Showing posts with label ஆ.சிவசுப்பிரமணியன். Show all posts
Showing posts with label ஆ.சிவசுப்பிரமணியன். Show all posts

Saturday, June 4, 2022

இந்தியாவில் நோய்களும் மருத்துவமும் - ஒரு வரலாற்றுப் பார்வை: நூலறிமுகம்


 
  —  ஆ.சிவசுப்பிரமணியன்

 
வரலாறு என்ற அறிவுத்துறையானது தொடக்கத்தில் அரசியலை மையமாகக் கொண்டே எழுதப்பட்டுவந்தது. பின்னர் சமூகத்தை மையமாகக் கொண்ட சமூக வரலாறாக வளர்ச்சியுற்றது. இதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் மக்களின் சமூக வாழ்வின் பல்வேறு கூறுகளையும் ஆராய்ந்து வெளிப்படுத்தும் சமூக அறிவியலாக மாற்றமடைந்தது. இவ்வகையில் மக்களின் நலவாழ்வில் முக்கியப் பங்காற்றும் மருத்துவத்தின் வரலாறானது வரலாறு என்ற சமூக அறிவியலுக்குள் ஒரு கூறாக இடம்பெற்றது. மருத்துவத்தின் வரலாறு என்னும் போது மனிதர்களைப் பிடித்துத் துன்புறுத்தும் பிணிகளையும், பிணி தீர்க்கும் மருத்துவ முறைகளையும் உள்ளடக்கியது.

பிணியும் பிணி தீர்த்தலும் மருத்துவத்துறை சார்ந்தவை என்பதில் ஐயமில்லை. ஆனால் பிணி வராது தடுப்பதிலும் வந்த பிணியைப் போக்குவதிலும் நாட்டை ஆளுவோருக்குப் பங்குண்டு. அப்பிணிக்கு ஆளான மக்களின் வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர்கள் வாழும் நாட்டின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மையன. இதனால்தான் நாடு என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வள்ளுவர் ஒரு நாடானது ‘ஓவாப் பிணி’ (நீங்காத நோய்) இல்லாது இருக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளார் (குறள்:734).  வரலாற்றுக் கல்வியில் புறக்கணிக்க இயலாத இடத்தைப் பெற்றுள்ள நாடு என்ற நிலப்பரப்பின் சிறப்பை நிலைநாட்டுவதில் நோயின்மையின் இடம் குறித்த சிறப்பான பதிவு இது.


இங்கு அறிமுகம் செய்யப்படும் 'இந்தியாவில் நோய்களும் மருத்துவமும் - ஒரு வரலாற்றுப் பார்வை' (Disease & Medicine in India, A Historical Overview) என்ற நூல் சமூக வரலாற்றில் நோயும் மருத்துவமும் வகித்த பங்களிப்பை இந்திய நாட்டை மையமாகக் கொண்டு அறிமுகம் செய்துள்ளது.  இந்திய வரலாற்றுக் கழகமானது (The Indian History Congress) 2001ஆவது ஆண்டில் தனது அறுபத்தி ஒன்றாவது அமர்வை ஜனவரி 1-3 நாட்களில் கொல்கத்தாவில் நடத்தியது. அதில் இந்திய மக்களின் உடல்நலம், இந்தியாவின் மருத்துவ முன்னேற்றம் குறித்த சிறப்பு அமர்வு இடம் பெற்றது. அவ் அமர்வில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந் நூலாகும். இச் சிறப்பமர்வில் இடம் பெற்றிருந்ததுடன் அதன் தலைவராகவும் செயல்பட்ட பேராசிரியர் தீபக் குமார் இக்கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளதுடன் ஓர் ஆழமான ஆய்வு முன்னுரையையும் எழுதியுள்ளார்.

இவர் ஜாகீர் உசேன் கல்வி ஆய்வு மையத்திலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் அறிவியல் வரலாறு, சமூகமும் கல்வியும் என்ற பாடங்களைக் கற்பித்து வந்துள்ளார். பல்வேறு ஆய்விதழ்களில் இவர் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவை தவிர ‘அறிவியலும் அரசும்’ (Science and the Raj 1857-1905)  என்ற நூலை எழுதியுள்ளார். ‘அறிவியலும் பேரரசும்’ (Science and Empire: Essays in the Indian Context)  என்ற நூலைப் பதிப்பித்துள்ளார்.

ஆய்வாளர்கள் பலர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் நூலொன்று ஓர் ஆழமான நூலாக அமையமுடியாது என்றாலும் இந்தியாவில் பரவிய நோய்கள், அவற்றுக்கான மருத்துவம் குறித்த சில அடிப்படைச் செய்திகளை இந்நூல் வெளிப்படுத்தி நிற்கிறது. இவ்வகையில் இந்தியாவில் காணப்படும் நோய்கள், அவற்றுக்கான மருத்துவம் குறித்த வரலாற்று வரைவுக்குத் துணை நிற்கும் தகுதி இந்நூலுக்கு உண்டு.  ராதா காயத்திரி, துருப்குமார் சிங் என இருவரும் பதினான்கு பக்க அளவில் இத் தலைப்பை ஒட்டிய நூல்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்துத் தந்துள்ளனர். நூலின் இறுதியில் ( பக்கம்: 276-289) இடம் பெற்றுள்ள இப் பட்டியல் இத் தலைப்பில் மேலும் ஆய்வு செய்ய விழைவோருக்குத் துணை நிற்கும் தன்மையது.

பதிப்பாசிரியரின் முன்னுரை நீங்கலாக மொத்தம் பதினெட்டு கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில் உள்ளடக்கத்தின் அடிப்படையில், ‘நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலம்’, ‘நவீன இந்தியா’ என்ற இரு தலைப்புகளில் கட்டுரைகளை இரு பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். முதற் பிரிவில் எட்டு கட்டுரைகளும் இரண்டாவது பிரிவில் பத்து கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

பதிப்பாசிரியரின் முன்னுரை:
இந்நூலுக்கான ஓர் ஆழமான முன்னுரையை மிகச் சுருக்கமாக பதிப்பாசிரியர் தீபக் குமார் எழுதியுள்ளார். அவரது கருத்துப்படி அறிவியலின் வரலாறும், தொழில் நுட்பம், மருத்துவம் என்பனவும் வரலாற்றுக் கல்வியுடன் நெருக்கமான தொடர்புடையன. சமூகப் பண்பாட்டு நோக்கில் பார்த்தால் இவற்றைப் புறந்தள்ளிவிட முடியாது.  காலந்தோறும் இந்திய வரலாற்றில் இவை தனிச் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளன. பதினொன்றாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் ஒன்றில் (Said al- Andalusi: Tabaqat al-Umam) அறிவியலை வளர்த்ததில் இந்தியா முதலாவது நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சமயப்புனித நூல்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தபோதிலும் இயற்கையின் செயல்பாட்டினை உற்றுநோக்கி அறிதலை வலியுறுத்தி வந்தனர். “இயற்கை குறித்த அறிதலும் மனித குலத்தின் மீது அன்பு செலுத்துதலும் வெவ்வேறானவை அல்ல; இரண்டும் ஒன்றே” என்று சரகசம்ஹிதா என்ற நூல் குறிப்பிடுகிறது.

நாம் வாழும் இக்காலம் அறிவியல் வளர்ச்சிபெற்ற காலம். பல வரலாற்றியலர்கள் மருத்துவ வரலாறு பக்கம் திரும்பியுள்ளனர். தொடக்கத்தில் இந்திய மருத்துவ மரபு குறித்து தத்துவ பண்பாட்டு அணுகுமுறையிலான ஆய்வுகள் வெளிவந்தன. தற்போது தற்கால இந்தியாவின் வரலாறு சார்ந்த வரலாற்றியலர்கள் இந்திய மருத்துவ வரலாறு குறித்த வரலாற்றாய்வில் ஆர்வம் காட்டுகிறார்கள். அரசியலில் மருத்துவம் மருத்துவத்தின் அரசியல் எனப் பல ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.   மானுடவியலாளர்களும் சமூகவியலாளர்களும் இத் துறையில் சில நுண் ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். அறிவியல் தொழில் நுடபம் குறித்த சமூகவரலாற்று வரைவுக்கு எவ்வகையிலும் தாழ்ச்சியுறாத நிலையை மருத்துவம் குறித்த சமூக வரலாறு பெற்றுள்ளது.

இச்செய்திகளையடுத்து இந்தியாவில் நிலவிய ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம் என்ற இரு மருத்துவ முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். (ஆனால் தமிழ்நாட்டின் சித்த மருத்துவம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.)  இதன் தொடர்ச்சியாக இவை ஏன் நிறுவனமாக மாறவில்லை என்ற வினாவை எழுப்பி விடை தேடுகிறார். விதிக் கொள்கையும் சாதியும் ஏற்படுத்திய எதிர்மறையான விளைவுகளை விடையாக உணர்கிறார்.

அவரது கருத்துப்படி தெற்காசிய சமூகத்தில் நிலவும் சாதிய முறையானது கருத்தியலையும் (theory), செயல் முறையையும் (practice) தனித்தனியாகப் பிரிக்கும் அழிவுப் பணியைச் செய்துள்ளது. இது உடல் உழைப்பிலிருந்து மூளை உழைப்பை வேறுபடுத்துவதாகி விட்டது. சமய உணர்வும் சாதியும் இணைந்து போயின. இடைக்கால இந்தியச் சமூகத்தில் ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டுத் தோல்வியாக இது ஆகிப்போனது.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த அபுல் ஃபசல் என்பவர் வெளிப்படுத்திய துயரம் தோய்ந்த பின்வரும் சொற்களை அவர் மேற்கோளாகக் காட்டுகிறார்:
“மரபு என்னும் பெருங்காற்றினால் பகுத்தறிவு என்னும் விளக்கின் ஒளிமங்கி... "எப்படி” “ஏன்” என்ற கேள்விக் கதவுகள் அடைக்கப்பட்டு கேள்விகேட்டலும் ஆராய்தலும் எட்டாக்கனியாகி புறச்சமயவாதிகளாயினர்.”

இதன் தொடர்ச்சியாக , இடைக்கால இங்கிலாந்து குறித்து ராய் போர்ட்டர் என்பவர் எழுப்பிய வினாக்கள் போன்று சில வினாக்களை எழுப்பியுள்ளார்:
  —  நோய் போக்குதல் எவ்வாறு நிகழ்ந்தது? இதை யார் செய்தார்கள்?
  —  நோயாளி இதை எப்படி உணர்ந்தார்?
  —  மருத்துவ மானுடவியலாளர்கள் மந்திர- சமயச் சடங்கு, சடங்குகள், ஷாமன்கள்(மந்திர ஆற்றல் கொண்ட பூசாரி) ஆகியோரை ஆராய்ந்துள்ளார்கள். இவை வரலாற்று அடிப்படையில் பதிவு செய்யப் பட்டுள்ளனவா?
  —  கீழ்நிலையிலுள்ள மக்களின் நோய் தீர்ப்பவர் யார்?
  —  இத் தொழில் முறை எவ்வாறு உருவாகிறது?

இப்படிப் பல வினாக்களை தீபக் குமார் எழுப்பியுள்ளர். அவரது இவ் வினாக்கள் இத்துறையில் ஆய்வு செய்யப் புகுவோருக்கு உதவும் தன்மையன. இவ்வினாக்களை அடுத்து காலனியத்தின் நுழைவிற்கு முன் இந்தியாவில் பின்பற்றப்பட்ட நோய் போக்கும் முறைகள் குறித்தும், பயன்படுத்திய மருத்துவ நூல்கள் குறித்தும் விவரிக்கிறார். இறுதியாக, இந்தியாவில் நவீன மேற்கத்திய மருத்துவத்தின் அறிமுகம் குறித்த செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். இவை வெறும் செய்திகளாக மட்டுமின்றி திறனாய்வுத் தன்மையுடன் இடம் பெற்றுள்ளன.

இம் முன்னுரையில் வேறு ஒரு முக்கிய பிரச்சினையும் விவாதிக்கப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய மருத்துவ முறைக்கும், காலனியம் அறிமுகம் செய்த நவீன மருத்துவ முறைக்கும் இடையிலான உறவை பதிப்பாசிரியர் சுட்டிக்காட்டி விவாதித்துள்ளார்.  இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையானது ஐரோப்பிய மருத்துவ முறை அறிமுகமான பின்னர் நிலைத்து நிற்கப் போராட வேண்டிய நிலைக்கு ஆளானது. புதிய அறிவுத் துறை ஒன்றை முழுமையாக ஏற்றுக் கொள்வதானது சில நேரங்களில் பழைய அறிவுத்துறையை முற்றிலும் புறந்தள்ளுவதாக அமைவதுண்டு. இத்தகைய நெருக்கடியில் நம் பாரம்பரிய மருத்துவ முறையானது விலகி நிற்கும் நிலைக்கு ஆளானது. இருந்தபோதிலும், பெரும்பான்மையான இந்தியர்கள் நம் பாரம்பரிய மருத்துவத்தைப் புத்தாக்கம் செய்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தவே விரும்பினார்கள். மேற்கத்திய மருத்துவமும் இந்திய மருத்துவமும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய களங்கள் இருந்தன. ஆனால் அது கண்டு கொள்ளப்படவில்லை.

மேற்கத்திய மருத்துவம் நோய்க்கான காரணத்தைக் கண்டறிய அழுத்தம் கொடுத்தது. இந்திய மருத்துவம் குணப்படுத்தலை நோக்கமாகக் கொண்டிருந்தது. நுண்ணுயிர்கள், நுண்ணுயிர் நோக்கிகள் (மைக்ரோஸ்கோப்) என்பன நோயறியும் மருத்துவக் கண்ணாடிகளாக மேலை மருத்துவத்தில் பயன்பட்டன. ஆனால் இந்திய மருத்துவம் நோய் எதிர்ப்பாற்றலை வலியுறுத்தியது. இதன்படி நோயாளியின் உடல்நலத்தில் ஏற்படும் முன்னேற்றமானது நுண்ணுயிர்களையும் அவற்றை அழித்தலையும் விட இன்றியமையாதது.

இத்தகைய வேறுபாடுகள் இருப்பினும் இவ்விரு மருத்துவ முறைகள் குறித்த அறிவார்ந்த கலந்துரையாடல் எதையும் மேற்கத்தியமுறை மருத்துவர்கள் மேற்கொள்ளவில்லை என்று குறிப்பிடும் பதிப்பாசிரியர், தம்மை உயர்வானவர்களாக இவர்கள் கருதிக்கொண்டமையே இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வருகிறார். இறுதியாக காலனியச் சார்புநிலை, தேசியச் சார்புநிலை என்ற இரண்டு பார்வைகளையும் கடந்து இரண்டு அறிவுத்துறைகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலம்:
நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலத்தில் நிலவிய மருத்துவ முறைகளை ஆராயும் அல்லது அறிமுகம் செய்யும் எட்டு கட்டுரைகளில் முதலாவது கட்டுரையாக சுராஜ் பான் என்பவரும், தஹியா என்பவரும் இணைந்து எழுதிய கட்டுரை இடம் பெற்றுள்ளது. இவர்களுள் சுராஜ் பான் சிறப்பான தொல்லியலாளர். குருஷேத்திரா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் தொல்லியலில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கட்டுரையின் இணையாசிரியரான தஹியா குறித்த பதிவுகள் எவையும் இடம் பெறவில்லை. இக் கட்டுரை கி.மு.2500-1900 காலத்தைச் சேர்ந்த ஹரப்பா நகரில் வாழ்ந்த மக்களின் நோய்கள், வழக்கிலிருந்த அறுவைச் சிகிச்சை முறை, மக்களின் உடல் நலம் குறித்த செய்திகளை வெளிப்படுத்துகிறது.

கட்டுரையின் தொடக்கத்தில் கட்டுரையாசிரியர்கள் முன்வைக்கும் பின்வரும் செய்திகள் அவர்களது சமூகப் பார்வையை வெளிப்படுத்தி நிற்கின்றன.
“அண்மைக்காலம் வரை உடல்நலம் என்பது நோயின்மை அல்லது உடல் வலு சார்ந்த ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. ஏழ்மை அதோடு தொடர்புடைய சமூகக் காரணிகள் (கழிவகற்றல்) என்பன உடல்நலமின்மைக்கான முக்கிய காரணங்கள்" என்பதை மருத்துவ அறிவியல் படிப்படியாக உணர்ந்து கொண்டது.

உடல் நலத்திற்கான அடிப்படைத் தேவைகளாக அமையும் ஊட்டச்சத்து, தூய்மையான குடிதண்ணீர், உடல் நலம் பேணுதல், கழிவுகளை அகற்றல் எனபன கிடைத்து மன அழுத்தமும் வன்முறையும் கட்டுப்படுத்தப்பட்டால் மக்களின் உடல்நலம் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு வளர்ச்சி பெறும்.

இச் செய்திகளின் தொடர்ச்சியாக ஹரப்பா நாகரிகத்தில் காணப்படும் மருத்துவம் தொடர்பான செய்திகளை வகைப்படுத்தி கட்டுரையாசிரியர் தந்துள்ளார். இவ்வகையில் உணவும் ஊட்டச்சத்தும், நோய்குறித்த உயிரியல் சான்றுகள், அறுவைச் சிகிச்சையும் உடல்நலமும், மக்களிடையே நிலவிய பாலியல் விகிதாச்சாரம், ஆயுட்காலம், உயர அளவு, தாக்கிய நோய்கள்குறித்து தனித்தனியே குறிப்பிட்டுள்ளார். இதற்கான தரவுகளாக அகழ் ஆய்வின்போது கிடைத்த எலும்புக்கூடுகளும் மண்டை ஓடுகளும் பயன்பட்டுள்ளன. கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக அங்கு நிலவிய குறைபாடுகளையும் விவரித்துள்ளார்கள். மொத்தத்தில் அகழாய்வுச் சான்றுகள், உயிரியல் சான்றுகளின் அடிப்படையில் இச் செய்திகளை எழுதியுள்ளார்கள். அதே போழ்து இச் செய்திகள் நகரம் சார்ந்த செய்திகள் என்றும், இறந்தோரின் சமூகப் பின்புலம் (வர்க்கம், பால்) வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். பெண்கள் உடல் அடிப்படையில் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை ஆராயவேண்டியுள்ளது. மார்ஷல் என்பவரின் சேகரிப்பில் இருந்த பத்து மண்டை ஓடுகள் வரிசையில் முதலாவது மண்டை ஓடும் பத்தாவது மண்டை ஓடும் தாக்குதலுக்கு ஆளான பெண்களின் மண்டை ஓடுகளாக உள்ளன. கொடூரமான முறையில் பெண்கள் நடத்தப்பட்டமைக்கான சான்றாக இதைக்கொள்ளலாம். ஹரப்பா நகரின் பெண்கள் அங்கிருந்த ஆண்களைவிட உயரம் குறைவாகக் காணப்படுவது ஊட்டச்சத்து பால்வேறுபாட்டுடன் பகிரப்பட்டதை வெளிப்படுத்துகிறது.

ஹரப்பா நகர்களில் கழிவு நீர் வெளியேற்றியமை, உடல் நலம் பேணியமை, தூய்மையான குடிநீர், மாசில்லா சூழல் என்பன குறித்து மிகுதியான அளவுக்கு எழுதப்பட்டுள்ளன. இயற்கையின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வழிமுறையாக, பெரிய அளவிலான தானியக் களஞ்சியங்களில் தானியங்களைச் சேகரித்து வைத்திருந்தார்கள். இது ஆளும் வர்க்கத்திற்கு அல்லது நகரின் மொத்த மக்களின் பயன்பாட்டிற்காக இருக்கலாம். இம் மக்களின் உடல்நலம் ஒரு கட்டுக்குள்தான் இருந்துள்ளது. மேலும் இது தொடர்பான ஆய்வுகளுக்கான சான்றுகளாக ஊட்டச்சத்து, கருவிகள், மூலிகை மருத்துவம் குறித்த தரவுகளுடன் தனிமனிதனின் உடல் நலத்தைப் பாதிக்கும் சமூக உண்மைகளையும் இணைத்து ஆராய வேண்டும் என்பது கட்டுரையாளர்களின் கருத்தாக உள்ளது.

இரண்டாவது கட்டுரை பாட்னா பல்கலைக் கழகத்தின் பண்டைய இந்திய வரலாற்றுத் துறையின் பேராசிரியர் விஜயகுமார் தாகூர் எழுதியது. இக்கட்டுரை பண்டைய இந்தியாவில் வழக்கிலிருந்த அறுவைச் சிகிச்சை முறைகள் குறித்தும், மருத்துவ அறிவியலின் வளர்ச்சி குறித்தும் அறிமுகம் செய்கிறது.

மூன்றாவது கட்டுரை கண்பார்வை குறித்த இடைக்கால இந்தியக்(1200-1750) கோட்பாடுகளையும், மூக்குக் கண்ணாடி அறிமுகத்தையும் குறிப்பிடுகிறது. மூக்குக் கண்ணாடி அணிந்து மீர் முசாவ்வீர் என்பவர் படித்துக் கொண்டிருக்கும் பதினாறாவது நூற்றாண்டு ஓவியம் ஒன்றும் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் இக்பால் கனிகான் அலிகார் பல்கலைக்கழகத்தில் இடைக்கால இந்திய வரலாற்றையும் தொழில் நுட்ப வரலாற்றையும் கற்பிக்கும் பேராசிரியர்.

நான்காவது கட்டுரை இடைக்கால இந்தியாவின் மருத்துவர்கள் மருத்துவத்தையே ஒரு தொழிலாகக் கொண்டவர்களாக விளங்கியதை அறிமுகம் செய்கிறது. இக் கட்டுரையாசிரியர் அலீந்தீம் ரிஜாவி அலிகார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்.

ஐந்தாவது கட்டுரை 16ஆவது நூற்றாண்டு இந்தியாவில் பின்பற்றப்பட்ட மருத்துவர்களுக்கான விதிமுறைகளை அறிமுகம் செய்கிறது. கட்டுரையின் பின் இணைப்பாக நம் காலத்தில் மேற்கத்திய மருத்துவமுறையில் தேர்ச்சி பெறும் மருத்துவர்கள் எடுத்துக் கொள்ளும் ஹிப்பாகிராட்டிக் உறுதிமொழியும் ( Hippocratic Oath)  இடம் பெற்றுள்ளது. இக் கட்டுரையாசிரியர் சிரீன் மூசாவி மத்தியகால இந்தியப் பொருளாதார வரலாற்றில் வல்லுனர். அலிகார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்.

ஆறாவது கட்டுரை இந்தியாவின் சிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களில் ஒருவரான இர்பான் ஹபிப் எழுதியது. இக் கட்டுரை மொகலாய இந்தியாவில் மருத்துவத் துறையில் நிகழ்ந்த மாறுதல்களையும் கண்டுபிடிப்புகளையும் அறுவை சிகிச்சை நடைமுறைகளையும் ஆராய்கிறது.

ஏழாவது கட்டுரை நவீன இந்தியா உருவாகும் முன்பு நிகழ்ந்த அம்மை நோய்ப் பரவல் குறித்தும் அதைப் போக்குவதற்கு மேற்கொண்ட சிகிச்சை முறைகள் குறித்தும் ஆராய்கிறது. இக் கட்டுரையாசிரியர் இஸ்ரத் அலம் அலிகார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பணியாற்றிவருபவர். டச்சு மொழியில் பயிற்சி உடையவர்.

எட்டாவது கட்டுரை அம்மை நோய் குறித்து பதினெட்டாவது நூற்றாண்டில் வெளியான துண்டு வெளியீடு (Tract) ஒன்றின் துணையுடன் அம்மை நோய் பரவும் காலம், நோயாளிக்கான உணவு,  சிகிச்சை என்பனவற்றை ஆராய்கிறது.  இக்கட்டுரையின் ஆசிரியர் ஹரிஷ் நரேந்திராஸ், தில்லி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் மருத்துவ சமூகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நூலின் முதற் பிரிவில் ‘நவீன இந்தியாவிற்கு முற்பட்ட காலம்' என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்த எட்டு கட்டுரைகள் குறித்த அறிமுகத்தைத் தொடர்ந்து இவ்விதழில் ‘நவீன இந்தியா’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள பத்து கட்டுரைகளின் சுருக்கமான அறிமுகம் இடம் பெறுகிறது.

தொற்று நோய்கள்:
மலேரியா:
இந்தியாவில் பரவிய தொற்று நோய்களில் மலேரியா, காலரா, பெரியம்மை ஆகிய நோய்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. இவற்றுள் மலேரியா நோய்ப் பரவல் குறித்து முதல் இரண்டு கட்டுரைகள் குறிப்பிடுகின்றன.

முதலாவது கட்டுரையின் ஆசிரியரான இதிசாம் காசி வங்கதேசத்தின் டாக்கா பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியர். மலேரியா நோய்ப் பரவலில் சுற்றுச் சூழல் வகிக்கும் இடத்தை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.  பத்தொன்பதாவது நூற்றாண்டின் நடுப்பகுதியில் வங்காளக் கிராமம் ஒன்றில் இந்நோய் முதலில் காணப்பட்டது. பின்னர் படிப்படியாக இன்றைய பங்களாதேஷ் மேற்கு வங்கம் உள்ளிட்ட வங்காளப் பகுதியில் பரவியது. மக்கள் இதைப் ‘புதிய காய்ச்சல்' என்றழைக்க ஆங்கில அரசு ‘பர்துவான் காய்ச்சல்' என்று பெயரிட்டது. இக்காய்ச்சலின் பரவலால் எண்ணிக்கையில்லாத அளவில் மக்கள் மடிந்தனர்.  இப்போதுங்கூட இப்பகுதி மலேரியா, டெங்கு காய்ச்சல்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பகுதியாக உள்ளது. மலேரியா பரவுதலுக்கு முன்பு இருந்த காரணங்கள் இப்போதும் தொடர்கின்றன. இப்பகுதியில் நிகழும் வெள்ளப் பெருக்கு முடிவுற்றதும் பல்வேறு நோய்கள் உருவாகின்றன.  அவற்றுள் ஒன்றாக மலேரியா அமைகிறது.  இந்நோய்ப் பரவல் குறித்துப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இக்கட்டுரை ஆசிரியரின் கருத்துப்படி இரயில் சாலைப் போக்குவரத்துக்கள் உருவாக்கத்தில் அக்கறை காட்டிய ஆங்கில அரசு நீர் வழிப் போக்குவரத்தைப் புறக்கணித்தது. சாலைகள் இரயில் பாதைகள் அமைத்தல், புதிய குடியிருப்புகள் உருவாக்குதல் என வளர்ச்சிப் பணிகள் நடந்தபோது குழிகளும் கற்குவாரிகளும் உருவாயின. இவற்றில் தேங்கும் நீர் மலேரியாக் கொசுக்களின் உற்பத்திக்குத் துணை நின்றது. இதனால் வளர்ச்சியின் விளைவால் உருவாகும் நோயாக மலேரியா சுட்டப்பட்டது. பல்வேறு ஆறுகள் பாயும் சமவெளிப்பகுதிகளைக் கொண்ட வங்காளத்தில் முறையான வடிகால்கள் இல்லாமையும் மலேரியா நோய் பரவலுக்கான காரணங்களில் ஒன்றாகியது. தண்ணீர் தேங்காது ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள் பாயும் பகுதிகளில் உள்ள கிராமங்களை விட நீரோட்டம் இன்றி தேங்கிய நிலையில் உள்ள ஆற்றங்கரைக் கிராமங்கள் மலேரியாக் கொசுக்களின் உற்பத்தி மையமாக விளங்கின. வெள்ளத் தடுப்பிற்காகக் கட்டப்படும் தடுப்பணைகளில் தேங்கும் தண்ணீரும் மலேரியாக் கொசுக்களின் உற்பத்திக் களமாயின.

காலனிய அரசிற்கு வருவாய் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இரயில் பாதைகளும் சாலைகளும் அமைக்கப்பட்டமையால் இவற்றின் உருவாக்கம் நீர் தேங்கி நிற்பதற்குக் காரணமாக அமைவது கண்டு கொள்ளப்படவில்லை.வளர்ச்சித் திட்டங்களின் எதிர்விளைவாக மலேரியா தோன்றிப் பரவியது. ஆனால் இவ் உண்மையைக் காலனிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மலேரியாப் பரவலுக்கு அது மக்களைக் குறை கூறியது. இந்நோயானது பாரம்பரியம் சார்ந்த ஒன்று, இனம் சார்ந்தது என்ற கருத்தை அது உருவாக்கிய ஆணையங்கள் முன்வைத்தன. பலவீனமான இனங்கள் இயற்கையின் வளர்ச்சிப் போக்கில் இறந்து போகும் என்றன. இது சமூக டார்வினியம் (Social Darwinism) சார்ந்த கருத்து வெளிப்பாடு என்று கட்டுரையாசிரியர் சரியாகவே மதிப்பிட்டுள்ளார். மலேரியா நோய் குறித்த கடந்தகால அனுபவம் சூழல் சீர்கேட்டின் அனுபவ வரலாறாக அமைந்து எதிர்காலத்திற்கான வழிகாட்டியாக அமைந்துள்ளது. இக் கட்டுரையின் மையச் செய்தியுடன் தொடர்புடையதாக அடுத்த கட்டுரையும் அமைந்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு மும்பை நகரைத் தாக்கிய மலேரியா குறித்த கட்டுரையை மும்பைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சிம்கி சர்கார் எழுதியுள்ளார்.  1838-1841 காலகட்டத்தில் மும்பை நகரின் கொலாபா துறைமுகப் பகுதியில் மலேரியா பரவியது. கொலாபா வட்டார நிலப்பரப்பின் பெரும்பகுதி கடல்நீர் பரவியிருந்த தாழ்வான இடத்தைச் சீர்திருத்தி உருவாக்கப்பட்டதாகும்.

1861-1866 இல் இப் பகுதியின் நிலங்களைச் சீர்திருத்தம் செய்ததானது மலேரியா அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தது. 1863 தொடங்கி 1866 வரையிலான நான்காண்டு காலத்தில் மலேரியாத் தாக்குதலால் நிகழ்ந்த இறப்புகளின் சராசரி எண்ணிக்கை 12,577ஆக இருந்தது. 1865இல் இது 18,767 ஆக உயர்ந்தது. இந்நிகழ்வுகளையடுத்து துறைமுகத்தின் விரிவாக்கம் 1903 க்கும் 1907 க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தபோது மலேரியாப் பரவல் அதிகரித்தது. 1909இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது துறைமுகத்தை நோக்கியிருந்த வீடுகளில் வசித்தவர்களில் இருபது விழுக்காட்டினரும் துறைமுகத்தை விட்டுத் தள்ளியிருந்த வீடுகளில் வசித்தோரில் மூன்று விழுக்காட்டினரும் மலேரியாத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது.

காவல்பணியில் ஈடுபடுவோர் , கூலிகள், தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் ஆகியோர் மலேரியாத் தாக்குதலுக்கு ஆளானார்கள். துறைமுகத்தில் புதிதாக உருவாக்கப்படும் கப்பல் துறைக்கு (Dock) எதிரே அமைந்திருந்த தூய ஜார்ஜ் மருத்துவமனை மும்பை நகரிலேயே மலேரியா மிகுந்த இடமாக விளங்கியது. மொத்தத்தில் மும்பை நகரில் மிகுதியான மக்களை மலேரியா பலிவாங்கியது. இந்த அளவுக்கு இதன், தாக்குதல் கிராமப்புறங்களில் இல்லை.

இச் செய்திகளின் தொடர்ச்சியாக மலேரியா நோய் உருவாதல் குறித்த பழைய கோட்பாடுகள், அது பரவும் முறை, அதைத் தடுக்கும் முறை, அதன் வகைகள் மும்பை நகரின் பொருளாதாரத்தில் மலேரியா ஏற்படுத்திய தீய விளைவுகள் எனபனவும் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

காலரா:
ஐவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு மாணவராக இருந்த துருப் குமார் சிங் பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1817-1870) வாந்திபேதி (காலரா) நோய்ப் பரவல் குறித்த கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்நோய்த்தாக்குதல் ஏற்படுத்திய உயிரிழப்பு குறித்து இங்கிலாந்தையும் இந்தியாவையும் ஒப்பிடும் புள்ளிவிவரங்களை இக்கட்டுரை ஆசிரியர் வெளிப்படுத்துவதுடன் இங்கிலாந்தில் இதன் பரவல் குறைந்து வர இந்தியாவில் அதிகரித்து வந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். காலனிய அரசின் இராணுவத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இந் நோய் பரவாமலிருந்துள்ளது. ஆனால் பின்னர் அங்கும் பரவத்தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் இருந்த படைப்பிரிவைவிட மூன்று மடங்கு அதிகமாக இறப்பு எண்ணிக்கை இருந்ததாக 1859 இல் அமைக்கப் பட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது. முறையான கழிவகற்றலும் குடிநீர் வழங்கலும் இல்லாமையே இதற்கான காரணம் என்று அது குறிப்பிட்டது. இதன் அடிப்படையில் போர்வீரர்களுக்கென்று தனி வாழுமிடங்கள் (கன்டோன்மெண்டுகள்) உருவாக்கப்பட்டன. இருப்பினும் காலரா பாதிப்பு இந்தியப் படைவீரர்களை விட ஆங்கிலப்படை வீரர்களை அதிகம் பாதித்தது. 1867இல் வட இந்தியாவில் இருந்த ஆங்கில இராணுவ வீரர்களில் காலராவினால் இறந்தோர் எண்ணிக்கை ஆயிரத்துக்குப் பதினான்கு விழுக்காடாக இருந்தது. ஆனால் அதே இராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்களின் இறப்புவிகிதம் ஆயிரத்துக்கு மூன்று விழுக்காடாக இருந்தது. அது மட்டுமின்றி பல்வேறு நோய்த் தாக்குதலால் இறப்போரில் இந்தியப் படைவீரர்களின் எண்ணிக்கையை விட ஆங்கிலப் படைவீரர்களின் எண்ணிக்கையே அதிக அளவில் இருந்தது. இருப்பினும் காலரா நாடு என்ற பெயரை இந்தியா பெற்றது. ஐரோப்பாவிற்குச் செல்லும் இந்தியக் கப்பல்கள் தனிமைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டன. காலனிய அரசோ நோய்த்தடுப்பிலும் இனச் சார்பு நிலைப்பாடையே எடுத்தது.

சிபிலிஸ்:
சபியா சாச்சி மஸ்தா என்பவர் சுரங்கங்கள் குறித்த கல்வியாளர். தான்பாத் நகரில் செயல்பட்டுவந்த கல்வி நிறுவனம் ஓன்றில் அறிவியல் தொழில் நுட்பம் குறித்த வரலாறு கற்பித்து வந்தார். இவர் எழுதியுள்ள கட்டுரை சிபிலிஸ் என்ற பால்வினை நோய் குறித்ததாகும். இந்நோயானது போரச்சுக்கீசிய வணிகர்களால் இந்தியாவில் பரவியது. இந்தியர்கள் இந்நோயை ‘பரங்கி நோய்' என்றழைத்தனர். (இந்நோயால் தோன்றும் புண்களைப் பரங்கிப் புண் என்று தமிழர்கள் அழைத்துள்ளனர்.) இந்நோய் பத்தொன்பதாவது நூற்றாண்டு இந்தியாவில் பரவி ஏற்படுத்திய பாதிப்புகளை இந்நூலின் இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ள நான்காவது கட்டுரை ஆராய்கிறது.

இந்நோயால் மிகுதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆங்கில இராணுவத்தினர் என்று குறிப்பிடும் கட்டுரையாசிரியர் காலனிய அரசு அதிகாரி களிடையிலான உரையாடலில் ஒரு பகுதியாக இது இருந்தது என்கிறார். இந்நோய்ப்பரவல் குறித்த அறிக்கை ஒன்று, போர்வீரர்களாக வரும் இளைஞர்கள் தம் பாலியல் வேட்கையைத் தணித்துக் கொள்வதற்கு சுய இன்பத்தில் ஈடுபடல் அல்லது பொருட் பெண்டிருடன் உறவுகொள்ளுதல் என்ற இரண்டு வழிமுறைகளே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் இவற்றுள் முதலாவது உடல் மற்றும் உள்ளச் சீர்குலைவுக்கும் இரண்டாவது அச்சமூட்டும் பால்வினை நோய்களுக்கும் வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நோய்ப்பரவல் படை வீரர்களிடம் மட்டுமின்றி உயர் இராணுவ அதிகாரிகளிடமும் இருந்துள்ளது.

இந்நோய்த்தாக்குதல் ஏற்படுத்தும் பாதிப்பு, இது குறித்த புள்ளி விவரங்கள், அறிக்கைகள் என்பனவற்றை அடிப்படையாக்க் கொண்டு இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கிறித்தவத்தின் மருத்துவப் பணி:
இதற்கு அடுத்த கட்டுரையாக அமைவது கனடா நாட்டைச் சேரந்த கிறித்தவ மறைப் பணியாளர்கள் (The Canadian Baptist Missionaries) 1870 முதல் 1952 வரை தெலுங்கு மொழி வழங்கும் பகுதியில் மேற்கொண்ட மருத்துவப் பணிகளை அறிமுகம் செய்கிறது. இக்கட்டுரையின் ஆசிரியரான ராஜ் சேகர் பாசு கொல்கத்தாவிலுள்ள ரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தென் இந்தியாவில் கிறித்தவ மறைப்பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் தனித்துவம் உடையவர்.

1870ஆவது ஆண்டில் விசாகப்பட்டினத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் இச் சபையினர் செயல்படத் தொடங்கினர். பின்னர் சில ஆண்டுகளில் கோகொனாடா என்ற பகுதியை மையமாகக் கொண்டு தம் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். மறைப்பணியாளர்களாகப் பெண்களை நியமித்து யேசுவின் நற்செய்தி ஏடுகளைக் கற்பித்ததுடன் உயர்சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் பள்ளிகளைத் திறந்தனர். 1890இன் தொடக்கத்தில் மருந்தகங்களையும் மருத்துவ மனைகளையும்,பெரும்பாலும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்ட மக்களுக்காகத் திறந்தனர். இவற்றில் பெண் மறைப்பணியாளர்களை நியமித்தனர்.

இம் மருத்துவப் பணியில் அவர்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டனர். 1897 இல் நிகழ்ந்த பஞ்சத்தை அடுத்து காலராவும் அம்மை நோயும் பரவின. இதனால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு உதவும் பணியில் ஈடுபட்ட அரசுக்குத் தம் மறைப்பணியாளர்களை அனுப்பி உதவினர். அத்துடன் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப் பட்டிருந்த மக்களுக்கு மருத்துவ உதவி வழங்கினர். உள்நாட்டுப் பகுதிகளில் மருந்தகங்களையும் மருத்துவமனைகளையும் நிறுவி அவற்றில் பணிபுரிய அனுபவம் வாய்ந்த மருத்துவப் பணியாளர்களை அனுப்பினர். 1898இல் மறைத் தளத்தின் அறிவுறுத்தலின்படி ஸ்மித் என்ற மருத்துவரும் செவிலியர் பயிற்சி பெற்றிருந்த அவரது மனைவியும் விசாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள எல்லமஞ்சிலி என்ற ஊரில் சிறிய மருத்துவமனை ஒன்றை நிறுவினர். இது தொடங்கப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே பெண் நோயாளிகளுக்கான சிறந்த மருத்துவமனை என்ற நற்பெயரை ஈட்டியது. இதன் விளைவாக சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட வறுமை வாய்ப்பட்ட மக்கள் பிரிவைச் சேர்ந்த பெண்கள் கிறித்தவத்தைத் தழுவினார்கள்.

இவர்களின் மருத்துவப் பணியின் வளர்ச்சி நிலையாக பிதாப்புரம் என்ற ஊரில் பெதஸ்தா மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை ஒன்று கனடா நாட்டைச் சேர்ந்த இரு பெண் மறைப்பணியாளர்களின் நிதியுதவியடன் உருவானது. 1904க்கும் 1908க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவிலும் கனடாவிலும் திரட்டப்பட்ட நிதியின் துணையுடன் பேறுகாலப் பிரிவு கட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இம் மறைப் பணியாளர்கள் மேற்கொண்ட மருத்துவப் பணியின் வளர்ச்சி நிலையைக் கூறிச் செல்கிறார் இக் கட்டுரையாசிரியர்.

கட்டுரையின் இறுதியில் தம் மருத்துவப் பணிக்கான சமூக ஒப்புதலைப் பெற இவர்கள் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய மருத்துவம் குறித்து பாரம்பரியமாக நிலவிவந்த வெறுப்பு, கிறித்தவ மறைப் பணியாளர்களுக்கு எதிராகப் பிராமணக் குருக்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவினரின் மாந்திரிகர்களும் மேற்கொண்ட எதிர்ப்பிரச்சாரங்களுக்கு ஊடாகத்தான் இவர்கள் செயல்பட வேண்டியிருந்தது. தொற்று நோய்களுக்கு இவர்கள் அளித்த சிகிச்சையின் வெற்றி மேற்கத்திய மருத்துவத்தின் மீது பரவலாக நிலவிவந்த ஒவ்வாமையை நீக்கியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் தம்மை இந்தியர்களாகப் பாவித்து மருத்துவப் பணியை ஆன்மீகப் பணியாகவும் உலகளாவிய சகோதரத்துவமாகவும் நோக்கினர். காந்தியவாதி ஒருவர் குறிப்பிட்டது போன்று தம் பாவங்களைப் போக்க இந்தியப் பூசகர்கள் புனித நீர்நிலைகளில் தம் கரங்களைக் கழுவிக் கொண்டிருந்தபோது இவர்கள் நோயாளிகளின் காயங்களைக் கழுவிக் கொண்டிருந்தனர்.

இந்திய விடுதலை இயக்கத்தில்:
ஆங்கில ஆட்சிக்கெதிரான விடுதலை இயக்கத்தில் மக்களின் உடல் நலம் குறித்த சிந்தனைகள் இடம் பெற்றிருந்ததை காந்தியை முன்வைத்து அமித் மிஸ்ரா ஆராய்ந்துள்ளார். இவர் லக்னோ நகரில் செயல்பட்டு வரும் மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி.

தம் கட்டுரைக்கான சான்றுகளை மகாத்மா காந்தியின், தேர்வு நூல்களில் இருந்து திரட்டியுள்ளார். உணவூட்டம் (Nutrition), உடல் நிலை ஆக்க மேம்பாடு (Sanitation), தொற்று நோய்கள்(Infectious Diseases), எதிர்ப்பாற்றல் (Immunization), மருந்துச் சிகிச்சை, இயற்கைச் சிகிச்சை, என்ற உட்தலைப்புகளைக் கொண்டதாக இக் கட்டுரை அமைந்துள்ளது.

காந்தியின் இயற்கைச் சிகிச்சை முறையை வளரச்செய்தால் அது கிராம மேம்பாட்டுத்திட்டத்தை உள்ளடக்கியதாகும் என்ற கருத்தில் இவருக்கு உடன்பாடுள்ளது.

பிற கட்டுரைகள்:
கொல்கத்தா இரவீந்திர பாரதி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் சுதா முகர்ஜி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்கப் பெண்களின் உடல் நலம் குழந்தைகளின் உடல் நலம் எவ்வாறிருந்தது என்பது குறித்து எழுதியுள்ளார். பெண்கள் குழந்தைகள் உடல்நலம் பேணுவதில் ஐரோப்பியர்களின் தனியார் அமைப்புகளும் அரசு நிர்வாக அமைப்பும் வகித்த பங்களிப்பையும் ஆராய்ந்துள்ளார். இங்கிருந்த சுரங்கங்கள், சணல் ஆலைகள், மலைத்தோட்டங்கள் ஆகியனவற்றில் பணிபுரியும் பெண்களின் பேறுகால நலன் குறித்து அக்கறை காட்டுதல் ஓரளவுக்காவது நிகழ்ந்துள்ளது. பேறுகால இறப்பு, குழந்தை இறப்பு குறித்த புள்ளிவிவரங்களும் இக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஆய்வு மாணவராக இருந்த சுனிதா பி.நாயர் திருவிதாங்கூர் மாநிலத்தில் மேற்கத்திய மருத்துவமுறை பத்தொன்பதாவது நூற்றாண்டில் எவ்வாறு இருந்தது என்பது குறித்த சமூக வரலாற்றை எழுதியுள்ளார். அம்மைத் தடுப்பூசி அங்கு அறிமுகமானபோது அது கட்டாயமாக்கப்பட்டது. தடுப்பூசி போடுபவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குப் போட மறுத்தனர்.

அம்மைத் தடுப்பூசி குத்திக் கொள்ள பல்வேறு காரணங்களைக் கூறி பெரும்பான்மையான மக்கள் தொடக்கத்தில் மறுத்துள்ளனர். பிராமணியத்தை இழந்து விடுவோம் என்று பிராமணர்கள் அஞ்சினர். பசு மாட்டிற்கு அம்மைக் கொப்பளம் வரச்செய்து அதிலிருந்து எடுக்கப்படும் அம்மைப் பாலை தம் உடலில் செலுத்திக் கொள்வது பசுவைப் புனித விலங்காகக் கருதும் தம் சமய நம்பிக்கைக்கு எதிரானது என்றனர். இத்தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பசுவின் குரல், உடல் அமைப்பு என்பன தம்மிடம் தோன்றிவிடும் என்றும் மனிதத்தலை மாட்டின் தலையாக மாறிவிடும் என்றும் நம்பினர். கல்வியறிவு பெற்றிருந்தவர்களிட மிருந்தும் எதிர்ப்பு வந்தது.  சிலர் தொழுநோய் சிபிலிஸ் போன்ற நோய்களை இத் தடுப்பூசி ஏற்படுத்தும் என்றனர்.

காலரா நோய் பரவியபோது நாட்டு வைத்தியர் ஒருவர் மருந்து தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.   ஆங்கில மருத்துவமுறை படிப்படியாக அறிமுகமானதையும் தனியார்கள் குறிப்பாகக் கிறித்தவ அமைப்புகள் மருத்துவ மனைகளை உருவாக்கியதையும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பக்கம் கேரளத்தின் பாரம்பரிய வைத்திய முறைகளில் ஒன்றான ஆயுர்வேத வைத்திய முறை நவீனமாதலை நோக்கி நகர்ந்தது.

இந்திய தேசிய இயக்கத்தினர் உள்நாட்டு மருத்துவ முறைக்கு ஆதரவாகக் குரலெழுப்பத் தொடங்கினர். இதன் தாக்கத்தால்1907இல் அகில இந்திய ஆயுர்வேத காங்கிரஸ் என்ற அமைப்பு உருவானது. 1889இல் ஆயுர்வேத பாடசாலைகள் உருவாயின. 1895 - 96இல் இப் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ மானியம் வழங்கப் படலாயிற்று.    1917-18 இல் ஆயுர்வேத மருத்துவத்திற்கென்று தனித்துறை தொடங்கப்பட்டு ஆயுர்வேத இயக்குநர் என்ற பதவியும் உருவாக்கப்பட்டது. இத்துறை ஆயுர்வேத பாடசாலைகளின் பாடத் திட்டத்தை நவீனப் படுத்தியது. ஆயுர்வேத மருந்தகங்களும் மருத்துவ மனைகளும் செயல்பட்டு வந்தன. காலனிய ஆட்சியும் கூட ஆயுர்வேத மருத்துவ முறையின் வளரச்சியில் அக்கறை காட்டியுள்ளது.

மேற்கத்திய மருத்துவ முறை குறித்த இந்தியர்களின் நிலைப்பாடு மும்பை மாநிலத்தில் 1900-20 காலகட்டத்தில் எவ்வாறிருந்தது என்பதை மும்பை பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் மிருதுளா ராமண்ணா ஆராய்ந்து எழுதியுள்ளார்.

நூலின் இறுதிக் கட்டுரை ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சமூக மருத்துவம் மக்கள் நலம் குறித்த மையத்தில் பணியாற்றி வரும் மோகன் ராவ், உலக வங்கியின் உடல்நல அரசியல் குறித்து ஆராய்கிறார். இக் கட்டுரையில் இடம் பெறும் வரலாற்றுச் செய்திகளில் இருந்து பலரும் நழுவிச் செல்வதைக் கருதியதாலோ என்னவோ இக் கட்டுரைக்கு ‘தவிர்க்கும் வரலாறு' (Eliding History) என்று தலைப்பிட்டுள்ளார். கட்டுரையின் இறுதியில் அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்களின் ஒரு பகுதி வருமாறு:
“உலக முழுவதும் மட்டுமல்லாது நாடுகளுக்குள்ளும் 1980 முதல் ஏற்றத்தாழ்வுகள் கணிசமாக அதிகரித்துள்ளமை மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் வறுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகக் காலனியம் முடிவுற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் மேற்கு உலக நாடுகளில் உருவான மக்கள் நல அரசுகளிலும் சுகாதார மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. உலக முழுவதும் மனிதரின் சராசரி ஆயுள் குறைந்துள்ளதுடன் குழந்தை மற்றும் சிறார் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.”

“அடித்தளமக்களுக்குத் தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ முன்னேற்றத்தை விட வாழ்க்கைத்தர முன்னேற்றம் அதிமுக்கியத்துவம் உடையது என்ற புரிதல் அவசியம். முன்பு இந்தியாவில் பிற அம்சங்களுடனும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்துடனும் உடல்நலனை இணைத்துப் பார்க்கும் போக்கு இருந்தது."

"இன்றைய புதிய முயற்சிகள் உலக வங்கியின் வழிகாட்டலில் பொதுச் சுகாதாரம் குறித்த பங்கையும் கண்ணோட்டத்தையும் வெறும் தொழில் நுட்பம் சாரந்தவையாக மாற்றிவிட்டன.”

“அதே சமயம், மக்களின் சுகாதார நலனைத் தீர்மானிப்பதில் இதுவரை அரசுக்கு இருந்து வந்த பங்களிப்பு இன்று பெருமளவில் குறைக்கப் பட்டுவிட்டது. வெறும் தொழில் நுட்ப உத்திகளைக் கொண்டு செயல்படும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களின் பயன் எப்போதும் நீடித்து நிற்பதில்லை. இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட மலேரியா ஒழிப்புத் திட்டம் இதை நிருபித்துள்ளது.  மனித நாகரீக வளர்ச்சியின் கண்ணாடிகளில் சுகாதார முன்னேற்றமும் ஒன்று. அதில் இன்று தெரிவது உயர்வாகவும் இல்லை, மின்னுவதாகவோ மிளிர்வதாகவோ இல்லை.”




நூல்:
இந்தியாவில் நோய்களும் மருத்துவமும் - ஒரு வரலாற்றுப் பார்வை: தீபக் குமார், பதிப்பாசிரியர் (2012)
Disease & Medicine in India, A Historical Overview. (Deepak Kumar, Editor) Tulika Books, New Delhi






நன்றி: உங்கள் நூலகம்; ஆகஸ்ட், செப்டம்பர் - 2021

Wednesday, March 9, 2022

ஓர் உள்ளூர் வணிகவழி



  ஆ.சிவசுப்பிரமணியன்


ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியில் குறிப்பாக அதன் பொருளியல் பண்பாட்டு வளர்ச்சியில் வாணிபத்தின் பங்களிப்பு அளப்பரியது. வாணிபத்தின் வளர்ச்சியானது வேளாண்மை உற்பத்திப் பொருட்களுக்கும், கைவினைப் பொருட்களுக்கும் இடையிலான பரிவர்த்தனை முறையை. நெருக்கமாக்கி உழுகுடிகள், கைவினைஞர்கள், நுகர்வோர் என்ற முத்திறத்தாரையும் ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது.  இதன் வளர்ச்சி நிலையே ஒரு நாட்டில் நகரங்களின் எண்ணிக்கையை மிகுதிப்படுத்தும். வணிகர் களைத் தனி மனிதர்கள் என்ற அடையாளத்தில் இருந்து விடுவித்து வணிகக் குழுக்களாக மாற்றி அமைக்கும். அத்துடன் நகர நாகரிகம் என்ற அடைமொழி உருவாக்கித் தரும்.

நகரங்கள் என்பன உள்நாட்டு நிலப்பகுதியில் மட்டுமின்றி கடற்கரைகளிலும் உருவாகி கடல்கடந்த நாடுகளுடனும் வாணிப இணைப்பை உருவாக்கும். இம்முயற்சியில் நிகழும் வாணிபமானது ஏற்றுமதி வாணிபம் இறக்குமதி வாணிபம் என இருதரத்தது. இவை இரண்டும் வளர்ச்சியுற கடற்கரை நகரங்களும், உள்நாட்டு நகரங்களும், பரந்துபட்ட உள்நாட்டுப் பகுதிகளைக் கொண்டிருத்தல் அவசியமான ஒன்று. ஏன் எனில் வாணிபத்திற்கான உற்பத்திப் பொருளையும், கைவினைப் பொருட்களுக்கான மூலப் பொருட்களையும் வழங்க உள்நாட்டுப் பகுதியின் பங்களிப்பு மிகவும் தேவை. இதுபோல் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் வாழும் தளமாகவும் உள்நாட்டுப் பகுதி விளங்கியது.

இவ்வாறு நகரம், உள்நாட்டுப்பகுதி என்ற இரண்டின் இணைப்பு தமிழர்தம் வரலாற்றில் தொன்மையான ஒன்றாக விளங்கியுள்ளது. 'மதுரைக்காஞ்சி' 'பட்டினப்பாலை என்ற இரு சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் இடம் பெற்றுள்ள 'ஊர்காண் காதை'யும் பண்டைத் தமிழரின் வாணிபச் சிறப்பிற்குச் சான்று பகர்கின்றன.

வாணிபமும் சாலையும் :
வாணிபச் செயல்பாட்டில் மிக முக்கியமான ஒன்றாக அமைவது பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வதாகும். தொடக்கத்தில் விலங்குகளும் பின்னர் விலங்குகளால் இழுக்கப்படும் வண்டிகளும் சுமைகளைக் கொண்டு செல்லப் பயன்பட்டுள்ளன. எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் வாணிபப் பொருட்களைச் சுமந்து செல்லப் பயன்படுத்தப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.

இவை கடந்து செல்லப் பாதைகள் புதிதாக உருவாக்கப்பட்டன. வாணிபத்திற்காக மட்டுமின்றி, மன்னர்கள் நிகழ்த்திய படையெடுப்புகள், கலைஞர்களின் கலைப்பயணம், பண்ணியத் தலயாத்திரை என்பனவற்றிற்கும் இவை  பயன்பட்டன என்றாலும், வாணிபப் பயன்பாடே இவற்றின் அடிப்படை நோக்கமாக இருந்தது. இதன் அடிப்படையிலேயே வாணிபப் பெருவழி (Trade Route) என்று அழைக்கப்பட்டன. சாலைகளின் வளர்ச்சி ஏற்படுத்திய விளைவுகள் குறித்து மோதிசந்திரர் (1907), 'நாட்டில் சாலையமைப்புகளின் வளர்ச்சிஅந்தநாட்டின் நாகரிக வளர்ச்சியின் அளவு கோலாகும். நெடுஞ்சாலைகளில் இருந்து கிளைச்சாலைகள் பெருகப் பெருக நாகரிகமும் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவத் தொடங்கியது.' என்று கூறியுள்ளார்.

தமிழ்க் கல்வெட்டுக்களில் இத்தகைய வணிகப் பெருவழிகள் குறித்த பதிவுகள் உள்ளன. இவை குறித்த, புதிய கண்டு பிடிப்புகளைத் தொல்லியல் அறிஞர்கள் செ. இராசு,  ர.  பூங்குன்றன்,  ந. அதியமான்,  கா. இராஜன்,  வெ. வேதாச்சலம் ஆகியோர் வெளிப்படுத்தி உள்ளனர்.  பாவெல் பாரதி வைகைப் பெருவழி தொடர்பான செய்திகளைத் தமது இரு கட்டுரைகளின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார்.

இவர்களது ஆய்வின் அடிப்படை ஆதாரங்களாகக் கல்வெட்டுக்கள் அமைத்துள்ளன. ஆனால் இக்கட்டுரை கல்வெட்டுச் சான்றுகள் இன்றி வாய்மொழிச் சான்றுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் திகழ்ந்த பண்டமாற்று வாணிபம் குறித்த வாய்மொழி வழக்காறுகளை அடிப்படைச் சான்றுகளாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு வகையில் உள்ளூர் வரலாறு (local history) என்ற வரலாற்று வகைமைக்குள் அடங்கும் தன்மைத்தது.

உள்ளூர் வரலாறு:
உள்ளூர் வரலாறு என்பது ஒரு கிராமத்தையோ அல்லது சில கிராமங்களையோ மையமாகக் கொண்டது. துறைமுக நகரம்,  தலை நகரம் என்பனவற்றில் இருந்து தொலைவில் உள்ள சிறிய அல்லது நடுத்தர நகரமும் பொதுவான புவியியல் அமைப்பை விடச் சிறிய நில அமைப்பைக் கொண்ட நிர்வாகப் பகுதியும் உள்ளூர் வரலாற்று வரைவுக்கான களமாகும் என்பது பியர் கூபர் (1915- 2012) என்ற பிரஞ்சு வரலாற்றுப் பேராசிரியரின் கருத்தாகும்.

இவரது இவ் வரையறையை மையமாகக் கொண்டு கருப்புக்கட்டி என்றழைக்கப்படும் பனைவெல்லம் உற்பத்தி செய்வோர் நிழத்திய பண்டமாற்று வாணிபம், பயன்படுத்திய பாதை, சுமைகளைக் கொண்டு செல்ல உதவிய வாகனம் விலங்கு என்பன குறித்த செய்திகளை வாய்மொழித் தரவுகளாகத் திரட்டி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாய்மொழி வரலாறு (Oral History) என்ற வகைமைக்குள்ளும் இக்கட்டுரை அடங்குகிறது.

வாய்மொழி வரலாறு:
வாய்மொழி வரலாறு என்ற வரலாற்றியல் கலைச்சொல் 1948 ஆவது ஆண்டில் ஆலம் நீவின் என்ற கொலம்பியாப் பல்கலைக் கழகப் பேராசிரியரால் உருவாக்கப்பட்டதாகும். வாய்மொழி வரலாறு என்பது குறித்துப் பல்வேறு வரையறைகள் வரலாற்றியலிர்களிடம் உள்ளன. வாய்மொழியாக வழங்கப்படும் வழக்காறுகளின் தொகுப்பே வாய்மொழி வரலாறு என்று எளிதாக, வரையறை செய்வது இதை மலினப்படுத்தும் செயலாகும்.

ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வில் பங்கு கொண்டோரின் வாய்மொழிச் சான்றுகளைப் பயன்படுத்துதலே வாய்மொழி வரலாறு என்று சுகோவ் என்பவர் குறிப்பிடுகிறார். ஜான் வான்சினா என்பவரோ ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வை நேரில் கண்டவர்களின் கூற்றை வாய்மொழி மரபாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது கருத்துப்படி அதைக் கண்டறியாத ஒருவர் செவிவழியாகக் கேட்டறிந்ததைக் கூறுவதுதான் வாய்மொழி மரபாகும். இதன்படி வாய்மொழிப் பரவல் (Oral Transmission) முக்கியத்துவம் பெறுகிறது. லுமிஸ் என்பவர் வரலாற்றின் ஒரு வகைமையாக வாய்மொழி வரலாற்றைக் கருதவில்லை . அவரது கருத்துப்படி இது ஒரு வரலாற்று முறையியல் (Methodology) ஆகும்.

இக்கட்டுரை வாய்மொழி வரலாறு தொடர்பான இவ்விவாதங்களுக்குள் நுழையாது ஜான்வான் சினாவின் வரையறையை அடியொற்றி எழுதப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் ஊரில் ஓடும் பொருநை ஆற்றின் தென்கரைப் பகுதியில் உள்ள தேரிக்காடு என்றழைக்கப்படும் பனைமரக்காடுளில் வாழ்ந்தோர் ஆங்கில ஆட்சியின்போது நிகழ்த்திய பண்டமாற்று வாணிபம் இக்கட்டுரையின் மையப் பொருளாகும். இவ்வகையில் வாய்மொழிச் செய்திகளின் துணையுடன் எழுதப்பட்ட உள்ளூர் வணிக வரலாறு எனலாம்.

தேரிக்காடு:
இன்றையத் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டங்களும் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள நாங்குனேரிஇராதாபுரம் வட்டங்களும் செம்மண் மேடுகளையும் சிறிய பள்ளத்தாக்குகளையும் கொண்டவை. இந்நிலப்பகுதி தேரி என்று குறிப்பிடப்படுகிறது. மேடான நிலப்பகுதியைக் குறிக்க, தெற்றி என்ற சொல்லாட்சி கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. ஒருவேளை தேரி என்ற சொல் தெற்றி என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். இதன் ஆங்கில ஒலிமொழி பெயர்ப்பாகவே Teri என்ற சொல்லாட்சி உருவாகியுள்ளது. தேரி நிலப்பகுதியில் நெருக்கமாக வளர்ந்து நிற்கும் பனை மரங்களை அடிப்படையாகக்கொண்டு பனைமரக்காடு என்ற பொருளைத்தரும் ஆங்கிலச் சொல்லை ஆங்கில அதிகாரிகளும், கிறித்தவ மறைப்பணியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். ஆங்கில ஆட்சியின்போது திருச்செந்தூர் வட்டம் 'பனைமரத் தாலுகா' என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. 

தேரியின் பொருளாதாரம்:


தமிழ்நாட்டின் பெருவாரியான கிராமங்களைப் போன்றே தேரிநிலப் பகுதியும் காலனிய ஆட்சியின்போது வேளாண் பொருளாதாரத்தையே மையமாகக் கொண்டிருந்தது. இப்பகுதியின் பொருளாதாரத்தில் பனைமரத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. பனைமரத்தில் இருந்து நேரடியாகப் பெறும் நொங்கு, கள், பதநீர், ஓலை என்ற நேரடியான பொருள்கள் மட்டுமின்றி அவற்றின் துணைத் தயாரிப்பான, பலவகைக் கருப்புக்கட்டிகள் (பனை வெல்லம்), கற்கண்டு, பனங்கிழங்கு என்பன முக்கிய விற்பனைப் பொருட்களாயின. இவற்றுள் கருப்புக்கட்டி, கற்கண்டு, பனங்கிழங்கு என்பன தவிர ஏனையவை இருப்பு வைத்து விற்கமுடியாத பொருட்களாகும். இவை தவிர கட்டிடங்களுக்குத் தேவையான பனைச் சட்டங்கள், ஓலைகள், பனை நார், ஈர்க்கு, கருக்கு மட்டை என்பனவும் விற்பனைப் பொருட்களாயின. இவை  அனைத்தும் இன்றுவரை விற்பனைப் பொருள்களாகத் தொடர்கின்றன.


ஆனால் இவை தவிர வேறுவகையான வேளாண் பொருள்களும் தேரிக்காட்டுப் பொருளாதாரத்தில் இடம் பெற்றிருந்தன. தேரிக்காட்டு மக்களின் கடந்தகாலப் பாண்டமாற்று வாணிபத்தில் இவை முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளன.  தேரிக்காட்டுப் பொருளாதாரத்தில் பனைபடு பொருள்களும் வேளாண் உற்பத்திப்பொருட்களும் இடம் பெற்றிருந்தது என்பதை மேலோட்டமாகப்  பார்த்தோம். அடுத்து,  இவை வாணிபப்பொருளாக விளங்கியமை குறித்த செய்திகளைக் காண்போம்.

கருப்புக்கட்டி:


பனைமரத்தில் இருந்து பெறும் பதநீரைக் காய்ச்சி உருவாக்கப்படும் கருப்புக்கட்டியானது இனிப்புப் பொருளாக மட்டுமின்றி. நம் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வுண்மையை., வங்கவிரிகுடாவின் முத்துக்குளித்துறையில் அரசியல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் முன்னரே போர்ச்சுக்கீசியர்கள் அறிந்திருந்தனர் - பொ.ஆ.1511-1662 வரையிலான காலத்தில் அவர்கள் அறிந்திருந்த நம்பாரம்பரிய மருத்துவமுறைகள் குறித்துத் தமது நூல் ஒன்றில் பேரா.ஜெய சில ஸ்டீபன் (2015:358-361) குறிப்பிட்டுள்ளார். அதில் சளித்தொல்லைக்கான மருந்தாக சுக்கும் கருப்புக்கட்டியும் கலந்த மருந்து இடம் பெற்றுள்ளது. சுக்குடன் அதைவிட ஐந்துமடங்கு அளவு கருப்புக்கட்டி இம் மருந்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமது மற்றொருநூல் ஒன்றில் (1999: 124) தூத்துக்குடிக்கும் அருகில் உள்ள பழையகாயல் துறைமுகத்தில் நிகழ்ந்த கருப்புக்கட்டி ஏற்றுமதி குறித்த செய்தி ஒன்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி வாஸ்கோடாகாமாவின் மகனான மானுவல்காமா ஒரு பலம் ஏழு ரூபாய் என்ற விலையில் கருப்புக்கட்டி வாங்கி 1525 மார்ச் 7இல் போர்ச்சுக்கலுக்கு ஏற்றுமதி செய்துள்ளார். இச் செய்திக்கும் மேலே குறிப்பிட்ட மருந்துக்கும் இடையே ஓர் இயைபு இருக்க வாய்ப்புள்ளது. எப்படியோ கருப்புக்கட்டி ஏற்றுமதிப் பொருளாக விளங்கியுள்ளது என்பது உண்மை. 

நாசரேத் என்ற தேரிக்காட்டு ஊரைத் தம் பூர்வீக ஊராகக்கொண்ட டாக்டர். சசிகரன் தங்கையா தாம் எழுதிய நாசரேத் வரலாறு குறித்த நூலில் (2012: 112) நாசரேத்தில் இருந்து கருப்புக்கட்டி ஏற்றுமதி ஆனதாகக் குறிப்பிட்டுள்ளார். நாசரேத் ஊரைச் சுற்றியுள்ள தேரிக்காட்டுப் பகுதிகளில் இருந்து இவை சேகரிக்கப் பட்டிருக்கலாம்.

வேளாண்மை உற்பத்தி: 
கருப்புக்கட்டி உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் சொற்ப அளவிலேயே தேரிக்காட்டுப் பகுதியில் முன்னர் வேளாண்மை நிகழ்ந்துள்ளது. இன்று இப்பகுதியில் நிலவும் வேளாண் தொழிலுடன் ஆங்கில ஆட்சியின் போது நிகழ்ந்த  வேளாண் நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. பனைமரக்காடுகளாகவே தேரிப்பகுதி இருந்துள்ளது. இதனை ஊடறுத்துச் செல்லும் வண்டித்தடங்கள், ஒற்றையடிப்பாதைகள் வாயிலாகவே பயணங்கள் திகழ்ந்துள்ளன. இப்பகுதிக்கு வரும் புதியவர்கள் தடம் மாறி வழிதப்பிப் போகும் வாய்ப்பிருந்தமையால் வழிகாட்டிகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

வழிகாட்டிகளுக்கு ஊதியம் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது. தேரிக்காட்டுப் பகுதியில் 19 ஆவது நூற்றாண்டுக் காலத்தில் உபதேசியாராகப் பணியாற்றிய சவரிராயபிள்ளை (1901-1834) என்பவர் 1805 செப்டம்பர் 25 ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் நாசரேத் ஊரில் முதல்நாள் இரவில் தங்கிவிட்டு அதிகாலையில் புறப்பட்டுச் சென்றதைபரஞ்சோதி யென்றவனைக் கூடப்போய் வழி பிசகாமல் கொண்டுவந்துவிட அனுப்பினார்.  ...... அவன் வராவிட்டால் பலப்பல வழிகளில் அலைந்தும் விடிய மட்டும் வருத்தப்பட நேரிடும்' என்று எழுதி உள்ளார். மற்றொரு குறிப்பில் 22-2 விடியக்காலம் புறப்படத் துணையாள் சம்பளத்துக்குக் கிடைக்கவில்லை' என்று எழுதியுள்ளார்.

இவ்வாறு சரியானசாலைகள் இல்லாதது மட்டுமின்றி,  கிணறு குளம் என நேரடி நீர்ப்பாசன வசதிக்குறைவும் பல பகுதிகளில் இருந்துள்ளது. இருப்பினும் பனை மரங்களுக்கு ஊடாக வேளாண்மையும் திகழ்ந்துள்ளது.

பதநீர் இறக்கும் பருவம் தேரிக்காட்டுப் பகுதிகளில் பிப்ரவரித் திங்களில் தொடங்கி மே இறுதியில் அல்லது ஜூன் தொடக்கம் முடிவடையும். பதநீர் இறக்கும் இப்பருவத்தில்தான் கருப்புக்கட்டித் தயாரிப்பும் நிகழும். இப்பருவகாலத் தயாரிப்பு மட்டுமே அவர்களின் வாழ்வாதாரமாக அமையவில்லை. துணைத் தொழிலாக வேளாண்மையும் இருந்துள்ளது. 

ஒப்பீட்டு அளவில் தோக்கும் போது பனங்காட்டு வேளாண்மையைப் புன்செய் வேளாண்மை எனலாம். ஏனெனில் இரண்டும் நேரடிப்பாசனமின்றி "வானம் பார்த்த விவசாயம்" (மழையை எதிர் நோக்கி நிகழும் விவசாயம்) இது பின் வரும் முறையில் நிகழும். 

பனங்காட்டு வேளாண்மை:
பனைமரம் செழித்து வளர்ந்துள்ள தேரிநிலப்பகுதி சமதளமாக இல்லாது மேடும்பள்ளமுமாக அமைந்தது. வடகிழக்குப் பருவமழையினால் கிடைக்கும் நீரே இதற்கு ஆதாரம் என்ற நிலையில் இதில் பெய்யும் மழைநீரினை அதிக அளவில் நிலத்தில் சேமிப்பதும் உரச்சத்தைப் பனைகளுக்குத் தருதலும் அவசியம். இவை இரண்டு பயன்களுக்காக வ.கி. பருவமழை தொடங்கும் முன்னர் பனங்காட்டை பத்து முறை உழுவர். இதில் முதல் உழவு முடிந்ததும் ஆட்டுக்கிடை (பட்டி)  போடுவர். கிடைபோட்டு முடிந்த பின்னர் நன்றாக உழுது விடுவர். இதற்கடுத்து வரும் உழவில் (ஒன்பது அல்லது பத்தாவது)  விதைகளைத் தூவி உழுதுவிடுவர்.

உளுந்து,  பாசிப்பயறு,  தட்டாம் பயறு (காராமணி), மொச்சை போன்ற பயறுவகைகளும் தினை, வரகு, சாமை ஆகிய புன்செய்த் தானிய வகைகளும், பருத்தியும் முக்கியப் பயிர்களாக அமைந்தன. மழை பெய்தவுடன் இவை முளைத்துவிடும்.  இடையிடையே பெய்யும் மழை இவற்றை வளர்த்துப் பலன்தரச் செய்து விடும். எள், மழையைத் தாக்குப்பிடிக்காத பயிர் என்பதால் மழைக்காலம் முடிந்தபின்னர் ஈரப்பதத்தில் உழுது விதைத்துவிடுவர். கிணற்றுநீரின் துணையால் ஆங்காங்கே நடைபெற்ற வேளாண்மையில் வெங்காயம் பயிராகி குலசேகரன் பட்டிணம் துறைமுகம்வழி இலங்கைக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.

பருவமல்லாத காலத்தில் பெய்யும் மழை எள் பயிருக்கு ஆகாது என்பதால் தண்ணீர் தேங்காத சரிவான நிலப்பகுதியையே எள் பயிரிடத் தேர்வு செய்வர். (தேரிக் காட்டு ஊர் ஒன்றின் பெயர் எள்ளுவிளை என்பதாகும். விளை - தோட்டம்) பனங்காட்டில் நிகழ்ந்துவந்த கடந்தகால வேளாண்மை குறித்த இச்செய்திகள் பனைப் பொருளாதாரத்துடன் வேளாண் பொருளாதாரமும் இணைத்தே இருந்துள்ளதை உணர்த்துகின்றன. அத்துடன் தேரிக்காட்டுப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாகப் பனைமட்டும் இருக்கவில்லை என்ற உண்மையும் வெளிப்படுகிறது.

பனைகளுக்கிடையே உழுவதால் உருவான சால்களில் (கலப்பையின் கொழு பதிந்து சிறு ஓடை போல் உருவாகும் பகுதி) மழை நீர் தேங்கி நிலத்துக்குள் இறங்கிவிடும். நிலத்தைவிட்டு மழைநீர் வழிந்து போகாது. அத்துடன் ஆட்டுப்புழுக்கைகள் கரைந்து மண்ணுடன் இரண்டறக் கலந்துவிடும். அத்துடன் உழும்போது பனையின் வலுவிழந்த சல்லிவேர்கள் அறுந்து போய் புதியவேர்கள் தோன்றும். ஆணிவேர் இல்லாத பனைமரம் உரிய அளவு நீரைப்பெற இப்புதிய சல்லிவேர்கள் துணை புரியும். பயறுவகைகளைப் பயிரிட்டதானது இரண்டு வகையான நன்மைகளை வழங்கியுள்ளது. பனையைச் சுற்றிலும் மழைக்காலத்தில் வளரும் முரட்டுக்களைகளின் வளரச்சியை இவ் வேளாண்மை கட்டுப்படுத்தி உள்ளது. வேர் முடிச்சுப் பயிர்களான பயறுவகைகள் தழைச்சத்தை நிலத்தில் நிறுத்தி உதவி உள்ளன.

இவ்வாறு பனைத்தொழிலுடன் இணைந்த வேளாண்மையானது ஊடுபயிர் போன்று காட்சி அளித்தாலும் ஓர் உபரிவருமானத்தை வழங்கும் தொழிலாக இது இருந்துள்ளது. பனைத்தொழில் செய்து வந்தோரைப் பணப்பயிர் வேளாண்மையின் பக்கம் திருப்பியதில் ஐரோப்பியக் காலனியவாதிகளுக்கு முக்கியப்பங்கு இருந்துள்ளது. இவர்களுள் முதலாவதாக வருபவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்.

16-ஆவது நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்கவிரிகுடாவின் முத்துக்குளித்துறைப் பகுதியின் கடலுக்குள் இவர்கள் ஆதிக்கம் செலுத்திவந்தனர். பின் 1533வாக்கில் முத்துக்குளித்துறையின் தூத்துக்குடி உள்ளிட்ட கடற்கரைப்பகுதியில் அரசியல் ஆதிக்கம் செலுத்துவோராக மாறினர். இவர்களுடனான மிளகு வாணியப்போட்டியில் டச்சு நாட்டினரின் கை ஓங்கியநிலையில் தமிழகத்தின் உள்நாட்டுப் பகுதிகளில் மிளகாய், புகையிலை விதைகளை அறிமுகம் செய்ததுடன் அவற்றைத் தங்களுக்கே விற்கும்படி மக்களை வலியுறுத்தினர்.  மிளகுக்கு மாற்றாக மிளகாய் அறிமுகமான நிலையில் அதை மக்களிடையே பரவலாக அறிமுகம் செய்யும்படி இங்குப்பணிபுரிந்த கத்தோலிக்கச் சமயக்குருக்களை போப் வலியுறுத்தியுள்ளார். ஒரு கத்தோலிக்க நாடு என்பதன் அடிப்படையில் போர்ச்சுக்கல் மன்னர் போப்பிடம் வைத்த வேண்டுகோளே இதற்குக் காரணமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே போர்ச்சுக்கீசியரின் துணையுடன் கத்தோலிக்க சமயத்தைத் தழுவிய வீரபாண்டியன் பட்டிணம், மணப்பாடு, உவரி, விஜாயபதி, கூட்டப்புளி ஆகிய கடற்கரை ஊர்களைச் சேர்ந்த பரதவர்கள் வேளாண்மையிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதுபோன்றே பனைத்தொழிலை மேற்கொண்டிருந்த கத்தோலிக்க சமயத்தைத் தழுவியிருந்த நாடார்கள் தம் உணவுத் தேவைக்காக மட்டுமே வேளாண்மையில் ஈடுபட்டு வந்த நிலைக்கு மாறாக மிளகாய், புகையிலை ஆகிய பணப்பயிர்களைப் பயிரிடும்படி போர்ச்சுக்கீசியக் காலனியம் மாற்றிவிட்டது.

இச் செய்திகளை வரலாற்றுப் பேராசிரியர் கதிர்வேல் தமது கட்டுரை ஒன்றில் (1983)குறிப்பிட்டுள்ளார். புவியியல் அடிப்படையில் பொதுவெளியில் இருந்து ஒதுங்கியிருந்த மக்கள் பிரிவை வேளாண்மை உற்பத்தியிலும், அவ்வாறு உற்பத்திசெய்த பொருட்களை வாணிபம் செய்வதிலும் ஈடுபடும்படி போர்ச்சுக்கீசியக் காலனியம் செய்துவிட்டது.

ஆங்கிலக் காலனியம்:
தேரிக்காட்டுப்பகுதியில் நிகழ்ந்துவந்த பனங்காட்டு வேளாண்மையானது பனைமரக்காடுகளில் வாழ்ந்தோரின் சுயதேவைப் பூர்த்திக்கான ஒன்றாக இருந்து பின்னர் பண்டமாற்று வாணிபத்திற்கான மூலப்பொருளாக வளர்ச்சி அடைந்துள்ளது. வாணிபத்தில் பொருள்களின் சுழற்சி முக்கியமான ஒன்றாகும். இச் சுழற்சியில் பாரம்பரியமான நம் சந்தைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. இச் சந்தைகள் குறித்த மேலோட்டமான பதிவுகளை மேலே குறிப்பிட்ட உபதேசியார் சவரிராயனின் நாட்குறிப்புகள் வழங்குகின்றன.

இச் சந்தைகளில் பொதுமக்கள் வணிகர்களிடம் இருந்து நேரடியாகத் தமக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டார்கள்.  சந்தை நடைபெறாத நாட்களில் நுகர்வோரைத்தேடி வணிகரும் வணிகரைத்தேடி நுகர்வோரும் சென்று பொருட்களைப் பண்டமாற்று செய்துகொண்டனர் அல்லது நாணயங்களைக் கொடுத்துப் பெற்றுக்கொண்டனர். இது சுருங்கிய அளவிலேயே பொருட்களின் இடப்பெயர்ச்சிக்கு உதவும் தன்மையது. எனவே வேளாண் உற்பத்தியும் ஒரு கட்டுக்குள்தான் இருந்தது.

ஆனால் ஆங்கிலக் காலனியம் இப்பகுதியில் அறிமுகமான பின்னர் இந்நிலை மாறத் தொடங்கியது. பனைத்தொழில் மேற்கொண்டு வாழ்ந்து வந்த நாடார் சமூகத்தில் சில உட்பிரிவினரே நில உரிமையாளராக இருந்த நிலையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. நாடார்கள் தம் உபரியை நிலங்களில் முதலீடு செய்யத் தொடங்கினர். இது குறித்து 1947 இல் வெளியிட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் விவரச்சுவடி/ கெசட்டியார்) நூலில் பேட் ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதன்படி, 1917க்குமுன் நடந்த நில உரிமை தொடர்பான மறு ஆய்வில் (Resettlement and Resarityதிருநெல்வேலி மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நாடார் சமூக நிலவுடைமையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. (இவ் ஆய்வின் சிறப்பதிகாரியாகப் பணியாற்றியவரும் இவர்தான்). திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி, திருச்செந்தூர் தென்காசி ஆகிய வட்டங்களில் உள்ள பனை விளைஞர்கள் தம்சேமிப்பை நிலங்களில் முதலீடு செய்ததாகவும் பேட் (1917:128) குறிப்பிட்டுள்ளார்.  இவர் குறிப்பிட்டுள்ள நாங்குநேரி, திருச்செந்தூர் வட்டங்கள் தேரிக்காட்டுப்பகுதிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

நிலங்கள் கிடைக்காவிடில், போக்குவரத்துக்கான வண்டிகள், கருப்புக்கட்டி விற்பனை, இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்காக வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி வளர்ப்பு என்பனவற்றில் ஈடுபட்டனர். சிலர் குறைந்த அளவு கைமுதலுடன் இலங்கையின் நகரங்களுக்குச் சென்று எழுத்தர்களாகவும் சிறிய அளவிலான கடை வியாபாரிகளாகவும் செயல்பட்டனர். தேயிலை, ரப்பர் தோட்டங்களின் கண்காணிகளாகவும் சிலர் பணியாற்றினர். கிறித்தவ மிஷனரிகளின் துணையால் கல்விகற்ற நாடார்கள் அரசு, ரயில்வே, வணிக நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றனர். சட்டம், இறையியல், மருத்துவம், பயின்ற கிறித்தவ சமயம் தழுவியோர் மடகாஸ்கர்நேட்டால், மொரிஷியஸ் நாடுகளுக்குக் கிறித்தவ மிஷனரிகளால் அனுப்பிவைக்கப்பட்டனர். பேட் (1917:128-129) குறிப்பிட்டுள்ள இச் செய்திகள் பொருளியல் நிலையில் உபரியை நோக்கி இச்சமூகம் பயணித்ததை நாம் அறியும்படிச் செய்கின்றன.

மேலும் பனைமரத்தின் பயன்பாடுகளை மட்டுமே நம்பியிருந்த வாழ்க்கை முறையில் இருந்து தேரிக்காட்டு மக்கள் தங்களை விடுவித்துக் கொண்டு முன்னேறத் தொடங்கியதை பேட் எழுதியுள்ள இக்குறிப்புகள் உணர்த்துகின்றன. இருந்தபோதிலும் போக்குவரத்திற்கான சாலைகள் தரம் குறைந்தே இருந்துள்ளன. அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் வருவாய் வட்டங்களில் இம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள தென்காசி அம்பாசமுத்திரம் வட்டங்கள் நல்ல சாலைகளைக் கொண்டிருந்ததாகவும் தேரிக் காட்டுப் பகுதிகள் மோசமான சாலை அமைப்பைக் கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் (pate 1917:240-241).தேரி நிலப்பகுதியிலும் இதனை அடுத்திருந்த மணல் நிறைந்த கடற்கரைப்பகுதியிலும் வண்டிகளுக்குப் பதிலாகப் பொதிமாடுகள் சரக்குகளைச் சுமந்து செல்லப் பயன்படுத்தப்பட்டன. சற்று எடை குறைந்த சுமைகள் தலைச் சுமையாகவும் காவடி போல் கம்பின் இருமுனைகளிலும் கட்டப்பட்டு தோள்ச் சுமையாகவும் ஓட்டமும் நடையுமாகச் சுமை கூலிகளால் சுமந்து செல்லப்பட்டன (மேலது:241).

வாணிபப்பயணம்:
போக்குவரத்து வசதியும் நீர் வளமும் குறைந்திருந்தாலும் தேரிக்காட்டுப் பகுதியானது தன் வேளாண் பொருள் உற்பத்தியை மையமாகக்கொண்ட வாணிபத்தைக் கொண்டிருந்தது. இது குறித்து இனி இங்கு குறிப்பிடும் செய்திகள் வாய்மொழி வழக்காறுகளின் வழிப் பெறப்பட்டவை. சாத்தான்குளம் என்ற தேரிக்காட்டூர்ப் பகுதியில் இருந்து நாசரேத் வழியாக ஆழ்வார்திருநகரி ஊர் சென்று அங்கு ஓடும் பொருநை ஆற்றைக் கடந்து சென்று வாணிபம் செய்து திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தமை குறித்த செய்திகளைக் 'கர்ணபரம்பரையாகக்' கேட்டறிந்தவர்கள் கூறிய செய்திகளே இங்கு இடம் பெற்றுள்ளன.

தன் பெயரால் அமைந்த ஒரு வட்டத்தின் தலைநகரமாக சாத்தான்குளம் என்ற ஊர் தற்போது உள்ளது. இதைச் சுற்றி உள்ள சிறிதும் பெரிதுமான கிராமங்கள் தேரிக்காட்டுக்கே உரித்தான பனைமரங்களை மிகுதியாகக் கொண்டவையாக இருந்துள்ளன. இப்பகுதியில் இருந்து பொதி மாடுகளில் சுமை ஏற்றிச் சென்று வாணிபம் திகழ்ந்துள்ளது. இதன் அடிப்படையில் இவ்வாணிபம் பொதிமாட்டு வியாபாரம் என்றழைக்கப்பட்டது. இவ் வாணிபத்தில் கருப்புக் கட்டி, தேரிக்காட்டில் பயிரிடப்பட்ட தானியங்கள் பயறுவகைகள் பருத்தி, வெங்காயம் என்பன பொதிமாடுகளின் துணையுடன் பயணித்துள்ளன.

இக் குழுவினர் சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து மாலையில் புறப்பட்டு இரவு தொடங்கும் நேரத்தில் சாத்தான்குளம் வந்து சேர்வர். இங்கு இரவு தங்குவதால் குழுவினருக்கும் மாடுகளுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். மாடுகளில் இருந்து சுமைகளை இறக்கி ஒரே இடத்தில் வைத்துவிட்டு அதைச் சுற்றிலும் படுத்து உறங்குவர். திருடர்களிடம் இருந்து பொருளைக் காப்பாற்றும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. சிலம்புக் கம்புகளுடன் முறைபோட்டுக் காவல் காத்தலும் இருந்துள்ளது. அதிகாலையில் மூன்று அல்லது நான்கு மணி அளவில் கண்விழித்து பொழுது புலரும் முன்பே தம் பயணத்தைத் தொடங்கிவிடுவர். சாத்தான்குளத்தை விட்டு பன்னம்பாறை விலக்கு, பழங்குளம் பிடாதேரி, தைலாபுரம், ஆனந்தபுரம்சடையங்கிணறு, தோப்பூர் விலக்கு, வாழையடி ஆகிய ஊர்களைக் கடந்து நாசரேத் நோக்கி வருவர். வரும் வழியில் சிறு விவசாயிகளிடம் வேளாண் விளை பொருட்களைப் பண்டமாற்று முறையில் கொள்முதல் செய்துகொள்வதுமுண்டு - நாசரேத் ஊரைக் கடந்ததும் ஆழ்வார்திருநகரி வந்து சேர்வர்.

பொருநை ஆற்றின் தென்கரையில் உள்ள ஊர் ஆழ்வார்திருநகரி. 1838க்கு முன்னர் இது தென்கரைத் தாலுகா என்ற பெயரில் ஒரு வட்டத்தின் தலைநகராக இருந்துள்ளது. பதநீர் இறக்கும் பருவம் முடியும் மே இறுதி அல்லது ஜூன் தொடக்கக் காலத்தில் பொருநை அற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடாது. எனவே மாடுகளுடன் ஆற்றைக் கடந்து எதிர்க்கரையில் உள்ள ஆழ்வார் தோப்பை வந்தடைவர்.   அங்கு சரக்குகளை இறக்கி ஆற்றில் நீராடி, உணவு உண்டு பயணக் களைப்பைப் போக்கிவிட்டு மீண்டும் பயணத்தை ஆழவார் தோப்பிற்குக் கிழக்கே உள்ள ஏரல் என்ற ஊரை நோக்கித் தொடர்வர்.

பொருநை ஆற்றின் வடகரையில் உள்ள ஏரல் ஒரு முக்கிய வாணிபத்தளம். இங்கு சில்லறை வாணிபம் மட்டுமின்றி மொத்த வாணிபமும் நிகழும் - தாம் கொண்டுவந்த பொருட்களில் பெரும்பகுதியை இங்கு விற்றுவிட்டு சிறு பகுதியுடன் கிழக்கே உள்ள புன்னைக்காயல்பழையகாயல் என்ற கடற்கரை ஊர்களை நோக்கிப் பயணிப்பர். இங்கு பண்டமாற்றாக உப்புக் கருவாடு என்பனவற்றையும் ஏரல், ஆழவார்திருநகரி ஆகிய ஊர்களில் அரிசியையும் பெற்றுக்கொண்டு திரும்புவர். மழைக்காலம் தொடங்கும் முன் மூன்று அல்லது நான்குமுறை இவ் வாணிபப் பயணம் நிகழ்ந்துள்ளது. இவ் வாணிபம் நிகழ்ந்த காலம் குறித்து சிறிது மாறுபட்டக் கருத்துக்கள் கூறப்பட்டன. இருப்பினும் தகவலாளர்கள் கூறிய வாணிபம் நிகழ்ந்த காலமாக இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகள் என்று கொள்ள முடியும். இவ் வாணிபமானது பண்டமாற்று முறையிலும் பணவடிவிலும் ஒரு சேர நிகழ்ந்துள்ளது. பனைத் தொழிலுடன் இணைந்து நடந்த வேளாண்மைப் பொருட்கள் முக்கிய வாணிபப் பொருட்களாக மாறி இருந்துள்ளன. இது உழுதொழிலையும் வாணிபத்தையும் இணைக்கும் சரடாக இருந்துள்ளது. 

எச்சங்கள்:
தேரிக்காட்டினரின் வாணிபப் பயணத்தின் போது, பாதுகாப்பு நோக்கில் சிலம்பப் பயிற்சி மேற்கொண்டதன் எச்சமாக தேரிக்காட்டுப் பகுதியில் சிலம்பம் பயின்றோரும் சிலம்ப ஆசான்களும் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் வாழ்ந்துள்ளனர். இப்பகுதி மக்கள் மத்தியதர வர்க்கமாக மாறிய பின்னரும் சிறிது காலம் வரை ஏதேனும் ஒரு பயற்றைக் காலை உணவாகக் கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. தற்போது இது பெரும்பாலும் மறைந்துவிட்டது.


துணை நூற்கள்:
தங்கசாமி சசிகரன் (2002),  நாசரேத் வரலாறு (1880-2002). 
மோதி சந்திரர் (1970), இந்திய வணிக நெறிகள்
Jeyaseela Stephen (1998), Portguess in the Tamil Coast. 
Jeyaseela Stephen (2016), A Meeting of the Minds. 
Kadhirvel.S (1983), Portuguese Colarial Impact on Agriculture and Trade. Tamil Coast, Westem Colonial Policy. NR.Ray Ed.  
Pale.H.R. (1917), Tinnevelly District Gazetteer. 
Pierre Coubert (1972),  Local History - Historical Studies Today. Felix Gilbert Ed.


கட்டுரை:
"ஓர் உள்ளூர் வணிகவழி"
கட்டுரையாளர்: மூத்தப் பேராசிரியர்  ஆ.சிவசுப்பிரமணியன் (sivasubramanian@sivasubramanian.in)
நாட்டாரியல் ஆய்வாளர்

நன்றி - காக்கைச் சிறகினிலே: ஜனவரி - பிப்ரவரி,  2022. 





Sunday, November 28, 2021

சாக்கிய வேதந் தேக்கிய பாதம்: வடலூர் வள்ளலார்

-- ஆ.சிவசுப்பிரமணியன் 


நீதிமன்ற வழக்குகள் என்பன அவை உரிமையியல் வழக்காக இருந்தாலும், குற்றவியல் வழக்காக இருந்தாலும் பெரும்பாலும் தனிமனிதரைச் சார்ந்தவை யாகவே இருக்கும். இதனால் இவ்வழக்குகளின் மீது வழங்கப்படும் தீர்ப்புகளை வெறும் செய்தியாக மட்டுமே பெரும்பாலோர் படிப்பர்.

தம் சட்ட அறிவுக்குத் துணைபுரியும் என்றும் வேறு வழக்கில் மேற்கோள்காட்ட உதவும் என்றும் கருதினால் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றை வரி பிறழாது படிப்பர்.

ஆனால் இவ்வெல்லையைத் தாண்டி சமூக வரலாற்றாவணமாக நீதிமன்றத் தீர்ப்புகள் சில அமைந்துவிடுவதுண்டு. வரலாற்றாய்வாளர்களும், சமூகவியல் ஆய்வாளர்களும் படித்து விவாதிக்கும் தகுதியை இவை பெற்றிருக்கும். இத்தீர்ப்பின் வாசிப்புத்தளம் இதனால் விரிவடைந்துவிடும்.

இத்தகையத் தீர்ப்புகளில் தீர்ப்பு வழங்கியவரின் சட்ட அறிவு மட்டுமன்றி, அவரது உலகக் கண் ணோட்டமும் சார்புநிலையும்கூட வெளிப்படும். அத்துடன் சில வரலாற்றுண்மைகளையும் சமூகச் சிக்கல்களையும் இவை வெளிப்படுத்தி நிற்கும். இத்தன்மை வாய்ந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பொன்றை இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது.

வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (1823-1874) வடலூரில் நிறுவிய சத்திய ஞான சபையை மையமாகக் கொண்டது இத்தீர்ப்பு. இத்தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் சந்துரு.

வழக்கின் பின்புலம்:
வழிபாட்டிற்காக உருவம் எதுவும் நிறுவப்படாத சத்தியஞான சபையில் சிவலிங்கம் ஒன்றை சபாபதி சிவாச்சாரியார் என்பவர் 2006இல் நிறுவினார். ‘பிரதோசம்’ அன்று அதற்கு வழிபாடு நிகழ்த்திப் பிரசாதங்களும் திருநீறும் வழங்கினார். அவரது இச்செயல் இச்சபையை நிறுவிய வள்ளலாரின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று, அவரைப் பின்பற்றுவோர் சிலர் இந்து அறநிலையத் துறையிடம் முறையீடு செய்தனர். இம்முறையீடே இவ்வழக்கின் தொடக்கமாக அமைந்தது.

விசாரணை:
13.07.2006இல் இதுதொடர்பான விசாரணையை இந்து அறநிலையத் துறை மேற்கொண்டது. இவ் விசாரணையை இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையர் நடத்தினார். இவ்விசாரணையில் மேற்கூறிய சிவாச்சாரியார் கலந்து கொள்ளவில்லை.

இராமனாதபுரம் மாவட்டம் புதுக்குடியைச் சேர்ந்த தொண்டர்குல வி.பெருமாள் என்பவர் 22.08.2006இல் நடந்த விசாரணையில் கலந்துகொண்டு அறிக்கை அளித்தார். அதன் சுருக்கம் வருமாறு:
  --  18.07.1872இல் வள்ளலார் வகுத்த விதிமுறைகளின் படி பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட, எழுபத்தி யிரண்டு வயதுக்கு மேற்பட்ட எவரும் சத்தியஞான சபையைத் தூய்மைப்படுத்தி விளக்கு ஏற்றலாம்.

  --  18.09.2006 அன்று உதவி ஆணையரும் சத்திய ஞான சபையின் நிர்வாக அதிகாரியும் மனு அளித்தனர். சமயம் சார்ந்த வழிபாடு நடத்தி வள்ளலாரின் அடை யாளத்தைச் சிதைக்கக் கூடாது என்று இருவரும் தம் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இதே நாளில் மேற்படி சிவாச்சாரியார் தமது வழக்கறிஞர் வாயிலாக மனுவொன்றை அளித்தார். இம்மனுவில் 25.01.1872ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தைப்பூசத் திருவிழா நடைபெற்றதாகவும், தம்முடைய தாத்தாவிடம் கண்ணாடி ஒன்றையும், விளக்கு ஒன்றையும் வள்ளலார் வழங்கியதாகவும், அன்றிலிருந்து தற்போதைய பூசைமுறை தொடங்கிய தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தம் மனுவுடன் ஆறு ஆவணங்களையும் இணைத்திருந்தார்.

முதல் ஆவணத்தில் வள்ளலாரின் கையப்பம் இருந்தது, 
11.02.1941இல் நடந்த திருவிழா அழைப்பிதழ் இரண்டாவது ஆவணமாகவும், 
01.02.1942இல் நடந்த திருவிழாவின் அழைப்பிதழ் மூன்றாவது ஆவணமாகவும் இடம்பெற்றிருந்தன. 
நான்கு மற்றும் அய்ந்தாவது ஆவணங்கள் தைப்பூசத் திருவிழா தொடர்பான ஆவணங்களாகும். 
அறங்காவலர்கள் பட்டியலாக ஆறாவது ஆவணம் அமைந்திருந்தது.

நிகழ்வின்போது நிர்வாக அதிகாரியாக இருந்த சங்கர நாராணயன் சத்தியஞான சபை அறக் கட்டளையின் தலைவர் வி.எம்.சண்முகம் மற்றும் இதர அறங்காவலர்களான அருட்பா அண்ணாமலை, எம்.ஏ.ராஜன், கணக்காளர் பி.ஞானப்பிரகாசம் ஆகியோர் இணை ஆணையரிடம் மனுச்செய்தனர். இம்மனுவில் பின்வரும் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன:
  --  வள்ளலார் காட்டிய வழிகாட்டுதலின்படி ஜோதி வழிபாடே நிகழுதல் வேண்டும்.

  --  பிராமணர் ஒருவர் வழிபட விரும்பினாலும்கூட அவர் தனது பூணூலை நீக்கி, தன் சாதியடையாளத்தைக் கைவிட்டே வழிபடவேண்டும். ஆனால் மனுதாரர் சபையின் கிழக்குப் பகுதியில் சிவலிங்கத்தை நிறுவி சமயச் சடங்குகளையும் மேற்கொண்டுள்ளார். திருநீறு விநியோகித்துள்ளனர். இதை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்களும் துண்டறிக்கைகளும் விசாரணையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இம்மனுக்களில் இடம்பெற்றுள்ள செய்திகளின் அடிப்படையில் இவ்வழக்கில் பின்வரும் வினாக்களுக்கு விடைகாண வேண்டும் என்று இணை ஆணையர் முடிவு செய்தார். அவர் எழுப்பிய மூன்று வினாக்கள் வருமாறு:
1.   சத்தியஞான சபை தொடங்கிய 25.01.1872 லிருந்து யார் சடங்குகளைத் தொடங்கியது?
2.   உருவ வழிபாடு எப்போது தொடங்கியது? எப்போது சிவலிங்கம் நிறுவப்பட்டது.
3.  இச்சடங்குகள் வள்ளலார் வகுத்த விதிமுறை களுக்கு உட்பட்டனவா?

இவ்வினாக்களுக்கான விடைகளாக தம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவை வருமாறு:
சபாபதி சிவாச்சாரியார் வழங்கியுள்ள ஆவணத்தில் நாள், திங்கள், ஆண்டு எதுவும் இல்லை. இதில் இடம் பெற்றுள்ள சபாபதி சிவாச்சாரியார் வள்ளலார் ஆகியோரின் கையப்பங்கள் அடையாளம் காணப் படவில்லை. இதன் நம்பகத்தன்மை நிலைநாட்டப் படவில்லை.

சபாபதி சிவாச்சாரியார் 13.11.1903வரை அறங் காவலராக இருந்ததாகவும், அவரது உடல் நலக் குறைவுக்குப் பின்னர் அவரது மகனும் மருமகளும் அறங்காவலர்களாக இருந்து தைப்பூசத் திருவிழாவின் போது சைவ சமயம் சார்ந்த சடங்குகளை மேற்கொண் டிருந்தனர் என்ற வாதத்திற்குச் சான்றுகளில்லை. மேலும் சபாபதி சிவாச்சாரியார் மரபினர் அறங்காவலர்களாகத் தொடர்ந்து இருந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட வில்லை. அத்துடன் அறங்காவலர்களே பூசகர்களாக இருந்துள்ளனர் என்பதும் நிரூபிக்கப்படவில்லை.

25.01.1872இல் சத்தியஞான சபை நிறுவப்பட்ட பின்னர் 18.07.1872இல் வழிபாட்டு முறைகள் வகுக்கப் பட்டன. ஜோதி வடிவிலேயே இறைவனை வழிபடும் முறையைத் தவிர வேறு வழிபாட்டு முறைகள் பின் பற்றப்படவில்லை. தற்போதைய லிங்க வழிபாடு மிக அண்மைக்காலத்திலேயே தொடங்கியுள்ளது. இது வள்ளலார் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு முரணானது.

இணை ஆணையரின் வழிகாட்டுதல்:
மேற்கூறிய அறிக்கைகளையும் ஆவணங்களையும் மட்டுமே சான்றுகளாகக் கொள்ளாது, 18.07.1872

அன்று சமரச சுத்த சன்மார்க்க சபையை நிறுவியபோது, வள்ளலார் வகுத்த விதிமுறைகளின் சாரத்தைப் பட்டியலிட்டு இவையே இச்சபையின் செயல் பாட்டுக்கான வழிகாட்டி என்று இணை ஆணையர் சுட்டிக்காட்டினார். அவை வருமாறு:
1.  சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தோர் வள்ளலார் வகுத்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
2.  பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்டோரும், எழுபத்தியிரண்டு ஆண்டுகட்கு மேற்பட்டோரும் சத்தியஞான சபையில் வழிபாட்டை நடத்த வேண்டும்.
3.  உள்ளமும் உடலும் தூய்மையானவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
4.  நீராடிய பின்னர் தம் பாதங்களை ஆடையால் மறைத்துக்கொண்டு தகரத்தாலும் கண்ணாடி யாலும் செய்யப்பட்ட பெட்டியில் இருக்கும் ஜோதியை அறையில் இருந்து எடுத்துவந்து மேடையில் வைக்க வேண்டும்.
5.  தம் பாதத்தைத் துணியால் மறைத்துக் கொண்டு நான்கு நாட்களுக்கு ஒருமுறை கருவறையில் நுழைந்து, கண்ணாடி விளக் கையும் மற்ற இடங்களையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
6.  இதைத்தவிர வேறு எதையும் அங்கு மேற் கொள்ளக்கூடாது.
7.  ஞானசபையின் திறவுகோல் நிரந்தரமாக ஒருவரிடமே இருக்கக்கூடாது. பணிமுடிந்ததும் திறவுகோலைப் பெட்டியன்றில் வைத்துப் பூட்டி பின் அறையையும் பூட்டி அத்திறவு கோலை அப்பகுதியைப் பாதுகாக்கும் காவலரிடமோ, நிர்வாக அதிகாரியிடமோ கொடுத்துவிட வேண்டும்.
8.  சத்தியஞான சபையில் ஓசையின்மை உறுதி யாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.
9.  எண்ணெய் ஊற்றி எரியும் ஜோதியை தகரத்தாலும் கண்ணாடியாலும் செய்யப் பட்ட பெட்டியில் வைத்துக் காட்ட வேண்டும்.
10.  ஜோதியைக் காட்டும்போது மக்கள் இரைச்சலின்றி ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற மந்திரத்தைக் கூற வேண்டும்.
11.  வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியன வற்றில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க வேண்டும்.
12. சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம் ஆகியனவற்றில் நம்பிக்கை இல்லாதிருக்க வேண்டும்.

இவ்விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கை ஆராய்ந்து சிவாச்சாரியார் மேற்கொண்ட வழிபாட்டு முறையைத் தடை செய்து இணை ஆணையர் உத்தரவிட்டார்.

மறுஆய்வு மனு:
இணை ஆணையரின் இத்தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்களை இந்து அறநிலையத் துறையின் ஆணையரிடம் சிவாச்சாரியார் அளித்தார்.  இவற்றில் பின்வரும் வாதங்களை அவர் முன்வைத்தார்:
1.  தாம் நிறுவிய சத்தியஞான சபையை சிவாலய மாகவே வள்ளலார் கருதினார்.
2.  சிவ ஆகம விதிப்படியே இதில் வழிபாடுகள் நிகழ்ந்தன.
3.  மனுதாரரின் (சிவாச்சாரியாரின்) முன் னோர்கள் சிவ ஆகம விதிப்படியே இதில் வழிபாடுகளை நடத்தி வைத்தனர்.

இவ்விவாதங்களை நிலைநாட்டப் பின்வரும் அய்ந்து சான்றுகளை அவர் முன்வைத்தார்:
1.  வள்ளலார் தாம் எழுதும் கடிதங்களை ‘உ’ ‘சிவமயம்’ என்று தொடங்கி, சிதம்பரம் ராமலிங்கம் பிள்ளை என்று கையெழுத் திடுவார்.
2.  சத்தியஞான சபையென்பது சிதம்பரம் சித்திர சபையின் மற்றொரு பகுதியாகும்.
3.  தமது ஆறாம் திருமுறையில் சிவன், சிவ வழிபாடு, சித்திர சபை ஆகியன குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
4.  சிவலிங்கம், தூபதீபம், கண்ணாடி ஆகிய பூசைப்பொருட்களை சபாபதி சிவாச்சாரி என்பவரிடம் (வாதியின் முன்னோர்) ஒப்படைத்தார்.
5.  சத்தியஞான சபை தொடங்கப்பட்டபோது பின்பற்றப்பட்ட சடங்குகளும், பூசை முறை களும் இன்றுவரை பின்பற்றப்படுகின்றன.

சபாபதி சிவாச்சாரியாரின் இம்மனுவை எதிர்த்து இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகிலுள்ள புதுக்குடியைச் சேர்ந்த தொண்டர்குல வி.பெருமாள் என்பவர் எதிர்வாதங்கள் சிலவற்றை முன்வைத்தார். அவற்றுள் முக்கியமான சில செய்திகள் வருமாறு:
சத்தியஞான சபையைத் தெய்வ நிலையமாக வள்ளலார் உருவாக்கினார். தைப்பூசம் தொடர்பான துண்டறிக்கைகள் மனுதாரரின் முன்னோரால் தன்னிச்சையாக அச்சடிக்கப்பட்டவை. சத்தியஞான சபையானது சைவ ஆகம விதிமுறையிலான வழிபாட்டு முறையைப் பின்பற்ற வேண்டுமென்று வள்ளலார் விரும்பியிருந்தால் அதை சிவன் கோவிலாக நிறுவி யிருப்பார். சைவ ஆகம நெறிப்படி கோவில் ஒன்று நிறுவப்பட்டால், சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம் ஆகியன இருக்க வேண்டும். சிவனுக்கு எதிராக நந்தி நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவை எதுவும் இல்லாமல் சத்தியஞான சபையை அவர் நிறுவியுள்ளார். சிவலிங்கம் ஒன்றை அங்கு நிறுவி உருவ வழிபாட்டை அவர் நிகழ்த்தியதற்கு வரலாற்றுச் சான்று எதுவுமில்லை.

வள்ளலார் உயிரோடு இருந்தபோது ஆறாம் திருமுறை அச்சிடப்படவில்லை என்பதினாலேயே அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வில்லை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. 1885இல் வெளியான முதல் பதிப்பில் தொடங்கி, 1896, 1924, 1931-32 ஆண்டுகளில் ஆறாம் திருமுறை நூல் வடிவில் வெளிவந்துள்ளது. இவற்றில் அருட்பெருஞ்ஜோதி அகவல் இடம்பெற்றுள்ளது. சபாபதி சிவாச்சாரியாரின் மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தும் இணை ஆணையரின் தீர்ப்பை உறுதிசெய்தும், இந்து அற நிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கினார்.

உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரின் தீர்ப்பையும், அதை உறுதிசெய்து இந்து அறநிலையத் துறையின் ஆணையர் வழங்கிய தீர்ப்பையும் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சபாபதி சிவாச்சாரியார் மேல் முறையீடு செய்தார். 

இதை விசாரித்த நீதியரசர் சந்துரு மனுதாரர் முன்வைத்த விவாதங்களை ஏற்றுக்கொள்ளாது அவரது மனுவைத் தள்ளுபடி செய்து 24.03.2010இல் தீர்ப்பு வழங்கினார். அவரது தீர்ப்பு வள்ளலாரின் சிந்தனைகள் குறித்த ஆய்வுக்கட்டுரை போல் அமைந்துள்ளது. தீர்ப்பின் தொடக்கத்தில் வள்ளலாரைக் குறித்த சிறு அறிமுகத்தைச் செய்துள்ளார்.

Vallalar.jpg

          ‘கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
          கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
          சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரம்ஆ சாரம்
          சமயமதா சாரம்எனச் சண்டைஇட்ட கலக
          வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
          மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
          முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
          முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே’

          ‘ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
          அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
          நீதியில் கலந்து நிறைந்தது நானும்
          நித்தியன் ஆயினேன் உலகீர்
          சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
          சத்தியச் சுத்தசன் மார்க்க
          வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
          விளம்பினேன் வம்மினோ விரைந்தே’

என்ற வள்ளலாரின் பாடல்களுடன் அறிமுகம் தொடங்குகிறது. சமயம், சாதி, ஆகமம், வேதம் என்பனவற்றை அவர் ஏற்றுக்கொள்ளாததை வெளிப் படுத்தும் வழிமுறையாக,
          ‘சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில்
           உணர்த்திய அருட்பெருஞ்சோதி’

          ‘ஆகமுடி மேல் ஆரண முடிமேல்
           ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்சோதி’

          ‘சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த
           அமயம் தோன்றிய அருட்பெருஞ்சோதி’
என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை எடுத்துக் காட்டுகிறார்.

1866ஆம் ஆண்டில் அன்றைய சென்னை மாநிலத்தில் நிகழ்ந்த கொடிய பஞ்சமும், அப்பஞ்சத்தால் மக்கள் பட்டினியால் வாடியது கண்டு வள்ளலார் பதைபதைத்ததும் தீர்ப்பில் இடம்பெறுகின்றன. இப்பதைபதைப்பு,
          ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
          வாடினேன் பசியினால் இளைத்தே
          வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
          வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
          நீடிய பிணியால் வருந்துகின்றோர்என்
          நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
          ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
          சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்’
என்ற பாடலாக வெளிப்பட்டதைச் சுட்டிக்காட்டி விட்டு, இதுவெறும் புலம்பலாக நின்றுவிடவில்லை என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார். 1867ஆம் ஆண்டில் கஞ்சித் தொட்டியன்றை வடலூரில் அமைத்ததையும், அங்குள்ள அடுப்பில் அவர் ஏற்றிய நெருப்பு இன்றுவரை அணையாது தொடர்வதையும், ஏழைகளுக்கு உணவளித்தலை உயரிய குணமாக அவர் கருதியதையும் குறிப்பிட்டுள்ளார். ஏழைகளின் அவல நிலையைப் பொறுக்காது இறைவனை நோக்கி,
          ‘வாழைஅடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
          மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
          ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
          இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
          மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளல்யான் உனக்கு
          மகன் அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
          கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
          கொடுத்தருள்நின் அருள்ஒளியைக்
           கொடுத்தருள் இப்பொழுதே’
என்று வேண்டுவதையும், 
‘கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக அருள்நியந்த நன்மார்க்கர் ஆள்க’ என்று கூறுவதையும் அவர் நினைவூட்டுகிறார். ஏனைய மடங்கள், ஆதினங்களைப் போன்று வாரிசையோ, இளைய பீடத்தையோ உருவாக்காத தன்மையையும் எடுத்துரைக்கிறார்.

தீர்ப்பின் தொடக்கத்தில் இடம்பெறும் இப்பகுதிகள் வள்ளலாரைக் குறித்த சரியான சித்திரத்தை வழங்குகின்றன.

* * *

வள்ளலாரின் உண்மையான இயல்பை வெளிப் படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட சான்றுகளையும், விவாதங்களையும் தம் தீர்ப்பில் எடுத்தாள்கிறார். அடுத்து வள்ளலாரின் கருத்துக்களின் சாரத்தை வெளிப்படுத்தும் தன்மைகொண்ட பின்வரும் திரு அருட்பா பாடல்களை மேற்கோளாகக் காட்டுகிறார். வள்ளலாரின் சமய நெறிமுறைகள் குறித்தும் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடுகிறார்.

உருவ வழிபாட்டை ஏற்காமையும், ஜோதி என்ற பெயரில் நெருப்பை வழிபடுவதும் வள்ளலாரின் கருத்தாக இருந்துள்ளது. நிறுவன சமயம் எதற்கும் அவர் இடமளிக்கவில்லை. மனிதகுலத்திற்கு முழுமையான இடத்தை அவர் வழங்கியுள்ளார். சாதி அடிப்படை யிலான பாகுபாட்டிற்கு அவர் இடமளிக்கவில்லை.

          ‘எச்சம யங்களும்பொய்ச்சம யமென்றீர்
          இச்சம யம்இங்கு வாரீர்
          மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்’

          ‘சதுமறை யாகம சாத்திர மெல்லாஞ்
          சந்தைப் படிப்புநஞ் சொந்தப் படிப்போ
          விதுநெறி சுத்தசன் மார்க்கத்திற் சாகா
          வித்தையைக் கற்றன னுத்தர மெனுமோர்
          பொதுவளர் திசைநோக்கி வந்தன னென்றும்
          பொன்றாமை வேண்டிடி லென்றோழி நீதன்
          அதுவிது வென்னாம லாடேடி பந்து
          அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து’

          ‘சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
          சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
          ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
          அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
          நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
          நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
          வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
          மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே’

          ‘செவ்வணத் தவரும் மறையும்ஆ கமமும்
          தேவரும் முனிவரும் பிறரும்
          இவ்வணத் ததுஎன் றறிந்திடற் கரிதாம்
          எந்தைநின் திருவருள் திறத்தை
          எவ்வணத் தறிவேன் எங்ஙனம் புகல்வேன்
          என்தரத் தியலுவ தேயோ
          ஒவ்வணத் தரசே எனக்கென இங்கோர்
          உணர்ச்சியும் உண்டுகொல் உணர்த்தே’

உருவமில்லாத வழிபாடும், நிறுவன சமய மறுப்பும் வள்ளலாருக்கு எதிரிகளை உருவாக்கின. அவருக்கு எதிரான பரப்புரையை அவரது எதிரிகள் மேற்கொண்டனர். அவரது பாடல்கள் ‘திருஅருட்பா’ என்றழைக்கப்படுவதை எதிர்த்து, ‘மருட்பா’ என்றழைத்தனர். இதுதொடர்பாக ஆறுமுக நாவலர் கடலூர் நீதிமன்றத்தில் 1869இல் வழக்குத் தொடுத்தார். இறுதியில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

தீர்ப்பின் இறுதியில் சிந்தனைக்குரிய கருத்து ஒன்றையும் நீதியரசர் சந்துரு முன்வைத்துள்ளார். புத்தமதத்தைப் பின்பற்றும்படி மறைமுகமாக மக்களை வேண்டியுள்ளார் என்பதே அக்கருத்தாகும். இதற்குச் சான்றாக,
          ‘சாக்கிய வேதந் தேக்கிய பாதம்
          தாக்கிய ஏதம் போக்கிய பாதம்

          ‘புத்தந்தரும் போதா வித்தத்தருந் தாதா
          நித்தந்தரும் பாதா சித்தந்திரும் பாதா’
என்ற வள்ளலாரின் பாடல் வரிகளை முன் வைக்கிறார். முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஆராய வேண்டிய ஆய்வுப்பொருள் இது.




* * *

இவ்வழக்கு வேறொரு சிந்தனையையும் தூண்டுகிறது. சபாபதி சிவாச்சாரியார் சிவலிங்கத்தை வள்ளலாரின் சத்தியஞான சபையில் நிறுவி, சைவ ஆகம விதிமுறைப்படி வழிபாடு நிகழ்த்தத் தொடங்கியதுதான் இவ்வழக்கின் அடிப்படைக்காரணம். இன்று கிராமப்புற நாட்டார் தெய்வங்கள் ஆதிக்க வகுப்பினரால் ஆகம விதிக்குள் கொண்டு வரப்படுகின்றன. அம்மன்கள் அம்பாள்களாக்கப்படுகின்றனர். நாட்டார் தெய்வக் கோவில்களுக்குள் சிவனும், விஷ்ணுவும், முருகனும் அத்துமீறி நுழைந்து, அச்சாமிகளின் அசைவ உணவுப் படையலைத் தடுக்கின்றனர். ஆகம விதிகளின்றி நிறுவப்பட்ட இக்கோவில்களில் ஆகம விதிப்படி குடமுழுக்கு நிகழ்கிறதே! இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தால் என்ன? நீதியரசர் சந்துரு இதற்கு வழிகாட்டினால் நன்றாக இருக்கும்.





நன்றி: 
வடலூர் சத்தியஞான சபை  2007-2010 வழக்கில் நீதியரசர் சந்துருவின் தீர்ப்பு
நவம்பர் 2014 -உங்கள் நூலகம்