Sunday, March 17, 2019

சீர்காழி - புதுத்துறை - சிவன் கோயில்




——    துரை.சுந்தரம்


முன்னுரை:
            இணையத்தில்  அவ்வப்பொழுது வரலாறு, தொல்லியல், கல்வெட்டுகள் தொடர்பான செய்திகளைப் பார்க்கையில் சிலவற்றை என் கணினிப் பண்டாரத்தில் சேர்த்து வைப்பதுண்டு. அது போன்ற ஒரு பதிவை இன்று காண நேர்ந்தது.  சிதைவுகளில் சிக்குண்டு கிடக்கும் சீர்காழிக் கோயில் ஒன்றைப் பற்றிக் கடம்பூர் விஜய் என்பவர் பதிவிட்டிருந்தார்.   கோயிலின் சிதைந்த பகுதிகள்,  கருவறையில் இருக்கை (பீடம்)  ஏதுமின்றி  எழுந்தருளியிருக்கும் இலிங்கத்திருமேனி, சில கல்வெட்டுகள் என நலிந்துவிட்டிருக்கும் சிவன் கோயிலின் தோற்றங்கள்.  மனம் வருந்தியது. 

கோயிலின் அழிவு நிலைத் தோற்றங்கள்


            கோயில், நாகை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தைச் சேர்ந்த புதுத்துறை என்னும் ஊரில் அமைந்துள்ளது. 

கல்வெட்டுகளின்  படங்கள்  ஓரளவு தெளிவாக இருந்தன;  அவற்றின்  பாடங்கள்   கீழுள்ளவாறு:
படம்-1

1    . . . . (மன்)ற பாழ்  . . .  மாவும் விக்கிரம சோழ நல்லூற் கட்டளையில் 
2    வெள்ளான்பற்று முன்பு ஒட்டுக்கொள்(ளா) . . . . ற் பாழிலுமுவற்பாழிலு      மன்ற பாழிலு[ம்]
3     வாய்க்காலுக்கு வடக்கு . . . . . .   சிவபாதசேகரநல்லூர்.... [நீ]க்கி


படம்-2  

1   . . . . .   வதிக்குக் கிழக்கு மதுராந்தக (வா)ய்க்காலுக்கு  வடக்கு 
2     . . . ழிலும் ஆறிடு படுகையிலும் பயிற்(கொ). . . வருகிற நிலத்திலே        (புன்செய்)
3    [நீ]க்கி  இதன் கிழக்கு (காட்சி)  பங்கு  இறையிலி  . . . நிலம் . .  விக்கிரம
      சோழ .


படம்-3

1    லூற் கட்டளையில்   நாங்கூர் வதிக்கு கிழக்கும் மதுராந்தக       வாய்க்காலுக்கு 
2    வெள்ளான் பற்றில் புன்செய் . . . . . க்கு       ஒட்டுப்படி காசு நா(லே)
3     லுக்குத் தெற்கு . . . . . .   சதிரத்து  தன்(மி) . . . . திப்புற இறை[யிலி]


படம்-4

1     கிழக்கு மதுராந்தக வாய்க்காலுக்கு வடக்கு (ந்)
2     க்கு ஒட்டுப்படி காசு நாலேகாலுங்  
3      . . .  திப்புற இறையிலி . . . . இதில் வடக்கடை[ய]


படம்-5

1    லூற் கட்டளையில் நாங்கூர் வதிக்(கு)  கிழக். . .. 
2    வெள்ளான் பற்றில் புன்செய் . . .  க்கு
3    லுக்குத் தெற்கு . . . . சதிரத்து . . . . .


படம்-6

1     [வ]டக்கு நாலாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து மேற்க[டை]
2   . . . . ங் கீழைப் பற்றத்திலுஞ் சாத்தன் குடி(யி) . . . .    (தி)ருக்குருகா(வூ)
3    (வ)டக்கடைய . . . .    றின கா . . .   மறு. . . . . .  குந்தவை 


கல்வெட்டுச் செய்திகள் - விளக்கம்: 
            துண்டு துண்டாகக் கிடைத்த கல்வெட்டு வரிகளிலிருந்து பெறப்படும்  செய்திகளாவன:  கல்வெட்டுகள் அமைந்துள்ள புதுத்துறைச் சிவன் கோயிலுக்கு   நிலங்கள் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.   கோயிலின் பெயரோ, இறைவனின் பெயரோ இந்தத் துண்டுக்கல்வெட்டுகளில் காணப்படவில்லை.  கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் யாவும் விளைவுக்கேற்ற நல்ல நீர் நிலங்களாக இருக்கவேண்டும் என்று கருதலாம். காரணம்,  கொடை நிலங்கள் ஆற்றுப்படுகையில் அமைந்திருந்தன என்று “ஆறிடு படுகை”   என்னும் சொல் குறிக்கிறது.  புன்செய் நிலம்,  பாழ் நிலம் (தரிசு நிலம்)  ஆகியனவற்றை நீக்கியமை பற்றிய குறிப்பு கல்வெட்டில் வருகிறது.   மேலும், மதுராந்தக வாய்க்கால்,  நாங்கூர் வதி (வதி=வாய்க்கால்) ஆகிய நீர்க்கால்களை ஒட்டிய நிலங்கள் என்னும் குறிப்பும் கல்வெட்டில் உள்ளது. 

            கொடை நிலம்,  விக்கிரமசோழ நல்லூர் கட்டளையில் இருந்து தெரிவு செய்யப்பட்டமை தெரிகிறது. கட்டளை என்பது, (விளைச்சல் வருவாய் அடிப்படையில்) தரம் பிரித்த நிலங்களைக் குறிக்கும்.  சிவபாத சேகர நல்லூர் பற்றிய குறிப்பும் உள்ளது. ”நல்லூர்”  என்னும் பெயருள்ள ஊர்கள் அனைத்தும், அரசன்,  தன்னுடைய சிறப்பு நிதியை ஒதுக்கி,  வேளாண்மையில் பின் தங்கிய ஊர்ப்பகுதிகளை வளப்படுத்தி, அரசனின் பெயரையோ, அரசியர் பெயரையோ இட்டு  உருவாக்கிய ஊர்களே. அவ்வகையில் இங்குள்ள கல்வெட்டில்,  விக்கிரமசோழநல்லூர்சிவபாதசேகரநல்லூர்  ஆகிய ஊர்கள் குறிப்பிடப்பெறுகின்றன. இவற்றில், விக்கிரம சோழ நல்லூர்,  மேற்படி புதுத்துறையின் பழம்பெயராகவே இருக்கக்கூடும். 

            அடுத்து, ஊர்களில் ஓடுகின்ற  வாய்க்கால்களுக்கு அரச குடும்பத்தினர் பெயர் இடுவது வழக்கம். அவ்வகையில், மதுராந்தக வாய்க்கால் என்னும் பெயர் இங்குள்ள கல்வெட்டில் வருகின்றது.   மதுராந்தகன்,  இராசராசனுக்கு முன் ஆட்சி செய்த உத்தம சோழனைக் குறிக்கும் பெயராகலாம். கல்வெட்டில் வருகின்ற குந்தவை பெயரும்   இவ்வூர்ப் பகுதியிலிருந்த ஒரு வாய்க்காலைக் குறிப்பதாகலாம். 

            கொடை நிலத்துக்கு  வரி நீக்கம் அளிக்கப்பட்டதை “இறையிலி”  என்னும் தொடர் சுட்டுகிறது.  அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒப்பந்த வரிகள் சில “ஒட்டு”   என வழங்கப்பட்டன.  அவ்வகை “ஒட்டுப்படி”  செலுத்தவேண்டிய நாலே கால் காசு வரி நீக்கப்பட்டதையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

            வேளாண் நிலம்,  நீர்ப்பாசனத்துக்கு ஏதுவாகச் சிறு சிறு சதுரப் பகுதிகளாகப்  பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றை இனம் காண எண்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இதனை, “நாலாஞ்சதிரம்”   என்ற தொடரால் அறியலாம்.  வதி, வாய்க்கால் என்னும் பெயரில் அமைந்த பெரு வாய்க்கால்களை அடுத்துப் பயிர் வளர்க்கும் சதிரம் என்னும் வயல் கூற்றை ஒட்டி அமைக்கப்பட்ட சிறிய கிளை நீர்க் கால்கள்  ”கண்ணாறு”  என அழைக்கப்பட்டன.  இவையும் எண்ணிக்கை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டன.  கல்வெட்டில், “நாலாங்கண்ணாறு”   என வருவதைக் காண்க. 

            கல்வெட்டில்,  திருக்குருகாவூர்  குறிப்பிடப்படுகிறது.  கொடை நிலம் அமைந்த பகுதி அல்லது வாய்க்கால்கள் அமைந்த பகுதி என்னும் வகையில் இவ்வூர் குறிப்பிடப்படுகிறது.  திருக்குருகாவூர்,  திருவாலி நாடு என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது. விக்கிரம சோழ நல்லூரும் இதே திருவாலி நாட்டில் அமைந்திருந்தது. திருவாலி நாட்டை ஒட்டித் திருக்கழுமல  நாடு அமைந்திருந்தது. திருக்கழுமலம் என்பது சீர்காழியின் பழம்பெயர்திருக்கழுமல நாடு, திருவாலி நாடு  ஆகியன சோழர் கால நாட்டுப்பிரிவுகள் ஆகும். (பார்வை நூல் : இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்-கி.பி.800-1300  -   தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.)

கல்வெட்டின் காலம்:
            உத்தம சோழன் (கல்வெட்டில் மதுராந்தகன்), இராசராசசோழன் (கல்வெட்டில் சிவபாதசேகரன்),  விக்கிரம சோழன் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இவர்களில் விக்கிரமசோழனே  பின்னவன். இவன் முதலாம் குலோத்துங்க சோழனின் மகன் ஆவான். இவனது ஆட்சிக்காலம்  கி.பி. 1118-1135.  விக்கிரமசோழனின் பெயரால் அமைந்த விக்கிரம சோழ நல்லூர் கல்வெட்டில் குறிக்கப்படுவதால்,  கல்வெட்டு அமைந்த ஊரும் கோயிலும்  அவன் காலத்திலிருந்தே இருந்துள்ளமை புலப்படும். அரசன் பெயரும் அரசனின் ஆட்சியாண்டும் குறிக்கப்பெறும் வேறு கல்வெட்டுகள் கிடைக்கும் வரை கல்வெட்டின் காலம்  விக்கிரம சோழனின் ஆட்சிக்காலத்துக்குப்  பிந்தையதாகக் கணக்கிட இயலாது. எனவே, கல்வெட்டின் காலம் விக்கிரம சோழனின் ஆட்சிக்காலம் என்றே கொள்ளலாம். அதாவது, கல்வெட்டு, கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்னும் முடிவுக்கு வரலாம். கல்வெட்டின் எழுத்தமைதியும்,  இந்தக் காலகட்டத்தை ஒட்டியதாக அமைந்துள்ளது.  

முடிவுரை:
            புதுத்துறை ஊரின் நாட்டார் பெருமக்களும்,  அறநிலையத்துறையினரும், தொல்லியல் துறையினரும் இணைந்து இக்கோயில் புத்தாக்கம்  பெற்றிட வழிவகை செய்யவேண்டும் என விழைவோம்.  கடம்பூர் விஜய் குறிப்பிடுவதுபோல்,   சிவனின் இடுக்கண் களைய நிதியுடையோர் களம் இறங்குவார்களாக.




தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.





No comments:

Post a Comment