—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்
நூலின் ஆசிரியர் - திரு பொன். சந்திரன்
அய்யனார் பதிப்பகம் சென்னை
வெளியீடு 2017
இந்நூலின் ஆசிரியர் தமிழகத்தில் கிராமங்களின் ஏரி, குளம், ஆறு ஆகிய நீர்நிலைகளின் கரைகளில் கோயில் கொண்டுள்ள, பல பிரிவு மக்களின் காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் வழிபட்டு வரும் ஐயனார் யார், அவரின் பிரிவுகள், இருப்பிடங்கள் போன்றவற்றை மேற்கோள்காட்டி இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
ஆசீவகம் சமயத்தை உருவாக்கிய மற்கலி கோசாலர் என்பவரே சாத்தன் என்ற முதல் ஐயனார் என்றும் இவர் சங்கப் புலவர் ஆக விளங்கியுள்ளார் என்ற விடயத்துடன் நூல் ஆரம்பமாகிறது.
இரண்டாவது ஐயனாராக நந்தவாச்சா என்ற சின்ன ஐயனார், பெருமுக்கல் செல்லும் பாதையில் மலைக்கு முன்பாக இவர் வீற்றிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
முத்தியாலீசுவரர் என்ற மூன்றாம் ஐயனாராக பெருமுக்கல் மலையின் தென்புறச் சரிவில் வேல், ஈட்டி என கோயில் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
மேலும் ஐயனார் வகுத்த ஒன்பது கதிர் என்பது வானியல், கோளியல் பற்றிய அறிவியலாக இருந்துள்ளது. ஆசீவக கொள்கையான ஊழ் கொள்கை மற்றும் கருப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், வெண்மை, மிக வெண்மை என்ற ஆறு சாதிகளை மேற்கோள் காட்டியுள்ளார் .
பாண்டி என்ற சொல் வெள்ளை என்றும் ஐயனாரே என்றும், ஆசீவகத்தில் வெள்ளை பிறப்பு நிலையை அடைந்த துறவியரைக் குறிப்பதாகவும், மதுரை பாண்டி முனி கோயிலே இதற்குச் சிறந்த உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
திருப்பத்தூர் ஐயனார் கோயில் கல்வெட்டுகளில் ஐயனாரைத் திருமண் தவமுடைய ஐயனார் என பாண்டியர்கள் குறித்துள்ளார்கள் என்றும், திருமறைக்காடு சிவன் கோயிலில் ஆசீவகத்திற்குரிய அறப் பெயர் சாத்தன், பூரணம், பொற்கலை யோடு உள்ள பூரண காயபர், பார்கவ நாதர் ஆகியோரைக் கொண்ட ஆசீவக கோவில்களாகக் காட்டுகிறார்.
பெரியபுராணத்தில் சுந்தரரின் வாழ்க்கையைத் தெய்வலோகத்தில் தொடங்கும் சேக்கிழார், திருப்பிடவூர் ஐயனார் கோயிலில் முடிக்கிறார். மேலும் அந்த சருக்கத்திற்கு வெள்ளானைச் சருக்கம் எனவும் வெள்ளை யானை அறப்பெயர் சாத்தனுக்கு உரியது என்றும் தெரியப்படுத்துகிறார்.
சித்தன்னவாசல் மலை அடிவாரத்தில் மூன்று ஐயனார் கோயில்கள் உள்ளன. அங்கு உள்ள குகை ஓவியத்தில் உள்ள மாங்காய் கொத்து, சாத்தனோடு தொடர்பு உடையது என்றும் அழகர் மலை குகைத்தளம், திருச்சி மலைக்கோட்டை ஐயனார், கஞ்சமலை கலியபெருமாள் ஐயனார், பெரும பெட்டி 5 இலவ மரத்து ஐயனார் போன்ற கோயில்கள் ஆசீவகத்தைச் சேர்ந்தவை என்று விளக்கியுள்ளார்.
ஐயனாரின் பிரிவுகள், கரந்தமலை ஐயனார், ஆகாச ஐயனார், பரம ஐயனார், அடைக்கலம் காத்த ஐயனார் என்று பல்வேறு பெயர்களுடன் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடுகிறார்.
மேலும் சான்றுகளாக, பள்ளன் கோயில் செப்பேடு, சிங்கம்புணரி கோயில், இலக்கியங்களில் பத்துப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், மணிமேகலை, நீலகேசி, புறநானூறு, பெரிய புராணம், சினேந்திர மாலை மற்றும் ஐயனார் பிள்ளைத்தமிழ் போன்றவற்றை மேற்கோள் காட்டி ஆசீவகம் என்னும் சமயத்தைத் தோற்றுவித்தவர் ஐயனார் என்பதை வரலாற்றுச் சான்றுகளாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.
தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
https://www.facebook.com/devipharm
No comments:
Post a Comment