தமிழ்நாட்டுச் சமணப்பள்ளிகள் கல்லறைகளா? ஓர் ஆய்வு
முனைவர். சொ.சாந்தலிங்கம், மதுரை
தமிழ்நாட்டில் சமணசமயம் கி.மு.நான்காம் நூற்றாண்டிலேயே கால் கொண்டுவிட்டது என்று பல முன்னைய ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மயிலை சீனி.வேங்கடசாமி தனது சமணமும் தமிழும் என்னும் நூலில் மகாபாரத கண்ணனுக்கும், 22ம் தீர்த்தங்கரான நேமிநாதருக்கும் இடைய உள்ள ரத்த உறவைக் கொண்டு மகாபாரத காலத்திலேயே-அவரது கருத்தின்படி கி.மு.7-8ம் நூற்றாண்டிலேயே சமணம் தென்னகத்திற்கு வந்துவிட்டது என்பார். அவரும் அவருக்குப் பின்னர் நமது சமகாலத்தில் வாழ்ந்து அண்மையில் மறைந்த ஐராவதம் மகாதேவனும் தமிழ்நாட்டில் உள்ள குகைப்பள்ளிகள் எல்லாம் சமண முனிவர்களின் உறைவிடமே என்றும், அவர்களுக்காகத் தங்குவதற்குக் கொடுத்த கற்படுக்கைகளே அங்குள்ள கற்படுக்ககைகள் என்றும் அங்கு வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் எல்லாம்“ சமணம் சார்ந்தவையே என்றும் இவ்வளவு காலமும் பேசியும், எழுதியும் வந்துள்ளனர்.
இக்கருத்துக்களில் அண்மைக்காலமாகச் சிலர் மாறுபட்டு இக்கற்படுக்கைகள் எல்லாம் அதிலும் குறிப்பாகப் பள்ளி என்ற சொல் வரக்கூடிய கல்வெட்டுள்ள படுக்கைகளும், குகைகளும் சமணத் துறவியர் வாழ்ந்த இடங்களல்ல, அவை கல்லறைகளே என்று கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு இவர்கள் காட்டும் ஒரே சான்று 2004ம் ஆண்டு வத்தலகுண்டு வட்டம் தாதப்பட்டியில் கிடைத்த ஒரு தமிழ்க் கல்வெட்டாகும். இக்கல்வெட்டில்,
‘…அன் அடிஓன் பாகல் பாளிய் கல்’
என்ற தொடர் வருகிறது. இந்த ஒரு சான்றை வைத்துக்கொண்டு, இக்கல் ஒரு இறந்து பட்ட வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல். நெடுங்கல் என்னும் வகையைச் சேர்ந்தது. பாளிய் என்றும் கல் என்றும் இரண்டு சொற்கள் அடுத்தடுத்து வருவதால் பாளிய் என்றால் கல்லறை என்ற முடிவுக்கு வருகின்றனர்.இந்த தவறான முடிவு என்பது அவசரமாக மற்ற கல்வெட்டுகளையெல்லாம் ஒருங்கிணைத்து ஆராயாமல் எடுக்கப்பட்ட முடிவு என்பதே இக்கட்டுரையாளரின் கருத்தாகும்.
‘ஒரு பொருட் பன்மொழி, பல்பொருள் ஒரு சொல்’ என்பது தமிழ் இலக்கணம் காட்டும் செய்தி. அதாவது ஒரு சொல்லுக்குப்பல பொருள்கள் உண்டு என்றும் பல சொற்கள் ஒரு பொருளைக் குறிக்கும் என்பதும் இதன் பொருள். இதன் அடிப்படையில் பள்ளி என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும். பள்ளி என்பதற்கு பள்ளிப்படுத்தல், பள்ளிப்படை என்ற பொருளை மட்டும் எடுத்துக் கொண்டால் அது கல்லறையை, புதைமேட்டைக் குறிக்கும் என்று ஒத்துக் கொள்ளலாம். ஆனால் பள்ளி என்பதினை பள்ளிக்கூடம், பள்ளியறை, பள்ளிக்கட்டி எனப் பல பொருள்களில் இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் பயின்று வருவதைக் காணலாம்.பள்ளிச்சந்தம் என்பது சமண பௌத்த பள்ளிகளுக்குக் கொடுக்கப்பட்ட நிலமாகும். பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் பல.
‘மதுரோதைய வளநாட்டு மாடக்குளக் கீழ் மதுரைக் கோயிற் பள்ளியறைக் கூடத்து பள்ளிப்பீடம் காலிங்கராயனில் எழுந்தருளியிருந்து’ முதலாம் சடையவர்மன் குலசேகரன் ஆணை வழங்கியுள்ளான். அதேபோல், ‘மதுரைக் கோயிற் பள்ளியறைக் கூடத்து பள்ளிப்பீடம் மழவராயனில் எழுந்தருளியிருந்து’. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆணை வழங்குகிறான்.இந்தக்கல்வெட்டுத் தொடர்களில் வரும் ‘பள்ளி’ என்னும் சொல் ‘கல்லறை’ என்ற பொருள் தருமா? சிந்திக்க வேண்டும்.கோயில்களில் பள்ளியறை நாச்சியார் என்ற ஒரு அம்மனின் திருவுருவமும், பள்ளியறை என்ற தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளனவே அவற்றின் பொருள் என்ன? தினமும் இரவுகளில் சிவனையும் பார்வதியையும் பள்ளியறையில் பள்ளிப்படுத்துகின்றனரே அதன் நோக்கமென்ன?
மேலும் சமணர் பள்ளிகளில் உள்ள கல்வெட்டுகளில் இடம்பெறும் பல சொற்களையும் கீழே காண்போம்:
பாளிஈய், பாளிய், (மாங்குளம் தமிழிக்கல்வெட்டுகள்) எண் 1& 2
பளி இ - (கீழவளவு கல்வெட்டு)
பளி - (கருங்காலக்குடி கல்வெட்டு)
பளிய் - (திருமலை கல்வெட்டு)
பளி - (ஜம்பை கல்வெட்டு)
பாளி - (புகழூா் கல்வெட்டு)
பளிய் - (குடுமியான்மலை கல்வெட்டு)
பள்ளி - (நெகனுார்ப்பட்டி கல்வெட்டு)
மேற்காட்டிய எட்டு சான்றுகளும் ‘பள்ளி’ என்ற சொல்லையே சற்று மாற்றி மாற்றி எழுதப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. இச்சொல் உள்ள கல்வெட்டுகள் உள்ள இடங்கள் யாவும் இயற்கையாக அமைந்த மலைக்குகைகள். இக்குகைகள் உள்ளே ஒவ்வொரு இடத்திலும் ஒன்றிற்கும் மேலும் அதிகபட்சமாக 80 கற்படுக்ககைகள் (கொங்கற்புளியங்குளம்) வெட்டப்பட்டுள்ளன. இக்குகைகளின் பாறை நெற்றிகளில் மழைநீர் உட்புகாவண்ணம் மழைவடிநீர் கால்கள் (dripledge-காடிகள்) அமைக்கப்பட்டுள்ளன. எனவே இக்காடிகள், பல எண்ணிக்கைகளிலான கற்படுக்கைகள் எல்லாம் கல்லறைகளா? கல்லறைகள் கலைந்துவிடும் என்பதற்காகவா மழைவடிநீர்க் கால்கள் வெட்டப்பட்டன. மாறாகச் சமணத் துறவியர் தங்கியிருந்து அறப்பணிகள் செய்த இடங்கள் என்பதற்குப் பல சான்றுகளை இவ்விடங்களில் அகச்சான்றுகளாகக் காணலாம்.
எடுத்துக்காட்டாக மதுரைக்கு அருகிலுள்ள மாங்குளம் பள்ளியில் அருகிலேயே இரண்டு அறைகளைக் கொண்ட செங்கல் கட்டுமானம் சமகாலத்திலேயே கட்டப்பட்டிருந்ததைத் தமிழகத் தொல்லியல் துறை அகழாய்வு செய்து கண்டறிந்துள்ளது. தரைதள ஓடுகள், கூரை ஓடுகள், அவற்றைப் பொருத்திய இரும்பு ஆணிகள், ௧௧ செங்கல் வரிசையைக் கொண்டசுவர் கட்டுமானம் ஆகியவையும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இக்கட்டுமானம் சமணம் சார்ந்த இல்லறத்தார் வந்து தங்கி அறங்கேட்ட இடங்கள் என்பதே உண்மை. எனவே சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்பள்ளிகளுக்கு அருகிலேயே சிராவகர்க்கள் தங்குமிடமும் இருந்தன என்பது ஒரு சான்று.
சமணத்துறவிகள் அறிவுதானம், அன்னதானம், அடைக்கலதானம், மருத்துவ தானம் செய்தவர்கள் என்று அறிவோம். அவர்கள் தங்கியிருந்த குகைப் பள்ளிகளில் மருந்து அரைத்தமைக்கான கல்லுவங்கள் இன்றும் கருங்காலக்குடி, ஆனைமலை, திருப்பரங்குன்றம் போன்ற குகைப் பள்ளிகளில் உள்ளமையும் காணலாம். கல்லறைகளில் கல்லுவம் இருக்குமா? சிந்திப்பீர்!
மேலும் இக் குகைப்பள்ளிகள் ‘பாளி’ என்னும் ஒரு சொல்லால் மட்டும் தமிழிக் கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை. பல சொற்களில் பல ஊர்களில் பல காலங்களில் குறிக்கப்பட்டுள்ளன என்பதைக்கீழே உள்ள சான்றுகள் வாயிலாக அறியலாம்.
01. முழாகை அரிட்டாபட்டி கல்வெட்டு
02. முழஉகை வரிச்சியூர் கல்வெட்டு
03. உறை திருவாதவூர் கல்வெட்டு, மேட்டுப்பட்டி கல்வெட்டு
04. உறையுள் ஆனைமலைக் கல்வெட்டு
05. குற (கூரை) கொங்கற்புளியங்குளம் கல்வெட்டு
06. கல்கஞ்சணம் மறுகால்தலைக் கல்வெட்டு
07. அய்அம் முதலைக்குளம், கீழக்குயில்குடி கல்வெட்டு
08. அம கல் அழகர்மலை கல்வெட்டு
09. அதிட்டானம் சித்தன்னவாசல், அயிரமலை, கரூர், தொண்டூர் கல்வெட்டு
10. கரண்டை திருமலைக் கல்வெட்டு
11. கவிய் முத்துப்பட்டிக் கல்வெட்டு
12. அறுத்தகல், அறுப்பித்தகல் புகழூா் (கரூர்) கல்வெட்டு
மேற்சுட்டிய 12 வகைச் சொற்களும் சமணர்களின் குகைகளில் பொறிக்கப்பட்டவையே. இவையெல்லாம் கல்லறைகளைக் குறிக்கின்றனவா? அல்லது துறவிகள், முனிவர்களின் வாழ்விடங்களைக் குறித்தனவா என்பதை ஆழமாக ஆராய்ந்து அறிக. இங்கு ‘கரண்டை’ என்னும் தொடரோடு இணைத்துப் பார்த்தால் உண்மைப்பொருள் விளங்கும்.
இவற்றை அரசர்களும், செல்வந்தர்களும் அமைத்துக் கொடுத்தனர் என்று காண்கிறோம். மாங்குளத்தில் நெடுஞ்செழியனின் அதிகாரிகளும் வெள்ளறை நிகமத்தோரும் செய்து கொடுத்துள்ளனர். ஜம்பையில் அதியமானும் கரூரில் (புகழூரில்) சேர இளவலும், மன்னார் கோயிலில் (பள்ளி செய்வித்தான்) பெருங்கூற்றனும் செய்து கொடுத்துள்ளனர் என்றால் இவ்விடங்களில் சமணத்துறவிகள் இறந்துபட்டபின் அவர்கள் கல்லறைகளைச் செய்து கொடுத்தவர்கள் என்று பொருளா?
தமிழகத்தில் மட்டும் இப்படிப்பட்ட குகைகளோ, படுக்கைகளோ இல்லை. வட பகுதியிலும், ஏன் இலங்கையிலும் இந்நிலை இருந்ததை அங்குள்ள கல்வெட்டுகள் காட்டுகின்றன. ‘நல்லூர் மாவட்டம் கண்டகூர் வட்டம்’ மால கொண்டா என்னும் மலை மேல் ஒரு குகையில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமி எழுத்தில் எழுதப்பட்ட பிராகிருத மொழிக் கல்வெட்டு ஒன்றில்,
‘அருவாறி(ள) குலத்து நந்த செட்டி மகன் சிறிவீரி
செட்டி செய்வித்த குகை’ என்று எழுதப்பட்டுள்ளது.
கி.மு.377 முதல் 307 வரை இலங்கைத் தீவை ஆட்சி செய்த பண்டுகாயபன் என்னும் அரசன் அநுராதபுரம் நகரில் சோதியன், சிரி, கும்பண்டன் என்னும் (நிகண்ட) சமணமதக் குருமார்களுக்குப் பள்ளிகள் கட்டிக் கொடுத்தான் என்று மகாவம்சம் கூறுகிறது.
இதற்கு மேலாக சிலர் மலைக்குகைகள் எல்லாம் சமணம் சார்ந்தது அல்ல என்றும், சமணம் என்ற சொல் சிரமண என்ற சொல்லின் திரிபு என்றும், சிரமண என்னும் சொல்லுக்கு பொதுவாகத் துறவி என்று பொருள் கொண்டு இக்குகைகள் சமணம் தவிர்த்து ஆஜீவகத் துறவிகளுக்கோ அல்ல சைவத் துறவிகளுக்கோ உரியது ஆகலாம் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.
இக்குகைகள் எல்லாம் ஆஜிவகச் சமயத்திற்கு உரியவை என்று தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் மெய்யியலாளர் திரு.க.நெடுஞ்செழியன் அவர்களின் கருத்தை மறுத்து ஏற்கனவே இக்கட்டுரையாளரால் ஒரு விரிவான கட்டுரை சமூக விஞ்ஞானம் இதழிலும், சித்திரமேழி என்னும் நூலிலும் வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் சமணம் என்னும் நூலிலும் இக்கட்டுரையைப் பார்க்கலாம்.
மேட்டுபட்டித் தமிழிக் கல்வெட்டு,
‘அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ’ என்றும்
புகழூர் (கரூர்) கல்வெட்டு
‘மூதா அமணன் யாற்றூர் செங்காயபன் உறை’
என்றும் நேரடியாகவே ‘அமணன்’ என்று கூறிய பின்னரும் அது சமணரைக் குறிக்காது பொதுவான சொல் என்றால் அதற்கு விடையில்லை.
சமகாலத்தில் பாண்டிய நாட்டில் சமணம் இருந்ததா?
கர்நாடகப் பகுதியிலிருந்து விசாகாச்சாரியர் தலைமையில் வந்த சமணத்துறவியர் குழுவினரே தமிழகத்தில் சமணம் பரவக் காரணமானவர்கள் என்ற ஒரு கருத்து உண்டு. அவர்கள் காலத்தில் மதுரைப்பகுதியில் இயற்கையாக அமைந்த குகைகளில் அவர்கள் தங்கவாய்ப்பாக இருந்ததால் அங்கு அவர்கள் தங்கிப் பணியாற்றினர் என்று நெடுங்காலமாக நம்பப்படுகிறது. ஆனால் அண்மையில் சில ஆய்வாளர்கள் சங்க காலத்தில் மதுரைப் புகுதியில் சமணம் இல்லை என்றும் முதலில் தொண்டைநாடு, கொங்கு நாட்டுப் பகுதியில் மட்டுமே சமணம் கால் ஊன்றி கி.பி.4-5ம் நூற்றாண்டளவில் தான் மதுரைப்பகுதியில் சமணம் பரவியதாகவும் கூறிவருகின்றனர். ஆனால் அவர்கள் இப்பகுதியில் 14க்கும் மேற்பட்ட குகைப்பள்ளிகளில் இருக்கும் கல்வெட்டுகளைச் சமணம் சார்ந்தவை என்று ஏற்பதில்லை. அது மட்டுமல்ல சங்க இலக்கியங்களில் உள்ள சான்றுகளையும் அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்களா என்றும் தெரியவில்லை.
‘பூவும்புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வருஉம் அமயமும்
இன்றிவன் தோன்றிய ஒமுக்கமொடு நன்குணர்ந்து
வானமும் நிலமும் தாம் முழுதுணரும்
சான்றகொள்கை சாயா யாக்கை
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல் பொளிந்தன்ன விட்டுவாயக் கரண்டை’ (மதுரைக்காஞ்சி-474)
என்று மதுரைக்காஞ்சி சமணப்பள்ளிகள் மதுரையிலிருந்தன என்பதைப் படம்பிடித்துக்காட்டுகிறது. இதனைப் பொதுவான துறவியர் பள்ளி என்று கொள்ள முடியாத அளவிற்கு
‘குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்’ (மதுரைக்காஞ்சி-474)
இருந்ததை வேறுபடுத்திச் சுட்டுகிறது மதுரைக்காஞ்சி. இதற்கும் மேலாக அகநானூறு, நற்றிணை போன்ற சங்க இலக்கியக் குறிப்புகளும் சமணப் பள்ளிகள் இருந்தமையைக் கூறுகின்றன.
‘உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடா படிவத்து ஆன்றோர் போல’ (அகநானூறு-123)
‘நீடிய சடையொடு ஆடாமேனிக்
குன்றுறை தவசியர் போல’ (நற்றிணை-141)
என்று பல சான்றுகள் மூலம் சங்ககாலத்திலேயே மதுரைப்பகுதியில் சமணம் செல்வாக்குப் பெற்றிருந்தது தெளிவாகும்.
சங்கம் மருவிய காலத்தியதாகக் கருதப்படும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் ‘மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செய்வித்த தாபதப்பள்ளியுள் வசிதேவனாரு கோட்டமும்’ என்னும் தொடர் வருகிறது. இங்கு இடம்பெறும் தாபதப்பள்ளியும் வசிதேவனார் கோட்டமும் சமண சமயம் சார்ந்தவை என்பது இதனைப் பதிப்பித்த அறிஞர்களின் கருத்தாகும். விக்கிரம ஆண்டு 526 இல் (கி.பி.470 ல்) வச்சிரநந்தி என்னும் சமண முனிவர் மதுரையில் திராவிட சங்கத்தை (திரமிள சங்கம்) நிறுவினார் என்று தா்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் என்பவர் எழுதியுள்ளதாகக் கூறுவர்.
இதன் பின்னர் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் பக்தி இயக்கத்தின் பேரால் ஊா் ஊராய்ப் பாடி வரும் காலத்தில் மதுரைக்கு வருகிறார். அவ்வாறு வரும் போது,
‘ஆனைமாமலை ஆதியாய இடங்களில்
பல அல்லர் சேர் ஈனர்க்கு எளியேன் அல்லேன்’ (திருஆலவாய்ப் பதிகம் எண்.39)
என்று பாடுவது காணலாம். ஆனைமலையில் கி.பி.ஒன்றாம் நூற்றாண்டு கால அளவிலான தமிழிக் கல்வெட்டுள்ள குகைப்பள்ளியிருப்பதையும் அதனைச் சுற்றிப் பல ஊர்கள் அரிட்டாபட்டி, மாங்குளம், அழகர்மலை போன்ற ஊர்களில் சமணப் பள்ளிகள் இருப்பதும் யாவரும் அறிந்ததே.
‘சந்து சேனனும் இந்து சேனனும் தரும சேனனும் கருமை சேர்
கந்து சேனனுங் கனகசேனனு முதலாகிய பெயர் கொள
மந்தி போற்றிருந்தாரியத்தோடு செந்தமிழ்ப்பயனறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அல்லேன் திருவாலவாய் அரன் நிற்கவே’
(பதிகம்-39-பாடம்-03)
‘கனக நந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமணமா
சுனக நந்தியும் குணகநந்தியும் பவணநந்தியும்’ (பாடல் -6 பதிகம்-39)
என நந்திகணத்தார், சேனகணத்தார் என்னும் பலபிரிவினரான சமணர்கள் மதுரையிலிருப்பதாகவும் அவர்களைக் கண்டு அஞ்சியவன் நான் அல்ல என்றும் திருஞானசம்பந்தர் பாடுவதைக் காணலாம்.
திருஞானசம்பந்தரின் வரலாற்றை விவரிக்கும் சேக்கிழார் தாம் எழுதிய பெரியபுராணத்தில்,
‘பூழியர்தமிழ் நாட்டுள்ள பொருவில் சீர்பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகி
சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலியோடு
மூழிநிர் கையிற்பற்றி அமணரே ஆகிமொய்ப்ப’
(பெரியபுராணம்-சம்பந்தர் புராணம்)
என்கிறார்.இங்கு பூழியா் என்பர் பாண்டியரே.பாழி என்றால் குகை என்கிறது தமிழகராதி. அருகர் மேவும் பள்ளிகள், அமணரே ஆகி மொய்க்கின்றனர் மயிற்பீலியோடு திரிகின்றனர் என்னும் பல குறிப்புகளும் நமது அத்துணை ஐயங்களுக்கும் விடைதரவல்லன வாயுள்ளன.
மேலே காட்டப்பட்டுள்ள சங்க இலக்கியச் சான்றுகள், தேவாரப் பாடல் குறிப்புகள், பெரியபுராணச் செய்யுள்களைக் கொண்டு சங்ககாலம் முதல் தொடர்ந்து பக்தி இயக்க காலம் வரை மதுரையிலும், குறிப்பாகப் பாண்டிய நாட்டிலும் சமணம் மிகச் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது என்பது விளங்கும். இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்காமல் சமணம் கொங்குநாட்டிலும், தொண்டைநாட்டிலுமே முதலில் கால்கொண்டது என்பார் கூற்றை நாம் மனங்கொள்ளத் தேவையில்லை.
சமணர்களின் தமிழ்த்தொண்டு:
மாங்குளம் தமிழிக் கல்வெட்டுகளில் சில வடசொற்களும், (நிகம, தம்மம், சாலகன் போன்றவை) சில வடவெழுத்துக்களும் ஸ. த3 (ധ) போன்றவையும் கலந்து எழுதப்பட்டுள்ளன. தொல்காப்பியம் கூறும், ‘வடசொற்கிளவி வட எழுத்து ஓரீஇ, எழுத்தொடுபுணர்ந்த சொல்லாகுமே’ என்பதற்கு ஏற்ப மேற்கூறிய எழுத்துக்களும் சொற்களும் கலந்து தொடக்க நிலையில் எழுதப்பட்டுள்ளன. நாளடைவில் பெருமளவில் தமிழ்ச் சொற்களே கல்வெட்டுகளில் கையாளப்பட்டுள்ளன.தமிழகம் வந்த சமண முனிவர்களால் தான் தமிழர்க்கு எழுத்துக்கள் அறிமுகமாயின என்ற கருத்து தற்போது மாறிவிட்டது. புலிமான்கோம்பை கல்வெட்டுகளின் கண்டுபிடிப்புகள், பொருந்தல், கொடுமணல், கீழடி அகழாய்வு பானை ஓட்டுப் பொறிப்புகளில் உள்ள எழுத்துக்களின் காலக்கணிப்பு ஆகியவற்றைக்கொண்டு இம்முடிவு முற்றிலும் மறுக்கப்பட்டு கி.மு.ஆறாம் நுாற்றாண்டளவிலேயே தமிழ் மக்கள் எழுத்தறிவு பெற்ற சமுகமாக இருந்தனர் என்பது உறுதிப்பட்டுள்ளது. தமிழர்கள் முதலில் குறியீடுகளைப் பயன்படுத்தி, அவற்றின் அடுத்த கட்டவளா்ச்சியாக எழுத்துக்கள் தோன்றின என்பதை வல்லம் அகழாய்வும் மெய்ப்பிக்கின்றது.
இந்த நிலையில் தமிழ் இலக்கண, இலக்கியப் பரப்பில் பெரும் எண்ணிக்கையிலான படைப்புகள் சமணர்களால் ஆக்கப்பட்டன என்று காண்கிறோம்.தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலான பலபடைப்புகளைச் சமணர்களே தமிழுக்குக் கொடையளித்துள்ளனர். ஏனெனில் இவர்கள் தாம் செல்லும் இடங்களில் உள்ள மக்கள் மொழியில் பேசவேண்டும், எழுத வேண்டும் என்ற கொள்கை உடையவராய் இருந்துள்ளனர்.
சமணசமயம் செழித்து வளர்வதற்குக் காரணமாக இருந்தது யாதெனின் அவர்கள் மேற்கொண்டிருந்த மொழிபிரசாரம் ஆகும். சமண சமயத்தார், பௌத்தர்களைப் போலவே, தாங்கள் எந்தெந்த நாட்டிற்குப் போகிறார்களோ அந்தந்த நாடுகளில் வழங்குகிற தாய்மொழியிலேயே தங்கள் மத நூல்களை எழுதினார்கள். இதனால் அந்தந்த நாட்டுமக்கள் எளிதிலே இந்த மதக் கொள்கைகளை அறிந்து அவற்றைக் கைக்கொள்ளமுடிந்தது. இதனை ஒரு நிகழ்வு மூலம் அறிந்து கொள்ளலாம்.
உச்சயினி தேசத்து அரசனது அவைக்களத்தில் வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பெரும் புகழ்பெற்று விளங்கிய சித்தசேன திவாகரர் என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். அதே காலத்தில் இவரைப் போலவே கல்விக் கடலைக் கரைகண்ட விருத்தவாதி முனிவர் என்னும் சமணத்துறவியும் வாழ்ந்து வந்தார்.இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் கண்டு வாதம் செய்து தம்மில் யார் அதிகமாகக் கற்றவர் என்று அறியப் பேரவாக் கொண்டிருந்தனர். நெடுநாள் சென்ற பிறகு இவர்கள் ஒருவரை ஒருவர் காணும் படி நேரிட்டது. இருவரும் வாதம் செய்யத்துணிந்து வாதத்தில் தோற்றவர் வென்றவர்க்குச் சீடர் ஆகவேண்டும் என்று முடிவு செய்து வாது செய்யத் தொடங்கினர். அவ்வூர் பொது மக்கள் வெற்றி தோல்வியைச் சொல்லும் நடுவர்களாக இருந்தனர்.சித்தசேனர் திவாகரர் தமது வடமொழி வல்லமையைப் புலப்படுத்த எண்ணி வடமொழியிலேயே வாதம் நிகழ்த்தினார். இந்த வாதப் போரில் வெற்றி பெற்றவர் விருத்தவாதி முனிவரே என்று நடுநின்றவர் முடிவு கூறினர். உடன்படிக்கையின் படி விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் சீடர் ஆனார்.
இதன்பிறகு சித்தசேன திவாகரர், வடநாட்டு மக்கள் பேசிப்பயின்று வந்த அர்த்தமாகதியில் எழுதப்பட்டிருந்த சமணசமய நூல்களை வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) மொழிபெயர்த்து எழுதக் கருதி தமது கருத்தைத் தம் குருவாகிய விருத்தவாதி முனிவரிடம் சொன்னார். விருத்தவாதி முனிவர் அவ்வாறு செய்யக் கூடாது என்று தடுத்தார். மக்கள் பேசிப்பயின்று வரும் அர்த்தமாகதியில் உள்ள நூல்களை வடமொழியில் எழுதி வைத்துப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளாதபடி செய்வது பெரும் பாவம் என்பதை நன்கு விளக்கிச் சொன்னார். தம் ஆசிரியர் சொன்ன உண்மைகளை உணர்ந்த பின்னர், சித்தசேன திவாகரர் தாம் செய்ய நினைத்த குற்றத்திற்குக் கழுவாயாகப் பன்னிரண்டு ஆண்டுவரை வாய்பேசாமல் ஊமை போல் வாழ்ந்திருந்தார்.
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தன் நூலான சமணமும் தமிழும் என்பதில் குறித்துள்ள செய்தியின் காலம் நமக்குத் தெரியவில்லை எனினும் சமணர்கள் தாங்கள் பணி செய்த இடங்களில் மக்கள் மொழியைக் கற்றுப் பேசி, எழுதி மக்களோடு பணியாற்றினார்கள் என்பது தெரியவரும். இதற்கு மாறாக தேவபாஷையில் பேசவோ எழுதவோ அவர்கள் உடன்படவில்லை என்பதே அவர்கள் வைதீகத்திற்கும், மநுநெறிக்கும் எதிரானவர்கள் என்பதை விளக்கும். இதன் நீட்சியாகத்தான் தமிழ் மொழிக்குச் சமணர்கள் தந்த இலக்கிய, இலக்கணப் படைப்புகளைப் பார்க்க வேண்டும். கல்வியைப் பொதுமையாக்கியவர்கள் சமணர்கள். தமிழர் மரபுப்படி பெண்களுக்கும் கல்வியைக் கொண்டு சென்றவர்கள். கற்ற பெண்களை ‘குரத்திகள்’ என்ற பெயரில் குருவாக ஏற்றவர்கள் என்பதிலிருந்தே அவர்கள் கலகக்காரா்கள் என்பது புலப்படும். மக்களின் பக்கம் நின்று மக்களுக்காக வாழ்ந்தவர்கள் சமணர்கள்.
மேலே சொன்ன கருத்துக்களை ஆராயாது தொடர்ந்து சமணர்களுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை, சங்ககாலத்தில் சமணம் இல்லை, பாண்டிய நாட்டில் சமணம் இல்லை, சமணர் குகைப்பள்ளிகள் எல்லாம் ஆசீவகப்பள்ளிகள் என்று வாதிடுவோரின் அறியாமையைக் கண்டும் அமைதி காப்போம். சித்தன்னவாசலில் தான் ஆசீவகம் துவங்கிய மற்கலி கோசலர் மறைந்தார். அதுதான் இன்றைய ஏழடிபாட்டம் பள்ளி என்னும் நெடுஞ்செழியன் அவர்களின் கூற்றையும் நாம் புறந்தள்ளத்தான் வேண்டும்.
சித்தன்னவாசல் கல்வெட்டில் வரும் ‘எருமி நாடு குமிழூர் காவிதி’ என்னும் தொடர் குறிப்பிடும் குமிழூர் என்பது மைசூர் பகுதியிலிருந்திருக்க வேண்டும் என்ற கருத்தே இதுவரை இருந்துவருகிறது.
எருமிநாடு குமுழ்ஊர் பிறந்த காவுடிஈ
தென்குசிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்
சித்தன்ன வாசல் கல்வெட்டு: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட “தமிழ் – பிராமி கல்வெட்டுகள்” நூலில் உள்ள கல்வெட்டுப் பாடமும் குறிப்பும்
ஆனால் திருச்சி நகரத்திலேயே பாலக்கரை-மரக்கடை பேருந்து நிறுத்தத்திற்கு இடையில் உள்ள ஒரு பகுதி ‘குமிழூர்’ என்று பெயர் பெற்றுள்ளதாக ஒரு பெயர்ப்பலகையை நான் அண்மையில் அறிந்தேன். எனவே இந்த செய்தி தொடர்பாக இன்னும் கள ஆய்வு செய்து எருமிநாடும், குமிழூரும் திருச்சிப்பகுதியிலேயே இருந்திருக்க வாய்ப்பிருக்குமோ என முடிவுக்கு வரவேண்டும்.
No comments:
Post a Comment