Thursday, October 1, 2020

தேவை ஒரு சாதி ….?

 தேவை ஒரு சாதி ….?

- முனைவர் சாந்தினிபீ


தேவை ஒரு சாதி, ஆம்! உண்டி, உறைவிடம், உடை உள்ளதோ இல்லையோ இன்று வாழத் தேவை ஒரு சாதி. மண்ணில் கண் திறந்து கண்மூடி மண்ணுக்கும், விண்ணுக்கும் செல்ல சாதி தேவை. இன்று கடை நிலை ஊழியராயினும் முடிசூடா மக்கள் தலைவராயினும் வாழ்க்கையில் முந்தி நிற்பது சாதி. பள்ளி முதல் பல்கலைக்கழக வேந்தர் வரை அவசியத் தகுதி சாதியே. அரசியல் மட்டுமா சாதியைக் கேட்கிறது, கொலைக் குற்றவாளிக்கும், கொள்ளை அடித்தலே கொள்கையாகக் கொண்டு விலை உயர்ந்த வெளிநாட்டுக் காரில் உல்லாச பவனி வரவும் தேவைப்படுகிறது சாதி. வாழ்வையும் சாவையும் கூட சாதி, மதமே நிர்ணயிக்கிறது. கிராம பஞ்சாயத்திலிருந்து வட்டம், மாவட்டம் மாநிலம் மத்திய அரசு வரையிலும் ஊடுருவி நாடெனும் வண்டி நகர அவசியமாகும் அத்துணை அமைப்புகளிலும் அச்சாணியாய் உறுதியாக உறுத்தி வரும் இந்த சாதி எங்கிருந்து எப்படி எப்போது வந்தது?

வாருங்கள் வரலாற்றைப் புரட்டுவோம். வேதங்களில் முதன்மையான இருக்குவேதம் சொன்னது வர்ணங்கள்தான் வெள்ளை, சிகப்பு, மஞ்சள், கருப்பு. அதன் மாற்றுப் பெயரே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன். பிரம்மம் என்றால் உயர்ந்த ஆன்மா என்று பொருள். இருக்குவேதத்தின் கடைசி புத்தகமான பத்தாவது புத்தகத்தில் தான் கருப்பு நிறமுடைய (கிருஷ்ண த்வச்) சூத்திர பிரிவு காணப்படுகிறது (உபிந்தர் சிங்-2008). இவர்கள் ஆரியரிடம் அரசு உரிமையைப் போரில் தோற்று அடிமைகளானதால் தசா/தாசி என்பவர்கள். இவர்கள் இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணியாதோர்(அவ்ரதா), யாகங்களைச் செய்யாதவர்கள்(அக்ரது) வேற்று மொழியினர் (ம்ரித்ர வாச) தோற்றத்தால் வேறுபட்டவர்கள் என இருக்குவேதம் இவர்களைப் பற்றிச் சொல்கிறது (உபிந்தர் சிங்-2008).

வடமேற்குப் பகுதியில் தோன்றிய ஆட்சி மாற்றம், மெல்ல நகர்ந்து அன்றையப் பாடலிபுத்திரமான, பீகாரின் பாட்னாவை அடைகிறது. இதற்குக் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாகி விடுகிறது. அதற்குள் மற்ற மூன்று வேதங்களும் உரு கொண்டன ( கி.மு 7- ம் நூற்றாண்டு). கங்கை சமவெளியில் எண்ணிலடங்கா தத்துவ ஞானிகள், சாதுக்கள் அன்றும் தவம் புரிந்தவாறு காணப்பட்டனர்.

இந்தியாவின் பல இடங்களில் பல்வேறு இன மக்கள் தங்களுக்கு ஏற்புடைய கருத்தின் அடிப்படையில் வாழ்ந்தனர். பலர் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து ஜனபதா என்னும் குடியரசு நாடுகளாகவும், இனக் குழுக்களாகவும், வேட்டையாடும் சமூகமாகவும், பண்பட்ட நாகரீகத்தைக் கொண்ட படிக்க எழுதத் தெரிந்தவர்களாகவும், கடல் கடந்து வாணிபத்தை நடத்தியும் இட்டார் பெரியோர், இடாதோர் இழி குலத்தோரென்றும், யாதும் ஊரே போன்ற கொள்கையினரும் வாழ்ந்து வந்தனர்.

இதே காலத்தில் கங்கை சமவெளியை ஆரிய வர்தமாக்கிக் கொண்டு மன்னராட்சியும், பிறப்பு இறப்பு என்னும் வாழ்க்கைச் சுற்றிலிருந்து விடுபட யாகங்களும், பலியிடல், வேதங்களை மனனம் செய்து உச்சரித்தல், எண்ணில்லா சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றுதல், பிறப்பால் நிறத்தால் மனித இனத்தை வேறுபடுத்திப் பார்த்தல், போன்ற கருத்துக்களை தன் வாழ்வியலாகக் கொண்டவரும் வாழ்ந்து வந்தனர்.

பிற்கால வேதகாலத்தில் ஆட்சி பரவலுடன் சடங்கு சம்பிரதாயங்களின் கட்டுப்பாடும் கட்டாயமும் வலுத்தது. அக்காலத்தில் விவசாயமும் வணிகமும் கூட அதிகரித்தன. செல்வமும் செழிப்பும் கொழித்தும்  ஆட்சியாளருடனான செல்வாக்கு பெருகியும் சமூக நிலையில் மட்டும் மாற்றம் இல்லாததால் விவசாயிகள், வணிகர்கள் மன அமைதி இழந்தனர். தொழிலுக்குப் பயன்படும் கால்நடைகளைப் பலியிடுதலில் அவர்களின் புலம்பல் அதிகரித்தது. இந்த கட்டத்தில் தான் புத்தரும் மகாவீரரும் தன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்றனர். இருவரும் நாத்திகம் பேசினர். கடவுள் மறுப்பு கொள்கையுடன், மனிதன் தனது எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் முறையாக நடந்தாலே போதும். அதுவே அவனுக்குத் தேவையான விடுதலையை அளிக்கும் என்று நெத்தியடியானது. இதனால் பல ஆட்சியாளர், வணிகர், விவசாயிகள் பிராமணர்களும் இவர்களின் கொள்கைகளைப் பின்பற்றினர்.

முதல்பெரும் மகத ராஜ்ஜியத்தை அமைத்த மகதர்களும், நந்தர்களும், பின்னர் வந்த மவுரியர்களும் தொடர்ந்து ஜைன, பவுத்த மதங்களையே பின்பற்றியும் ஆதரித்தும் வந்தனர். இவர்களில் எவரும் தன்னை ஷத்ரியர் என்று அடையாளப் படுத்தவுமில்லை.  தன் பிராமண மதத்தைக் காப்பாற்றத் துணிந்த புஷ்ய மித்திர சுங்கன், மவுரிய வம்சத்தின் மன்னனைக் கொலை செய்து, தன்னையே மன்னனாகவும், அது சுங்க வம்சத்தின் ஆட்சி எனவும் அறிவித்தான். ஆக வருணா சிரம தர்மத்தை ஆட்சியாளரும் மக்களும் மறுத்தனர் என்பது தெளிவு. அடிப்படையில் இந்தியா நாத்திக கொள்கையை விரும்பியது எனக்கூறுவது வரலாறு.

குப்தப் பேரரசு கி.பி 3- 6 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டது. இவர்களும் வாணிபம் செய்யும் வைசியர் அல்லது பிராமணர் என்று காண்கிறோம். இக் காலத்தில் மீண்டும் பிராமணக் கொள்கைகள் தலைதூக்கின. கோயில் கலாச்சாரம் பிராமணர்களுக்கான முக்கியத்துவம், நிலக்கொடைகள் பெருகின. ஒரு குப்த மன்னன் பதவியேற்றால் ஓராண்டிற்கு ராஜசுயயாகம் நடத்தி, கடவுளிடமிருந்து, ஆளும் அங்கீகாரத்தை அந்தணர்கள் பெற்றுத் தந்தனர். கடந்த கால மவுரிய மன்னனின் நிலை குப்தர்களின் மனதில் நீங்கா பயத்தை ஏற்படுத்தியிருக்குமோ? தெரியவில்லை, ஆனால் தொடர்ந்து அந்தணர்களையும், சைவ, வைணவ, புத்த, ஜைன ஆலயங்களுக்குப் பரவலாகக் கொடைகளை வழங்கினர். தங்களைப் பிரம்ம ஷத்ரியர் (பிராமணர்களாக இருந்து ஷத்திரியராக மாறியவர்) என்றழைத்துக் கொண்டனர். அடுத்து வந்த வர்தணர்களோ மீண்டும் பவுத்த ஜைன கொள்கைகளில் நாட்டம் கொண்டனர்.

இதற்கிடையில், சாதிகள் தோன்றி பெருகியது. பெருவாரியான மக்கள் வருணாசிரம தர்மத்தை விட்டு விலகியதால் குப்தர் காலத்தில் தரும சாத்திரங்களும், சூத்திரங்களும் தொகுத்து எழுதப்பட்டன. மகாபாரதமும் இராமாயணமும் கூட தன் அளவில் பன்மடங்காயின. இப்படித் தொகுக்கப்பட்ட பல நூல்களில் மனுசாத்திரமும் அடங்கும். இந்த சட்டங்களைத் தாண்டி தன் மனம் போன போக்கில் வாழ்ந்த மக்களின் தொகையைக் குறைக்க ஒரு சட்டம் மனுவின் புத்தகத்தில் பிறந்தது. தங்கள் சாதிகளைக் கடந்து திருமணம் செய்து கொண்டவர்களையும் அவர்களின் வாரிசுகளையும் அனுலோமா, பிரதிலோமா என்று புது சாதிகளை உருவாக்கி, சண்டாளர்கள், தீண்டத் தகாதவர்களெனச் சூத்திரருக்கும் கீழே பல பிரிவுகள் உண்டாக்கினார். இவர்கள் ஐந்தாம் பிரிவினர் (பஞ்சமர்) என்றும் அழைத்தனர். சூத்திரர்களின் எண்ணிக்கை அதிகமானால், அது உயர் சாதியினருக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்தார் மனு. ஆயினும் ஆட்சியாளர்களும் வெகுஜன மக்களும் இதைப் பெரிதாக் கருதவில்லை போலும்.

சண்டாளர்களைப் பார்த்தாலும், தொட்டாலும் தீட்டு என்று வடமொழி சாத்திரங்கள் சொன்னாலும் வட இந்தியாவில் மன்னர்களாக இவர்கள் ஆட்சி செய்ததை வரலாறு சொல்கிறது. (இவர்களின் தோற்றம் குறித்து பல்வேறு கற்பனைக் கதைகள் சொல்லப் படுகின்றன. பிற்கால நூல்கள் இவர்களை ரஜபுத்திரர்கள் என்றும் சொல்கின்றன). தற்போதைய வட இந்தியப் பகுதியிலுள்ள புந்தேல்கன்ட் பகுதியை மையமாகக் கொண்டு 9-13 நூற்றாண்டுகளில் ஆட்சி செய்தனர். பழங்குடியினர் வணங்கிய ’மனியா’ எனும் பெண் தெய்வ வழிபாட்டினர். தங்கள் குல தெய்வத்திற்காக மஹோபாவில் கோவில்களைக் கட்டினர். கஜுராஹோ சிற்பங்களையும் தோற்றுவித்தனர். வங்கப் பகுதியைப் பாலர்கள் 8-12 நூற்றாண்டில் ஆட்சி செய்தனர். இவர்கள் புத்த மதத்தையே கடைபிடித்தனர். இன்றும் இவர்கள் கட்டிய பல கோயில்கள் வழிபாடின்றி அழிந்து காணப்பட்டாலும் அதில் தெய்வச் சிலைகள் இல்லை. இவை போனதெங்கே? தெரியாது. ஆனால் ஊருக்கு வெளியே இடுகாட்டிலோ சுடுகட்டிலோ உயர்ந்த தாழ்ந்த சாதியினரையும், அரசாண்ட மன்னனையும் அடிமையையும் கோயிலின் கருவறையிலேயே வாழ்ந்தவனையும், கோயிலின் வாசத்தையே அறியாதவனையும் வேறுபாடின்றி ஒரே இடத்திற்கு அனுப்பும் வெட்டியான் என்ன மன்னனின் ஆலோசகராக அரசவையிலா அமர்ந்து இருந்திருப்பான்? அன்றும் அவன் தீண்டத் தகாதவனாகவே மன்னனாலும் கருதப் பட்டிருப்பான்.

ஷத்ரியரே ஆளப் பிறந்தவர் என சாத்திரங்கள் சொன்னாலும், சூத்திரரான நந்தர்களும், மயிலை வளர்ப்பவரான மவுரியரும் பின்னர், பிராமணரும், மூன்றாம் வருணத்தைச் சார்ந்த குப்தர்களும் ஆட்சி செலுத்தினர் என்பது வரலாற்றின் மூலம் வெளிச்சம் பெறுகிறோம். ஆள்பவர் எவராயினும் மன்னனைச் சூழ்ந்து வாழ்பவர்களிலும் ஒதுக்கப் பட்டவர் வாழ்விலும் மாற்றம் நிகழவில்லை என்பது தானே இன்றைய அரசியல் நமக்குச் சொல்லும் பாடம்.

வடமொழி இலக்கியங்களின் கூற்றும், கல்வெட்டுக்களின் கூற்றும் கற்பனைக்கும் நடைமுறைக்குமான இடைவெளியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இப்போது தென்பகுதிக்குப் போவோமா…? சாதவாணர்கள் பவுத்த சமணச் சார்பினர். சங்க காலம் சாதியைக் கடந்தது எனச் சொல்லாமலே தெரிவது. களப்பிரர் பற்றிய உண்மைகள் வலைத்தளங்களில் வலம் வருகின்றன. அவர்கள் பிராமண சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுத்து, சேர, சோழ, பாண்டியரான மூவேந்தரையும் வீழ்த்தியவர்கள். பல்லவர்களோ பிரம்ம ஷத்திரியர் எனக் கல்வெட்டுகள் சொல்கின்றன. சோழர் கால கல்வெட்டுகளை ஆய்ந்ததில் 16 வகையான சாதிகளின் பெயர்கள் காணக் கிடைத்தாலும், அவற்றில் பெரும்பான்மையானவை தொழிற்பெயர்களே (ஓய்.சுப்பராயலு). கடல் கடந்தால் தீட்டு எனும் தரும சாத்திரங்களின் சட்டங்களை தெற்குப் பகுதியை ஆண்ட எந்த குலத்தைச் சார்ந்த மன்னனும் மதிக்கவில்லை என்பதற்கான சான்றுகள் ஏராளம்.

பிரம்ம ஷத்ரியர் என அறிமுகப் படுத்திக் கொண்ட பல்லவர்கள் புத்த மதத்தைக் கடல் கடந்தே பரப்பினர். ஒய்சாளர்களும், கிழக்கு, மேற்கு சாளுக்கியரும், இராட்டிரகூடர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கலிங்க மன்னர்களும் பாண்டியர்களும் கடல் கடந்தே இலங்கையுடன் திருமண, அரசியல் உறவுகளை வளர்த்துக் கொண்டனர். 13 ஆம் நூற்றாண்டில் தென்னகத்தின் பெரும் பகுதியை ஆண்ட காகத்தீயர்கள் தங்களைச் சூத்திரர் என்றும், தூய்மையானவர்கள் என்றும் கல்வெட்டுகளில் புகழ்ந்தனர். கடல் கடந்து இலங்கையுடனும் போர் தொடுத்தனர். ஆனால் அடித்தட்டு மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதா..? கடினமாக உழைத்து எல்லோருக்கும் உணவளித்த விவசாயி வரி கட்ட… கழனியில் கால் பதிக்காத பார்ப்பனனுக்கு வரிச்சலுகை, இலவச நிலம். இது தானே இன்றும் தொடர்கதையாக நீள்கிறது.

விஜயநகர மன்னர்களில் புகழ்பெற்ற கிருட்டிண தேவராயர் எழுதிய ஆமுக்த்தமால்யதாவின் எழுத்துக்களை ஒரு முறை புரட்டுங்கள். ஆழ்வார்களில் தந்தை மகள் உறவுடைய பெரியாழ்வார் ஆண்டாள் இவர்களின் வாழ்க்கையை மையக்கருவாகக் கொண்டது. பிரிவுத் துயரைத் தாங்காது தன் தோழியரிடையே பேசும் ஆண்டாளின் வாயிலாக ஒரு கருத்தைச் சொல்கிறார். இராமாவதாரத்தில் சீதையின் பிரிவுத் துயருக்கு இராமனே காரணம் எனச் சாடுகிறார்.

ஒரு பெண்ணுக்கு தன் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய உரிமை இல்லையா…? சூர்ப்பணகை தன் விருப்பத்தைத் தானே சொன்னாள். அதற்காக அவளின் காதையும் மூக்கையும் ஏன் வெட்ட வேண்டும். ராமனின் செயலால் தானே இராவணன் சீதையை இலங்கைக்கு எடுத்துச் சென்றான்? சீதையின் பிரிவுத் துயருக்கு ராமனே காரணம் என அன்றைய இராமாயணத்திலும் இன்றைய அரசியலிலும் நாயகனாக நிலைத்திருக்கும் இராமனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார் இந்த விஷ்ணு பக்தரான மன்னன் கிருஷ்ணதேவராயர். இருபதாம் நூற்றாண்டின் பெரியார் கூற்றை விமர்சிக்கும் நாம் 16-ம் நூறாண்டின் முடி சூடிய மன்னனின் கேள்விகளை எப்படிப் புரிந்து கொள்வது? ஆட்சி தன் கையிலிருந்ததால் முடிந்தது என்று புரிந்து கொள்ளவா?

வட மொழி சாத்திரங்களின் சட்ட திட்டங்கள் மன்னனை, ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்தவில்லை என்ற புரிதலில் தவறில்லை என்றே படுகிறது. மனு தர்மம் மன்னர்களின் வாழ்வியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்பதற்கான அடையாளமாகக் கொள்ளலாம். ஆனால் வட மொழி நூல்கள், வருணாசிரம தர்மத்தைக் காப்பதும் கடைபிடிப்பதும், மன்னருக்கான முக்கிய கடமைகளில் ஒன்றாகவே சொல்கின்றன. எப்படியானாலும், காலம் எதுவாயினும் ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்பதில் மட்டும் மாற்றமில்லை எனச் சொல்கிறது வரலாறு.

வடமொழி சாத்திரங்கள் சொல்லும் முதலாம் இடத்தையும் முக்கியத்துவத்தையும் எழுதாச் சட்டமாகப் பிராமண வர்ணம் பெற்றது, ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போதுதான் என்கிறார் இந்தியவியல் வரலாற்றாளர் சிந்தியா தல்போட் (சிந்தியா தல்போட், 2008, ப-48). அதிகமான எண்ணிக்கையில் பிராமணர்களைக் கணக்கர், எழுத்துப் பணி, ஆவணங்களை எழுதுபவர், ஆட்சியாளர்களின் கட்டளைகளுக்கு அவ்வவ் மொழியில் எழுதுபவர், ஆட்சியாளர்களின் உதவியாளர்கள் போன்ற பல அரசங்க தொடர்புடைய பணிகள் பிராமணர்களுக்குத் தரப் பட்டதும், அத்துடன் கால்நடைகளைப் பராமரிக்கும் ஆயர் சமூகத்தையும், போர்த்தொழில், தற்காப்புக் கலை வளர்த்த சமூகங்களையும் ஆங்கிலேயர்கள் ஒடுக்கியதும் பிராமணர்கள் முக்கியத்துவம் பெற ஒரு முக்கிய காரணம் என்று மேலும் விளக்குகிறார். இந்த 19 ஆம் நூற்றாண்டிலேயே இந்தியச் சமூகத்தில் சாதிய முறை முன்பு பெறாத முக்கியத்துவத்தைப் பெற்றது என்பதும் இவரின் கருத்தே.

காலனி ஆதிக்கத்திற்கு முற்பட்ட இந்தியாவின் வரலாற்றைக் கட்டமைக்கப் பிராமண இலக்கியங்கள் (தரும சாத்திரங்கள்) பயன்படாது, மாறாகக் கல்வெட்டுகளே சிறந்த சான்றுகள் என்று தன் கருத்தை அதே நூலில் முன்வைக்கிறார். ஆனால் கல்வெட்டுகள் பெரிதும் கோயில்களுக்கானது, அதன் நோக்கம், அதில் பேசப்படும் மக்கள் என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளல் அவசியம். அவை சமூகத்தின் அத்துணை கூறுகளையும் அடக்கியதா..? என்ற கேள்வியும் எழுகிறது. கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை எவரும் மறுக்க முடியாது. அதே போல் அவற்றின் குறைகளையும் கவனித்தல் முக்கியமல்லவா..?

ஆங்கிலேய ஆதிக்கத்தில் ஆழமான சாதி மத வேறுபாடுகள் சுதந்திர, மக்களாட்சி இந்தியாவில் தான் மேலும் மேலும் வலுப் பெற்று இன்று சாதி நுழையாத இடமே இல்லை என நிறைந்து சமூக சண்டைகள் கொளுத்து நிற்கிறது என்றால் அது உண்மைக்கு மாறாகாது. இன்றும் கோயிலின் வெளிப்பகுதியில் ஓய்வெடுத்ததால் சிலர் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர். ஆணவக் கொலைகளின் அடிப்படை சாதியே. உணவாலும் உடையாலும் வேறுபட்டவர்களை வெட்டி வீழ்த்தும் வீரச் சமூகம் என வருங்கால வரலாற்றைப் படைத்துக் கொண்டிருக்கும் நாம் மெத்தப் படித்த மேதாவிகள். வீட்டுக்கு ஒருவர் வெளிநாடுகளில் வசித்தாலும் நாம் சாதிய வேறுபாடுகளை இறுக்கி அணைத்த சென்றுள்ளோம்.ஒரு நோயாளி மருத்துவரை நோக்கி கீழ்சாதியான நீ என்னைத் தொடாதே என்பதும், குடிமைப் பணி அதிகாரிகளையும் விதி விலக்கில்லாது’ உன் சாதி எது?’ என்று அவர்கள் முகத்திலேயே கேட்கும் கருத்துரிமைக் கொண்டவர்கள்.

இன்றைய நடப்பு நாளைய வரலாறு. யாதும் ஊரே, யாவரும் கேளீர், தீதும் நன்றும் பிறன் தர வாரா….. என்னும் வரிகளைச் சொல்லிப் பெருமைப்படுகிறோமே, வரும் தலைமுறைகளுக்கு நாம் பதித்துச் செல்லும் வரலாற்றுச் சுவடுகளை பின் நோக்கி மறுபார்வை பார்க்க ஏன் மறுக்கிறோம்? நம்மைத் தடுப்பது எது?. மாற்றத்திற்குக் காலம் ஒரு தடை அல்ல. உலகம் நம்மைக் கண்டு பெருமைப் படும் வரலாற்றைப் படைப்போம் என்ற எதிர்பார்ப்புடன் அமைவோம் .



சான்றாதாரங்கள்:
1. Upider Singh-A History of Ancient and Early Medieval India
2. Cynthia Talbot -Inscribing the Other, Inscribing the Self: Hindu - Muslim Idetities in Pre-Colonial India  Comparitive Study in Society and History, 47, no-1, 1995
3. Y. Subbarayalu- South India Under the Cholas


Dr.S.Chandnibi
Associate Prof
CAS, Dept of History
AMU, Aligarh-202002
UP State

----

No comments:

Post a Comment