Saturday, May 18, 2019

விளக்குமாறாகும் தாவரங்கள்


 — ஆ.சிவசுப்பிரமணியன்


          தான் வாழும் இருப்பிடத்தை தூய்மையாக வைத்திருப்பது மனித குலத்தின் இயல்பு. வசிக்கும் இடத்தின் தரையில் படியும் தூசி, தண்ணீர், உண்ணும்போது சிதறிய உணவுத் துண்டுகள் ஆகியனவற்றை அகற்றும் பணியை அவன் மேற்கொண்டு வாழ்ந்துள்ளான். இது உயிரினங்களின் இறைச்சியை உண்டு குகைகளில் வாழ்ந்த காலத்திலேயே தோன்றிவிட்டது எனலாம். தான் வேட்டையாடி உணவாகக் கொண்ட உயிரினங்களின் இறைச்சித் துணுக்குகளையும், எலும்புத் துண்டுகளையும் தான் வசித்த குகைக்குள் அவன் போடவில்லை. அவற்றையெல்லாம் குகைக்கு வெளியில்தான் குவித்து வைத்துள்ளான். இக்குவியலை 'அடிசிலறைக் கழிவுகள்' (கிச்சன் மிட்டன்ஸ்) என்று மானிடவியலார் குறிப்பிடுகின்றனர். இப்பணியை மேற்கொள்ள ஏதேனும் ஒரு கருவியை உருவாக்கி அவன் பயன்படுத்தியிருக்கும் வாய்ப்பு உள்ளது.

          தன் இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்திருக்க அவன் உருவாக்கிப் பயன்டுத்திய கருவி, அவனது பொருள்சார் பண்பாட்டியல் (மெட்டீரியல் கல்சர்) வரலாற்றில் ஓர் இடத்தைப் பெறுகிறது.தமிழரது பொருள்சார் பண்பாட்டு வரலாற்றில், இருப்பிடத்தை தூய்மைப்படுத்தப் பயன்பட்ட கருவி ‘விளக்குமாறு’ என்று பொதுவாக அறியப்படுகிறது. இது தவிர ‘துடைப்பம்’, ‘வாரியல்’, ‘பெருக்குமாறு’ என்று வட்டாரத் தன்மை கொண்ட பெயர்களாலும் விளக்குமாறு அழைக்கப்படுகிறது. தமிழ் நிகண்டு நூல்களிலும் விளக்குமாறைக் குறிக்கும் சொற்கள் சில இடம் பெற்றுள்ளன.

          கி.பி. எட்டாவது அல்லது பத்தாவது நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் பிங்கல நிகண்டு (6:587) ‘துடைப்பம், சோதனி மாறு, அலகு வாருகோல்’ என்ற பெயர்களால் துடைப்பத்தைக் குறிப்பிடுகிறது. கி.பி. எட்டாவது நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திவாகர நிகண்டு (6:199) ‘சோதினி, மாறு துடைப்பம்’  ஆகும் என்கிறது. இவ்விரு நிகண்டுகளுக்கும் காலத்தால் பிந்தைய சூடாமணி நிகண்டு (7:57) ‘சோதனி, மாறு’ என்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. இவற்றுள் அலகு என்ற சொல் கல்வெட்டுகளில் இடம்பெறுவதுடன் கோவில் பணிகளுடன் தொடர்புடையதாகக் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. அலகு என்ற பெயருடைய விளக்குமாறால் கோவிலைத் தூய்மை செய்வதை அலகிடல் என்று குறிப்பிடும் இடைக்காலக் கல்வெட்டுக்கள், இப்பணி மேற்கொள்வோரை அலகிடுவார் என்றழைக்கின்றன.

          இறைப்பணியின் ஓர் அங்கமாக அலகிடல் இருந்துள்ளது. சைவ சமயத்தில், சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகையான நெறிகள் உண்டு. இவற்றுள் சரியை என்பது, ‘உடம்பின் தொழில்களாக நிகழ்வது’ என்று வெள்ளைவாரணார் (2002:724) விளக்கம் தருவார். இதற்கு எடுத்துக் காட்டாக, திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகம் (631:3) ஒன்றைக் குறிப்பிடுகிறார். (மேலது, 725). அப்பதிகத்தில்  ‘...எம்பிரானுடைய கோயில் புக்கும், புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டு’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. பொழுது புலரும் முன் கோயிலை அலகிடல் என்பது, அலகு என்றழைக்கப்படும் துடைப்பத்தால் கோயிலைப் பெருக்கி தூய்மைப்படுத்துவதைக் குறிப்பிடுகிறது.

          கோவிலுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் பொருட்களையும் ‘திரு’ என்ற அடைமொழியிட்டு அழைப்பது மரபு. இதன் அடிப்படையில் அலகு என்பதை திரு அலகு என்று குறிப்பிடும் மரபும் உண்டு. பெருக்குமாறால் (துடைப்பத்தால்) ஒருவனை அடி என்பதை ‘திரு அலகு எடுத்து திருச்சாத்து சாத்து’ என்று பகடியாகக் கூறுவது இம்மரபை அடிப்படையாகக் கொண்டதுதான். மூத்த பெண் தெய்வம் என்ற பொருளில் ஜோஸ்டாதேவி (சேட்டை) என்று வடமொழியில் குறிப்பிடப்படும் பெண் தெய்வம் ஒன்றுண்டு. மூத்ததேவி என்பதே மூதேவி என்றாயிற்று என்பர். தொடக்கத்தில் வழிபாட்டிற்குரிய தெய்வமாக இருந்து பின்னர் தூக்கம் சோம்பல் என்பனவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டு இழிவான தெய்வமாக இதுமாற்றப்பட்டுள்ளது. மூத்தவள் என்ற பொருளைத்தரும் ‘தவ்வை’ என்ற சொல்லால் திருக்குறள் (167;2) இத்தெய்வத்தைக் குறிப்பிடும். தமிழ்நாட்டின் பழமையான கோயில்கள் சிலவற்றில் இத்தெய்வத்தின் சிலை இடம் பெற்றுள்ளது. இத்தெய்வத்தின் படைக்கலனாக, பெருக்குமாறு அமைந்துள்ளது. ‘வன்படை துடைப்பம்’ என்று பிங்கல நிகண்டு (2:97) குறிப்பிடுகிறது.

இழிவு:
          இப்படித் தொன்மையான எழுத்துப் பதிவுகள் இருப்பினும் இழிவான அடையாளமே விளக்குமாறுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாய்மொழி வழக்காறுகளிலும், மக்களிடையே வழக்கிலுள்ள நம்பிக்கைகளிலும் இது பதிவாகியுள்ளது. தகுதியற்ற ஒருவனுக்குச் செய்யப்படும் சிறப்பைக் குறிப்பிடும்போது ‘வாரியக்(ல்) கொண்டைக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டிய மாதிரி’ என்ற சொலவடையைப் பயன்படுத்துவதுண்டு. வாய்ச்சண்டையின்போது ‘உன்னை வாரியலால அடிப்பேன்’ என்று சூளுரைப்பதுண்டு. சிலர் வாரியல் என்ற சொல்லுக்கு முன்பாக ‘பழ’ என்ற அடைமொழியைப் பயன்படுத்துவதுண்டு. இங்கு பழ என்ற சொல் ‘பயன்படுத்திய’ என்ற பொருளை வெளிப்படுத்தும். ஆங்கிலக்காலனிய ஆட்சியின்போது அரசு அலுவலங்களைக் கச்சேரி என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் இருந்தது. இவ்வகையில் காவல்நிலையமும் கச்சேரி எனப்பட்டது. காவல்நிலையத்தின் அழைப்பாணையின் பேரில் வாக்குமூலம் கொடுப்பதற்காக அங்குசெல்பவன் படும்பாட்டை

கச்சேரிக்குப் போவானேன்கையக்கட்டி நிற்பானேன்
வாக்குமூலம் கொடுப்பானேன் / சொல்வானேன்
வாரியப்(ல்) பூசை படுவானேன்

என்று சிறுவர் விளையாட்டுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறுது. இப்பாடல் பாடப்பட்ட காலத்தின் சமூக நடப்பியலை இதன் வாயிலாக அறியமுடிகிறது.விளக்குமாறைத் தொட்ட கையைக் கழுவாமல் குழந்தைகளைத் தொடக்கூடாது என்ற நம்பிக்கையும் உள்ளது. அப்படித் தொட்டால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று நம்புகிறார்கள். இதன் அடிப்படையில் விளக்குமாறைப் பயன்படுத்திய பின்னர் கையைக் கழுவிவிட்டே குழந்தையைத் தொடுவர். அடைமழைக் காலங்களில் விடாது மழை பெய்து, மக்கள் தொல்லைக்கு ஆளாகும்போது மழையை நிறுத்தும் வழிமுறையாக விளக்குமாறை எடுத்து வந்து வானத்தை நோக்கி காட்டுவர். அதுபோல, முருங்கை, மா போன்ற மரங்களில் கண்ணேறு படுவதைத் தடுக்கும் வழிமுறையாகச் செருப்புடன் விளக்குமாறையும் கட்டித் தொங்கவிடுவதுண்டு.

          விளக்குமாறு என்ற சொல்லை மையமாகக் கொண்டு தமிழ் ஆசிரியர்களிடம் வாய்மொழி வழக்காறு ஒன்று வழக்கிலுள்ளது. அது வருமாறு:
          ‘பரிதிமாற் கலைஞர்’ என்று அழைக்கப்படும் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் மாணர்வகளுக்கு தமிழ் யாப்பிலக்கணம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். யாப்பு (செய்யுள்) உறுப்புக்களாக எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை எனக் கூறிமுடித்தார். உடனே குறும்புக்கார மாணவன் ஒருவன் எழுந்து மிக அடக்கத்துடன், ‘அய்யா தொடைக்கு மேல் என்னவோ?’ என்று வினவினான். அதற்கு ‘விளக்குமாற்றால் விளக்குதும்’ என்று அவர் விடையிறுத்தாராம். இவ்விடையானது, ‘விளக்கும் முறையில் விளக்குவோம்’ என்றும், ‘விளக்குமாறு என்ற வீடு பெருக்கும் கருவியால் அடித்து விளக்குவோம்’ என்றும் இருபொருள் தருவதாய் அமைந்து நகைப்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்வின் உண்மைத் தன்மை குறித்த ஆய்வு ஒருபுறமிருக்க, விளக்குமாறால் அடிப்பதன் இழிவு குறித்த நம்பிக்கையை இது வெளிப்படுத்தி நிற்கிறது.

காணிக்கைப்பொருள்:
          இப்படி இழிவின் அடையாளமாகக் குறிப்பிடப்படும் விளக்குமாறு வழிபாட்டுக்குரிய ஆலயங்களில் காணிக்கைப் பொருளாகவும் இடம் பெறுகிறது. தமிழ்நாட்டின் சைவ வைணவக் கோவில்களில் இவ்வழக்கம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் வடஇந்தியாவில் ஆக்ரா நகரின் நெடுஞ் சாலையில் உள்ள பாடலேஸ்வரர் சிவன்கோவிலில், விளக்குமாறைக் காணிக்கைப் பொருளாக வழங்கும் வழக்கம் நிலவுகிறது. 150 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் சிவலிங்கத்திற்கு காணிக்கையாக, விளக்குமாறு வழங்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இது தொடர்பாகப் பின்வரும் புராணக்கதை கூறப்படுகிறது:
          இக்கோயிலுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிக்காரி தாஸ் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். செல்வவளம் மிக்க இவர் தோல் நோயால் பாதிக்கப் பட்டார். அவர் உடல் முழுவதும் கரும்புள்ளிகள் தோன்றி உடல்நோவைத் தந்தன. இந்நோய்க்கு சிகிச்சை பெற ஆயுர்வேத மருத்துவர் ஒருவரைக் காணச் சென்றார். அவ்வாறு செல்லும்போது தாகம் மீதுற, அதைப் போக்கிக் கொள்ள வழியில் உள்ள ஆசிரமத்திற்குள் சென்றார். அவர் நுழைந்தபோது அங்கிருந்த துறவி ஒருவர் விளக்குமாறால் தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தார். அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த விளக்குமாறானது தவறுதலாக வணிகரின் மீதுபட்டுவிட்டது. உடனே வணிகரின் தோல்நோயும் உடல் வலியும் மறைந்து போயின. இதனால் ஆச்சரியமுற்ற வணிகர் இதற்கான காரணத்தை அவரிடம் வினவினார். தான் தீவிரமான சிவனடியார் என்றும் அவருடைய அருளால் இது நிகழ்ந்திருக்கும் என்றும் அவர் விடையிறுக்க, தங்கக்காசுகள் நிரம்பிய பையொன்றை அவருக்கு வழங்க வணிகர் முன்வந்தார். ஆனால் அந்த எளிய துறவி அதை ஏற்க மறுத்து, அதற்கு மாறாக சிவன்கோவில் ஒன்றைக் கட்டித் தரும்படி வேண்டினார். அதை ஏற்று சிவன் கோவில் ஒன்றை வணிகர் கட்டித் தந்தார்.

          துறவியின் துடைப்பம் பட்டு அவரது தோல் நோய் குணமானது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் காணிக்கைப் பொருளாக துடைப்பத்தை வழங்கும் வழக்கம் உருவாகி இன்று வரை அது தொடர்கிறது. தோல் நோயாளிகள் அதைப் போக்கும் வழிமுறையாக இக்காணிக்கை வழங்கலை மேற்கொள்கிறார்கள். (விக்கிப்பீடியா).

          இவ்வழக்கம் தமிழ்நாட்டில் வழக்கில் உள்ளதா என்பது தெரியவில்லை. இது இருந்திருக்க வேண்டும் என்று கருதும் வகையில் தமிழ்நாட்டுக் கத்தோலிக்கத் தேவாலயங்கள் சிலவற்றில் காணிக்கைப் பொருளாக துடைப்பத்தை வழங்கும் வழக்கம் நிகழ்கிறது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் என்ற நகரமானது, வடகரை, தென்கரை என இரண்டு பிரிவுகளாக உள்ளது. இதில் வடகரையில் உள்ள ‘பத்திரிசையார்’ (புனித பேட்ரிக்) தேவாலயத்துடன் இணைந்த துணைக்கோவிலாக, புனிதவனத்து அந்தோணியார் ஆலயம் தென்கரைப் பகுதியில் உள்ளது. 1920- இல் கட்டப்பட்டு அகஸ்தினார் என்ற ஆயரால் திருநிலைப்படுத்தப்பட்ட இவ்வாலயத்தின் திருவிழா தை மாதம் நிகழும். உடலில் தோன்றும், பாலுண்ணி மரு, கட்டி என்பனவற்றைக் குணப்படுத்தும் மந்திர சிகிச்சை முறையாக, துடைப்பத்தைக் காணிக்கையாக வழங்கும் வழக்கம் இங்கு நிலவுகிறது.

          குறிப்பிட்ட வகைத் துடைப்பம் என்றில்லாமல் அனைத்து வகையான துடைப்பங்களும் காணிக்கையாக வழங்கப்படுகின்றன. காணிக்கைப் பொருளாகப் புதிய துடைப்பத்துடன் வந்து, கோவில் நுழைவாயில் கதவின் அருகில் அதை வைத்துவிட்டு: அந்தோணியாரை வணங்கிச் செல்வர். வீட்டுத் தேவைக்காகத் துடைப்பம் தேவைப்படும்போது, காணிக்கையாக வைக்கப்பட்ட துடைப்பத்தை எடுத்துச்செல்வோரும் உண்டு. இவ்வாறு எடுத்துச் செல்வோர் உரிய விலையைத் தாமாகவே முன்வந்து கோவில் உண்டியலில் போடுவர். சிலர் சந்தை விலையைவிடக் கூடுதலான தொகையைப் போடுவதும் உண்டு. (வின்சென்ட் டிபால், எஃபி, பாஸ்டின், நெல்சன் பெரியகுளம்).

          திண்டுக்கல் அருகில் உள்ள சிறுநாயக்கன்பட்டி பங்கைச் சேர்ந்த தாமஸ்புரம் தேவாலயத்தில் ஏப்ரலில் நிகழும் தோமையார் திருவிழாவின்போது நீண்ட வரிசையில் நின்று காணிக்கைப் பொருளாக துடைப்பத்தை வழங்குகிறார்கள். சமய வேறுபாடின்றி நிகழும் இந்நிகழ்வில் இக்கோவிலைச் சுற்றியுள்ள பேகம்பூர், நத்தம், குட்டியாம்பட்டி, பித்தளைப்பட்டி, மரியநாதபுரம், ஏ.வெள்ளோடு ஆகிய ஊர்களில் இருந்து திரளான மக்கள் இதில் பங்கேற்கிறார்கள். தரையில் உள்ள குப்பையை விளக்குமாறு பெருக்கித் தள்ளுவது போன்று மனிதர்களின் உள்ளத்தையும், உடலையும் தூய்மைப்படுத்த இக்காணிக்கை உதவும் என்ற நம்பிக்கை இங்கு வருவோரிடம் உள்ளது. (பணி. ர.ஜார்ஜ், சே.ச.,) தமிழகத்தில் கத்தோலிக்கம் பரவத் தொடங்கியபோது இங்குள்ள சமயம் சார்ந்த சடங்குகளையும், நம்பிக்கைகளையும் தழுவிக்கொண்டது. தேர் இழுத்தல், சப்பரம் தூக்குதல், முளைப்பாரி வளர்த்தல், உப்பும் மிளகும் கலந்து காணிக்கைப் பொருளாக வைத்தல், உலோகம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட உடல் உறுப்புக்களைக் காணிக்கையாக வழங்கி குறிப்பிட்ட உடல் உறுப்பில் ஏற்பட்ட நோயைப் போக்கிக் கொள்ளலாம் என்று நம்புதல், தென்னை மரக்கன்றைக் காணிக்கையாக வழங்கல், கால்நடையாகக் குறிப்பிட்ட தலங்களுக்குப் பயணித்தல் என அவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் அவர்களது பழைய சமயவாழ்வின் தாக்கத்திற்கு ஆட்பட்டவைதாம். இவ்வாறு பண்பாட்டு வாழ்வில் இருவேறு பண்பாடுகள் இணைவதை பண்பாடு ஏற்றல் (Inpulpration) என்று மானிடவியலாளர் குறிப்பர். தமிழ்நாட்டுக் கத்தோலிக்கத் தேவாலயங்கள் சிலவற்றில் தோல் நோயைப் போக்கிக் கொள்ளும் வழிமுறையாக, துடைப்பத்தைக் காணிக்கையாக வழங்கும் செயலானது, தம் முந்தைய சமய வாழ்வின் எச்சமாக இப்பண்பாடு ஏற்றலை அவர்கள் பின்பற்றி வருவதாகக் கருத இடம் தருகிறது.

விளக்குமாறு வகைகள்:


          இருப்பிடத்தைத் தூய்மைப்படுத்த உதவும் கருவியான விளக்குமாறு ஒரே தன்மைத்தது அல்ல, பயன்படும் வட்டாரத்திற்கு ஏற்ப இதில் வேறுபாடுகள் உண்டு. இது நாட்டார் தொழில்நுட்பத்தின் பொதுக்கூறு. இவ்வேறுபாடு ஒருபக்கம் இருக்க, விளக்குமாறுகள் பலவகையாய் அமைவதன் அடிப்படைக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
          1. தூய்மைப்படுத்த வேண்டிய இடத்தின் இயல்பு
          2. அதன் துணையுடன் அப்புறப்படுத்த வேண்டிய பொருட்களின் இயல்பு
          3. அப்பகுதியில் பரவலாகக் கிடைக்கும் தாவரம்.

          திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களில் இக்காரணங்களின் அடிப்படையில் பயன் படுத்தப்படும் துடைப்பங்கள் தாவரங்களைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. இத்தாவரங்களை இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்கள், மனிதர்கள் பயிர்செய்து வளர்க்கும் தாவரங்கள் என இருவகையாகப் பகுக்கலாம். இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களில் இருந்து புல்லுவாரியல், ஒட்டுப்புல் வாரியல் என இரு துடைப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. மனிதர்கள் பேணி வளர்க்கும் தென்னை மரத்தின் ஓலையில் காணப்படும் தென்னை ஈர்க்கு, பனைமரத்தின் குருத்தோலையுடன் இணைந்து காணப்படும், பனை ஈர்க்கு, பனையின் உச்சிப்பகுதியில் இடம் பெற்றுள்ள பீலி என்னும் உறுப்பு ஆகியனவற்றால் துடைப்பங்கள் உருவாக்கப்படுகின்றன. பயன்பாடு முடிந்த பருத்திச் செடியின் தண்டுப்பகுதி, கத்தரிச் செடியின் தண்டுப்பகுதி, மஞ்சணத்தி (நுணா) மரத்தின் சிறிய கிளைகள் என்பன விற்பனை நோக்கில் இன்றி பயன்பாட்டு நோக்கில் அவ்வப்போது துடைப்பங்களாக உருவாக்கப்படுகின்றன.

புல்லுவாரியல்:
          புல்லுமாறு என்றும் இதைக் கூறுவர். கரிசல் நிலப்பகுதியில் அறுகம் புல்லைப் போன்று தரையில் படரும் களைச் செடியைப் பிடுங்கிச் செய்யப்படுவதால் இது புல்லுவாரியல் எனப் பெயர் பெற்றுள்ளது. இப்புல்லை வாரியப்புல் என்றும் கூறுவர். போக்குவரத்து இல்லாத காலத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் இப்புல்லைச் சேகரித்துத் துடைப்பமாக ஆக்குவர். சிறார் முதல் முதியோர் வரை இதன் உருவாக்கத்தில் பங்கு பெறுவர். கரிசல் நிலப்பகுதியில் விளையும், கம்பு கேழ்வரகு, சாமை, சோளம், வரகு ஆகிய தானியங்களுக்குப் பண்டமாற்றாக இதை வழங்குவர். மண் தரைகளாலான வீடுகளில் பயன்படுத்த இது உதவும் தன்மையது. இதைப் பயன்படுத்தி தரையைக் கூட்டும்போது சாணியால் மெழுகப்பட்ட மண் தரை கிளறப்படுவதில்லை. உணவருந்தும்போது சிதறிய உணவுப் பொருட்கள் நைந்துபோய், தரையுடன் ஒட்டிக்கொள்வதில்லை. தண்ணீர் தேங்கியுள்ள செங்கல் தரைகளில் இதைப் பயன்படுத்துவது கிடையாது.

ஒட்டுப்புல் துடைப்பம்:          
          மூன்று அல்லது நான்கடி உயரத்திற்கு மெல்லிய தண்டுடன் குப்பைமேடுகளிலும், ஊருக்கு வெளிப் பகுதியிலும் வளரும் புல்வகை ஒன்றுண்டு. இதன் மேல் பகுதியில் குத்தும் தன்மை கொண்ட மெல்லிய மலர் போன்ற ஒரு உறுப்பு உண்டு. இது மனிதர்களின் ஆடையிலும் உயிரினங்களின் தோலிலும் ஒட்டிக்கொண்டு குத்தும் தன்மையது. சீலைப்புல் என்றும் இப்புல்லை அழைப்பர். இது காற்றில் பரவி இப்புல்லின் இனப்பெருக்கம் நிகழ்கிறது. இப்புல்லை அறுத்துக் காயவைத்து துடைப்பம் உருவாக்கப்படுகிறது. இப்புல்லின் அடிப்பகுதி துடைப்பத்தின் அடிப்பகுதியாக அமைய உச்சிப்பகுதி துடைப்பத்தின் நுனிப்பகுதியாக அமையும். நுனிப்பகுதி மென்மையாக இருப்பதால் செங்கல் பதிக்கப்பட்ட தரைகளிலும், சிமெண்ட் பூசப்பட்ட தரைகளிலும் படியும் தூசியை நன்கு அப்புறப்படுத்தும் தன்மையது. இதைப் பயன்படுத்தத் தொடங்கும்போது உச்சிப்பகுதியில் உள்ள மலர் போன்ற அமைப்பு தரையில் உதிர்வதுடன், மனிதர்களின் ஆடையில் ஒட்டிக்கொண்டு குத்தி வருத்தும். சற்றுப் பயன்படுத்திய பின்னரே இத்தொல்லையில் இருந்து விடுபட முடியும். ஈரம் படிந்த தரையில் இதைப் பயன்படுத்த முடியாது. தூசியை அப்புறப்படுத்த இது நன்கு உதவும்.

தென்னை ஈர்க்குத் துடைப்பம்:
          தென்னை ஓலையின் நடுவில் உள்ள சிறுகுச்சி போன்ற பகுதி ஈர்க்கு எனப்படும் ஈர்க்கினால் இது உருவாக்கப்படுகிறது. சொரசொரப்பான கல் பதிக்கப்பட்ட தரைகளைப் பெருக்குவதற்கு இது நன்கு உதவும். கல்தரைகளிலும், சிமெண்ட் பூசப்பட்ட தளங்களிலும், குப்பையை அகற்ற மட்டுமின்றி தண்ணீர் ஊற்றித் தேய்த்துக் கழுவவும் மரப்பொருட்களைத் தண்ணீர் ஊற்றிக் கழுவவும் இது நன்கு பயன்படும். விறகு அடுப்புகள் பயன்பாடு மிகுந்திருந்த பழைய காலத்தில் அடுப்பங்கரைச் சுவர்களும், புகைக்கூண்டின் உட்பகுதியும் புகைபடிந்து கருநிறமாகக் காட்சியளிக்கும். இதன் மீது நீரை ஊற்றி இத்துடைப்பத்தால் அழுத்தித் தேய்த்து கருநிறத்தைப் போக்குவர். ஈரம் காய்ந்த பின்னரே வெள்ளையடிப்பு நிகழும். வீடுகளின் சுவர்களில் இடம்பெறும் ஒட்டடை, சிலந்திப்பூச்சிகளின் வலை இவற்றை அகற்றவும், இதன் பயன்பாடு தவிர்க்க இயலாத ஒன்று. அதிக உயரத்தில் இதைப் பயன்படுத்த நீண்ட கம்பின் நுனியில் இதை இறுக்கிக்கட்டி ஒட்டடை குச்சியாகப் பயன்படுத்துவதுண்டு. இன்றும் கூட இது வழக்கில் உள்ளது.

பனை ஈர்க்குத் துடைப்பம்:
          பனையின் உச்சிப்பகுதியில் உருவாகும் வெண் நிறமான குருத்தோலை வளர்ச்சியுற்று பச்சை நிற ஓலையாக மாறும். இந்நிலையில் அதைச் சாரோலை என்பர். தென்னை ஓலையைப் போன்று சாரோலை நடுப்பகுதியில் ஈர்க்கு உருவாகும். சாரேலையின் அகலத் தன்மையைக் குறைத்து ஓலையையும் ஈர்க்கையும் பிரிக்காது துடைப்பம் செய்வர். இதனால் இதில் ஓலையும் ஈர்க்கும் இணைந்து காணப்படும். ஒட்டுப்புல் துடைப்பத்தைப் போன்று தூசி அகற்ற இது பயன்படும். ஆனால் அதைவிட ஓரளவுக்கு ஈரத்தரையில் பயன்படுத்தலாம். என்றாலும் தென்னை ஈர்க்குத் துடைப்பம் போன்று ஈரத்தரையில் பயன்படுத்த முடியாது.

பீலித் துடைப்பம்:
          ஆண் பனையின் உச்சியில் மட்டைகளுக்கு இடையில் பாளை என்ற உறுப்பு உருவாகும். இதைச் சீவியே கள்/பதநீர் எடுப்பர். பாளையின் பாதுகாப்பக் கவசம் போன்று பீலி என்றழைக்கப்படும் ஓர் உறுப்பு உண்டு. இதைக் கொண்டும் துடைப்பம் செய்வர் ‘வாரியப் புல்’ துடைப்பம் போன்று இதன் பயன்பாடு அமையும்.

பிற துடைப்பங்கள்:
          சரளைக்கற்கள் உள்ள நிலப்பகுதியிலும் மாட்டுத்தொழுவங்களிலும் பயன்படுத்த மேற்கூறிய துடைப்பங்கள் பயன்படாது. இந்நிலையில் பருத்தி, கத்திரி ஆகிய செடிகளின் பயன்பாடு முடிந்த நிலையில் அவற்றைப் பிடுங்கி வெயிலில் காயவைத்து, வைக்கோலைப் போன்று சேகரித்து வைப்பர். இவை உயிரினங்களுக்கும் உணவாகப் பயன்படாது. எரிபொருளாக மட்டுமே பயன்படும். இவற்றைக் கொண்டு துடைப்பம் போல் உருவாக்கி சரளைக்கற்களை அகற்றவும் மாட்டுத் தொழுவங்களில் சேரும் சாணம், தீவனக் கழிவுகளை அகற்றவும் பயன்படுத்துவர். இதே பணிகளுக்காக, சோளத்தட்டை, மஞ்சணத்தி (நுணா) மரத்தின் கிளைகள், நொச்சி செடியின் கிளைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்துவதுண்டு. நீர்வளம் மிக்க பகுதிகளில் வளரும் சிலவகையான நீர்க்கோரைகளை அறுத்துக் காயவைத்து துடைப்பம் செய்வதும் உண்டு.


          மொத்தத்தில் தாவரங்களைக் கொண்டு உருவாக்கப்படும் துடைப்பங்கள், பயன்படுத்தும் தளம், அகற்றப்பட வேண்டிய கழிவுகள் அவ்வப்பகுதிக்குரிய தாவரங்கள் என்பனவற்றை மையமாகக் கொண்டு வட்டாரத் தன்மையுடன் உருவாக்கப்படுகின்றன. அத்துடன் பயன்பாடு முடிந்த பின்னர், மண்ணில் மக்கி உரமாகி மண்ணுக்கு வளம் சேர்க்கின்றன. சுற்றுப்புறச் சூழலைச் சீர்குலைப்பதில்லை.





நன்றி: 
உயிர் - மார்ச்-ஏப்ரல் 2019
நாட்டார் வழக்காறு

ஒளிப்படங்கள்:
சோ.தர்மன், முனைவர் ராமர் ரபெல் மத்வெட், பா.வெங்கடேசன், சு.உமாசங்கர், விக்கிபீடியா


No comments:

Post a Comment