Saturday, May 11, 2019

பொள்ளாச்சி - உடுமலைப் பகுதியில் ஒரு தொல்லியல் களப்பயணம்

——    துரை.சுந்தரம்


முன்னுரை:
            கோவையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் குமரவேல் என்னும் இளைஞர். அண்மையில் என்னைத் தொடர்புகொண்டு பொள்ளாச்சிப் பகுதியில் நாட்டுக்கல் பாளையத்தில் நடுகல் சிற்பம் ஒன்றில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்துள்ளதாகவும், கல்வெட்டு எழுத்துகளைப் படித்துச் செய்தியை அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டார். இவர், கோவைப்பகுதியில் தொல்லியல் தடயங்களைத் தேடிக் கண்டுபிடித்து வெளிப்படுத்தும் ஆர்வமிக்க இளைஞர்.  இவர், அண்மையில், கோவை-தொண்டாமுத்தூரை அடுத்துள்ள விராலியூரில் மலைப்பகுதியில் இருக்கும் பாறை ஓவியங்களைக் கண்டுபிடித்தவர். இருபத்தைந்து ஆண்டுகளாகப் பாறை ஓவியங்களை ஆய்வு செய்து வருகின்ற தொல்லியல் துறை அறிஞர் காந்திராஜன் அவர்களைக் கொண்டு விராலியூர் பாறை ஓவியங்களை ஆய்வு செய்வித்தவர். இவ்வோவியங்களின் கண்டுபிடிப்பு பற்றி அண்மையில் பல்வேறு நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவ்வோவியங்கள் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை என்பது குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் களப்பயணம்:
            வரலாற்று ஆர்வலர் குமரவேலுடனும் அவரது நண்பர் சுதாகருடனும் பொள்ளாச்சிப் பகுதியில் தொல்லியல் ஆய்வு நோக்கத்துடன் அண்மையில் பயணம் புறப்பட்டோம். 

நாட்டுக்கல்பாளையம்:
            பொள்ளாச்சி நகருக்கு மிக அண்மையில் ஒரு சில கல் (கிலோ மீட்டர்) தொலைவில் அமைந்துள்ள ஊர் நாட்டுக்கல்பாளையம்.  அதன் பெயரே அவ்வூரின் பழமையை எடுத்துக்காட்டுகிறது எனலாம்.  தொல்லியல் சின்னங்களுள் நடுகற்கள் முதன்மையானவை. சங்ககாலம் தொட்டுக் கல்லெடுத்து வழிபடும் மரபினைக் காண்கிறோம்.  கல் நட்டு வழிபடுவதைக் கல் நாட்டுதல் என்றும் கூறுவது வழக்கம். நடுகற்கள் நிறைந்த பகுதிகள் இருக்கும் சில ஊர்களுக்கும் அதன் அடிப்படையில் நாட்டுக்கல்பாளையம் என்னும் பெயர் அமைந்துவிடுகின்ற நிகழ்வையும் காணலாம். கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நாட்டுக்கல்பாளையம் என்னும் பெயரில் வழங்கும் ஊர்கள் இரண்டு உள்ளன. ஒன்று, பொள்ளாச்சியில் உள்ள – நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஊர். இன்னொன்று, காங்கேயத்துக்கு அருகில் உள்ளது. இவ்விரண்டு ஊர்களிலுமே பெருங்கற்காலச் சின்னங்கள் உள்ளதாக அறிகிறோம்.

நாட்டுக்கல்பாளையத்தில் ஒரு நடுகல்:
            நாட்டுக்கல்பாளையம் ஊருக்குள் நுழையும் முன்னரே அதன் எல்லையில் பெருங்கற்காலச் சின்னத்தை நினைவூட்டும் கல்திட்டை (DOLMEN) அமைப்பு காணப்படுகிறது. பெரிய கற்பலகைகளைச் சுவர் எழுப்பியதுபோல் நிறுத்திக் கூரைப்பகுதியிலும் பெரும் பலகைக் கல் ஒன்றைக் கிடத்தி அமைக்கப் பட்டிருக்கும் திட்டையே இது.  ஆனால், இங்கேயுள்ள கல்திட்டை அதன் முழு உருவமைப்புடன் காணப்படவில்லை. பலகைக் கற்கள் கலைந்துள்ள நிலையில், பலகைக் கற்களின்மீது சாய்ந்த நிலையில் ஒரு பழஞ்சிற்பம் காணப்படுகிறது. இந்த நடுகற்சிற்பம், திருப்பூரில் இயங்கும் வீரராஜேந்திரன் வரலாற்று மையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி, சதாசிவம் ஆகியோரால், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டுள்ளது.  அடுத்து, மேற்சொன்ன இளைஞர் இருவரும் இப்பகுதியை ஆய்வு செய்தபோது, மேற்படி நடுகற்சிற்பத்தில் எழுத்துப்பொறிப்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது மேற்கொண்ட ஆய்வு. 

நாட்டுக்கல்பாளையம் நடுகல் சிற்பம்

நடுகல்லின் தோற்றம்:
            நடுகல்லில் ஆணும் பெண்ணுமாக இருவரின் உருவங்கள் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. இருவரும் கை கூப்பியவாறு காணப்படுகின்றனர். விரல்கள், சற்றே விரிந்த நிலையில் தோற்றமளிக்கின்றன. ஆணின் தலைப்பகுதியில் தலைப்பாகை அமைப்பு உள்ளது. பெண்ணின் தலைப்பகுதி அவளுடைய வலப்பக்கத்தில் கொண்டை முடிந்துள்ளவாறு உள்ளது. இருவருமே காதணிகள், கழுத்தணிகள் அணிந்துள்ளனர். அதுபோலவே, இருவரும் தோளிலும் முன்கைகளிலும் வளைகள் அணிந்துள்ளனர்.  பெண்ணின் காலில் ஓர் அணிகலன் இருப்பது புலப்படுகிறது. இருவரின் ஆடைகளும் முழங்காலுக்குக் கீழ் வரை காட்டப்பட்டுள்ளன. ஆணின் ஆடைக் கச்சில் எந்தவொரு ஆயுதமும் காட்டப்படவில்லை. எனவே, சிற்பத்தில் உள்ள ஆண் உருவத்தை ஒரு வீரன் என அடையாளப்படுத்த இயலாது. (கல்வெட்டினைப் படித்த பிறகு, ஆண் சிற்பம் ஒரு சமூகத் தலைவரான ஊர்க்கவுண்டராக  இருக்கக் கூடும் என்பதாகக் கருதப்படுகிறது.) சிற்பப் பகுதி அமைந்துள்ள அந்த ஒற்றைக்கல்லின் அடிப்பகுதியை ஒரு நீள்சதுர வடிவத்தில் பீடமாக அமைத்து, அப்பீடத்தின் மீது சிற்ப உருவங்களின் கால்கள் நின்றிருப்பன போல் வடித்திருக்கிறார்கள். மொத்தத்தில், சிற்பத்தொகுதி மிகவும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் உள்ளது.  நடுகல் சிற்பத்தை வெறும் நிலத்தில் புதைத்து வைக்கும் பாணியில் அமைக்காமல், தனிக்கல்லால்  ஆன ஒரு பீடப்பகுதியை அமைத்து  அதில் திருமஞ்சன நீர் வெளியேறும் வகையில் வடிகால் ஒன்றையும் வெட்டியிருக்கிறார்கள். பலகைக் கல்லில் சிற்பத்தின் புடைப்புப் பகுதியைத் தவிர்த்த வெற்றிடங்களில் எல்லாம் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

நடுகல் சிற்பம்-அண்மைத்தோற்றம்-படியெடுக்கும் முன்னர்

எழுத்துப்பொறிப்பைப் படித்தல்:
            நடுகற்சிற்பம் வழிபாட்டில் இருப்பதால் எண்ணெய் பூசப்பட்டு இருந்தது. இளைஞர் இருவரும் இரும்பு புருசு கொண்டு எண்ணெய்ப் பூச்சினை அகற்றினார்கள். சிற்பப்பகுதியும் எழுத்துப்பொறிப்பும் தெளிவான தோற்றத்தை அடைந்தன. இருப்பினும் இந்த நிலையில் எழுத்துகளைப் படிக்க இயலவில்லை. வழக்கம்போல், மாவு பூசித் துடைத்தெடுத்தோம்.  இந்நிலையில் தெரிந்த எழுத்துகளைப் படித்து அறிந்த கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு:

நடுகல் சிற்பம் -  தூய்மைப்பணியில் ஆர்வலர்கள்


நடுகல் சிற்பம்-அண்மைத்தோற்றம்-படியெடுத்த பின்னர்

கல்வெட்டுப்பாடம்:
            1    . . . . . . . . .   புரட்டாசி ௴ 25 தே
            2    தியும் செவ்வாய்
            3    க்கிழமையும் திருவாதி[ரை]
            4    நச்ச்செத்திரமு
            5    ம் பெற்ற
            6    சுப      தி
            7    னத்
            8    தில் நாட்டுக்கல் பா
            9    ளையத்திலே யிரு
            10  க்கும் வேழாழன்
            11  வம்முசத்தில் ஓதா
            12  ழ கோத்திரம் லிங்கா
            13  கவுண்டன் மகன்
            14  சிங்கா கவுண்டன் அவருடைய பெண்
            15  சாதி செம்பம்மாள் இவர்கள் ரெண்
            16  டு பேரும் தெய்வீகமானதுக்குச் செய்
            17  து வைத்த கல்ச்சிலை  வெங்கி(டா)சல..

கல்வெட்டுச் செய்திகள்:
            கல்வெட்டின் தொடக்கப்பகுதியில் உள்ள எழுத்துகள் தெளிவாகப் புலப்படவில்லை. எனவே, தொடக்கப்பகுதியில் குறிப்பிடப்பெறும் தமிழ் வியாழ வட்ட ஆண்டின் பெயரை அறிய இயலவில்லை. சில கல்வெட்டுகளில் எழுதப்படுவது போன்று கலியுக ஆண்டைக் குறிக்கும் எண்களோ, சாலிவாகன ஆண்டைக் குறிக்கும் எண்களோ எழுதப்படாததால் கல்வெட்டின் காலம் தெரியவில்லை. எனினும், சிற்ப அமைப்பு, எழுத்தமைதி ஆகியனவற்றின் அடிப்படையில் கல்வெட்டின் காலம் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதி எனக் கொள்ளலாம். கல்வெட்டில் மாதம், கிழமை, நாள் (நட்சத்திரம்) ஆகியவற்றின் பெயர்கள்  - புரட்டாசி,  செவ்வாய், திருவாதிரை -  கொடுக்கப்பட்டுள்ளன. வம்முசம் என்பது வம்சம் என்பதன் திரிபு. நாட்டுக்கல் பாளையத்துச் சிங்கா கவுண்டன் மற்றும் அவருடைய மனைவி செம்பம்மாள் ஆகிய இருவரும் “தெய்வீகமானதுக்குச் செய்து வைத்த கல்ச்சிலை” என்று கல்வெட்டு கூறுகிறது.

மூத்தோர் வழிபாடு:
            பெரும்பாலும் மிகுதியாக நடுகற்கள்,  ஆநிரைக் (கால்நடைகள்) காவலில் புலியுடன் சண்டையிட்டு இறந்துபடும் வீரர்களுக்கும், போரிலும், பூசல்களிலும் இறந்துபடும் வீரர்களுக்கும் எடுக்கப்படும்.  ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கொங்குப்பகுதியில் காணப்பெறும் புலிகுத்திக்கல் சிற்பங்களும்,  வீரனின் உருவத்தைத் தனியாகச் செதுக்கிய சிற்பங்களும், ஆணும் பெண்ணுமாக இருவரின் உருவங்களைச்  செதுக்கிய சிற்பங்களும் இவ்வகையான நடுகற்கள் ஆகும்.  எண்ணிக்கையில் குறைவாகச் சில நடுகற்கள் நினைவுக்கற்களாக அமைவதுண்டு. அவ்வாறமைந்த நினைவுக்கல்லே நாட்டுக்கல்பாளையத்து நடுகல். இவ்வகை நினைவுக்கற்களில்,  முன்னோர் வழிபாட்டு மரபே பொதிந்திருக்கும்.  அது போன்ற மூத்தோர் வழிபாட்டுக்குச் சான்றாகத்தான் நாட்டுக்கல்பாளையத்து நடுகல் சிற்பம் அமைந்துள்ளது. இந்த நடுகல்லை, கணவனும், மனைவியும் இறந்த பின்னர், அவர்கள் பரம்பரையினர் (மக்களும், பேரன்களும்) எடுப்பித்ததாகக் கொள்ளலாம். இறந்துபோனவரின் பெயர் சிங்கா கவுண்டர் எனவும், அவரது தந்தை பெயர் லிங்கா கவுண்டர் என்பதாகவும் அவர்கள் வேளாள வம்சத்தில் ஓதாள கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கல்வெட்டு குறிக்கிறது. நினைவுக் கல் எடுப்பித்தவர் வெங்கிடாசலம் என்பதாகக் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.  நாட்டுப்புற ஊர்களில் நிலக்கிழாராக இருக்கும் ஊர்த் தலைவர் -  ஊர்க்கவுண்டர்  - ஒருவருக்கு எடுக்கப்பட்ட இந்த நினைவுக்கல் மூத்தோரை வழிபடும் மரபின் தொல்லியல் எச்சமாக விளங்குகிறது எனலாம்.

தேவனூர் புதூர்:
            அடுத்து, இளைஞர்கள் அழைத்துச் சென்ற இடம் தேவனூர் புதூர்.  அங்கு, மாலக்கோயில் என்றழைக்கப்படும் ஒரு சிறு கோயில். அதில் உள்ள ஒரு புலியின் சிற்பத்தில் எழுத்துப்பொறிப்பு உள்ளதாகக் கட்டுரை ஆசிரியரிடம் மேற்படி இளைஞர்கள் கூறினர்.  நேரில் சென்ற பிறகு, அக்கோயிலுக்குக் கட்டுரை ஆசிரியர் 2013-ஆம் ஆண்டிலேயே சென்று வந்ததும், அக்கோயில் பற்றிய செய்தியை நாளிதழ் மூலம் வெளிப்படுத்தியதும் நினைவுக்கு வந்தது. இக்கோயில் பற்றிய அச்செய்திக் குறிப்புகள் வருமாறு:

கொங்குநாட்டில் கால்நடைச் சமுதாயமும் புலிகுத்திக் கற்களும்:
            கொங்கு நாடு பழங்காலத்தில் காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தைப் பெருமளவில் கொண்டிருந்தது. எனவே, கொங்குச்சமுதாயமும் நீண்ட காலம் கால்நடை வளர்ப்புச் சமுதாயமாகவே அமைந்திருந்தது. வேளாண்மை பெருமளவில் இல்லை. பத்து-பதினொன்றாம் நூற்றாண்டில் சோழர் கொங்குநாட்டைக் கைப்பற்றிக் கொங்குச்சோழரைக்கொண்டு ஆட்சி நடத்தியபின்னரே வேளாண்மை பெருகியது.  கால்நடை வளர்ப்பில் அவற்றைப் பேணுதல் என்பது தலையாய பணி. அவற்றை அடைத்து வைக்கப் பட்டிகள் இருந்தன. ஆனால், ஊரைச் சூழ்ந்துள்ள காடுகளிலிருக்கும் புலிகளால் கால்நடைகளுக்கு மிகுந்த ஆபத்தும் இருந்தது. புலிகளால் வேட்டையாடப்படுவதினின்றும் கால்நடைகளைப் பாதுகாக்க வீரர்கள் காவலிருந்தனர். அவ்வீரர்கள் காவல் பணியின்போது புலிகளை எதிர்கொண்டு அவற்றுடன் சண்டையிட்டுக் கால்நடைகளைக் காத்தனர். சிலபோது, வீரர்கள் இறந்துபடுதலும் நிகழும். அவ்வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஊர்மக்கள் அவர்க்குக் கல் நாட்டி வழிபாடு செய்தனர். அவ்வகைக் கற்களில் புலியுடன் போரிடும் தோற்றத்தில் வீரனின் சிற்பங்களை வடித்தனர். கோவைப்பகுதியில், இவ்வாறான நடுகற்கள் புலிகுத்திக்கல் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. சில ஊர்களில், இவற்றை நரிகடிச்சான் கல் எனவும் அழைக்கின்றனர். புலியைப் பெருநரி எனப் பண்டு அழைக்கும் வழக்கம் காடு சார்ந்த குடிகளிடையே இருந்துள்ளது.  எனவே, நரிகடிச்சான் கல் என்பது, குழூஉக்குறியின் பின்னணியில் அமைந்ததொரு பெயராகலாம்.

தேவனூர் புதூர் நரிகடிச்சான் கோயில்:
            தேவனூர் புதூரில், நவக்கரை பாலத்தருகில் மேற்சொன்ன நரிகடிச்சான் கோயில் அமைந்துள்ளது. சாலையோரத்தில் ஒரு வேப்பமரத்தின் அருகில் அமைந்துள்ள இக்கோயில் ஆறடி நீளமும் ஐந்தடி அகலமும் கொண்ட ஒரு சிறிய  கருவறை அமைப்பைக்கொண்டுள்ளது. கருவறைபோன்ற இந்தக்கட்டுமானம் முழுதும் கற்களால் அமைக்கப்பெற்றது. கருவறையின் வாயில் போன்ற முன்புறத்தில், ஐந்தடி உயரமுள்ள இருகற்கள் இருபுறம் நிற்கவைக்கப்பட்டு, நடுவில் ஒருவர் உள்ளே நுழையுமளவு வாயில் திறப்பு அமைக்கப்பட்டிருந்தது. கருவறையின் இரு பக்கவாட்டுப்பகுதிகளிலும் பின்புறத்திலும் ஐந்தடி உயரமுள்ள மூன்று மூன்று கற்கள் இணைக்கப்பட்டிருந்தன. கருவறையின் கூரைப்பகுதி சற்றே பெரிய அளவிலான ஐந்தரை அடி உயரமுள்ள மூடுகற்கள் மூன்றைக்கொண்டு அடுக்கப்பட்டிருந்தது. எல்லாக்கற்களும் சுண்ணாம்புக் காரைப்பூச்சு கொண்டு நன்கு இணைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் புலிகுத்திக்கற்கள் திறந்த வெளி நிலத்தில் ஒரு பலகைகல்லில் புடைப்புச் சிற்பமாகவே காணப்படும். ஆனால், இங்கே பெரிய கற்களாலான ஒரு கட்டுமானத்துக்குள் சிற்பம் காணப்படுவது சிறப்பானது. கருவறையைச் சுற்றிலும் திறந்த வெளியும் அதை அடைத்தவாறு கற்களை அடுக்கிச் சுற்றுச்சுவரும் அமைத்திருக்கிறார்கள். சுற்றுச்சுவர் கட்டுமானத்திலும் முன்புறத்தில் இரு கல் தூண்களைக்கொண்டு ஒரு வாயிலை அமைத்திருக்கிறார்கள்.


நரிகடிச்சான் கோயில் - முகப்புத் தோற்றம்


சுற்றுச்சுவரோடு ஒரு தோற்றம்

            கற்களால் அமைந்த மேற்கண்ட அறைக்குள் மூன்று அடி நீளமும் இரண்டரை அடி உயரமும் கொண்ட புடைப்புச்சிற்பத்தில், வீரன் ஒருவன் தன் இடது கையால் புலியின் வாய்க்குள் சிறிய வாளைப் பாய்ச்சியவாறும், தன் வலது கையால் நீண்டதொரு வாளைப் புலியின் வயிற்றுப்பகுதியில் பாய்ச்சியவாறும் காணப்படுகிறான். இரண்டு வாள்களுமே புலியின் உடலைத் துளைத்து உடலுக்கு மறுபுறம் வெளிவந்துள்ளவாறு உள்ளன. புலி தன் பின்னங்கால்களால் நின்றவாறு முன்கால்களைத் தூக்கி வீரனின் வலது கையைப்பற்றிக்கொண்டு தாக்கும் நிலையில் காணப்படுகிறது. வீரனின் கால்களும், புலியின் பின்னங்கால்களும் நாம் பார்க்க இயலாதவாறு பலகைச் சிற்பம் சற்றே நிலத்தில் புதைந்துபோய்விட்டது. வீரன் தலையில் தலைப்பாகை இருப்பதுபோல் தோன்றுகிறது. தலையின் வலப்பக்கம் கொண்டை காணப்படுகிறது. கழுத்திலும் காதிலும் அணிகள் உள்ளன. இடையில் ஆடைக்கச்சு காணப்படுகிறது. இடைக்கச்சில் குறுவாள் ஒன்று இருப்பதுபோல் புலப்படுகிறது. நீண்ட நாள்களாகச் சிற்பத்துக்கு எண்ணெய் பூசப்பட்டுவருவதன் காரணமாகச் சிற்ப நுணுக்கங்களை அறிய முடியவில்லை. வீரனுக்கும் புலிக்கும் இடையில் ஒரு நீண்ட தண்டு காணப்படுகின்றது. எண்ணெய்ப்பூச்சில் அதன் வடிவம் தெளிவாகப் புலப்படவில்லை. 

கோயில் அறைக்கு வெளியே தனிக்கல்லில் புலியின் சிற்பம்:
            கோயில் வளாகத்தில் புலியின் சிற்பம் தனிக்கல் ஒன்றில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டில் கட்டுரை ஆசிரியர் பார்த்தபோது இந்தச் சிற்பத்திலும் முழுதும் எண்ணெய்ப்பூச்சு இருந்தமையால் எழுத்துப் பொறிப்புகள் இருந்தமைக்கான அறிகுறிகள் புலப்படவில்லை.  ஆனால், இன்றைய  நிலையில் ஆர்வமிக்க இளைஞர்கள் எழுத்துப்பொறிப்பை இனம் கண்டுள்ளனர்.

கோயில் அறைக்கு வெளியே தனிக்கல்லில் புலியின் சிற்பம்


புலிச் சிற்பம் - அண்மைத்தோற்றம்

புலிச்சிற்பத்தில் எழுத்துப்பொறிப்பு:
            தற்போதும் புலிச் சிற்பத்தில் எண்ணெய்ப் பூச்சு மிகவிருந்தது. இளைஞர் இருவரும் நீண்ட நேர உழைப்புக்குப் பின்னர் எண்ணெய்ப் பூச்சை அகற்றி மாவு பூசினர். எட்டு வரிகள் கொண்ட கல்வெட்டு.

கல்வெட்டின் பாடம்:
            1    சார்வரி வரு. ஆனி ௴ . . .
            2    ம(லை)யாண்டி கவுண்டன்  ம
            3    கன் ஆண்டி கவுண்டன்
            4    மகன் மலையாண்டி
            5    க்கவுண்டன் மால
            6    கோவிலுக்கு
            7    வைத்த
            8    உபையம்

புலிச்சிற்பத்தில் எழுத்துப்பொறிப்பு

            நரி கடிச்சான் கோயில் என்னும் பெயர் இக்கோயிலுக்கு இருப்பினும், மாலக்கோயில் என்னும் பெயரில் மக்கள் இக்கோயிலை வழிபடுகின்றனர். இந்த வழக்கு, கல்வெட்டிலும் காணப்படுகிறது. “மால் கோயில்” என்பதே மாலக்கோயில் என்று மக்கள் வழக்கில் மருவியுள்ளது எனலாம். கால்நடைகளை வளர்ப்போர் தம் கால்நடைகளின் நலம் வேண்டி வழிபடும் கோயிலே மால் கோயில். புலிச் சிற்பத்தைச் செய்து வைத்தவர் மலையாண்டிக்கவுண்டன் என்பது கல்வெட்டுக் கூறும் செய்தி. பாட்டன் பெயரை பெயரனுக்கு  வைக்கும் மரபு அரசர் காலம் தொட்டு அண்மை நூற்றாண்டு வரை தொடர்ந்து வந்துள்ளதை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கல்வெட்டில் சார்வரி ஆண்டு குறிக்கப்படுகிறது. இது கி.பி. 1840, கி.பி. 1900 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் பொருந்தும். எனவே, இந்தக் காலகட்டத்தில் புலிச்சிற்பம் செய்து வைக்கப்பட்டிருக்கலாம்.

கடத்தூர்:
தேவனூர் புதூரிலிருந்து அடுத்து நாங்கள் சென்ற இடம் கடத்தூர். உடுமலைக்கருகில் அமைந்துள்ள இவ்வூர் தென் கொங்கின் பழமையான ஓர் ஊராகும். 11-ஆம் நூற்றாண்டில், இப்பகுதி வீர கேரளர் ஆட்சியிலிருந்தது. 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து  கொங்குச் சோழர் ஆட்சியின்கீழ் வந்தது. வீரகேரளர் கல்வெட்டுகளில் தொடங்கி 13-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை – கொங்குச்சோழரில் இறுதி அரசனான மூன்றாம் விக்கிரம சோழனின் ஆட்சிக்காலம் கி.பி. 1299 வரை - இவ்வூரின் மருதீசர் கோயிலில் கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூரில் மருதீசர் கோவில் தவிரக் கொங்கவிடங்கீசுவரர் கோவிலும் உள்ளது.  இக்கோயிலிலும் கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் இக்கோயில் சிதிலமடைந்து இடிபாடுகளுடன் வழிபாடின்றிப் பாழ் பட்டுவிட்டது. மருதீசர் கோயில், வழிபாட்டில் நல்ல நிலைமையில் உள்ளது. கல்வெட்டுகளில் இவ்வூர் கடற்றூர் என வழங்கப்படுகிறது. கல்வெட்டுகளில் இறைவன் பெயர் மருதுடையார் என்பதாகும். மருத மரத்தின் சுயம்பு வடிவமே இலிங்கமாக வழிபடப்படுகிறது.  கோயிலின் பெயரைத் தற்போது “அர்ஜுனேசுவரர் கோயில்”  என்று வழங்குகிறார்கள்.  இடைக்காலத்தில் வழங்கிய அழகிய தமிழ்ப் பெயர்களில் பெரும்பாலானவை அப்பெயர்களை இழந்து சமற்கிருதமாக்கலில் தம் வேர்கள் அறியப்படாவண்ணம் குலைவுற்றுள்ளன.  மருத மரத்துக்குச் சமற்கிருதத்தில் அர்ஜுனம் என்று பெயர். மருதீசர் என்னும் இறைவன் அர்ஜுனேசுவரர் (அர்ஜுன ஈசர்)  ஆக மாறுகிறார்.  இந்தப் பொருள் அறியாதவர் சிலரால்,  மகாபாரதக் கதையில் வரும் பாண்டவன் ‘அர்ஜுனன்’  இந்த ஈசனை வணங்கியதால் இறைவன் பெயர் அர்ஜுனேசுவரர்  என்றானது என வாய்வழிப் புனைவுகள் எழத்தொடங்கினால் வியப்பதற்கில்லை.

கடத்தூர் மருதகாளியம்மன் கோயில்:
            கடத்தூரின் கோயில் இறைவன் பெயர் மருத மரத்துடன் பிணைந்துள்ளதால், மருத மரத்தொடர்பு இங்குள்ள அம்மன் கோயிலுக்கும் ஏற்பட்டது எனலாம். எனவே, மருத காளி.  இக்கோயிலின் வாயிலின் முன்புறம் இரண்டு நடுகற் சிற்பங்கள் உள்ளன. இவற்றிலும் எழுத்துப் பொறிப்புள்ளதாக மேற்குறித்த இளைஞர் இருவரும் கண்டறிந்து இதையும் படிக்கவேண்டும் என்னும் ஆர்வத்தால் களப்பணிப் பயணத்தில் கடத்தூர் மருதகாளியம்மன் கோயிலையும் சேர்த்தனர். இச் சிற்பங்களின் மீது பல காலமாகப் பூசப்பெற்ற எண்ணெய்ப் பிசுக்கினை அகற்றிய பின்னரே கல்வெட்டு எழுத்துகளைப் படிக்க இயலும் என்னும் காரணத்தால் அந்த வேலையில் இறங்கினர். நீண்ட நேர முயற்சிக்குப் பின் ஒரு சிற்பத்தின் மீதிருந்த எண்ணெய்ப் பற்றை மட்டுமே அகற்ற முடிந்தது.

மருதகாளியம்மன் கோயிலில் நடுகல் சிற்பம்-1

நடுகல் சிற்பம் – தோற்ற அமைப்பு:
            முதல் நடுகல் சிற்பத்தில் ஒரு வீரன், அவன் மனைவி என்பதாக இரு உருவங்கள் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.  வீரன் தன் வலது கையில் வாள் ஒன்றினை உயர்த்திப்பிடித்தவாறும், இடது கையில் கேடயம் ஒன்றினைப் பிடித்தவாறும் காணப்படுகிறான். அவன் மனைவி தன் இடது கையில் மதுக்குடுவை ஒன்றைத் தரையை ஒட்டிய நிலையில் பிடித்துக்கொண்டிருக்கிறாள். மடக்கி வைத்த அவளுடைய வலது கையில் உள்ள பொருள் தெளிவாகப் புலப்படவில்லை. அவளுடைய தலைக்கொண்டை வலப்பக்கமாகச் சாய்ந்த நிலையில் உள்ளது. வீரனின் தலைக்கொண்டை தலையின் மேற்புறம் உயர்த்திய நிலையில் உள்ளது. இருவருக்கும் பாதம் வரை ஆடைக்கட்டு காணப்படுகிறது. இருவருமே அணிந்துள்ள அணிகலன்களின் தோற்றம் தெளிவாயில்லை. பெண்ணின்  தலைப்பகுதிக்கும் ஆணின் கையிலுள்ள வாளுக்கும் இடைப்பட்ட பகுதியில் மூன்று வரிகள்; ஆணின் தலைப்பகுதியின் இடது புறமுள்ள இடைவெளியில் இரண்டு வரிகள்; பெண்ணின் இடது கைக்குக் கீழே, அவளின் பாதம் வரையுள்ள இடைவெளியில் நான்கு வரிகள்; ஆணின் கையில் உள்ள கேடயத்தின் கீழே அவனின் பாதம் வரையுள்ள இடைவெளியில் ஐந்து வரிகள் என எழுத்துப்பொறிப்புகள் காணப்படுகின்றன.  எழுத்துகள் தெளிவற்றும் திருத்தமற்றும் இருப்பதால் நடுகல் என்ன காரணத்தால் எடுக்கப்பட்டது என்னும் செய்தி அறியப்படவில்லை. எழுத்தமைதி, மிகப் பிற்காலப் பின்னணியைக் காட்டுவதாயுள்ளது. ஆனால் நடுகல் சிற்ப அமைதி அதன் காலம் 19-ஆம் நூற்றாண்டு எனக் கருதவைக்கின்றது.  எழுத்துப் பொறிப்புகளின் பாடம் - மேற்குறித்த நான்கு பகுதிகளின் வரிசையில் -  கீழ் வருமாறு:

            பகுதி-1:
            1     . . ள்ளியப்ப நம்பியார்
            2     மகன்  அமராபதி
            3     மருதக்கார்

            பகுதி-2:  (இனம் காண இயலவில்லை)
            1    . . . . . .
            2    . . . . . .

            பகுதி-3:
            1     . . .  ய்யாண . .
            2     (பேரன்) காளி
            3     கநத்தூர்
            4     ண

            பகுதி-4:
            1    அம
            2    ர  உ
            3    பையம்
            4    . . . .(றன்)

மருதகாளியம்மன் கோயிலில் நடுகல் சிற்பம்-2

களப்பணியின் இறுதியில் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு:
            மேற்கண்ட நடுகல் சிற்பத்திலிருந்த எழுத்துப் பொறிப்புகளைப் படிக்க எடுத்துக்கொண்ட பெரு முயற்சியின் பலன் குறிப்பிடும் படியாயில்லை என்பது களப்பணியின் இறுதிக்கட்டத்தில் ஒரு நிறைவற்ற நிலையில் எங்களை நிறுத்தியது.  தொல்லியல் தேடல் தொடர்புள்ள பயணங்களில் சில போது, தடயங்களோ, கல்வெட்டுகளோ கிட்டாமல் போவதுண்டு.  அதைப் பொருட்படுத்தாது தேடல் தொடர்வதில்தான் தொல்லியல் ஆர்வலரின் பணி அமையவேண்டும். நாட்டுக்கல் பாளையத்தில் காலை பத்து மணியளவில் தொடங்கிய பணி மருதகாளியம்மன் கோயிலில் முடியும் தறுவாயில் நேரம் மாலை ஆறு மணி ஆகிவிட்டிருந்தது.  அடுத்து நான்கு நாள்களில் வரவிருக்கும் சித்திரை மாதப்பிறப்பு தன் கடும் வெயிலை முன்கூட்டியே அனுப்பிவைத்தது என்று எண்ணுமாறு அன்று நிலவிய கடும் வெயிலால் களைத்துப்போயிருந்த நாங்கள் வீடு திரும்ப அணியமானோம். கோயில் பூசையாளரின் மகன் -  ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவன் -   ஆர்வத்தோடு எங்கள் களப்பணியைப் பார்த்துக்கொண்டிருந்தவன், மிக்க ஆர்வத்தோடு, கோயிலின் அர்த்தமண்டப நிலைக்காலில் எழுத்துகள் உள்ளன என்றும் அவற்றையும்  பார்த்துப் படித்துச் செய்தி சொல்லுங்கள் என வேண்டுகோள் விடுத்ததும் ஒரு திருப்பமே.  புதியதொரு கல்வெட்டினைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு. சென்று பார்த்தோம். இரண்டு கல்வெட்டுகள் அந்த நிலைக்காலிலிருந்தன என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது. அது மட்டுமல்ல; அவற்றில் ஒரு கல்வெட்டு, கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கல்வெட்டாய் அமைந்துவிட்டதில் நாங்கள் கொண்ட மகிழ்ச்சி எல்லையற்றது.  அர்த்தமண்டப நிலைக்காலில் கை விளக்கின் வெளிச்சத் துணையுடன் ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம். 

முதல் கல்வெட்டு – 11-ஆம் நூற்றாண்டு வீரகேரளர் கல்வெட்டு:
            முதல் கல்வெட்டு ஒரு பழங்கல்வெட்டு என்பது முதல் பார்வையிலேயே புலனாகியது. எழுத்தமைதி அவ்வாறானது. ஆனால், எழுத்தைப் பொறித்த சிற்பி எழுத்துகளுக்கு ஒரு திருத்தமான வடிவத்தைத் தந்திருக்கவில்லை. இடைக்காலக் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துக்குரிய முழு வடிவம் காணப்படவில்லை. ஒரு விரைவும், அக்கறையின்மையுமே அதில் காணப்பட்டது. இடது மூலையிலிருந்து வலது மூலைக்கு நேர் கோடாய்ச் செல்லாமல் வலப்புறம் செல்லச் செல்லச் சாய்மானமாய் எழுதப்பெற்றிருந்தது. கோயிலிலேயே முழுதும் படித்துவிட இயலவில்லை. கணினியில் கல்வெட்டுப்படத்தைப் பதிவிட்டுப் படித்ததற்கும் நிறைய நேரமும் சிந்தனையும் செலவாயின.

அரசன் யார்? – ஓர் ஆய்வு:
            எல்லாக் கல்வெட்டுகளையும் போல் இக்கல்வெட்டும் “ஸ்வஸ்திஸ்ரீ” என மங்கலச் சொல்லுடன் தொடங்கியது. அதனை அடுத்தும் இரண்டாவது வரியிலும் அரசன் பற்றிய செய்தி இருந்தது. ஆனால், எழுத்துகளை இனம் கண்டுகொள்வதில் சிக்கல் இருந்தது. கல்வெட்டுப் பகுதியின் தேய்மானமும் சிக்கலை ஏற்படுத்தியது. அரசன் பெயரில் “சோழ”  என்பது சற்றுப் புலனாயிற்று. முழுப்பெயரும் எளிதில் புலனாகவில்லை.  “ஸ்வஸ்திஸ்ரீ” என்னும் தொடக்கச் சொல்லை அடுத்துப் பொதுவாகக் கல்வெட்டுகளில் காணப்படும் சொல் “கோ”  என்பதாக அமையும். “கோ”  என்பது “அரசன்”, “அரைசன்”  என்பதற்கும் மேம்பட்ட ஒரு உயர்நிலைச் சொல் வழக்கு. அந்த யூகத்துடன் அணுகியபோது “கோ”  எழுத்தை வலிந்து பெற முடிந்தது. ”வீர”,  “ராய” , “தேவர்க்கு”   ஆகிய எழுத்துகள் சற்றே எளிதில் புலப்பட்டாலும், வலிந்து மேற்கொண்ட யூகத்தால் ”வீர நாராயண தேவர்க்கு”  என்று அரசனின் பெயரைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ”வீரநாராயண” , “சோழ”  ஆகிய இரு சொற்களைத் துணையாகக் கொண்டால், கொங்குப்பகுதியை ஆண்ட கொங்குச் சோழருள் ஒருவரான உத்தம சோழ வீரநாராயணன் என்னும் பெயர் முன் நின்றது. ஆனால், “கோ” என்பதையடுத்தும், ”சோழ” என்பதற்கு முன்னரும் அரசனின் பெயரில் இயற்பெயர் அமையும் இன்னொரு சொல்லில் உள்ள எழுத்துகள் “உத்தம” என்னும் எழுத்துகளோடு பொருந்தவில்லை.. அந்தச் சொல்லில் “தி”  ,  “சை”  ஆகிய எழுத்துகள் ஓரளவு புலப்படவே, மீண்டும்  வலிந்த யூகத்தின் அடிப்படையில் பெயர் ஆய்வுக்குள்ளானது. கல்வெட்டு காணப்பெறும் பகுதி தென்கொங்கு. தென்கொங்குப் பகுதியைக் கொங்குச்சோழர் தம் ஆட்சியின்கீழ் கொணர்வதற்கு முன்னர் அது வீரகேரள அரசர் மரபின் கீழ் இருந்தது. வீரகேரள அரசர் வரிசைப் பட்டியலைப் பார்க்கையில், “அதிசய சோழன் வீரநாராயணன்”  என்னும் பெயர் காணப்பட்டது.  எனவே, “அதிசய”  என்னும் இயற்பெயர்ப்பகுதி கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆய்ந்து பார்த்தபோது “தி-சை-ய”  எழுத்துகள் கிடைத்தன. “அ” எழுத்து முற்றிலும் காணப்படாவிட்டாலும், ”வ”  எழுத்தை யூகம் செய்து அறிந்துகொள்ள முடிந்தது. இப்போது அரசனின் பெயர் “கோவதிசைய சோழ வீரநாராயணன்”  என்றானது.  கல்வெட்டுகளில் “விஜய”  என்பது ‘முதலில் “விசய”  என மாற்றம் பெற்றுப் பின்னர் “விசைய”  என்ற மாற்றத்திலும் எழுதப்படுவதுண்டு. அது போலவே, “அதிசய” என்பது இக்கல்வெட்டில் “அதிசைய”  என எழுதப்பட்டிருக்கவேண்டும். முதலாம் இராசராசனின் பட்டப்பெயர் “கோ”-”இராசகேசரி”  என்பது புணர்ச்சியிலக்கண வழியில் “கோ-விராசகேசரி”  என அமைவது போல, இக்கல்வெட்டில் “கோ”-அதிசைய”  என்பது “கோவதிசைய”  என எழுதப்பெற்றிருக்கவேண்டும் என்னும் கருத்து முடிவு ஏற்பட்டது.  

            வீரகேரளர் ஆட்சியில் அரசனின் பெயர் இரு கூறுகளாகக் காணப்படும். பெயரின் பிற்பகுதி ஆட்சியில் உள்ள அரசனின் பெயராகவும், பெயரின் முற்பகுதி தந்தையின் பெயராகவும் அமையும். அவ்வகையில் இக்கல்வெட்டில் ஆட்சி அரசனின் பெயர் வீரநாராயணன் என்பதாகும்.

11-ஆம் நூற்றாண்டு வீரகேரளர் கல்வெட்டு

கல்வெட்டின் பாடம் :
            1    ஸ்வஸ்திஸ்ரீ கோவதிசைய சோ
            2    ழ (ஸ்ரீ) வீர நாராயண தேவ(ர்)க்கு திருவெ
            3    (ழுத்தி)ட்டுச் செல்லா நின்ற தி(ரு)ந
            4    (ல்லி)யாண்டு இருபத்திரண்டா
            5    (வது)  கடற்றூர் (முடிச்சி ந)க்க
            6    ந் செய்வித்த பெ . . . . . .
            7    . . . . . . . . . . . . . . . . . . .(யு)
            8    ம் . . . ய . . . . . (கை)யும் இ
            9    நிலை(யும்)  செ[ய்]வித்தே
            10   ந்  முடிச்சி நக்கந்

கல்வெட்டின் காலம்:
            கல்வெட்டில் காணப்படும் அரசன் தென்கொங்கை ஆண்ட வீரகேரளரில் அதிசய சோழனின் மகனான வீரநாராயணன் ஆவான். இவனுடைய ஆட்சிக் காலம் கி.பி. 1021-1040 என்பதாகக் ”கோவை மாவட்டக் கல்வெட்டுகள்”  நூலில் தரப்பட்டுள்ளது. கொங்கு நாட்டில் வீரகேரளர் ஆட்சி பற்றி ஆய்வு செய்த கோவை-தொல்லியல் துறை முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர் திரு இரா.ஜெகதீசன் அவர்கள் வீரநாராயணனின் ஆட்சிக்காலம் கி.பி. 1076-1093 என வரையறை செய்துள்ளார். நமது கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலம் இவ்வரசனின் இருபத்திரண்டாவது ஆட்சியாண்டு எனவிருப்பதால், கல்வெட்டின் காலம் கி.பி. 1098 ஆகும். அவ்வகையில் மருதகாளியம்மன் கோவில் கல்வெட்டு வீரநாராயணனின் ஆட்சிக்காலத்தை மேலும் ஐந்தாண்டுகள் கூட்டுவதாக அமைகிறது. அரசனின் ஆட்சியாண்டைக் குறிக்கையில் கல்வெட்டு, ”திருவெழுத்திட்டுச் செல்லாநின்ற திருநல்லியாண்டு”   எனக்கூறுகிறது.  ”திருவெழுத்திட்டு”  என்னும் தொடர், அரசன் பட்டப்பெயர் சூட்டியதைச் – அதாவது முடி சூடியதை – சுட்டும். “திருநல்லியாண்டு”  என்பது ஆட்சியாண்டைக் குறிக்கும்.

கல்வெட்டுச் செய்தி:
            கல்வெட்டு அமைந்துள்ள கோயில் கடத்தூர் மருதகாளியம்மன் கோயில்; கல்வெட்டு அமைந்துள்ள இடம் அர்த்த மண்டப நிலைக்கால். நிலையைச் செய்து கோயிலுக்குக் கொடையாக அளித்தவன் பெயர் நக்கன் என்பது.  நக்கன் என்பது ஒரு பொதுச் சிறப்புப்பெயர்.  கொடையாளியின் இயற்பெயர் “முடிச்சி”  என்பதாகக் கல்வெட்டு எழுத்துகள் வழி அறிகிறோம். இப்பெயர், சற்றுப் புதிதாக இருப்பதாலும், அரசனின் பெயராய்வு சரியானதாவென உறுதிப்படுத்திக்கொள்ளவும்  கல்வெட்டின் பாடத்தைப் படத்தோடு கல்வெட்டறிஞர்கள் திரு. சுப்பராயலு, திரு. பூங்குன்றன் ஆகியோரின் பார்வைக்கனுப்பிக் கருத்துக் கேட்டதில் கல்வெட்டுப்பாடம் சரியாக உள்ளதென்பது தெளிவாயிற்று. கல்வெட்டில், கடத்தூரின் பழம்பெயர் கடற்றூர் எனக் குறிப்பிடப்படுகிறது. திருநிலையோடு, வேறு சில உறுப்புகளையும் கொடையாளி செய்து அளித்துள்ளார் என 6,7,8  ஆகிய வரிகள் மூலம் அறிகிறோம். எழுத்துகள் புலப்படாமையால் அவை என்ன என்பது அறியப்படவில்லை. இருப்பினும், கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டுகளின் அடிப்படையில்,  திருநிலையோடு, போதிகை, முகவணை, உத்தரம், திருக்கதவு போன்றவற்றையும் கொடையாளி அளித்திருக்கலாம்.

கடத்தூர் மருதகாளியம்மன் கோயிலின் பழமை:
            வீரகேரளரின் கல்வெட்டு வாயிலாகக் கடத்தூர் மருதகாளியம்மன் கோயிலின் பழமையை அறிகிறோம்.  பெருஞ்சமயம் சார்ந்த சிவன் கோயில்கள் எழுப்பப்படும் முன்னரே, நாட்டார் வழிபாடு என்பது தாய்த்தெய்வ வழிபாடாகவே விளங்கியது எனலாம்.  கல்வெட்டு, மருதகாளியம்மன் கோயிலில்  கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் புதுப்பித்தல் பணி (திருப்பணி)  நடைபெற்றிருக்கக் கூடும் என்பதைச் சுட்டுகிறது எனலாம்.

இரண்டாம் கல்வெட்டு -  கி.பி. 1883 – ஆம் ஆண்டுக்கல்வெட்டு:
            வீரகேரளர் கல்வெட்டின் கீழேயே பிற்காலக் கல்வெட்டு ஒன்றும் பொறிக்கப்பட்டிருந்தது.  அதன் காலம், கல்வெட்டில் கூறப்பட்ட கலியாண்டு 4984, சுபானு வருடம் ஆகிய குறிப்புகளின்படி கி.பி. 1883 ஆகும். கோவில் காணியாளரான, சின்னவீரப்பட்டி ஊரைச் சேர்ந்த பவழ குல வெள்ளாளர் குப்புச்சாமிக்கவுண்டன் வகையறா மற்றும் காசனங்குடி ஊரின் கோவில் பூசாரிகள் ஆகியோர் மருதகாளியம்மன் கோயிலைப் புதுப்பித்துக் கொடுத்தனர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கி.பி. 1883-ஆம் ஆண்டுக்கல்வெட்டு

கல்வெட்டின் பாடம் :
            1    சுபஷிது
            2    கலி 4 9 8
            3    4 மேல் சு
            4    பானு ௵ தை
            5    ௴  கடத்தூற்
            6    மறுதகாளி
            7    அம்ம[ன்]  கோவி
            8    ல் காணியாழ்
            9    சின்ன வீரப
            10   ட்டி பகழ குலம்
            11   குப்புச்சாமிக்க
            12   வுண்டன் வகைய
            13   றா பேற் கிறாமம் கா
            14   சனங்குடி கோ
            15   வில் பூசாரிகழா
            16   லும் பழங்கெட
            17   வேலை புதுப்பித்தது
            18   உபயம்    

முடிவுரை:
            தென்கொங்கில் வீரகேரளர் ஆட்சி ஏறத்தாழ 250 ஆண்டுகள் நடைபெற்ற போதிலும், வீரகேரளர் கல்வெட்டுகளைக் காட்டிலும் கொங்குச் சோழரின் கல்வெட்டுகளே மிகுதியும் உள்ளன. வீரகேரளர் கல்வெட்டு எண்ணிக்கையைக் கூட்டும் வகையில், இந்தக் களப்பணி மூலம் வீரகேரளர் கல்வெட்டு ஒன்று கண்டறிந்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சியோடும் நிறைவோடும் வீடு திரும்பும் பயணம் தொடங்கியது.


நன்றி :
1.  திரு. எ.சுப்பராயலு அவர்கள், தொல்லியல் பேராசிரியர், கோவை.
2.  திரு. பூங்குன்றன் அவர்கள்,   தமிழகத் தொல்லியல் துறை - முன்னாள் உதவி இயக்குநர், கோவை.
3.  திரு. இரா.ஜெகதீசன் அவர்கள்,   தமிழகத் தொல்லியல் துறை - முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர், கோவை. 





தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.





No comments:

Post a Comment