Sunday, December 15, 2019

தமிழிலக்கியம் காட்டும் மாஸ்லோவின் 'தேவை படியமைப்பு கோட்பாட்டுக்' கருத்துகள்


 -- சொ.வினைதீர்த்தான்


          தன்முனைப்பு, ஊக்கமூட்டும் கோட்பாடுகள் (Motivational theories) பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் ஆப்ரஹாம் மாஸ்லோவின் தேவைகள் பற்றிய கொள்கைகளைத் தொடாமல் இருக்க முடியாது. மனிதன் தேவைகள் பூர்த்தியாகிறபோது ஊக்குவிக்கப்படுகிறான் என்பதும் மனிதனின் ஒரு தேவை பூர்த்தியானதும் அடுத்த தேவைக்கு மனிதமனம் ஏங்குகிறது என்பதும்  'மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு'(Maslow's Hierarchy of Needs).

மாஸ்லோவின் 'தேவை படியமைப்பு கோட்பாட்டுக்' கருத்துகள்:
          மாஸ்லோவின் கொள்கைப்படி முதல் தேவை உடல் சார்ந்த தேவை, 'உடலியற் தேவைகள்' (Physiological needs). உணவு ,உடை, உறையுள் ஆகியவை.  நேற்று வந்த பசி 'இன்றும் வருங்கொல்லோ ' என்றது குறள்.

          அடுத்த தேவை 'பாதுகாப்புத் தேவைகள்' (Safety needs). இன்றைக்குக் கிடைத்த உணவு நாளைக்கும் கிடைக்கவேண்டும். முன்னோர் காடு வெட்டி போட்டுக் கடிய நிலம் திருத்தி வீடுகட்டிக்கொண்டு இருந்ததும் சேமிப்பும் இத்தேவையின் பூர்த்தி கருதியே!

          அடுத்தது தோழமையுணர்வு, 'சமூகத் தேவைகள்' (Love and belongingness needs). ஒருவனுக்கு வேலை கிடைத்து அவ்வேலை நிரந்தரமாகவும் சமுதாயம் அவனுக்குத் திருமணம் செய்துவைக்கிறது. தனியாக வாழமுடியாததால் விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்ததாகப் பைபிள் சொல்லிற்று. பாரதிதாசன் 'என்ன இன்பம் எனக்கு நல்கும்' எனக் கேட்டு 'இருக்கின்றாள் என்பது ஒன்றே' என்று பதிலளித்தார்.

          பிறகு 'கௌரவத்தேவைகள்' (Esteem needs). மனிதர்கள் கவனிக்கப்படுவதற்கும் அங்கீகாரத்திற்கும் பாராட்டுக்கும் ஏங்குகிறார்கள். இது தீராத ஏக்கம்! எனவே இது உயரிய தேவை. மனிதர்களை வயப்படுத்த, மனித உறவுகள் மேம்பட நாம் மற்றவரின் இத்தேவையை என்றும் பூர்த்திசெய்து கொண்டே இருக்க வேண்டும்!

          இதற்கும் மேலே உச்சபட்சத் தேவை 'தன்னலத் தேவைகள்' (Self-actualization needs). தன்னை அறிதல், தன் உயரிய உள்ளக்கிடக்கை நிறைவேறல் எனக் குறிக்கலாம். காந்தியடிகளுக்கு இந்நாட்டின் விடுதலையே உயரிய குறிக்கோளாக இருந்தது.



தேவாரப்பாடல் காட்டும் தேவைக்கோட்பாடு:
           இந்த தேவைக்கொள்கையும், அப்பர் அடிகளின் - திருவிடைமருதூர் தேவாரப்பாடல் ஒன்றும் அப்படியே ஒத்துப் போவதைக்கண்டேன். இன்றைக்குப் பிரபலமான கோட்பாட்டை எவ்வளவு துல்லியமாக நம்முடைய பெரியோர்கள் யோசித்திருக்கிறார்கள்!

         நாவுக்கரசர் தேவாரத்தில் இதே படிநிலைச் சட்டகத்தைக் காணலாம்!
                    "கனியினும் கட்டிபட்ட கரும்பினும்
                    பனிமலர்க் குழல்பாவை நல்லாரினும்
                    தனிமுடி கவித்தாலும் அரசினும் 
                    இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே"

          முதல் அடிப்படைத் தேவை உணவுக்கான கனி. கனியாக இருந்தால் அதிக நாள் வைத்திருக்க முடியாது. அதுவே கட்டிபட்டு வெல்லமாக மாற்றி இருந்தால் பல நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். இரண்டாவது தேவை நிறைவேறும். 

          அடுத்து மலர்க் குழல் பாவை நல்லாள் தொடர்பு தோழமை நல்கிறது. 

          அடுத்து அரசனைப் பற்றிப் பாடல் சொல்கிறது. அதுவும் அரசர்க்கு அரசன். தனி முடி தரித்தவன். கௌரவத்தேவை எவ்வளவு பூர்த்தியாகும். 

          அதற்கும் மேலே அப்பரின் உச்சமான தேவை தொண்டின் மூலம் இனிய இறைவனை அடைவதே. 

          அடிநிலைத் தேவைக் கட்டமைப்பு போன்ற சிந்தனைகளை அன்றையத் தமிழ்ச் சான்றோர் உணர்ந்து எண்ணிப்பார்த்து வரிசை மாறாது அடுக்கிச் சொல்லியிருப்பது போற்றத்தக்கது.

மணிமேகலை காப்பியமும் தேவைக்கோட்பாடும்:
          ஆபிரகாம் மாஸ்லோவின் படிநிலைத் தேவைக்கட்டமைப்புச் சிந்தனைகளை மணிமேகலை வாழ்க்கையோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மாஸ்லோவின் ‘தேவைக்கோட்பாடு’ கட்டமைப்பு கூறும்  உடலியற் தேவைகள், பாதுகாப்புத் தேவைகள், சமூகத் தேவைகள், கௌரவத்தேவைகள், தன்னலத் தேவைகள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு தேவை நிறைவேறியதும் அடுத்த தேவைக்கு மனிதன் ஏங்குகிறான்; அடைய முயல்கிறான் என்ற  உளவியல் கொள்கை மணிமேகலை வாழ்க்கையோடும்  பொருந்திப்போவதைக் காணலாம்.

          முதல் உடலியற் அடிப்படைத்தேவையான பசிப்பிணியைத் தீர்க்க வேண்டும் என்ற மணிமேகலையின் எண்ணத்தின் வலுவானது அவள் கைகளில் அமுதசுரபியை மணிமேகலா தெய்வம், தீவதிலகை வழியாகக் கொண்டுவந்து சேர்க்கிறது.  தீவதிலகை மணிமேகலைக்குப் பசிப்பிணியின் கொடுமையைச் சொல்லி, நாட்டில் மழை வளம் இல்லாமல் விசுவாமித்திரனாகிய அரசன் கூட நாயின் புலாலைத் தின்ன நேர்ந்த நிலை வந்ததையும் சொல்லி, உலகில் எப்படிப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாள்.

                    “ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
                    ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
                    மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை;
                    மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
                    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
உலகத்தில் வாழ்பவருக்கு உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவர்களே.இவ்வாறு மனிதவாழ்வின் முதல் தேவையான பசிப்பிணியறுத்தல் குறித்துக் காப்பியம் பேசுகிறது.

          மாதவி மணிமேகலைக்குக் காட்டுகிற துறவற நெறி ஆடல் மகளிர் வாழ்க்கையை மணிமேகலை தவிர்க்க உதவும் பாதுகாப்புத் தேவை அரணாகிறது.

          அடுத்த தேவையான தோழமை சமூகத் தேவை குறித்துப் பார்க்கலாம். மணிமேகலையின் மீது காதல் கொண்டிருந்த அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் அவளைத்தேடி உவவனத்திற்கு வருகிறான். அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணிய மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்துவிடுகிறாள். உதயகுமரன் பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியாமையால் மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிடுகிறான். உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள். சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்து உரைக்கிறாள்.

                    “புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
                    இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
                    இதுவே ஆயின் கெடுக தன் திறம்... ”
என்று. அவ்வெண்ணத்தை மாற்றவேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். துறவோர் சங்கம் தோழமை ஏற்கிறாள்.

          அவள் கைகளில் அமுதசுரபி கிடைக்கிறது. “காணார், கேளார், கால் முடமானோர், பசிநோய் நோற்றார், பல்நூறு ஆயிரம் விலங்கின் தொகுதி” என்று அருந்தினோர்க்கெல்லாம் ஆர் உயிர் மருந்தாய் பெருவளம் அமுதசுரபி வழியாகச் சுரந்து நல்குகிறாள் மணிமேகலை. “பசிப்பிணி தீர்த்த பாவை”யாக யாவரும் போற்றுகிறார்கள். இதனால் அவளது  கௌரவத்தேவை நிறைவேறுகிறது.

          போற்றிய பின்னரும், யாவரும் அங்கீகரித்துக் கொண்டாடிய பின்னரும் மணிமேகலையின் தேவையடங்கவில்லை. அவள் எண்ணம் பூர்த்தியாகவில்லை.  அவள் தேவை உச்சபட்சத்தேவையான தன்னை அறிதல், தன் நோக்கம் அறிதல், அதனை அடைதல் என்ற தன்னலத் தேவை என்பதிலேயே நிலை கொண்டிருக்கிறது அறவண அடிகளிடம்  “அடிகள் மெய்ப்பொருள் அருளுக” எனத் தருமம் கேட்கிறாள். புத்த சங்கத்தில் சரண் புகுகிறாள். இறுதியில் மனத்து இருள் நீங்க நோன்பு நோற்கிறாள்.

          பசிப்பிணி அறுக்கும் அடிப்படைத் தேவையைப் போக்குகிற பணியில் தொடங்குகிற மணிமேகலையின் வாழ்க்கை “தவத்திறம்பூண்டு தருமம் கேட்டு நோன்பு நோற்று உன்னதம் அடைகிற” உச்சபட்சத்தில் நிறைவடைகிறது.






தொடர்பு: சொ.வினைதீர்த்தான் (karuannam@gmail.com)



No comments:

Post a Comment