Friday, March 8, 2019

8ம் நூற்றாண்டில் வடவிலங்கை அரசு

——    ப. முகுந்தன்



முன்னுரை:
            பொதுயுகத்திற்கு முற்காலத்திலிருந்தே இலங்கையின் வடபகுதி நாகநாடு/ நாகதீபம்/ உத்தர தேசம் என்று வழங்கப்பட்டு வந்தது. அப்பகுதியை ஆண்டவர்கள் சிலநேரங்களில் அனுராதபுர அரசைக் கைப்பற்றி ஆண்டது பற்றி மகாவம்சம், சூளவம்சம் போன்றவற்றிலிருந்து அறியலாம். இக்கட்டுரையில் நாகநாட்டின் பகுதியான கதிரமலை சிங்கைநகரை ஆண்ட உக்கிரசிங்கன், வாலசிங்கன்  பற்றிப் பார்க்கலாம்.

வடவிலங்கைத் தகவல்கள்:
            பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட யாழ்ப்பாண அரசின் வரலாற்றை பொதுவாகக் கட்டுக்கதை என்பதே பல வரலாற்று அறிஞர்களின் கருத்து. யாழ்ப்பாண வைபவமாலை  (18ம் நூற்றாண்டு),   வையாபாடல் (16ம் நூற்றாண்டு),  கைலாயமாலை(16ம் நூற்றாண்டு அளவில்)  என்பன கூறும் உக்கிரசிங்கன் கதையை இங்கு ஆராய்வோம்.

கைலாயமாலை கூறியது[1] :
            சோழன் மகளொருத்தி கடற்கரை வந்து தீர்த்தமாடும்போது முருகன் அடியவனான கதிரமலை  நாட்டரசன் அவளைக் கண்டு அவளை மணம்புரிந்து நரசிங்கன் எனும் மகனையும் ஒரு மகளையும் பெற்றான்.. நரசிங்கன் கதிரமலையை ஆளும்போது யாழ்ப்பாணன் என்பவன் கவிதை பாட நரசிங்கன் மகிழ்ந்து ஒரு நகரத்தைப் பரிசாக வழங்கினான். அந்த நகரத்தை யாழ்ப்பாணம் எனப் பெயர் சூட்டி யாழ்ப்பாணன் ஆண்டு வந்தான்.

வையாபாடல்[2] கூறியது:
            அயோத்தி மன்னன் குலக்கேதுவின் மைத்துனன் உக்கிரசோழனின் மகன் சிங்ககேது , மகள் மாருதப்புரவை . மாருதப்புரவை குதிரை முகம் மாற இலங்கை கீரிமலை வந்து நீராட குதிரைமுகம் மறைந்ததனால் மாவிட்டபுரமென்று பெயர் சூட்டி இறைவனை வணங்கினாள். கதிரயம்பதியில் சென்று அரன் மகவை (முருகன்) வணங்கி உக்கிரமசிங்கசேனனை மணந்தாள். அதன்பின் உக்கிரமசிங்கசேனன் கதிரயம்பதியை விட்டு அடங்காப்பற்றேகி அங்கே வாவெட்டி மலையில் மண்டபம் கட்டி அரசாண்டான்.

            அவனுக்குப்பின் ஆண்ட சிங்கமன்னவன் தன் மாமனான சிங்ககேதுவிடம் தூதர்களை அனுப்பிப் பெண்கேட்க அவனும் அறுபது வன்னியர்களுடன் தனது பெண் சமதூதியை அனுப்பிவைத்தான்.

 யாழ்ப்பாண வைபவமாலை[3] கூறியது:
            சாலிவாகன சகாத்தம் 717-ல் உக்கிரசிங்கன் கதிரைமலையில் அரசாண்டு வந்தான்.

            திசையுக்கிரசோழன் மகள் மாருதப்பிரவல்லி தனது வியாதியை மாற்றத் தீர்த்தமாடி வருகையில் சாந்தலிங்கம் என்ற சன்னியாசி கூறியதன் படி இலங்கையின் வடமுனையில் உள்ள கீரிமலைத் தீர்த்தத்திலே நீராடி குதிரை முகத்தை மாற்றினால்.

            அங்கே உக்கிரசிங்கன் மாருதப்பிரவல்லியைக் கண்டு மயங்கினான். மாருதப்பிரவல்லி அங்கே மாவிட்டபுரம் என்று ஒரு கந்தசுவாமி கோவில் கட்டத்தொடங்கினாள்.

            கோவில் திருப்பணி முடிய உக்கிரசிங்கன் மற்றும் மாருதப்பிரவல்லி கதிரமலை சென்று விவாகம் முடித்தனர்.

            இதன்பின் சிறிது காலத்தில் உக்கிரசிங்கன் கதிரமலையிலிருந்து செங்கடகநகரிற்கு( சிங்கை நகர்) இராசதானியை மாற்றி அரசாளும்போது நரசிங்கராசன் எனும் மகனும் சண்பகவதி எனும் மகளும் பிறந்தார்கள்.

            அவனுக்குப்பின் நரசிங்கராசன் என்னும் வாலசிங்கன் செயதுங்கவரராசசிங்கம் என்னும் பட்டத்துடன் அரசாண்டான்.

            சோழநாட்டிலிருந்து வந்த இரண்டுகண்ணும் குருடான கவிவீரராகவன் என்னும் யாழ்ப்பாணன் என்பவன்  வாலசிங்கன் பேரிற் பிரபந்தம் பாடி யாழ் வாசித்துப் பாடியமையால் மகிழ்ந்த அரசன் இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் நாட்டைக் கொடுத்தான்.

            யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டு ஆண்டான்.

 மேற்குறிப்பிட்ட நூல்கள் கூறுவதைப் பின்வருமாறு  தொகுக்கலாம்:
            அயோத்தி மன்னன் குலக்கேதுவின் மைத்துனன் சோழநாட்டு மன்னன் திசையுக்கிரசோழன். அவன் மகன் சிங்ககேது , மகள் மாருதப்புரவை ( மாருதப்பிரவல்லி) .

            சாலிவாகன சகாத்தம் 717-ல் (பொ.பி.795)  உக்கிரசிங்கன் என்பவன் கதிரைமலையில் அரசாண்டு வந்தான். தன் நோய் நீங்கக் கீரிமலை வந்த மாருதப்புரவை  மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலைக் கட்டினாள். உக்கிரசிங்கன் – மாருதப்பிரவை மணம் செய்தனர். பின்னர் உக்கிரசிங்கன்  கதிரமலையை விட்டு அடங்காப்பற்றேகி / செங்கடகநகரிற்கு( சிங்கை நகர்) சென்று அங்கே வாவெட்டி மலையில் மண்டபம் கட்டி அரசாண்டான்.

            அவர்களுக்கு நரசிங்கனும் (சிங்கமன்னவன்) செண்பகவதியும் பிறந்தனர்.

            உக்கிரசிங்கனுக்குப்பின் நரசிங்கராசன் என்னும் வாலசிங்கன் செயதுங்கவரராசசிங்கம் என்னும் பட்டத்துடன் அரசாண்டான்.

            நரசிங்கராசன் தனது மாமனான சிங்ககேதுவிடம் தூதர்களை அனுப்பிப் பெண்கேட்க அவனும் அறுபது வன்னியர்களுடன் தனது பெண் சமதூதியை அனுப்பிவைத்தான்.

            சோழநாட்டிலிருந்து வந்த இரண்டுகண்ணும் குருடான கவிவீரராகவன் என்னும் யாழ்ப்பாணன் என்பவன்  வாலசிங்கன் பேரிற் பிரபந்தம் பாடி யாழ் வாசித்துப் பாடியமையால் மகிழ்ந்த அரசன் இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் நாட்டைக் கொடுத்தான்.

            யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டு ஆண்டான்.

இதுவரை வடவிலங்கையின் புராதன நூல்கள் கூறிய கருத்துக்களைப் பார்த்தோம். தற்போது கிழக்கிலங்கைச் செப்பேடுகள் சிலவற்றைப் பார்ப்போம்.

கிழக்கிலங்கைத் தகவல்கள்:
            கிழக்கிலங்கைச் செப்பேடுகள் பற்றிய விபரம் அருள் செல்வநாயகம் எழுதிய சீர்பாதகுல வரலாறு (http://www.noolaham.org/wiki/index.php/சீர்பாதகுல_வரலாறு)

            மற்றும் வித்துவான் F. X, C. நடராசா எழுதிய மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும்(http://noolaham.net/project/46/4575/4575.pdf) என்னும் நூல்களிலிருந்து பெறப்பட்டது. இச் செப்பேடுகளில் உள்ள தகவல்கள் எப்போது எழுதப்பட்டன என்பதற்குச் சரியான ஆதாரங்கள் கிடைக்காவிடினும், அவற்றில் சில சுவையான விடையங்கள் காணப்படுகின்றன. கண்டி , இந்தியா என்னும் சொற்களின் மூலம் இவை 18ம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது..

வீரர்முனை செப்பேடு[4] கூறுவது:
            கலிங்க நாட்டு உக்கிரசிங்கன் கண்டியை ஆண்டான். மருதப்புரவீகவில்லியை அவன் மணந்து பெற்ற மகன்  வாலசிங்கன்.

            அவன் குமராங்குசன் என்ற சோழனின் மகள் சீர்பாததேவியை மணந்தான்.

துறைநீலாவணைச் செப்பேடு[5] கூறுவது:
            சற்சன சோழன் மகளான மாருதப்புரவீக வல்லி, குதிரை முகம் மாற, வடிவேற் பெருமான் வீற்றிருக்கும் நாகநாட்டில் உள்ள கதிரை எனும் இடத்திற்குச் செல்ல விரும்பி இலங்கை வந்து கீரிமலை வந்து குதிரை முகம் மறைய மகிழ்ந்து தந்தைக்குத் திருமுகம் அனுப்பி கந்தன் பொற்சிலையைக் கேட்டாள். அது வந்து இறங்கிய கச்சாத் துறை, காங்கேசன் துறை எனப்பட்டது. கோவில் கட்டி மாவிட்டபுரம் எனப் பெயர் வைத்துத் தாய்நாடு போகவிருந்தபோது, உக்கிரவீரசிங்கன் அங்குவந்து அவளை மணந்து வாலசிங்கம் எனும் மகனைப் பெற்றனர். பின்னர் வாலசிங்கன் அரசாளும்போது சோழ மன்னனின் மகள் சீர்பாத தேவியை மணந்தான்..

            இங்கே கூறப்பட்ட கதைகள் அனைத்திலும் காணப்பட்ட பொதுத் தன்மையைப் பார்த்தால், கதிரமலையை ஆண்ட உக்கிரசிங்கன், அவன் மனைவி மாருதப்பிரவை ஒரு சோழனின் மகள். அவர்களின் மகன் வாலசிங்கன்.. அவன் மணந்ததும் ஒரு சோழன் மகள் சமதூதி/சீர்பாததேவி

            மாருதப்பிரவையின் தந்தை பெயர் திசையுக்கிர சோழன் / சற்சன சோழன். யாழ்ப்பாண வைபவ மாலை கூறும் சாலிவாகன சகாத்தம் 717-ற்குப் பின் 8ம் ஆண்டு (கி.பி.803) காலப்பகுதியில் சோழர் வரலாறு தெளிவாக இல்லை.. வாலசிங்கன் மணந்த சோழ இளவரசியின் தந்தையின் பெயர் சிங்ககேது. வீரர்முனைச் செப்பேட்டின்படி அவன் பெயர் குமராங்குசன். வையாபாடலின் படி அச்சோழன் மாருதப்பிரவையின் சகோதரன்.. இக்காலப்பகுதியில் குமராங்குசன் என்ற பெயரில் ஒரு சோழன் ஆண்டிருக்கின்றான்.

9ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் நிலை:
            9ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் சோழர்கள் சிற்றரசர்களாகவே ஆண்டுவந்தனர். பொ.பி 850ம் ஆண்டளவில் விஜயாலய சோழன் ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற திருப்புறம்பியம் போரில் (888) இவனும் இவன் மகன் ஆதித்தனும் வகித்த பங்கு சோழரின் எழுச்சிக்கு உதவியது. விஜயாலயன் முத்தரையர்களின் கையில் இருந்த தஞ்சையைக் கைப்பற்றிக்கொண்டான்.

            தந்திவர்மன் (796-846 ) எனும் பல்லவ மன்னன் காலத்தில் முதலாம் வரகுண பாண்டியன்(792-835)  பல்லவர்க்குக் கீழ்ப்பட்டிருந்த சோழ நாட்டையும் தொண்டை நாட்டின் பெண்ணையாறுவரையான பகுதியையும் கைப்பற்றியிருந்தான்(780). வரகுணனுக்குப் பின் அவன் மகன் வல்லபன்(835-862) அரசாண்டான். அக்காலப் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (பொ.பி 843-866). பொ.பி 850 அளவில் நடைபெற்ற தெள்ளாற்றுப் போரினால் நந்திவர்மன் சோழநாட்டை மீண்டும் கைப்பற்றினான்.

            முதலாம் வரகுணன் காலத்தில் களக்குடி நாட்டு கரவந்தபுரம் பகுதியில் உக்கிரன் என்பவனை வரகுணன் முறியடித்ததாக ஒரு கதை உண்டு. அவனும் திசைஉக்கிரசோழன் எனக் குறிப்பிடப்படுபவனும் வாழ்ந்த நிலப்பகுதி (பொ.பி.803)  ஒன்றானாலும் அவர்கள் இருவரும் ஒன்றா என்பது தெரியவில்லை.

வேலூர்பாளையப் பட்டயம்:
            மூன்றாம் நந்திவர்மனின் ஆறாம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்ட வேலூர்பாளையப் பட்டயத்தில் (South Indian Inscriptions, Vol. II, pp. 507-510) புழல் கோட்டம்  ஞாயிறு நாடு திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரைச் சிவன்கோவிலுக்குத் தானமாக வழங்கியமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தானத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டவன் ”சோழமகாராஜா குமராங்குசன்” எனக் குறிக்கப்படுகின்றான். இதன்படி பொ.பி 848 அளவில் சோழ நாட்டை ஆண்டவன் குமராங்குசன். பல்லவர்களால் சோழமகாராஜா எனக் கூறப்படுமளவுக்கு இருந்திருக்கின்றான். ( வரகுணனையும் மகாராஜா என்றே பல்லவர்கள் குறிப்பிட்டுள்ளனர்). இவனுக்குப் பின் விஜயாலயன் (பொ.பி 850) ஆட்சிக்கு வந்தான்.


            வேலூர்பாளையப் பட்டயத்தில்  கூறப்படும் குமராங்குசன் என்பவனும் இலங்கை மூலங்களில் கூறப்படும் குமராங்குசனும் வாழ்ந்த காலம் சமகாலமாயிருப்பதால், இருவரும் ஒன்று எனக் கூறலாம்.

            (சுந்தரமூர்த்தி நாயனார் கூறும் கழற்சிங்கன் என்பவன் மூன்றாம் நந்திவர்மன் என்பது பலரது கருத்து. கழற்சிங்கனுக்குக் கீழ் ஆண்ட குமராங்குசனுக்குச் சிங்ககேது எனப் பெயர் இருந்ததா எனச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

 கரிகாலன் வழிவந்த சோழனாகக் கூறும் புண்ணியகுமாரனின் மேலப்பாடு செப்பேட்டில்(EPIGRAPHIA INDICA VOL XI பக்.337) சிங்க இலச்சினை காணப்படுவதையும் இங்கே சிந்தித்துப்பார்க்கவேண்டும். )

            அக்காலச் சோழர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலிருந்து ஆண்டிருக்கச் சாத்தியங்கள் உள்ளன . பல்லவர் சார்பான சோழர் தொண்டை மண்டல ஞாயிறு நாட்டுப் பகுதியிலும், பாண்டியர் சார்பான சோழர் பாண்டியர் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் ஆண்டிருக்கலாம்.

            கிழக்கிலங்கையில் எழுந்த செப்பேடுகள் பிற்காலத்தில் ( 16-17ம் நூற்றாண்டு) தென்னிந்தியாவில் இருந்த ஓர் இளவரசியைக் கண்டி இராசதானிக்கு மணமுடிக்கக் கூட்டிவரும்போது அவளுடன் வந்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட வீரமுனைப் பிரதேசம் மற்றும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் கோயிலின் வரலாற்றைப் பழைய கதையொன்றுடன் இணைக்கும் போக்கில் எழுதப்பட்டதாகத் தோன்றுகின்றது. இதே போல் கண்ணகி கதையையும் வெடியரசன் கதையையும் இணைத்து கண்ணகிக்குக் காற்சிலம்புக்கு மாணிக்கம் எடுக்க வந்த மீகாமனுக்கும் வெடியரசனுக்கும் சண்டைநடந்தாகக் கூறும் கண்ணகி வழக்குரை காவியம் தோற்றம்பெற்றது.

            அதேபோல பொ.பி 13 ம் நூற்றாண்டளவில் வாழ்ந்ததாகக் கருதப்படும் அந்தக் கவி வீரராகவன் கதையும் இங்கே யாழ்ப்பாணன் கதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வடவிலங்கை, கிழக்கிலங்கை, தென்னிந்திய ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது பின்வருமாறு முடிவுசெய்யலாம்.

            பொ.பி 810 அளவில் இருந்த சோழன் திசையுக்கிர சோழன் / சற்சன சோழன் . அவன் மகள் மாருதப்புரவீகவல்லி. பொ.பி 795 முதல் கதிரமலையை ஆண்ட உக்கிரசிங்கன் என்பவன் அவளை மணந்தான். பின்னர் கதிரமலையை விட்டு சிங்கைநகர்/வாவெட்டி மலை சென்று அரசாண்டனர். அவர்களுக்கு வாலசிங்கன்(நரசிங்கன்) , செண்பகவதியும் பிறந்தனர். உக்கிரசிங்கனுக்குப் பின் வாலசிங்கன் செயதுங்கவரராசசிங்கம் என்னும் பட்டத்துடன் அரசாண்டான். அவன் தனது தாயின் சகோதரனான குமராங்குசன்/சிங்ககேதுவிடம் தூதர்களை அனுப்பிப் பெண்கேட்க அவன் தனது பெண் சமதூதியை அனுப்பிவைத்தான்.

            யாழ்ப்பாணன் என்பவன்  வாலசிங்கன் பேரிற் பிரபந்தம் பாடி யாழ் வாசித்துப் பாடியமையால் மகிழ்ந்த அரசன் இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் நாட்டைக் கொடுத்தான்.

            யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டு ஆண்டான்.

            இதிலிருந்து, பொ.பி 850 அளவில் சிங்கைநகர் என்னும் அரசு வாலசிங்கன் என்னும் செயதுங்கவரராசசிங்கம் என்பவனால் ஆளப்பட்டுவந்து எனவும்  அவன் காலத்தில் யாழ்ப்பாண நகர் தோற்றம்பெற்றது என்பதை அறியலாம்.

            இலங்கையின் சிங்கள அரச வம்ச வரலாற்றைக் கூறும் நூலான சூளவம்சம் (Chapter 48) மன்னன் இரண்டாம் மகிந்தன் காலத்தில் (பொ.பி 787 – 807)  நடைபெற்ற இரண்டு வடபிரதேசப் படையெடுப்புப்பற்றிக் கூறுகின்றது.
முதலாவது படையெடுப்பு : அக்கபோதியின் இறப்பின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட குழப்பநிலையைப் பயன்படுத்தி உத்தர தேசத் (வட பிராந்தியம்) தலைவர்கள் மக்களுடன் சேர்ந்து அதனைத் தமதாக்கிக்கொண்டதோடு திறை கொடுக்கவும் மறுத்தனர். மகிந்தன் படையோடு சென்று அவர்களை அடக்கினான்.
இரண்டாவது.  படையெடுப்பு : சிறிது காலத்தின் பின் மகிந்தன் – தப்புலனுடன் போரிட கலாவாவி நோக்கிச்  சென்றபோது உத்தரதேசத் தலைவர்கள் தலைநகரைக் கைப்பற்றினார்கள். பின்னர் மகிந்தன் அவர்களைத் துரத்திவிட்டான்.

            மேற்கூறப்பட்டவாறு சூளவம்சத்தில் கூறப்படுவதிலிருந்து , தலைநகர் அனுராதபுரத்தைக் கைப்பற்றுமளவுக்கு அக்கால உத்தரப்பிரதேசத் தலைவர்கள் இருந்திருக்கின்றார்கள் எனத் தெரிகின்றது. இது யாழ்ப்பாண வைபவ மாலை கூறும் உக்கிரசேனன் காலப்பகுதியை உறுதிப்படுத்துகின்றது.


உதவிய சான்றுகள்: 
1. கைலாயமாலை கூறுவது
2. வையாபாடல் கூறுவது
3. யாழ்ப்பாண வைபவமாலை கூறுவது
4. வீரர்முனை செப்பேடு
5. துறைநீலாவணைச் செப்பேடு


__________________________________________________________

தொடர்பு: ப. முகுந்தன் (mukunthan@gmail.com)



__________________________________________________________

பிற்சேர்க்கை:
1. கைலாயமாலை கூறுவது:
(முத்துராச கவிராசரின் கைலாயமாலை  http://www.noolaham.net/project/02/101/101.htm)
உதபகுல ராசன் உதயமதி வாசன்
சிதைவின்மனு ராசவம்ச தீரன்-துதையளிகள்

பாடுமலர் ஆத்திபுனை பார்த்திவன்தன் சீர்த்திமுற்றும்
தேடுந் தனிக்கவிதைச் செம்பியர்கோன்- நீடுகரைப்

பொன்னித் துறைவன் புலிக்கொடியன் பூவில்மன்னர்
மன்னனெனுஞ் சோழன் மகளொருத்தி-கன்னிமின்னார்

தேடுங் கடலருவித் தீர்த்தசுத்த நீரகத்துள்
ஆடிப் பிணிதணிப்பத் தானினைந்து-சேடியர்தஞ்

சேவைகளுங் காவலுறு சேனையுமாய் வந்திறங்கிப்
பாவையுறு தீர்த்தம் படிந்ததற்பின்-ஏர்வைபெறு

கங்குலுற எங்குமிகு காவ லரண்பரப்பிச்
சங்கையுறு கூடாரந் தானமைத்து-மங்கை

விரிந்தசப்ர மஞ்சமெத்தை மெல்லணையின் மீதே
பொருந்துதுயி லாயிருக்கும் போது-வரிந்தசிலை

வேடர்குல மாதுபுணர் வேலா யுதகரன்செங்
காடன் புதல்வன் கதிர்காமன்-ஏடவிழுந்

தார்க்கடம்பன் பேர்முருகன் தாமோ தரன்மருகன்
சீர்க்குரவன் தேவர் திரட்கொருவன்- சூர்ப்பகையை

மாற்றுங் குகன்குழகன் வாய்ந்தஅடி யார் துயரை
ஆற்றுங் குமரன் அருளாலே-போற்றுதவர்

வாய்ந்த கதிரைமலை வாழு மடங்கன்முகத்
தாய்ந்த நராகத்(து) அடலேறு-சாய்ந்துகங்குல்

பேரவதன்முன் ஏகியந்தப் போர்வேந்தன் மாமகள்தன்;
காவல் கடந்தவளைக் கைப்பிடித்தே-ஆவலுடன்

கொண்டேகித் தன்பழைய கோலமலை மாமுழைஞ்சில்
வண்டார் குழலை மணம்புணர்ந்(து)-உண்டான

பூவிலநு போகம் பொருந்திப் புலோமசையுங்
காவலனும் போலக் கலந்திடுநாள்-தாவில்மணப்

பூமான் மதிக்கப் புவிமான் மகிழ்ச்சியுறக்
கோமான் மனுவின் குலம்விளங்க-நாமானும்

உன்னிமிகும் ஆசி உரைத்துத் திருத்தமிகு
தன்னிதய சந்தோஷந் தான்பெருக-மன்னுபுவி

மாந்தர்சுக மேவ மனுநீதி யுண்டாக
வேந்தர்கள்தம் நெஞ்சம் மிகநடுங்கப்-பூந்தவிசின்

வேதன்கை நோகவரும் மேலோன் விழிதுயிலப்
போதன்மணி மேனி புளகரும்பச் சோதிபெறு

தேவா லயங்கள் செயும்பூ சனைசிறக்க
மேவுஆலை வில்லி விருதுகட்ட-நாவார்

மறையோர்கள் வேள்விமல்க மாதவங்க ளோங்கக்
குறையாது நன்மாரி கொள்ள-நிறைவாகச்

செந்நெல் விளையச் செகம்செழிக்கச் செல்வமுற
மன்னன் மகள்தன மணிவயிற்றில்-மன்னு

கருவாய்ந்(து) அயனமைத்த கட்டளைகள் திட்ட
உருவாய்ந்து பத்துமதி யொத்துத்-திருவாய்ந்த

திங்கள் முகத்தழகுஞ் செய்யவடி வாலழகும்
துங்கமுறும உச்சிச் சுழியழகும்-பொங்குமணிக்

கண்ணழகும் மூக்கழகுங் காதழகுங் கையழகும்
மண்ணில நராபோல் வடிவழகும்-நண்ணி

வரசிங்க ராயன் மகாராச ராசன்
நரசிங்க ராசனெனும் நாமத்-துரைசிங்கம்

வந்துபிறந் திந்தவள மண்டலமெல் லாம்மதிக்க
இந்துவென வேவளரும் ஏல்வையினிற்-பிந்தியொரு

பெண்பிறந்தாள் அந்தவெழிற் பெண்ணையுமுன் அண்ணலையுங்
கண்போல் வளர்த்துக் கவின்பெறலும்-நண்பாகத்

தந்தையர்க்குந் தாயருக்குஞ் சாற்றுமணம் ஆற்றுவித்த
கந்தனுமை மைந்தன் கருணையினால்-வந்த

இருவருக்கும் நன்முகூர்த்த மிட்டுமகிழ் பூப்பத்
தருவிருக்கு மாலைவடஞ் சாத்தித்-திருவிருக்குஞ்

செய்யமணஞ் செய்து திறல்வேந்தர் போற்றிநிற்பத்
துய்யநவ ரத்னமுடி சூட்டியபின்-பையரவின்

உச்சியினின் றாடும் ஒருவனின் ஆகுமென்ன
மெச்சுக்ர வாளகிரி வெற்புமட்டும்-உச்சிதஞ்சேர்

தன்னாணை செல்லத் தரியலர்கள் தாள்வணங்கப்
பொன்னாட் டரசன் புகழ்குறையப்-பன்னாட்

டரசர் திறையளப்ப அந்தணர்கள் வாழ்த்த
முரசதிரப் பேரி முழங்க-வரிசையுடன்

சங்கமெழுந் தார்ப்பத் தமனியப்பொற் காளாஞ்சி
மங்கையர்க ளேந்தி மருங்கி(ல்)நிற்ப-எங்குமிகு

கட்டியங்க ளார்ப்பக் கனஅரி யாசனத்தில்
இட்டமெத்தை மீதில் இனிதிருந்து-திட்டமுடன்

நங்கோ னிராமன் நடத்தியுல காண்டதுபோற்
செங்கோ லரசு செலுத்தும்நாள்-மங்காத

பாவலர்கள் வேந்தன் பகருமி யாழ்ப்பாணன்
காவலன்தன் மீது கவிதைசொல்லி- நாவலர்முன்

ஆனகவி யாமின் அமைவுறவா சித்திலும்
மானபரன் சிந்தை மகிழ்வாகிச்-சோனைக்

கருமுகில் நேருங் கரன்பரிசி லாக
வருநகர மொன்றை வழங்கத்-தருநகரம்

அன்றுமுதல் யாழ்ப்பாணம் ஆன பெரும்பெயராய்
நின்ற பதியில் நெடுங்காலம்-வென்றிப்

புவிராசன் போலப் புகழினுட னாண்ட
கவிராசன் காலங் கழிய-அவிர்கிரண

சந்திரனில் லாதவெழிற் றாரகைபோல் வானரசாள்
இந்திரனில் லாத இமையவர்போல்-விந்தை

கரைசேரிம் மாநகர்கோர் காவலரண் செய்யுந்
தரையரச னின்றித் தளம்ப-விரைசேருந்
__________________________________________________________

2. வையாபாடல் கூறுவது:
(வையாபாடல் - பதிப்பாசிரியர் க. செ. நடராசா http://www.noolaham.net/project/02/151/151.htm)
அரசளித் தவனங் கிருந்திடு நாளி
லயோத்தி மன்னன் குலக்கேதுக்
குரியமைத் துனனவ் வுக்கிர சோழ
னுகந்துபெற் றிடுமக வானோர்
மரபினுக் குரிய சிங்ககே தென்ற
மைந்தனு மாமுகந் தரித்தங்
சூரனொடு முதித்தாள் மாருதப் பிரவை
யுவமையில் வல்லியென் பவளும்

கூடிய குதிரை முகமது மாறக்
குணமுள் தீர்த்தங்கள் யாவும்
தேடியே யிலங்கை நகரினிற் சென்று
திறமுள கீரிமா மலையி
லாடினள் தீர்த்த மம்முக மகன்ற
தன்னதால் மாவிட்ட புரமென்
றேடரு நதியும் நிகரில வென்றே
யிறைஞ்சின ளிறைவனை நினைந்தே

பொன்னகர் நிகருங் கதிரையம் பதியிற்
போயரன் மகவினை வணங்கிப்
பின்னருக் கிரம சிங்கசே னன்றன்
பெண்ணென விருந்தன ளதற்பின்
மன்னவ னடங்காப் பற்றினி லேகி
மாநகர் வாவெட்டி மலையிற்
றன்னிக ரற்ற மண்டப மியற்றித்
தன்னர சியற்றின னிருந்தான்

அப்பொழு தன்னான் றனக்கொரு மைந்த
னரியினின் முனமுமோர் வாலு
மொப்பனை சொல்லற் கரியதா யுதித்தா
னுலகனில் விபீஷண னந்நாள்
செப்புதற் கரிய வைகுந்த பதவி
சேர்ந்திட நினைத்தவன் றன்னை
யெப்புவி தனக்கு மிறைவனா யிருத்தி
யென்றினி திருத்தினா னியல்பால்

மன்னவ னிராமன் கொடுத்திடு முடியும்
மந்திர வாளுமெவ் வுலகுந்
தன்னடி படுத்துஞ் சக்கர மொன்று
தன்கையி லிடுகணை யாழி
மின்னிக ரிடையாள் மோகினி யென்னும்
வீரமா காளிமற் றுன்னித்
துன்னலர் தம்மைச் செகுத்திடு மென்றே
தொகைபெறக் கொடுத்தனன் மாதோ

மானகர் தன்னை யாண்டிடு சிங்க
மன்னவன் தூதரை யழைத்துத்
தேனலர் மாலைப் புயத்தவன் சிங்க
கேதுவென் பானிட மணுகி
யான்மண முடிக்க விசைத்திடு நீவி
ரென்னலு மடிமுறை பணிந்து
கானகங் கங்கை நீங்கியே மதுரைக்
காவலன் றனக்கிவை யுரைத்தார்

கேட்டு மாமது ராபுரி மன்னவன் கிளர்ந்த
தாட்ட கம்பெறு வன்னியர் தரணிப குலத்தோர்
காட்ட கம்பெறு வாள்கட கஞ்சுழல் கையார்
கூட்ட மாயினா ரறுபது பேரையுங் குறித்தான்

குறித்து நீவிரிம் மாதினைக் கொண்டசென் றிலங்கைப்
புறத்து மாநக ராளுவோற் குள்ளன புகன்று
மறத்த ராமென மற்றவற் காயிரங் கதிரோன்
திறத்து ளோர்புகழ் சந்திரன் றனைவிரு தீந்தான்

ஈந்த பின்னவட் கிணையிலா வியந்திரத் திகிரி
வாய்ந்த வெண்மைசேர் குடைமுதல் வாகன முதவி
யேந்த லாமென வேகுமி னென்றலு மிறைஞ்சிக்
கூந்தல் சேர்முடி யழகினள் குதிரைமேற் கொண்டாள்

குதிரை மீதினி லேறியே கொங்கர்கோன் புதல்வி
மதியி னாள்சம தூதியை மன்னவன் றனக்கு
விதிய தாய்மண முடித்தபின் விளங்கிடு மடங்காப்
பதியை நீரர சாண்மெனப் பார்த்திபன் புகன்றான்
__________________________________________________________

3. யாழ்ப்பாண வைபவமாலை கூறுவது:
(யாழ்ப்பாண வைபவ மாலை. மயில்வாகனப் புலவர் (மூலம்), குல.சபாநாதன் (பதிப்பாசிரியர்) http://noolaham.net/project/03/256/256.html)
சாலிவாகன சகாத்தம் 717-ல் (கி.பி.795) விஜயராச னின் சகோதரன் மரபிற் பிறந்த உக்கிரசிங்கன் என்னும் அரசன் வடதிசையிலிருந்து பெருந்திரளான சேனைகளைக் கொண்டு வந்து போராடிச் சில தலைமுறையாய் இழந்து போனஇவ்விலங்கை அரசாட்சியில் அரை வாசி வரைக்கும் பிடித்துக் கதிரை மலையிலிருந்து அரசாண்டு வந்தான். தென் னாடுகளை வேற்றரசன் ஆண்டுவந்தான்.
இவ்வுக்கிரசிங்க மகாராசனுக்குச் சிங்கத்தையொத்த முகமும் மானிட தேகமுமிருந்தன. இவன் நகுலேசர் கோவி லைத் தரிசிக்கக் கீரிமலைச் சாரலில் வந்திறங்கி, முற்காலத்திலே சோழராசன் தான் தீர்த்தமாட வந்திறங்கியிருக்கும் காலத்திலே மாளிகை கட்டுவித்திருந்த வளவர்கோன் பள்ளம் என்னும் இடத்திலே பாளயமிட்டிருந்தான்.
தொண்டைமான் வரவு
அவன் அவ்விடத்தில் வந்திருப்பதையும், கரணவாய், வெள்ளப்பரவை முதலிய இடங்களில் நல்லுப்புப் படுஞ்செய்தியையும் தொண்டை நாட்டை அரசாண்ட தொண்டைமான் என்னும் அரசன் கேள்விப்பட்டுப் பரிவா ரங்களுடன் கீரிமலைச் சாரலில் வந்திறங்கிச் சந்தித்து, அந் நாட்டில் விளையும் உப்பிலே தனக்கு வேண்டியவளவு வருடந்தோறும் விலைக்குக் கொடுக்கவும், உப்புப் படுமிடத்துக்குச் சமீபத்திலே மரக்கலங்களைக் கொண்டுபோய் உப்பேற்ற வும், மாரி காலங்களில் மரக்கலங்களை ஒதுக்கிவிட்டு நிற்க வும் வசதியாக வடகடலில் ஓர் ஆறு வெட்டுவித்துக்கொள்ள வும் உத்திரவு கேட்டான். உக்கிரசிங்க மகாராசன் உத்தரவு கொடுக்கத் தொண்டைமான் அங்கிருந்த சிற்றாற்றை மரக்க லங்கள் ஒடத்தக்க ஆழமும் விசாலமும் உள்ளதாகவும் ஒதுக் கிடமுள்ளதாகவும் வெட்டுவித்துத் தன்னூருக்கு மீண்டான். அது முதல் இதுவரைக்கும் அவ்வாறு தொண்டைமானாறு என்று அழைக்கப்படுகின்றது.
வன்னியர் அடக்கம்
உக்கிரசிங்க மகாராசன் அதன்பின் கதிரை மலைக்குத் திரும்பினான். அவன் வன்னி மார்க்கமாகச் செல்லுகையில் வன்னியர் ஏழு பேரும் எதிர்கொண்டு வந்து, தாங்கள் வன்னி நாடுகளைத் திறைகொடுத்து ஆள உத்தரவு கேட்டனர். அரசன் தன்னிராச்சியமெங்கும் தன் ஆணையே செல்லவுந் தனக்கு வரவேண்டிய திறையைக் கோணேசர் கோவிலுக்குக் கொடுக்கவும் உடன்பாடு பண்ணுவித்துக் கொண்டு கதிரை மலையிற் சேர்ந்தான்.
மாருதப்பிரவல்லி:
இவை சம்பவித்த எட்டாம் வருடத்திலே சோழ தேசாதி பதியாகிய திசையுக்கிரசோழன் மகள் மாருதப்பிரவல்லி என்பவள், தனக்கிருந்த குன்ம வியாதியினால் மெலிந்தவ ளாய், வியாதியை வைத்தியர் ஒருவருஞ் சுகமாக்க முடியாத தனால், இனித் தீர்த்த யாத்திரையாதல் செய்து பார்த்தால் சுகம் வரவுங்கூடும்', என்றெண்ணிக் காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து புறப்பட்டு, அங்குமிங்கும் போய்த் தீர்த்தமாடி வரு கையில் சாந்தலிங்கனென்னும் ஒரு சந்நியாசி கண்டு, "உன் வியாதி பண்டிதர் ஒருவராலுங் குணமாக்கத் தக்கதன்று. நீ இப்பொழுது எடுத்த முயற்சியே உனக்குச் சுகம் தரத்தக்கது. இலங்கையின் வடமுனையிலே கீரிமலை என்றொரு மலை யுண்டு. அது சமுத்திர தீரத்திலுள்ளது. அங்கே உவர்ச்சல் மத்தியிற் சுத்த தீர்த்தமும் மலையருவித் தீர்த்தமுங் கலந்த உத்தம தீர்த்தம் ஒன்றுண்டு. அது உலகத்திலுள்ள எந்தத் தீர்த்தங்களிலும் முக்கிய தீர்த்தமாயிருக்கின்றது. அதிலே நீ போய் நீராடிச் சில காலந் தங்கியிருந்தாற் சுகமடைவாய் என்று சொல்ல, அச்சொற்படி மாருதபிரவல்லி புறப்பட்டுத் தாதிமாருந்தோழிமாருஞ் சூழ்ந்துவரக் கீரிமலைச் சாரலில் வந்திறங்கிக் குமாரத்தி பள்ளம் என்னும் இடத்திற் பாளையம் போட்டுக் கொண்டிருந்து, நகுலமுனிவரைக் கண்டு சாட்டாங்கமாக வணங்கி, அவரால் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு, அத்தல விசேடத்தையும், தீர்த்த மகிமையையும், அத்தீர்த்தத்தில் ஆடித்தனக்குக் கீரிமுகம் மாறின செய்தி யையும் அம்முனிவர் சொல்லக் கேட்டு,மிக்க சந்தோஷத்து டன் தீர்த்தமாடிச் சிவாலய தரிசனை செய்து வந்தாள். சில காலத்தில் அவளுக்கிருந்த குன்மவலியுந் தீர்ந்து, குதிரை முகமும் மாறிற்று. மாறவே, மாருதப்பிரவல்லியின் யெள வன சொரூபத்தைக் கண்டவர்கள் ஆச்சரியங் கொள்ளாதி ருந்ததில்லை.
அக்காலத்திலே கதிரை மலையிலிருந்து உக்கிரசிங்க மகாராசன் நகுலேசர் கோவிலைத் தரிசிக்க மூன்றாந்தரம் கீரிமலைச் சாரலில் வந்திறங்கி, வளவர்கோன் பள்ளத்திற்பா ளையம் போட்டிருந்தான். அவன் மாருதப்பிரவல்லியை நகுலேசர் சந்நிதானத்தயலிலே கண்டு, அவள் பேரழகினால் மயங்கி, மிகுந்த ஆச்சரியங் கொண்டு, தான் அவளை விவா கஞ் செய்ய வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.
மாவிட்டபுரம்
மாருதப்பிரவல்லி தனக்குக் குதிரை முகம் நீங்கின காரணத்தினாற் கோவிற்கடவை என்னுங் குறிச்சிக்கு மாவிட்டபுரம் எனப்பெயர் சூட்டி அவ்விடத்திலே கந்தசு வாமி கோவிலைக் கட்டுவிக்க ஆரம்பித்து, அதற்கு வேண் டிய சகல வஸ்துக்களும் விக்கிரகங்களும் பிராமணரும் வரும்படி பண்ண வேண்டுமென்று பிதாவாகிய திசையுக் கிர சோழனுக்குத் திருமுகம் அனுப்பினாள். அப் பொழுது  திசையுக்கிர சோழன் சகல ஆயத்தங்களும் பண்ணிக் கொண்டு இலங்கையிலேயுள்ள கீரிமலை நாட்டுக்கு அனுப்புவதற்குத் தில்லை மூவாயிரரில் ஒருவரைத் தன்னி டத்துக்கு அனுப்பி வைக்கும்படி சிவாலயத் தலைவனுக்கு கட்டளை அனுப்பினான். அப்பொழுது சிவாலயத் தலை வன், ‘பிராமணர் தோணியேறுவதும், இலங்கையிற் குடியி ருப்பதும் மகா தோஷமாயிருக்க, அரசன் இப்படிக் கட்டளை யனுப்பியிருக்கிறானே! நான் இதற்கென்ன செய்யலாம்!' என்று பயந்து, தில்லைச் சிவாலயத்திலே மூன்று நாள் பட் டினி கிடந்தான். அப்பொழுது கனவிலே, கீரிமலைச் சாரலா னது அங்குள்ள புண்ணியதீர்த்தத்தினாலுஞ் சிவாலய மகத்து வத்தினாலும் மகா திவ்விய தலமாகவேயிருக்கின்றது. காசி யிற் பிராமணரும் அங்கேயிருக்கிறார்கள். பிராமணர் தங்கள் நியமநிட்டை வழுவாமற் செய்வதற்கு மரக்கலங்களில் இராத் தங்காமல் ஏறலாம். நகுலமுனிவன் அத்தல விசே ஷத்தை நோக்கி அவ்விடத்திலிருந்து தவம் பண்ணும்போதே அத்தல விசேடத்தைக் குறித்து யோசிக்க வேண்டியதென்ன? யாதொரு யோசனையுமின்றி அனுப்பலாம்,' என்று உத்த ரவு கிடைத்தது.
பெரியமனத்துளார் வருகை
அப்பொழுது சிவாலயத் தலைவன் பெரிய மனத்துளார் என்னுந் தீட்சிதரைச் சோழராசனிடம் அனுப்பி வைக்கச் சோழராசன் சகல தளவாடங்களையுங் கந்தசுவாமி, வள் ளியம்மன், தெய்வநாயகியம்மன் விக்கிரகங்களையும் பெரிய மனத்துளார் கையில் ஒப்புவித்து அனுப்பி வைத்தான். தீட்சிதர் அவைகளையுங் கொண்டு “காசாத்துறை" என்னுந் துறையில் வந்திறங்கினார். கந்தசுவாமி விக்கிரகம் வந்திறங்கின காரணத்தால், அந்தத் துறைக்குக் காங்கேசன் துறை என்று பெயராயிற்று.
மாருதப்பிரவல்லியின் மண நிகழ்ச்சி
ஒருநாளிரவில் மாருதப்பிரவல்லிதேவாலயத்திருப்ப ணியைப் பற்றிய ஆலோசனையுடன் சப்பிரமஞ்சத்திற் சாய்ந்து விழிப்பாயிருக்குஞ் சமயத்திலே அர்த்தசாம வேளையில் உக்கிரசிங்க மகாராசன் பாளையங்களையும் அரணிப்பான சேனைக்காவல்களையும் கடந்து, அவளி ருந்த பாளையத்தினுட் புகுந்து, அவளையெடுத்துத் தன் பாளையத்திற்குக் கொண்டு போய் வைத்துக் கொண்டான். பொழுது விடிந்த பின் மாருதப்பிரவல்லியின் தாதிமாருந் தோழிமாருங் காவற் சேனைகளும் அவளைக் காணா ததனால் மனங்கலங்கித் தேடிப்போய் உக்கிரசிங்க மகாரா சன் பாளையத்தில் இருந்த செய்தி அறிந்து, அவனிடத்திற் சென்று, "நாங்கள் என்ன செய்யலாம்?' என்று கேட்க,
நீங்கள் போய் இந்தச் சுபசோபனச் செய்தியைப் பிதா மாதா வுக்கறிவியுங்கள்' என்று சொல்லி, வழிச் செலவுக்குப் பொருளுங் கொடுத்தனுப்பி விட்டான். பின் உக்கிரசிங்க ராசன் கதிரை மலைக்குப் போக யோசித்த போதுமாருதப்பி ரவல்லி கந்தசுவாமி கோயிற்றிருப்பணி நிறைவேற்றி, முத லாம் உற்சவச் சிறப்புக் கண்டால் அல்லாமல், அவ்விடத்தை விட்டுப் போகப் பிரியமில்லை என்றதனால், அப்பிரயா ணத்தை நிறுத்தித் திருப்பணியை நிறைவேற்றி, ஆனி உத்தி ரத்தினன்று துவசாரோகணந் தொடங்கி உற்சவத்தை நிறை வேற்றிக் கொண்டு, கதிரை மலையிற் சென்று, விவாகச் சடங்கையும் நிறைவேற்றி, சகல செளகரியங்களையும் அனு பவித்திருந்தான்.
பெரிய மனத்துளாரின் விவாகம்
தில்லையிற்பெண் எல்லை கடவாததால், பெரிய மனத்துளார் விவாகமில்லாதவராய் வந்திருந்தார். அவர் சாம்பசிவ ஐயரின் மகள் வாலாம்பிகையை  விவாகஞ் செய்து, அப்பெண்ணுக்குத்தில்லை நாயகவல்லி என்று பெயரை மாற்றிக் கந்தசுவாமி கோவிற்றென் புறத்திலுள்ள அக்கிரகாரத்தில் வாசஞ் செய்து தன் பணிவிடையை நிறைவேற்றி வந்தார். பிராமணக் குடும்பங்கள் இரண்டும் ஒரு குடும்பமாகி இருதிறத்துக்கோவில்களுக்கும் ஒருவரே விசாரணைத் தலைவரானார்.
இது நிற்க, கதிரை மலையிலிருந்த உக்கிரசிங்கராசன் சில காலத்தின் பின் செங்கடக நகரியை இராசதானியாக்கி அங்கிருந்து அரசாண்டு வருங்காலத்தில் மன்மதன் போன்ற ரூபமும் சர்வ ராசலட்சணங்களும் உடையனாய், சிங்கத்தின் வாலையொத்த வாலுடனே ஒரு குமாரனும் அவ னுடனொரு பெண்ணும் பிறந்தார்கள். அவ்விருவருக்கும் நரசிங்கராசன் என்றுஞ் சண்பகாவதி என்றும் பெயரிட்டார்கள். அவர்களுக்கு விவாகம் நிறைவேற்றி, நரசிங்கராசன் என்னும் பெயர் படைத்த வாலசிங்கராசனுக்கு முடிசூட்டி அரசாள வைத்து மரணமடைந்தான். வாலசிங்க மகாராசன் செயதுங்கவரராச சிங்கம் என்னும் பட்டத்துடன் முடிசூட்டப்பெற்று. அரசாட்சியை ஒப்புக் கொண்டான்.
வீரராகவன்
அக்காலத்திலே சோழநாட்டிலிருந்து இரண்டு கண் ணுங் குருடனாகிய கவி வீரராகவன்' என்னும் யாழ்ப்பா ணன், செங்கடக நகரியிலிருந்து அரசாட்சி செலுத்தும் வால சிங்கமகாராசன் பேரிற் பிரபந்தம் பாடிக் கொண்டு போய் யாழ் வாசித்துப் பாடினான். அரசன் அதைக்கேட்டு மிக்க சந்தோஷம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் இந் நாட்டைக் கொடுத்தான்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்று பெய ரிட்டு, இவ்விடத்தில் வந்திருந்து, வடதிசையிற் சில தமிழ்க் குடிகளை அழைப்பித்துக் குடியேற்றி, இவ்விடமிருந்த சிங்க ளவர்களையும் அவர்களையும் ஆண்டு, முதிர்வயதுள்ளவ னாய் இருந்து இறந்து போனான். அக்காலத்திலே சிங்களவ ரும் பிறரும் இந்நாட்டை அரசாளக் கருதித் தமிழ்க் குடிகளை ஒடுக்கியதால், தமிழ்க்குடிகள் மீண்டும் தங்கள் நாட்டுக்குப்போய் விட்டார்கள்.
__________________________________________________________

4. வீரர்முனை செப்பேடு:
கலிங்க தேசத்தின் கண்ணின் மணியாய்
இலங்கப் பிறந்திடும் இராசாதி இராசனாம்
உக்கிர சிங்கனின் உறைவிடம் கண்டி
மிக்க புகழ் நின்ற விற்பனை கன்னிகை
மருதப்புர வீக வல்லி என்பாளை
பேருற மணந்து பெற்றிடும் மகனாம்

வால சிங்கனென வலிவுறு சிங்கம்
வேல்விழி மாடவர் விரும்பிடு சிங்கம்
குலைகள் அறுபத்து நான்கிலும் வலியன்
தோலைவில் விண்ணில் துரிதமாய் செல்லும்
முந்திர வித்தையும் மாண்புற கற்ற
சுந்தர ரூபன் சோழநா டேகி

ஆரவா பாணன் அடியினை மறவா
குமராங்குசனென கூறு பெயரினன்
சுறறந்திடு சோழன் அருந்தவப்புதல்வி
சீர்பாத தேவியை திருமணம் செய்து

ஈழநாடேகி என்னும் கால்
சோழ மாமன்னன் துணையாட்; களாய்
முன்னர் குலத்து மக்களை அனுப்ப
ஏண்ணம் கொண்டு இன்புடனாய்ந்து

திரு வெற்றியூர் சேர்ந்திடும் அயலிலும்
பெருந்துறையூர் பின்னர் தன் மருங்கிலும்
கட்டுமாவடி கரையிரு புறத்திலும்
மட்டுக்கூங்கிய மறுபுறங்களிலும்.
__________________________________________________________

5. துறைநீலாவணைச் செப்பேடு:
பரத கண்டத்தில் பண்புடை அரசராய்
தரமுட னாண்ட சற்சன சோழன்
தவப்பு தல்வியாக தரையினிற் செனித்த
நவமணி நேரும் மாருதப் புரவீக
வல்லிதன் குதிரை வதனம் மாற

எல்லையிற் தீர்த்தம் இந்தியா முழுவதும்
படிந்து திரிந்து பயனில தாக
வடிவேற் பெருமான் வைகிய கதிரை
சென்றுதன் குறையை தீர்ப்பது முறையென
மன்றலங் குழலி வந்தனள் லிலங்கை
கந்தன் கழலடி காரிகை வணங்க
விந்தை யாக விரும்பும் நாகநன்
நாடதை கண்ணி நகுலநன் மனையின்

மாடே தெற்காய் மல்கும் நதியில்
முழுகிட வுந்தன் முற்பவ வினையால்
தழுவிய குதிரை சாயல் தீர்ந்து
விளங்குவா யென்று மெல்லியல் கனவில்
உளம துருக உவப்புடன் கண்டு

கீரி மலையை கிட்டியே செல்வி
நீரினில் படிய நீத்தது மாமுகம்
அச்செயல் தன்னை அறிந்திடு மாது
மெச்சிட ஒற்றரை விரைவினிற் றான்
உச்சித மாக உவப்புட னனுப்பினள்

அச்சம தில்லையென அரசன் விருப்புடன்
கந்த னுருவக் கனகச் சிலைதனை
விந்தைய தாக விரைவுட னனுப்ப
கச்சாத் துறையின் கரையதிற் கொண்டு
மெச்சிட ஒற்றர் விட்டனர் படகை
அவ்விடந் தனில் ஆயிழை வந்து
செவ்வைசேர் காங்கேயன் திருவுரு வந்தனை
நகுல மலைக்கு நடந்தனள் கொண்டு

தகமைசேர் கோயில் தையலாள் இயற்றி
கொடித்தம்பம் நட்டு குற்றமில் விழாவை
துடியிடை மங்கை சோர்வுறச் செய்து
காரண நாமம் களறின ளப்போ

பாரதி லென்னை பற்றி தீய
மாமுக வடிவம் மாறின தாலே
மாமுக னுறைவது மாவிட்ட புரம்
காங்கேய னுருவது கரைசேர் இடம்
காங்கேயன் துறையென கழறியே மீண்டு
தாய்நா டேக தையலாள் இருந்தாள்

ஓயாப்‌ புகழ்சேர்‌ உக்கிர வீர
சிங்க னறிந்து தெரிவையை வேட்டு
மங்கா வால சிங்கமென மகவைத்‌
துரைதனி லீன்றாள்‌ தற்பர னருளால்‌

உரைதரு பூர்வ உச்சித மதியென
சிங்கன்‌ வளர்ந்து தேர்ந்தனன்‌ கலைகள்‌
துங்கமார்‌ தவசிகள்‌ சூழும்‌ ஆச்சிரமம்‌
துணிவுடன்‌ சென்று தொழுதவர்‌ பதத்தை
அணியனு மசியும்‌ ஆகாய கமனமும்‌
பயின்றினி திருந்தான்‌ பார்த்திபன்‌ மிக்க
வைர உடலும்‌ மாற்றார்‌ போற்றும்‌
வாலைநற்‌ பருவமும்‌ வாய்த்திடு தன்மையால்‌
வால சிங்கனென வழுத்தின ருலகோர்‌
அன்னான்‌ இலங்கையை யண்டியே கண்டி

நன்னகர்‌ தன்னை நலியாது பிடித்து
அரசராய்‌ பலகால்‌ அமர்ந்தினி இருந்து
தரமுடன்‌ மன்றல்‌ தான்செய்ய எண்ணி
சோழ அரசனின்‌ தூமணி யான
ஆழியி னமிர்தம்‌ அதுநிகர்‌ சீர்பாகதேவியை
விதிப்படி மணந்து விளங்கிடும்‌ நாளில்‌

மதிமுக நங்கை மன்னனடி  பணிந்து
காதல நினது கார்வள நாடெனும்‌
மாதல மனைத்தும்‌ மகிழ்ந்து காட்டுவீரென
அரச னதற்கு அண்டியுன்‌ பிதாவை
வரமது கேட்டு வருகுவீ ரென்று
கூறியே மன்னன்‌ குறுகினன்‌ குருசில்‌
சீர்பாத தேவி சேர்ந்துதன்‌ தந்தைபால்‌
ஏரார்‌ இலங்கை ஏகிடச்‌ செலவு
பெற்றாள்‌ படகிற்‌ பேருவுவகை யாகி

உற்ற துணையால்‌ உயிரின்‌ தோழி
வெள்ளாகி யெனும்‌ மெல்லியள்‌ தன்னுடன்‌
இல்லாளர்‌ ஊழியம்‌ ஜெயமதில்‌ நகர்கூக்க
திருவொற்றியூர்‌ கட்‌ டுமாவடி. பெருந்துறை
நற்றவ நகரில்‌ நலம்பெற வதியும்‌
அரசர்‌ வினைபுரி அருளுடை மேலோர்‌.

__________________________________________________________

தொடர்பு: ப. முகுந்தன் (mukunthan@gmail.com)









No comments:

Post a Comment