— முனைவர் க.பசும்பொன்.
‘திராவிட மொழி நூலின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் இராபர்ட் கால்டுவெல். தனது சமயப் பணியை நிறைவேற்ற தமிழ்மொழி அறிவு அவசியம் என்பதை உணர்ந்த கால்டுவெல் தமிழை முறைப்படி கற்றவர்.
இந்திய நாட்டில் வழங்கும் மொழிகள் அனைத்தும் ஆரிய குடும்பத்தைச் சேர்ந்தவை என்று ஐரோப்பிய மொழி நூலறிஞர் நெடுங்காலமாக எண்ணியிருந்தார்கள். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நேபாள நாட்டில் பெரும்புகழ் பெற்று விளங்கிய ஹாட்சன் என்னும் அறிஞர் நடு இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் வழங்கப்படும் மொழிகளில் அமைந்த சொற்களைத் தொகுத்தும் வகுத்தும் ஆராய்ந்து செய்தித்தாள்களில் வெளியிட்டார். அச்சொற்களைக் கற்றுத் தெளிந்த ஐரோப்பிய அறிஞர் அக்கருத்தினின்று வேறுபட்டு ஆரிய இனத்தைச் சேராத மொழிகளும் இந்தியாவில் வழங்கி வருகின்றன எனக் கருதினார்கள்.
மும்பை நகரத்தில் பல ஆண்டுகள் நீதிமன்றத் தலைவராக விளங்கிய ‘பேறி’ என்பவர் வட இமயம் முதல் தென் குமரி வரை வழங்கப்படும் மொழிகளின் பரப்பையும் சிறப்பையும் ஆராய்ந்து தாம் கண்ட உண்மைகளைக் கட்டுரைகளின் வழியே வெளிப்படுத்தினார். வடநாட்டில் வழங்கும் மொழிகள் ஆரிய வகுப்பைச் சேர்ந்தவை என்றும் தென்நாட்டில் வழங்கப்படும் மொழிகள் தமிழ் வகுப்பைச் சேர்ந்தவை என்றும் அவர் அறிந்து உணர்த்திய கொள்கை ஐரோப்பிய நல்லறிஞர் கருத்தைக் கவர்ந்தது.
இந்நிலையில் மலையாள மொழியினைக் ‘குந்தார்த்தர்’ (Dr.Gundert) என்னும் ஜெர்மானியப் புலவரும் கன்னட மொழியினைக் ‘கிட்டல்’ என்பவரும் தெலுங்கு மொழியினைப் ‘பிரௌன்’ என்பவரும் கற்றுத் தேர்ந்தனர். நீலகிரியில் வாழும் தோடர் மொழிச் சொற்களைப் போப்பையர் திரட்டித் தந்தார். இங்ஙனம் ஒவ்வொரு தென்னிந்திய மொழியினையும் ஒவ்வொருவர் ஆராய்ந்து தங்கள் முடிவுகளைக் கட்டுரை வழியே வெளிப்படுத்திக் கொண்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கால்டுவெல் அறிஞர் தென்னாட்டிற்கு வந்தார். தமிழ்மொழியிலுள்ள நூல்களைக் கற்றறிந்தார்.
பழந்தமிழ்ச் சொற்களைக் கன்னடச் சொற்களோடும் ஆந்திரச் சொற்களோடும் ஒப்பிட்டுப் பார்த்த கால்டுவெல் நூற்றுக்கணக்கான இயற்சொற்களின் தாதுக்கள் மும்மொழிகளிலும் ஒன்றுபட்டிருக்கக் கண்டார். மேலை நாட்டு மொழி நூல்களில் கண்ட தெள்ளிய ஆராய்ச்சி முறைகளை அடிப்படையாகக் கொண்டு தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்யத் தொடங்கினார். பதினைந்து ஆண்டுகள் அயராது உழைத்து கி.பி.1856இல் கால்டுவெல் ‘A Comparative Grammer of the Dravidian or South Indian family of languages’ என்னும் நூலினை வெளியிட்டார்.
இந்நூலில் தென்னிந்திய மொழிகளைத் ‘திராவிடம்’ என்ற பெயரில் குறிப்பிட்டார். இவை ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தோ ஐரோப்பிய மொழிகளுடன் தொடர்புடையன அல்ல என்றும் நிறுவினார். திராவிட மொழிகள் சில பண்பட்ட மொழிகளைக் கொண்டவை. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு என்பன பண்பட்ட திராவிட மொழிகள். தோடா, கோடா, கோண்டு, கூய் என்பன பண்படாத திராவிட மொழிகள் என்று கருதினார்.
1875இல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் திருந்திய பதிப்பை வெளியிட்டார். அதில் கொடகு மொழி திருந்திய திராவிட மொழி என்று குறிப்பிட்டார். ராஜ்மகால், ஒரோவோன் ஆகியன திருந்தாத திராவிட மொழிகள் என்று குறிப்பிட்டார். திராவிட மொழிகளுக்கும் சித்திய மொழிகளுக்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும் என நினைத்தார்.
திராவிட மொழிகளுக்கே சிறப்பாக உரிய பல கூறுகளைக் கால்டுவெல் அறிஞர் ஒப்பிலக்கணத்தில் விளக்கிக் காட்டியுள்ளார்.
திராவிட மொழிகளில் அவர் செய்த ஆய்விற்கு முனைவர் பட்டம் பெற்றார். “கால்டுவெல்லின் ஆய்வு தென் திராவிட மொழிகளைப் பற்றியது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று பொது நிலையில் சுட்டுவதை விடத் தென் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்று அழைப்பது பொருத்தமானது” என்பார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். திராவிட மொழிகள் என்று ஒரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளை இனம் கண்டு பதிவு செய்த பணி கால்டுவெல்லின் முக்கிய பணியாகும்.
அவரின் நோக்கம் சமயப் பரப்புரையாக இருந்தபோதும் தமிழின் பேரில் ஏற்பட்ட ஈர்ப்பு மொழியாராய்ச்சியை நோக்கி அவரைத் தள்ளியது. அவர் 18 மொழிகளைக் கற்றார். அதுவரை அச்சேறாமல் இருந்த பல பண்டைத் தமிழிலக்கியங்களைப் (தொல்காப்பியம் உட்பட) பயின்றார்.
இலக்கிய வேலைகளுக்கிடையே, அந்நாளில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குக் கல்வி கற்றிடவும் அவர்களின் மீதான சாதி இழிவுகளை அகற்றவும் பாடுபட்டார். அவர் கற்றறிந்த பிற மொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில முடிவுகளுக்கு வந்தார்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தமிழ் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை நூல் என்று சொல்லலாம். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமற்கிருத மேன்மையை அது உடைத்து நொறுக்கியது. அதுவரை, இந்திய மொழிகள் எல்லாம் சமற்கிருதத்திலிருந்து பிறந்தவை என்றும் அம்மொழியின் இலக்கணமே ஏற்கப்பட்டன என்றும் தமிழிலுள்ள இலக்கியங்கள் கூட சமற்கிருத இலக்கியத்தை வழியொட்டி வந்தவைதான் என்ற கருத்தும்தான் மேலாண்மையில் இருந்து வந்தது.
ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவின் நிலம் மற்றும் மக்களின் இனம் சார்ந்த வாழ்நிலையை அறிந்து கொள்ள இலண்டனில் அமைக்கப்பட்ட ஆசியவியல் கழகத்தின் கிளை 1784ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டது. இதன் சார்பாக இந்தியாவில் செயல்பட்ட பலரும் சமற்கிருத மூல மொழியிலிருந்தே இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் கிளைத்திருக்க வேண்டும் என்னும் கருதுகோளை முன்னிறுத்தியே ஆய்வு செய்தனர்.
கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. தமிழ் உயர் தனிச் செவ்வியல் என்ற ஆய்வு முடிவு தமிழர்களுக்குத் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் உருவாக்கியது.
அதன் தொடர்ச்சியாகத்தான் அழிந்து கொண்டிருந்த 200 ஆண்டு கால தமிழ் இலக்கியக் கருவூலங்களெல்லாம் சி.வை.தாமோதரம் பிள்ளையாலும் உ.வே.சா.வாலும் அச்சு வாகனம் ஏறின.
தமிழில் எதிர்மறை வினை:
எதிர்மறை வினை, வினை வடிவ வேறுபாடேயல்லாது தனியே உருவான ஒரு தனி வினையன்று, வினை மூலங்கள் அனைத்தும் உடன்பாட்டுப் பொருள் உணர்த்துவனவே அவற்றின் எதிர்மறைப் பொருள், அம்மூலங்களோடு சில சொல்லுருபுகள் சேர்வதாலும் அம்மூலங்கள் ஒருசிறிதே வேறுபடுவதாலுமே பெறப்படும்.
எதிர்மறைப் பொருள் உணர்த்த மொழிதோறும் வெவ்வேறு சொல்லுருபுகள் நுழைக்கப்படுகின்றன என்பது உண்மை. ஆனால், அச்சொல் உருபுகள் நுழைக்கப்பெறும் முறை மட்டும் அனைத்து மொழிகளிலும் ஒன்றே.
பொதுவாக, திராவிட எதிர்மறை வினைக்குக் காலம் ஒன்றே உள்ளது. அதாவது காலம் கடந்தது. அது முக்காலத்தையும் உணர்த்தும். காலத்தை, இடமும் சூழ்நிலையுமே உறுதி செய்யும். திராவிட இனத்தின் பிறமொழிகளில், ஒரே நிலையான எதிர்மறையே உள்ளது. எச்சவினை எதிர்மறையும் ஏவல் வினை எதிர்மறையும் இருக்குமாயின் அவை இலக்கிய நடையில் மட்டுமே இருக்கும் என்கிறார் கால்டுவெல். எதிர்மறை வினையெச்சங்களின் பின்னர், எச்சவினைகளையும் ஏவல் வினைகளையும் துணைச் சொற்களாக இணைப்பதினாலேயே எதிர்மறையெச்சமும் எதிர்மறை ஏவலும் உருபாகும்.
தமிழ் எதிர்மறை வினை, காலம் உணர்த்தும் சொல்லுருபினை அறவே பெறாததாகும். இது இறந்தகால, நிகழ்கால, எதிர்கால இடைநிலைகளை மட்டுமேயல்லாமல், முக்காலத்திற்கும் பொதுவான, அதாவது காலம் கடந்த நிலையினை உணர்த்தும் இடைநிலையையும் பெறுவதில்லை என்கிறார் கால்டுவெல். தமிழ் வினைமுற்று விகுதி மூலத்தோடு நேரே இணைக்கப்பெறும் ஆக, ‘வாழ்’ என்ற வினை மூலத்தின் இறந்தகால, நிகழ்கால உடன்பாட்டு வினைமுற்றுகள், முறையே ‘வாழ்ந்தேன்’, ‘வாழ்கிறேன்’, ‘வாழ்வேன்’ என்பனவாக அவ்வினை மூலத்தின் எதிர்மறை ‘வாழேன்’ என்பதாகும். இம்முற்றில் வினை மூலமும் வினைமுற்று விகுதியும் மட்டுமே இடம்பெறுகிறது. காலம் உணர்த்தும் இடைநிலை எதுவும் அவற்றிற்கிடையே இல்லை என்கிறார் பேராயர்.
இவ்வெதிர்மறையின் தோற்றக் காரணம் காலம் உணர்த்தும் இடைநிலைகளைப் பெறாமையே, எதிர்மறைப் பொருளை உணர்த்தத் துணைபுரிவதாகத் தோன்றுகிறது. உடன்பாட்டுப் பொருளை அது விலக்குகிறது எனக் கூறல், ஓரளவு பொருந்தும். காலம் உணர்த்தும் இடைநிலைகள் இல்லாமையின் விளைவால், அவ்வினை உணர்த்தும் பொருள், நிகழ்கால, எதிர்கால, இறந்தகால நிகழ்ச்சிகளிலிருந்து வேறுபட்டு பொதுத்தன்மை பெறுகிறது. வினையாலணையும் ‘அ’கரம் இன்றியமையாச் சிறப்போடு கூடிய இறவாநிலைப் பெற்றுள்ளது என்றாலும் தெளிவான அவ்‘அ’கரத்தை எதிர்மறை சொல்லுருபாகக் கொள்ளும் கருத்திற்கு அரண் அளிக்க முன்வருதல் கூடாது என்கிறார் கால்டுவெல்.
தமிழ் எதிர்மறை வினையெச்சம் ‘அது’ அல்லது ‘ஆமல்’ என்ற சொல்லுருபை இணைப்பதால் உருவாகும். (எ.கா) செய்யாது; செய்யாலமல். இலக்கிய நடையிலும் மக்கள் வழக்கிலும் ‘மல்’ வீறுக்குப் பதிலாக ‘மை’ யீறு வழங்கப்பெறும். (எ.கா.) வழுவாமை. ‘மை’ பொதுவாகப் பண்புப்பெயர் விகுதியாம். அது வினைகளின் திருந்தா மூலம், அதன் பெயரெச்ச வடிவம் ஆகிய இரண்டன் பின்னரும் இணைக்கப்பெறும். (எ.கா.) ‘தாழ்மை’, ‘இருக்கின்றமை’. எதிர்மறைத் தொழிற்பெயர்களின் மையீறு பண்புப் பெயர்களின் மையீற்றோடு ஒருமைப்பாடுடையதாகும் இரண்டும் ஒன்றே. எதிர்மறை வினையெச்ச விகுதியாக வரும் ‘மல்’, ‘மை’ உருபிற்கு ஒப்பாகும். ஈற்றில் ஒரு ‘ல’கரத்தைக் கொண்டு வந்து இணைப்பதைக் காட்டிலும், ஈற்றில் உள்ள ஒரு ‘ல’கரத்தை ஒழித்து விடுவது மொழிநூல் இயல்பாம் என்கிறார் கால்டுவெல்.
ஒழித்து என்கிற அக்கால அச்சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளமையை அறியமுடிகிறது. (எ.கா.) ‘செய்யாதே’ இவ்வாட்சிமுறை ‘து’ அல்லது ‘தெ’ என முடியும் எதிர்மறைவினையெச்சம், உண்மையில் அஃறிணைப் பண்புப்பெயரே என்பதற்கான நல்ல சான்றாகும். எதிர்மறைப் பெயரெச்சங்கள், ‘த’கர ‘உ’கரமாக முடியும் வினையெச்சங்களின் ஈற்று ஒலித்துணை உகரத்தை ஒழித்து விட்டு பெயரெச்சச் சொல்லுருபாகிய ‘அக’கரத்தை இணைப்பதால் உருவாக்கப் பெறுகின்றன. (எ.கா) செய்யாதே. தமிழில் எதிர்மறை ஏவல்களும் எதிர்மறை எச்சங்களும் தோன்றுகின்றது.
தமிழ் இலக்கியங்களில், மறைச் சொல்லுருபோடு நெருங்கிய ஒருமைப்பாடு கொண்டிருக்கும் ஓர் எதிர்மறைச் சொல்லுருபு உளது. அது ‘அற்க’ என்பதாகும். (எ.கா.) ‘செய்யற்க’, ஒருமை, பன்மை ஆகிய இரு எண்களிலும் ஆண்பால் முதலாம் அனைத்துப் பால்களிலும் அது ஆட்சி பெறும் சொல் செய்யற்க ஆகும்.
திராவிட மொழிகளில் மொழி முதல் எதிர்மறை ‘அ’கரம் என எதுவும் இல்லை. வினைகளின் முன்னிணையாக வந்து எதிர்மறை உணர்த்தும் சொல்லுருபு உண்மைக்கான அடிச்சுவடும் அம்மொழிகளில் இல்லை. அவை அனைத்தும் எதிர்மறைப் பொருள் ‘இல்’ அல்லது ‘அல்’ என்பதிலிருந்து பிறக்கும் பெயரெச்சம் அல்லது தொழிற்பெயர்களைப் பின்னே இணைப்பதால் இட்டு நிரப்பப்பெறுகிறது. (எ.கா) நேரின்மை (நேர் + இல் + மை)
திராவிட எதிர்மறை வினைகளில், எதிர்மறை பொருள் உணர்த்தி நிற்கும் ‘அ’கரம் தனித்து நிற்கும் சொல்லுருபாகிய ‘அல்’ அல்லது ‘இல்’ என்பதற்கு நிகராகும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தமிழ் இலக்கியங்களில் எதிர்மறைச் சொல்லாக்க நிலையில், ‘அ’கரத்திற்குப் பதில் இத்தனிநிலைச் சொல்லாக்க உருபுகள் ஆளப்பெறுவதும் ஒரே வழி நிகழும். (எ.கா.) ‘அறியீர்’ என்பதற்குப் பதிலாக, ‘அறிகிலீர்’ என்பது வழங்கப்பெறுவது. ‘நினையலா’, ‘செய்கலாதார்’ என்பன போலும் எதிர்மறை ஆட்சிகளும் உண்டு. இவ்வெடுத்துக்காட்டுகள் அனைத்திலும் எதிர்மறைப் பொருள் உணர்த்தி நிற்பது, ‘அல்’ தனிச்சொல் உருபேயாதலால் அறிக ‘அலன்’ அல்லது ‘இலன்’ என்பதிலிருந்து தோன்றி, வினை மூலங்களோடு இணைந்து நிற்கும் ‘அல்’ எவ்வித ஐயப்பாடும் இல்லை என்க. ‘பேசுலேம்’ (= நாங்கள் பேசவில்லை); ‘உண்டிலை’ (= நீ உண்ண வில்லை) ‘மாற்று + அல் + என்’ என்பனவற்றின் புணர்ப்பாகிய மாற்றலன் (= மாற்ற முடியாதவன்; அதாவது பகைவன்) என்ற சொல்லையும் மாற்றான் என்ற எதிர்மறைச் சொல்லில் எதிர்மறைப் பொருள் (‘ஆ’ என்பதால் உணர்த்தப்படுவது உண்மை. ஆனால், ‘மாற்றலன்’ என்பதில் எதிர்மறைப் பொருள் உணர்த்துவது ‘அல்லே’ என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை என்கிறார் கால்டுவெல்.
தமிழ்ச் செய்யுள் வழக்கில் எதிர்மறை ஏவல் சொல்லாக்கங்களில் ‘அல்’லே முறையாக மேற்கொள்ளப் பெறுகிறது. அந்நிலையில் அது திரியாமல் வழங்கப்படுவதும் உண்டு. (எ.கா) ‘செய்யற்க’, ‘செய்யன்மின்’ (‘அற்’, ‘அன்’, இரண்டும் அல் என்பதன் திரிபுகளே) இன்றைய பேச்சுநடைத் தமிழில், வினையெச்ச வடிவங்களோடு ‘இல்லை’ என்ற எதிர்மறை இயல்பாக இணைந்து, காலம் உணர்த்தா எதிர்மறை வடிவை உருவாக்குகிறது. (எ.கா.) வர+வ்+இல்லை = வரவில்லை.
திராவிட எதிர்மறை வினைகளில் எதிர்மறைப் பொருள் உணர்த்தும் ‘அ’கரமும் எதிர்மறைப் பொருள் உணர்த்தும் தனிநிலைச் சொல்லுருபாகிய ‘அல்’லும் அடிப்படையில் ஒன்றே என்பது உண்மை. தமிழ் இலக்கியங்களில் வினைச் சொல்லாக்க நிலையில், ‘அ’கரத்திற்குப் பதிலாக ‘அல்’ ஆளப்பெறுவது ஒன்றே, இதற்குப் போதிய சான்றாகும். என்றாலும் இவ்விரண்டினுள் பழமை வாய்ந்தது எது என்பது இன்னமும் நிலைநாட்டப் பெற்றிலது. ‘அல்’ அகரமாக குறைந்து திரிந்திருக்குமா? அல்லது, ‘அல்’லே பிற்பட்டதாகுமா? ஈற்று லகரம் மறைந்து போவதற்கான எடுத்துக்காட்டுகள் பல உள. ‘தல்’ என்ற தமிழ்த் தொழிற்பெயர் விகுதியாகும் என்கிறார் கால்டுவெல்.
சுட்டுப்பெயர் வடிவங்களாகிய ‘அம்’, ‘அத்’, ‘அல்’ என்பனவற்றிற்கு நிகரான முழுவளர்ச்சி பெற்ற எதிர்மறைச் சொல்லுருபாம் என்றும் காண்கிறேன் என்கிறார் கால்டுவெல். எதிர்மறை மூலங்களுக்கும் இடையில் நிலவும் உருவ ஒருமைப்பாடு ஒன்றே கருதி ஈண்டு ஒப்பிடப்பட்டுள்ளது என்கிறார். ஆனால், பேராசிரியர் குண்டர்ட் அவர்களைப் பின்பற்றி மேலும் ஒருபடி முன்னே சென்று எதிர்மறைப் பொருளை முதற்கண் வினாவிலிருந்தும் முடிவாகச் சுட்டிலிருந்தும் பெற முதற்படுத்துதலும் கூடும். ‘அ’கரம் ஒரு வகையில் வினாப் பொருள் உடையதாகும். அவ்வினாப் பொருளிலிருந்தே எதிர்மறைப் பொருள் எழுகிறது. அது வருமா? என்ற வினா, ‘அது வராது’ எனும் எதிர்மறைப் பொருள் ஓரளவு வினா நிலையால் உணர்த்தப்படுவதும் உண்டு. அந்நிலையில், அது இலக்கிய வழக்காகவும் மக்கள் வழக்காகவும் மாறிவிடும்.
மேலே கூறிய கருத்தின் வன்மை மென்மை எதுவேயாயினும், ‘அல்’ தன்னளவிலேயே எதிர்மறைப் பொருள் உடையதாகாது. ‘அல்ல’ என்பது போல் ‘அ’கர எதிர்மறையால் தொடரப்பட்ட நிலையிலேயே அது எதிர்மறைச் சொல்லுருபாம் தன்மை பெறும்” என்று கூறும் குண்டர்ட் அவர்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிலேன். ‘அல்’ சுட்டுப்பொருள் தன்மையைத் தொடக்க நிலையில் பெற்றிருந்ததோ, இல்லையோ? எங்ஙனமாயினும் அது எதிர்மறைச் சொல்லுருபாக ஆளப்பெறும் இடங்களில் அது தன்னளவிலேயே பிற எதன் துணையையும் வேண்டாமலே எதிர்மறைப் பொருள் உணர்த்துகிறது.
அதைத் தொடர்ந்து வரும் ‘அ’கரம் உண்மையில் ஒலித்துணை கருதிய மிகையே என்று நான் கருதுகிறேன் என்கிறார் கால்டுவெல். இக்கருத்து ‘அல்’லுக்கு நிகரான, ‘இல்’ என்ற எதிர்மறைக்கும் பொருந்தும். கீழ்வரும் தமிழ்ச் சொற்கள் ‘அல்’லும், ‘இல்’லும் தம்மளவிலேயே எதிர்மறைப் பொருள், உணர்த்தவல்லவாம் என்பதை நிலைநாட்டவல்லவாகும். ‘அல்’, ‘அன்மை’, ‘அன்று’, ‘அல்கு’ (=குறைதல்) ‘அல்’ (=இருட்டு), ‘அல்வழி’, ‘இல்’, ‘இன்று’ (=இல்லை) இன்மை, ‘இல்’ (=இல்லாதவன்) இல் பொருள்.
‘அல்’அகரத்திலிருந்து பிறந்ததாம் என்பது குறித்து, நாம் எவ்வித கருத்துக் கொள்வதாயினும் எதிர்மறைப் பொருளில் பரவிய வழக்காறுடையவாய ‘அல்’, ‘ஆல்’, ‘ஏல்’ போன்றவற்றையும் ஒப்புநோக்கல் வேண்டும் என்கிறார் கால்டுவெல்.
முடிவுரை
• ஒரு சில சொற்களால் காலம் உணர்த்தும் இடைநிலை இல்லை. எடுத்துக்காட்டு: ‘வாழேன்’
• அது, ஆமல் என்கிற சொல்லுருபை இணைப்பதால் எதிர்மறைப்பொருள் உருவாகும் என்கிறது.
எடுத்துக்காட்டு: செய்யாது, செய்யாலமல் (இப்பழைய சொல்லாட்சியை நாம் அறிய முடிகிறது).
• எதிர்மறைச் சொல்லுருபு ‘அற்க’ என்பது குறித்தும் கால்டுவெல் பேசுகிறார்.
• ‘ஆ’ என்பது எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது என்கிறார் கால்டுவெல். எடுத்துக்காட்டு: ‘மாற்றான்’.
• எதிர்மறைப் பொருள் உணர்த்தும் ‘அ’கரமும் எதிர்மறைப் பொருள் உணர்த்தும் தனிநிலைச் சொல்லுருபுவாகிய ‘அல்லும்’ அடிப்படையில் ஒன்றே என்கிறார் கால்டுவெல்.
கால்டுவெல்லின் நோக்கம் நான்கு திராவிட மொழிகளின் இலக்கணத்தை ஒப்பிட்டு நோக்கிய ஆய்வும் பிற மொழிக் குடும்பத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதையும் தன்னுடைய தலையாய நோக்கமாகும் என்பதனால் ‘எதிர்மறையில்’ சில ஆய்வுகள் விடுபட்டுள்ளன. இருப்பினும் பெரும்பான்மையான ஆய்வு முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
___________________________________________________________
தொடர்பு:
தொடர்பு:
முனைவர் க.பசும்பொன்.
தனி அலுவலர்
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை
உங்களது தொடர்பு என் கிடைக்குமா ஐயா
ReplyDelete