Showing posts with label முனைவர் ச.கண்மணி கணேசன். Show all posts
Showing posts with label முனைவர் ச.கண்மணி கணேசன். Show all posts

Saturday, April 18, 2020

ஹிந்தியில் வழங்கும் உயிர் இடம் பெயர்ந்த தமிழ்ச் சொற்கள்

ஹிந்தியில் வழங்கும் உயிர் இடம் பெயர்ந்த தமிழ்ச் சொற்கள்   

—   முனைவர்.ச.கண்மணி கணேசன் 



முன்னுரை:
தமிழில் பண்டுதொட்டு வழங்கும் சில சொற்கள் உருபொலியனியல் விதிகளுக்கு உட்பட்ட சில மாற்றங்களை ஏற்று ஹிந்தியில் வழங்குவதைத் தொகுத்துக் காட்டும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் ஒன்றாகக் கருதக்கூடிய ஹிந்தியில் வழங்கும் சொற்கள் பெரிதும் சம்ஸ்கிருத வழக்குகளைப் பின்பற்றி அமைந்திருக்கும் ஆதலால்; இக்கட்டுரை தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றுள்ள சொற்களை அடையாளம் காணும் முயற்சியாக அமையும். இன்றைய தமிழ் வழக்குகளும், ஹிந்தி வழக்குகளும் முதல்நிலைத் தரவுகளாக அமைய; தொகைநூல் வழக்குகளும், உருபொலியனியல் விதிகளும், ஒத்த பிற மாற்றங்களும் துணை ஆதாரங்களாக அமைகின்றன.

            அரசு >>> राज 
தொகை நூல்களில் ‘அரசு’ என்னும் சொல் மன்னன் என்றும் அரசாங்கம் என்றும் பொருள்பட்டு முறையே; 
அரசே     அரசோ     அரசோடு     அரசும்     அரசின்     அரசன்     அரசனை     அரசியல்     அரசு 
எனப்பல உருபுகளுடனும் விகுதிகளுடனும் சேர்ந்து 44முறை பயின்று வருகிறது. வடமொழியில் வழங்கும் ‘ராஜ்’ என்ற சொல்லுடன் ஒலியொப்புமையும் பொருள் ஒப்புமையும் கொண்டுள்ள இச்சொல் பின்வரும் மாற்றத்திற்கு உட்பட்டு உள்ளது.          
arasu >>>  raasu >>>  raaj 
இது உயிர் இடம்பெயரல் என்னும் விதி அடிப்படையில் அமைந்த மாற்றம் ஆகும் (இக்கால மொழியியல்- உருபொலியனியல்).

இந்தோஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் ஒரு கிளையாகிய இந்தோஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஹிந்தியில் வழங்கும் இம்மாற்றம் இந்தோ ஐரோப்பிய மொழி வழக்காறுகளோடு ஒப்புநோக்கற்குரியது.
royal     region     regal     right     rule     regular     regiment     real     rank     realm
போன்ற சொற்கள் அனைத்தும் தொடர்புடையன என்னும் கருத்து நிலவுவதும் சிந்திக்கத் தக்கது. இவ்ஆங்கிலச் சொற்கள் லத்தீன், பழைய ஃபிரெஞ்ச், போர்ச்சுகீஸ், சமஸ்கிருதம், பழைய ஐரிஷ், டச்சு, மூல ஜெர்மானியம், ஜெர்மானியம் போன்ற மொழிகளிலிருந்து வந்து ஆங்கிலத்தில் வழங்குவன. தமிழில் உள்ள ‘அரசு’ மூலச்சொல் என்பதைப் பிற உயிர் இடம் பெயர்ந்த சொற்களைக் கொண்டு நிறுவலாம்.                                                                    
ஆங்கிலத்தில் பயன்பாட்டில் உள்ள rice என்னும் சொல் தமிழிலுள்ள ‘அரிசி’ என்ற சொல்லில் இருந்து அதே உயிர் இடம்பெயரல் என்னும் விதிக்கு உட்பட்டு அடைந்த மாற்று வடிவம் என்பதில் ஐயமில்லை. ‘வெள் அரிசி’, ‘கழைநெல் அரிசி’, ‘வரகின் அரிசி’, ‘கொய்குரல் அரிசி’, ‘தினை அரிசி’, ‘அவைப்பு மாண் அரிசி’, ‘அவையா அரிசி, ‘புகர்வை அரிசி’, ‘முரியா அரிசி, ‘வால் அரிசி’, ‘குற்று அரிசி’, ‘பண்ணை வெண்பழத்து அரிசி’, ‘நெல்லின் அரிசி’ எனப் பல பெயரடைகளோடு ‘அரிசி’ என்னும் சொல் தொகை நூல்களில் 21முறை பயின்று வருகிறது.            
arisi >>> raisi  >>> rais 
ஆங்கிலத்தில் rice என்று எழுதுவோம். மொழியியலாளர் பலரும் ஏற்றுக்கொண்ட இம்மாற்றம் உயிர் இடம்பெயரல்  என்ற விதியைப் பின்பற்றியே விளக்கம் பெறுகிறது.   .

            அமர் >>> मार
'அமர்'  என்ற சொல் சண்டை அல்லது போர் என்ற பொருளிலும் தமிழில் வழங்கியது. தொகைநூல்களில் 71இடங்களில் இப்பொருண்மைப் பயன்பாட்டைப் பார்க்க இயல்கிறது. உயிர் இடம் பெயரல் என்னும் மாற்றத்தை அடையும் போது;   
amar >>> maar 
என்றாகி ஹிந்தியில் அடித்தல் எனும் பொருளில் வழங்குகிறது.

            உலகு >>> लोग  
உலகு என்ற தமிழ்ச்சொல் தொகைநூல்களில்;
உலக      உலகு     உலகத்தான்     உலகத்தானும்     உலகத்தானே     உலகத்து     உலகத்தும்     உலகத்துள்     உலகத்துள்ளும்     உலகத்தோர்க்கு     உலகத்தோர்க்கே     உலகத்தோரே     உலகம்     உலகமும்     உலகமொடு     உலகமோடு     உலகில்     உலகிற்கு     உலகினும்     உலகினுள்     உலகுடன்     உலகும்     உலகே     உலகின்        
எனப் பல்வேறு பின்னொட்டுக்களை  இணைத்துக் கொண்டு 184இடங்களில் பயின்றுவந்துள்ளது. இடப்பெயராகவும் இடவாகுபெயராகவும் தமிழில் வழங்கும் உலகு என்ற சொல்லில் உயிர் இடம்பெயர்ந்து; பின்வரும் மாற்றத்தை அடைகிறது.     
ulahu >>>lauhu >>> laug  >>> log 
ஹிந்தியில் log = மக்கள் என்ற பொருளில் வழங்குகிறது.

            அரண் >>> राणा 
‘அரண்’ என்னும் தொகை நூற்சொல் காவல் தரும் எயில், மதில், காடு முதலியவற்றுக்கு உரியதாக வழங்கியுள்ளது. 
அரண்கள்     அரணம்     அரணமும்     அரணால்     அரண்     
போன்ற சொல்வடிவங்களைத் தொகை நூல்களில் மொத்தம் 44இடங்களில் காணஇயல்கிறது. உயிர் இடம் பெயர்ந்து; பின்னர் ‘ஆ’காரத்துடன் இணைந்து ஹிந்தியில் கோட்டைக்குரியவன் என்னும் பொருள்படுகிறது. 
araṇ >>> rāṇ
rāṇ + aa = rāṇā 
ராணா பிரதாப்சிங் என்ற பெயரில் உள்ள ‘ராணா’ அவனைக் கோட்டையின் தலைவன் என்றே உணர்த்தி நிற்கிறது.

            உறுப்பு >>> रूप 
உடலின் பல்வேறு பாகங்கள் அல்லது முதற்பொருளின் பல்வேறு சினைப்பகுதிகளைக் குறிப்பதாகத் தமிழில் வழங்கும் 'உறுப்பு' என்ற சொல் தொகை நூல்களில் 4 இடங்களில் பயின்று வரக் காண்கிறோம்.
uṟuppu>>> ruup
ஹிந்தியில் ruup = உருவம் என்று பொருள்படுகிறது.    

            மா >>> आम 
மாமரம் என்னும் முதற்பொருளையும் மாம்பழம், தளிர் என்னும் சினைப்  பொருட்களையும் குறிக்கும் 'மா' என்னும் சொல் தமிழ்த்தொகை நூல்களில் 48 இடங்களில் உள்ளன. ‘’மாஅத்த’ என்று சொல்லிசை அளபெடையாகவும் பயின்று வருகிறது. ஹிந்தியில் உயிர் இடம் பெயர்ந்து;
Maa >>> aam 
என்றாகி மாம்பழத்தைக் குறிக்கிறது.    

            அலை >>> हिला  
அங்குமிங்குமாக இயங்குதல் என்னும் பொருளிலும்; அத்தன்மை உடைய நீரலையைக் குறிப்பிடுவதாகவும்; ‘அலை’ என்ற சொல் பல உருபுகளுடனும் இணைந்து; பல்வேறு வடிவங்களைப் பெற்றுத் தமிழில் வழங்கி வந்துள்ளது.
அலை     அலைக்க     அலைக்கும்     அலைக்குமே     அலைத்த     அலையில்     அலையால்     அலையா     அலைத்தென     அலைத்ததால்     அலைத்ததற்கு     அலைத்தரும்     அலைத்தாய்     அலைத்தான்     அலைத்தன்றே     அலைத்தி              அலைத்து அலைப்ப         அலைப்பவும்              அலைப்பேனா அலைஇயர்
எனப் பலவாறாகப் பயின்று வருவதைத் தொகைநூல்களில் 106 இடங்களில் காண்கிறோம். ஹிந்தியில் உயிர் இடம் பெயர்ந்த பின் ‘அசைய‘ என்னும் பொருள்பட; 
alai >>> hilaa 
என்று மாறி வழங்குகிறது. பின்னர் நீரலை என்னும் பொருள் தருவதற்கு;
hilaa >>> hilor 
என்று மாறி வழங்குகிறது.

முடிவுரை:
‘அரசு’ என்ற தமிழ்ச் சொல்லின் ஆக்கமும் மாறுபாடுகளும் பரந்து விரிந்த ஆய்விற்குரியது. அலை, மா, உறுப்பு, அரண், உலகு, அமர், அரிசி முதலிய சொற்கள் அடைந்துள்ள மாறுபாடுகளும் பயன்பாடுகளும்; இது போன்ற பிற சொற்களைத் தேடும் ஆவலைத் தூண்டுகின்றன.                                              

துணைநூற்பட்டியல்:
Lifco’s Hindi -Tamil Dictionary- S.R.Sarangapani (General editor)- lst edition reprint- 1992
முத்துச்சண்முகன் - இக்கால மொழியியல்- முதல் பதிப்பு- 1972 
நன்றி http://tamilconcordance.in/TABLE-sang.html   


தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி





 

Saturday, December 14, 2019

சிலப்பதிகாரத்தில் ‘புனல்வாயில் வஞ்சியும்’, ‘புல்லிலை வஞ்சியும்'

சிலப்பதிகாரத்தில் ‘புனல்வாயில் வஞ்சியும்’, ‘புல்லிலை வஞ்சியும்'

—   முனைவர்.ச.கண்மணி கணேசன்


முன்னுரை:
          சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியம் சொல்லும் ‘புனல்வாயில் வஞ்சி’, ‘புல்லிலை வஞ்சி’ ஆகிய இரண்டு வஞ்சிகளும் பற்றிய குறிப்புகள் உள்ளனவா? என்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

          பதிற்றுப்பத்து, புறநானூற்றுச் செய்திகளோடு சிலப்பதிகாரச் செய்திகளை ஒப்பிட அவையே முதல்நிலைத் தரவுகளாம். பிற தொகைநூற் செய்திகளும், கல்வெட்டு ஆதாரங்களும், ஆய்வாளர் கருத்துக்களும் இரண்டாம்நிலைத் தரவுகளாம்.

          உதியன் மரபு, இரும்பொறை மரபு என இருவம்சத்தினர்; ஒரே கால கட்டத்தில் முறையே; மேற்கரைப்பகுதியையும், கொங்குப்பகுதியையும் ஆண்டு வந்தமையைப் பதிற்றுப்பத்து காட்டுகிறது. (கா.கோவிந்தன்- சங்ககால அரசர் வரிசை- ப.- 4; அ.மு.பரமசிவானந்தம்- தமிழக வரலாறு- ப.- 130; C.S. செலுவ ஐயர்- Annals Of Oriental Research-ப.- 113). சேரமன்னரின் தலைநகர் வஞ்சி எனும் பொதுப்பெயர் பெற்றது. சங்கஇலக்கியமும், சிலப்பதிகாரமும்; மேற்கரை வஞ்சியையும், கொங்கு வஞ்சியையும் விதந்து பேசுகின்றன.    

          மேற்கரை வஞ்சி நானிலவளம் பொருந்தியது. ‘மூதூர்’ என்றும் பெயர்  பெற்றது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (பதிற்.- 15), அவனது தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் (பதிற்.- 30), மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (பதிற்.- 53), செங்குட்டுவன் (சிலப்பதிகாரம்- வஞ்சிக் காண்டம்) ஆகியோர் இருந்து ஆண்டதாகும்

          மூதூரின் நானில வளம்; ஞாழல் பூக்கள் சிதறிக் கிடக்கும் கரை; மணிக்கலம் போன்ற நெய்தலின் இலைகளைத் துழாவிக் குருகுகள் மீன்வேட்டையாடிப் பசியாறி வெள்ளிய பூங்கொத்துக்களுடைய புன்னைக்  கிளைகளில் இனிதுறையும் கானல்; ஓங்கிய மணல்மேட்டில் தாழ்ந்து இருக்கும் அடும்பினை அலை மோத ஒதுங்கிய கடற்சங்குகளின்  ஒலி; முத்தும் பவளக்கொடியும் சேர்க்கும் மக்கள் வாழும் குளிர்ந்த நெய்தலும், காந்தள் சூடிய வில்வேட்டுவர் ஆமானிறைச்சியோடு யானைத்தந்தங்கள்  தந்து; பண்டமாற்றாக வடித்த கள்ளைப் பெறும் பொன்மலி ஆவணத்து  ஊர்களுடைய குறிஞ்சியும், வெண்மையாக நுரைத்து வந்த சிவந்த ஆற்றுவெள்ளத்தால் பூத்துத் தேன்சிந்திய மருதமரம் அடியோடு சாய; வைக்கோற் புரிகளுடன் மணல்மேடிட்டு அணை கட்டிய மக்களின்  ஆரவாரம்; காலமல்லாத காலத்திலும் கரும்பறுத்தொழியாது அரிகாலும் அகழ்ந்து; பல பூக்களோடு; முழவு முழங்கும் திருவிழாக் கண்டு மீளும் மக்கள்மிகு வளமான மருதமும், தினைக்கொல்லை உழவரது வரகுத்தாள் வேய்ந்த மனையில்; மெல்லிய தினைமாவால் விருந்து  புறந்தரும் புன்செயுடைய முல்லையும் என வருணிக்கப்படுகிறது (பதிற்.- 30).

          சிலப்பதிகாரம் காட்டும் செங்குட்டுவன் வஞ்சியும் நானில வளம் பொருந்தியது. அவன் மனைவி நானிலப் பண்களையும் ஒருங்கே கேட்டு இருந்தாள் (நீர்ப்படை காதை- அடி.- 215-251). கோவலர் தம் ஆநிரைகளைத் தண்ணான் பொருநையில் விட்டுத் தாழைக்கோட்டின் மேல் ஏறியிருந்து முல்லைப்பண் பாடிக் குழலூதினர். முற்றிய தேறலைப் பருகிக்  கானவன் கவண்கல் வீசும் காவலைக் கைவிடப் புனத்தினை மேய வந்த யானை தூங்கும்படியாகப் பரண் மேலிருந்து குறத்தி குறிஞ்சிப்பண் பாடினாள். நாளை மன்னனின் பிறந்தநாளாகையால்; நுகம் பூண்டு உழவேண்டியது  இல்லை என்ற உழவரோதை; மருதப்பண்ணாகக் கேட்டது. வெள்ளலை மோதும் மணற்குன்றை அடுத்திருந்த அடைகரையின் புன்னைநிழலில் வலம்புரி ஈன்ற முத்துக்களை எடுத்துக் கழங்காடும் மகளிர் சேரனைப் புகழ்ந்து நெய்தற்பண் பாடினர்.

          வரந்தருகாதையின் முடிவில் இடம்பெறும் கட்டுரை செங்குட்டுவன் வஞ்சியைப் “பழவிறல் மூதூர்”- (அடி- 5) என்றே குறிப்பிடுகிறது.                

          சிறுபாணாற்றுப்படை புனல்வாயில் வஞ்சியை வருணிக்கும் போது; ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை; பரந்து விரிந்த கழி; எருமை தன் அகன்ற வாயால் வளவிய கழுநீர்ப் பூக்களை மேய்தல்; அடியெடுத்து வைக்கும்போது கழியுள் கொழுத்த மீன்கள் சிதைதல்; காட்டுமல்லிப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் கரையில் மிளகுக்கொடி படர்ந்த பலா மரம்; அங்கு தங்கி; கழுநீர்ப் பூக்களுள் இருந்த தேன் மணக்க அசை போடும் எருமையின் மயிர்நிறைந்த முதுகை மஞ்சளின் மெல்லிலை உராய்தல் என நானில வளங்களும் இடம்பெற்றுள்ளன (அடி.- 41-50).

மேற்கரை வஞ்சியின் கோட்டை:
          ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம் காக்கைப்பாடினியார்; 'நீ யானை மேலேறி நேராகக் கோட்டைவாசலுக்குப் போனால் உன் யானை பழக்க தோஷத்தால் அதை முட்டிக் குத்தித் தகர்த்துவிடும். உன் முன்னோர் போற்றிப் பாதுகாத்த கோட்டைக்கு இயற்கையாக அமைந்த காட்டரண் வழியே வளைந்து வளைந்தேனும் சென்று ஊருக்குள் நுழைவாயாக.’ என்கிறார். ‘கழிக்குள் நுழைந்து பின்னர் கரையேறு’ என்பது குறிப்பாகக் கிடைக்கும் பொருள். மூதூர் பெரியாற்றின் கழிமுகத்தை அடுத்து சற்று உள்நாட்டிலிருந்தது. அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் (ம.பசுவலிங்கம்- சங்ககால வஞ்சி- ப- 134). ஆதலால் அப்படிக் கட்டியிருக்க வேண்டும் (பதிற்.- 53).
          சிலப்பதிகாரம் மேற்கரை வஞ்சிக்கோட்டையின்; மேற்சுட்டிய தனித் தன்மை புலப்படும்படிக் கூறும் வருணனை குறிப்பிடத்தக்கது. வடநாட்டுப் போருக்குக் கிளம்பிய படை கோட்டைவாசல் வழியாக வெளியேறாமல்;
                    “வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத”ச் 
சென்றன  என்பதால் (கால்கோட்காதை- அடி- 81); ஆற்றின் சங்கமத்துறை, கடற்கழி முதலியவற்றுடன் தொடங்கும் பயணப்பாதை விளக்கம் பெறுகிறது.

புல்லிலை வஞ்சி:
          செல்வக்கடுங்கோ வாழியாதன், பெருஞ்சேரலிரும்பொறை என்ற பாலை பாடிய பெருங்கடுங்கோ, இளஞ்சேரலிரும்பொறை என்ற இளங்- கடுங்கோ மூவரும் ஆண்டது கொங்குவஞ்சி. இவ்வூரின் அருகே புகளூரில் கிடைத்திருக்கும் கல்வெட்டு மூவரின் பெயரையும் ஒருசேரச் சுட்டுவது  மூவரும் அதைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர் என்பதைத் தெரிவிக்கிறது (நடன.காசிநாதன்& கு.தாமோதரன்- கல்வெட்டு- ஓர் அறிமுகம்- ப.- 34). இவர்களைப் பற்றிய பாடல்கள் கொங்குவஞ்சியை வஞ்சி என்னும் தாவரத்தோடும் தண்பொருநை ஆற்றோடும் தொடர்பு படுத்துகின்றன.
அலைக்கும் இலையில்லாத வஞ்சி எனும் பொருள்பட;
                    “புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் 
                    கல்லென் பொருநை”- (புறம்.- 387) 
என்று; ஆற்றோடும், வஞ்சித்தாவரத்தோடும் தொடர்புறுத்திப்  பாடப்பட்டுள்ளது. 

                    “தண்பொருநைப் புனல்பாயும் 
                    விண்பொரு புகழ் விறல்வஞ்சி”- (புறம்.- 11) 
என; ஆறும் ஊரும் ஒருங்கு பேசப்படுகின்றன. சோழன் நலங்கிள்ளி;

                    “பூவா வஞ்சியும்”- (புறம்.- 32) நல்கக்கூடிய பெருமை 
                    பொருந்தியவன் என்னும்போதும் வஞ்சி தாவரத்துடன் தொடர்புறுகிறது. 
                    சோழியஏனாதி திருக்குட்டுவனையும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பாடும்போதும்; 
“வாடா வஞ்சி”- (புறம்.-39& 394) எனத் தாவரத்தோடு தொடர்புறுத்துவது நோக்கற்குரியது.
சிலப்பதிகாரம் நாட்டார் வழக்காற்றுப் பாடலில் கொங்கு வஞ்சியைக் குறிப்பிடுகிறது. வாழ்த்துக்காதையில் மகளிர்;
                    “வாழியரோ வாழி வருபுனல்நீரத் தண்பொருநை
                    சூழ்தரும் வஞ்சியார் கோமான்தன் தொல்குலமே”-(பா- 14)
என; அம்மானை ஆடத்தொடங்குமுன் மூவேந்தரை வாழ்த்துங்கால் வஞ்சி  தண்பொருநை ஆற்றினால் புரக்கப்படுவதைப் பாடுகின்றனர். 

          இன்றைய அமராவதி நதியே தண்பொருநை ஆகும். பாலக்காட்டுக்   கணவாய்க்குத்  தெற்கே இருந்த மேற்குமலைத் தொடர் பொருப்பு என்று பெயர் பெறும் (S.கணபதிராமன் -பொருநை நாடு -ப.- 34). பொருப்பில் தோன்றிய நதிகள் பொருநை எனும் பொதுப்பெயரைப் பெற்றன (ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை -பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு - ப.- 20). கிழக்கு நோக்கி ஓடுபவை பெண்நதிகள்; மேற்கு நோக்கி ஓடுபவை ஆண் நதிகள் என்னும் கொள்கையின்படி பொருப்பிலிருந்து மேற்கு நோக்கி ஓடிய சுள்ளியம்பேரியாறு ‘ஆன்’ எனும் முன்னொட்டைப் பெறும் (கழகத் தமிழகராதி-ப.- 93- ஆன்=பெற்றம்; ப.- 704- பெற்றம்=இடபம்; S.கிருஷ்ண சாமி ஐயங்கார்- சேரன் வஞ்சி -ப.- 41&42). பொருப்பிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிய நதிகள் ‘தண்’எனும் முன்னொட்டு மட்டும் பெற்றன (தண்பொருநை> தாமிரபரணி). அதுபோல கொங்கு வஞ்சியை அடுத்து ஓடும் பொருநை 'தண் 'என்னும் முன்னொட்டைப் பெற்றுள்ளது.

முடிவுரை:
          சங்க இலக்கியத்தில் விதந்து ஓதப்பட்ட இரண்டு வஞ்சிகளும் அதே தனித்தன்மையுடன் சிலப்பதிகாரத்திலும் விதந்து ஓதப்பட்டுள்ளன.


சுருக்கக் குறியீட்டு விளக்கம்:
பதிற்.- பதிற்றுப்பத்து    

துணைநூற்பட்டியல்:
1.  கணபதிராமன்,S.- பொருநை நாடு- 1ம் பதிப்பு- 1966- ஸ்ரீ M.G.M. வெளியீடு, தென்காசி.
2.  கழகத் தமிழகராதி- கழகவெளியீடு-1171- 3ம் பதிப்பு-1974- சென்னை.
3.   காசிநாதன்,நடன.& தாமோதரன்,கு.- கல்வெட்டு(ஓர் அறிமுகம்)- முதற்பதிப்பு- 1973- தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு-31, சென்னை.  
4.  கிருஷ்ணசாமி ஐயங்கார்,S.- சேரன் வஞ்சி- 1946- Educational Publishing Company, சென்னை.
5.  கோவிந்தன்,கா.- சங்க கால அரசர் வரிசை- தொகுதி- l- 1ம் பதிப்பு- 1955- கழக வெளியீடு- 757- சென்னை.
6.  சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லார் உரையும்- உ.வே. சாமிநாதையர்(ப.ஆ.)- தியாகராச விலாச வெளியீடு- 8ம் பதிப்பு- 1968
7.  துரைசாமிப்பிள்ளை,ஔவை சு.- பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு- 4ம் பதிப்பு- திருவளர் பதிப்பகம், தூத்துக்குடி.
8.  பசுவலிங்கம்,ம.- சங்ககால வஞ்சி- 1ம் பதிப்பு- 1984- சேகர் பதிப்பகம்,சென்னை. 
9.  பத்துப்பாட்டு -வர்த்தமானன் பதிப்பகம்- முதல் பதிப்பு - 1999
10.  பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்- உ.வே. சாமிநாதையர் (குறிப்புரை)- தியாகராச விலாச வெளியீடு- 6ம்பதிப்பு- 1957
11.  பரமசிவானந்தம்,அ.மு.- தமிழக வரலாறு- 3ம் பதிப்பு- 1971- தமிழ்க்கலை பதிப்பகம், சென்னை.
12.  புறநானூறு- பகுதி- l&ll -  ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.)- கழக வெளியீடு-438& 598- முதல்பதிப்பின் மறுபதிப்பு- 2007- கழகவெளியீடு, சென்னை.
13.  Celuva Aiyar,C.S.- "The Vanjimanagar Or The Great City Called Vanji”- ப.- (113-114)- Annals Of Oriental Research- மதுரைச்செந்தமிழ்க் கல்லூரி நூலகத்து  இந்நூல் சிதைந்துள்ளது. 
14.  பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்- உ.வே. சாமிநாதையர் (குறிப்புரை)- தியாகராச விலாச வெளியீடு- 6ம்பதிப்பு- 1957


குறிப்பு:
          ‘சிலப்பதிகாரம் காட்டும் பழந்தமிழர் வாழ்வும் வரலாறும்’ என்னும் பொருண்மையில், 12.12.2019 அன்று சிவகாசி ஸ்டாண்டர்ட் ஃபயர்ஒர்க்ஸ் ராசரத்தினம் மகளிர் கல்லூரியும், ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி தமிழ் இலக்கியக் கலைமன்றமும், செம்புலம் பன்னாட்டுத் தமிழாராய்ச்சிக் காலாண்டிதழை வெளியிடும் செம்மூதாய் பதிப்பகமும் சேர்ந்து கல்லூரி வளாகத்தில்  நடத்திய கருத்தரங்கில் வாசித்தளித்த ஆய்வுக்கட்டுரை. செம்புலம் இதழில் பதிப்பிக்கப்பட்டது.




தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி




Tuesday, October 15, 2019

தொல் தமிழகத்து வழிபாடுகளில் இயற்கைப் பொருட்கள்- ஒரு ஒப்பீடு


— முனைவர் ச.கண்மணி கணேசன் 


முன்னுரை:
            பண்டைத் தமிழரிடம் நிலவிய வழிபாடுகளில் இடம் பெற்ற இயற்கைப் பொருட்கள் எவை எவை? வழிபாட்டுக்கு ஆதாரமாக அமைந்த நம்பிக்கைகளும்,   காரணங்களும் என்னென்ன? எந்த  முறையில் வழிபாடு நடந்தது ஆகியவற்றைக் கண்டறிந்து ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.  காலத்தால் முற்பட்டனவாகக் காணப்படும் இயற்கை வழிபாடுகளின் எச்சங்களை இன்றும் நம்மால் இந்து சமயத்தில் அடையாளம் காண இயல்கிறது. எடுத்துக்காட்டாகத் தலமரங்களைக் கூறலாம். பறவை வழிபாடுகளும் இனம் தெரிகின்றன. இதனால் தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தில் நிலவிய இயற்கை வழிபாடு பற்றிய தெளிவான அறிவு தேவைப்படுகிறது.

            எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் இடம் பெறும் வழிபாடுகள் சுட்டும் இயற்கைப்பொருட்கள் மட்டுமே ஆய்வுக்குரிய எல்லையாக வரையறுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. காலத்தால் முற்பட்டனவாகக் கிடைத்திருக்கும் தொகை நூற்சான்றுகளே முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. திருக்குறள், இரட்டைக் காப்பியங்கள், இன்றைய ஊடகச் செய்திகள், ஆய்வாளர் கட்டுரைகள் முதலியன இரண்டாம்நிலைத் தரவுகளைத் தருகின்றன.  இயற்கைப் பொருட்களைத் தொகுக்குங்கால் மரபு வழிப்பட்ட பகுப்புமுறை ஆய்வு பின்பற்றப்படுகிறது. காக்கை, கூகை பற்றிய  நம்பிக்கைகளும், வழிபாட்டு முறைகளும் ஒப்பியல்முறையில் பொருத்திக் காட்டப்படுகின்றன 


[1] தொல்தமிழர் சமயக் கொள்கை:
            இயற்கை வழிபாட்டுடன் மாறுபட்ட உருவவழிபாட்டை எள்ளுவது போன்ற தொகைநூற் பாடல்கள் உள்ளன.

            “தோற்றம் அல்லது நோய்க்கு மருந்தாகா 
            வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்தி”- (குறுந்.- 263) 
என்னும் தலைவியின் சலிப்பான சொற்கள் தொல்தமிழகத்து மக்கள் போற்றியது   இயற்கைப் பொருட்களின் வழிபாடு என்ற கொள்கையைத்தெளிவுறுத்துகின்றன.

            “கண்ணிற் காண நண்ணுவழி இருந்தும் 
            கடவுள் நண்ணிய பாலோர் போல”- (குறுந்.- 203) 
என்ற பாடலடிகள் வருணத்தார் வருகையால் தமிழகத்து இயற்கை வழிபாடு மாற்றம் அடைந்ததென வெளிப்படையாகப் பேசுகின்றன.      


[2] வழிபட்ட இயற்கைப்பொருட்கள்:
தொன்மையான ஆல், கடம்பு, வேம்பு முதலிய மரங்களும்; நிழல் தருமளவிற்கு உயர்ந்த கள்ளி மரமும், நடுகல் வழிபாட்டிற்கு நிழல் தந்த ஓமை மரமும் பொது மக்களால் படையலிட்டு வழிபடப்பட்டன. அம்மரங்களில் தெய்வங்கள் உறைவதாக நம்பினர். மலை உச்சியும், அம்மலைகளில் இருந்த சுனைகளும், காடும், கடல் முதலிய பிற நீர்த் துறைகளும், மணம் பொருந்திய மலர்களும், அரவு,முதலை, ஆளி முதலிய விலங்குகளும், சுறவின் கோடும், பூமியும், நிலவும் தெய்வத் தன்மை பொருந்தியன எனக்     கருதப்பட்டன. 

மரங்கள்:
            “எம்மூர் வாயில் ஒண்டுறைத் தடைஇய
            கடவுள் முதுமரத்து”- (நற்.- 83) 
என்ற பாடல்; ஊரின் வாயிலில் நீர்த்துறையின் கரையில் இருந்த முதுமரத்தைக்  காட்சிப்படுத்துகிறது. அம்மரத்தைக் ‘கடவுள்மரம்’ என்று தலைவி அழைப்பது நோக்கத்தக்கது. இத்தகு மரங்களைக் ‘குற்றமில்லாத மரம்’ எனும் பொருளில் ‘மாசில் மரம்’ என்றனர். (நற்.- 281)

            கறவைகளின் முதுகைத் தீண்டுமளவு விழுதுகள் தாழ்ந்த ஆலமரத்தைக் “கடவுள்ஆலம்” என்று சுட்டுவது நோக்கத்தக்கது (நற்.-343). இதே தொடர் புறம்- 199ம் பாடலிலும் பயின்று வருகிறது. விழுதுகளே மதில் போன்று அமைந்து பலி இடும் இட்டிகையுடன் அமைந்த ஆலமரத்தை அகம்- 287 விரித்து வருணிக்கிறது.

            ஏறு தழுவல் நிகழ்ச்சியின் போது காளைகள் வீரர்களின் குடலைக் குத்தி எடுத்து ஓடிய காட்சிக்கு உவமை கூறும் முல்லைக்கலிப்பாடல்,
            “ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட 
            மாலை போல் தூங்கும்”- (பா- 106) 
என; ஆலமரத்திலும், கடம்ப மரத்திலும் மக்கள் சுற்றிக் கட்டியிருந்த மாலையைக் காட்சிப்  படுத்துகிறது. அம்மரங்களை மக்கள் மாலையிட்டு வழிபட்டமை பெறப்படுகிறது.

            குறிஞ்சிப்பாட்டில் யானைக்கு அஞ்சித் தலைவனைச் சூழ்ந்து தம் கைகளைக் கோத்த தலைவியும் தோழியும் பற்றிப் புனையும் கபிலர்,
            “திணிநிலைக் கடம்பின் திரளரை வளைஇய 
            துணையறை மாலையிற் கைபிணி” - (குறிஞ்சிப்பாட்டு- அடி.- 176-177) 
விடாதவர்களாக அவர்களைப் பற்றி வருணிக்கிறார். இங்கே இரண்டு மாலைகளைச் சேர்த்து இட்ட பருத்த அடிமரம் பற்றிய ‘திரளரை’ என்ற தொடர் அம்மரம் முதிய மரம் என்னும் பொருளைக் குறிப்பாகத் தருகிறது.

            முதிய வேப்பமரத்தில் தெய்வம் பொருந்தி இருப்பதாக நம்பியமை;
            “தெய்வம் சேர்ந்த பராரை வேம்பு“- (அகம்.- 309) என்ற பாடலடி மூலம் புலனாகிறது. பருத்த அரை என்பதால் முதுமரம் என்பது தெளிவு.   

            கள்ளிமர நிழலில் தெய்வ வழிபாடு நிகழ்ந்தமையை; 
            “கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி”- (புறம்.- 260) எனும் தொடர் குறிக்கிறது. நிழல் தருமளவு உயர்ந்த கள்ளி முதுமரமே எனலாம்.

            வீரமரணம் அடைந்தவனின் நடுகல் ஓமைமர நிழலில் இருந்தமையால்;  
            “சூர்முதல் இருந்த ஓமையம் புறவு”- (அகம்.- 297) தெய்வத்தன்மை பெற்றது.

மலை உச்சி, காடு, நீர்த்துறைகள்:
            மலையுச்சியைக் கடவுள் உறையும் இடம் எனக் கொண்ட  தொல்தமிழகக்  கொள்கையை;
            “அணங்குடை நெடுங்கோட்டு”- (நற்.- 288& அகம்- 272),
            “அணங்குடை நெடுவரை உச்சி”- (அகம்- 22),
            “சூர்புகல் அடுக்கத்து”- (அகம்.- 359), 
            “பிறங்குமலை மீமிசைக் கடவுள்”- (குறிஞ்சிப்பாட்டு- அடி.- 208),
            “கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல்”- (புறம்- 158), 
            “கடவுள் ஓங்குவரை”- (நற்.- 165) 
என்று; பலரும் பாடியிருப்பது காட்டுகிறது. 

            காட்டில் தெய்வம் உறைவதாக நம்பி வழிபட்டனர்.
            “காடுறை கடவுள் கடன்கழிப்பிய” (பொருநராற்றுப்படை- அடி- 52) 
என்ற செய்தி உள்ளது. 

            முல்லை நிலத்து ஆயர் ஏறுதழுவும் முன்னர் நீர்த்துறையையும், மரங்களையும் முறைப்படி வழிபட்டனர்.
            “துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும் 
            முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ”- (கலித்தொகை.- 101) 
என்ற முல்லைக்கலிப் பாடல் அவர்கள் அடுத்தடுத்துச் செய்த செயல்களை வரிசைப் படுத்துகின்றது.

            மலைச்சுனைகள் இறைத்தன்மை உடையன என்பது;   
            “சூருடை நனந்தலைச் சுனைநீர் மல்க”- (நற்.- 7),
            “கடவுட் கற்சுனை”- (நற்.- 34), 
            “ஏர்மலர் நிறைசுனை உறையும் சூர்மகள்”- (அகம்- 198) 
எனும் பாடலடிகளால் புலப்படுகிறது. 

            கடற்கரையில் நின்ற பெண்ணைக் கடல்தெய்வம்  என்று புனைந்துரைக்கிறது ஒரு அகப்பாடல்;
            “பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ”- (நற்.- 155) 
என்று நெய்தல் நிலப் பெண்ணைப் பார்த்துத் தலைவன் கேட்கக் காரணம் கடல் ஒரு தெய்வமாகக் கருதப்பட்டமையே எனலாம். 

            கடலின் தெய்வத்தன்மை; 
            “தண்பெரும் பௌவம் அணங்குக”- (குறுந்.- 164),
            “பெருங்கடல் தெய்வநீர் நோக்கி”- (கலி.- 131) 
என்ற பாடல் அடிகளாலும் தெளிவு பெறுகிறது.      

நிலமும், திசைகளும்: 
            காடும் மலையும் பொருந்திக் கடலால் சூழப்பட்ட நிலத்தையும், திசைகளையும் தெய்வம் என்றனர்;
            “வையக மலர்ந்த தொழில்முறை ஒழியாது 
            கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து 
            தெண்கடல் வளைஇய மலர்தலை உலகத்து”- (பதிற்.- 88)
என்னும் பகுதி; பூமி கடவுள் என்னும் கருத்தைத் தருகிறது. 

            நெடுநல்வாடை கட்டுமானப் பணியைத் தொடங்கும் முன்னர்; 
            “நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத் 
            தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்
            பெரும்பெயர் மன்னர்க்கொப்ப மனை”- (அடி.- 77-78) 
என வகுத்த போது திசைத் தெய்வங்களை வாழ்த்தியதைக் காட்டுகிறது.

நிலவு:
            பட்டினப்பாலை திங்களைக் கடவுள் என்பதாக; நிலவுக்குரிய வழிபாட்டிடம் 
            “மதிசேர்ந்த மகவெண்மீன்
            உருகெழு திறலுயர் கோட்டத்து”- (அடி- 35-36) 
எனப் பேசுகிறது.

            “தொழுது காண் பிறையின் தோன்றி”- (குறுந்.- 178) என்ற உவமையும் நிலவு வழிபடப் பட்டமையைக் காட்டுகிறது.    

மலர்கள்:
            மணம் பொருந்திய காந்தளும், கடம்பும், அழகிய வேங்கை மலரும் தெய்வத்  தன்மை பொருந்தியனவாகக் கருதப்பட்டன;
            “சோலை அடுக்கத்துச் சுரும்புண விரிந்த 
            கடவுட் காந்தள் உள்ளும் பலவுடன் 
            இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி”- (அகம்- 152) 
என்று  பாடுங்கால் மணம் காரணமாகக் காந்தளுக்குக் கடவுட்தன்மை இருப்பதாகக் கருதியமை தெளிவு. 

            “புகழ் பூத்த கடம்பமர்ந்து”- (பரி.- 2) என்னும் போது;
            “கார்நறுங் கடம்பு”- (நற்.- 34) என்று 
போற்றப்பட்ட பூவின் மணமும் முருகனும் தொடர்புபடுத்தப்படுகின்றனர். 

            அழல் போல் சிவந்த வேங்கைக்கு தெய்வத்தன்மை ஏற்றப்பட்டமை;“எரிமருள் வேங்கை கடவுள் காக்கும்”- (நற்.- 216) என்ற தொடரால் தெரிகிறது.  

விலங்குகளும் அவற்றின் உறுப்புகளும்:
            அரவும் முதலையும் தெய்வத்தன்மை உடையனவாகக் கருதப்பட்டமை;
            “அணங்குடை அரவின்”- (நற்.- 168) என்ற தொடராலும்,
            “நாகத்து அணங்குடை அருந்தலை”- (நற்.- 37) என்பதாலும், 
            “சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய”- (அகம்- 72) என்ற 
அடியாலும் வெளிப்படுகிறது. சுறாவின் கொம்பு வழிபாட்டிற்குரிய பொருளானது.

            தாம் வேட்டையாடிய சுறா கருவுற்றிருப்பின் அதன் கொம்பைத்  தெய்வ வழிபாட்டிற்கு உரியதாக்கினர் பரதவர். பின்வரும்;   
            “சினைச் சுறாவின் கோடு நட்டு 
            மனைச் சேர்த்திய வல்லணங்கின்”- (பட்டினப்பாலை.- அடி.- 86-87) 
எனும் பாடலடிகளால் அத்தெய்வம் துடியான தெய்வமாகக் கருதப்பட்டமை தெளிவாகிறது. இன்று எத்தன்மைத்து என்று அறுதியிட்டுச் சொல்ல இயலாத ஆளி என்னும் விலங்கு தெய்வத்தன்மை பொருந்தியதாகக் கருதப்பட்டது.

            “ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்”- (அகம்.- 381)  யானைக் கூட்டத்தின் தலைமை சான்ற களிறு வீழும்படியாகத் தாக்கி அதன் கோட்டைப் பறித்து உண்டது      

காக்கை:
            மக்கள் தம் இல்லங்களில் காக்கைக்குப் பலிச்சோறு படைத்தனர்.
            “பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த 
            கொக்குகிர் நிமிரல்”- (நற்.- 258) மாந்திய காக்கை காண்க.

            திருக்குறள் மழையைத் தெய்வமாகப் போற்றுவதை அந்நூற் பாயிரத்தில் காண்கிறோம் (வான் சிறப்பு). நீர்ஆதாரங்களைத் தெய்வமாகக் கருதிய வழக்காறு நீதிஇலக்கிய காலத்தில் மழைப்பராவலாகத் தொடர்ந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் ஞாயிறு, நிலவு, மழை, காவிரிஆறு முதலிய இயற்கைப் பொருட்கள் போற்றப் படுகின்றன. (மங்கலவாழ்த்துப்பாடல்& கானல் வரி) நிலவைத் தெய்வமாக வழிபட்டமை சிலப்பதிகாரத்திலும் பேசப் படுகிறது. (கனாத்திறம் உரைத்தகாதை- அடி- 13) இன்றும் பல கோயில்களில் சந்திரனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. முழுநிலவு நாளுக்கென்று சிறப்பு வழிபாடும் நடைமுறையில் உள்ளது. பாம்பு வழிபாடு இன்றுவரை தொடர்வதும்; அதற்கெனத் தனிச் சந்நிதிகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கன. தாய்த்தெய்வ வழிபாட்டில் வேம்பு இன்றும் தனிச்சிறப்பு பெறுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தில் முதலை தெய்வமாக இருந்தது. இதை அகழ்வாய்வு முடிபுகளின் துணை கொண்டு ஆய்வாளர் நிறுவியுள்ளனர். (Dr. Naga Ganesan- Gharial god and Tiger goddess in the Indus valley: Some aspects of Bronze Age Indian Religion-Museumof FineArts, Houston, TX,2007) https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007 


[3] வழிபாட்டின் காரணம் அச்சம்: 
            நிலவு, நிலம், திசை தவிர்ந்த பிற வழிபாடுகள் அச்சத்தால் உருவாயின.

            வறட்சி மிகுந்த காட்டு வழியில் ஆறலைப்போரின் கணைகளால் உயிரை விட்டவர்களின் புண்ணிலிருந்து வழியும் குருதியைக் குடித்த காக்கைகள் ஒற்றர் போலத் தம் குரல் ஒடுங்கிப் பயிலும் மலைக்காட்டு வருணனை காக்கை வழிபாட்டின் அடிப்படை அச்சம் என்று நிறுவுகிறது. (அகம்.- 313)

            பூமியைப் பிளந்து சென்ற மாலை போன்ற விழுதுகள் வேராகும் ஆலமரப் பொந்தில் கூகை குளறுவதை வருணிக்குங்கால் ஆலமர வழிபாடு அப்பறவை காரணமாகவே அச்சத்திற்கு உரித்தாகிறது (புறம்.- 364).
பெரிய ஒலியும், பிதுங்கிய கண்களும், சுடுகாட்டில் பிணத்தின் தசையை உண்ணும் செயலும்; பேய் உலவும் இரவுப் பொழுதில் இரை தேடி அலைவதும் கூகை பற்றிய அச்சத்தைக் கூட்டும்.   (பதிற்.- 44, குறுந்.- 393, நற்.- 218, அகம்.- 19, 122& நற்.- 319).   
தான் வாழும் மரப்பொந்தில் இருந்து கொண்டு; போழ்ந்தாற் போலும் வாயலகை உடைய பேராந்தை ‘சுட்டுக் குவி’ எனச் செத்தோரை அழைப்பது போலக் கூவுகின்ற புறங்காட்டு வருணனை கூகை தங்கும் மரத்தின் வழிபாட்டிற்கு  அச்சத்தை அடிப்படை ஆக்குகிறது (புறம்.- 240& 261). 

            வேப்ப மரத்தில் தங்கிய கூகை அம்மரத்தை அச்சத்திற்குள்ளாக்கிற்று.  (நற்.- 218).

            ஆண்யானை தாக்கியும் சிதையாத வைரம் பாய்ந்த  ஓமைமரத்தில் தங்கியிருந்த பருந்தால் அச்சம் தோன்றியமை (அகம்.- 397) காண்கிறோம். அதுபோல் வௌவால் தங்கிய முதுமரங்கள் விதந்து பேசப்பட்டுள்ளன (குறுந்.- 352, அகம்.- 244).   

            மலையுச்சியிலிருந்த குகைகள் அச்சத்திற்குக் காரணமாயின. (அகம்.- 272) “அணங்குடை நெடுங்கோட்டு அஞ்சுவரு விடர்முகை” காண்க.  படமெடுத்து அச்சுறுத்தும் என்ற பொருளில் அரவின்; “அணங்குடை அருந்தலை பைவிரிப்பவை”- (அகம்.- 108) என்னும் போது பாம்புவழிபாடும் அச்சத்தையே அடிப்படையாகக் கொண்டது.

            கடல்வேட்டைக்கு இடையூறாகச் சுறாக்கள் வலைகளைக் கிழித்தமையும், பரதவர் உயிரை அழித்தமையும் பற்றிக் கூறும் பாடல்கள் பல. (குறுந்.- 318, நற்.- 78, 207, 215, அகம்- 190, 300, 340, 350& கலி.- 123) தாம் அழித்த சுறாக்கள்  கருவுற்று  இருப்பின்; அக்கருவைக் கொன்றமைக்கு அஞ்சி; அவற்றின் கொம்பைத் தெய்வமாக வழிபட்டுள்ளனர். 


[4] வழிபாட்டின் அடிப்படையாகும் நம்பிக்கை:
காக்கை வழிபாடு:   
            மரவழிபாட்டில் படைத்த பலிப்பொருட்களைக் காக்கைகள் உண்டன. காக்கை கரைவது நல்ல நிமித்தமாகக் கருதப்பட்டதால் மக்கள் தம் இல்லத்திலும் காக்கைக்குப் பலிச்சோறு இட்டனர். இதனால் காக்கைக்கும் தெய்வத்தன்மை இசைவதாயிற்று. வீரமரணம் அடைந்தவர்க்கு வழிபாடு நிகழ்த்துங்கால் அவர்களது ஆவி காக்கை உருவில் வந்து பலியை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையும் இருந்தது.  

            காக்கை தன் கூட்டத்தை அழைத்துக் குஞ்சுடன் சேர்ந்து மரவழிபாட்டின் 
            “கருனைச்செந்நெல் வெண்சோறு
            சூருடைப் பலியோடு” கவர்ந்தது (நற்.- 367, 343& 281).
பெண்கள் இல்லங்களில் காக்கைக்குப் பலியிட்டதை 1.1.7ல் கண்டோம்.  

            உடன்போக்கில் பிரிந்து சென்ற தன் மகள் மீண்டுவர வேண்டுமென்ற விருப்புடன் காத்திருந்த தாய்; காக்கை கரைந்தவுடன் நல்ல நிமித்தமாகக் கருதி அதற்குப் பலியிட;
            “பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி 
            முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு
            எழுகலத்து ஏந்தினும் சிறிது” என்று கருதுகிறாள். (பா- 210)  

            வீரமரணம் அடைந்தோர்க்குக் குருதி கலந்த சோறு படைத்து வழிபாடு நிகழ்த்த; கருங்காக்கை அதை உண்டது (பொருநராற்றுப்படை- அடி- 184). சேரன்   பல்யானைச் செல்கெழு குட்டுவனின் போர்முரசுக்கு விசும்பு அதிரும்படியாகச் செய்த வழிபாட்டைப் பற்றி விரிவான விளக்கம் பதிற்றுப்பத்தில் உள்ளது (பா- 30). அச்சம் தரக்கூடிய மரபின்படி படைத்த குருதி அளைந்த பலியைப் பேய்மகளும் தொட அஞ்சி நடுங்க; எறும்பும் மூசாத அப்பிண்டத்தைக் காக்கையும், பருந்தும் அருந்துவது கண்டு அனைவரும் மகிழ்ந்தனராம்.

            தென்னிந்தியாவில் சாதிப்பிரிவினை பற்றிய பழைய ஆதாரங்களைக்  கட்டுரைக்கும்; முனைவர் ஜார்ஜ் ஹார்ட் மேற்சுட்டிய வழிபாடு பற்றிப் பேசுங்கால் அதில் இருக்கும் இயற்கைப்  பொருளின் பங்கிற்கு உரிய இடம் அளிக்கவில்லை. (Early Evidences Of Caste In South India- 1987-  http://www.tamilnation.co/caste/hart.pdf) எனவே சமயம் பற்றிய அவர் கருத்து மீள்பார்வைக்கு உரியது.   

            மரத்திற்குப் படைப்பது; அம்மரப்பொந்திலிருக்கும் கூகை உண்பதற்கு உரியதாயிற்று. கூகை குளறுவது தீயநிமித்தமாகக் கருதப்பட்டது. இரவுக்குறியில் தன்னைக் காணத் தலைவன் வருங்கால் கூகை குளறின் அது தீநிமித்தமாகும் என்பதால்; தன் ஊர் முதுமரத்தில் வாழ்ந்த கூகையிடம் அது குளறாமல் இருக்கக் கெஞ்சும் தலைவி;
            “மையூன் தெரிந்த நெய்வேண் புழுக்கல்
            எலிவால் சூட்டொடு மலியப் பேணுதும்” (நற்.- 83) என்கிறாள்.      
வெள்ளைவாரணர் மேற்சுட்டிய நற்றிணைப் பாடல் தலைவி கூகைக்குப் பலிச்சோறு படைப்பது பற்றிப் பேசுவதாகக் கூறுகிறார். ஆனால் அவரது கருத்தை ஏற்கச் சான்று ஏதும் இல்லை. அவரது கருத்துக்கான ஆதாரம் எது என்று தெரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது    

            ‘ஆண்டலைக்கொடி’ என்னும் திருமுருகாற்றுப்படைத் தொடருக்கு நச்சினார்க்கினியர் மனிதத்தலையும் பறவை உடம்பும் கொண்ட வடிவம் என விளக்கம் அளிக்கிறார். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை கோழிச்சேவலே முருகவழிபாட்டுடன் தொடர்புடையது. அவர் சுட்டும் உருவம் கொண்ட புடைப்புச் சிற்பங்களை மாமல்லபுரத்தில் காண இயல்கிறது. மாமல்லபுரத்துச் சிற்பங்களின் காலமும்(கி.பி.6ம் நூடு.); அதை வெட்டிய பல்லவரின் நாகரிகமும் கருத்தில் கொள்ள வேண்டியவை. தம்மைப் பரத்துவாஜ கோத்திரத்தினர் என்று சொல்லிக் கொண்ட பல்லவர் வடநாட்டில் இசைக்கலைஞர்களை உயிர்ப்பலியாக்கிய   ஆரிய நாகரிகத்தில் கால்கொண்டு; தமிழகம் பெயர்ந்தவராவர். அவ்வாறு   கொல்லப்பட்ட கின்னரர் என்னும் இசைஞரே மனிதத்தலையும் ஆந்தை உடலும் கொண்ட தேவர் என்பர். தொல்தமிழகத்தில் பாணரோ, பொருநரோ, துடியரோ உயிர்ப்பலி கொடுக்கப்பட்டமைக்கு ஆதாரம் ஏதும் இல்லை. மாறாக வேந்தரின் வெற்றிக்கு வழிவகுக்கும் வழிபாட்டைச் செய்யும் தகுதி படைத்தவராக இருந்து உள்ளனர். (முனைவர் ஜார்ஜ் ஹார்ட்- மேற்.) நச்சினார்க்கினியரின்  உரையை ஒட்டியே நற்றிணைப் பாடலுக்கு வெள்ளைவாரணர் பொருள் கூறி  உள்ளார்.  

             வடநாட்டுத்  தாந்திரீக முறையிலிருந்து தொல்தமிழர் வழிபாடு  மாறுபட்டது. இன்றும் தீபத்திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளியன்று; அதாவது அமாவாசை இரவில் மாயசக்தி படைத்ததென்ற நம்பிக்கையில் கூகைகளைப் பலிகொடுத்து வேண்டிக்கொள்ளும் வழக்கம் வடக்கில் உள்ளது. அங்கு கூகை சாமுண்டா என்னும் தாய்த் தெய்வத்தின் வாகனமாகும். ‘மா லோகி’ என்று அழைக்கப்படும் இலக்குமியின் வழிபாட்டில் கூகை உள்ளது.   
(The Logical Indian- Sromana Bhattacharya- Diwali Ritual Of Sacrifice Puts Lives Of Indian Owlls At Risk -  https://thelogicalindian.com/exclusive/indian-owls-sacrificed/,
Traffic- India’s Festival Of Lights Darkens The Future Of Owls - 7.11.2012-  https://www.traffic.org/news/indias-festival-of-lights-darkens-the-future-for-owls/,
Global post- Jason Overdorf- India’s Secret Shame; Owl Sacrifice mars Hiduism’s Biggest Holiday- Global Post- 10.11.2012 -    https://www.pri.org/stories/2012-11-10/indias-secret-shame-owl-sacrifice-mars-hinduisms-biggest-holiday) 

            தொல்தமிழகத்தில் மேற்சுட்டிய நம்பிக்கையும் பலியும் பயின்றமைக்கு ஆதாரம் ஏதும்  இல்லை. தொல்தமிழர் பறவைகளை நேசித்த பாங்கிற்கு அதிகன் என்னும் எயினன் முன்மாதிரி ஆகிறான் (அகம்.- 208& 142). மிஞிலியுடன் போரிட்டு மாண்ட போது அவன் மேல் வெயில் படாதபடி அவன் போற்றி ஆதரித்த பறவைகள் அனைத்தும் வானில் பறந்து நிழல் செய்தன. அத்துடன் பகலில் கண் தெரியாத கூகை; எல்லாப் பறவைகளையும் போல் அவனுக்கு நிழல் தரவில்லையே என்று நாணம் கொண்டது என்று மீண்டும் பாடியிருப்பவர்; வரலாற்றைப் பதிவு செய்வதில் பேர்பெற்ற பரணர் ஆவார் (அகம்.-148). தேவை இல்லாத கற்பனை சிறிதும் இடம் பெறாத சங்க இலக்கியத்தில் இப்படி ஒரு பாடல் இருப்பது; தொல்தமிழர் பிற பறவைகளைப்போல் கூகையையும் நேசித்த தன்மையையே காட்டுகிறது. நற்றிணைத் தலைவியும் அவ்வாறே நேசிக்கிறாள். எனவே வடவர் மாயசக்தி இருப்பதாகக் கருதிச் செய்யும் கூகைப்பலியும்; தாந்திரிக வழிபாடும் தமிழகத்தில் இல்லை என்பது துணிபு. மரத்திற்கு இடும் பலியே கூகைக்கு ஆனது.         

            கடம்ப மரத்தில் முருகன் உறைவதாக நம்பினர். முருக வழிபாட்டிற்கான  கொடியும், பலியிடுவதற்குரிய விடையும் கடம்ப மரத்திலேயே கட்டபட்டன.
            “கடம்பமர் நெடுவேள்”- (பெரும்பாணாற்றுப்படை-அடி-75), 
            “கடம்பமர் செல்வன்”- (பரி.- 8- அடி- 126), 
            “கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம்”- (பரி.- 19- அடி- 104), 
            “ கடம்பின் சீர்மிகு நெடுவேள்”- (மதுரைக்காஞ்சி- அடி.- 613-614), 
            “அணங்குடைக் கடம்பு”- (பதிற்.- 88) 
என்னும் தொடர்களும்; 

            “கடம்பு கொடியாத்து”- (அகம்.- 382),      
            “விடைஅரை அசைத்த வேலன் கடிமரம்”- (பரி.- 17- அடி- 3) 
என்னும் பாடலடிகளும்  மேற்சுட்டிய கருத்தை நிலைநாட்டுகின்றன.


[5] வழிபாட்டில் இடம் பெற்ற பிற பொருட்கள்:
            வேப்பந்தளிர், பனைமடல் குருத்து போன்றவை வழிபாட்டில் பெரிதும் இடம் பெற்றன. வேலன் வெறியாடிய போது;  
            “.....வேம்பின் வெறிகொள் பாசிலை நீலமோடு சூடி…... 
            தோடும் தொடலையும் கைக்கொண்டு”- (அகம்.- 138) 
என்று காட்சி அளிக்கிறான். மணம் பொருந்திய கடம்பமலர்கள் தெய்வ வழிபாட்டிற்கு உரியன  எனவும், காடு முழுதும் மணம் வீசியதெனவும் பாடியுள்ளனர் (அகம்- 99).  தென் கன்னடத்துக் கோயில்களில் இன்றும் பக்தர்களுக்குப் பனம்பூவே  பெரிதும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 


முடிவுரை:
            தொன்மையான ஆல், கடம்பு, வேப்ப மரங்கள், நிழல் தருமளவிற்கு உயர்ந்த கள்ளி மரம், நடுகல் அமைந்த நிழலுக்குரிய ஓமை மரம்  முதலியன பொது மக்களால் படையல்  இட்டு வழிபடப்பட்டன. மலையுச்சி, மலைகளில் இருந்த சுனைகள், காடு, கடல் முதலிய பிற நீர்த் துறைகள், மணமும் அழகும் பொருந்திய மலர்கள், அரவு, முதலை, ஆளி முதலிய விலங்குகள், சினைச் சுறவின் கோடு, பூமி, நிலவு முதலியன தெய்வத்தன்மை பொருந்தியனவாகக் கருதப்பட்டன. நிலவு, நிலம், திசை தவிர்ந்த பிற வழிபாடுகள் அச்சத்தின் அடிப்படையில் அமைந்தன. மரவழிபாட்டில் படைத்த பலிப்பொருட்களைக் காக்கைகளும் கூகைகளும் உண்டன. காக்கை கரைவது நல்ல நிமித்தமாகக் கருதப்பட்டதால் மக்கள் தம் இல்லத்திலும் காக்கைக்குப் பலிச்சோறு இட்டனர். வீரமரணம் அடைந்தவர்க்கு வழிபாடு நிகழ்த்துங்கால் அவர்களது ஆவி காக்கை உருவில் வந்து பலியை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையும் இருந்தது. கூகை குளறுவது தீய நிமித்தமாகக் கருதப்பட்டது. கூகைப்பலியும்; கூகைக்கு வழிபாடும் தமிழகத்தில் இல்லை. கடம்ப மரத்தில் முருகன் உறைவதாக நம்பினர். வேப்பந்தளிர், பனைமடல் குருத்து போன்றவை வழிபாட்டில் பெரிதும் இடம் பெற்றன.         




துணை நூற் பட்டியல்:
எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்  
Arbar Ahmed- A Traffic India Report- 2010
George L. Hart- Early Evidences Of Caste In South India- 1987
(Dr. Naga Ganesan- Gharial god and Tiger goddess in the Indus valley: Some aspects of Bronze Age Indian Religion-Museumof FineArts, Houston, TX,2007)
(The Logical Indian- Sromana Bhattacharya- Diwali Ritual Of Sacrifice Puts Lives Of Indian Owlls At Risk
Traffic- India’s Festival Of Lights Darkens The Future Of Owls- 7.11.2012
Global post- Jason Overdorf- India’s Secret Shame; Owl Sacrifice mars Hiduism’s Biggest Holiday- Global Post- 10.11.2012)

சுருக்கக் குறியீட்டு விளக்கம்:
நற்.-   நற்றிணை
பரி.-    பரிபாடல் 
பதிற்.- பதிற்றுப்பத்து
குறுந்.- குறுந்தொகை


குறிப்பு: 
11.10.’19 அன்று சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும்; சென்னை குரு நாணக் கல்லூரியும் இணைந்து ‘ஆசியப் பண்பாட்டிற்குத் தமிழ்ச் சமய இலக்கியங்களின் பங்களிப்பு’ என்ற பொருண்மையில் நடத்திய கருத்தரங்கில் வாசித்து அளிக்கப்பட்டது. 12.10.’19 அன்று வெளியிடப்பட்ட கருத்தரங்க மலரில் பதிப்பிக்கப்பட்டது.





தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஒய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி









Sunday, July 21, 2019

இளங்கோவடிகள் பாடிய தமிழர் பக்தி

— முனைவர் ச.கண்மணி கணேசன்  


முன்னுரை:
          ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள் ஆவார். இவரது காலத்தில் தமிழகத்தில் நிலவிய பக்திநெறி  காப்பியம் முழுவதிலும் பரந்து காணக் கிடைக்கிறது. இளங்கோவடிகள் சித்தரிக்கும் தமிழரின் பக்தி அக்காலச் சமுதாயநிலையைத் தெளிவாக்குகிறது. சிலப்பதிகாரம் இக்கட்டுரையின் ஆய்வெல்லை ஆகிறது. முதல்நிலைத் தரவுகள் சிலப்பதிகாரத்திலிருந்தும், இரண்டாம் நிலைத் தரவுகள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, மணிமேகலை முதலிய இலக்கியங்களிலிருந்தும்  எடுத்தாளப் பட்டுள்ளன.தொகுத்தும் வகுத்தும் விளக்கும் மரபு வழிப்பட்ட பகுப்பாய்வுமுறை  பின்பற்றப்பட்டுள்ளது.

தமிழர் பக்தியில் கடவுளர் வழிபாடு:
          தமிழக மக்கள் சிவன், முருகன், பலராமன், திருமால், இந்திரன், கொற்றவை, காமதேவன், நிலா, சூரியன், புறம்பணையான், நிக்கந்தன், இயக்கி, பாசண்டச் சாத்தன் முதலிய கடவுளரை வழிபட்டனர். 

          புகார் நகரத்தில் சிவபெருமான், முருகன், பலராமன், திருமால், இந்திரன், காமன், நிலா, சூரியன், புறம்பணையான் (ஐயனார்), நிக்கந்தன், பாசண்டச்சாத்தன்  ஆகிய கடவுளர்க்கு வழிபாடுகள் நிகழ்ந்தன.

          மதுரை நகரத்தில் காலை முரசம் சிவன், திருமால், முருகன், பலதேவன் முதலிய கடவுளரை வழிபடும் இடங்களில் முழங்கின. (ஊர்.- அடி.- 7-14)  கொற்றவைக்கும் வழிபாடு நிகழ்ந்தது. கண்ணகி மதுரை நகரத்தை விட்டு வெளியேறு முன் கொற்றவை வாயிலில் தன் பொற்றொடியைத் தகர்த்துச் சென்றாள். (கட்டு.- அடி.- 181-183) நகருக்குள் பிற தேவர்களும் வழிபடப்பட்டனர். கோவலன் தன் மனைவியின் சிலம்பைப் பொற்கொல்லனிடம் கொடுத்தனுப்பிய பின்னர் ஒரு தேவகோட்டச் சிறையகத்தில் காத்திருந்தான். (கொலைக்களக் காதை- அடி.- 105-126) 

          வஞ்சி மாநகரத்தில் சிவனுக்கும் திருமாலுக்கும் கோயில்கள் இருந்தன. செங்குட்டுவன் போருக்குக் கிளம்பும் முன்னர் சிவன் கோயிலில் வழிபட்டுப் பின்னர் திருமால் கோயிலிலிருந்து வந்த மாலையைப் பெற்றுக் கொண்டான். (கால்.- அடி.-61-63) 

          சங்க இலக்கியங்களில் மழுவாள் நெடியோன், முருகன், கொற்றவை, திருமால், பலதேவன், காமன் முதலிய வழிபாடுகள் சுட்டப்படுகின்றன. (மதுரைக்காஞ்சி- அடி- 455, பட்டினப்பாலை- அடி.- 35-36&154-155, பரிபாடல் திரட்டு- பா- 1& புறநானூறு- 58) மணிமேகலையிலும் சிவன், முருகன் வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன. (விழா.- அடி.- 54-55, மலர்வனம் புக்ககாதை- அடி.- 144-145)

தமிழர் பக்தியில் பூதவழிபாடு:
          நகரங்களின் சதுக்கங்களில் பூதவழிபாடு இருந்தது. புகாரில் நான்குவழித்  தடங்கள் சந்திக்கும் இடத்தில் சதுக்கபூதம் இருந்தமை பற்றிக் காண்கிறோம். (இந்திர.- அடி.- 63-67, கடலா.- அடி.- 7-13) 

          "காவல் பூதத்துக் கடைகெழு பீடிகை" என்பதால் இது காவல் தெய்வம் என்பது வெளிப்படை. இப்பூதம் இந்திரனது ஏவலின்படி சோழனுக்குத் துணை செய்து பொய்ச்சாட்சி கூறியவர்களைத் தன் பாசக்கயிற்றால் பிணைத்துப் புடைத்து உண்ணும். பட்டினப் பாலையும் (அடி- 57), மணிமேகலையும் இதே  (விழா.- அடி.- 19-20) பூதத்தைச் சுட்டுகின்றன.   

          மதுரை மாநகரத்தில் நான்கு வருணங்கட்குரிய பூதங்கள் இருந்தன. கண்ணகி மதுரை மாநகரத்தை எரியூட்டிய போது அரசபூதம், அந்தண பூதம், வணிக பூதம், வேளாள பூதம் என்ற நான்கும் அந்நகரை விட்டு நீங்கின என்கிறார் இளங்கோவடிகள். இப்பூதங்களை அந்தந்த வருணத்தைச் சேர்ந்த மக்கள் வழிபட்டனர். (அழற்படு காதை) 

தமிழர் பக்தியில் காவல் தெய்வ வழிபாடு: 
          பெருநகரங்களில் மக்கள் அந்நகரின் காவல் தெய்வத்தை வழிபட்டனர். மதுரை நகரின் காவல் தெய்வம் மதுராபதி ஆகும். மதுரை நகரம் எரிந்த போது மதுராபதித் தெய்வம் அந்நகரின் அவலநிலை குறித்துக் கண்ணகியிடம் பேசுகிறது(கட்டு.). மதுரை நகரின் காவல் தெய்வம் மதுராபதி என்று மணிமேகலையும் பேசுகிறது. (வஞ்சிமா நகர்புக்க காதை) சம்புத்தீவு என்று அழைக்கப்பட்ட பண்டைத் தமிழகத்தின் காவல் தெய்வம் சம்பாபதி என்றும் மணிமேகலையிலிருந்து அறிகிறோம். (பதிகம்- அடி.- 2-32)

தமிழர் பக்தியில் இயக்கி எனும் பெண்தெய்வம்:
          மனிதசக்திக்கு மேம்பட்ட இயற்கையிறந்த தன்மை படைத்த பெண் என்னும் பொருளிலேயே இயக்கி என்னும் பெண் தெய்வ வழிபாடு இருந்தது. மாதரி பூங்கண் இயக்கிக்குப் பாற்சோறு படைத்து மீண்டு வரும்பொழுது கவுந்தியை அடிபணிந்து வணங்கினாள். (அடைக்கலக் காதை) அழகு மிகுந்த பெண் உருவில் தோன்றிப் போவோர் வருவோரைத் தடை செய்யும் தெய்வம் பற்றி அழகர் மலை வருணனையில் மாங்காட்டு மறையோன் கூறுகிறான். (காடுகாண் காதை) கண்ணகியோடும் கவுந்தியோடும் புகார் நகரிலிருந்து மதுரை நோக்கி வரும் கோவலன் நீர்நிலை ஒன்றின் அருகில் மயக்கும் தெய்வம் ஒன்று தோன்ற அதை மந்திரத்தால் உணர்ந்து நீக்குகிறான்(புறஞ்.). இன்றும் பேச்சு வழக்கில் எசக்கி என்று ஒரு பெண்தெய்வத்தைச் சுட்டுவதுண்டு. 

தமிழர் பக்தியில் வழிபாட்டுச் சின்னங்கள்:
          கடவுளரின் படைகளும், ஊர்திகளும்,இருப்பிடமும், வழிபாட்டுச் சின்னங்களாக வழக்கிலிருந்தன.

          இந்திரனின் படைக்கலமாகிய வச்சிரமும், ஊர்தியாகிய ஐராவதமும்,  முருகனின் படைக்கலமாகிய வேலும் வழிபடப் பெற்றன. (இந்திர.- அடி.- 141-146, கனாத்.- அடி.- 9-12)  கற்பகத்தரு, தேவலோகம், சக்கரவாளம் ஆகியன முறையே தருக்கோட்டத்திலும், ஊர்க் கோட்டத்திலும் , சுடுகாட்டுக் கோட்டத்திலும் வழிபாட்டுச் சின்னங்களாக இருந்தன. (கனாத்.- அடி.- 19-21) சக்கரவாளம் என்பது இப்பூவுலகில் உள்ள மலைகள், தீவுகள், உயிரினங்கள் முதலியவற்றின் தொகுதியாகும். (மணி.- சக்கர.- அடி.- 201-202& மணிமேகலா.- அடி.-109-115)

தமிழர் பக்தியில் வழிபாட்டிற்குரிய மன்றங்கள்:
          இயற்கையிறந்த தன்மையுடன் அற்புதங்கள் நிகழ்த்தக்கூடிய மன்றங்கள் புகார் நகரத்திலிருந்தன. (இந்திர.- அடி. - 111-140) பொதிகள் நிறைந்த பண்டகசாலை வாயிலில் காவல் காப்பவரோ, கருந்தாழோ இல்லை. ஆனால் களவு செய்யும் வம்பமாக்களை அவர்களது கழுத்துக் கடுக்க பொதியைச் சுமக்க வைத்து; எங்கும் இறக்கி வைக்க விடாதபடி ஊரைச் சுற்ற வைக்கும் அற்புதசக்தி படைத்த வெள்ளிடை மன்றம் இருந்தது. (கடலா.- அடி.- 14-17) அதர்மம் நடந்தால் கண்ணீர் விட்டு அழுது அடையாளம் காட்டும் பாவை எழுந்தருளிய பாவை மன்றமும் புகார் நகரிலிருந்தது. 

தமிழர் பக்தியில் வழிபாட்டு முறைகள்:-
உருவ வழிபாடு:
          பண்டைத் தமிழகத்தில் உருவ வழிபாடு இருந்தது. மாங்காட்டு மறையோன் திருமாலின் கிடந்த கோலத்தையும், இருந்த கோலத்தையும், நின்ற கோலத்தையும் பற்றி விளக்கமாகக் கூறுகிறான். (காடு.) கண்ணகிக்குக் கோயில் எடுப்பதற்காகச் செங்குட்டுவன் இமயமலையிலிருந்து கல்லெடுத்துக் கங்கையில் நீர்ப்படை செய்து செங்கோட்டுயர்வரையில் அவளுருவத்தை எழுந்தருளச் செய்தான். (வஞ்சிக்காண்டம்) திருச்சீரலைவாயிலில் எழுந்தருளிய சண்முகப் பெருமான் தோற்றத்தை நீளமாகத்  திருமுருகாற்றுப்படை வருணிக்கிறது. (அடி.- 77-124).

உருவமிலா வழிபாடு:
          நெடுங்கல் மன்றம் ஒன்று புகார் நகரிலிருந்தது. அங்கு நின்ற கல்லே வழிபாட்டிற்கு உரியது. (இந்திர.- அடி.- 11-140)

கோயிலும் தீமுறை வழிபாடும்:
          வேதநெறிப்படி தீமுறை வழிபாடு நிகழ்ந்த கோயில்கள் தமிழகத்திலிருந்தன. இந்திரவிழா தொடங்கியபோது பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலிலும், நீலமேனி நெடியோன் கோயிலிலும், மாலை வெண்குடை மன்னவன் கோயிலிலும் நான்மறை மரபின் தீமுறை நிகழ்ந்தன. (இந்திர.- அடி.- 141-175) மதுரையில் காலைமுரசம் நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலில் முழங்கியது (மேலது)  

          திருச்சீரலைவாயிலிலும், திருவாவினன்குடியிலும், திருவேரகத்திலும் முருகனுக்கு வேதநெறிப்படி வழிபாடு நிகழ்ந்தமையைத் திருமுருகாற்றுப்படை வரிசைப்படுத்திக் காட்டுகிறது. (அடி.- 77-189)

கோட்ட வழிபாடு: 
          வேதமரபினின்று மாறுபட்ட கோட்டவழிபாடும் தமிழகத்திலிருந்தது. மலைநாட்டு மக்கள் கண்ணகியைத் தெய்வமாக ஏற்று வணங்கிய போது தொண்டகம் தொட்டனர்; சிறுபறை முழக்கினர்; கோடு வாய் வைத்தனர்; கொடுமணி இயக்கினர்; குறிஞ்சி பாடினர்; நறும்புகை எடுத்தனர்; பூப்பலி செய்தனர்; காப்புக்கடை நிறுத்தினர்; விரவு மலர் தூவிப் பரவினர். (குன்றக்குரவை- அடி.- 11-22). 

          மாலதி பால்விக்கிச் சோர்ந்த பாலகனின் உடலோடு பல்வேறு கோட்டங்களுக்கும் சென்று உயிரை மீட்டுத்தரும்படி தெய்வங்களை வேண்டினாள். (கனாத்.- அடி.- 5-15) இறந்த குழந்தையின் உடலோடு கூடச் செல்லக்கூடியனவாகக் கோட்டங்கள் இருந்தன எனத் தெரிகிறது. 

          மதுரையில் காலை முரசம்,
          “கோழிச்சேவல் கொடியோன் கோட்ட”த்திலும் (மேலது) முழங்கியது 

          விலக்கான பெண்கள் கூடக் கோட்டங்களில் ஒரு புறத்தில் தங்கி இருந்தனர் என்று புறநானூறு குறிப்பிடுகிறது(பா- 299). கலம் தொடா மகளிர் முருகன் கோட்டத்தில் ஒதுங்கி இருந்த காட்சி உவமையாக உள்ளது. 

          கோட்டங்கள் ஊரின் உள்ளும் இருந்தன. பெருநகரக் கோட்டைகளின் கிழக்கிலும் இருந்தன. பெருவழிகளின் இடையிலிருந்த சிற்றூர்களிலும் இருந்தன. ஈமப்புறங் காட்டிலும் இருந்தன. சக்கரவாளக்  கோட்டம் சுடுகாட்டில் இருந்தமையை முன்னர்க் கண்டோம்.(வழிபாட்டுச் சின்னங்கள்) வஞ்சிமாநகர்க் கோட்டையின் கிழக்கில் குணவாயிற் கோட்டம் இருந்தது என்றும்; அங்கே  இளங்கோவடிகள் தங்கியிருந்ததாகவும் சிலப்பதிகாரப் பதிகம் (அடி.- 1-2) கூறுகிறது. உறையூரிலிருந்து மதுரை செல்லும் பெருவழியில் சிறுகுடி என்னும் சிற்றூரில் ஐயை கோட்டம் இருந்தது.(வேட்டுவ வரி- அடி- 4)     

          முச்சந்தி, நாற்சந்தி, ஐஞ்சந்தி, ஆற்றங்கரை, குளத்தங்கரை, மலைச்சிறுகுடி முதலிய இடங்களில் எல்லாம் முருகனுக்கு வழிபாடு நிகழ்ந்ததாகத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. (அடி.- 189-226) 

கோட்டம் கோயிலாவதும்; மீண்டும் கோட்டமாவதும்:
          கோட்டங்களில் வேதநெறி அவ்வப்போது பின்பற்றப்படுவதுண்டு. அப்போது அவை கோயில் என்று குறிக்கப்பட்டன. மலைமக்களுடைய மங்கலமடந்தை கோட்டத்தில் செங்குட்டுவன் கண்ணகியைப் பிரதிஷ்டை செய்து கடவுள் மங்கலம் செய்தபோது; நூல்மரபின்படி வேள்விச்சாலை அமைத்தான். இவ்விடத்தில் இளங்கோவடிகள்,

          "கோமகள் தன் கோயில்" என்கிறார். (வாழ்த்து.- உரைப்பாட்டு மடை) தேவந்தி கண்ணகித்தெய்வம் ஏறப்பெற்று பிறர்க்குத் தெரியாத உண்மைகளைக் கூறி அருளிய பின்னர் வேதமரபினின்று மாறி அவளை  நித்தல் விழாவணி செய்ய ஏவியபோது அவ்விடத்தைப் பத்தினிக் கோட்டம் என்கிறார் இளங்கோவடிகள். 

நகர் வழிபாட்டுமுறை:
          மக்களுக்காக மன்னன் கட்டிப் பராமரிக்கும் வழிபாட்டிடம் ‘நகர்’ என்று பெயர் பெற்றது.(மின்தமிழ்மேடை"சிலப்பதிகாரம் காட்டும் வழிபாட்டிடங்கள்"- காட்சி- 14- ஜூலை2018) மதுரையில் காலை முரசம் முழங்கிய இடங்களில் 

          “மேழி வலனுயர்த்தோன் வெள்ளை நகரமும்” (மேலது) ஒன்றாகும். 

          திருப்பரங்குன்றத்து முருகனைப் பாடுங்கால் நகர் என்றே புலவோர் பலரும் சுட்டுகின்றனர்.(பரிபாடல்- பா- 8, 18, 19) மதுரையில் ஆதிசேஷனுக்குரிய நகர் இருந்தமை;  பரிபாடல்திரட்டு- பா-1 மூலம் தெரிகிறது. மதுரை மட்டுமின்றி; காஞ்சி, மருங்கூர்ப்பட்டினம் முதலிய இடங்களிலும் நகர் இருந்ததெனச் சங்க இலக்கியம் சான்று பகர்கிறது. (பெரும்பாணாற்றுப்படை- அடி.- 404-405, கலித்தொகை- பா- 84,அகநானூறு- பா.- 22, 99, 136, 227) 

          முருகனுக்குரிய நகர்களில் வழிபாட்டின்போது ஆண்டலைக்கொடி ஏற்றினர்; நெய்யோடு ஐயவி அப்பினர்; கொழுமலர் சிதறினர்; தம் வாயினின்று ஒலி எழாதவாறு வழிபட்டனர்; தம்முள் மாறுபட்ட நிறத்தை உடைய இரண்டு உடையை உடுத்தினர்; சிவந்த நூலைக் கையில் காப்பாகக் காட்டினர்; வெண்பொரி சிதறினர்; கொழுவிய கிடாயினை வெட்டி அதன் குருதியோடு தூய வெள்ளரிசியைக் கலந்து பலியாக இட்டனர்; பல பிரப்பு இட்டனர்; பசுமஞ்சளோடு மணப்பொருட்களைத் தெளித்தனர்; செவ்வலரி மாலையையும், குளிர்ச்சி பொருந்திய பிற நறுமலர் மாலைகளையும் இணை ஒக்க அறுத்துத் தொங்க விட்டனர்; மலைப்புறத்து ஊர்களையெல்லாம் வாழ்த்தினர்; நறும்புகை காட்டினர்; குறிஞ்சி பாடினர்; பல இசைக்கருவிகளையும் முழங்கினர் என்று நக்கீரர் நகரில் நிகழும் வழிபாட்டுமுறையைத் திருமுருகாற்றுப்படையில் (அடி.- 227-249) விளக்கி உள்ளார்.

நியமத்தில் வழிபாட்டு முறை:
          அந்தணரும் அரசரும் அல்லாதாரால் பராமரிக்கப்படும் வழிபாட்டிடம் நியமம் என்று அழைக்கப்பட்டது.(மின்தமிழ்மேடை- மேலது) மதுரையில் காலைமுரசம்,

          “உவணச் சேவல் உயர்த்தோன் நியம”த்தில் முழங்கியது என்கிறார் இளங்கோவடிகள்.(மேலது) அரங்கத்திலிருந்து காவிரி ஆற்றைக் கடந்த கவுந்தி முதலிய மூவரும், (நாடு.- அடி- 217)

          “தீதுதீர் நியமத் தென்கரை எய்தி”யதாகவே இளங்கோவடிகள் பாடுகிறார். மதுரைக்காஞ்சி மதுரையில்  இருபெரு நியமங்கள் இருந்தன என்கிறது. (அடி.- 365&366) கோசர் செல்லூரில் கட்டிய நியமம் பற்றி மதுரை மருதனிள நாகனார் பாடியுள்ளார்.(அகநானூறு- பா- 90) நியமத்தில் வேள்வித்தூண் நாட்டி வழிபாடு நிகழ்வதுண்டு.(அகநானூறு- பா- 220).

கல்வியும், அறமும், தவமும், வழிபாடும் ஒருங்கிணையும் பள்ளி:
          சமணர் பள்ளி, பௌத்தப்பள்ளிகளில் கல்வியும், அறமும், தவமும், வழிபாடும் ஒருங்கு நிகழ்ந்தன. அந்தணர் பள்ளியில் கல்வியும் தீமுறை வழிபாடும் ஒருசேர நிகழ்ந்தன. 

          புகார் நகரில் சமணர் பள்ளியும், பௌத்தப் பள்ளியும் இருந்தன. கண்ணகி கோவலனுடன் மதுரைக்குப் புறப்படும் பொழுது சமணர்களின் சிலாத்தலத்தைத் தொழுது வலங்கொண்டு சென்றனர். (நாடு.- அடி.- 15-25) கவுந்தி மாதரிக்குக் கதை கூறத் தொடங்கும் போது புகாரிலிருந்த, 

          “உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகொளிச் சிலாதலம்”   
பற்றிப் பேசுகிறாள். (அடைக்.- அடி.- 151-154) மணிமேகலை புகார்நகரத்துச் சமணர் பள்ளியை ‘அராந்தாணம்’ என்கிறது. (மணிமேகலா.- அடி.- 23) 

          கண்ணகியும்  கோவலனும்   இநதிரவிகாரம் ஏழுடன் போகித் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். (நாடு.-11-14) இந்திர விகாரம் ஏழு என்பது பௌத்தப் பள்ளியையே குறிக்கும். 

          இந்திரவிழாவின் போது அறவோர் பள்ளியில் 'அறனோம்படை' நிகழ்ந்தது. (இந்திர.- அடி- 179) அறவோர் பள்ளி சமண பௌத்தப் பள்ளிக்குரிய பொதுப்பெயர் ஆகும். மணிமேகலை புகாரிலிருந்த பௌத்தப் பள்ளியை 'மாதவர் உறைவிடம்' என்கிறது. (ஊரலர் உரைத்த காதை.- அடி- 59) 

          மதுரையில் சமணர் பள்ளி, பௌத்தப் பள்ளி, அந்தணர் பள்ளி மூன்றும் இருந்தன. மதுரையில் காலை முரசம் சங்கொடு முழங்கிய இடங்களில்,

          ”அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்” உண்டு (மேலது)

          மதுரைக்காஞ்சி மதுரையிலிருந்த சமண பௌத்தப் பள்ளி பற்றி விரிவாகப் பேசுகிறது. பெண்கள் தம் மக்களோடு பூவும் புகையும் ஏந்திக் கொண்டு பௌத்தப் பள்ளிக்குச் சென்றனர். (அடி.- 461-467) குளிர்ச்சி பொருந்திய அருகக் கடவுளின் திருக்கோயிலில் செம்பால் செய்தாலொத்த சுவர்களில் ஓவியம் தீட்டப்பெற்று இருந்தது. உயர்ந்த மேடையும், நறிய பூஞ்சோலைகளும் உடையதாய் அமண்பள்ளி அத்துடன் சேர்ந்திருந்தது. பூவும் புகையும் ஏந்திச் சாவக நோன்பிகள் அருகனை வாழ்த்தி நின்றனர். முக்காலத்தையும் உணர்ந்து, அறிவு முதிர்ந்து, விரதங்களை மேற்கொண்டும், இளைக்காத மேனியை உடையவராய்க் கல்வி மிகுந்த சான்றோர்கள் அங்கிருந்தனர். (அடி.- 475-487)    

          கோவலனும் கண்ணகியும் மதுரையை நெருங்கிய போது நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும், மாதவர் ஓதி மலிந்த ஓதையும் கேட்டனர் (புறஞ்.- அடி.- 141-150) மாங்குடி மருதனாரும் மதுரையிலிருந்த அந்தணர் பள்ளியை ஆவணப்படுத்தி உள்ளார். வேதங்களைப் பொருள் புரிந்து ஓதி, அவை கூறும் ஒழுக்கங்களைச் சரிவர உணர்ந்து; எவ்வுயிரிடத்தும் செந்தண்மை பூண்டொழுகும்  பெரியோர் அந்தணர் பள்ளியிலிருந்தனர். அது குன்றைக் குடைந்தாலொத்துக் காணப்பட்டது. (அடி.- 468-474)  

தமிழர் பக்தியில் ஆடலும் பாடலும்:
          ஆடல்பாடலோடு கூடிய வழிபாட்டு முறை தமிழகத்திலிருந்தது. பல்வேறு சமுதாய மக்களும் தத்தமக்குரிய பாணியில் ஆடிப்பாடினர். வேட்டுவர் கொற்றவையை வழிபட்ட போது வேட்டுவவரி பாடினர். ஆய்ச்சியர் திருமாலை வழிபட்ட போது ஆய்ச்சியர் குரவை பாடி ஆடினர்.  குறிஞ்சி மகளிர் குன்றக்குரவை பாடி ஆடி முருகனை வழிபட்டனர்.

தமிழர் பக்தியில் வெறியாடல்:  
          இறைப்பொருள் பற்றி முரண்பட்ட கருத்துடையோர் அஞ்சும் படியாக குறமகள் தன்மேல் முருகன் அருள் வந்து ஆடும் அகன்ற வழிபாட்டிடங்களை 

          "முருகாற்றுப்படுத்த உருகெழு வியன்நகர்" என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் (அடி.- 227-249) விளக்கியுள்ளார்.

          கோட்டங்களில் தெய்வமேறப் பெற்று ஆடி வருவதுரைத்தனர். ஐயை கோட்டத்தில் சாலினி என்னும் வேட்டுவர்குலப் பெண் அருளுற்று ஆடுவதை வேட்டுவவரி விரிவாகப் பேசுகிறது. முருகனை வழிபட்ட கோட்டங்களில் வேலன் வெறியாட்டு நிகழ்ந்தமை திருமுருகாற்றுப்படை மூலம் தெரியவருகிறது.(அடி.- 220-226) 

தமிழர் பக்தியில் பெண்களும் தெய்வக்கோலமும்:
          கன்னிப் பெண்களுக்குத் தெய்வக் கோலம் புனைந்து வழிபாடு நிகழ்த்தும் முறை தமிழ்ச் சமுதாயத்திலிருந்தது. கண்ணனாகவும்,பலராமனாகவும், நப்பின்னையாகவும் கன்னியரை அலங்கரிக்க; அவர்கள் யமுனைக்கரை கோபியர்களுடன் சேர்ந்து ஆடித் திருமாலைத் தொழுதனர். (ஆய்ச்சியர் குரவை) கொற்றவை வழிபாட்டின் போது வேட்டுவர்கள் தம் குலத்தைச் சேர்ந்த கன்னிப்பெண் ஒருத்திக்குச் சிவனை ஒரு பாகத்தில் கொண்ட உமையவளின் வடிவத்தைப் புனைந்து வழிபட்டனர் என வேட்டுவவரி விளக்குகிறது. 

தமிழர் பக்தியில் புனித நீராடல்:
          குமரி முனையிலும், கங்கையிலும், சில குளங்களிலும் புனித நீராடும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக இருந்தது. புனித நீராட்டு பாவத்தைப் போக்கும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் நிலவியது. 

          மாடலமறையோன் குமரிமுனை சென்று புனித நீராடி மீண்டபோது மதுரையில் தங்கினான். அங்கே கோவலன், கண்ணகி, மாதரி, கவுந்தி முதலியோரின் அவல முடிவு கண்டு புகார் நகரம் சென்றான். அவன் கூறிய செய்திகளைக் கேட்டுக் கண்ணகியின் தாயும், கோவலனின் தாயும் உயிரை விட்டனர். அதனால் ஏற்பட்ட பாவம் தீரக் கங்கைக்குப் புனிதநீராடச் சென்றான்.

          புகார் நகரத்துக் காமவேள் கோட்டத்தின் முன்னர் இருந்த சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய துறைகளில் மூழ்கி எழுந்து காமனை வழிபட்டால் பிரிந்த கணவனை மீண்டும் பெறலாம் என்னும் நம்பிக்கை இருந்தது. தேவந்தி கண்ணகியை தாழைப்புதர் மிகுந்த நெய்தலங்கானல் பகுதிக்குச் சென்று அவ்வாறு நீராட அழைக்கிறாள். (கனாத். - அடி.- 57-60) பட்டினப் பாலையும் இவ்விரு ஏரிகளை, 

          "இருகாமத்து இணையேரி" (அடி. -39) என்கிறது. காமத்து எனும் அடைமொழி இவ்வேரிகள் காமன் கோட்டத்தின் முன்னர் இருந்தமையைத் தெளிவுறுத்துகின்றன. 

தமிழர் பக்தியில் திருவிழாக்கள்:
          திருவிழாக்கள் கோயில்களிலும், கோட்டங்களிலும் ஒருங்கு கொண்டாடப் பெற்றன. முதலில் விழாவை முரசறைந்து அறிவித்தனர்.விழாவிற்குரிய தூணை நாட்டிக் கொடியும் ஏற்றினர். கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். 

          இந்திரவிழா தொடங்கியவுடன் வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசினைக் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றினர். விழாவை அறிவித்தனர். வால்வெண் களிற்றரசு என்ற ஐராவதக் கோட்டத்தில் விழாத்தூணை நாட்டினர். கற்பகத்தரு கோட்டத்தில் மங்கல நெடுங்கொடியை வானுற ஏற்றினர். பின்னரே சிவன், திருமால், முருகன், பலராமன், இந்திரன் கோயில்களில் வேதமரபின்படி வேள்வி செய்தனர். (இந்திர.- அடி.- 141-175) இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 

முடிவுரை:
          இளங்கோவடிகள் காலத்தில் தமிழர் கோயில்கள், கோட்டங்கள், நகர்கள், நியமங்கள் அமைத்துப் பல்வேறு கடவுளரையும், வருணபூதங்களையும், காவல்பூதங்களையும், ஊர்க்காவல் தெய்வத்தையும், இயக்கியையும் வணங்கினர். கடவுளரின் படைகளும், ஊர்தியும், இருப்பிடங்களும், தொன்மப் பொருட்களும் வழிபாட்டுச் சின்னங்களாயின. உருவ வழிபாடும் உருவமற்ற கல் வழிபாடும் இருந்தன. கோயில்களில் வேதமரபின்படி வழிபாடு நிகழ்ந்தது. கோட்டங்களிலும், நியமங்களிலும் அவ்வப்போது வேதமுறை பின்பற்றப்பட்டது.   ஆடிப்பாடியும், அருளேறி ஆடியும், புனித நீராடியும், திருவிழாக்கள் நிகழ்த்தியும், கன்னிப் பெண்களைத் தெய்வமாக அலங்கரித்தும் பக்தி செலுத்தினர். அந்தணர் பள்ளியில் கல்வியும், வழிபாடும் நிகழ்ந்தன. சமண பௌத்தப்பள்ளிகளில் அறம், தவம், கல்வி, வழிபாடு அனைத்தும் ஒருங்கிணைந்திருந்தன. திருவிழாக்களில் சாற்றுவதும், விழாத்தூணை நாட்டுவதும், கொடியேற்றுவதும், வழிபாடும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 



சுருக்கக் குறியீட்டு விளக்கம்:
அடைக்.- அடைக்கலக் காதை
இந்திர.- இந்திரவிழவு ஊரெடுத்த காதை
ஊர்.- ஊர்காண் காதை 
கட்டு.- கட்டுரை காதை
கடலா.- கடலாடு காதை 
கனாத்.- கனாத்திறம் உரைத்த காதை
சக்கர.- சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை 
நாடு.- நாடுகாண் காதை
மணி.- மணிமேகலை 
மணிமேகலா.- மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை
விழா.- விழாவறை காதை  

      

துணைநூற் பட்டியல்:
சிலப்பதிகாரம்- பொ.வே.சோமசுந்தரனார்(உ.ஆ.)- கழக வெளியீடு- 372- முதற்பதிப்பின் மறுபதிப்பு- 1975   
மணிமேகலை- ந.மு.வேங்கடசாமி நாட்டார்& ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ.)- பாகனேரி த.வை.இ.தமிழ்ச்சங்க வெளியீடு- முதற்பதிப்பின் மறுபதிப்பு- 1964     
சங்க இலக்கியத் தொகுப்பு- பாகம் 1&2- வையாபுரிப் பிள்ளை (தொ.ஆ.)- முதற்பதிப்பு- 1974 


(குறிப்பு: ரிஷிகேசம் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமமும், திருப்பனந்தாள் காசித் திருமடமும், களம்பூர் கோவிந்தசாமி அடிகளார் அறக்கட்டளையும் இணைந்து 5-7மே 2005ல்  நடத்திய ‘தமிழ் உணர்த்தும் பக்தி’ ஆய்வு மாநாட்டில் வாசித்தளித்த ஆய்வுக் கட்டுரை. தமிழ் உணர்த்தும் பக்தி ஆய்வு மாலை என்ற நூலின் 2ம் பகுதியில் பதிப்பிக்கப்பட்டது. 14ஆண்டுக்கால இடைவெளியின் கருத்தாக்கங்கள் சேர்த்து மேம்படுத்தப்பட்டது.)

 

தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)







Saturday, July 20, 2019

சங்ககாலக் குடும்ப உறவுகளும் சமூகஉறவுகளும்


— முனைவர் ச.கண்மணி கணேசன் 



முன்னுரை:
          சங்ககாலத் தமிழகத்தின் சமூகவரலாற்றை அறிவதற்குச் சங்க இலக்கியம்  தலைமை ஆதாரமாக அமைகிறது. குடும்ப சமூகஉறவுநிலைகளைப் புறப்பாடல்களும் அகப்பாடல்களும் சித்தரிக்கின்றன. வீரயுகம் ஆகிய சங்ககாலத்தின்  இவ்வுறவு  நிலைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேறு காலகட்டத்தைச் சேர்ந்த இலக்கியங்களைத் துணை கொள்ள வழியில்லை.

சமூகநலன் கருதிய செயல்பாடு:
          பரதவர் சமூகத்தில் பொதுநலன் கருதி கலங்கரை விளக்கு ஏற்றினர். இரவில் கடலில் வரும் நாவாய்களுக்கும் படகுகளுக்கும் கரை இருக்கும் திசையைத் தெரிவிக்க இது ஏதுவாயிற்று. (நற். -பா-219) தாயங் கண்ணனார் அவ்விளக்கு இளஞாயிறு போல் ஒளிவீசியது என்கிறார்.

பெற்றோர் மக்கள் உறவு:
          தாயும் தந்தையும் ஒருசேரத் தம் மக்களைப் பாசத்துடன் வளர்த்தனர். குழந்தைக்கு உணவூட்டும் தாய் பற்றிய சித்தரிப்பு நற்றிணையில் உள்ளது. (பா- 110) தன் குழந்தை பாலுண்ண மறுக்குங்கால் சிறு கோலால் ஓச்சும் பாசமிகு தந்தையின் செயலைப் பொன்முடியார் வருணிக்கிறார். (புறம்.- பா- 310)

          மணமுடிக்குமுன் செல்லமகள் தந்தையிடம் நகை கேட்டுக் கொஞ்சுவது உண்டு. மகள் விருப்பப்படி தந்தை நகை செய்து போட்டு மகிழ்வது உண்டு. திருமணத்திற்குப் பின்னர் தந்தை தன் செல்லமகள் குடும்பவாழ்வின் வறுமை நீக்க முற்படுவதும் உண்டு. ஆனால் மகள் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதே செம்மாந்த பண்பு என்ற கொள்கை இருந்தது. (நற்.- பா- 110)

          மகளின் வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் தந்தை பொறுப்பெடுத்தான். அவளது இல்லற அமைதிக்கு ஊறு நேரின் அதைத் தந்தை தட்டிக் கேட்பான் என்ற கருத்தும் காணக் கிடக்கிறது. சங்கு வளையல் கேட்டு அழுத மகளுக்குத் தந்தை பொற்றொடி செய்து போட்டதாகவும்; அது தலைவி தன் தலைவனைப் பிரிந்து இருந்தக்கால் புறத்தார் இவளது தோள்மெலிவை உணரா வகையில் உதவியது என்றும் (நற்.- 136) நற்றங்கொற்றனாரின் பாடல் சித்தரிக்கிறது.

          'தலைவியின் தந்தையும் தமையன்மாரும் மிகுந்த நெஞ்சுரமும் வலிமையும் வலியையும் கொண்டவர். தம் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை ஒருவன் ஏமாற்றி விட்டால்; அவர்கள் கொள்ளும் சினத்தையும் அதன் விளைவாகச் செய்யும் செயலையும் யாராலும் தடுத்து நிறுத்த இயலாது. அந்தச் சூழலைப் புரிந்து கொண்டே களவுக்குப் பின் தலைவன் திருமணம் செய்து கொண்டான். இப்போது திருமணத்திற்குப் பின்னர் அவன் புறத்தொழுக்கம் கொண்டதால் தலைவி துன்புறுகிறாள். இச்செய்தி அவள் தந்தைக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?' என்று தோழி பேசுவதாகச் சீத்தலைச்சாத்தனார் (நற்.- பா- 127) பாடுகிறார்.

அண்ணன் தம்பி உறவு:
          முந்தைய நாள் போரில் அண்ணனை ஒருவன் கொல்ல மறுநாள் போரில் தன் அண்ணனுக்காகப்  பழிவாங்கத் துடிக்கும் தம்பி பற்றி அரிசில்கிழார் (புறம்.- பா- 300) சுட்டிக் காட்டுகிறார்.

          'இன்று என் அண்ணனைக் கொன்றவன் தம்பியை நான் நாளை அழிப்பேன்' என்று வஞ்சினம் கூறுவதாகவும் (புறம்.- 304) பாடல் அமைந்துள்ளது. சகோதர பாசத்தைப் போர் மேற்செல்லும் வீரரிடம் காண இயல்கிறது. சங்க இலக்கியம் வீரயுகப் பாடல்களின் தன்மை கொண்டது என்ற முனைவர் கைலாசபதியின் கருத்து (The Heroic Poetry) வலுப் பெறுகிறது.

கணவன் மனைவி சுற்றத்தார் உறவு:
          இல்லற வாழ்வில் மனைவியே கணவன் பெருமைக்கு ஆதாரம்; அதுபோல் கணவனே மனைவியின் பெருமைக்கு ஆதாரம் என்று பொருள்பட,

          "மனைக்கு வரம்பாகிய வாணுதல் கணவன்
          முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை"
(புறம்.- பா- 314) என்னும் பாடலடிகளில் ஐயூர் முடவனார் பொருள் பொதியப் பாடியுள்ளார்.

          கணவன் மனைவி நெருக்கம் அவருள் ஒருவர் தவறி விடும்போது தெளிவாகத் தெரிகிறது. போரில் வீரமரணம் அடைந்த தலைவனைக் கண்டு தலைவி புலம்புங்கால்,

          "என்திறத்து அவலங் கொள்ளல் இனியே……
          இளையுள் ஓய்வலோ கூறுநின் உரையே" (புறம்.-  பா- 253)
என்று தான் உயிரை மாய்த்துக் கொள்ள இருப்பதைக் குறிப்பாகப் புலப்படுத்தி; 'உன் சுற்றத்தார் உன் பிரிவை எப்படித் தாங்குவர்?' என்று கையற்று அழுததாகக் குளம்பாதாயனார் பாடியுள்ளார். 

          தலைவன் தேடிவரும் பொருளைப் பேணிப் பாதுகாப்பதும், பகுத்துக் கொடுத்தலும் தலைவியின் உரிமையாகவும் கடமையாகவும் இருந்தது.  கானவன் வேட்டையாடி வந்த மானிறைச்சியையும், அகழ்ந்து எடுத்துவந்த கிழங்கையும் தலைவியே சுற்றத்தார் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கிறாள். (நற்.- பா- 85) இல்லறத் தலைவனை நம்பி அவனது மனைவி மட்டுமின்றி சுற்றமும் இருந்தது என்பதால் கூட்டுக் குடும்ப முறை நிலவியது எனலாம்.

மாமியார் மருமகள் உறவு:
          மணமுடித்து இல்லறம் நடத்தும் தன் மகனின் செல்வச் செழிப்பும், அவன் விருந்தயரும் ஆரவாரமும் ஒரு தாய்க்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அது பற்றி அவள் மீண்டும் மீண்டும் எல்லா இடத்திலும் எல்லாரிடமும் பேசிப்பேசி மகிழ்வது இயற்கை. இறந்து போன கணவனின் உடலை வைத்துக் கொண்டு தன் கணவன் இறந்தமையை அவனது தாய் எவ்வாறு ஆற்றுவாள் என்று கூறி அழும் பெண்  இதைச் சொல்கிறாள். (புறம்.- 254) கயமனாரின் பாடலில்; தன் மகனின் வளமையான வாழ்வு பற்றிய தாயின் இன்பச்செருக்கு அடிபட்டமை புலனாகிறது. தன் மாமியார் மகனின் பேரில் வைத்திருந்த பேரன்பையும், பெருமிதத்தையும் ஒரு மருமகள் போற்றுவதாக இக்கையறுநிலைப் பாடல் காட்டுகிறது.   

இல்லறம் சமூகத்தோடு கொள்ளும் உறவு:
          தம்மிடம் வந்து இரப்போர் யாராயினும் அவர்க்கு ஈதலே இசைபட வாழ வழிவகுக்கும் என்று நற்றிணையும் (பா- 84) சுட்டியுள்ளது. இதனால் விருந்து புறந்தரும் நடைமுறை செல்வாக்குப் பெற்றது. அத்துடன் ஊடல் கொண்டு கண் சிவந்திருக்கும் மனைவி தன்னிடம் புன்முறுவல் காட்ட விருந்தே ஏதுவாக அமையும் என்று தலைவன் உறுதியாக நம்பினான் (நற்.- பா- 120) என்று மாங்குடி கிழார் பாடியுள்ளார்.

          இருவர் இணைந்து நடத்தும் இல்லறத்திற்கு கேடு நேரிட்டால்; தலைவன் மாண்டுவிட்டால் தலைவி தனித்து விருந்து புறந்தர இயலாது. விருந்தினர் கைம்பெண் தனித்து வாழும் வீட்டை நாடுவதில்லை. (புறம்.-  பா- 261) ஆவூர் மூலங்கிழார் தலைவன் உயிரோடிருந்த போது விருந்து புறந்தந்த வளமனையை; அவன் இறந்த பிறகு அது வெறிச்சோடிக் கிடந்ததுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளார். 

          விருந்தயரப் பொருள் இன்றேல் அவ்வாழ்க்கை திருந்தா வாழ்க்கை; அது நன்மையற்றது என்று பெருங்குன்றூர் கிழார் (புறம்.- பா- 266) பாடுகிறார்.

          சமூகத்தின் மிகச்சிறிய அங்கம் குடும்பம். குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் கடமை இருந்தது. குடும்பத்தில் ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து நடத்தும் இல்லறத்தின் நோக்கமாவது; பங்காளிகளின் துன்பம் நீக்கி, நட்பினரின் இன்னல் களைந்து, நொதுமலாளரையும் பேணுவதாம். (அகநானூறு - பா- 95) கணக்காயனார் மகனார் நக்கீரனார் இதன் காரணமாகவே இல்லறத்தில் பொருள் முக்கியத்துவம் பெறுவதாக விதந்தோதுகிறார்.

          குடும்ப உறுப்பினர்களுக்கும், சமூக உறுப்பினர்களுக்கும் உரிய கடமையே அவர்களிடையே உறவை ஏற்படுத்தியது. ‘ஈன்று புறந்தருவது தாயின் கடமை; சான்றோனாக்குதல் தந்தையின் கடமை; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லன் கடமை; வாகனமும் போர்வாய்ப்பும் நல்குதல் வேந்தனின் கடமை; போரில் வீரத்தைக் காட்டித் திரும்புதல் ஒரு குடிமகனின் கடமை என்று பொன்முடியார் வரிசைப்படுத்தி உள்ளார். (புறம்.-  பா- 312).

தனிமனிதன் சமூகத்தோடு கொள்ளும் உறவு:
          தனிமனிதன் ஊரோடு ஒட்டி வாழும் போது அந்த உறவுநிலை அவனது உயிரை விலையாகப் பெறுவதும் உண்டு. ஊர் நன்மைக்காக ஒருவன் தான் பொறுப்பேற்கும் தியாகநிலையைத் தனிமகனார் எடுத்துக் காட்டியுள்ளார். (நற்.-  பா- 153) பகைவர் போர் மேற்கொண்டு  அலைத்து வரும் போது ஊர்மக்கள் கலங்கிப் பாதுகாப்பிற்காக ஊரைக் காலி செய்து விட்டுச் செல்ல ஒருவன் தனித்திருந்து அந்தப் பாழூரைக் காவல் காத்து நிற்கிறான். அவன் உயிர் பிழைத்தல் அரிது எனினும்; தன் ஊர்மக்களுக்காக இப்பொறுப்பை ஏற்கிறான்.

          தன் ஊரின் கால்நடையை எதிரிகள் கவர்ந்து செல்லும் போது அவற்றை மீட்பதற்காக ஒருவன் உயிரை விடும் சூழலும் ஏற்படலாம் என்பது வடமோதங் கிழார் பாடலில் (புறம். -பா-260) தெற்றெனப் புலனாகிறது.

          ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் சமூகத்திற்குத் தாம் கடம்பட்டு இருப்பதை உணர்ந்திருந்தனர். முதல்நாள் போரில் தந்தை வீரமரணம் அடைய; இரண்டாம் நாள் போரில் கணவன் கால்நடைகளை மீட்பதற்கு உயிரை விட; மூன்றாம் நாளும் தன் மகனைப் போருக்கு அனுப்பும் தாய் தான் வாழும் சமூகத்திற்குத் தான் பட்ட கடமையை முற்றும் உணர்ந்தவள் ஆவாள். (புறம்.- பா- 279) ஒக்கூர் மாசாத்தியார்,

"செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
          வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇ
ஒருமகன் அல்லது இல்லோள்
          செருமுகம் நோக்கிச் செல்கென விடு"த்த
தாயைத் தன் பாடல்நாயகி ஆக்கியுள்ளார்.

          விழாக்களும் மக்கள் சமூகமாகக் கூடி வாழும் உறவுநிலையை வலுப்படுத்தின. முதுவாய்க் குயவன் சாறு என அறிவித்ததுடன் விழா தொடங்கியது.(நற்.-  பா- 200) விழா தொடங்கியவுடன் அந்தக் குடியிருப்பைச் சேர்ந்தோர்க்கு அச்சமூக நிகழ்வில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சாத்தந்தையார்  வருணிக்கும் கட்டில் முடைவோன்; மனைவி மகப்பேறு உற்ற நிலையில்; பொருளின் தேவை முதற்குறி என்பதால்; ஞாயிறு மறையும் மழைக்கால மாலையில்; ஊர்த் திருவிழாவில் பங்கேற்க விரைந்து செயல் ஆற்றுவது அவனது சமூகக் கடப்பாட்டை எடுத்துக் காட்டுகின்றது. (புறம்.- பா- 82)

சமூகம் தனிமனித வாழ்வுடன் கொண்ட உறவு:
          திருமணம் என்ற நிறுவனத்தைச் சங்ககாலச் சமூகம் போற்றியது. திருமணத்திற்கு முன்னர் ஒருவனும் ஒருத்தியும் இரவிலோ பகலிலோ களவு மேற்கொள்வதை சமூகம் விரும்பவில்லை. அதனாலேயே களவுக்கால வாழ்க்கை அலர் தூற்றுவதற்கும், அம்பலாக விரிவதற்கும் வாய்ப்பளித்தது. அந்த அலரையும், அம்பலையும் தாங்க இயலாமல் தலைவி உடன்போக முடிவு செய்கிறாள். உலோச்சனார் மறுகில் பெண்டிரின் செயலைச் சொல்லோவியம் ஆக்குகிறார். (நற்.- பா- 149)

          உடன்போன தலைவியையும், தலைவனையும் பின்னால் தேடிச் செல்லும் செவிலியை ஆற்றும் கண்டோரும் திருமணம் என்ற பந்தத்தைப் போற்றுகின்ற பாங்கைக் கலித்தொகையில் (பாலைக்கலி- பா- 9) காண்கிறோம்.

          சமூகத்தில் காலூன்றி இருந்த வருணப் பாகுபாடும், தொழிலடிப்படையில் அமைந்த அழுத்தமான மக்கட்பிரிவுகளும், ஒரு திருமண பந்தத்தை உறுதி செய்வதில் பங்கேற்றன. பரதவ மகளை விரும்பிய நகர்ப் புறத்துச் செல்வந்தனின் மகனிடம் பேசும் தோழி 'உன் உறவு தேவையில்லை; எம் இனத்தில் நல்ல தலைவர்கள் உள்ளனர்' என்று மறுத்துரைக்கிறாள். (நற்.- பா- 45& தமிழ்ப்பேராய்வு- Vol.- 7- no.- 2- 30.12.2018 )

தொகுப்புரை:
          பரதவர் சமூகத்தில் பொதுநலன் கருதி கலங்கரை விளக்கு ஏற்றினர்.
          தாயும் தந்தையும் ஒருசேரத் தம் மக்களைப் பாசத்துடன் வளர்த்தனர்.
          திருமணத்திற்குப் பின்னர் தந்தை தரும் செல்வத்தை ஏற்காமை பெண்ணின் செம்மாந்த பண்பாகக் கருதப்பட்டது. மகளின் வாழ்விற்கும் பாதுகாப்பிற்கும் தந்தை பொறுப்பெடுத்தான். மகளின் இல்லற அமைதிக்கு ஊறு நேரின் அதைத் தந்தை தட்டிக் கேட்பான். தம்  குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை ஒருவன் ஏமாற்றி விட்டால்; தந்தையும், தமையனும் கொள்ளும் சினத்தையும் அதன் விளைவாகச் செய்யும் செயலையும் யாராலும் தடுத்து நிறுத்த இயலாது.
          சகோதர பாசம் போர் மேற்செல்லும் வீரரிடம் விஞ்சி நின்றது.
          இல்லற வாழ்வில் மனைவியே கணவன் பெருமைக்கு ஆதாரம்; அதுபோல் கணவனே மனைவியின் பெருமைக்கு ஆதாரம் ஆனாள். தலைவன் தேடிவரும் பொருளைப் பேணிப் பாதுகாப்பதும், பகுத்துக் கொடுத்தலும் தலைவியின் உரிமையாகவும் கடமையாகவும் இருந்தது. கூட்டுக் குடும்ப முறை நிலவியது. மாமியார் மருமகள் உறவுநிலை போற்றும்படியாக இருந்தது. விருந்து புறந்தரும் நடைமுறை செல்வாக்குப் பெற்றது. இதனால் இல்லறத்தில் பொருள் சிறப்பிடம்   பெற்றது. தலைவன் மாண்டுவிட்டால் தலைவி தனித்து விருந்து புறந்தர இயலாது. குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் கடமை இருந்தது.
          அவரவர்க்குரிய கடமையே அவர்களிடையே உறவை ஏற்படுத்தியது. சமூகத்திற்காகத் தனிமனிதன் உயிரை விடவும் தயாராக இருந்தான். ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் சமூகத்திற்குத் தாம் கடம்பட்டு இருப்பதை உணர்ந்து  இருந்தனர். விழாக்களும் மக்கள் சமூகமாகக் கூடி வாழும் உறவுநிலையை வலுப்படுத்தின.
          திருமணம் என்ற நிறுவனத்தைச் சங்ககாலச் சமூகம் போற்றியது. வருணப் பாகுபாடும், தொழிலடிப்படையில் அமைந்த  மக்கட்பிரிவுகளும் ஒரு திருமண பந்தத்தை உறுதி செய்வதிலும் பங்கேற்றன.




சுருக்கக்குறியீட்டு விளக்கம்:
நற்.- நற்றிணை
புறம்.- புறநானூறு


துணைநூற்பட்டியல்:
1. நற்றிணை- கு.வெ.பாலசுப்ரமணியன்(உ.ஆ)- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மதுரை- முதல் பதிப்பு - ஏப்ரல் 2004.
2. புறநானூறு- பகுதி l – ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை(உ.ஆ.)- கழக வெளியீடு- முதல் பதிப்பின் மறுபதிப்பு- 2007
3. புறநானூறு- பகுதி ll- ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளை(உ.ஆ.)- கழக வெளியீடு- முதல் பதிப்பின் மறுபதிப்பு- 2007.
4. அகநானூறு- நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் &கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளை (உ.ஆ.)- கழக     வெளியீடு- முதற்பதிப்பின் மறுபதிப்பு- 2009
5. கலித்தொகை- நச்சினார்க்கினியர் (உ.ஆ.)- கழக வெளியீடு- முதற்பதிப்பின் மறுஅச்சு - 2007


(குறிப்பு: சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன்; விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி இணைந்து 12-14திசம்பர் 2012ல் ‘சங்க இலக்கியத்தில் சுற்றுச்சூழலியலும் பண்பாட்டியலும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக்கட்டுரை 'சங்க இலக்கியத்தில் தனிமனித சமூக உறவுநிலைகள்' ஆகும். கருத்தரங்க மலரில் பதிப்பிக்கப்பட்டது. ஏழாண்டு கால இடைவெளியின் கருத்தாக்கங்கள் சேர்த்து மேம்படுத்தப்பட்ட போது இரண்டு கட்டுரைகளாகப் பிரிக்க வேண்டியதாயிற்று. அவற்றில் ஒன்றே இக்கட்டுரை.)


தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)





Friday, March 8, 2019

நானிலத் தெய்வங்களும்; பண்டைத் தமிழர் வழிபாடுகளும்


— முனைவர் ச.கண்மணி கணேசன்



முன்னுரை:
         தொல்காப்பியம் அகத்திணையியல் 5ம் நூற்பா, அகப்பாடல்களில் இடம்பெறக் கூடிய நான்கு திணைகட்குரிய தெய்வங்களை வரையறுக்கிறது. ஆயினும் சங்க அகப்பாடற் செய்திகளுக்கும்; அந்நூற்பாவின் வரையறைக்கும்  உள்ள இடைவெளியை அளந்தறிவதாக இக்கட்டுரை அமைகிறது.


தொல்காப்பிய வரையறை:    
         “மாயோன் மேய காடுறை உலகமும் 
         சேயோன் மேய மைவரை உலகமும் 
         வேந்தன் மேய தீம்புனல் உலகமும் 
         வருணன் மேய பெருமணல் உலகமும் 
         முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் 
         சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” 
என்ற நூற்பா நான்கு திணைகட்குரிய தெய்வங்கள் யார் யார் எனச் சுட்டுகிறது. இளம்பூரணர் ‘மேய’ என்ற சொல்லுக்கு ‘மேவிய’ என்று பொருள் கூறுகிறார். 

         நச்சினார்க்கினியர் ‘மேய’ என்ற சொல்லுக்கு ‘காதலித்த‘ என்று பொருள் கூறுகிறார். சோமசுந்தர பாரதியார் ‘மேய’ என்ற சொல்லுக்கு ‘உறைவிடமாகிய’ என்று பொருள் கூறுகிறார். சிவலிங்கனாரும், மு.அருணாச்சலம் பிள்ளையும்; இளம்பூரணரின் ‘மேவிய’ என்ற உரைக்கு ‘விரும்பிய’ என்று அடிக்குறிப்பு தருகின்றனர்.
         மாயோன்    -   திருமால்                                                                   
         சேயோன்    -   முருகன்
         வேந்தன்      -   இந்திரன்                                                                     
         வருணன்    -    மழைக்கடவுள் 
என்றே இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சோமசுந்தர பாரதியார் ஆகிய மூவரும் பொருள் கூறுகின்றனர். சிவலிங்கனார் ‘வேந்தன்’ என்பது மன்னனைக் குறிப்பதாகக் கொள்கிறார்.


முல்லைத்திணையும் வழிபாடுகளும்:
         முல்லைநிலத் தெய்வமாக மாயோன் சுட்டப்பட்டிருப்பினும்; கலித்தொகை தவிர்ந்த பிற தொகைநூல்களில்; முல்லைத்திணைப் பாடல்களில் திருமால் பற்றிய குறிப்பு இல்லை. தலைவியின் கற்பு தெய்வமாகப் போற்றப்  பெற்றது. முன்னோர் வழிபாடு காக்கைக்குச் சோறிடுவதன் மூலம் புலனாகிறது. நீர்நிலைகளிலும், கரைகளிலும், மரா மரத்திலும், தெய்வம் உறைவதாக நம்பி முறைப்படி தொழுதனர்.. பிற தெய்வக்குறிப்புகள் பல உள்ளன. 

         முல்லைநில மக்கள் திருமாலை வழிபடுவதை முல்லைக்கலிப் பாடல்கள் மட்டுமே சுட்டுகின்றன (பா-104,105,108). 

         தலைவன் வருவான் என்று ஆற்றி இருக்கும் தலைவியின் கற்பு கடவுள் தன்மை வாய்ந்தது என்ற குறிப்பு கிடங்கிற் குலபதி நக்கண்ணன் என்ற புலவரால் சொல்லப்பட்டுள்ளது.
         “கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி
         மடவை மன்ற நீ எனக் கடவுபு
         துனியல் வாழி தோழி சான்றோர்
         புகழு முன்னர் நாணுப 
         பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே”(குறுந்தொகை 252) 
எனும் பாடல் தலைவி தோழியைப் பார்த்துக் கூறுவதாகும். இங்கு தலைவியின் கற்பு கடவுள் தன்மை உடையது என்ற கொள்கை சிறப்பிடம் பெற்றுள்ளது.

         காக்கைக்குச் சோறிடுவதைப் பலியிடல் என்று காக்கைப்பாடினியார் தோழி கூற்றாகச் சுட்டுவதால் இயற்கை எய்திய முன்னோரை வழிபட்ட வழக்கம் முல்லைத் திணைப் பாடலில் புலப்படுகிறது.
         “திண்தேர் நள்ளி  கானத்து அண்டர்
         பல்லா பயந்த நெய்யிற் தொண்டி 
         முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு 
         எழுகலத்து ஏந்தினும் சிறிதே என் தோழி 
         பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு 
         விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.”(குறுந்தொகை- 210) 
இப்பாடல் ஏழு கலங்களில் நெய் பெய்த வெண்ணெல் வெண்சோறு வைத்துக் காக்கைக்குப் பலியிட்ட வழக்கத்தைக் கூறுகிறது.

         நீர்நிலைகளிலும், கரைகளிலும், மரா மரத்திலும், தெய்வம் உறைவதாக நம்பி முறைப்படி தொழுத பின்னர் ஆயர் ஏறு தழுவினர். 
         “துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும் 
         முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ”(முல்லைக்கலி- பா-101) 
எனும் பாடலடிகள் மேற்சுட்டிய கருத்தைச் சுட்டுகின்றன.

         திருமால், காமன், கண்ணன், பலராமன், சிவன், முருகன், கூற்றுவன், நான்முகன், திருமகள், பூமகள் ஆகிய பல தெய்வங்களும் உவமைகளாக முல்லைக்கலிப் பாடல்களில் எடுத்தாளப் பட்டுள்ளனர்.(பா.-103 -109)


நெய்தல் திணையும் வழிபாடுகளும்:
         வருணன் நெய்தல் திணைக்குரிய தெய்வமாகச் சுட்டப்படினும் சங்க இலக்கியத்தில் ஒரு பாடலில் கூட வருணன் பற்றிய குறிப்பு இல்லை. சுறாக்  கொம்பு; ஊர்க்காவல் தெய்வம், கடல் தெய்வம், நீர்நிலைத் தெய்வம், கடவுள் மரம் போன்ற வழிபடு தெய்வங்களைச் சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் காண இயல்கிறது. உவமைகளாகப் பிற பல தெய்வங்களும் இடம் பெறுகின்றனர்.

         பட்டினப்பாலை சுறாவின் கொம்பை நட்டு பரதவர் வழிபட்ட செய்தியை,
         “சினைச் சுறவின் கோடு நட்டு
         மனைச் சேர்த்திய வல்லணங்கினால் 
         ………………………………………………..
         புன்றலை இரும்பரதவர்”(அடி.- 86-90) 
எனும் பாடற்பகுதியில் எடுத்து உரைக்கிறது. (உரையாசிரியரே சுறாவின் கொம்பை நட்டு வருணனை வழிபட்டனர் என்கிறார். இதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை.) 

         போந்தைப் பசலையார் என்ற புலவர் புகார் நகரத்துக் காவல் தெய்வத்தை நோக்கித் தலைவன் சூளுரைத்ததாகப் பாடியுள்ளார்.
         “கொடுஞ்சுழிப் புகார்த் தெய்வம் நோக்கி 
         கடுஞ்சூள் தருகுவன் ”(அகநானூறு- பா-110) 
எனும் அடிகள் நோக்குக. 

         புகார் நகரின் காவல் தெய்வம் சம்பாபதி என்று சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் செய்தி உள்ளது. 1982ல் கள ஆய்வு செய்தபோது கூட சம்பாபதி என்று சுதை உருவம் ஒன்றை சாயாவனத்தின் வயல் காட்டிற்கு நடுவே பொதுமக்கள் காட்டினர்.

         எழூஉப் பன்றி நாகன் குமரனார் நீர்த்துறைத் தெய்வத்தை தாயார் வணங்கச்  செல்வது குறித்துத் தோழி தலைவனுக்கு அறிவுறுத்துவதாகப் பாடியுள்ளார். 
         “.............................................................அந்தில்
         அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி 
         யாயும் ஆயமொடு அயரும் …..”(அகநானூறு- பா- 240) 
அதனால்  பகலில் தலைவியைச் சந்திக்க ஏதுவாக இருக்கும் என்று அறிவுறுத்துகிறாள்.

         சாகலாசனார் நெய்தல் நிலமக்கள் தெய்வமாக வழிபட்ட மரத்தில் இருந்த பறவைக்கூட்டைத் தம் பாடலில் புனைகிறார்.
         “கடவுள் மரத்த முள்மிடை குடம்பை”(அகநானூறு- பா-270) 
என்பது   மரத்தை வழிபாடு செய்தமையைத் தெரிவிக்கிறது.

         கடலை ஒரு பெண்தெய்வமாக நெய்தல்நில மக்கள் வழிபட்டனர் என்பது அம்மூவனார் பாடலில் தெரிகிறது. அந்திக்காலத்தில் கடல் தெய்வம் கரையில் நிற்பது போல் தலைவி தனித்துக் கடற்கரையில் இரங்கி நிற்பது பற்றித் தோழி, 
         “...............................................................அந்திக்  
         கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு 
நீயே கானல் ஒழிய …….”(அகநானூறு- பா- 370) 
எனும் பாடலடியில் கூறுவது காண்க.

         இராமன், சிவன், திருமால், காமன், முருகன், பலராமன், முதலிய  தெய்வங்கள் உவமைகளாக நெய்தல் பாடல்களில் எடுத்தாளப் பெற்றுள்ளனர். (அகநானூறு- பா.- 70, 120, 360& கலித்தொகை- பா.- 123,124,127,134,140,143,147,150)


மருதத்திணையும் வழிபாடுகளும்:
         எந்த ஒரு சங்க இலக்கியப் பாடலும் இந்திரனைத் தெய்வமாகச் சுட்டவே  இல்லை. இரட்டைக் காப்பியங்கள் தாம் இந்திரனைத் தெய்வநிலைக்கு ஏத்துகின்றன. 

         சிவலிங்கனார் குறிப்பிடுவது போல வேந்தன் என்னும் சொல் மன்னனைக் குறிப்பிடுகிறது என்று கொள்வது சங்க இலக்கியத்திற்குப் பொருத்தமாகப் படுகிறது.ஏனெனில் நற்றிணை(பா.- 150, 167, 170, 180, 237, 300, 320, 340, 390) யில்  உள்ள மருதப் பாடல்களும், ஐங்குறுநூற்றில் உள்ள மருதப் பாடல்களும் (வேட்கைப்பத்து பா.-1-10, பா.- 54, 56, 61&78) அகநானூற்றில் பல பாடல்களும் மன்னனைப் போற்றுகின்றன. மன்னனின் செயல்கள், அவனது ஆட்சிக்கால நிகழ்வுகள் உவமைகள் ஆகின்றன.

         வேங்கை மரம், நீர்த்துறைத் தெய்வம், ஊரெல்லைத் தெய்வம், திருச்செந்தூர் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களும் மருதத் திணைப்  பாடல்களில் வழிபாட்டிற்கு உரியவை ஆகின்றன. கற்புக்கடவுள் அருந்ததி, திருமகள், முதலிய தெய்வங்களும் உவமைகளாகின்றன.

         “எரிமருள் வேங்கைக் கடவுள்“ என்று வேங்கைமரம் தெய்வமாக வழிபடப் பட்டமை பற்றிய குறிப்பு நற்றிணைப் பாடல் 216ல் உள்ளது.

         நீர்த்துறைத் தெய்வத்தைத் தாய் வழிபட்ட பாங்கினை ஆவூர் மூலங்கிழார்,
         “கள்ளும் கண்ணியும் கையுறையாக 
         நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாய் 
         நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி 
         தணிமருங்கு அறியாள் யாய் அழ …”(அகநானூறு- பா- 156) 
என்று தாய் மேல் இரக்கம் தோன்ற வருணிக்கிறார்.

         இடையன் நெடுங்கீரனார் ஊர்காவல் தெய்வத்தை வழிபட்ட பாங்கினை, 
         “பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்
         நறுவிரை தெளித்த நாறு இணர் மாலை 
         பொறிவரி இனவண்டு ஊதல் கழியும் 
         உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்”(அகநானூறு- பா- 166) 
என்ற பாடலில் விரிவாகப் பேசியுள்ளார்.

         பரணரின் மருதத்திணைப் பாடல் திருச்செந்தூர் முருகனை வழிபட்டுத் தலைவன் உரைத்த சூள் பற்றிப் பாடுகிறது.( அகநானூறு- பா- 266) மருதனிள நாகனாரும் ‘ஆலமர் செல்வன் அணிசால் மகனா’கிய முருகனைப் போற்றுகிறார் (கலித்தொகை- பா.- 81, 83, 93).  

         பெருங்காட்டில் கொற்றவைக்கு நிகழும் வழிபாடு பற்றி மருதக்கலிப் பாட்டில் மருதனிள நாகனார் பாடுகிறார்.(பா- 89) 

         சாகலாசனார் கற்புக்கடவுளாகிய அருந்ததியை மருதத் திணைத் தலைவிக்கு ஒப்பிடுகிறார். (அகநானூறு- பா- 16) ஓரம்போகியார் மருதத் திணைத் தலைவி திருமகளின் மங்கலம் பொருந்தியவள் என்கிறார்.(அகநானூறு- பா- 316)


குறிஞ்சித் திணையும் வழிபாடுகளும்:
         முருகன் பெரிதும் போற்றப்படுகிறான்.(குறுந்தொகை- பா.- 1, 111;நற்றிணை- பா.- 82, 173, 225, 273; ஐங்குறுநூறு- பா.- 245, 247, 249& அகநானூறு- பா.- 22,98)

         மிகப் பழைய மரத்தை தெய்வமாக வழிபடும் போக்கு குறிஞ்சித்திணை மாந்தரிடமும் இருந்தது.(நற்றிணை- பா- 83) செங்கடம்பு எனும் மரா மரத்தை முருகனின் அம்சமாக வணங்கினர்(குறுந்தொகை- பா- 87).

         குறிஞ்சி நிலத்தில் முருகன் மட்டுமின்றி கொல்லிப்பாவை என்ற பெண்தெய்வ வழிபாடும்  போற்றப்பட்டமை புலப்படுகிறது.நற்றிணைப்(பா.- 185, 192, 201) பாடல்கள் கொல்லிப்பாவை பற்றி விரிவாக வருணிக்கின்றன. பரணர் குறுந்தொகை 89ல் கொல்லிப்பாவையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

         பிற பல தெய்வங்களையும் குறிஞ்சி நில மக்கள் வழிபட்டனர் என்பது,
         “வேற்றுப் பெருந்தெய்வம் பலஉடன் வாழ்த்தி“(குறுந்தொகை- பா-263) 
தாய் தன் மகளுக்காக வழிபட்டதாகப் பெருஞ்சாத்தன் எனும் புலவர் பாடி இருப்பதிலிருந்து தெரிகிறது.    

         பல குறிஞ்சித்திணைப் பாடல்கள் ‘அணங்கு’ என்ற பொதுச்சொல்லைப் பயன்படுத்தினாலும் உரையாசிரியர்கள் முருகன் என்றே பொருள் கூறுகின்றனர். (நற்றிணை- பா.- 47, 165, 288, 322, 376, 385; அகநானூறு- பா-72) சில குறிஞ்சித் திணைப் பாடல்கள் கடவுள் என்று சுட்டுமிடங்களிலும் உரையாசிரியர் முருகன் என்றே பொருள் கூறுகின்றனர்(குறுந்தொகை- பா- 105; நற்றிணை- 251, 351& ஐங்குறுநூறு- பா- 243,259). இப்போக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. ஏனெனில் தமிழகத்தில் சங்க காலத்தில் நீர்த்துறையிலும், ஊரெல்லையிலும்  காவல் தெய்வங்களை வைத்து வழிபட்டமையையும், மரங்களைத் தெய்வமாக வழிபட்டமையையும் இதுகாறும் கண்டோம். கடவுள், தெய்வம் என்ற பொதுப் பெயர்களால் பிற திணைகளிலும் வழிபாடு நிகழ்ந்தமைக்குச் சங்க இலக்கியம் சான்று பகர்கிறது.


எண்
நூல்
பாடல்  
எண்
புலவர்
பொதுச்சொல்
திணை
1
குறுந்தொகை
203
நெடும்பல்லியத்தன்
கடவுள்
மருதம்
2
ஐங்குறுநூறு
23
ஓரம்போகியார்
அணங்கு
மருதம்
3
ஐங்குறுநூறு
76
ஓரம்போகியார்
தெய்வம்
மருதம்
4
அகநானூறு
136
விற்றூற்று மூதெயினனார்   
கடவுள்
மருதம்
5
கலித்தொகை
82
மருதனிள நாகனார்
புத்தேளிர்
மருதம்
6
கலித்தொகை
84
மருதனிள நாகனார்
கடவுள்
மருதம்
7
ஐங்குறுநூறு
182
அம்மூவனார்
கடவுள்
நெய்தல்


முடிவுரை:
         தொல்காப்பியம் சுட்டும் தெய்வங்களில் மாயோன் முல்லைக்கலியிலும், முருகன் குறிஞ்சிப் பாடல்களிலும் இடம் பெறுகின்றனர். வேந்தன் மருதத் திணையில் மன்னனாகவே இனம் காணப்படுகிறான். வருணன் வழிபாடு காணக்  கிடைக்கவில்லை. சுறாக்கொம்பை வருணன் என உரையாசிரியரே கூறுகிறார்.

         குறிஞ்சி நிலத்தில் கொல்லிப் பாவையும் வழிபடப் பட்டது.
         முருகனாகக் கருதப்பட்ட மராமரம் குறிஞ்சியில் மட்டுமின்றி;  முல்லையிலும் வழிபடப் பட்டது.   
         முல்லை நிலத்தில் தலைவியின் கற்பு தெய்வமாகப் போற்றப்  பெற்றது. முன்னோர் வழிபாடு இருந்தது. 
         நீர்நிலைகளிலும், கரைகளிலும் தெய்வம் உறைவதாக நம்பி முறைப்படி தொழுதனர்.
         வேங்கை மரம், நீர்த்துறைத் தெய்வம், ஊரெல்லைத் தெய்வம் முதலிய வழிபாடுகள் மருதத் திணைப்  பாடல்களில் காணப்படுகின்றன.
         திருச்செந்தூர் முருகன் நெய்தல் நிலத்தில் எழுந்தருளி இருப்பினும் மருதப் பாடலில் போற்றப்படுகிறான். கொற்றவையும், அருந்ததியும், திருமகளும் போற்றப்படுகின்றனர்.
         ஊர்க்காவல் தெய்வம், கடல் தெய்வம், நீர்நிலைத் தெய்வம், கடவுள் மரம் போன்ற வழிபடு தெய்வங்களைச் சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் காண இயல்கிறது

         எல்லா நிலங்களிலும் கடவுள், தெய்வம், அணங்கு, புத்தேளிர் எனப் பொதுப் பெயர்களால் வழிபடுதெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பழைய மரங்கள், நீர்க்கரைகள், நீர்த்துறைகள், ஊர்க்காவல் தெய்வங்கள் அனைத்து நிலங்கட்கும் பொதுவாகின்றன. தொல்காப்பியம் சுட்டாத பல தெய்வ வழிபாடுகள் இருந்தமை உவமைகள் மூலம் புலனாகின்றன.            





குறிப்பு:  சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்; விருதுநகர், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரியும் இணைந்து 13.12.2010 முதல் 22.12.2010 வரை ‘சங்க இலக்கியத்தில் தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாடுகளின் தழுவலும் விலகலும்’ என்ற பொருண்மையில் நடத்திய பத்து நாள் பயிலரங்கில் 19.12.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.30 மணி அளவில் “சொல்லிய முறையாற் சொல்லப்படும் தெய்வங்களும், பிற தெய்வங்களும்” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட உரையிது. 







தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)