தின் இரு குறள்கள் மூலமும், மெய்யுணர்தல் அதிகாரத்தின் குறள் ஒன்றின் மூலமும் விளக்குகிறார். வள்ளுவர் தரும் இந்த விளக்கங்கள் பகுத்தறிவு பாசறை கூறி வந்துள்ள கருத்துகளாக அமைந்துள்ளன.
குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம் :
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (அறிவுடைமை: 423)
எந்தவொரு பொருள் குறித்து யார் என்னதான் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொண்டு விடாமல் அது உண்மைதானா என ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்பது இக்குறளின் பொருள்.
தான் சொல்வதையும் அவ்வாறே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அறிவுரை கூறிய சிறந்த வழிகாட்டி புத்தர். தங்கத்தின் மாற்றை உரசிப் பார்த்து ஆராய்ந்து அறிவது போல அவர் அறிவுரைகளையும் மதிப்பிட்டு, தக்க அறிவுரையாக இருந்தால் மட்டுமே ஏற்கச் சொன்னார். மற்றவர் அவர் மேல் கொண்ட அன்பினாலோ அல்லது மதிப்பினாலோ அவர் கூறியவற்றை எல்லாம் பின்பற்றுவதில் அவருக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லை. அவரது இந்தக் கருத்தினால் கவரப்பட்ட இக்கால மனிதர்களுள் ஒருவர், சமூக சீர்திருத்தவாதி ஈ. வெ. ரா. பெரியார். அவரும் தனது சொற்களைப் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் வலியுறுத்தினார். 'பகுத்தறிவால் ஆராய்ந்து பார்' என்று அறிவுரை கூறிய மற்றொருவர் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ். 'ஏன்' என்று கேள்வி கேட்கத் துணிய வேண்டும் என்று கூறி எதையும் கேள்வி கேட்காமல் ஏற்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். மெய்ப்பொருள் காண்பதுதான் அறிவு எனப் பகுத்தறிவு வழிகாட்டிய இக்குறள் சென்ற 19ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற மேலை நாட்டுப் பகுத்தறிவாளர் ராபர்ட் இங்கர்சால் அவர்களையும் கவர்ந்த குறளும் ஆகும்.
உண்மைப் பொருளைக் காண்பதுதான் அறிவுடைமை என வள்ளுவர் அறிவுறுத்துவதால், வள்ளுவரின் கூற்றையும் மதிப்பிட்டே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் இதனால் அறிகிறோம். பகுத்தறிவு கருத்து கூறும் அறிவுடைமை அதிகாரத்தின் மற்றொரு குறள்;
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. (அறிவுடைமை: 424)
நாம் சொல்ல விரும்புவதைக் கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகச் சொல்லி, பிறர் சொல்லிய கருத்தில் அவர் நேரடியாகச் சொல்லாதவற்றின் உட்பொருளையும் (சொன்னதும் சொல்லாமல் விட்டதுமான) நுட்பமான கருத்துகளையும் ஆராய்ந்து உணர்வது அறிவுடைமையாகும் என்று கூறுகிறது இக்குறள். ஆகவே, ஒன்றைக் கூறியவரின் நோக்கத்தையும் அவரது சொற்களின் வழியாக எடை போடுவதும் தேவை.
இவ்வாறான ஒரு கருத்தை ஒருவர் ஏன் நம்மிடம் சொல்கிறார், அவ்வாறு அவர் சொல்ல வேண்டிய தேவை என்ன? இதனால் என்ன பயன்? யாருக்குப் பயன்? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் எழுப்பி நுட்பமாக ஆராயத் தொடங்கினால் பல மூடநம்பிக்கைகளையும், அவற்றைக் கூறுபவர்களையும் காணாமல் போக்கிவிடலாம். எடுத்துக் காட்டாக; இக்காலத்தில் கேட்க வேண்டிய கேள்வி, யாரோ சொன்னார்கள் என்று விளக்கேற்றி பட்டாசு வெடித்து "கோ கொரோனா, கோ கொரோனா கோ" என்று கைதட்டிக் கூவிக் கொண்டிருந்தால் கொரோனா வைரஸ் மறைந்துவிடுமா? என்பதாக இருக்க வேண்டும். குளத்தில் போட்ட ஒரு உடைந்த சிலையை வெளியில் எடுத்துக்கொண்டு வந்து அலங்காரம் செய்து காட்சிப் படுத்தினால், நாம் அங்குப் போய் உண்டியலில் பணம் போட்டுவிட்டு வந்தோமே, அது இப்பொழுது போர்க்கால நடவடிக்கையில் கொரோனா பாதிப்பிற்கு நிதி திரட்டப்படுகையில் எந்த வகையிலாவது பரிதவிக்கும் மக்களுக்குப் பயன்படுகிறதா? அதனால் பயன் பெற்றவர் யார் யார்? என்று கேள்வி கேட்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதுதான் எந்த ஒரு நிகழ்வின் பின்னணியிலும் மறைந்துள்ள நோக்கத்தை நுட்பமாகப் புரிந்து கொண்டு அறிவுடையவராக ஒருவரை மாற்றும். இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தர முனைந்த மணக்குடவர்; பிறர் சொல்லுஞ் சொற்களின் நுண்ணியவாகிய பொருள்களை அவர் சொல்லாமல் தானே காண்பது என்று விளக்கமளிக்கிறார்.
பகுத்தறிவு கருத்து கூறும் மேலும் ஒரு குறள் மெய்யுணர்தல் அதிகாரத்தில் இடம் பெறுகிறது;
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (மெய்யுணர்தல்: 355)
காட்சிப்படுத்தப்படும் ஒரு தோற்றம் கண்டு மயங்காமல், ஒரு பொருளின் உண்மையான இயல்பை அறிவதே அறிவுடைமையாகும். மாயையில் விழாமல் இருப்பது என இதற்குப் பொருள் கொள்ளலாம். இங்கு அறிவியல் நோக்கில் ஆராய்வதே உண்மையை வெளிப்படுத்தும். பிள்ளையார் சிலை பால் குடிப்பது, இரத்தக் கண்ணீர் விடும் மேரி மாதாவின் சிலை, வெறும் கையில் விபூதி வரவழைப்பது என ஆன்மீகத்தின் பெயரில் மக்களை அடிமுட்டாளாக்கும் நோக்கில் செப்பிடுவித்தை மற்றும் கண்கட்டு வித்தைகள் நிகழ்த்தி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்றும் உலகம் இது. இக்காலத்தில் நாசா விண்கோள் வெளிப்படுத்திய அதிசயம் என்று சமூக வலைத்தள உதவியுடன் அறிவியல் துணை கொண்டே ஏமாற்றும் செய்திகளுக்கும் குறைவில்லை. எப்பொருள் எத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும் அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே மெய்யுணர்தல் என்று கூறும் குறள் கருத்தே எதிலும் உண்மைத்தன்மையை அறிய விரும்புவோருக்கு நினைவில் நிற்க வேண்டும்.
அறிவுடைமை அதிகாரத்தில் மட்டுமின்றி மெய்யுணர்தல் (குறள் 355, 356), அருளுடைமை (குறள் 249), இகல் (குறள் 857) ஆகிய குறட்பாக்களிலும் வள்ளுவர் "மெய்ப்பொருள் அறிவது" குறித்துக் குறிப்பிடுகிறார். மேன்மை தரும் உண்மைப் பொருளை அறிய இயலாதவர்கள் அறிவு மங்கியவர்கள் என வள்ளுவர் உண்மை என்னவென்று அறிய இயலாதவரை விவரிக்கிறார் (857). வாழ்வு குறித்த மெய்யியல் ஞானம் பெறுவதையும் மெய்ப்பொருள் என்றுதான் குறிப்பிடுகிறார் வள்ளுவர் (குறள்கள் 249 மற்றும் 356), இதே கருத்தை 'செம்பொருள்' அறிவது என்று மற்றொரு குறளிலும் குறிப்பிடுகிறார் (358).
அறிவைப் பெறுவதற்குக் கல்வி தேவை, தோண்டத் தோண்ட மணற்கேணியில் நீர் ஊருவது போல, கற்கக் கற்க அறியவேண்டியவற்றை அறிந்து கொள்ளும் அறிவும் பெருகும் (396) என்று கூறும் வள்ளுவர், அறிவுடையார் செயல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் கூறத் தவறவில்லை. அறியவேண்டியவற்றை அறிந்து, விலக்க வேண்டியவற்றை விலக்குவது அறிவார்ந்த செயல், இவ்வாறு செய்யாவிடில் அந்த அறிவால் பயனில்லை (175). அற்ப எண்ணம் கொண்ட மக்களுடன் உறவு கொள்ளாமல் (சிற்றினம் சேராமை) அவர்களின் கெடுமதியைத் தானும் தனது இயல்பாக்கிக் கொள்ளாமல் இருப்பதும் அறிவுடைமைதான். பழகும் கூட்டத்தின் அறிவே ஒருவரிடம் தாக்கம் செலுத்தும் என்பதால் குணமற்றவர் தொடர்பை விட்டொழிப்பது இன்றியமையாதது (சிற்றினம் சேராமை குறள்கள்:452, 454) என அறிவுடையோராக இருப்பதற்கு வள்ளுவர் அறிவுரைகள் பல கூறியுள்ளார்.
உதவிய தளங்கள்:
[1] தமிழ் இலக்கியத் தொடரடைவு, திருக்குறள் - தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா.
http://tamilconcordance.in/TABLE-kuraL.html
[2] திருக்குறள் கலைஞர் உரை, கலைஞர் மு. கருணாநிதி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0612.html
[3] குறள் திறன்
http://kuralthiran.com/Home.aspx
நன்றி - சிறகு.
தொடர்பு: முனைவர் தேமொழி (jsthemozhi@gmail.com)
No comments:
Post a Comment