Sunday, May 26, 2019

ராகுல சாங்கிருத்தியாயன் பார்வையில் ‘ஆரியர் வருகை’


——    தேமொழி





            ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற தலைப்பில், ராகுல சாங்கிருத்யாயனால் இந்தியில் ‘வால்கா சே கங்கா’ என்று எழுதப்பட்ட இந்த நூல் மானுடவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியம் என்ற தகுதி பெற்றது. இந்த வரலாற்றுப் புனைவில் 20 கதைகளில் மனித சமுதாயத்தின் வளர்ச்சி தொகுக்கப்படுகிறது. இந்நூல் 1943 இல் வெளியிடப்பட்டு பின்னர் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ராகுல சாங்கிருத்தியாயன் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து எழுதியதற்காக மூன்றாண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சிறையில் உருவான நூல் இது. இந்நூலை எழுதியதற்காக சமயப் பழமைவாதிகளால் வசை பாடப்பட்டார். இருப்பினும் மறு ஆண்டே அடுத்த பதிப்பு வெளிவரும் அளவிற்கு நூல் விற்பனையானது. தமிழில் கண. முத்தையா மொழிபெயர்ப்பில் இந்நூல் முன்னரே 1949ல் வெளிவந்து முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்ட சிறப்புடையது. நூலின் மொழிபெயர்ப்பும் கண. முத்தையா வால் சிறையில்தான் எழுதப்பட்டது. கால்நூற்றாண்டிற்கும் மேல் இந்திப் பேராசிரியராகப் பணியாற்றிய டாக்டர் என். ஸ்ரீதரன் சமீபத்தில் இந்தியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். அது 2016 இல் கவிதா பப்ளிகேசஷன்ஸ் வெளியீட்டில் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. என். ஸ்ரீதரன் பல குறிப்புகளையும் தேடிக்கொடுத்து வாசிப்பை விரிவாக்க உதவியுள்ளார்.

            ராகுல சாங்கிருத்தியாயன், கேதார்நாத் பாண்டே என்ற பெயருடன் உத்தரப்பிரதேச குக்கிராமம் ஒன்றில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். துவக்கப்பள்ளி வரை மட்டுமே முறையான கல்வி கற்றாலும் தானே கற்று 30க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞராகவும், பலதுறை வல்லுநராகவும் 70 வயதுவரை வாழ்ந்து 1963 இல் மறைந்தவர். இவர் ‘மகா பண்டிதர்’ என்ற பட்டமும் பெற்றவர்.  தமிழகத்தில் இவர் வாழ்ந்த காலத்தில் தமிழும் அறிந்து கொண்டார். ராகுல சாங்கிருத்தியாயன் இந்துவாகப் பிறந்து இந்து சமயத் தத்துவங்களை அறிந்தவர். ஆரிய சமாஜத்தின் சுவாமி தயானந்த சரஸ்வதியின் மேல் பற்று கொண்டவர். இலங்கையில் புத்த மதத்தைத் தழுவி புத்த பிக்குவாகவும் தீட்சை பெற்று ராகுல சாங்கிருத்தியாயன் என்று மாறியவர். பெளத்த தத்துவங்களிலும் பாலி மொழியிலும் வல்லுநர். கடவுளை மறுத்தவர், இறப்பிற்குப் பின், மறுபிறவி ஆகியவற்றில் சற்றே நம்பிக்கை கொண்டிருந்து பின்னர் அதையும் துறந்து மார்க்சிய கொள்கையில் ஈடுபாடுகொண்ட பொதுவுடமைவாதியாக இறுதியில் மாறியவர். ரஷ்ய லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராகவும், வித்யாலங்கார இலங்கைப் பல்கலைக்கழகம் இவரைப் பேராசிரியராகவும் பணியாற்றவைத்து தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டன. வாழ்நாளின் பெரும்பகுதியைப் பலநாடுகளுக்கும் இந்தியாவில் பல இடங்களுக்கும் பயணம் செய்வதில் கழித்தவர். ‘இந்தி பயண இலக்கியங்களின் தந்தை’யாக அறியப்பட்டு பயணநூலுக்காகச் சாகித்திய அக்காதமி விருதும் (1958), பத்மபூஷன் (1963) விருதும் பெற்றார். பலமொழிகள் அறிந்திருந்தும், அவரது தாய்மொழி போஜ்புரியாக இருந்தும் இந்தியை மட்டுமே தான் அதிகம் எழுதும் மொழியாக வைத்துக் கொண்டவர். நூற்றுக்கும் மேலான நூல்களை எழுதியவர். அவருக்கு இந்திப் பல்கலைக் கழகங்களில் ஒரு இருக்கைகூட அமைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

            இந்தோ-ஐரோப்பியச் சமூகத்தினர் அல்லது ஆரியர் என அறியப்படுவோர் இந்தியாவிற்கு வருகை தந்த வரலாறுதான் இந்த நூலின் பொருண்மை. எகிப்தியமெசபட்டோமிய, சிந்துசமவெளி நாகரிக மக்கள் இந்த ஆரியர் என்ற இனப் பிரிவுக்கும் முன்னரே நன்கு நாகரிகமடைந்தவர். இருப்பினும் இந்தியாவை நோக்கிப் பயணித்த ஆரிய இனத்தின் பரவல் இந்திய வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தை விளக்கும் நோக்கில் இவர்களை மட்டும் முதன்மைப்படுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஆரியரின் இப்பயணம் யுரேசிய ஸ்டெப்பி புல்வெளியில், ரஷ்யாவின் தாய் ஆறு என்று அழைக்கப்படும் வால்கா ஆற்றின் கரையில் துவங்கி, இந்தியர்கள் தாய் எனப்போற்றும் கங்கை ஆற்றின் கரையில் நிலை கொள்கிறது. ஐரோப்பியக் கண்டத்திலிருந்து 10,000 கிலோமீட்டர் இடைவெளியைக் கடந்து இந்தியாவில் குடியேறிய இவர்களது வரலாறு தனித்தனியான 20 சிறுகதைகளாக, காலக் கோட்டில் கிமு 6000 முதற்கொண்டு 20 ஆம் நூற்றாண்டுவரை ஒரு 8,000 ஆண்டு காலகட்டத்தை உள்ளடக்கும் வகையில், தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக அமைத்து, கால எந்திரத்தில் பயணிப்பது போலக் காட்சிகளாக நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

            காலம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் கதை மாந்தர் உரையாடல் வழியாக ஒரு வரலாற்று நிகழ்வு கதை வடிவில் உருவெடுக்கிறது. வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த மாற்றங்கள் கதைவடிவில் உருவெடுத்துள்ளன எனலாம். ஒவ்வொரு கதையும் அக்கால மக்களின் நடை, உடை, வாழ்வியல்முறை ஆகியவற்றைக் கண்முன் நிறுத்தும் விதமாகவும், சமுதாய, அரசியல், பொருளாதார, பண்பாட்டின் பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் அக்கால வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னிப்பிணைந்தும் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் சமூகவியல், மானுடவியல், வரலாறு, புவியியல், இலக்கியம் எனப் பல துறைகளையும் நூலின் கரு தொட்டுச் செல்கிறது. ஒரு தலைமுறை என்பது 22-25 ஆண்டுகள் என்ற அடிப்படையில் இத்தனை தலைமுறைக்கு முன்னர் என ஆசிரியர் கதைகளின் துவக்கத்தில் சில இடங்களில் குறிப்பிடுகிறார். குறிப்பாக முதல் கதை சுமார் 361 தலைமுறைகளுக்கு முன்னர் எனக் குறிப்பிடுகிறார். நூல் இரு பாகங்களாகவும், ஒவ்வொரு பாகமும் 10 அத்தியாயங்களும் கொண்டுள்ளது. இரண்டாம் பாகத்திற்குப் பிறகு இன்றைய இந்தியாவில் நாம் படித்த வரலாற்றுச் செய்திகள் கதைகளாக உருமாறியுள்ளன.

முதல் பாகம்:
1. நிஷா (கி.மு.6000)
2. திவா (கி.மு.3500)
3. அமிர்தாஸ்வன் (கி.மு.3000)
4. புருகூதன் (கி.மு.2500)
5. புருதானன் (கி.மு.2000)
6. அங்கிரா (கி.மு.1800)
7. சுதாஸ் (கி.மு.1500)
8. பிரவாஹணன் (கி.மு.700)
9. பந்துல மல்லன் (கி.மு.490)
10. நாகதத்தன் (கி.மு.335)

இரண்டாம் பாகம்:
11. பிரபா (கி.பி.50)
12. சுபர்ண யௌதேயன் (கி.பி.420)
13. துர்முகன் (கி.பி.630)
14. சக்ரபாணி (கி.பி.1200)
15. பாபா நூர்தீன் (கி.பி.1300)
16. சுரையா (கி.பி.1600)
17. ரேக்கா பகத் (கி.பி.1800)
18. மங்கள சிங் (கி.பி.1857)
19. ஸஃப்தர் (கி.பி.1922)
20. சுமேர் (கி.பி.1942)  

            காந்தியின் 1942ஆம் ஆண்டின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்துடனும் இரண்டாம் உலகப்போர் (1939-1945) நடந்துகொண்டிருக்கும் காலத்தில் நூல் முடிவடைகிறது. நூல் வெளியான காலத்தில் ஹிட்லர், முசோலினி ஆகியோர் அச்சு நாடுகள் என்ற ஒரு கூட்டாக ஜப்பானுடன் இணைந்து இன்னமும் போரில் ஈடுபட்டு நேச நாடுகளுடன் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் காலம்.  பெர்ல் ஹார்பர் தாக்குதல் காரணமாக அமெரிக்காவும் போர்க்களத்தில் இறங்கிவிட்ட நேரம் அது. ஆனால், நாகசாகி ஹிரோஷிமா மீது அணுகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இரண்டாம் உலகப் போர் இன்னமும் முடிவுக்கு வராத காலகட்டத்தில் வெளியான வரலாற்றுப் புனைவு நூல்.

            நூலின் கருத்துகளிலும், பாத்திரங்களின் உரையாடல்களாக வெளிவரும் கருத்துகளிலும் ராகுல சாங்கிருத்யாயனின் கோணங்கள் வெளிப்படுகின்றன. ஆரியர் வருகையால் வந்த வர்ணாசிரம தர்மம், சாதிப்பிரிவினைகள், தீண்டாமை ஆகியவை குறித்து அவருக்குள்ள வருத்தம்; புரோகிதர்களும் அரசர்களும் இணைந்து கூட்டாக தங்களுக்குள் ஒருவர் நலனுக்காக ஒருவர் உதவிக்கொண்டு உழைக்கும் எளிய மக்களைச் சுரண்டும் கட்டமைப்பின் மேல் அவருக்குள்ள வெறுப்பு, வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் போன்றவற்றின் துணைகொண்டு வைதீக சமயம் எளியோர் மீது ஆதிக்கத்தைக் கட்டமைத்த அறமற்ற செயல்முறை மீது குமுறல், வணிகம் என்ற போர்வையில் நாட்டு மக்களின், நாட்டின் செல்வ வளத்தை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளும் தன்னலவாதிகளான வணிகர்கள் மீதும், அயல்நாட்டின் வணிக அமைப்புகள் மேலும் கொண்ட கசப்புணர்வு, பெண்களை அடிமைகளாகவும், விடுதலையற்ற நிலையிலும், உடன்கட்டை போன்ற உயிரையும் பறிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டிருந்த பெண்ணடிமை அதிகார முறையில் அவர் காட்டிய எதிர்ப்பு எனவும் பல கருத்துக்களை இந்நூல் வழியாக அறிய முடிகிறது.

            அவ்வாறே ராகுல சாங்கிருத்யாயனின் சமய நல்லிணக்க ஆதரவு எண்ணமும், புத்தரின் கொள்கையில் கொண்ட ஈடுபாடும், பொதுவுடைமை கொள்கைக்கு அவருடைய ஆதரவும் கதாபாத்திரங்கள் வழி தெரிவிக்கப்படுகிறது. காந்தி விடுதலைப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு சென்றதை மதிப்பவராக இருந்தாலும், ஆதிதிராவிடர்களுக்கான தனி வாக்காளர் தொகுதி தேர்தல் இடவொதுக்கீட்டை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்து அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுத்தது, இராட்டையில் நூல் நூற்றல் போன்றவை அறிவியல் காலத்திற்கு ஒவ்வாத பிற்போக்கு நிலை என்றும் கருதியதும் வெளிப்படுகிறது. பாகிஸ்தான் தனிநாடு என மக்கள் பிரிய விரும்பினால் அவர்கள் கருத்து மதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்திருக்கிறார் ராகுல சாங்கிருத்தியாயன்.

            வரலாற்றைப் பாடமாகப் படிக்காமல், நிகழ்வுகளின் பின்னணியில் கதைகளாகப் படிக்கும் பொழுது வரலாற்றின் தொன்மையும் அதன் தொடர்ச்சியும் தெளிவாகப் புரிகின்றது, போராட்ட நிகழ்வுகளின் காரணங்களும் விளங்குகிறது. இது வரலாறா அல்லது புனைவுக்கதையா என்று வேறுபடுத்திக் காண இயலாத அளவு நூலை எழுதியுள்ள முறை ஆசிரியரின் திறமைக்குச் சான்று. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற எண்ணம் தோன்றாவண்ணம் மொழியாக்கம் செய்தவரும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது இந்தியர் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் படித்திருக்க வேண்டிய நூல். “ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்” என சி.என். அண்ணாதுரை பரிந்துரைத்த நூல். இந்நூலைப் படித்து முடித்த பின்னர், இதனை நாம் இத்தனைக்காலம் படிக்காமல் விட்டுள்ளோமே என்று வருந்தவும் வைத்தது என்பதும் உண்மை. எத்தனைமுறை வேண்டுமானாலும் படிக்கலாம்.


நூல்:
வால்காவிலிருந்து கங்கை வரை
இந்தியில் – ராகுல சாங்கிருத்தியாயன் (1943)
தமிழில் மொழியாக்கம் – என்.ஸ்ரீதரன் (2016)
கவிதா வெளியீடு, முதல் பதிப்பு
Rs. 400







தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)




No comments:

Post a Comment