Sunday, April 26, 2020

ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைனர் மீனாட்சிசுந்தரம்


ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைனர் மீனாட்சிசுந்தரம்

 —  ரெங்கையா முருகன்

          ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைனர் மீனாட்சிசுந்தரம்  ஓவியர் கொண்டையராஜு அவர்களின் மாணவர்.

          காலனிய வருகைக்குப் பின்பாக போட்டோ ஸ்டுடியோக்களில் ஐரோப்பிய மாடலின் பின்னணியில் நம்மவர்களின் முக உருவங்கள் போட்டோ எடுத்து வீட்டின் சட்டகங்களில் மாட்டி வைக்கும் நாகரீகம் உருவானது. போட்டோ ஸ்டூடியோவுக்குச் சென்றால் ஒவ்வொரு ஸ்டுடீயோவிலும் பேக்ரவுண்ட் டிசைனில் ஐரோப்பிய மாடல் பூ போட்ட பால்கனி கிரில், அழகு மிக்க தூண்கள், நீண்ட முக்கோண ஸ்டாண்டில் பூ வைக்கப்பட்ட ஜாடி, காற்றில் அசைந்தாடும் கொடிகள் போன்ற பேக்ரவுண்ட் டிசைன் ஸ்டுடியோ அரங்கின் பின்பக்கம் இருக்கும். அந்த பேக்ரவுண்ட் டிசைன் முன்பாக நம்மை உட்கார வைத்து படம் எடுப்பர்.

          இந்த ஸ்டுடியோவிற்கான பேக்ரவுண்ட் டிசைன் ஓவியம் வரைவதில் கெட்டிக்காரர் கோவில்பட்டி மீனாட்சிசுந்தரம் அவர்கள். 60- 70களில் இவர் வரைகின்ற போட்டோ ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைன் காஷ்மீர் முதல் தமிழகம் வரை வர்த்தக ரீதியாகப் பெரிய வரவேற்பு இருந்தது. இவருக்கு இன்று வயது 92. வெண்கலக் குரலில் அப்படியே கர்நாடக சங்கீதம் பாடுவதில் கெட்டிக்காரர்.

          தமிழக காலண்டர் ஓவிய பிதாமகன் கொண்டையராஜுவின் அத்தியந்த சீடர்களில் ஒருவர். கொண்டையராஜூவின் ஒவ்வொரு சீடர்களுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு கொண்டையராஜூவின் பிரதம சீடர் டி.எஸ். சுப்பையா ஓவியங்களில் கண்ணுக்கு முக்கியத்துவம் இருக்கும். அணிகலன்கள் மிக நுட்பமாக வரைவார். ராமலிங்கம் ஓவியங்களில் உடல் அமைப்பு தூக்கலாக இருக்கும். மீனாட்சி சுந்தரம் அவர்கள் காலண்டர் ஓவியங்கள் வரைந்தாலும் போட்டோ ஸ்டுடியோவிற்கான அரங்கின் பேக்ரவுண்ட் சீன்கள் வரைவதில் தனித்துவமாக ஜொலித்தவர்.

          இவரது அறிமுகம் எனக்குக் கனடா மானுடவியலாளர் ஸ்டீபன் இங்க்லீஸ் எழுதிய “Suitable For Framing:The work of a Modern Artist” கொண்டையராஜூ குறித்தான ஆய்வுக் கட்டுரைக்காக 1981 வாக்கில் மீனாட்சி சுந்தரம் அவர்களையும் சந்தித்து நேர்காணல் கண்டிருக்கிறார். இந்த ஆய்வுக் கட்டுரை மூலம் இவரைக் காண வேண்டும் என ஆவல் பிறந்தது.

          இவரைச் சந்திக்க நானும், மிக்சிக்கன் பல்கலைக் கழக பேராசிரியரும், புகழ் பெற்ற ஆவணப்பட இயக்குநருமான திரு. சுவர்ணவேல் அவர்களும் இணைந்து 2015 ஆம் ஆண்டு நேர்காணலுக்காகச் சந்தித்தோம்.  மிகவும் வெள்ளந்தியான பேச்சு. தன்னை முன்னிறுத்துக் கொள்ளாமல் எல்லாம் அண்ணா, அண்ணா (குரு கொண்டையராஜூ) என்று தனது குருவைக் குறித்தே பேசிக் கொண்டிருந்தார். அண்ணா இல்லேன்னா நானெலாம் ஒன்றுமே இல்லை என்று நீண்ட நேரமாகக்  கொண்டையராஜூ குறித்துப்  பேசி சில நேரங்களில் அவர் நினைவில் மூழ்கி உணர்ச்சிவசப்படுகிறார்.

          குரு- சீடன் உறவு என்பது இவருடைய காலங்களோடு அந்த ஆத்மார்த்தமான பந்தம் முடிந்துவிடும் என்று உணர வைத்தார். பெரிதாக எதையும் சாதிக்க வில்லை. அண்ணா சொன்னதைச் செய்வேன் என்றார். ஆனால் காலத்திற்குத் தகுந்தவாறு பல முக்கிய காலண்டர் ஓவியங்கள் வரைந்து தன்னை முன்னிறுத்திக் கொள்ளத் தெரியாத அப்பாவியாகவே காணப்பட்டார்.

          விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாளையம் அருகில் உள்ள தேவதானம் இவர் பிறந்த கிராமம். சிறு வயதிலேயே பஜனை மடங்களில் இவர் பாடும் பாடல்களினை கேட்கப் பல மூத்த அக்கிரகாரத்துப் பெண் ரசிகைகள் இவரது பாடலில் மயங்கி பெரிய மதிப்பு இவருக்கு உண்டாகி இருக்கிறது.  மிகவும் ஏழ்மையான விவசாய பின்னணி குடும்பத்தைச் சேர்ந்தவர். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தவர். படிக்கும் போதே ஓதுவார் ஒருவரிடம் சேர்ந்து தேவாரம், திருவாசகம் இசையுடன் படிக்க கற்றுக் கொண்டவர். பின்பு கோவிந்தராஜன் என்னும் நட்டுவனாரிடம் வர்ணம், ஜதி, மெட்டு போன்ற கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டார்.

          திருவிழாவின் போது பஜனைப் பாடல்கள் பாடும் அழகைக் கண்டு அக்கிரகாரத்துப் பெண்கள் ”டேய் மீனாட்சி சுந்தரம் அந்த கீர்த்தனையை பாடுறா” என்று விரும்பி கேட்பார்களாம். ஒருசமயம் இவரது ஊர்க் கிராமக் கோவில் திருவிழாவில் இவர் வெண்கல குரலில் பாடும் அழகைக் கேட்கிறார் திருவிழாவிற்கு வந்திருந்த சேத்தூர் ஜமீன்தார். பின்பு ஜமீன்தார் இவரைப் பாராட்டி விட்டு பங்களாவுக்கு வரச் சொல்லிப் போய் விட்டார். ஆனால் இவர் ஜமீன்தார் பங்களாவுக்குச் செல்லவில்லை.

          இதற்கிடையில் அங்குத் தற்செயலாக வந்திருந்த மதுரை சங்கரதாஸ் சுவாமிகளுக்குச் சொந்தமான மதுரை மீனாலோசனி பால சந்திர சபா நாடகக் குழுவினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் இவரது பாடலில் மயங்கி, எங்களது நாடகக் குழுவிற்கு வருகிறாயா என்று கேட்க, தனது குடும்பச் சூழலுக்குப் போய்விடலாம் என இவர் விருப்பம் தெரிவிக்க, அப்பொழுதே நாடக கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார். ஒப்பந்தம் செய்யப்படும் போது மாதம் ரூபாய் 10 சம்பளம். அட்வான்ஸ் தொகை 50 ரூபாய்.

          1938 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் கப்பல் ஏறி இலங்கை யாழ்ப்பாணம் போய் இறங்கிய போது 11 வயதே நிரம்பிய பாலகன்.  இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இறங்கி கம்பெனிக்குச் செல்கிறார்.   நாடகக் கம்பெனி முன்பு ஓவியர் கொண்டயராஜுவின் இரு பக்கமும் இரண்டு நாய்கள் உடன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த நாய்களுக்கு எனாமல் தட்டில் கொஞ்சம் சோறும், கறிகளும் இருந்தன. இப்படித்தான் முதன் முதலில் அண்ணாவைக் கண்டேன் என்று நினைவு கூறுகிறார். அந்த நாய்களைக் கண்டு பயந்தபடி இவர் நிற்க, ஓவியர் கொண்டையராஜு அவர்கள் நாயைப் பார்த்துப் பயப்பட வேண்டாம், அருகில் வா என்றழைத்தார்.

          “நீ ஒன்னும் பயப்படாத, ராஜபாளையத்தில் உள்ள நம்ம பய கந்தசாமி, உன் வருகை குறித்து காகிதம் எழுதியிருந்தான். நான் உன்னை நல்லவிதமாகப் பார்த்துக் கொள்கிறேன்," என்றாராம்.  அண்ணா கொண்டையராஜு அவர்கள் மிகப் பெரிய நாய்ப் பிரியர். அவர் நாடகக் கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்குக் கப்பலில் பயணிக்கையில் அவருடைய வளர்ப்பு பிராணியான இரண்டு நாய்களையும் ஏற்ற மறுத்து விட்டார்களாம் கப்பல் கம்பெனி. நாய்களை ஏற்றவில்லையென்றால் நானும் வரவில்லை என்று பயணம் செய்ய மறுத்து விட்டாராம். கொண்டையராஜூ வரவில்லையென்றால் நாடகமே நடத்தமுடியாது என்று எண்ணிய நாடக கம்பெனி கப்பல்  நிறுவனத்தில் இதமாகப் பேசி லஞ்சத்தைக் கொடுத்து நாய்களைக் கப்பலேற்றிக் கொண்டு வந்தாராம் அண்ணா என்று தனது குரு குறித்து புன்முறுவலுடன் கூறினார்.

          நாடக கம்பெனி முதலாளி மதுரை பழனியாபிள்ளை முதலில் என்னை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார். நான் நன்றாக உட்கார்ந்து சம்மணங்காலிட்டு தொடையில் தாளம் தட்டிக் கொண்டே பாடிய போது நாடக கம்பெனி உறுப்பினர்கள் அனைவரும் என்னை ஆச்சரியமாகப் பார்த்து ரசித்தார்கள்.  அக்கால நாடகத்தில் இன்றைய காலம் போல ஸ்பீக்கர் கிடையாது. மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு நாடகத்திற்குத் தேவையான போது உச்சபட்ச குரலில் பாடுவது பிரதான வேலையாக அமைந்து விட்டது.  இலங்கையில் அக்கால நாடகங்களில் விளம்பரத்துக்காக நோட்டீஸ் அச்சடிக்கும் போது சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கொண்டையராஜூவின் ஓவியங்கள் இடம் பெற்ற நாடகம் என்றுதான் அச்சடிப்பார்களாம். அந்த அளவுக்கு கொண்டையராஜூவின் நாடகத் திரைச்சீலை ஓவியங்களுக்கு மவுசு இருந்துள்ளது.

          சிறு வயதிலேயே பிழைப்புக்காக நாடக கம்பெனிக்கு மீனாட்சிசுந்தரம் வந்து விட்டதால் இயல்பாகவே யாவருக்கும் உதவி செய்திடும் உத்தம குணம் வாய்த்த ஓவியர் கொண்டையராஜூக்கு மீனாட்சிசுந்தரத்தைப் பிடித்து விடுகிறது. கொண்டையராஜூவின் அன்பு கலந்த அரவணைப்பும் கிடைத்து விடுகிறது.  நாடகம் முடிந்த பின்பு ஓய்வுள்ள நேரங்களில் ஓவியர் கொண்டையராஜூ நாடகத்திற்குத் தேவையான காட்சிகளை வரைந்து கொண்டிருப்பார். அச்சமயம் ஓவியம் வரைவதைப் பார்த்துக் கொண்டிருப்பாராம் மீனாட்சிசுந்தரம்.

          ஒருநாள் தீவிர சிந்தனையில் ஆழ்ந்து நாம் தொடர்ந்து நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கமுடியுமா என்று யோசித்த வேளையில் கொண்டையராஜூவிடம் போய் எனக்கு ஓவியம் கற்றுத் தருவீர்களா? என்று தனது ஆசையைத் தெரிவிக்க, உடனே அவரும் ஓவியம் வரையச் சொல்லிக் கொடுக்க ஒப்புக் கொண்டார். நாடக நேரங்களில் நடித்து விட்டு ஓய்வு நேரங்களில் ஓவியமும் கற்றுக் கொள்கிறார் மீனாட்சி சுந்தரம்.

          இதற்கிடையில் இலங்கையில் ஊர் ஊராகச் சென்று நாடகம் நடத்திக் கொண்டு வரும் வேளையில் இரண்டாம் உலகப் போர் வந்தது. நாடக கம்பெனியை நடத்த முடியாமல் திணறினர். ஓவியர் கொண்டையராஜூ நாடகக் கம்பெனியை இந்தியாவிற்குக் கொண்டு வர முயன்றார். ஆனால் கொண்டு செல்வதற்குப் பணம் இல்லை. பணம் திரட்டுவதற்காக கொண்டையராஜூ மட்டுமே இந்தியாவிற்குப் பயணம் ஆனார்.  அச்சமயத்தில் நான் அண்ணாவைப் பார்த்து அழுது விட, கவலைப்படாதே, என்று என்னைத் தேற்றி விட்டு இந்தியா சென்று நான் பணம் திரட்டிவிட்டு விரைவில் வந்துவிடுவேன் என்று கூறி விட்டுச் சென்றுவிட்டார். நாங்கள் நாவலப்பட்டியிலிருந்து திரிகோணமலைக்கு வந்து விட்டோம். அங்கு உள்ள கடற்கரையில் எல்லா நாட்டுக்  கப்பல்களும் நிற்கும். ஏக்கத்துடன் அண்ணாவின் வருகையை எதிர்பார்த்துக்  காத்துக் கொண்டிருப்பேன். இவ்வாறாக வேடிக்கையாகப்  பார்த்துக் கொண்டே கொழும்புக்குப்  பயணம் ஆகி, கொழும்பிலிருந்து கப்பல் ஏறி ராமேஸ்வரம் வந்து அடைந்ததாகக்  கூறினார். நாடக கம்பெனியின் அனைத்துச் சாமான்களையும் அப்படியே இலங்கையில் விட்டு இந்தியா வந்து சேர்ந்து விட்டோம்.

          இந்தியா வந்து சேர்ந்ததும் திரும்ப நாடகக் கம்பெனியை உயிரூட்டி ராஜபாளையத்தில் நடத்த முடிவு செய்தோம். ஆனால் நாடக கம்பெனி ஒரு நிலையில்லாமல் தத்தளித்துக் கொண்டே வந்தது. நாடகமே நடத்தமுடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுச் சூனியமாகி விட்டது. அண்ணா உடன் இருந்த நாங்களோ செய்வதறியாது தவித்தோம்.  கொண்டையராஜு ஜமீன்தாரைச் சந்தித்து என்னை நம்பி இவ்வளவு பேர் இருக்கிறார்கள் “இனி மேல் எங்கே செல்வது என்றும் ஒன்றும் புலப்படவில்லை” என்று புலம்ப, ஜமீன்தாரோ நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். நான் இடம் தருகிறேன் என்றார்.

          ஓவியர் கொண்டையராஜூ பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர். தனக்கென்று சொத்து சுகம் சேர்த்துக் கொள்ளாதவர். தனது சீடர்களுக்காகவே வாழ்ந்தவர். கோவில்பட்டியில் ஓவியர் கொண்டையராஜு இருந்த இல்லத்திற்குப் பெயர் திருவிலாஸ் என்று பெயர். இவரது சீடர்களான டி.எஸ். சுப்பையா, எம்.ராமலிங்கம், டி. எஸ். அருணாசலம், செண்பகராமன், சீனிவாசன் மற்றும் நான் போன்ற பல்வேறு சீடர்களும் வெவ்வேறு சாதி பின்புலத்திலிருந்தாலும் அவரது பிள்ளைகள் மாதிரி அவரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்போம்.

          ஆகையால் வீட்டின் முதலாளி குமாரசாமி நாடார் ஓவியர் கொண்டையராஜூவைப் பார்த்து “என்னய்யா சோசலிசம், சோசலிசம் என்று எல்லோரும் வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் நீதான் அய்யா உண்மையான சோசலிசத்தை நடத்துகின்றீர் என்று கூறுவார். ஏனெனில் பல சாதிகளிலிருந்து வந்தாலும் வேலை பார்ப்பவர்கள் சாதிகளும் பார்ப்பதில்லை. ஒரே மாதிரியான சாப்பாடுதான் அனைவருக்கும். தினமலர் ஆசிரியர் வி.கிருஷ்ணமூர்த்தி கூட அண்ணாவின் சீடரே.

          கோவில்பட்டியில் தேவி ஆர்ட் ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கி அண்ணாவும் ஐந்து சீடர்களும் சேர்ந்து புதிய அத்தியாயத்தை ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் சிவகாசியில் அருணகிரி நாடார் நேஷனல் லித்தோ பிரஸ் ஆரம்பிக்கிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு ஆப்செட் அச்சகங்கள் உருவாகின. அத்தனை ஆப்செட்காரர்களும் ஓவியர் கொண்டையராஜூ மூலம் கடவுள்படக்  காலண்டர் வரைந்து வெளியிடுவதற்கு வரிசைகட்டிக் கொண்டு நிற்பார்கள்.

          இதில் ஒவ்வொருவரும் காலண்டர் பட ஓவியங்களில் தனித் திறமையைக் காட்டிப்  படம் வரைந்து கொடுத்தாலும் கொண்டையராஜூ பெயரைப் போட்டு தன் பெயரை பின்னால் இணைத்துக் கொள்வார்கள். எம்.ராமலிங்கம் வரைந்த கடவுள் காலண்டர் படம் மிகவும் பிரபலமாகி விட்டதால் முதன் முதலாக ராமலிங்கம் தனது குரு பெயர் போடாமல் தனது பெயரிலேயே காலண்டர் ஓவியங்கள் வெளியிட்டார்.

          பின்பு படிப்படியாக ஒவ்வொருவரையும் அவர்கள் வரைந்த நாட்காட்டி ஓவியங்களுக்கு அவரவர் பெயரிலேயே வர அவரே (கொண்டையராஜு) அனுமதித்தார். எனது கடவுள் பட காலண்டர் ஓவியங்கள் கடைசி வரை அண்ணாவின் பெயரைப் போட்டுத்தான் எனது பெயரைப் போட்டு வந்ததாகக் கூறுகிறார்.





          மீனாட்சி சுந்தரம் அவர்கள் வரைந்து மிகவும் புகழ் பெற்ற படங்கள் விவேகானந்தர், காஞ்சி பெரியவர் படம், வாமனன், ஆதாம் ஏவாள், சில தேசிய தலைவர்கள் முகப்போவியப்  படங்கள் இருந்தாலும், போட்டோ ஸ்டுடியோவுக்கான பேக்ரவுண்ட் டிசைன் வரைவதில் தனிக் கவனம் செலுத்தியவர். இதனைத் தவிர நேம் போர்டு டிசைன் வரைவது போன்றதும். தேவி ஆர்ட் ஸ்டுடியோ மூலமாக இந்தியா முழுமைக்கும் இவரது ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைன் பேனர் எண்ணற்ற அளவில் வரைந்து கொடுத்த இந்தக் கைதான் என்று இப்பொழுது அவர் இருக்கும் நிலையில் என்னால் நம்ப முடியவில்லை.





          ஒருதடவை இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி இதழில் வடநாட்டு ஓவியர் வரைந்த காந்தி படத்தைப் பார்த்து அதை அப்படியே மறு உருவக் காப்பி எடுத்துச் சிறப்பாக வரைந்து காலண்டர் படமாக வந்து விட்டது. பொதுவாகக் கோவில்பட்டி ஓவியர்கள் வடநாட்டு ஓவியர்களுடைய நல்ல காந்தி, புத்தர் படைப்புகள் வரும் பொழுது அதனை அப்படியே காப்பி அடிப்பது வழக்கம்தான்.

          அது மாதிரி மீனாட்சிசுந்தரம் அவர்கள் வரைந்த காந்தி படத்தின் மூல ஓவியர் வழக்குப் போட்டு விட்டார். இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது அக்காலத்தில் ஓவியர் உலகில் இந்த வழக்கு பரபரப்பாகப் பேசப்பட்டு வந்துள்ளது . ஓவியம் வரைந்த இவர் தனது குருவின் பெயரைத் தாங்கி வந்ததால் அண்ணா (கொண்டையராஜூ) கோர்ட் கூண்டில் சாட்சி சொல்ல வேண்டியதாயிற்றாம். கொண்டையராஜூ தனது கூர்த்த மதியினால் மூல ஓவியத்திற்கும், இவர் வரைந்த ஓவியத்திற்கும் காந்திபடத்தில் உள்ள தொண்டைப் பகுதியின் வித்தியாசத்தை எடுத்துக் கூறி நீதிபதி நம்பும்படி கூறி வழக்கு தள்ளுபடியாகி விட்டதாம் என்று சொல்லிக் கொண்டு சிரித்து விட்டார்.

          ஜவஹர்லால் நேரு தூத்துக்குடி வருகை தந்த போது கமலா நேருவை கட் அவுட்டாக வரைந்து வைத்திருந்தாராம். அப்படத்தைப் பார்த்து யார் வரைந்தது என்று கேட்டுக் கூப்பிட்டு மீனாட்சி சுந்தரம் அவர்களை நேரு பாராட்டியுள்ளார்.  ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியைப் போன்று வரைந்து கீழ் மூன்று மனிதர்களை வரைந்து தீயவை கேட்காதே, தீயவை பேசாதே, தீயவை பார்க்காதே என்று இவர் வரைந்த காலண்டர் ஓவியம் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டதாம் அந்த நாளில். ஒரு தடவை கோவில்பட்டியில் சுபாஷ் சந்திரபோஸ் குறித்தான நாடகம் நடத்தினோம்.  அந்த நாடகத்திற்காக போஸ் கட் அவுட் வரைந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வேளையில் உணர்ச்சிவசப்பட்டு ஒரு போலீஸ்காரர் மக்கள் ஊர்வலத்துக்கிடையில் மாலை போட்டாராம். அன்றைய வெள்ளையர் ஆட்சி கட் அவுட்டுக்கு மாலை போட்ட போலீசாரை அடையாளம் கண்டு சஸ்பெண்ட் செய்து விட்டார்கள் என்று நினைவினைக் கூர்ந்தார்.

          கோவில்பட்டியில் கொண்டையராஜுவின் சீடர்கள் அனைவரும் போட்டோ ஸ்டுடியோ தனித் தனியாக நடத்தி வந்த வேளையில் இவரும் லலிதா ஸ்டுடியோ என்ற பெயரில் சிறப்புடன் நிர்வகித்து வந்தார். வயது முதிர்ந்தவுடன் ஸ்டுடியோவினை வேறு நபரிடம் கொடுத்து விட்டுக் கடந்த 20 வருடங்களுக்கு மேலாகத் தனது மனைவியுடன் மதுரை திருநகரில் வசித்து வருகிறார். கோவில்பட்டி மாரீஸ் அவர்கள் மீனாட்சி சுந்தரம் அவர்களை மாமா என்று அன்புடன் அழைத்து பாசம் காட்டி வருபவர். என்னிடம் எட்டு வருடங்களுக்கு முன்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நலிந்த கலைஞர்களுக்கான நாடக ஓவியக் கலைஞர்களுக்கான முதியோர் பென்சன் ஏற்பாடு செய்யச் சொல்லி என்னிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார். எனக்கோ எப்படிப் போய் துறையை அணுகுவது என்று தெரியாமல் காலமும் கடந்து போய் விட்டது. சென்ற வருடம் மனைவியும் காலமாகி விட்ட பின்பு தனது மகளின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

          நானும் அவரிடம் போய் முதியோர் பென்சனுக்கு ஏதாவது முயற்சி செய்யலாமா என்று கேட்டேன். அவர் அதெல்லாம் எதற்கு. கலெக்டர் ஆபீசுக்கு இதற்கென அலைய வேண்டும். என்னால் அலைய முடியாது. எனக்கு ஒன்றும் குறைவில்லை. என்னை என் பெண் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள் என்றார். வாழ்வது வரைக்கும் வாழ்ந்து பார்த்து விடுகிறேன் என்ற வெண்கலக் குரலில் பலத்த சப்தத்துடன் சிரிக்கிறார்.

          சென்னை பல்கலையில் வீ.அரசு அவர்கள் ஏற்பாடு செய்த வெகுசனகலாசாரம் கருத்தரங்கின் ஒரு பகுதியாக கொண்டையராஜூ ஓவியர்களின் சீடர்களில் ஒருவராக இருக்கும் இவரை கவுரவப்படுத்தும் விதமாக இவரது ஒப்புதலை எவ்வளவோ மன்றாடி நானும் மாரீஸ் அவர்களும் முயற்சி செய்தோம். நேரிடையாக முதிய வயதைக் காரணம் காட்டி மறுத்து விட்டார். தன்னை எப்பொழுதுமே முன்னிறுத்திக் கொள்ள விரும்பாத அதே வேளையில் தனது குருவினை மட்டுமே நினைவலைகளில் போற்றி கொண்டாடுகிறார்.

          தமிழக அரசு இவரை நலிந்த ஓவிய நாடகக் கலைஞர்களுக்கான பிரிவில் முன் வந்து உதவினால் நல்லது. ஏனெனில் அன்றைய கால நாடகக் கம்பெனியிலிருந்து கொண்டையராஜூ சீடர்களில் ஓவியராக மாறியவர் மீனாட்சிசுந்தரம். பழைய நாடகக் கம்பெனி குறித்த செயல்பாடுகளினை சிரிக்கச் சிரிக்கத் தனது வெண்கலக் குரலில் பேசும் அழகே அலாதியானது. இவருடன் நடித்த நாடகக் கலைஞர்கள் பலர் பழைய கால சினிமாக்களில் வந்துள்ளனர். இவர் மட்டுமே நாடகத்திலிருந்து ஓவியராகப் பயணித்து ஸ்டுடியோ நடத்திவிட்டு இன்று தனது மகள் வீட்டின் அரவணைப்பில் மதுரையில் வாழ்ந்து வருகிறார்.


குறிப்பு: கொண்டையராஜூ ஓவியரின் சீடர்கள் அனைவரையும் 2012 - 2015 வாக்கில் நேர்காணல் செய்தது. 2015 பெரு மழை வெள்ளத்தில் அழிந்து விட்ட நேர் காணல்களை முடிந்த வரை மீட்டெடுத்து வரும் முயற்சியின் ஒரு பகுதி இது.

படம் 1: கே.எஸ். மீனாட்சி சுந்தரம் (வயது 92)
படம் 2: காஞ்சி பெரியவர்
படம் 3: ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைன்
படம் 4 - 5 : ஸ்டுடியோ பேக்ரவுண்ட் டிசைன்
படம் 6: ஆதாம் ஏவாள்
படம் 7: வாமனன்


படங்கள் உதவி: கோவில்பட்டி மாரீஸ்

தொடர்பு:
ரெங்கையா முருகன்
https://www.facebook.com/rengaiah.murugan.73










No comments:

Post a Comment