Sunday, July 8, 2018

கலைஞர் கலம்பகம்


    
 ——   புலவர் மாவண்ணா. தேவராசன்  





“கலம்பகம் பாடியபின் காவியம் பாடுக! ” என்பர் கற்றறிந்த சான்றோர். “பெரியார் வரலாற்றுப் பெருங்காவியம்” என்பது என் நீண்டநாளையப் பேரவா. “பெரியார் பிள்ளைத்தமிழ்” பாடிய 1943 ஆம் ஆண்டிலிருந்தே அதாவது என் 22 ஆம் வயதிலிருந்தே இந்தப் பேரவா நிறைவேறாமல் உள்ளது. பெரியார் அவர்களின் பெருந்தொண்டராய் --- உண்மையாய் ஊருக்கு உலையாது உழைக்கும் உத்தமத் தொண்டராய் விளங்கும் டாக்டர் தமிழ்வேள் கலைஞர் கருணாநிதி அவர்களுடைய அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவாகிய ”மணி விழா மலர்” ஆக இக் “கலைஞர் கலம்பகம்” பாடி முடித்தேனாயினும், மனம் அமைதியுறவில்லை. மேலும் பாடத்தக்க பண்பும், அன்பும் நிறைந்தவர் முன்னாள் முதல்வர் டாக்டர் மு. க. அவர்கள். ஆயினும் சூத்திரராகப் பிறந்தவர்க்குக் கலம்பகத்தில் முப்பது பாடலே பாடுக என்று பாட்டியலுடையார் விதித்த பட்டிமை விதிக்கு மாறாக 120 பாடல்கள் விரிவாகப் பாடியதனால் ஒருவாறு அமைதி பெறுகிறேன். நாலாம் சாதியில் பிறந்தவர் முதலாம் சாதியில் பிறந்தவரிலும் மேலாந்தகுதியுடையவர் என்பதை இந்நூல் மூலம் உறுதி செய்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் மேலும் பாடுவேன்.

“ ஆசைபற்றி அறையலுற்றேன்” என்று கவிமாமன்னர் கம்பன் இராம காதை பாடியதற்குக் காரணம் கூறினார். டாக்டர்  கலைஞர் அவர்களை எனக்கு அறிமுகம் இல்லை. கலைஞர் கண்ட இருபெருந் தலைவர்களான பெரியார், பேரறிஞர் அண்ணா  ஆகிய இருவரிடமும் நெருங்கிய பழக்கம்; என்னையும் அவ்விருவரும் நன்கு அறிந்து ஊக்கியவர்கள். ஆயினும் ஏனோ கலைஞரிடம் எனக்குப் பழக்கம் ஏற்படவில்லை. எனினும் இன்று தமிழினத்திற்குக் கலைஞரைத் தவிர வேறு மிகச் சிறந்த தலைவர் இல்லாத நிலையை உணர்கிறேன். அதனால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும்  அன்பின் உந்துதலே இக் கலம்பகத்தை நான் பாடக்காரணமாகும்! கைம்மாற்றையோ வேறு பயனையோ கருதிப் பாடவில்லை. இதிலே வியப்புக்கு உரிய செய்தி ஒன்று: எனக்குக்  கலைஞர் அவர்கள் நேரில் அறிமுகம் இல்லை; மாறாகத் தி.மு.கழகம் பெரியாருக்கு எதிராக, 1949 ஆம் ஆண்டிலிருந்து சில ஆண்டுகள் தி. கழக மேடைகள் பலவற்றில் கடுமையாகக் கலைஞரைத் தாக்கிப் பேசி வந்தவன் நான்! காலம் செல்லச் செல்லப் பெரியாரைப் பின்பற்றும் கலைஞரின் உண்மை உள்ளம் உணர்ந்து, அவரைப் போற்றத் தொடங்கினேன்.  எனினும், நேரில் பழகியது இல்லை. எனவே, உண்மையான தமிழினத் தன்மானத் தலைவர் ஒருவர் மீது, காலக் கண்ணாடியாய் விளங்க, அன்பு மீதூரப் பெற்றுப் பாடப்பெற்றது இந்நூல் எனலாம்.

1943 – இல் பெரியாரைப் புகழ்ந்து பாடிய பெருமைக்கு உரிய நாவினால் நாற்பதாண்டுகள் கழித்து, கலைஞர் டாக்டர் கருணாநிதியைப் புகழ்ந்து பாடும் பெருமை பெறுவது எனக்குப் பெரும் மகிழ்ச்சி தருவதாகும். தமிழக மக்கள் பல்வேறு கட்சிகளில் ஈடுபட்டுப் பிரிந்துள்ளனர். ஆயினும் கலைஞர் கருணாநிதி அவர்களிடம், அன்பும் மதிப்பும் கொண்டு இருப்பது போலவே, இக்கலம்பகத்தையும் அன்புடன் வரவேற்று மதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடையேன்.

இனி, கலம்பகம் பற்றி ஒரு சிறு விளக்கம் :
கலம்பகம் என்பதைக் “கலம் + பகம்” என்றும், “கலப்பு + அகம்” என்றும் பிரிக்கலாம். கலம் என்பது 12 மரக்கால் கொண்டதோர் அணவு. பகம் என்பது “கடவுளின்” ஆறு குணங்களைக் குறிக்கும் ஒரு சொல். ஆக, ‘கலம்பகம்’ என்றால் 12+6 = 18 என்றாகும். கலம்பகம் என்பது பொதுவாக 18 உறுப்புகளைக் கொண்டதாகப் பாடப்படும். அவை புயவகுப்பு, தவம், வண்டு, தூது, அம்மானை, பாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், களி, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், மடக்கு என்பன.  இப் பதினெட்டு உறுப்புகளும், கலந்து வரப் பாடுவதுதான் கலம்பகம்.

பல்வேறு மலர்களைத் தொடுத்துக் ‘ கதம்பம்’ என்னும் பூமாலை செய்து, அணிவதுபோல, பல்வேறு உறுப்புகளைக் கொண்ட பாடல்களைத் தொடுத்துப் பாமாலையாக அணிவது மரபு.  ‘புதியன புகுதல் ‘ என்ற உத்தியால் புலவர் பெருமக்கள் தம் கவித்திறமை விளங்கப் புதிதாகப் படைத்து பாடிய கொற்றியார், பிச்சியார், இடைச்சியார், குறம், வலைச்சியார், மடல், ஆற்றுப்படை, திருப்புகழ் முதலிய உறுப்புகளும் கொண்டு பின்னால் கலம்பகத்தை விரிவாகப் பாடியுள்ளனர். மடல் என்ற உறுப்பில் மடல் ஊர்வேன் என்றுதான் பாடப்படுமேயன்றி, மடலூர்ந்ததாக வரலாறு முன் நூல்களிலும், வழக்கத்திலும் இல்லை. இம்மடல் தவிர, இதர உறுப்புகள் அனைத்தும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

ஒல்காப்புகழ் பெறும் தொல்காப்பியனார் “ விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே என்று’ விதித்துள்ளபடி, இக்கலம்பகம் “விருந்து” என்ற பிரிவில் அடங்கும். “விருந்து தானும், பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம் விரும்பியபடி தொடுக்கப்படும் தொடர்நிலைச் செய்யுள் மேலது”. ஆகையால் புதிதாகச் சில உறுப்புகளைப் படைத்துக் கொண்டு இந்நூலைப் பாடி முடித்துள்ளேன். அவை:-- மாரியம்மன்சிலைக்காரி, கடிதம், பெண்பாற்கைக்கிளை, புதுக்கவிதையர், தலைவன் இரங்கல் என்பனவாம்.

கலம்பகத்தில் இந்த 18 உறுப்புகளும் பிறவும், கலந்திருக்குமாறு பாடுவதோடு, பாவும், பாவினமும் (வெண்பா, ஆசிரியம், கலிப்பா, வஞ்சிப்பா என்ற 4 வகையும்) இப்பா வகை ஒவ்வொன்றின் இனமான துறை, தாழிசை, விருத்தம் என்ற மூன்று வகைப் பாவினமும்  கூட்ட 4+ (4×3=12) 16ம், மருட்பா என்ற வகை ஒன்றும்,  வண்ணக் குழிப்பு (திருப்புகழ்ச் சந்தம்) ஒன்றும் ஆகக் கூட்டினால் 18 பா வகையும் கலந்து வரப் பெறும் கலம்பகம் பாடப்படுவது மரபு. அம்முறையே கலைஞர் கலம்பகமும் உள்ளது.

காலம் என்ற உறுப்பில் 6 பருவ காலங்களையும், தூது என்ற உறுப்பில் மேகம்,தோழி, நெஞ்சு, நாரை, தென்றல் முதலிய பலவகைத் தூதுப் பொருள்களையும், அமைத்துப் பாடுவது புலவர் திறம். விருத்தம் என்ற பிரிவில் பல்வேறு வகையுண்டு (விருத்தப் பா இயல் காண்க). அவையும் கலம்பகத்தில் பொருந்தி வரப் பாடுவர் புலவர்கள். இப்பாடல்களில் பல வகைப்பட்ட அணிகளும், சுவைகளும் விரவி வரப் பாடப் படுவதே சிறப்பு. அழகிய பெண்ணுக்கு மேலும் பல அணி துணிமணி வகைகள் பூட்டி ஒப்பனைச் செய்து அலங்கரித்தாற்போல, இக்கலம்பகம் என்ற காவியமும் பலவகை அணிநலம், கற்பார் நெஞ்சைக் கவரும் பெரும் விருந்தாக உள்ளது.

கலம்பகத்தில் முதலில் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாவும், தொடர்ந்து நேரிசை வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும், புயவகுப்பும் முதலில் வரப் பின்னர் பலவகையான உறுப்புகள் வருமாறு, அந்தாதித் தொடையில் பாடப்படுவது மரபாகும். இந்த மரபு முறை வழுவாமல் பாடப்படுவது கடினமான செயலே. அதனால்தான் மிக எளிதாகப் புதுக் கவிதை பாடுவதில் புதிய ஆர்வம் தோன்றியுள்ளது. எதுகை மோனைகளைத் தேடியலைவதும், அவற்றைப் பொருத்திக் கருத்தைத் திருத்தமாய்ப் பாடுவதும் எத்தனைக் கடினம்! எனப் “புதுக் கவிதைத் தாத்தா” என்று போற்றப்படும் கவிஞர் மேத்தாவும், பேராசிரியர் அப்துல் ரகுமானும் ‘ஜூனியர் விகட’னில் தம் கருத்தை வெளியிட்டு, மரபுக் கவிதையின் சிறப்பை  “அருமையைக் கூறாமல் கூறியுள்ளார் எனலாம். இதனால்தான், ‘பிறவிக் கவிஞன், என்ற தொடரும் ‘காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகைக் கொட்டிப் பிழைத்தல் நன்றே’ என்ற பாடலும் தோன்றின போலும்!

”முன்னோர் நூலில் முடிபு ஒருங்கு ஒத்துப் பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி” இக்கலம்பகம் அமைந்துள்ளது  இலக்கியம் இப்படி இருக்க .வேண்டும் என்று விதிக்கிறது பாட்டியல். எனினும் நான் பாட்டியலைப் பின் பற்றிப் பாடவில்லை. அது தமிழுக்கே  கேட்டியலாவதால், “ஒரு குலத்துக்கு ஒரு நீதி உரைக்கும் மனு நீதி” போல, அந்தணர், அரசர், வைசியர், சூத்திரர் என்ற நாற்சாதிக்குரிய இலக்கியம் இப்படி இருக்கவேண்டும் என்று   விதிக்கிறது பாட்டியல்.  இறைவனுக்கு 100 பாடல்; பார்ப்பனர்க்கு 95 பாடல்; அரசருக்கு 90 பாடல்; அமைச்சருக்கு 70 பாடல்; வைசியருக்கு 50 பாடல்; வேளாளர்க்கு 30 பாடல் என்ற விதி தமிழ் கற்ற எனக்கு ஒப்புதல் இல்லை. எனவே, இதைத் தலைகீழாகப் புரட்டிப்  பாடிட வேண்டும் என்றெண்ணியே கலைஞருக்கு 120 பாடல்கள் இக்கலம்பகத்தில் பாடியுள்ளேன்.  நம் கலைஞர் கருணாநிதி முன்னாள் (முன் ஆள்; முன் நாள்) முதல்வராக இருந்ததனால் 70 பாடல் பெறும் தகுதியுடையவர் பாட்டியல்படி எனினும் , அவர் 100க்கு மேற்பட்ட பாடலுக்கு உரியவர் என்பது மிகையன்று.

பலவகையிலும் மேலானவராகக் கலைஞரை நான் கருதுவதால், 120 என்ன? ஆயிரம் பாடியிருப்பேன்.  ஆனால் நூல் விரிவையஞ்சி 120 பாடலுடன் அந்தம் ஆதியாக வந்த பாடல் தொடர்பை மண்டலித்து முடித்தேன்.

பெரியாருக்குப் பின்னால், பேரறிஞருக்குப் பின்னால், பாவேந்தருக்குப் பின்னால் தமிழின மக்களுக்குத் தக்க வழி காட்டும் தனித் தலைவராக விளங்குபவர் கலைஞர். பல துறையிலும் விற்பன்னர்; சிறுகதை, நாவல், புதுக் கவிதை, இசைப்பாடல், நடிப்பு, நாடகம் எழுதுதல், கட்டுரை வன்மை, கலை பயில் தெளிவு ஓவியக் கலை எனப் பலவகைக் கலையிலும் விற்பன்னரான கலைஞர் அரசியலிலும் தன்நேரில்லாமல் இன்று விளங்குகிறார்.  தியாகத்தில் பெரியார், அண்ணா வழியில் சிகரம்போல் விளங்குகிறார். இலங்கை வாழ் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் பல நடத்தி ஆதரவு தரும் கருணா உள்ளமும், தி.மு.கழகத்திற்கு நிதி சேர்க்கும் பணியில் செல்வாக்கும், சொல்வன்மையும் நிறைந்தவர். கருணாநிதி. (எனின்  இத்தகைய தமிழினத் தலைவரைப் பாடாதவர் பாவலர் ஆவரோ?)

புலவர் பாடும் புகழ்படைத்த கலைஞர் 120 பாடல் பாடியதைப் புதுமை விரும்பாத புலவர் சிலர் பழிப்பாரோ என்றஞ்சிய நாளில் அருகபரமேட்டியின் மீது “திருக்கலம்பகம்” என்ற சிறு காவியம் பாடிய “உதீசித்தேவர்” என்ற சமணப் பெரும்புலவர், அருகக்கடவுளுக்கு 100 பாடல் பாடுவதற்குப் பதிலாக 110 பாடல்கள் பாடியுள்ளமை தெரியவந்தது. “திருக் கலம்பகம்” தேடிப் படித்து மகிழ்ந்தேன்.  எனவே, என் செயல் ஏற்புடைத்தே என்று அமைகிறேன்.

படிப்பவர்கள், அந்தாதியைப் பற்றி எளிதில் தெரிந்து கொள்ளக் கூடும். ஒரு பாடலின் கடைசி அடியில் ஓர் எழுத்தோ, ஓர் அசையோ, ஒரு சீரோ, அரை அடியோ, முழு அடியோ, அடுத்து வரும் பாடலில் முதலடியின் முதற் சீராக அமையப் பாடிச் செல்வதே அந்தாதித் தொடை.  இப்படிப் பாடிச் செல்லும்போது கடைசிப் பாட்டின் கடைசி அடியிலுள்ள சீரோ, எழுத்தோ, அசையோ, முதற்பாட்டின் முதலடியில் முதற்சீரோடு பொருந்தப் பாடுவது முறை.  இன்று புதுக் கவிதை பாடும் போலிப்புலவர்களுக்கு இம்முறை தொல்லை தருவதாகத் தோன்றினாலும் எல்லாப் பாட்டையும் நினைவில் நிறுத்த இம்முறை பயன் படுவதாகும். பழந்தமிழ் மரபும் இலக்கணமும் இலக்கியமும் இன்று மறைந்து போகாதபடி இச் சிறு பிரபந்தம் உதவுவதாகவும் உள்ளது.

இந்நூலிற்பயிலும் உறுப்புகளுக்கும், பாடல் ஒவ்வொன்றுக்கும் விளக்கமாக இறுதியில் “குறிப்பு, உரை” என்றும் நூலாசிரியர் சேர்த்துள்ளமை படிப்போருக்கு உதவியாயிருக்கும். விருந்தோம்பல் பண்புடைய தமிழ் மக்கள் இந்நூலையும் இலக்கிய விருந்தாக ஏற்று என்னை ஊக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

என் “பெரியார் பிள்ளைத் தமிழ்”  என்னும் நூலுக்கு மதிப்புரையளித்து “தமிழக” இதழ் (தமிழக அரசு வெளியீடு) 01-04-1985 இல் வெளிவந்த இதழில் இந் “நூலாசிரியர் பழம் புலவர்களில் மரபு மறைந்துவிடவில்லை; தொடர்கிறது ! என்பதைத் தமிழனுக்கு அறிவித்திருக்கிறார்” என்று விமர்சகர் “தமிழ்ப்பித்தன்” எழுதியது உண்மை என்பதற்குக் “ கலைஞர் கலம்பகம்” மற்றுமொரு சான்றாகும். “பெரியார் பிள்ளைத் தமிழ்” தமிழக அரசால் கவிதை துறையில் முதல் பரிசைப் பெற்றுச் சிறப்புற்றது.  இக்கலம்பகமும், தமிழ் வளர்ச்சிக்கு உதவும்; நல்ல சிறப்பைப் பெறும் என்று நம்புகிறேன்.


இங்ஙனம், 
திருவத்திபுரம் மாவண்ணா தேவராசன்
எண். 321, முதல் பிரதான தெரு    
அண்ணா நகர், செய்யாறு – 604 407                      




கலைஞர் கலம்பகம்:  முதல்வர் தமிழ்வேள் அவர்களால் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதியின் மீது அவர்தம் “மணிவிழா” மலராகப் பாடப்பட்டது. இக்கலம்பகம் டாக்டர் கலைஞரின் மணிவிழா நாளாகிய 03-06-1984 ஆம் நாளில் தொடங்கி “ஆசிரியர் தினம்” ஆகிய 05-09-1984 ஆம் நாளில் 129 பாடல்களுடன் பாடி முடிக்கப் பெற்றது.

நூலாசிரியர்: திருவத்திபுரம். “பைந்தமிழ்ப் பாவலர்”, “நல்லாசிரியர்”, ”பெருங்கவிஞர்” புலவர் மாவண்ணா. தேவராசன், எம்.ஏ.
321, முதல் பிரதான தெரு, அண்ணா நகர், செய்யாறு – 604407, தொலைப்பேசி: 04182 - 222133

மாவண்ணா தேவராசன் (1921-1987)  அவர்கள் காவிய நாயகர்களின் (பெரியார், கலைஞர்) அறுபது ஆண்டு நிறைவில் காவியம் பாடியுள்ளார். அவரது “கலைஞர் கலம்பகம்” நூலின் இடம்பெற்ற முன்னுரையை அளித்தவர் கவிஞரின் தலை மகன் முனைவர் எம்.டி. ஜெயபாலன்.

 



________________________________________________________________________
தொடர்பு: முனைவர் எம்.டி. ஜெயபாலன் <jayabalanmdjcheyyar@gmail.com>

No comments:

Post a Comment