Friday, March 8, 2019

நானிலத் தெய்வங்களும்; பண்டைத் தமிழர் வழிபாடுகளும்


— முனைவர் ச.கண்மணி கணேசன்



முன்னுரை:
         தொல்காப்பியம் அகத்திணையியல் 5ம் நூற்பா, அகப்பாடல்களில் இடம்பெறக் கூடிய நான்கு திணைகட்குரிய தெய்வங்களை வரையறுக்கிறது. ஆயினும் சங்க அகப்பாடற் செய்திகளுக்கும்; அந்நூற்பாவின் வரையறைக்கும்  உள்ள இடைவெளியை அளந்தறிவதாக இக்கட்டுரை அமைகிறது.


தொல்காப்பிய வரையறை:    
         “மாயோன் மேய காடுறை உலகமும் 
         சேயோன் மேய மைவரை உலகமும் 
         வேந்தன் மேய தீம்புனல் உலகமும் 
         வருணன் மேய பெருமணல் உலகமும் 
         முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் 
         சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” 
என்ற நூற்பா நான்கு திணைகட்குரிய தெய்வங்கள் யார் யார் எனச் சுட்டுகிறது. இளம்பூரணர் ‘மேய’ என்ற சொல்லுக்கு ‘மேவிய’ என்று பொருள் கூறுகிறார். 

         நச்சினார்க்கினியர் ‘மேய’ என்ற சொல்லுக்கு ‘காதலித்த‘ என்று பொருள் கூறுகிறார். சோமசுந்தர பாரதியார் ‘மேய’ என்ற சொல்லுக்கு ‘உறைவிடமாகிய’ என்று பொருள் கூறுகிறார். சிவலிங்கனாரும், மு.அருணாச்சலம் பிள்ளையும்; இளம்பூரணரின் ‘மேவிய’ என்ற உரைக்கு ‘விரும்பிய’ என்று அடிக்குறிப்பு தருகின்றனர்.
         மாயோன்    -   திருமால்                                                                   
         சேயோன்    -   முருகன்
         வேந்தன்      -   இந்திரன்                                                                     
         வருணன்    -    மழைக்கடவுள் 
என்றே இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சோமசுந்தர பாரதியார் ஆகிய மூவரும் பொருள் கூறுகின்றனர். சிவலிங்கனார் ‘வேந்தன்’ என்பது மன்னனைக் குறிப்பதாகக் கொள்கிறார்.


முல்லைத்திணையும் வழிபாடுகளும்:
         முல்லைநிலத் தெய்வமாக மாயோன் சுட்டப்பட்டிருப்பினும்; கலித்தொகை தவிர்ந்த பிற தொகைநூல்களில்; முல்லைத்திணைப் பாடல்களில் திருமால் பற்றிய குறிப்பு இல்லை. தலைவியின் கற்பு தெய்வமாகப் போற்றப்  பெற்றது. முன்னோர் வழிபாடு காக்கைக்குச் சோறிடுவதன் மூலம் புலனாகிறது. நீர்நிலைகளிலும், கரைகளிலும், மரா மரத்திலும், தெய்வம் உறைவதாக நம்பி முறைப்படி தொழுதனர்.. பிற தெய்வக்குறிப்புகள் பல உள்ளன. 

         முல்லைநில மக்கள் திருமாலை வழிபடுவதை முல்லைக்கலிப் பாடல்கள் மட்டுமே சுட்டுகின்றன (பா-104,105,108). 

         தலைவன் வருவான் என்று ஆற்றி இருக்கும் தலைவியின் கற்பு கடவுள் தன்மை வாய்ந்தது என்ற குறிப்பு கிடங்கிற் குலபதி நக்கண்ணன் என்ற புலவரால் சொல்லப்பட்டுள்ளது.
         “கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி
         மடவை மன்ற நீ எனக் கடவுபு
         துனியல் வாழி தோழி சான்றோர்
         புகழு முன்னர் நாணுப 
         பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே”(குறுந்தொகை 252) 
எனும் பாடல் தலைவி தோழியைப் பார்த்துக் கூறுவதாகும். இங்கு தலைவியின் கற்பு கடவுள் தன்மை உடையது என்ற கொள்கை சிறப்பிடம் பெற்றுள்ளது.

         காக்கைக்குச் சோறிடுவதைப் பலியிடல் என்று காக்கைப்பாடினியார் தோழி கூற்றாகச் சுட்டுவதால் இயற்கை எய்திய முன்னோரை வழிபட்ட வழக்கம் முல்லைத் திணைப் பாடலில் புலப்படுகிறது.
         “திண்தேர் நள்ளி  கானத்து அண்டர்
         பல்லா பயந்த நெய்யிற் தொண்டி 
         முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு 
         எழுகலத்து ஏந்தினும் சிறிதே என் தோழி 
         பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு 
         விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.”(குறுந்தொகை- 210) 
இப்பாடல் ஏழு கலங்களில் நெய் பெய்த வெண்ணெல் வெண்சோறு வைத்துக் காக்கைக்குப் பலியிட்ட வழக்கத்தைக் கூறுகிறது.

         நீர்நிலைகளிலும், கரைகளிலும், மரா மரத்திலும், தெய்வம் உறைவதாக நம்பி முறைப்படி தொழுத பின்னர் ஆயர் ஏறு தழுவினர். 
         “துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும் 
         முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ”(முல்லைக்கலி- பா-101) 
எனும் பாடலடிகள் மேற்சுட்டிய கருத்தைச் சுட்டுகின்றன.

         திருமால், காமன், கண்ணன், பலராமன், சிவன், முருகன், கூற்றுவன், நான்முகன், திருமகள், பூமகள் ஆகிய பல தெய்வங்களும் உவமைகளாக முல்லைக்கலிப் பாடல்களில் எடுத்தாளப் பட்டுள்ளனர்.(பா.-103 -109)


நெய்தல் திணையும் வழிபாடுகளும்:
         வருணன் நெய்தல் திணைக்குரிய தெய்வமாகச் சுட்டப்படினும் சங்க இலக்கியத்தில் ஒரு பாடலில் கூட வருணன் பற்றிய குறிப்பு இல்லை. சுறாக்  கொம்பு; ஊர்க்காவல் தெய்வம், கடல் தெய்வம், நீர்நிலைத் தெய்வம், கடவுள் மரம் போன்ற வழிபடு தெய்வங்களைச் சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் காண இயல்கிறது. உவமைகளாகப் பிற பல தெய்வங்களும் இடம் பெறுகின்றனர்.

         பட்டினப்பாலை சுறாவின் கொம்பை நட்டு பரதவர் வழிபட்ட செய்தியை,
         “சினைச் சுறவின் கோடு நட்டு
         மனைச் சேர்த்திய வல்லணங்கினால் 
         ………………………………………………..
         புன்றலை இரும்பரதவர்”(அடி.- 86-90) 
எனும் பாடற்பகுதியில் எடுத்து உரைக்கிறது. (உரையாசிரியரே சுறாவின் கொம்பை நட்டு வருணனை வழிபட்டனர் என்கிறார். இதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை.) 

         போந்தைப் பசலையார் என்ற புலவர் புகார் நகரத்துக் காவல் தெய்வத்தை நோக்கித் தலைவன் சூளுரைத்ததாகப் பாடியுள்ளார்.
         “கொடுஞ்சுழிப் புகார்த் தெய்வம் நோக்கி 
         கடுஞ்சூள் தருகுவன் ”(அகநானூறு- பா-110) 
எனும் அடிகள் நோக்குக. 

         புகார் நகரின் காவல் தெய்வம் சம்பாபதி என்று சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் செய்தி உள்ளது. 1982ல் கள ஆய்வு செய்தபோது கூட சம்பாபதி என்று சுதை உருவம் ஒன்றை சாயாவனத்தின் வயல் காட்டிற்கு நடுவே பொதுமக்கள் காட்டினர்.

         எழூஉப் பன்றி நாகன் குமரனார் நீர்த்துறைத் தெய்வத்தை தாயார் வணங்கச்  செல்வது குறித்துத் தோழி தலைவனுக்கு அறிவுறுத்துவதாகப் பாடியுள்ளார். 
         “.............................................................அந்தில்
         அணங்குடைப் பனித்துறை கைதொழுது ஏத்தி 
         யாயும் ஆயமொடு அயரும் …..”(அகநானூறு- பா- 240) 
அதனால்  பகலில் தலைவியைச் சந்திக்க ஏதுவாக இருக்கும் என்று அறிவுறுத்துகிறாள்.

         சாகலாசனார் நெய்தல் நிலமக்கள் தெய்வமாக வழிபட்ட மரத்தில் இருந்த பறவைக்கூட்டைத் தம் பாடலில் புனைகிறார்.
         “கடவுள் மரத்த முள்மிடை குடம்பை”(அகநானூறு- பா-270) 
என்பது   மரத்தை வழிபாடு செய்தமையைத் தெரிவிக்கிறது.

         கடலை ஒரு பெண்தெய்வமாக நெய்தல்நில மக்கள் வழிபட்டனர் என்பது அம்மூவனார் பாடலில் தெரிகிறது. அந்திக்காலத்தில் கடல் தெய்வம் கரையில் நிற்பது போல் தலைவி தனித்துக் கடற்கரையில் இரங்கி நிற்பது பற்றித் தோழி, 
         “...............................................................அந்திக்  
         கடல்கெழு செல்வி கரை நின்றாங்கு 
நீயே கானல் ஒழிய …….”(அகநானூறு- பா- 370) 
எனும் பாடலடியில் கூறுவது காண்க.

         இராமன், சிவன், திருமால், காமன், முருகன், பலராமன், முதலிய  தெய்வங்கள் உவமைகளாக நெய்தல் பாடல்களில் எடுத்தாளப் பெற்றுள்ளனர். (அகநானூறு- பா.- 70, 120, 360& கலித்தொகை- பா.- 123,124,127,134,140,143,147,150)


மருதத்திணையும் வழிபாடுகளும்:
         எந்த ஒரு சங்க இலக்கியப் பாடலும் இந்திரனைத் தெய்வமாகச் சுட்டவே  இல்லை. இரட்டைக் காப்பியங்கள் தாம் இந்திரனைத் தெய்வநிலைக்கு ஏத்துகின்றன. 

         சிவலிங்கனார் குறிப்பிடுவது போல வேந்தன் என்னும் சொல் மன்னனைக் குறிப்பிடுகிறது என்று கொள்வது சங்க இலக்கியத்திற்குப் பொருத்தமாகப் படுகிறது.ஏனெனில் நற்றிணை(பா.- 150, 167, 170, 180, 237, 300, 320, 340, 390) யில்  உள்ள மருதப் பாடல்களும், ஐங்குறுநூற்றில் உள்ள மருதப் பாடல்களும் (வேட்கைப்பத்து பா.-1-10, பா.- 54, 56, 61&78) அகநானூற்றில் பல பாடல்களும் மன்னனைப் போற்றுகின்றன. மன்னனின் செயல்கள், அவனது ஆட்சிக்கால நிகழ்வுகள் உவமைகள் ஆகின்றன.

         வேங்கை மரம், நீர்த்துறைத் தெய்வம், ஊரெல்லைத் தெய்வம், திருச்செந்தூர் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களும் மருதத் திணைப்  பாடல்களில் வழிபாட்டிற்கு உரியவை ஆகின்றன. கற்புக்கடவுள் அருந்ததி, திருமகள், முதலிய தெய்வங்களும் உவமைகளாகின்றன.

         “எரிமருள் வேங்கைக் கடவுள்“ என்று வேங்கைமரம் தெய்வமாக வழிபடப் பட்டமை பற்றிய குறிப்பு நற்றிணைப் பாடல் 216ல் உள்ளது.

         நீர்த்துறைத் தெய்வத்தைத் தாய் வழிபட்ட பாங்கினை ஆவூர் மூலங்கிழார்,
         “கள்ளும் கண்ணியும் கையுறையாக 
         நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாய் 
         நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி 
         தணிமருங்கு அறியாள் யாய் அழ …”(அகநானூறு- பா- 156) 
என்று தாய் மேல் இரக்கம் தோன்ற வருணிக்கிறார்.

         இடையன் நெடுங்கீரனார் ஊர்காவல் தெய்வத்தை வழிபட்ட பாங்கினை, 
         “பழம்பல் நெல்லின் வேளூர் வாயில்
         நறுவிரை தெளித்த நாறு இணர் மாலை 
         பொறிவரி இனவண்டு ஊதல் கழியும் 
         உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்”(அகநானூறு- பா- 166) 
என்ற பாடலில் விரிவாகப் பேசியுள்ளார்.

         பரணரின் மருதத்திணைப் பாடல் திருச்செந்தூர் முருகனை வழிபட்டுத் தலைவன் உரைத்த சூள் பற்றிப் பாடுகிறது.( அகநானூறு- பா- 266) மருதனிள நாகனாரும் ‘ஆலமர் செல்வன் அணிசால் மகனா’கிய முருகனைப் போற்றுகிறார் (கலித்தொகை- பா.- 81, 83, 93).  

         பெருங்காட்டில் கொற்றவைக்கு நிகழும் வழிபாடு பற்றி மருதக்கலிப் பாட்டில் மருதனிள நாகனார் பாடுகிறார்.(பா- 89) 

         சாகலாசனார் கற்புக்கடவுளாகிய அருந்ததியை மருதத் திணைத் தலைவிக்கு ஒப்பிடுகிறார். (அகநானூறு- பா- 16) ஓரம்போகியார் மருதத் திணைத் தலைவி திருமகளின் மங்கலம் பொருந்தியவள் என்கிறார்.(அகநானூறு- பா- 316)


குறிஞ்சித் திணையும் வழிபாடுகளும்:
         முருகன் பெரிதும் போற்றப்படுகிறான்.(குறுந்தொகை- பா.- 1, 111;நற்றிணை- பா.- 82, 173, 225, 273; ஐங்குறுநூறு- பா.- 245, 247, 249& அகநானூறு- பா.- 22,98)

         மிகப் பழைய மரத்தை தெய்வமாக வழிபடும் போக்கு குறிஞ்சித்திணை மாந்தரிடமும் இருந்தது.(நற்றிணை- பா- 83) செங்கடம்பு எனும் மரா மரத்தை முருகனின் அம்சமாக வணங்கினர்(குறுந்தொகை- பா- 87).

         குறிஞ்சி நிலத்தில் முருகன் மட்டுமின்றி கொல்லிப்பாவை என்ற பெண்தெய்வ வழிபாடும்  போற்றப்பட்டமை புலப்படுகிறது.நற்றிணைப்(பா.- 185, 192, 201) பாடல்கள் கொல்லிப்பாவை பற்றி விரிவாக வருணிக்கின்றன. பரணர் குறுந்தொகை 89ல் கொல்லிப்பாவையைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

         பிற பல தெய்வங்களையும் குறிஞ்சி நில மக்கள் வழிபட்டனர் என்பது,
         “வேற்றுப் பெருந்தெய்வம் பலஉடன் வாழ்த்தி“(குறுந்தொகை- பா-263) 
தாய் தன் மகளுக்காக வழிபட்டதாகப் பெருஞ்சாத்தன் எனும் புலவர் பாடி இருப்பதிலிருந்து தெரிகிறது.    

         பல குறிஞ்சித்திணைப் பாடல்கள் ‘அணங்கு’ என்ற பொதுச்சொல்லைப் பயன்படுத்தினாலும் உரையாசிரியர்கள் முருகன் என்றே பொருள் கூறுகின்றனர். (நற்றிணை- பா.- 47, 165, 288, 322, 376, 385; அகநானூறு- பா-72) சில குறிஞ்சித் திணைப் பாடல்கள் கடவுள் என்று சுட்டுமிடங்களிலும் உரையாசிரியர் முருகன் என்றே பொருள் கூறுகின்றனர்(குறுந்தொகை- பா- 105; நற்றிணை- 251, 351& ஐங்குறுநூறு- பா- 243,259). இப்போக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இல்லை. ஏனெனில் தமிழகத்தில் சங்க காலத்தில் நீர்த்துறையிலும், ஊரெல்லையிலும்  காவல் தெய்வங்களை வைத்து வழிபட்டமையையும், மரங்களைத் தெய்வமாக வழிபட்டமையையும் இதுகாறும் கண்டோம். கடவுள், தெய்வம் என்ற பொதுப் பெயர்களால் பிற திணைகளிலும் வழிபாடு நிகழ்ந்தமைக்குச் சங்க இலக்கியம் சான்று பகர்கிறது.


எண்
நூல்
பாடல்  
எண்
புலவர்
பொதுச்சொல்
திணை
1
குறுந்தொகை
203
நெடும்பல்லியத்தன்
கடவுள்
மருதம்
2
ஐங்குறுநூறு
23
ஓரம்போகியார்
அணங்கு
மருதம்
3
ஐங்குறுநூறு
76
ஓரம்போகியார்
தெய்வம்
மருதம்
4
அகநானூறு
136
விற்றூற்று மூதெயினனார்   
கடவுள்
மருதம்
5
கலித்தொகை
82
மருதனிள நாகனார்
புத்தேளிர்
மருதம்
6
கலித்தொகை
84
மருதனிள நாகனார்
கடவுள்
மருதம்
7
ஐங்குறுநூறு
182
அம்மூவனார்
கடவுள்
நெய்தல்


முடிவுரை:
         தொல்காப்பியம் சுட்டும் தெய்வங்களில் மாயோன் முல்லைக்கலியிலும், முருகன் குறிஞ்சிப் பாடல்களிலும் இடம் பெறுகின்றனர். வேந்தன் மருதத் திணையில் மன்னனாகவே இனம் காணப்படுகிறான். வருணன் வழிபாடு காணக்  கிடைக்கவில்லை. சுறாக்கொம்பை வருணன் என உரையாசிரியரே கூறுகிறார்.

         குறிஞ்சி நிலத்தில் கொல்லிப் பாவையும் வழிபடப் பட்டது.
         முருகனாகக் கருதப்பட்ட மராமரம் குறிஞ்சியில் மட்டுமின்றி;  முல்லையிலும் வழிபடப் பட்டது.   
         முல்லை நிலத்தில் தலைவியின் கற்பு தெய்வமாகப் போற்றப்  பெற்றது. முன்னோர் வழிபாடு இருந்தது. 
         நீர்நிலைகளிலும், கரைகளிலும் தெய்வம் உறைவதாக நம்பி முறைப்படி தொழுதனர்.
         வேங்கை மரம், நீர்த்துறைத் தெய்வம், ஊரெல்லைத் தெய்வம் முதலிய வழிபாடுகள் மருதத் திணைப்  பாடல்களில் காணப்படுகின்றன.
         திருச்செந்தூர் முருகன் நெய்தல் நிலத்தில் எழுந்தருளி இருப்பினும் மருதப் பாடலில் போற்றப்படுகிறான். கொற்றவையும், அருந்ததியும், திருமகளும் போற்றப்படுகின்றனர்.
         ஊர்க்காவல் தெய்வம், கடல் தெய்வம், நீர்நிலைத் தெய்வம், கடவுள் மரம் போன்ற வழிபடு தெய்வங்களைச் சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் காண இயல்கிறது

         எல்லா நிலங்களிலும் கடவுள், தெய்வம், அணங்கு, புத்தேளிர் எனப் பொதுப் பெயர்களால் வழிபடுதெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பழைய மரங்கள், நீர்க்கரைகள், நீர்த்துறைகள், ஊர்க்காவல் தெய்வங்கள் அனைத்து நிலங்கட்கும் பொதுவாகின்றன. தொல்காப்பியம் சுட்டாத பல தெய்வ வழிபாடுகள் இருந்தமை உவமைகள் மூலம் புலனாகின்றன.            





குறிப்பு:  சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்; விருதுநகர், வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரியும் இணைந்து 13.12.2010 முதல் 22.12.2010 வரை ‘சங்க இலக்கியத்தில் தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாடுகளின் தழுவலும் விலகலும்’ என்ற பொருண்மையில் நடத்திய பத்து நாள் பயிலரங்கில் 19.12.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.30 மணி அளவில் “சொல்லிய முறையாற் சொல்லப்படும் தெய்வங்களும், பிற தெய்வங்களும்” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட உரையிது. 







தொடர்பு: முனைவர் ச. கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)





No comments:

Post a Comment