—— தேமொழி
பிரித்தானியப் பேரரசின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் ஒரு சிறந்த அணிகலன் (India, the crown jewel of the British Empire) என இந்தியா பெயர் பெற்றது. இவ்வாறு குறிப்பிட்டவர் பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli, 1874-81) என்ற இங்கிலாந்தின் பிரதமர். உலக வரலாற்றில், வளங்கள் பல கொண்ட, சிறப்பு மிக்க இந்தியா இங்கிலாந்துக்குக் கிட்டாமலே கைநழுவிப் போயும் இருக்கலாம். இந்தியாவை நவீன போர்க்கருவிகள் உதவிகொண்டு பிரான்ஸ் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று நாம் யாவரும் பிரஞ்சு மொழி பேசும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டவர் தனது ஐம்பதாவது வயதில் இங்கிலாந்தின் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தைப் பிரெஞ்சு வணிக அமைப்பின் தாக்குதல்களிலிருந்து காக்கும் பொறுப்பை ஏற்ற மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ். இவரே இந்தியாவின் இராணுவத்தை முதலில் கட்டமைத்து உருவாக்கியவர் என்ற பெருமை பெற்றவர். இந்திய ராணுவத்தின் தந்தை என்று ஆங்கிலேயர் இவரைக் குறிப்பிட்டார்கள் (The First English Commander-in-Chief, India – Major-General Stringer Lawrence).
இவர் உருவாக்கி வளர்த்தெடுத்த கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்புப்படையே பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் இராணுவமாகவும், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் இராணுவமாகவும் ஆனது. இந்தியாவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் எண்ணத்துடன் திறம்படச் செயலாற்றிக் கொண்டிருந்த பிரஞ்சு ஆளுநர் டூப்ளே (Dupleix) வின் கனவைக் கலைத்து, பிரான்ஸ் நாட்டிலேயே டூப்ளே மதிப்பிழந்து போகும் அளவிற்குத் தக்காணத்தில் அதிரடியாகப் போர்களை இவர் மட்டும் நடத்தியிராவிட்டால் இங்கிலாந்து இந்தியாவில் கால் ஊன்றி இருக்கமுடியாது. நாம் படித்த வரலாற்று நூல்களில் இவர் முக்கியத்துவம் சிறப்பித்துக் கூறப்படவில்லை என்பது மட்டுமல்ல, இங்கிலாந்திலும் இவர் சாதனையை யாரும் சென்ற நூற்றாண்டிலேயே நினைவு வைத்திருந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறுதான் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் வரலாற்றை 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நூலாக எழுதி வெளியிட்ட ஜான் பிட்டுல்ஃப் என்பவரும் கருதுகிறார் என்பதை அவர் நூலைப் படிக்கையில் அறிய முடிகிறது. வரலாற்றின் திருப்புமுனையை உருவாக்கிய ஒருவர் ஏனோ யாராலும் அறியப்படாமலே இருந்துவரும் நிலை தொடர்கிறது.
பிரிட்டிஷ் இந்தியா என்பதன் துவக்கத்தை ராபர்ட் கிளைவ் என்பதிலிருந்தே தொடக்கம் என்றுதான் வரலாற்றில் கூறப்படுகிறது. ஆனால் தனது கீழ் பணியாற்றிய இராபர்ட் கிளைவ் என்ற துடிப்பு மிக்க போர் வீரரை அடையாளம் கண்டதுடன், தக்க வகையில் அவரைப் பயன்படுத்திக் கொண்டவர் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ். அவர் இந்தியாவில் தான் நடத்திய போர்களைப் பற்றி எழுதியிருந்தாலும் (‘A Narrative of Affairs on the Coast of Coromandel from 1730 to 1764′ — Stringer Lawrence) தனது பங்களிப்பைப் பெரிதுபடுத்தி விவரிக்க முற்படவில்லை. கிளைவிற்கு அவரது பணியைப் பாராட்டி அரசு வைரம் பதித்த வீரவாளைப் பரிசளித்துப் பெருமைப்படுத்த முற்பட்டபொழுது, கிளைவ் அதனை ஏற்க மறுத்து மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ்சுக்கும் பரிசளித்தாலே தானும் ஏற்றுக் கொள்ளமுடியும் என்று கூறும் அளவிற்குத்தான் அன்றே நிலைமை இருந்திருக்கிறது.
இவர் பங்களிப்பைப் பாராட்டும் விதத்தில் பதவி உயர்வும் அளிக்கப்படாமல், நீண்டகாலம் பணிபுரிந்த அனுபவம் என்ற அடிப்படையில் மற்றொருவரைத் தலைவராக அறிவித்த பொழுது மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் வெறுப்படைந்து அவர் கீழ் ஒத்துழைக்க மறுத்த நிலையும் இருந்துள்ளது. இந்தியாவில் சுமார் இருபது ஆண்டுகள் அவர் பணியாற்றிய காலத்திலேயே இனி இந்தியாவிற்கு வரப்போவதில்லை என்ற வெறுப்பில் எடுத்த முடிவுடன் இருமுறை இங்கிலாந்து சென்று மனம்மாறி பின்னர் மீண்டும் திரும்பி வந்துள்ளார். இறுதியாக 1766இல் பணி ஓய்வு பெற்றுச் சென்று அவர் அங்கு மறைந்திருக்கிறார். காலம் முழுவதும் கிளைவும் இவரும் நல்ல நண்பர்களாகவும் இருந்துள்ளார்கள். கிளைவ் செய்த செயல்கள் தகுந்த முறையில் பாராட்டு பெற வேண்டும் என்பதில் இவர் கவனமாக இருந்துள்ளார். கிளைவும் இவரை மதித்து இவருக்கு நல்ல ஓய்வூதியம் கிடைக்க அவரால் ஆன வகையில் உதவியிருக்கிறார்.
மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் மறைவுக்குப் பிறகு இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தின் வடக்குப் பகுதியில், பெருமைக்குரியவர்களுக்காக நினைவுச்சின்னம் அமைக்கும் இடத்தில் இவருக்கும் ஒரு நினைவுச்சின்னம் கிழக்கிந்தியக் கம்பெனியால் அமைக்கப்பட்டது. வில்லியம் டைலர் என்ற சிற்பி உருவாக்கிய நினைவுச்சின்னத்தில், வெண்மை நிறத்தில் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்சின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு அதன் கீழே ஒரு தேவதையும் ஒரு பெண்ணும் இருபுறத்திலும் அமர்ந்திருக்க, கிழக்கிந்தியக் கம்பெனியின் குறியீடாக அவருக்கு இடப்புறமுள்ள பெண் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்சைச் சுட்டிக் காட்டும்வகையில் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. சிலைக்குக் கீழுள்ள பீடத்தில் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்சிற்குரிய சின்னம் (Coat of arms) பொறிக்கப்பட்டிருக்கும், அதற்கும் கீழே பெண்ணின் முழங்கால் அருகில் உள்ள செவ்வக அமைப்பில் திருச்சி மலைக்கோட்டையின் புடைப்பு உருவம் செதுக்கப்பட்டு அதன் கீழ் “திருச்சினாபோலி” (Trichinopoly) என்று திருச்சிராப்பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது உச்சரிப்புக் குறைபாட்டுடன் அழைக்கப்பட்ட விதத்தில் குறிக்கப்பட்டிருக்கும். இடப்பக்கம் உள்ள தேவதையின் கையில் உள்ள கேடயத்தில் இரண்டாம் கர்நாடகப் போரில் (மே 1753 – அக்டோபர் 1754) மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் ஆர்காட்டு நவாப் மகமது அலிகான் – வாலாஜாவுக்கு ஆதரவாகப் பிரெஞ்சுக்காரர்களுடன் போரிட்டு திருச்சியைக் கைப்பற்றியது குறிப்பிடப்பட்டிருக்கும்.
“Born March 6, 1697; died January 10, 1775”
“For Discipline Established, Fortresses Protected, Settlements Extended, French and Indian Armies Defeated, and Peace Concluded in the Carnatic”
அதற்கும் கீழுள்ள கருப்பு பளிங்கு பீடத்தில்;
“Erected by the East India Company to the memory of Major General Stringer Lawrence in testimony of their gratitude for his eminent services in the command of their forces on the coast of Coromandel from the year MDCCXLVI to the year MDCCLXVI”.
எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் திருச்சியைக் கைப்பற்றி சாந்தா சாகிப் (Chunda Sahib) பின் கதையை முடித்து, பிரெஞ்சு ஆளுநர் டூப்ளே வின் ஆதிக்கத்தை வளரவிடாமல் தடை செய்யும் வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய எதிர்காலம் நம்பிக்கை தரும் வகையில் அல்லாமல் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் நிலை வெறும் நூலிழையில் ஒட்டிக்கொண்டிருந்தது என்பதுவே மறுக்கமுடியாத உண்மை. அந்தச் சூழ்நிலையைச் சற்று விரிவாகவே காண்போம்.
18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், வடக்கில் மன்னர் ஔரங்கசீப்பின் (கி.பி. 1707) மறைவுக்குப் பிறகு முகலாய பேரரசின் ஆட்சியாளர்கள் திறமை குறைந்தவர்களாக இருந்த காரணத்தால் பல சிற்றரசுகள் தனியாட்சி அரசுகளாக தங்களை அறிவித்துக் கொண்ட காலம் இந்தியாவின் போராட்டங்கள் நிறைந்த காலத்தின் துவக்கம். தக்காணத்தில் மராட்டியர்களுக்கும், தன்னாட்சி அமைத்துக் கொண்ட ஆர்காட்டு நவாபுக்கும் இடையில் அரசுரிமைப் போட்டி. தன்னாட்சி செய்த ஹைதராபாத் நிஜாம் அரச குடும்பத்தில் வாரிசுரிமைப் போட்டி. இக்காலத்தில் வாரிசுரிமைச் சச்சரவுகளே பெரும்பாலான உள்நாட்டுப் போர்களுக்குக் காரணமாகவும் அமைந்தன.
ஹைதராபாத் நிஜாமிடம் இருந்து 1713 இல் தன்னைவிடுவித்துக் கொண்டு ஆர்காட்டை நவாப் தோஸ்த் அலிகான் ஆட்சி செய்கிறார். மராட்டியர்கள் கி.பி. 1741இல் படையெடுத்து வந்து ஆர்க்காட்டு நவாப் தோஸ்த் அலிகானைக் கொன்று அவருடைய மருமகனான சந்தாசாகிபைச் சிறை பிடித்துச் செல்கிறார்கள். இதுதான் தொடர் போர்களையும், கர்நாடகப் பகுதியில் ஐரோப்பியர் ஊடுருவலையும் துவக்கி வைக்கிறது. தோஸ்த் அலிகானின் மகனும் தொடர்ந்து உறவினர் ஒருவரால் கொலையுண்டு மாண்டு போக, ஹைதராபாத் நிஜாம் அன்வாருதீன் என்பவரை 1744ல் ஆர்காட்டின் நவாப் ஆக்குகிறார்.
உள்நாட்டுச் சண்டை போதாதென்று வணிகம் செய்ய வந்த பிரெஞ்சு மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிக நிறுவனங்களுக்கு இடையிலும் போர் நிகழ்ந்த காலம் அது. ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் இடையூற்றை நிறுத்தச் சொல்லி பிரெஞ்சு ஆளுநர் டூப்ளே ஆங்கில அரசின் உதவியை நாடுகிறார். ஆங்கிலேய அரசு நாட்டுக்குள் அவர்களின் கிழக்கிந்திய வணிக நிறுவனம் போரில் இறங்காது. ஆனால், கடலில் வணிக கப்பல்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை எனக் கூறிவிடுகிறது. ஆங்கிலேயக் கப்பல்கள் பிரெஞ்சு கப்பல்களைத் தாக்குகிறது. வெறுப்படைந்த டூப்ளே ஆங்கிலேயரின் சென்னை கோட்டையைத் தாக்கி கைப்பற்றுகிறார் (1746). ஆங்கிலேயரிடம் முறையான படை என ஒன்றும், பயிற்சி அளிக்கப்பட்ட போர் வீரர்கள் என்றும் எவரும் இல்லை. அவர்களின் வணிக நிறுவனம், தொழிற்சாலை போன்றவற்றின் காவலுக்காக வைத்திருக்கும் சில ஐரோப்பியக் காவலாளிகளையும், உள்ளூர் காவலாளிகளையும் ஒருவாறு ஒருங்கிணைத்து பிரெஞ்சுப்படையைத் தாக்கி தோல்வி அடைகிறார்கள். ஆர்காட்டு நவாபின் உதவியை நாடுகிறார்கள். அவர் அனுப்பி வைத்த படையும் பிரெஞ்சுப் படையுடன் போரிட்டுத் தோல்வியடைந்து திரும்பிவிடுகிறது.
இதனால் ஆர்காட்டு நவாபை தங்கள் எதிரி என அடையாளம் காணுகிறார் டூப்ளே. வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கிறார். ஆனால் ஆஸ்திரிய உரிமைப் போட்டி காரணமாக ஏழாண்டுக் காலம் (கி.பி. 1742-1748) ஐரோப்பாவில் போரில் ஈடுபட்டிருந்த பிரான்சும் இங்கிலாந்தும் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு, இருநாட்டு வணிக நிறுவனங்களும் இந்தியாவில் தங்களுக்குள் எந்தப் போரிலும் ஈடுபடக்கூடாது, அவரவர் கைப்பற்றிய இடங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அந்த உடன்படிக்கையின்படி பிரெஞ்சு ஆளுநர் டூப்ளே சென்னை கோட்டையை ஆங்கிலேயர் வசம் திருப்பி ஒப்படைத்தாலும் வெற்றி பெற்ற படை தன்னிடம் இருக்க உள்நாட்டில் விரிவாக்கம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறார். பிரெஞ்சு நிறுவனம் நல்ல படையையும் அதிக எண்ணிக்கையில் வீரர்களையும் கொண்டிருந்த காலம் அது. இங்கிலாந்து தங்கள் வணிக நிறுவனத்தின் பாதுகாப்பிற்கு ஸ்ட்ரிங்கர் லாரன்சை 1747 இல் இந்தியாவிற்கு அனுப்புகிறார்கள். கடலூர் அருகே ஆரியங்கோப்பு, தஞ்சையில் தேவிகோட்டை போன்ற சில போர்களுக்குப் பிறகு அவர் 1750 முடிவில் இங்கிலாந்து திரும்பிவிடுகிறார்.
ஹைதராபாத் நிஜாமின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் நசீர் ஜங்கும் பேரன் முசாஃபர் ஜங்கும் அரசுரிமைப் போட்டியில் இறங்குகிறார்கள். நசீர் ஜங்கும் ஆர்க்காடு நவாப் அன்வாருதீனும் பிரித்தானிய ஆதரவைப் பெற்றிருந்தனர். ஆங்கிலேயருக்கு உதவுவதற்காக பிரெஞ்சுப்படையை எதிர்த்த ஆர்க்காடு நவாபுக்கு ஆங்கிலேயர் ஆதரவு இருக்கிறது. பிரெஞ்சு உதவியுடன் பணம் கொடுத்து விடுதலைபெற்ற சாந்தா சாகிப் தனது மாமனார் ஆட்சி செய்த ஆர்க்காடு நவாப் உரிமை தனது என்று கூறி பிரெஞ்சு உதவியுடன் அன்வாருதீன்கானை எதிர்க்கிறார்.
ஆம்பூரில் நடந்த போரில் 1749இல் அன்வாருதீன் கொல்லப்படுகிறார். சாந்தா சாகிப் தன்னை ஆர்க்காடு நவாபாக அறிவித்துக் கொள்கிறார். ஆங்கிலேயர் ஆதரவளித்த இருவருமே கொல்லப்படுகிறார்கள். ஹைதராபாத் நிஜாம் என உரிமை கோரிய நசீர் ஜங்கும் கொல்லப்படுகிறார். ஆர்க்காட்டு நவாப் அன்வாருதீன் மகன்களில் ஒருவரும் கொல்லப்படுகிறார். மற்றொருவர் மகமது அலிகான்-வாலாஜா திருச்சிக்குத் தப்பிச் சென்று ஆங்கிலேயர் உதவி கோருகிறார். சந்தா சாகிபும் முசாஃபர் ஜங்கும் முறையே ஹைதராபாத் நிஜாமாகவும், ஆர்காட்டு நவாபாகவும் பதவியேற்கின்றனர்.
ஆனால் 1751 இல் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஆர்க்காட்டைக் கைப்பற்றி சாந்தாசாகிபையும் அவரது மகனையும் போரில் தோற்கடிக்கிறார்கள். ஆர்க்காடு நவாபாக யார் பதவி ஏற்பது என்ற வாரிசுரிமைப் போர் திருச்சிக்கு நகர்கிறது.
மார்ச் 14, 1752 அன்று இந்தியாவிற்கு மீண்டும் அனுப்பப்பட்ட ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ், கிளைவ் தலைமையில் நடக்கவிருந்த போருக்குத் தலைமையை ஏற்றுக் கொள்கிறார். வந்திறங்கிய மூன்றாம் நாளே படையை திருச்சி நோக்கி நடத்திச் செல்கிறார். இரண்டாம் கர்நாடகப் போராகப் பொன் மலைப் போர் (Battle of Golden Rock) என்பது 1753, ஜூன் 26 இல் நிகழ்ந்தது.
திருச்சியில் ஆங்கிலேயரிடம் புகலிடம் பெற்ற ஆர்க்காட்டு நவாப் மகமது அலிகான்-வாலாஜாவுக்கு ஆதரவாக, தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாப் சிங், மராட்டியப் படைத்தளபதி முராரி ராவ், ஸ்ட்ரிங்கர் லாரன்சின் தலைமையில் கிளைவ், டால்ட்டன் போன்ற தளபதிகளைக் கொண்ட ஆங்கிலேயப்படை என யாவரும் திருச்சியை மையமாகக் கொண்டு போரில் ஈடுபட்டனர்.
ஆர்காட்டு நவாப் பதவிக்கு உரிமை கோரும் சாந்தா சாகிப், ஹைதராபாத் நிஜாம் முசாஃபர் ஜங், மைசூர் அரசின் படைத்தளபதி ஹைதர் அலி, ஆகியோருடன் லா என்ற பிரெஞ்சு தளபதியின் தலைமையின் கீழ் பிரெஞ்சு ஆளுநர் டூப்ளேயின் படை களத்தில் இறங்கியது. அவர்கள் ஆங்கிலேயரின் திருச்சி புறக்காவல் நிலையத்தைத் தாக்கினார்கள்.
திருவரங்கத்தில் பிரெஞ்சுப்படை பாசறை அமைத்தது. பொன்மலை, காஜாமலை, திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் மலை, உய்யக்கொண்டான் திருமலை எனத் திருச்சியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் அனைத்திலும் ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சுப்படைகள் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. காவிரியைக் கடந்து வடகரை சென்று பிரெஞ்சுப்படையைச் சுற்றிவளைக்கலாம் என்ற கிளைவின் திட்டத்தை ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் ஏற்று அவரை அனுப்பி வைக்கிறார்.
காவிரியைக் கடந்து வடகரையில் சமயபுரத்தில் கிளைவ் பாசறை அமைத்து பிரெஞ்சுப்படையைச் சுற்றி வளைக்கிறார். டூப்ளே உதவிக்கு அனுப்பிய பிரஞ்சுப் படையையும் தடுத்து நிறுத்தி அவருடனான தொடர்பையும் துண்டிக்கிறார்கள். போரின் இறுதியில் ஆங்கிலப்படை வெற்றி கொள்கிறது. சரணடைந்து தப்பிச்செல்லப் பேரம் பேச முனைந்த சாந்தா சாகிப் கைது செய்யப்பட்டு, 1752 இல் தஞ்சையின் மராட்டியப் படைத்தலைவரால் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார். அவரது உடல் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் மீட்டுத் தந்த ஆர்க்காட்டின் நவாபாக அன்வாருதீன் மகன் மகமது அலிகான் – வாலாஜா 1795 வரை ஆள்கிறார். ஆங்கிலேயப்படை உதவிக்கான செலவைத் திருப்பிக் கொடுக்க வேண்டி, தனக்குப் பாளையக்காரர்கள் மூலம் கப்பமாகக் கொடுக்கப்படுவதில் ஆறில் ஐந்து பகுதி வரியை வசூலித்துக் கொள்ளும் உரிமையை ஆங்கிலேயருக்கு விட்டுக் கொடுக்கிறார் ஆர்க்காட்டு நவாப் (அதை ஆங்கிலேயருக்குச் செலுத்த மறுத்த கட்டபொம்மன் போரின் இறுதியில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுகிறார் என்பது தமிழகம் நன்கு அறிந்த வரலாறு).
பிரஞ்சு ஆளுநர் டூப்ளே வின் செயல்பாட்டில் நம்பிக்கையிழந்த பிரான்ஸ் அவரைத் திரும்ப அழைத்துக் கொள்கிறது. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியின் வணிகம் இராணுவ கட்டமைப்பால் இந்தியாவில் விரிவடைகிறது. உள்நாட்டுக் கலகங்களைச் சாதகமாக்கிக் கொண்டு, ஒருசில அரசுகளைத் தவிர்த்து, அடுத்து வந்த ஒரு நூறாண்டுக்குள் இந்தியாவின் பெரும்பான்மையான இடங்கள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது. இந்தவகையில் இங்கிலாந்தின் வெற்றிக்கு மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் திருச்சியில் பிரெஞ்சுப்படைகளை முறியடித்த நிகழ்வே துவக்கம் எனக் கூறலாம்.
References:
• Westminster Abbey – https://www.westminster-abbey.org/abbey-commemorations/commemorations/stringer-lawrence
• Stringer Lawrence, the Father of the Indian Army, John Biddulph, J. Murray, 1901
• The Monthly Review, Volume 46, Ralph Griffiths, George Edward Griffiths, R. Griffiths, 1772
• Historical Sketches of the South of India, in an Attempt to Trace the History of Mysoor, Etc, ‘Volume 1′, Mark Wilks, Higginbotham and Company, 1869
• The chronology of modern India for four hundred years from the close of the fifteenth century, A.D. 1494-1894, James Burgess, 1913
• Stringer Lawrence, by Henry Manners Chichester, Dictionary of National Biography, 1885-1900, Volume 32
• தமிழகத்தில் நடைபெற்ற போர்கள், http://www.tamilvu.org/courses/degree/a031/a0314/html/a0314113.htm
நன்றி: சிறகு - http://siragu.com/வெஸ்ட்மினிஸ்டர்-அபே-நினை/
தொடர்பு: தேமொழி (jsthemozhi@gmail.com)
No comments:
Post a Comment