Tuesday, December 17, 2019

கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் ஆ.பத்மாவதி அளிக்கும் வரலாற்று விளக்கங்கள்




கேள்வி: 
திருப்புறம்பியம் போர்  பற்றிய தரவுகள் எங்கெங்கு உள்ளது? யார் யாருடன் கூட்டணி?  ஆதித்தன் அபராஜிதனைக் கொன்றது அப்போரிலா? அல்லது வேறு எங்காவதா? முழுமையான விவரங்கள் என்ன?

விளக்கம்:
திருப்புறம்பியம் போர் பற்றிய நேரடித்தரவுகள், முதலாம் பராந்தகன் ஆணைப்படி இரண்டாம் பிரித்வீ வழங்கிய உதயேந்திரம் செப்பேடு சமஸ்க்ருதப்பகுதியில் 18 ம் சுலோகமாக உள்ளது.

இவ்விவரத்தை அறிவதற்கு முன்பாக;  இப்போர் நடைபெற்ற காலத்திய அரசர்கள் மற்றும் அப்போதைய சூழ்நிலை  பற்றிய ஒரு தெளிவு தேவையாகிறது.

இக்காலத்திய அரசர்கள்:
பல்லவன் நிருபதுங்கன்
நிருபதுங்கனின் சகோதரர் கம்பவர்மன்
கம்பவர்மனின் மகன் அபராஜிதன்
இக்காலத்தைய பாண்டிய வேந்தன் இரண்டாம் வரகுணவர்மன். இவன் ஆட்சிக்கு வந்த ஆண்டு ஐவர் மலையில் உள்ள சக ஆண்டு கல்வெட்டுச் சான்றுபடி கி.பி.862.
சோழர்கள், முத்தரையர்கள் மற்றும் குறுநில சிற்றரசர்கள்.

சோழநாட்டின் சிற்றரசர்களான முத்தரையர்கள், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களை மாறி மாறி ஆதரித்தனர்.

இரண்டாம் வரகுணபாண்டியனின் கல்வெட்டுகள் சோழதேசப்பகுதிகளான திருக்கோடிக்கா, திருச்சாத்துறை, நியமம் போன்ற பகுதியில் இருப்பதால் சோழ நாட்டில் வரகுணனது ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டதை அறியலாம்.  திருவதிகையில் உள்ள நிருபதுங்கனுடைய 18 ம் ஆட்சி யாண்டு கல்வெட்டு ஒன்றில், வரகுணபாண்டியன் தானம் அளிக்கிறான். ஆக இவ்விருவரும் பகைமை இல்லாமல் இருந்துள்ளனர் (S.i.i. vol 13 no 71).

அபராஜிதனின் வேலஞ்சேரி செப்பேட்டில் சில தரவுகள்:
கம்பவர்மனின் சகோதரனான நிருபதுங்கனை விரட்டிவிட்டு, கம்பவர்மனின் மகனான அபராஜிதன் ஆட்சிக்கு வருகிறான். ஆகவே, அபராஜிதனுக்கும் நிருபதுங்கனுக்கும் வாரிசுரிமைப் போட்டி இருந்தது. இதே செப்பேட்டில் அபராஜிதன் யானைகளின் துணை கொண்டு  தான் ஒரு சோழனை வென்றதாகக் குறிப்பிட்டுள்ளான். காலக்கணக்கின்படி அபராஜிதன் வென்ற சோழன் முதலாம் ஆதித்தனாக இருக்கலாம்.

திண்டுக்கல் அருகே உள்ள கல்வெட்டு ஒன்றில், வரகுணபாண்டியன் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்று இடவை என்னும் நகரைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது (Vol 14 no.26). சின்னமனூர் செப்பேட்டில் கங்க சோழ பல்லவர்களை வென்றேன் என்கிறான்.

இவை எல்லாம் திருப்புறம்பியம் போர் நடைபெறுவதற்குச் சற்று முன்பு நடந்த சம்பவங்கள்.

இனி..
திருப்புறம்பியம் போர் பற்றிய செய்தி, முன்னமே கூறியபடி உதயேந்திரம் செப்பேட்டில் உள்ளது.

கங்கமன்னனான இரண்டாம் பிரித்வீபதி, அபராஜிதனுக்காக பாண்டிய வரகுணனை வென்றான். பிறகு அப்போர்க்களத்திலேயே பிரித்வீபதி உயிர்நீத்தான்.

Having defeated by  force the pandya lord varaguna at the head of the great battle of Sripurambiya, and having (thus) made(his) title aprajita (ie, unconquared) significant. This hero entered heaven of (his) friend by sacrificing his own life.

Udayandram plates of prithivipati 2
S.i.i. vol. 2. No 76
P.381 . & 387 .V.18

ஆக, இப்போர் அபராஜிதனுக்கும், வரகுணபாண்டியனுக்கும் நடந்ததாகத் தெரிகிறது. இதில் ஆதித்தச் சோழனோ, நிருபதுங்கனோ குறிப்பிடவில்லை. இச்செப்பேடு பராந்தகனின் அனுமதியுடன், இரண்டாம் பிரித்வீபதியால் வெளியிடப்படுகிறது. இச் செப்பேட்டில்  இப்போர் நடைபெற்ற செய்தி இருப்பதால், இப்போர் சோழர்களுக்குச் சாதகமான ஒன்று. 

உயிர்நீத்த முதலாம் பிரித்வீபதியின் பேரன் இரண்டாம் பிரித்வீபதி, பராந்தகனுடன் இணைந்து பாணர்களை வென்று செம்பியன் மாவலிவாணராயன் என்னும் பட்டமும் பெறுகிறான். ஆக, திருப்புறம்பியம் போரில் சோழர்கள் பாண்டியர்களுக்கு எதிராகவே இருந்திருப்பர்.

திருப்புறம்பியம் போர் நடைபெற்ற காலத்திற்கு பிறகான, கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் உள்ள கல்வெட்டு;  கன்னரன் என்பவன் பழையாறை, ஸ்ரீபுறம்பியத்தில் பாண்டியனை வென்று, பல்லவனை வென்று கங்கனைக் கொன்றேன் என்கிறான்.

இது நம் திருப்புறம்பியம்தானா? கன்னரன் என்பது யார்? முதலாம் ஆதித்தனுக்குப் பெண் கொடுத்த மாமனாரா?  திருப்புறம்பியம் போரில் ஆதித்தனுக்கு உதவினானா? பாண்டியனை வென்றது வரகுணனை என்றால், பல்லவனை வென்றேன் என்பது யார்? அபராஜிதனையா? சோழர்கள் பக்கம் நின்ற கங்கனை வென்றது ஏன்? கங்கனைக்கொன்று பூவல்லபனுக்கு உதவிசெய்தேன் என்பதால், இக்கல்வெட்டிற்கும் திருப்புறம்பியம்  போருக்கும் யாதொரு தொடர்பும் இல்லையோ?

தெளிவான முடிவு யாதெனில்;  திருப்புறம்பியம் போரில், அபராஜிதன் வெல்கிறான். வரகுணபாண்டியன் தோற்று பின் வாங்குகிறான். சோழநாட்டின் மீது இருந்த பாண்டியர்களின் ஆதிக்கம் விடுபட்டது. அபராஜிதன் கூட்டணியில் இருத்த முதலாம் பிரித்வீபதி உயிர்நீத்தான். சோழர்கள் அபராஜிதன் பக்கம் இருந்து பாண்டியனை எதிர்த்தார்கள்.

இப்போரின் விளைவாகச் சோழர்கள் தன்னாட்சி உரிமை பெற்றிருக்கலாம். சில காலத்திற்குப்பிறகு முதலாம் ஆதித்தன் தொண்டை நாட்டின் மேல் படையெடுத்தான். அபராஜிதனைக் கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றுகிறான். தொண்டை நாடு பரவின சோழன் என்னும் பெயர் பெற்றான். 

தில்லைஸ்தானம் கல்வெட்டு, தொண்டைநாடு பரவின சோழன் பல் யானை கொக்கண்டனான ராஜகேசரி பர்மனான (S.i.i. vol 3 no 89) என்கிறது. திருவலங்காடு செப்பேடும் (49 ) ஆதித்தன் அபராஜிதனை வென்றதைக் கூறுகிறது. திருப்புறம்பியம் போரில் பெரு வெற்றி பெற்ற அபராஜிதனின் எந்த ஒரு கல்வெட்டும் இப்போர் நிகழ்வைப் பதிவு செய்யவில்லை. மிக விரைவாகவே அபராஜிதனை, ஆதித்தன் வென்றிருக்கிறான்.

இதனைத் தொடர்புப் படுத்தும் மேலும் ஒரு தொல்லியல் சான்று. திருவிந்தளூர் செப்பேடு. விஜயாலயன் தஞ்சாபுரியை கம்பவர்மனிடமிருந்து கைப்பற்றினேன் என்கிறான். ஆதித்தனின் தந்தை விஜயாலயன். அபராஜிதனின் தந்தை கம்பவர்மன். திருப்புறம்பியம் போர் நடைபெற்ற ஆண்டு கி.பி. 880 என்பது பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவு.


கேள்வி:
ஆதித்த கரிகாலன் திருமணம் ஆனவரா?

விளக்கம்:
நேரடியான தரவுகள் இல்லை, என்றாலும்; ஆதித்த கரிகாலன் இளவரசனாக முடிசூட்டப்பட்டவர். மணம் செய்தவரே அரசனாக முடிசூடும் மரபு இருப்பதால் ஆதித்த கரிகாலன் திருமணம் ஆனவரே.


கேள்வி:
பல்லவ அரசர்கள் சிம்மவிஷ்ணு முதல் அபராஜிதன் வரை ஆட்சிசெய்த சரியான காலம் எது?

விளக்கம்:
ஒவ்வொரு அரசரின் ஆட்சிக்காலத்தை நிறையத் தரவுகள், கணக்கீடுகள் செய்து தீர்மானிக்க வேண்டும்.
இப்போதைக்கு...
சிம்மவிஷ்ணுவின் தந்தை சிம்மவர்மன் --  கி.பி.540 - 556.
அபராஜிதன் -- கி.பி.870 - 888.
ஆகவே,  பிற்காலப் பல்லவர்களின் காலம் -- கி.பி. 540 - 888.


கேள்வி:
இதுவரை இந்தியாவில் வெளியிடப்பட்ட தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?  மற்ற மொழிக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு?

விளக்கம்:
துறை சார்ந்த, நெருக்கமான எண்ணிக்கை இது:
தமிழ்க் கல்வெட்டுகளின் எண்ணிக்கை -- 66,500
தெலுங்கு மொழிக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை -- 10,000
கன்னட மொழிக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை -- 13,000
சமஸ்கிருத  கல்வெட்டுகளின் எண்ணிக்கை -- 7,500 - 10,000
மற்றவை --  500


கேள்வி:
திருமுறைகண்ட சோழன் என்னும் இராஜராஜனின் விருதுப் பெயர் கல்வெட்டுகளில் உள்ளதா?

விளக்கம்:
கல்வெட்டுகளில் இல்லை.  கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருமுறைகண்ட புராணம் சொல்கிறது. இது ஒரு மிகச்சிறந்த சான்றாகும்.


கேள்வி:
களப்பிரர் பற்றிய தங்கள் பார்வை என்ன?  குறிப்பாய் அவர்கள் பின்பற்றிய சமயம் எது?

விளக்கம்:
களப்பிரர்கள் என்பவர் தமிழர்கள் கூட்டணி. இதில் கர்நாடகத் தலைவர்களும் உள்ளனர். களப்பிரர் ஆட்சி என்பது தமிழர் ஆட்சி. வைதீகத்திற்கு எதிரானவர்கள். பௌத்தத்தைப் பின்பற்றியவர்கள். (விரிவாக எனது களப்பிரர் பற்றிய நூலில் எழுதியுள்ளேன். விரைவில் அந்நூல் வெளிவரவிருக்கிறது)


கேள்வி:
இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தியில் காணப்படும் அவர் வெற்றி கொண்ட நாடுகளின் இன்றைய பெயர் என்ன?

விளக்கம்:
மிகுந்த ஆய்வுக்குரிய ஒன்று. அவரது மெய்க்கீர்த்தியில் உள்ள ஒரு சில இடங்கள் எங்குள்ளன என்பதை அறிவது மிகுந்த சிரமமாய் உள்ளது. பல தொல்லியல் அறிஞர்களிடம்  பல்வேறு கருத்துகள் உள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து சாஸ்திரி அவர்கள் தனது சோழர்கள் நூலில் விரிவாக எழுதியுள்ளார். இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தி அழகான ஒன்று. தான் வென்ற நாடுகளைக் கூறும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு விருதுப்பெயருடன் அழகான தமிழில் கூறுவது சிறப்பானது.

சில வரிகளைப்பாருங்கள்;
தொடர்வன வேலி படர் வனவாசி (காடுகள் சூழ்ந்த வனவாசி)
நண்ணற் கருமுரன் மண்ணைக் கடகம் (உடைக்க முடியாத அரண்களைக் கொண்ட மண்ணைக்கடகம்)
செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலை தொல் பெருங் காவற் பல் பழந்தீவு
மேவருஞ் சாந்திமத்தீவு (எவரும் நெருங்க அஞ்சும் சாந்திமத்தீவு)
விக்கிரம வீரர் சக்கரக்கோட்டம் (வீரம் கொண்ட வீரர்கள் நிரம்பிய சக்கரக்கோட்டம்)
வெஞ்சின வீரர் பஞ்சப்பள்ளி.
வண்டுறை சோலை தண்டபுத்தி.
தங்காத சாரல் வங்காள தேசம் (எப்போதும் மழை பொழிந்துகொண்டிருக்கும் வங்காளம்)
நிறை சீர் விசயமுந் துறைநீர் பண்ணை.
ஆழ்கடலகழ் சூழ் மாயிருடிங்கம்.
தொடு கடற் காவற் கடு முரட் கடாரம்.

இவ்வாறு ஒவ்வொரு நாடும் அழகான காரணத்துடன் முன்னொட்டாக உள்ளது. அழகான தமிழ். எதுகை மோனை வரிகள். தமிழனின் வீரம் சொல்லும் சாதனைப் பட்டியல்.   மெய்க்கீர்த்தி முழுவதையும் வாசித்துப்பாருங்கள். அனைத்தும் தக்கத் தொல்லியல் சான்றுகளுடன் கூடிய உண்மை.  தமிழரின் வீரவரலாறு.

இனி; இராஜேந்திரன் வெற்றி கண்ட நாடுகளின் இன்றைய பெயர்கள். சாஸ்திரி தொகுத்தபடி, சாஸ்திரியின் நூலில் விரிவாகக் காணலாம்..

இடைதுறை நாடு: கிருஷ்ணா ஆற்றுக்கும் துங்கபத்திரா ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி. இப்போதைய ரெய்ச்சூர் மாவட்டம்.
கொள்ளிப்பாக்கை: ஹைதராபாத் அடுத்துள்ள இப்போதைய குல்பர்கா.
மண்ணை கடகம்: இன்றைய மால்கேட்
ஈழம்: இலங்கை.
கேரளம்: இன்றைய கேரளம்.
சாந்திமத் தீவு: அரபிக்கடலில் உள்ள ஒரு தீவு.
முயங்கி: பெல்லாரி மாவட்டத்தில் உள்ள உச்சங்கிதுர்க்.
இரட்டபாடி, ஏழரை இலக்கம்: பெல்லாரி, மைசூர்
சக்கரக்கோட்டம்: விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள பஸ்தார் என்னும் நகரம். இது சித்திரக்கொட்டா என்றும் அழைக்கப்படுகிறது.
ஒட்டதேசம்: இன்றைய ஒரிஸா.
மதுரை மண்டலம், நாமணைக்கோணம், பஞ்சப்பள்ளி, மாசுணி தேசம், ஆதிநகர், உதய்பூர், கோசல நாடு ஆகியனவும்...
தண்ட புத்தி: ஒரிஸாவிற்கும் வங்காளத்திற்கும் இடைப்பட்ட ஒரு பகுதி.
தக்கண லாடம்: மேற்கு வங்காளத்தில் உள்ள ஹௌரா.
உத்ரலாடம்: வங்காளத்தின் மையப்பகுதி.
ஸ்ரீ விஜயம்: சுமத்ரா தீவு.
பண்ணை: சுமத்ராவின் கீழக்கரையில் உள்ள பன்னெய் என்று அழைக்கப்படும் ஊர்.
மலையூர்: மலேயா தீபகற்பத்தின் வடக்கே மலாயூர் ஆற்றப்பகுதி இடம்.
மாயிருடிங்கம்: மலேயாவில் உள்ள ஜையா.
இலங்கா சோகம்: மலேயா, விங்யாசென்கியா.
பப்பாளம்: கீழைப் பர்மாவில் உள்ள ஒரு ஊர்.
மேவிலம் பங்கம், வளைப்பந்தூரு: இவ்விரண்டு இடம் பற்றிய தரவுகள் கிடைக்கப்பெறவில்லை
தலைத்தக்கோலம்: மலேயாவின் கீழக்கரையில் உள்ள தெமிலிங் என்னும் நகரம்.
இலாமுரிதேசம்: சுமத்ராவின் வடபகுதி.
மானக்கவாரம்: நிக்கோபார் தீவுகள்.
கடாரம்: மலேசியாவில் உள்ள கெடா.


கேள்வி:
சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் உருவங்கள் சிற்பங்களாக எங்கெங்கு உள்ளன?

விளக்கம்:
1.  கண்டராதித்தர்:


இடம் - திருநல்லம் என்ற கோனேரிராஜபுரம் மற்றும் ஆடுதுறை.  கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லம். இவ்வூரில் செம்பியன் மாதேவியார் தனது கணவர் கண்டராதித்தர் பெயரில் கண்டராதித்தம் என்னும் ஒரு கோவில் எழுப்பியுள்ளார். கோவில் கருவறையின் தென்புறச்சுவற்றில் ஒரு சிற்பமும் அதன் கீழ் ஒரு கல்வெட்டும் உள்ளது.
கல்வெட்டின் இறுதிப்பகுதி;
"ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எழுந்தருள்வித்து இத்திருக்கற்றளியிலே திருநல்லமுடையாரைத் திருவடி தொழுகின்றாராக எழுந்தருளுவித்த ஸ்ரீ கண்டராதித்த தேவர் இவர்..." (S.i.i. vol 3. No 146).
என்று குறிப்பிடுகிறது. இச்சிற்பத்தில்  இறைவனை வணங்குபவராக இருப்பவர் கண்டராதித்தர் என்று கல்வெட்டு கூறுகிறது. இச்சிற்பத்தில் லிங்கத்திற்குச் சிவாச்சாரியார் ஒருவர் ஆடை சுற்ற, லிங்கத்தின் எதிரே கால்களை மடித்து அமர்ந்து வணங்குகிறார் கண்டராதித்தர்.

2.  முதலாம் ஆதித்தன்:
இடம் - திருக்கருகாவூர். பாபநாசம் அருகே அமைந்த திருக்கருகாவூர். கோவிலின் கருவறை ஆதித்தன் காலம். கருவறையின் பின்புறம் தேவ கோட்டத்தின் இருபுறமும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிற்பம் உள்ளது. இது முதலாம் ஆதித்தன் மற்றும் அவரது தேவியர் என்று திரு.பட்டாபிராமன் குறிப்பிட்டுள்ளார்.

3.  முதலாம் பராந்தகன்:

இடம் - கரந்தை. தஞ்சாவூர், கருந்தட்டாங்குடி வசிட்டேஸ்வரர் ஆலய கருவறை  அதிட்டானத்தில் ஒரு அரசன் சிவலிங்கத்தை வணங்குவது போல் உள்ள ஒரு சிற்பம். இந்த அதிட்டான பட்டிகை பராந்தகன் கலையமைதி  என்பதால் இவர் முதலாம் பராந்தகனாக இருக்கக்கூடும்.

4.  இராஜராஜன்:

இடம் - திருவிசலூர்.  கும்பகோணம் அருகே உள்ள திருவிசலூர் யோகநந்தீஸ்வரர் ஆலயம்.  இக்கோவிலில் முதலாம் இராஜராஜன் தனது தேவியார் லோகமாதேவியாருடன் துலாபாரம் செய்து இரணியகர்ப்பம் புகுந்த செய்தி கல்வெட்டாக உள்ளது.  கருவறையின் தென்புறச்சுவற்றில் இராசராசனும் அவனது தேவியும் லிங்கத்தை வழிபடும் சிற்பம் உள்ளது.  இச்சிற்பம் பழுதுபட்டுத் தேய்ந்து போனதால், இப்போது நாம் பார்ப்பது பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட ஒன்றாகும்.

5.  செம்பியன் மாதேவி:
இடம் - சக்கரப்பள்ளி மற்றும் செம்பியன் மாதேவி.

அய்யம்பேட்டை அருகே உள்ள சக்கரப்பள்ளி. அர்த்தமண்டபச் சுவரின் வெளிப்பக்கம் கோட்டங்களுக்கு நடுவில் ஒரு சிற்பத்தொகுதியும் ஒரு கல்வெட்டும் உள்ளது. இக்கோவில் செம்பியன் மாதேவியரால் திருப்பணி செய்யப்பட்ட ஒன்று.  ஒரு மேடைமீது ஒரு சிவலிங்கத்திற்கு மாலை சூட்டப்பட்டு, இருபுறமும் குத்துவிளக்குகளும், லிங்கத்தின் மேல் ஒரு குடையும் இரண்டு சாமரங்களும் காட்டப்பட்டுள்ளது. எதிரே செம்பியன் மாதேவியார் இரு கரம் கூப்பி இறைவனை வணங்குகிறார். அவரின் பின்னே பணிப்பெண் ஒருவர் கையில் மாலையைப் பிடித்தவாறு உள்ளார்.


நாகை அருகே உள்ள செம்பியன் மாதேவி என்னும் ஒரு கிராமம். இவ்வூர் அம்மையின் பெயரிலேயே அமைந்த ஊர். இங்கு நின்ற நிலையில் கரம் கூப்பி வணங்குவதுபோல் செம்பியன் மாதேவியின் சிற்பம் உள்ளது.

6.  இராஜேந்திரன்:
இடம் - திருவாரூர், பனையாவரம், மானம்பாடி.

திருவாரூர் கோயிலின் இரண்டாம் திருச்சுற்று வடமேற்கு மூலையில் உள்ள ஒரு சிற்பம் இராஜேந்திரன் மற்றும் பரவை நங்கையின் படிமமாக உள்ளது.  விழுப்புரம் அருகே உள்ள பனையாவரம் என்னும் பரவைபுரம். இக்கோவிலில் இராஜேந்திரசோழனுக்கும் பரவை நங்கைக்கும் சிலைகள் எடுத்து வணங்கியதாக இராஜேந்திரசோழனின் புதல்வர்களான இராசாதிராசனும், இரண்டாம் இராஜேந்திரனும் கூறும் கல்வெட்டு உள்ளது.


கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி கோவிலின் தென்புறத்தில் ஆடவல்லானை வணங்கும் தோற்றத்தில் இராஜேந்திரனும் அவனது தேவியர்களும் உள்ளனர்.

7.  மூன்றாம் குலோத்துங்கன்:

இடம் - குடவாயில், திருநள்ளாறு, திருவலங்காடு.  குடந்தை திரிபுவனம் அருகே உள்ள திருவலங்காடு கோயிலில் இருகரங்களும் கூப்பிய நிலையில் உள்ள ஒருவர்  வாள் ஒன்றை மார்போடு அணைத்துள்ள  அழகிய கற்படிமம் உள்ளது.  இவர் தலையின் மேல் திருவடிகள் இரண்டைச் சுமப்பதுபோல் அமைந்துள்ளது. இப்படிமம் மூன்றாம் குலோத்துங்கனின் உருவம் என்று குடந்தை சேதுராமன், S.R.பாலசுப்ரமணியன் மற்றும் நாகசாமி ஆகியோர் சான்றுகளுடன் விளக்கம் அளிக்கின்றனர்.

8.  இரண்டாம் ராஜராஜன்:

இடம் - உடையாளூர் மற்றும் தாராசுரம் (தற்போது தஞ்சை அருங்காட்சியகம்).  தாராசுரம் கோவிலை எழுப்பிய இராஜகம்பீரன் என்னும் இரண்டாம் இராசராசன் தனது தேவி புவனமுழுதுடையாளுடன் இருக்கும் படிமம் தாராசுரத்திலிருந்தது. தற்போது அச்சிற்பம் தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ளது.  இதனை இவனது மகன் மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியில் காணப்படும் செய்திகளைக் கொண்டு உறுதி செய்யலாம். இதே அமைப்புடைய சிற்பத்தொகுதி ஒன்று உடையாளூர் கைலாசநாதர் ஆலய கருவறையின் முன்பாகவும்  உள்ளது.

9.  மும்முடிச்சோழனான கிருஷ்ணன் பிரம்மராயன்:

இடம் - திருவெண்காடு ( தற்போது தஞ்சை அருங்காட்சியகம்). திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவிலில் ஒரு செப்பு படிமம் ஒன்று பூமிக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இப்படிமம் மும்முடிச்சோழன் பிரம்மராயன் கிருஷ்ணன் ராமன் என்பதாக ஒரு யூகம்.

10.  விக்ரமச்சோழன்:
இடம் - சிதம்பரம்.

11.  பாண்டியன் ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையன்:
இடம் - திருப்பரங்குன்றம் துர்க்கை குடவரை.

12.  சடாவர்மன் சுந்தரபாண்டியன்:
இடம் - தஞ்சை பெரியகோவில் அம்மன் கோவில்.


13.  மாமல்லபுரம் ஆதிவராகர் (பரமேசுவர மகாவராக விஷ்ணு கிரகம்)  குடவரையில் இரண்டு பல்லவ மன்னர்களின் சிற்பங்கள் உள்ளன.  இச்சிற்பங்களில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு.




குடவரையின் வடக்குச் சுவரில் காணப்படும் ஒரு  சிற்பத்தில் மன்னன் ஒருவன் அரியணையில் அமர்ந்துள்ளான். இடது கையை தோளின் மீது வைத்து, வலக்கை முத்திரை ஒன்றை அமைக்கிறது. மகுடம் சூடி, காதணிகளை அணிந்துள்ளான். இருபுறமும் அவனது இரு தேவியர் நிற்கின்றனர். இச்சிற்பத்தின் மேலே "சிம்ம விண்ணப் போத்திராதிராசன்" என்ற பெயர் கிரந்த கல்வெட்டாக உள்ளது.



தென்புறச் சுவரிலும்  ஒரு சிற்பத்தில் மன்னன் ஒருவனும் அவனது இரு தேவியருடன் நிற்கின்றனர். மன்னன் தனது  இடது கையில் தனது தேவியின் கரம் பற்றியவாறு உள்ளார். அவற்றின் தோற்றம், அழகு, அணிகலன் என்று யாவும் ஒரு அரசனுக்குரியத் தோற்றம். இச்சிற்பத்தின் மேலே "மகேந்திர போத்திராதிராசன் " என்று எழுதப்பட்டுள்ளது.
(Archaeological Report  1922 - 3 p.94)

இவர்கள் இருவரும் சிம்மவிஷ்ணு மற்றும் முதலாம் மகேந்திரன் என்பதாக  முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தை வலியுறுத்தி டாக்டர்.மீனாட்சி  தனது Administration and social life under pallavas என்னும் நூலில் இது முதலாம் நரசிம்மன் எடுத்த குடவரை. அச்சிற்பத்தில் இருப்பது சிம்மவிஷ்ணு மற்றும் முதலாம் மகேந்திரன் என்கிறார்.

இச்சிற்பத்தில் இருப்பது முதலாம் நரசிம்மன் மற்றும் அவரது மகன் இரண்டாம் மகேந்திரன் என்பதும்  ஒரு முடிவு (S.i.i. vol 12 no 17). சிலைகளின் மேல் உள்ள கல்வெட்டுகளை நன்கு ஆராய்ந்து இவர்கள் இராசசிம்மன் மற்றும் அவரது மகன் மூன்றாம் மகேந்திரன் என்ற நாகசாமியின் கூற்று சரியாக இருக்கலாம்.

மேலும் பல கோவில்களில் பல மன்னர்களின் சிற்பங்கள் உள்ளது. மற்றும் பல்வேறு கோவில்களில் உள்ள விஜயநகர மன்னர்கள் மற்றும் சிற்றரசர்களின் உருவங்கள் என்று ஏராளமாய் உள்ளன.


கேள்வி:
புதுக்கோட்டை பரிவாதிநி கல்வெட்டு யாருடையது? அதன் காலம் என்ன?

விளக்கம்:
குடுமியான்மலை கருவறையின் வலப்பக்கம் மற்றும் திருமய்யம் குடவரைக் கோவில் வடசுவரிலும் இக்கல்வெட்டு காணப்படுகிறது. புதுக்கோட்டை அருகே உள்ள மலையக்கோவிலிலும் தெளிவாக அழகான ஒரு செவ்வகக் கட்டத்தினுள் பரிவாதிநி கல்வெட்டு இருக்கிறது.

கட்டத்தினுள் பரிவாதிநிதா என்ற பல்லவ கிரந்தத்திலும், அதன் கீழே தமிழ் மற்றும் கிரந்தத்தில்...

என்னே ப்ரமாணம்
செய்த வித்யா பரிவாதினி கற்
( கிரந்தம்)

“கற்கப்படுவது காண்
ஞ்சொல்லிய புகிற்பர்க்கும் திமி
ழக் கந்திருவத்துக்கும் உரித்து”

என்ற வாசகங்களுடன் உள்ளது.

எழுத்தமைதி 7 ம் நூற்றாண்டு ஆகும். இக்கல்வெட்டில் உள்ள சில எழுத்துக்கள் மகேந்திர வர்மனின் மற்ற குடவரையில் காணப்படும் எழுத்துக்களுடன் ஒத்துப்போவதால் இந்த பரிவாதிநி கல்வெட்டும் மகேந்திரனின் காலமே. பரிவாதிநி என்றால் ஒரு வீணை என்றும், இது ஒரு இசை சம்பந்தமுடைய செய்தி என்பதும் பெரும்பாலான அறிஞர்கள் முடிவு.


கேள்வி:
கருவூர்த்தேவர் பற்றிய சரியான தரவுகள் என்ன? அவர் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்தவரா?

விளக்கம்:
கருவூர்த்தேவர் ஒரு மிகச்சிறந்த சைவ சிவனடியார். தீந்தமிழ் பாடல்களால் 10 சிவதலங்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் 9 ஆம் திருமுறையில் தொகுக்கப்பட்டு பதிகங்களின் இறுதியில் கருவூரானேன் என்று தன் பெயரைக் கையொப்பமாக இட்டுள்ளார். இவரது காலம் கி.பி. 11 ம் நூற்றாண்டு.

ஆனால், இவர் இராஜராஜர் காலத்தைச் சேர்ந்தவர் என்பதற்கோ, பெரியகோவிலில் பல அற்புதங்களை நடத்தினார் என்பதற்கோ எவ்வித தொல்லியல் சான்றுகளும் இல்லை. கி.பி. 16 ம் நூற்றாண்டில், நாயக்கர் காலத்தில், வடமொழியில் எழுதப்பட்ட கருவூர் மான்மியம் என்னும் ஒரு நூல் கருவூர் புராணம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலில் கருவூர்த் தேவர் தஞ்சை பெரியகோவிலில் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த நிகழ்வுகள் இதில் உள்ளன.  இந்நிகழ்வுகளுக்குச் சான்றுகள் இல்லை.  கருவூர்த்தேவரின் பெயர் எந்தக் கல்வெட்டிலும் இல்லை. மேலும், பெரியகோவில் ஓவியத்தில் இருப்பது கருவூர்த்தேவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் இராஜராஜரின் குரு என்றால் நிச்சயம் கல்வெட்டில் இடம்பெற்றிருப்பார்.

பெரியகோவிலில் இருக்கும் கருவூரர் சன்னிதி மிகவும் பிற்காலத்தில் எடுக்கப்பட்டது. ஆக, கற்பனைப் புனைவு (Myth) எனப்படும் கதைகளைத் தவிர்த்து சான்றுகள் அடிப்படையிலான உண்மை (Fact) எனப்படும் தரவுகளை அறிவோம். ஏற்கனவே கூறியது போல் இவர் ஒரு சிவனடியார். தில்லை திருச்சிற்றம்பலம், திருக்களந்தை ஆதித்தேஸ்வரம், திருமுகத்தலை, திரைலோக்கியசுந்தரம், கங்கைகொண்ட சோழேச்சரம், தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர் ஆகிய இந்த பத்து சிவதலங்களைக் கருவூரர்  பாடியுள்ளார். இவ்வூர் அமைப்புகளையும், கோவில்களையும், நேரடியாகப் பார்த்து உணர்ந்து அனுபவித்துப் பாடியுள்ளார். இவர் பாடிய பாடலில் உள்ள செய்திகளை தொல்லியல் சான்றுகளாகக் கொள்ளலாம்.

படைகள் நிறைந்த மதிற்சுவர், அதனுள் நெடுநிலைமாடங்கள், மதிற் சுவரைச் சுற்றி அகழிகள், அகழியில் முதலைகள், எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும் தஞ்சாவூர் மாளிகையில் வசிக்கும் பெண்கள்  இசைக்கும் யாழின் ஒலி, ஒலித்துக்கொண்டேயிருக்கும் களிறுகளின் பிளிறும் ஒலியும் என மதில் சுவர்கள் சூழ்ந்திருக்கும் தஞ்சை நகர்  என்று தஞ்சாவூர் பற்றி இவ்வாறு கூறுகிறார். அழகிய இளம் பெண்கள் நடனம் செய்யும் நாடகசாலை மதில் சூழ்ந்த தஞ்சைக் கோவில்தான் இராசராசேச்சரம். அன்றைய தஞ்சை, அதன் பெரியகோவில் பற்றி இவர் அழகுத்தமிழில் மிகுந்த ரசனையுடன் பாடியுள்ளார்.

கல்வெட்டுகளில் ராஜராஜீச்சரம் என்று வடமொழி கலப்பில் இருக்கிறது. ஆனால், கருவூர்த்தேவரோ 'இராசராசேச்சரம்' என்று கூறுகிறார். அற்புதமான தமிழ் மொழி பற்றாளர்.கங்கை கொண்ட சோழபுர இறைவனை 'கன்னலே தேனே அமுதமே' என்கிறார். இவருடைய அனைத்து திருமுறைப் பாடல் செய்திகளையும் வரலாற்றுத் தரவுகளாக, சான்றுகளாக எடுத்துக்கொள்க. புனைவுகளைத் தவிர்த்து உண்மைகள் உதவியுடன் தேடல்களைத் தொடருங்கள்.


கேள்வி:
மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவர் உத்தமசோழனின் மகன்தானா?

விளக்கம்:
ஆம்; மதுராந்தகன் கண்டராதித்தன் என்பவர் ஒரு அரசகுலத் தோன்றலாக உத்தமசோழனின் ஒரு சில கல்வெட்டுகளிலும், இராஜராஜனது கல்வெட்டுகளிலும் வருகிறார். இவரது பெயர் அமைப்பை வைத்து  இவர் உத்தமசோழனின் மகன்தான் என உறுதி செய்கின்றனர்.

இராஜராஜனின் 7 ஆம் ஆட்சி யாண்டு குறித்துக் கூறும் திருவல்லம் கல்வெட்டில் மதுராந்தகன் கண்டராதித்தனார் என்பவர் இறைவனை வணங்கி அங்கு நடந்த சில தவறுகளைக் கண்டறிந்தார் என்ற செய்தி உள்ளது. திருவல்லம் கல்வெட்டு (S.i.i. vol 3 no 59.)

இக்கல்வெட்டைக் கொண்டு தொல்லியல் அறிஞர்கள்,
Maduranthkan kandaradittan i.e., Gandaraditya the son of Madurantaka, must have been a person of high standing and influence. He can not be identical with the chola king Gandaraditiya Varman, because the latter had died before the region of Arinjaya, the grand father of Rajaraja I. Perhaps he was in (otherwise unknown) son of Madurandthka the son of Gandratyaavarman and immediate predecessor of Rajaraja I.
என்பர்.   இதை நன்கு ஆய்வு செய்த நீலகண்ட சாஸ்திரியும் தனது நூலில் 'We find accordingly Maduranthkan Ganaradittan who must have been a son of Madurantaka Uttama chola occupying high officer under Rajaraja'  ('The cholas' - Page:1 58) எனக் கூறுகிறார்.


கேள்வி:
சுந்தரச் சோழனின் சரியான ஆட்சி யாண்டு காலம் என்ன?

விளக்கம்:
கி.பி. 957 - 975


கேள்வி:
இரண்டாம் இராசாதிராசனின் மகன்தான் மூன்றாம் குலோத்துங்கனா?

விளக்கம்:
மூன்றாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசாதிராசனின் மகன் அல்ல. அவன் இரண்டாம் இராஜராஜனின் மகன். பல்லவராயன் பேட்டை கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. இரண்டாம் இராஜராஜன் மகனுக்கு முடி கவிழ்த்த செய்தியும் உள்ளது.


கேள்வி:
இராஜமகேந்திரன் யார்?

விளக்கம்:
இரண்டாம் இராஜேந்திரன் ஆட்சிக்கு வந்தபின் தன் தம்பி மும்முடிச்சோழனை சோழபாண்டியன் ஆக்கினான். இரண்டாம் இராஜேந்திரனே ஜடாவர்மன் சுந்தரசோழபாண்டியனாக பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.முதலாம் இராஜாதிராஜன் இறந்தபிறகு சுந்தரசோழபாண்டியன் இரண்டாம் ராஜேந்திரனாகச் சோழ நாட்டு மன்னனாகிய பின் அவனது தம்பி மும்முடிச்சோழனை சோழபாண்டியனாக்கி மாறவர்மன் பராக்கிரம சோழபாண்டியன் என்ற பெயரில் பாண்டி நாட்டை ஆட்சி செய்யுமாறு அமர்த்தினான். இரண்டாம் இராஜேந்திரனுடன் முடக்காற்றுப்போரில் இந்த சோழபாண்டியனும் கலந்து கொண்டான். பெலவோலா பகுதியில் உள்ள கவர்வாட் என்ற இடத்தில் உள்ள கன்னடக் கல்வெட்டில் அங்கு கங்கனுடன் நடந்த போரில் சோழபாண்டியன் என்ற பெயர்கொண்ட சோழன் ஒருவன் இறந்துவிட்டதைக் கூறுகிறது. ஸ்ரீரங்கத்தில் இராஜமகேந்திரனின் திருப்பணி பற்றிய தகவல் கிடைக்கிறது. இராஜமகேந்திரன் என்பவர் முதலாம் இராஜேந்திரனின் மூன்றாம் மகன் ஆவார்.


கேள்வி:
பெரியகோவில் கட்டுமானம் ஆரம்பமான காலம் எது?

விளக்கம்:
தெரியாது.


கேள்வி:
இராஜேந்திரசோழனின் தாய் வானவன்மாதேவியார் எந்த வம்சம்? அவர் கொடும்பாளூர் வம்சம் என்பதற்குச் சான்றுகள் உண்டா?

விளக்கம்:
எனக்குத்தெரிந்து எந்தக் கல்வெட்டிலும் தரவுகள் இல்லை. பின்னர் தெரியவருகிறதா என்று பார்ப்போம்.


கேள்வி:
இராசாதிராசன் கல்வெட்டில் வரும் சிறியதாதை எறிவலிச்சோழன் என்பவர் முதலாம் இராஜேந்திரனின் சகோதரனா?

விளக்கம்:
முதலாம் இராஜாதிராஜனின் கல்வெட்டில் சிறியதாதை என்று மட்டும் உள்ளது. பெயர் கூறப்படவில்லை. இரண்டாம் இராஜேந்திரனின் மணிமங்கலம், திருமழபாடி கல்வெட்டுகளில் சிறியதாதை கங்கை கொண்டான் என்று காணப்படுகிறது.


கேள்வி:
பல்லவச்சிற்பிகளின் பெயர் ஏதேனும் கல்வெட்டில் உள்ளதா.?

விளக்கம்:
மாமல்லபுரம் செல்கிற வழியில் பூஞ்சேரி என்ற ஊரின் அருகே உள்ள சிறு சிறு பாறைகளில் சில சிற்பிகளின் பெயர்கள் காணப்படுகிறது.
1. கே ( வா) த பெருந்தச்சன்.
2. குணமல்லன்.
3. பைய்ய மிழிப்பான்.
4. சாதமுக்கியன்.
5. கலியா ( னி)
6. நமோ திருவொற்றியூர் அ( பா)ஜர்.
7. கொல்லன் (சே) மகன்.
(Are 1932 - 33 / 105 - 107)


கேள்வி:
செப்பேடுகளில் காணப்படும் புராண இதிகாச செய்திகளை வரலாற்றுத் தரவுகளாகக் கொள்ளலாமா?

விளக்கம்:
ஒரு வரலாற்று ஆய்வாளர்க்கு, செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து செய்திகளும் தரவுகள்தாம். அக்காலத்தில் சமூக அரசியல் தளங்களில் நிலவிய நம்பிக்கைகளையும் கருத்துகளையும் அச்செய்திகள் பிரதிபலிக்கிறன.

நடைமுறைப்படுத்திய தரவுகளை மட்டும்தான் ஆவணங்கள் தருகிறது. அச்சமூகமக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் நமக்குத் தெரியவேண்டுமல்லவா? அதையும் சேர்த்து நாம் தெரிந்துகொள்ளும்போதுதான் வரலாறு நிறைவு பெறும். ஆகவே வரலாற்றுத்தரவுகளோடு மக்களின் வாழ்வியலில் திகழும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தும் ஊடகமாகத்தான் இந்த புராண இதிகாச செய்திகள் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக,  மனுநீதிச்சோழன், சிபிச் சக்கரவர்த்தி கதைகள். இவர்கள் கதைகள் மூலம் சொல்லப்படும் செய்திகள் அன்றைய மன்னர்கள் எல்லா உயிர்களையும் சமமாகப் பாவிக்கும் சட்டதிட்டங்களையே தங்கள் ஆட்சியில் கொண்டிருந்த செய்தியும், நடைமுறைப்படுத்திய செய்தியையும், தாங்கள் செங்கோல் பிறழாமல் ஆட்சி செய்வதையும் ஆவணப்படுத்தியுள்ளனர். அன்றைய அரசர்களின் சமூக மக்களின் எண்ணவோட்டத்தையும், உணர்வுகளையும், நம்பிக்கைகளையும், பிரதிபலிக்கும் தரவுகளே புராண இதிகாச செய்திகள்.


கேள்வி:
சோழன் தலைகொண்ட வீரபாண்டியன். வீரபாண்டியன் தலைகொண்ட சோழன் யார்? உத்தமசீலிதான் என்னும் கூற்றுக்குச் சான்றுகள் உண்டா?

விளக்கம்:
நேரடியான சான்றுகள் ஏதும் இல்லை. ராஜாதித்தன் போல பராந்தகனின் மற்றொரு மகனாக உத்தமசீலியின் பெயரும் காணப்படுகிறது. அரசனாகும் முன் இறந்துபோன இளவரசன். ராஜாதித்தன் ராஷ்டிரக்கூடப்போரில் இறந்தது போல் உத்தமசீலியும் பாண்டியப்போரில் இறந்திருக்கலாம். வீரபாண்டியனை வென்ற சோழன் ஒரு அரசனுக்கு நிகரானவன் என்பதால் அந்த சோழன் உத்தமசீலியாக இருக்கலாம் என்று யூகமாக முடிவு செய்யலாம்.


கேள்வி:
உத்தமசீலியின் கல்வெட்டுகள் பாண்டிய நாட்டில் கிடைக்கிறதா?

விளக்கம்:
இல்லை.


கேள்வி:
மதுரைகொண்ட இராசகேசரி சுந்தரச்சோழனின் கல்வெட்டுகள் மதுரையில் உண்டா?

விளக்கம்:
இல்லை.


கேள்வி:
ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றிய புதுத்தரவுகள் ஏதேனும் உள்ளதா? கொலையைப் பற்றிய தங்கள் பார்வை என்ன?

விளக்கம்:
புதுத்தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. உடையார்குடி கல்வெட்டு மட்டும்தான். ஆதித்தகரிகாலன் கொல்லப்பட்டதாகவும், அதில் ஈடுபட்டவர்களாக நிரூபணம் ஆனவர்களது நிலம் பறிக்கப்பட்டுள்ளது. அப்போதைய நடைமுறைச் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கை இது. பிரம்மாதிராயர்கள் என்போர், சட்டம் நீதி நிர்வாகம் போன்றவற்றைப் படித்துத் தேர்ச்சி பெற்று மன்னவனால் பிரம்மாதிராயர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டவர்கள். நாட்டில் சட்டத்திற்கும் நீதிக்கும் நிர்வாகத்திற்கும் துணையாய் நிற்பவர்கள். இவை பாதிக்கப்படும்போது சரி செய்யும் பொறுப்பு இவர்களுக்குண்டு. திட்டமிட்டோ, திட்டமிடாமலோ கொலை செய்யும் சந்தர்ப்பம் அமையப் பெறாதவர்கள். இக்கொலை, இவர்களாலே நிகழ்ந்தது என்றால், அரசகுடும்பத்து வாரிசு பிரச்சனையில் தலையிட்டு நடைமுறைப்படுத்த முற்பட்டபோது, ஏதோ நிகழ்ந்திருக்கிறது. இது விவாதிக்கப்படவேண்டியது.


கேள்வி:
வீராணம் ஏரியை வெட்டியவர் இராஜதித்தர் என்பதற்குச் சான்றுகள் உண்டா?

விளக்கம்:
காட்டுமன்னார்குடி என்ற அன்றைய உடையார்குடி வீரநாரயண சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டது. வீரநாரயணன் என்பது முதலாம் பராந்தகனின் பெயர்களுள் ஒன்று. அந்த ஏரியும் பராந்தகன் பெயராலேயே அமைந்திருந்தது. அந்த ஏரியை வெட்டியவர் பெயர் எங்கும் காணப்படவில்லை.


கேள்வி:
உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் இராசராசனைப்பற்றிய தரவுகள் உண்டா?

விளக்கம்:
எனக்குத் தெரிந்து இல்லை.


கேள்வி:
இராஜராஜன், சத்யாச்சரனுடன் மேற்கொண்ட போரில் வெற்றி பெற்றாரா? முதலாம் இராஜேந்திரனின் மகன் ஒருவன் மேலைச் சாளுக்கியப்போரில் கொல்லப்பட்டாரா?

விளக்கம்:
இராஜராஜன், சாளுக்கியன் சத்யாச்சரனை வென்ற செய்தி கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் மூலம் உறுதிசெய்யப்படுகிறது. கவர்வாட் கல்வெட்டு, சாளுக்கியருடன் நடந்த போரில் சோழபாண்டியன் என்ற பெயரைக்கொண்ட ஒரு சோழ அரசன் இறந்தான். அவன் அங்குள்ள சமணத்தலங்களை அழித்த பாவத்திற்காக இறந்துவிட்டான் என்று கல்வெட்டு செய்தி உள்ளது. (Ep.ind.vol 15 no 23. & Early chola. N.sethuraman Pa.59 - 63). இவன்தான் ராஜமகேந்திரன் என்று முன்பே கண்டோம். இறக்கும்போது அவன் சோழகங்கன்.


கேள்வி:
ஐயனார் அல்லது சாத்தன் எந்த மதம்? சமணமா? பௌத்தமா? ஆசீவகமா?

விளக்கம்:
இன்னொன்றையும் விட்டுவிட்டீர்களே. வைதீகமா என்றும் கேட்டிருக்கலாம். இவற்றில் எதுவுமில்லை. அவர் தமிழ்க் கடவுள். சங்க இலக்கியங்களிலும் சரி, கல்வெட்டிலும் சரி, அய்யன், சாத்தன் என்ற பெயர்கள் மிக அதிகம். அய்யன் கோவில் இல்லாத ஊர்களே இல்லை. இன்றும் அன்றும். எடுத்துக்காட்டாக, தஞ்சை பெரியகோவில் கல்வெட்டுகளில் ( Vol 2 , part 3 ,4 ,5 p.572) சாத்தன் என்ற பெயரில் ஏராளமானவர்களைக் காணலாம்.

தமிழ்நாட்டில் நுழைந்த சமயங்களான சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்ற மதங்கள் புகழ்பெற்ற தமிழ்க் கடவுளைத் தங்கள் மதங்களில் இணைத்துக்கொண்டன.  குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்களுக்குரிய தெய்வங்கள் பற்றி தொல்காப்பியர் கூறுகிறார். மருதநிலத்தின் கடவுளாக, "வேந்தன் மேய தீம்புனல் உலகமும்"  எனப்படும். இந்த வேந்தன்தான் அரசக்கடவுள் சாத்தன். தமிழர்தம் இந்திரன். இந்திரன் மழைக்கடவுள். வளம் தரும் கடவுள். அதனால் மருத நிலக்கடவுளாக வணங்கப்பட்டார். அதனால் நம் தமிழர்தம் மதங்களாகச் சைவம், வைதீகம்  சாத்தனைக் கொண்டாடியிருக்கின்றன.
சைவம் காமாட்சி அம்மன் கோவில் - சாத்தன்.
பிடவூர் சாத்தன் - சேரமான் பெருமாள் நாயனார்.(திருக்கயிலாய ஞான உலா).
வைதீக சதுர்வேத மங்கலங்களில்,
உத்திரமேரூர் - அய்யன் மஹா சாஸ்தா.
ஐயூர் அகரம் - சாஸ்தா.
உக்கல் - அய்யனார் (மஹாவிஷ்ணுக்கருகில் சிறப்பான வழிபாடு).
கேரள  கொடுந்திரப்பள்ளி அக்கிரகாரம் -அய்யனார் (Tvs vol 1. - வேதிய அய்யனார்).


கேள்வி:
தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு எப்போது துவங்கியது? வாதாபியிலிருந்து வந்ததா? அல்லது  அதற்கு முன்னரே இருந்ததா?

விளக்கம்:
வாதாபியிலிருந்து வரவில்லை.  சேக்கிழார், பெரிய புராணத்தில் பரஞ்சோதி வாதாபியிலிருந்து என்னென்ன பொருட்கள் கொண்டுவந்தார் என்று கூறியுள்ளார். அதில் கணபதி இல்லை. பரஞ்சோதி காலத்திற்கு முன்பே பிள்ளையார் பட்டி கணபதி வழிபாடு ( கி.பி. 4 - 6 இல்) நம்மிடையே இருந்தது.


கேள்வி:
சோழர் காலத்தில் சாதியப் பிரிவு எவ்வாறு இருந்தது? வேறுபாடு மற்றும் தீண்டாமை இருந்ததா?

விளக்கம்:
செய்யும் தொழில் அடிப்படையில் நம் சமூக மக்கள் சேர்ந்து சேர்ந்து வாழ்ந்தனர். சேர்ந்து வாழுமிடங்கள் சேரி எனப்பட்டது. கம்மாளச்சேரி, பறைச்சேரி, பார்ப்பனச்சேரி, வண்ணாரச்சேரி, என்ற பல பகுதிகள் உள்ள குறிப்புகள் உள்ளனவே தவிர அதை ஜாதியாகக் கருத்தாக்கம் செய்யவில்லை. தீண்டாச்சேரி என்று ஒன்றும் இருந்தது. அதுவும் தொழில் அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும்.


கேள்வி:
விஜயாலயன் தந்தையைப்பற்றியத் தரவுகள் உண்டா?

விளக்கம்:
பள்ளன்கோவில் செப்பேடு - சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு என்னும் பெயர் கொண்ட சோழனை வென்றான் என்கிறது.
வேலூர் பாளையச் செப்பேடு - குமாரங்குசன் என்ற சோழனைக் கூறுகிறது.
சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடு - கரிகாலன், செங்கணான், நல்லடிக்கோன் ஆகியோரைக் கூறிவிட்டு பின்னர் பொதுவாக வளவன், ஸ்ரீ கண்டன் என்ற பெயர்களைக் கூறுகிறது, என்றாலும் விஜயாலயனின் முன்னோன் அல்லது தந்தைப்பெயர் குறிப்பிடப்படவில்லை.

வேலஞ்சேரி முதலாம் பராந்தகன் செப்பேடு -  சோழர் வம்சத்தைப் பற்றிக் கூறும்போது, பிரம்மா - மரீசி - உசீநரா - சிபி - கரிகாலச் சோளேந்திரன் - கோச்செங்கணான்- ஒற்றியூரன். பிறகு; ஒற்றியூரன் மகனுக்குக் குபேரனை ஒத்த ஆதித்தியன் பிறந்தான். ஆதித்தனுக்கு மகனாகப் பராந்தகன் பிறந்தான் என்கிறது.
ஒற்றியூரன் மகனும், ஆதித்தனின் தந்தையும் விஜயாலயன் தானே,  ஆகவே, விஜயாலயனின் தந்தை ஒற்றியூரன் எனலாம்.  (REF: Thiruthani and velanjeri copper plates, by Dr. R. Nagaswamy).


கேள்வி:
பார்த்திபேந்திரனின் ஒரு கல்வெட்டு (திருவிடந்தை) மட்டும்  அவரை கோபரகேசரி என்கிறது. இக்கல்வெட்டில் பிழையேதும் உள்ளதா? பார்த்திபேந்திரன் யார்? அவர் பல்லவ வம்சமா? சோழனா? அல்லது வேறு யாரேனுமா? இவன் ராஜராஜனாக இருக்கலாமா?

விளக்கம்:
திருவிடந்தைக் கல்வெட்டு (S.i.i. vol 3 no 180) சொல்லும் செய்தியில் பிழையேதும் இல்லை. அது 'கோப்பரகேசரி வேந்திராதிபந்மர்க்கு யாண்டு ஆறாவது' எனத்தொடங்குகிறது. இவனது 6 மற்றும் 7 ம் ஆட்சி யாண்டுகளில் பாண்டியன் தலைகொண்ட விருது இணைத்தும் விடுத்தும் உள்ளது (Vol 3. 181 , 182 , 183 , 184).

கோபரகேசரி என்பதால், இவன் ஒரு சோழ அரசனாக இருக்க வேண்டும். இல்லையேல் சோழர்களது சிற்றரசர்களில் ஒருவனாக இருக்கவேண்டும் (ஆங்கிலச்சுருக்கம் - S.i.i. vol 3 no 180). இவன் பல்லவனா, சோழனா அல்லது வேறு மரபினனா என்பதற்கு உறுதியான ஆதாரமில்லை. சோழன் பெயரில் பல்லவநாட்டில் ஆட்சிபுரிந்தான்.சோழருக்கும் பாண்டியருக்கும் நடந்த போரில் கலந்துகொண்டு வெற்றியிலும் பங்குபெற்றவன். 'வீரபாண்டியன் தலைகொண்ட கோபரகேசரி' என்று ஆதித்த கரிகாலனும், 'வீரபாண்டியன் தலைகொண்ட கோபார்த்திவேந்திராதிபதி வர்மன்' என்று இவனும் விருதுப் பெயர் கொண்டனர்.

இவன் சோழவம்சத்தைச் சேர்ந்த தொண்டைமண்டலத்தின் பொறுப்பாளனாக ஆட்சிபுரிந்தான் என ஊகிக்கலாம். கோபரகேசரி என்பதால் இவன் பல்லவ வம்சத்தவன் இல்லை எனலாம். இவன் இராஜராஜனாக இருக்கலாமோ என்பதைப் போதியத் தரவுகள் கிடைத்தால் உறுதிசெய்வோம்.


கேள்வி:
தஞ்சை பெரியகோவில் கட்டுமானத்திற்குக் கற்கள் எங்கிருந்து வந்தது?

விளக்கம்:
ஸ்தபதிகளும், நிலவியலாளரும்தான்  இதற்கு விடை கூற வேண்டும். எந்த ஊர் மலையிலுள்ள கற்களும், ராஜராஜீஸ்வரமுடையார் கோவில் கற்களும் ஒரே வகையைச்சார்ந்தவை என்பதைக் கண்டறிந்து கூறவேண்டும்.


கேள்வி:
குலோத்துங்கனின் தளபதி கருணாகரத் தொண்டைமான் இலங்கையை ஆட்சி செய்தாரா?

விளக்கம்:
இல்லை.


கேள்வி:
இராஜராஜனின் மகன் வழி வாரிசு ஆளவந்தான் சோழபாண்டியன் என்பவர் முதலாம் குலோத்துங்கனுடன் வாரிசுரிமைப் போட்டியில் ஈடுபட்டாரா?

விளக்கம்:
முதலாம் இராஜேந்திரன் தனது மூத்தமகன் இராசாதிராசனுக்கு இளவரசு பட்டம் கட்டி, தனது இரண்டாம் மகன் சுந்தரச்சோழன் என்பவனை சுந்தரசோழபாண்டியன் என்ற பெயரில் பாண்டியநாட்டுப் பிரதிநிதியாக ஆளச் செய்ததுபோல, அவனது புதல்வர்களும் இம்முறையைப் பின்பற்றினார்கள்.

முதலாம் இராசாதிராசன் தனது சகோதரர்களையும், தனது தந்தையின் சகோதரர்களையும் தாங்கள் வெற்றிபெற்ற பல்வேறு நாடுகளுக்குப் பிரதிநிதிகளாக அனுப்பி ஆளும்படி செய்ததை மணிமங்கலம் கல்வெட்டும் கூழம்பந்தல் கல்வெட்டும் உறுதி செய்கின்றன (S.i.i.vol 3 no 28 & S.i.i. vol 7).

முதலாம் இராசாதிராசனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் இராஜேந்திரனும் அவ்வாறே நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டான். அவனுடைய திருமழபாடி கல்வெட்டு (S.i.i. vol 5 no 647) தன் தந்தையின் சகோதரர் மகன் ஆளவந்தானையும் குறிப்பிடுகிறது. திருவெண்காடு கல்வெட்டும் ஆளவந்தான் பற்றிக் கூறுகிறது. இவனுக்கு இராசாதிராசன் என்ற சிறப்புப் பெயரும் இருந்தது (S.i.i.vol 5 no 976).  இவன் முதலாம் குலோத்துங்கனுடன் வாரிசுரிமைப்போரில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை..


கேள்வி:
முதலாம் ஆதித்தன் மகனான கன்னரத்தேவனுக்கும், முதலாம் பராந்தகனுக்கும் வாரிசுரிமைப் போட்டி இருந்ததா?

விளக்கம்:
முதலாம் ஆதித்தனின் மூத்த அரசி இளங்கோன் பிச்சி. இவர் வல்லவரைய இராஷ்டிரகூடர் இரண்டாம் கிருஷ்ணனின் மகள். இச்செய்தியை ஆதித்தனின் 27 ம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது ( A.r.e. 14 of 1920).  ஆதித்தனுக்குப் பராந்தகன் தவிர கன்னரதேவன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்துள்ளான் (38/ 1895). இவன் இளங்கோன் பிச்சியின் மகன் என்பதும் அதனால் அவரது தந்தை கன்னரதேவன் பெயரை அவர் மகன் பெற்றிருந்தான் என்பதும் பெறப்படுகிறது.  இச்செய்தி தவிர இந்த கன்னரதேவன் பற்றி வேறு எந்த செய்தியும் இல்லை.


கேள்வி:
மேற்கெழுந்தருளிய தேவர் என்பதன் சரியான பொருள் என்ன?

விளக்கம்:
கண்டராதித்தச் சோழன் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். துறவறம் மேற்கொண்டார் என்ற ஒரு கருத்தும் பொதுவாகக் கூறப்படுகிறது. மேற்கே சூரியன் மறைவதுபோல் கண்டராதித்தர் என்ற சோழவம்சத்து சூரியன் மறைந்துவிட்டது என்பது பொருள். இதைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை.







துணை நின்ற நூல்கள்: 
முற்காலச் சோழர் கலையும் சிற்பமும், S.R. பாலசுப்ரமணியன்.
சோழமண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், குடவாயில் பாலசுப்ரமணியன்.
கல்லும் சொல்லும், இரா.நாகசாமி & Article  by R. Nagasamy





_____________________________________________

குறிப்பு:
சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம் நடத்திய கருத்தரங்கில் வரலாற்று ஆர்வலர்கள் எழுப்பிய வினாக்களுக்கு முனைவர் ஆ.பத்மாவதி அளித்த விளக்கங்கள்.
(நன்றி - பகிர்வு திரு. மாரிராஜன்)




No comments:

Post a Comment