பயத்துடன் வாழப் பணித்தாயோ
—— கவியாழி . கண்ணதாசன்
மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே
மறந்ததை இழந்ததை அறிவாயோ
புகழ்ச்சியின் உச்சத்தில் உன்னை-இன்றும்
பூமியில் தினமும் வணங்குகிறோம்
இயற்கையை மனிதன் அழித்ததனால்
இளமையில் உழைக்கத் தவறியதால்
உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின்
உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ
மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு
மானிடம் மறந்ததை அறிந்தாயோ
மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை
மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ
பிழைக்கவும் வழியே தெரியாமல்
பிணமாய் மக்கள் உயிர்வாழும்
பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே
பயத்துடன் வாழப் பணித்தாயோ
தலைநிமிர்ந்தே தினமும் வணங்கி
தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம்
நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று
நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ
தினம் பலபேர் மடிவதால்
தீங்கு செய்யும் மக்களுக்குப்
பணமும் பொருளும் பயனின்றி-மக்களின்
பாசம் நேசம் பகிர்ந்தாயோ
அழிவுப் பாதையை அறிந்தாயோ
அழிக்கும் வேலையும் இதுவன்றோ
இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும்
இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே
பூமியின் சுழற்சியைப் புரிய வைக்கப்
புத்துயிர் மக்களைத் தெளிய வைக்க
நித்தமும் நிம்மதி இழக்கச் செய்து-மனிதன்
சித்தமும் கலங்கிடச் செய்தாயோ
தொடர்பு: கவியாழி . கண்ணதாசன் (https://www.facebook.com/ kannadasanr)
பிரமாதம்
ReplyDelete