ஹிந்தியில் வழங்கும் உயிர் இடம் பெயர்ந்த தமிழ்ச் சொற்கள்
— முனைவர்.ச.கண்மணி கணேசன்
முன்னுரை:
தமிழில் பண்டுதொட்டு வழங்கும் சில சொற்கள் உருபொலியனியல் விதிகளுக்கு உட்பட்ட சில மாற்றங்களை ஏற்று ஹிந்தியில் வழங்குவதைத் தொகுத்துக் காட்டும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகக் கருதக்கூடிய ஹிந்தியில் வழங்கும் சொற்கள் பெரிதும் சம்ஸ்கிருத வழக்குகளைப் பின்பற்றி அமைந்திருக்கும் ஆதலால்; இக்கட்டுரை தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றுள்ள சொற்களை அடையாளம் காணும் முயற்சியாக அமையும். இன்றைய தமிழ் வழக்குகளும், ஹிந்தி வழக்குகளும் முதல்நிலைத் தரவுகளாக அமைய; தொகைநூல் வழக்குகளும், உருபொலியனியல் விதிகளும், ஒத்த பிற மாற்றங்களும் துணை ஆதாரங்களாக அமைகின்றன.
அரசு >>> राज
தொகை நூல்களில் ‘அரசு’ என்னும் சொல் மன்னன் என்றும் அரசாங்கம் என்றும் பொருள்பட்டு முறையே;
அரசே அரசோ அரசோடு அரசும் அரசின் அரசன் அரசனை அரசியல் அரசு
எனப்பல உருபுகளுடனும் விகுதிகளுடனும் சேர்ந்து 44முறை பயின்று வருகிறது. வடமொழியில் வழங்கும் ‘ராஜ்’ என்ற சொல்லுடன் ஒலியொப்புமையும் பொருள் ஒப்புமையும் கொண்டுள்ள இச்சொல் பின்வரும் மாற்றத்திற்கு உட்பட்டு உள்ளது.
arasu >>> raasu >>> raaj
இது உயிர் இடம்பெயரல் என்னும் விதி அடிப்படையில் அமைந்த மாற்றம் ஆகும் (இக்கால மொழியியல்- உருபொலியனியல்).
இந்தோஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் ஒரு கிளையாகிய இந்தோஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஹிந்தியில் வழங்கும் இம்மாற்றம் இந்தோ ஐரோப்பிய மொழி வழக்காறுகளோடு ஒப்புநோக்கற்குரியது.
royal region regal right rule regular regiment real rank realm
போன்ற சொற்கள் அனைத்தும் தொடர்புடையன என்னும் கருத்து நிலவுவதும் சிந்திக்கத் தக்கது. இவ்ஆங்கிலச் சொற்கள் லத்தீன், பழைய ஃபிரெஞ்ச், போர்ச்சுகீஸ், சமஸ்கிருதம், பழைய ஐரிஷ், டச்சு, மூல ஜெர்மானியம், ஜெர்மானியம் போன்ற மொழிகளிலிருந்து வந்து ஆங்கிலத்தில் வழங்குவன. தமிழில் உள்ள ‘அரசு’ மூலச்சொல் என்பதைப் பிற உயிர் இடம் பெயர்ந்த சொற்களைக் கொண்டு நிறுவலாம்.
ஆங்கிலத்தில் பயன்பாட்டில் உள்ள rice என்னும் சொல் தமிழிலுள்ள ‘அரிசி’ என்ற சொல்லில் இருந்து அதே உயிர் இடம்பெயரல் என்னும் விதிக்கு உட்பட்டு அடைந்த மாற்று வடிவம் என்பதில் ஐயமில்லை. ‘வெள் அரிசி’, ‘கழைநெல் அரிசி’, ‘வரகின் அரிசி’, ‘கொய்குரல் அரிசி’, ‘தினை அரிசி’, ‘அவைப்பு மாண் அரிசி’, ‘அவையா அரிசி, ‘புகர்வை அரிசி’, ‘முரியா அரிசி, ‘வால் அரிசி’, ‘குற்று அரிசி’, ‘பண்ணை வெண்பழத்து அரிசி’, ‘நெல்லின் அரிசி’ எனப் பல பெயரடைகளோடு ‘அரிசி’ என்னும் சொல் தொகை நூல்களில் 21முறை பயின்று வருகிறது.
arisi >>> raisi >>> rais
ஆங்கிலத்தில் rice என்று எழுதுவோம். மொழியியலாளர் பலரும் ஏற்றுக்கொண்ட இம்மாற்றம் உயிர் இடம்பெயரல் என்ற விதியைப் பின்பற்றியே விளக்கம் பெறுகிறது. .
அமர் >>> मार
'அமர்' என்ற சொல் சண்டை அல்லது போர் என்ற பொருளிலும் தமிழில் வழங்கியது. தொகைநூல்களில் 71இடங்களில் இப்பொருண்மைப் பயன்பாட்டைப் பார்க்க இயல்கிறது. உயிர் இடம் பெயரல் என்னும் மாற்றத்தை அடையும் போது;
amar >>> maar
என்றாகி ஹிந்தியில் அடித்தல் எனும் பொருளில் வழங்குகிறது.
உலகு >>> लोग
உலகு என்ற தமிழ்ச்சொல் தொகைநூல்களில்;
உலக உலகு உலகத்தான் உலகத்தானும் உலகத்தானே உலகத்து உலகத்தும் உலகத்துள் உலகத்துள்ளும் உலகத்தோர்க்கு உலகத்தோர்க்கே உலகத்தோரே உலகம் உலகமும் உலகமொடு உலகமோடு உலகில் உலகிற்கு உலகினும் உலகினுள் உலகுடன் உலகும் உலகே உலகின்
எனப் பல்வேறு பின்னொட்டுக்களை இணைத்துக் கொண்டு 184இடங்களில் பயின்றுவந்துள்ளது. இடப்பெயராகவும் இடவாகுபெயராகவும் தமிழில் வழங்கும் உலகு என்ற சொல்லில் உயிர் இடம்பெயர்ந்து; பின்வரும் மாற்றத்தை அடைகிறது.
ulahu >>>lauhu >>> laug >>> log
ஹிந்தியில் log = மக்கள் என்ற பொருளில் வழங்குகிறது.
அரண் >>> राणा
‘அரண்’ என்னும் தொகை நூற்சொல் காவல் தரும் எயில், மதில், காடு முதலியவற்றுக்கு உரியதாக வழங்கியுள்ளது.
அரண்கள் அரணம் அரணமும் அரணால் அரண்
போன்ற சொல்வடிவங்களைத் தொகை நூல்களில் மொத்தம் 44இடங்களில் காணஇயல்கிறது. உயிர் இடம் பெயர்ந்து; பின்னர் ‘ஆ’காரத்துடன் இணைந்து ஹிந்தியில் கோட்டைக்குரியவன் என்னும் பொருள்படுகிறது.
araṇ >>> rāṇ
rāṇ + aa = rāṇā
ராணா பிரதாப்சிங் என்ற பெயரில் உள்ள ‘ராணா’ அவனைக் கோட்டையின் தலைவன் என்றே உணர்த்தி நிற்கிறது.
உறுப்பு >>> रूप
உடலின் பல்வேறு பாகங்கள் அல்லது முதற்பொருளின் பல்வேறு சினைப்பகுதிகளைக் குறிப்பதாகத் தமிழில் வழங்கும் 'உறுப்பு' என்ற சொல் தொகை நூல்களில் 4 இடங்களில் பயின்று வரக் காண்கிறோம்.
uṟuppu>>> ruup
ஹிந்தியில் ruup = உருவம் என்று பொருள்படுகிறது.
மா >>> आम
மாமரம் என்னும் முதற்பொருளையும் மாம்பழம், தளிர் என்னும் சினைப் பொருட்களையும் குறிக்கும் 'மா' என்னும் சொல் தமிழ்த்தொகை நூல்களில் 48 இடங்களில் உள்ளன. ‘’மாஅத்த’ என்று சொல்லிசை அளபெடையாகவும் பயின்று வருகிறது. ஹிந்தியில் உயிர் இடம் பெயர்ந்து;
Maa >>> aam
என்றாகி மாம்பழத்தைக் குறிக்கிறது.
அலை >>> हिला
அங்குமிங்குமாக இயங்குதல் என்னும் பொருளிலும்; அத்தன்மை உடைய நீரலையைக் குறிப்பிடுவதாகவும்; ‘அலை’ என்ற சொல் பல உருபுகளுடனும் இணைந்து; பல்வேறு வடிவங்களைப் பெற்றுத் தமிழில் வழங்கி வந்துள்ளது.
அலை அலைக்க அலைக்கும் அலைக்குமே அலைத்த அலையில் அலையால் அலையா அலைத்தென அலைத்ததால் அலைத்ததற்கு அலைத்தரும் அலைத்தாய் அலைத்தான் அலைத்தன்றே அலைத்தி அலைத்து அலைப்ப அலைப்பவும் அலைப்பேனா அலைஇயர்
எனப் பலவாறாகப் பயின்று வருவதைத் தொகைநூல்களில் 106 இடங்களில் காண்கிறோம். ஹிந்தியில் உயிர் இடம் பெயர்ந்த பின் ‘அசைய‘ என்னும் பொருள்பட;
alai >>> hilaa
என்று மாறி வழங்குகிறது. பின்னர் நீரலை என்னும் பொருள் தருவதற்கு;
hilaa >>> hilor
என்று மாறி வழங்குகிறது.
முடிவுரை:
‘அரசு’ என்ற தமிழ்ச் சொல்லின் ஆக்கமும் மாறுபாடுகளும் பரந்து விரிந்த ஆய்விற்குரியது. அலை, மா, உறுப்பு, அரண், உலகு, அமர், அரிசி முதலிய சொற்கள் அடைந்துள்ள மாறுபாடுகளும் பயன்பாடுகளும்; இது போன்ற பிற சொற்களைத் தேடும் ஆவலைத் தூண்டுகின்றன.
துணைநூற்பட்டியல்:
Lifco’s Hindi -Tamil Dictionary- S.R.Sarangapani (General editor)- lst edition reprint- 1992
முத்துச்சண்முகன் - இக்கால மொழியியல்- முதல் பதிப்பு- 1972
நன்றி http://tamilconcordance.in/TABLE-sang.html
தொடர்பு:
முனைவர். ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி
No comments:
Post a Comment