Showing posts with label திருத்தம் பொன். சரவணன். Show all posts
Showing posts with label திருத்தம் பொன். சரவணன். Show all posts

Sunday, July 26, 2020

தமிழர்களின் மாதப்பெயர்கள் தமிழா?

தமிழர்களின் மாதப்பெயர்கள் தமிழா?

-- திருத்தம் பொன். சரவணன்


முன்னுரை:
            தமிழர்களின் காலக்கணக்கு மிகப்பழமை வாய்ந்தது. ஒருநாளின் உட்கூறுகளைச் சிறுபொழுது என்றும் ஏனையவற்றைப் பெரும்பொழுது என்றும் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்கணம் வகுத்துக் கூறியது தொல்காப்பியம். அதுமட்டுமின்றி, நாள், பொழுது, ஆண்டு எனக் காலம் தொடர்பான அனைத்துப் பெயர்களையும் கூட விதிமுறைக்கு உட்பட்டே தமிழர்கள் அமைத்தும் இருந்தனர். 

            இந்நிலையில், தமிழர்கள் பின்பற்றி வருவதான சித்திரை முதல் பங்குனி வரையிலான பன்னிரண்டு மாதப்பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்றும் அவை சமற்கிருத சொற்களை அடியொட்டியே அமைக்கப் பெற்றவை என்றும் சிலர் வாதிட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் மற்றும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இந்த மாதப் பெயர்கள் எவையும் இல்லை என்ற ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் செய்யும் வாதம் தவறானது என்றும் இந்த மாதப் பெயர்கள் அனைத்தும் தமிழ்ச் சொற்களே என்றும் இக் கட்டுரை நிறுவுகிறது.

தமிழரின் மாதப்பெயர்கள் தமிழே !
            தமிழர்கள் பின்பற்றி வருகின்ற சித்திரை முதலான 12 மாதப் பெயர்களும் தமிழே ஆகும். பழந்தமிழ் இலக்கியங்களில் இந்தப் பெயர்கள் இல்லை என்பதால் இவை தமிழ் அல்ல என்று ஒதுக்கிவிட முடியாது. காரணம், இன்று நாம் புழங்கி வரும் ஏராளமான தமிழ்ச்சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை. இவையெல்லாம் சங்ககாலத்திற்குப் பின்னால் வந்த புலவர்கள் காலந்தோறும் உருவாக்கிய புதிய தமிழ்ச் சொற்கள் ஆகும். அப்படி உருவாக்கப்பட்டவை தான் இந்த பன்னிரண்டு தமிழ் மாதப் பெயர்களும். இந்த தமிழ்மாதப் பெயர்களின் மூலமாக விளங்கிய தமிழ்ச் சொற்கள் எவை என்று கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.



            இனி ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய மேற்காணும் மூலத் தமிழ்ப்பெயர் தோன்றிய முறையினையும் அவற்றின் பொருளையும் விரிவாகக் கீழே காணலாம்.

சித்திரை:
            இது தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்டு வருகிறது. இதனை மறுத்துத் தை மாதமே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க மாதமாகும் என்று கூறுவோரும் உளர். இந்த மாதத்திற்கு 30 நாட்கள் உண்டு. முதுவேனில் காலத்தின் துவக்கமான இம்மாதத்தில் வெயிலானது அதிக ஒளியுடன் கடும் வெப்பத்துடன் சுட்டெரிக்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            சீ (=ஒளி) + தெறு (=மிகு, சுடு) + ஐ = சீத்தெறை >>> சித்திரை = மிகுதியான ஒளியுடன் கூடிய வெப்பம் சுடுகின்ற காலம்.

வைகாசி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் இரண்டாவது மாதமாகக் கருதப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கு 31 நாட்கள் உண்டு. முதுவேனில் காலத்தின் இறுதியான இந்த மாதத்தில் சூரியன் தனது கூர்மையான வெப்பக் கதிர்களால் சினங்கொண்டு எரிக்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            வை (=கூர்மை) + காய் (=சின, எரி) + இ = வைகாயி >>> வைகாசி = சூரியன் கூரிய கதிர்களால் சினந்து எரிக்கும் காலம்.

ஆனி:
            தமிழ்ப் புத்தாண்டின் மூன்றாவது மாதமே ஆனி மாதமாகும். இந்த மாதத்திற்கும் 31 நாட்கள் உண்டு. இளவேனில் பருவத்தின் முதலாவதான இம்மாதத்தில் வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்து அடங்கத் தொடங்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            ஆன் (=குறை, அடங்கு) + இ = ஆனி = வெப்பம் குறைந்து அடங்கும் காலம்.

ஆடி:
            தமிழ்ப் புத்தாண்டின் நான்காவது மாதம் ஆடி மாதமாகும். இந்த மாதத்திற்கும் 31 நாட்கள் உண்டு. இளவேனில் பருவத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் காற்று அதிகமாகவும் மிகுந்த பலத்துடனும் வீசும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            அடி (=வீசு, தாக்கு) >>> ஆடி = காற்று வேகமாக வீசித் தாக்கும் காலம்.

ஆவணி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் ஐந்தாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 31 நாட்கள் உண்டு. கார்காலத்தின் துவக்கமாக வரும் இந்த மாதத்தில் மழை குறைவாகப் பெய்து பூமியை மேற்புறமாக நனைத்து நெகிழ்க்கும். இதனால், உழவர்கள் காளைமாடுகளைக் கொண்டு தமது வயல்களை உழுது விதைப்புக்குத் தயார் செய்வர்.  இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            ஆ (=காளை) + பணி (=வேலை) = ஆபணி >>> ஆவணி = காளைகளைக் கொண்டு வேளாண் பணியைத் தொடங்கும் காலம்.

புரட்டாசி:
            தமிழ்ப் புத்தாண்டின் ஆறாவது மாதம் புரட்டாசி ஆகும். இந்த மாதத்திற்கு 30 நாட்கள் உண்டு. கார்காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் மழை நன்றாகப் பெய்து குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளை நீரால் நிரப்பும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            பூரணம் (=நிறைவு) + அயம் (=நீர், நீர்நிலை) + இ = பூரணாயி >>> புரடாசி >>> புரட்டாசி = நீர்நிலைகள் நீரால் நிறையும் காலம்.

ஐப்பசி:
            தமிழ்ப் புத்தாண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். இந்த மாதத்திற்கு 29 நாட்கள் உண்டு. கூதிர்காலத்தின் முதலாக வரும் இந்த மாதத்தில் மழையானது தொடர்ந்து விடாமல் மிகுதியாகப் பெய்து வெள்ளம் ஏற்பட்டுச் சிதைவினை உண்டாக்கும். மழை பெய்துகொண்டே இருப்பதால் குளிர்ச்சியும் மிகுதியாக இருக்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            அழி (=பெருகு, சிதை) + மழை = அழிமழை >>> அயிமயை >>> ஐபயி >>> ஐப்பசி = மழையின் பெருக்கத்தால் வெள்ளம் ஏற்பட்டுச் சிதைவு உண்டாகும் காலம்.

கார்த்திகை:
            இது தமிழ்ப் புத்தாண்டின் எட்டாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. கூதிர்காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் மழை குறையத் தொடங்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            கார் (=மேகம், மழை) + திகை (=அடங்கு, முடிவுறு) = கார்த்திகை = மேகங்கள் மழையைக் குறைத்து முடிவுறும் காலம்.

மார்கழி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் ஒன்பதாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. முன்பனிக் காலத்தின் துவக்கமாக வரும் இந்த மாதத்தில் குளிர்ந்த காற்று வீசும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            மருக்கம் (=காற்று) + அளி (=குளிர்ச்சி) = மருக்களி >>> மார்கழி = குளிர்ந்த காற்று வீசும் காலம்.

தை:
            இது தமிழ்ப் புத்தாண்டின் பத்தாவது மாதம் ஆகும். ஆனால் இதுதான் தமிழரின் உண்மையான புத்தாண்டு துவக்கம் என்று பல ஆதாரங்களுடன் அறிஞர்கள் கூறி வருகின்றனர். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. முன்பனிக் காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் தான் மக்கள் புத்தாடை அணிதல், மாலைசூடுதல், அலங்கரித்தல், திரளாகச் சூழ்தல், மரக்கன்றுகளை நடுதல், புதியதில் புகுதல், உருவாக்குதல் போன்ற பல மங்கல வினைகளைச் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், தை என்ற ஒற்றைத் தமிழ்ச் சொல்லுக்கு மேற்காணும் வினைகள் அனைத்தையுமே பொருட்களாகத் தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. இனி, இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            தை (=உடு, சூடு, அலங்கரி, சூழ், மரக்கன்று, நடு, புகு) = புத்தாடை உடுத்தி மாலைசூடி அலங்கரித்த பலர் சூழ்ந்து மரக்கன்றுகளை நட்டுப் புத்தாண்டில் புகுகின்ற காலம்.

மாசி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் பதினொன்றாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கும் 29 நாட்கள் உண்டு. பின்பனிக் காலத்தின் துவக்கமாக வரும் இந்த மாதத்தில் தான் கல்வி கற்பதற்கான தொடக்க வேலைகள் நடைபெற்றன. இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            வாசி (=கல், பாடு, இசை) >>> மாசி = புதிதாகக் கற்றலும் பாடுதலும் இசைத்தலும் ஆகிய வினைகள் செய்யும் காலம்.

பங்குனி:
            இது தமிழ்ப் புத்தாண்டின் பன்னிரண்டாவது மாதம் ஆகும். இந்த மாதத்திற்கு 30 நாட்கள் உண்டு. பின்பனிக் காலத்தின் இறுதியாக வரும் இந்த மாதத்தில் தான் நீர்நிலைகளில் உள்ள நீரெல்லாம் ஆவியாகி வற்றத் தொடங்கும். இந்த மாதத்தின் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

            வறம் (=வற்றுகை, நீரில்லாமை) + குளம் (=நீர்நிலை) = வறக்குளம் >>> பாற்குணம் + இ >>> பக்குணி >>> பங்குனி = நீர்நிலைகள் நீரின்றி வற்றும் காலம்.

முடிவுரை:
            இதுவரை கண்டவற்றிலிருந்து, தமிழரின் மாதப் பெயர்கள் பன்னிரண்டும் தமிழ்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டே தோன்றின என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, தை என்ற தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ் அகராதிகள் கூறியுள்ள பல்வேறு பொருட்களை நோக்குங்கால், பழந்தமிழர்கள் தை மாதத்தில்தான் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடி இருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது.





Wednesday, February 5, 2020

தஞ்சை குடமுழுக்கு கவிதை

தஞ்சை குடமுழுக்கு கவிதை

 ——  திருத்தம் பொன்.சரவணன்




அஞ்செழுத் துடையாய் ஆலமர் செல்வ
நஞ்சினை உண்டோய் நமச்சி வாய
நன்செய் யுடன்நல் அறிஞர் சூழ்ந்திடும்
தஞ்சை சிவமே போற்றி

உலகம் காத்திட உண்டாய் நஞ்சினை
அழலது உன்றன் மிடற்றினில் கறையாய்
கறையதைக் கழுவத் துடித்திடும் கரங்கள்
உறையெனப் பொழிந்திடும் பாலே.

கசந்திடும் உணவை யாவரும் உண்கிலர்
விசமென அறிந்தும் விருப்புடன் உண்டோய்
விசத்தின் கசப்பினை நீக்கிட விழைந்தோம்
இசைவுடன் ஏற்பாய் தேனே.

நீரு லாவிய நீள்சடை முடியினை
காரு லாவிய கறைபடு மிடற்றினை
ஏரு லாவிய தஞ்சைப் பெரியோய்
சோரென வார்த்தோம் நீரே.

பொதுநலம் பேணுமார்க் காமம் தடையென
மதுகையின் நீக்கி மோனத் திருந்தோய்
காமன் கணைவிட கடிந்துடன் எரித்தோய்
பாதம் சூட்டுதும் மலரே.





தொடர்பு: திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
http://thiruththam.blogspot.com/





Saturday, May 18, 2019

காலக் கவிதைகள்

—  திருத்தம் பொன். சரவணன்



மாலைநேரத்து மயக்கம் 

கதிரை மாய்த்தன்று ஓங்கல்
கங்குல் உய்த்தன்று திங்கள்
கண்ணை மூய்த்தன்று கமலம்
வெண்பல் ஏய்த்தன்று தளவம்
குடம்பை சேர்ந்தன்று குறும்பூழ்
மன்றம் ஊர்ந்தன்று மாவும் – மெல்ல என்
உயிரைத் தேய்த்தன்று மாலை.

பொருள்: கதிரவன் பெரிய மலையின் பின்னால் சென்று மறைந்துகொள்ளவும் இருளைக் கிழிப்பதுபோல் நிலவு வெளிப்படவும், நிலவைக் கண்டதும் தாமரைமலர் தனது கண்ணை மூடிக் கொள்ளவும், இதைக்கண்ட முல்லைக்கொடியானது தனது வெண்ணிறப் பற்களைக் காட்டிக் கேலியாகச் சிரிக்கவும், பறவைகள் தங்களது கூடுகளைச் சென்று அடையவும், ஆடுகளும் மாடுகளும் தங்கள் தொழுவத்திற்குத் திரும்பவும் இதோ மாலைப் பொழுது வந்தே விட்டது. என் உயிர் என்னைவிட்டு மெல்லப் பிரியத் தொடங்கி விட்டது. 


நன்றே செய்க ! இன்றே செய்க !!

தோன்றிய இடந்தனைக் காணலும் ஆகா
ஊன்றிய இடந்தனை உணர்தலும் ஆகா
ஞான்றிய உலகிதில் நம்மிடம் எதுவென
சான்றுகள் காட்டுவ நமதுநற் செயலே.

பொருள்: நாம் உருவான இடமான கர்ப்பப்பையினை நாம் காண இயலாது. அதைப்போல நாம் இறந்த பின்னால் நம்மைப் புதைத்து ஊன்றிய இடத்தையும் நம்மால் உணர இயலாது. அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இப் பூவுலகில் நமக்கான இடம் எதுவென்று நமக்குத் தெளிவாகக் காட்டும் சான்றுகளாக இருப்பவை நாம் செய்யும் நற்செயல்கள் மட்டுமே. ஆதலால் நன்றே செய்க ! அதையும் இன்றே செய்க.!!






தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/






Saturday, March 30, 2019

மரத்தின் சிரிப்பு



—  திருத்தம் பொன். சரவணன்



அந்த மாமர இலைகளிடம்
அப்படி என்ன நகைச்சுவையைக்
கூறிச் சென்றதோ காற்று
குலுங்கிச் சிரித்தன இலைகள்.

காற்றும் மரமும் நண்பர்களோ
காற்று பேசும் போதெல்லாம்
குலுங்கிச் சிரித்தன இலைகள்
கைதட்டிச் சிரித்தன நெற்றுக்கள்

காற்றும் கொடியும் காதலரோ
காற்று தீண்டும் போதெல்லாம்
நெளிந்து அசைந்தது அதன்இடை

நெகிழ்ந்து சிரித்தது அதன்மலர்







தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/




Friday, March 8, 2019

கலைச்சொல்லாக்க உத்திகள்




—  திருத்தம் பொன். சரவணன்

 

1.   சங்கச்சொல் உத்தி:
         கலைச்சொல் என்பது சொற்செறிவும் பொருட்செறிவும் கொண்டதாக இருத்தலே முதல் விதி என்பதால் சங்க இலக்கியச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு கலைச்சொற்களைப் படைக்கலாம். இதன்மூலம் தற்போது வழக்கில் இல்லாத சங்ககாலத் தமிழ்ச் சொற்கள் அழிந்துபோகாமல் மீண்டும் மக்கள் வழக்கிற்கு வரும். சான்றாக, WATCH TOWER, SLAUGHTER HOUSE ஆகிய சொற்களுக்குப் புதிய பெயர்களைப் படைக்காமல், அதே பொருளைத் தருகின்ற இதணம், நூழில் போன்ற சங்கச் சொற்களைப் புழக்கத்திற்குக் கொண்டுவரலாம்.

2.   ஒருபொருட் பன்மொழி உத்தி:
         கலைச்சொற்களைப் படைக்கும்போது அவற்றில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை ஐந்துக்கு மிகாமல் இருப்பது சிறப்பானது. காரணம், நீண்ட சொற்களைப் பயன்படுத்துவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவர். சுருக்கமான கலைச்சொல் அமைக்கப் பெரிதும் உதவுவது ஒருபொருட் பன்மொழிகள் ஆகும். சான்றாக, அறிவு என்னும் பொருளைக் குறிப்பதற்கு மதி, மருங்கு, புலமை, காட்சி, நூல் போன்ற பல சொற்கள் உண்டு. இந்த அடிப்படையில், ARTIFICIAL INTELLIGENCE என்னும் சொல்லுக்குச் செயற்கை நுண்ணறிவு என்றோ செயற்கை அறிவு என்றோ நீளமான சொற்களைப் படைக்காமல் சுருக்கமாக, செய்மதி என்று கலைச்சொல் படைக்கலாம்.

3.   தலைக்கூட்டு உத்தி:
         தகுதியான சுருக்கமான கலைச்சொற்களை அமைக்க இயலாதபோது, தலைக்கூட்டு ( ACRONYM ) முறைப்படிக் கலைச்சொற்களைப் படைக்கலாம், சான்றாக, AIR CONDITIONER என்பதற்குக் குளிர் காற்றுப் பெட்டி என்பதைப் போல நீளமான பெயர் வைக்காமல் தபனி என்று சுருக்கமாகப் பெயர் வைக்கலாம். தபனி என்பது ‘தண் பத நிறுவி’ என்ற பெயரின் முதல் (தலை) எழுத்துக்களைக் கூட்டிப் பெறப்பட்டதாகும். இதேமுறைப்படி, AIR COOLER க்குப் புபனி (புனல் பத நிறுவி) என்று அமைக்கலாம்.

4.   மூலச்சொல் உத்தி:
         ஒரு ஆங்கிலச்சொல்லுக்குத் தமிழில் கலைச்சொல் அமைக்கும்போது அந்த ஆங்கிலச் சொல்லுடன் தொடர்புடைய பிற ஆங்கில சொற்களுக்கும் தமிழ் மூலச்சொல்லை ஒட்டினாற்போல கலைச்சொற்களைப் படைக்கமுடியுமா என்று பார்க்கவேண்டும். சான்றாக, AMPLIFIER என்னும் சொல்லுக்கு ஒலிபெருக்கி என்று பெயர் வைத்தால், AMPLE, AMPLIFY, AMPLIFICATION ஆகிய சொற்களுக்கு ஒலிபெருக்கி என்னும் சொல்லின் அடிப்படையில் கலைச்சொல் படைக்க இயலாது. மேலும் AMPLIFY என்பது ஒலியுடன் மட்டும் தொடர்புடையதன்று. எனவே, இவற்றிற்குக் கீழ்க்காணும் மூலச்சொல் முறைப்படிக் கலைச்சொல் படைக்கலாம்.
மூலச்சொல்: 
AMPLE = மலிர்     
AMPLIFY = மலிர்த்து   
AMPLIFICATION = மலிர்ப்பு
AMPLIFIER = மலிர்த்தி / மலித்தி    
AMPLIFIED = மலிர்த்திய

5.   கிளைப்பெயர் உத்தி:
         ஒரே பொருளைக் குறிக்கும் பல்வேறு ஆங்கிலக் கிளைப் பெயர்களுக்கு ஒரே பொருளைக் குறிக்கும் பல்வேறு தமிழ்க் கிளைப்பெயர்களை இடமறிந்து கலைச்சொல்லாகப் படைக்கலாம். சான்றாக,
SKIN = உரி
LEATHER = தோல்
HIDE = சொலி
DERMIS = அதள்
EPIDERMIS = மீயதள்
HYPODERMIS = கீழதள்

6.   வகைப்பெயர் உத்தி:
         மேற்கண்டதைப் போல, ஒரே வகையினைச் சேர்ந்த பல பொருட்களுக்குத் தமிழில் இணையான பெயர்கள் இல்லாதபோது புதிய பெயர்களை மிகச்சிறிய வேறுபாட்டுடன் கூட்டாகச் சமைக்கலாம். சான்றாக,
VIDEO = நுது
CINEMA = இனுது (இன் + நுது)
BIOSCOPE = காணுது (காண் + நுது)

7.   புத்தாக்க உத்தி:
         வழக்கில் இல்லாத சங்கத் தமிழ்ப் பெயர்ச்சொற்களின் ஈற்றில் சிறிய மாற்றங்களை உண்டாக்கிப் பல வினை மற்றும் பெயர்ச்சொற்களைப் புதிதாக உருவாக்கிப் பயன்படுத்தலாம். சான்றாக, உலவை என்பது காற்றைக் குறிக்கும் சொல்லாக இருக்கும்நிலையில், இதிலிருந்து கீழ்க்கண்டவாறு புதிய வினை / பெயர்ச்சொற்களைப் படைக்கலாம்.
AIR = உலவை
AERO = உல
AERATE = உலப்பு
AERATION = உலப்பம்
AERATOR = உலப்பர்
AERATED WATER = உலப்பறல்

8.   உருவொப்பு உத்தி:
         சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் கலைச்சொல் படைக்கும்போது உருவொப்பு முறையினைப் பயன்படுத்தலாம். சான்றாக, உருவ / வடிவ ஒப்புமையின் அடிப்படையில் கீழ்க்காணும் சொற்களைப் படைக்கலாம்.
GEAR (NOUN) = துத்தி (காய்) >>> GEAR (VERB) = துத்து
NUCLEUS = பொகுட்டு >>> NUCLEAR = பொகுட்ட, NUCLEON = பொகுடி

9.   வினையுவமை உத்தி:
         சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் கலைச்சொல் படைக்கும்போது செயல் / வினையுவமை முறையினையும் பயன்படுத்தலாம். சான்றாக, வயலில் நுகம்கொண்டு கீழ்மேலாக உழுகின்ற செயலைக் கீழ்க்காணும் வகையில் ஒப்பிட்டுக் கலைச்சொற்களைப் படைக்கலாம்.
GRAPH (VERB) = நுகு
GRAPH (NOUN) = நுகி
GRAPHY = நுகுதி
GRAPHER = நுகுதர்
GRAPHICS = நுகியம்
GRAPHOLOGY = நுகியல்

10.  பண்புவமை உத்தி:
         சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் கலைச்சொல் படைக்கும்போது பண்புவமை முறையினையும் பயன்படுத்தலாம். ஒரு பண்பினைக் கொண்ட ஒரு பொருளின் பெயரை அதே பண்பைக் கொண்ட இன்னொரு பொருளுக்குப் பெயராக அமைக்கலாம். சான்றாக,
PHOTON = புகர்
PHOTONICS = புகரியம்
PHOTO = புகரி

11.  தொழிலடைவு உத்தி:
         பல பயன்பாட்டுப் பொருட்களுக்கான பெயர்களை அவற்றின் பயன்பாடு அல்லது தொழிலின் அடிப்படையில் வைக்கும்போது, அதன் நீளம் மிகாதவண்ணம் கீழ்க்காணுமாறு அமைக்கலாம். சான்றாக,
SCAN = தோயல்
XEROX = சாயல்
FAX = ஓச்சல்
PRINT = பொருநல்
PIZZA = மிசி (மிசைதல்) 
BURGER = கதூ (கதுவுதல்)

12.  துறைசார் உத்தி:
         இதுவரை மேலே கண்டவை அனைத்துத் துறைகளுக்கும் பொதுவான உத்திகள் ஆகும். இவைதவிர, ஒவ்வொரு துறைக்கும் துறைசார்ந்த சிறப்பு உத்திகளும் உண்டு. அவை தனித்தனியே வடிவமைக்கப் படவேண்டும். சான்றாக, வேதியியல் துறைக்கான உத்திகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
CARBON = கரி
CARBONACEOUS = கரிச
CARBONIC = கரிம
CARBO = கார்

OXYGEN = உயிர்வளி
OXY / OXYL = உய் / உஞ்ச்
OXIDE = உஞ்சை

HYDROGEN = உறைவளி
HYDRO = உறு
HYDRIDE = உறடு 
HYDRATE = உறேடு





தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/






Thursday, December 27, 2018

இயற்கையின் இறைவழிபாடு

—  திருத்தம் பொன். சரவணன்


வெள்ளை வெண்முகிலே !
துள்ளும் மடமயிலே !!
கொள்ளை போனதுஎன்
உள்ளமுன் அழகினிலே !!!

வெண்ணெய் தின்றுவக்கும்
கண்ணன் துயிலிருக்கும்
பெண்மை தலைக்கொண்ட
மென்மை வெண்முகிலே !

கருமை நிறங்கொண்ட
திருமால் சேர்ந்தானோ?
வெண்மை நிறம்போய்நீ
கண்மை பூண்டதென்ன?

எறியும் மின்னொளியோ(டு)
அறையும் இடியெதற்காம்?
இறைவன் திருவடிக்கோர்
முறைசெய் வழிபாடோ?

கண்ணா போற்றியென
மண்ணோர் கைகூப்ப
அளிந்ததே அக்கார்மலை !!
பொழிந்ததே புதுப்பூமழை !!!




தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/

Wednesday, September 26, 2018

சங்க இலக்கியத்தில் வண்டியும் சக்கரமும்


—  திருத்தம் பொன். சரவணன்



முன்னுரை:
            வண்டி என்று சொன்னவுடன் இக்காலத்து மக்களுக்கு உடனே நினைவுக்கு வருவது என்னவோ ஈர்வை (டூவீலர் / மொபெட்) தான். அதிக வசதி கொண்டவர்களுக்கு நால்வை (கார்) நினைவுக்கு வரும். ஆனால் இவையெல்லாம் எத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து எப்படியெல்லாம் உருமாறி நம்முன்னால் வந்து நின்றன என்ற வரலாறு நம்மில் பலபேருக்குத் தெரியாது. உண்மையில் வண்டிகளின் ஆதி தோற்றம் பற்றிய சரியான கால ஆய்வு என்பது முழுமையாகச் செய்யப்படவுமில்லை இதுவரையிலும் அறியப்படவுமில்லை. இவ் ஆய்வுகளைச் செய்யப் புகுந்தோரும் கீழைநாடுகளின் பண்பாடுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் அரைகுறையாக ஆய்வுசெய்து தமது முடிவுகளை அறிவித்திருக்கின்றனர்.



            சக்கரங்களின் கண்டுபிடிப்பிற்குப் பிறகே வண்டிகள் கண்டறியப்பட்டு அவற்றில் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்ற கருத்தே வலுவாக எங்கும் நிலவுகிறது. அதாவது சக்கரங்கள் கண்டுபிடிக்கப் பட்டபின்னர் அவை முதன்முதலில் மண்பாண்டத் தொழிலில்தான் பயன்படுத்தப் பட்டதென்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சக்கரங்கள் எப்போது எங்கே யாரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது? இச் சக்கரங்களைக் கொண்டு யார் முதன்முதலில் மண்பானைகளைச் செய்தார்கள்? என்ற கேள்விகளுக்கு மிகச்சரியான ஆதாரங்களுடன் கூடிய விடையினை இதுவரை எந்தவொரு ஆய்வாளரும் முன்வைக்கவில்லை என்பதே உண்மையாகும்.

            முன்பொரு காலத்தில் இந்தியா முழுவதிலும் தமிழர்களே வாழ்ந்திருந்தனர் என்பது நான்கு கடவுள் - பகுதி 3 - தொல்தமிழகம் என்ற ஆய்வுக்கட்டுரையில் பல சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட தொல்தமிழர் பண்பாட்டில் வண்டிகளும் சக்கரங்களும் எவ்வகையான பயன்பாட்டில் இருந்தன என்பதற்குச் சங்க இலக்கியங்களைத் தவிர வேறு உறுதியான ஆதாரங்கள் கிடைக்காத நிலையே இதுநாள்வரையிலும் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த தொல்பொருள் எச்சங்கள், இலக்கிய ஆதாரங்களுக்குத் துணையாக நின்று மேலும் வலுசேர்க்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், சங்க இலக்கிய ஆதாரங்கள் மற்றும் அகழ்வாய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு சங்ககாலத் தமிழரின் பண்பாட்டில் வண்டியும் சக்கரங்களும் புழங்கப்பட்ட நிலையினைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையினைக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க இலக்கியத்தில் வண்டி:
            சங்க இலக்கியத்தில் வண்டி தொடர்பான பல பாடல்கள் உள்ளன. ஆனால் ஒரு பாடலில் கூட வண்டி என்ற சொல் பயிலப்படவில்லை. பாண்டில், தேர், வையம், சகடம், சாகாடு, ஒழுகை போன்ற பல பெயர்களால் வண்டியானது குறிக்கப்பெற்றுள்ளது. வண்டியைப் பற்றிப் பல சங்கப் பாடல்கள் கூறினாலும் பெரும்பாணாற்றுப்படையில்தான் விரிவான செய்திகளைக் காணமுடிகிறது. காளைமாடு பூட்டிய வண்டியினைக் கைக்குழந்தையினைக் கொண்ட பெண்ணொருத்தி ஓட்டிச்சென்ற நிகழ்வினை அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவரும் சங்கப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

.... கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார்
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம்
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப
கோழி சேக்கும் கூடு உடை புதவின்
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் உடை மூக்கின்
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப .... - பெரும். 46

பொருள்விளக்கம்: அந்த வண்டிச் சக்கரத்தின் சூட்டானது பெருத்திருந்தது. ஆரக்கால்கள் திருத்தப்பட்டிருந்தன. உருளியானது ஒரே மரத்தில் செய்யப்பட்டு பார்ப்பதற்கு முரசினைப் போலத் தோன்றியது. வண்டியின் பாரானது கணையமரம்போல பருத்த கழியினால் செய்யப்பட்டு இருந்தது. வண்டியின்மேல் இருந்த ஆரையின்மேல் பசுந்தாள்களைக் குவித்து இருந்தனர். இத்தாள்கள் உலர்ந்து கருத்துப்போன நிலையில், ஆரைக்குமேலாக வெண்ணிறத் துணியாலான பொதிமூட்டைகள் கயிற்றால் கட்டிவைக்கப்பட்டு இருந்த தோற்றமானது கருநிறக் குன்றின்மேல் வெண்மேகங்கள் இருப்பதைப் போலத் தோன்றியது. வண்டியின் பின்புறத்தில் இருந்த கோழிகள் தங்கும் கூடானது யானைகளைத் துரத்தும் தோட்டக் காவலர்கள் தங்குகின்ற உயரமான குடிசையினைப் போல ஆரையின் மேல் தோன்றியது. சிறிய மருப்பினைக் கொண்ட பெண்யானையின் முழங்காலைப் போலத் தோன்றிய ஒரு சிறிய உரலானது வண்டியில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. நாடகமாடும் பெண்கள் ஆடும்போது தம்கையில் எடுத்து வாசிக்கும் சிறியபறையினைப் போலத் தோன்றிய புளித்த மோர்க்கஞ்சியைக் கொண்ட மண்பானையானது வெண்ணிறத் துணியைக்கொண்டு மூடி கயிற்றால் கட்டப்பட்டிருக்க, கையில் குழந்தையைக் கொண்ட அப்பெண்ணானவள் வண்டியின் முன்னால் இருக்கும் வளைந்த பகுதியில் அமர்ந்தவாறு காளைமாட்டினைத் துரத்தி ஓட்டிக் கொண்டிருந்தாள்....

வண்டியின் பயன்பாடுகள்:
            சங்ககாலத் தமிழர்கள் என்னென்ன வகையான வண்டிகளைப் பயன்படுத்தினர் என்பதைச் சங்க இலக்கியங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. காளைமாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளை இழுவைக்குப் பயன்படுத்திய செய்திகளைக் கூறும் சங்கப் பாடல்கள் பல உள்ளன. இவற்றில் காளைமாடு பூட்டிய வண்டிகளைப் பாரம் சுமந்து செல்வதற்கும் குதிரை வண்டிகளை மனிதர்கள் பயணம் செய்வதற்கும் பயன்படுத்தி உள்ளனர். இதைப் பற்றிச் சங்கப் பாடல்கள் கூறும் செய்திகளை இங்கே காணலாம்.



அ. உப்புவண்டி:
            சங்ககாலத்தில் பொதுமக்கள் ஒரு மாட்டுவண்டியில் என்னென்ன திணைகளை எப்படியெல்லாம் ஏற்றிக்கொண்டு சென்றனர் என்பதை மேற்கண்ட பெரும்பாணாற்றுப்படை பாடலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி, கடலில் விளையும் உப்பினைச் சாத்தர்கள் (வணிகர்கள்) மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டு சென்று ஊருக்குள் விற்றனர். உமண் என்பது உப்பினைக் குறிக்கும் என்பதால் உப்பு விற்கும் சாத்தர்கள் உமணர் என்று அழைக்கப்பட்டனர். சங்க இலக்கியப் பாடல்களில் உமணர்களின் உப்பு வண்டி மிகப்பரவலாகப் பேசப்பட்டுள்ளது. ஒருசில பாடல்களை மட்டும் இங்கே சான்றாகக் காணலாம்.

இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம் - குறு.165
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட - புறம்.313
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் ஒழுகை உமணர் - நற்.331

            இக்காலத்தில் இருப்பதைப்போன்ற தார்ச்சாலைகள் சங்ககாலத்தில் இல்லை. ஆனால் கற்களை மண்ணில் தொடர்ச்சியாகப் பதித்து அவற்றின்மேல் மணலைக் கொட்டிப் பரப்பிச் சாலைகள் அமைத்திருக்க வேண்டும் என்ற கருத்து தோன்றுகின்றது. காரணம் கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல்கள் ஆகும். 

... விரி மணல் ஞெமர கல் பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ - புறம்.90

            வண்டிகள் சாலையில் செல்லும்போது பரப்பியிருந்த மணலின்மேல் சக்கரங்கள் ஏறுதலால் ஓசையுண்டாகவும் கற்கள் பிளந்து உடையவும் பெருமிதத்துடன் நடந்துசெல்லும் காளைமாட்டுக்குத் துறையும் உண்டா?என்று மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

உமணர் வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனி
கரும் கால் வெண்குருகு வெரூஉம் - நற்.4

            உமணர்கள் உப்பினை ஏற்றிய வண்டிகள் செல்லும் நீண்ட வழியில் மணலின்மேல் சக்கரங்கள் ஏறும்போது உண்டாகிய பெரும் ஓசையினைக் கேட்டு வயலில் இருந்த குருகினங்கள் அஞ்சிப் பறந்தன என்று மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

            மேற்காணும் பாடல்களில் இருந்து, சங்க காலத்தில் உமணர்கள் தங்களின் உப்புவண்டிப் போக்குவரத்திற்காக இதுபோன்ற கல்-மணல் சாலைகளை அமைத்துப் பயன்படுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்னதான் கல்-மணல் சாலைகளை அமைத்தாலும் மழையினால் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சீர்கெடத் தான் செய்யும். இதனால் ஆங்காங்கே சேற்றுநிலம் உண்டாகத் தான் செய்யும். வண்டிகள் உப்பினைச் சுமந்து செல்லும்போது வழியில் இருக்கும் சேற்றில் சில நேரங்களில் வண்டிச் சக்கரங்கள் சிக்கிக் கொள்ளும். பாரம் அதிகமாக இருப்பின் சிக்கிய சக்கரங்களை மீட்டு எடுத்து மேலேற்றுவதற்கு காளைமாடும் சரி மற்றவர்களும் சரி மிகவும் சிரமப்படுவார்கள். இதைப் பற்றிய செய்திகளைக் கூறும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் - புறம்.60
(பொருள்: உப்பங்கழியில் இருந்து உப்பினை ஏற்றிக்கொண்டு மலைநாடு செல்லும்வழியில் வண்டியின் சக்கரம் சேற்றில் சிக்கிக்கொள்ள, அதனைத் தனது வலிமையால் வென்று மீட்டெடுக்கும் எருதினைப் போன்ற பெரும் வலியுடைய எனது தலைவன்...)

நெய்தல் மரபின் நிரை கள் செறுவின்
வல் வாய் உருளி கதுமென மண்ட
அள்ளல் பட்டு துள்ளுபு துரப்ப
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து
சாகாட்டாளர் கம்பலை அல்லது பூசல் அறியா ...- பதி.27
(பொருள்: களிப்பான சேற்றில் வண்டியின் சக்கரங்கள் சிக்கிக்கொள்ள, எருதினையும் வண்டியினையும் மீட்க முயல்கின்ற வண்டிக்காரர்கள் எழுப்பும் பேரோசை அல்லது வேறோசையினைக் கேட்டறியாத....)

ஆ. குதிரை வண்டி:
            சங்ககாலத்தில் தமிழர்கள் குதிரைகளின்மேலும் குதிரைகள் பூட்டிய வண்டிகளிலும் ஏறிப் பயணம் செய்தனர் என்று "சங்க இலக்கியத்தில் விலங்கியல் - குதிரை" என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டோம். சங்க இலக்கியத்தில் "தேர்" என்று கூறப்படுவதான குதிரை வண்டி தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகளை இங்கே காணலாம்.



            குதிரை வண்டியை ஓட்டுபவனை வலவன் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. காளைமாடுகளைப் போலவே குதிரைகள் ஓட்டத்தின்போது தளர்ந்தால் அவற்றைக் குத்துக்கோல் கொண்டு வலவர்கள் குத்துவார்கள். குதிரைவண்டி வருவதனைப் பிறர் அறிந்து கொள்வதற்காக குதிரையின் கழுத்திலும் வண்டியிலும் ஒலிக்கின்ற பல மணிகளைக் கோர்த்துத் தொங்க விட்டிருப்பார்கள். இச்செய்திகளை எல்லாம் கீழ்க்காணும் நற்றிணைப் பாடலில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலிமா
வலவன் கோல் உற அறியா              
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே - நற்.78

            குதிரை வண்டியின் சக்கரமானது மாட்டுவண்டியைப் போலன்றி மெலிதாக இருக்கும். மணற்பாங்கான நெய்தல் நிலங்களில் செல்லும்போது சக்கரங்கள் மணலில் புதைந்துவிடாமல் இருப்பதற்கு ஏதுவாக சக்கரங்களின் மேல்வளைவில் அரத்தின் வாய்போன்ற கூரிய பல பற்களை வரிசையாகக் கொண்ட இரும்பினாலான பட்டைத் தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும். ஏறத்தாழ இவ் அமைப்பானது சேறுநிறைந்த வயலில் உழுவதற்குத் தற்காலத்தில் பயன்படுகின்ற நுகத்தேரின் (டிராக்டர்) சக்கரங்களின் அமைப்பினை ஒத்திருக்கும். குதிரை வண்டிகளின் ஆழிக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு சொல்லவேண்டும் என்றால், திருமாலின் கையிலிருக்கும் சக்கரப்படையினைச் சொல்லலாம். இத்தகைய சக்கரங்களை வள்வாய் ஆழி (கூரிய வாயினைக் கொண்ட சக்கரம்) என்றும் நேமி என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

தேரும் ஓவத்து அன்ன கோப செம் நிலம்
வள்வாய் ஆழி உள் உறுபு உருள கடவுக - அகம்.54

வள்வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலிமா ... - நற்.78

            குதிரை வண்டி வேகமாக ஓடும்போது வண்டிச் சக்கரங்களின்மேல் இருந்த தகடுகளில் கதிரொளி பட்டுத் தகதகவென ஒளிர்ந்தது. இதனால் இதனை இளம்பிறையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி .. - குறு.189

            சக்கரங்களில் பல்போன்ற அமைப்புக்கள் இருந்த காரணத்தினால் குதிரை வண்டிகள் செல்லும்வழியில் வளர்ந்திருக்கும் செடிகொடிகள், பயிர்கள் மற்றும் பூக்கள் வண்டிச் சக்கரங்களின் வாய்ப்பட்டு அறுபடும். இச் செய்திகளைக் கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர்
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா - நற்.338

இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப.. - குறு.189

பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
வாள்முகம் துமிப்ப வள்இதழ் குறைந்த கூழைநெய்தலும்... - குறு.227

            மலைக்குன்றில் இருந்து கீழ்நோக்கி வேகமாக இறங்கும்போது குதிரைவண்டியின் சக்கரங்கள் எழுப்பிய கடகட ஓசையானது கார்முகில்கள் மழைநேரத்தின்போது எழுப்பும் ஓசையினைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

விடு விசை குதிரை விலங்கு பரி முடுக
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி
கார் மழை முழக்கு இசை கடுக்கும்       
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே - அகம்.14

இ. வில்வண்டி:
தற்காலத்தில் வில்வண்டி என்று அழைக்கப்படும் வண்டியானது சங்க இலக்கியங்களில் ஆரைச்சாகாடு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஆரை என்பது வில்லைப் போன்று அரைவட்டமாக வளைந்த கூரையினைக் குறிப்பதாகும். வண்டியில் நீண்டதூர பயணம் செய்யும்போது வெயில் / மழையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கும் அலுப்பு தெரியாமல் இருப்பதற்கும் வண்டிக்கு மேலாக வில்போன்ற அமைப்பினை கூரையாக அமைத்திருப்பார்கள். அருகில் ஒரு வில்வண்டியின் படம் காட்டப்பட்டுள்ளது.



            பொதுவாக, வில்வண்டியில் இருக்கும் ஆரையானது மரச்சட்டங்களை வளைத்து அதன்மேல் துணிகொண்டு போர்வைபோல மூடிச் செய்யப்பட்டு இருக்கும். மழைக்காலங்களில் இந்தத் துணிகளில் நீர் ஊறி உள்ளே சொட்டக்கூடாதென்றும் வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும் ஆரையின் மேற்புறத்தில் பசுந்தளைகளை குவியலாகப் போட்டுக் கயிற்றால் கட்டியிருப்பார்கள். அதுமட்டுமின்றி, ஆரையிலுள்ள துணியின் அடிப்புறத்தில் அதாவது உட்புறமாக செவ்வரக்கு என்னும் மெழுகினை உருக்கித் துணியில் ஊற்றி வார்த்திருப்பர். இதனால் துணியில் இருந்து உட்புறமாக நீர் சொட்டாது. ஆரைத்துணியில் வார்த்திருந்த செவ்வரக்கானது முருக்கமரம் முழுவதிலும் மலர்ந்திருந்த செந்நிற மலர்களைப் போல அழகுடன் தோன்றியதாகச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

... ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை - சிறு.252 

            ஆரைத்துணியின் மேற்புறத்தில் குவித்து வைத்திருந்த பசுந்தளைகள் உலர்ந்துபோயிருக்க, உட்புறத்தில் செந்நிற அரக்கு பூசப்பட்டிருக்க அதைப்பார்த்த புலவருக்கு முதலையின் நினைவு வந்துவிட்டது. அந்த ஆரையின் அமைப்பானது பார்ப்பதற்கு எப்படி இருந்ததென்றால் ஒரு முதலையானது தனது வாயை அகலமாகத் திறந்து வைத்திருந்ததைப் போல நீண்டு இருந்ததென்று கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார்.

நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து - அக.301

            இன்னொரு புலவரோ ஆரையினை மலைக்குன்றுக்கு ஒப்பாகக் கூறுகிறார். காய்ந்துபோன தளைக்குவியலுக்கு மேலாக வெண்ணிறத் துணியாலான மூட்டைகளை அடுக்கிக் கயிற்றால் கட்டியிருந்தனர். இதைப்பார்த்த புலவருக்குக் கரிய மலைக்குன்றும் அதன்மேல் தங்குகின்ற வெண்மேகப் பொதிகளும் நினைவுக்கு வர உடனே கீழ்க்காணுமாறு பாடுகிறார்.

மாரிக் குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் .. - பெரும். 37

            வில்வண்டிகள் பயணத்திற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டன என்பதால் விரைவு கருதி பெரும்பாலும் குதிரைகளையே இவ் வண்டிகளில் பயன்படுத்தினர். பொருளாதார நிலைக்கேற்ப காளைமாடுகளும் வில்வண்டிகளில் பயன்படுத்தப்பட்டன.  

வண்டியின் உறுப்புக்கள்:
            சங்க காலத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வண்டிகளில் இருந்த பல்வேறு உறுப்புக்களின் பெயர்களைச் சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. காளைமாடுகள் பூட்டி இழுக்கப்படும் ஒரு வண்டியின் படமும் அதன் உறுப்புக்களைக் குறிக்கும் சங்கத் தமிழ்ப் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



சகடு / சக்ர - எது முதலில்?:
            மேலே கண்ட வண்டியின் பல்வேறு உறுப்புக்களில் சகடு என்பது வண்டியின் ஆழியைக் குறிக்கும் ஒரு சங்ககாலத் தமிழ்ச்சொல் ஆகும். இச்சொல்லில் இருந்தே வண்டியின் ஆழியைக் குறிக்கும் சக்ர என்னும் செங்கிருதச் சொல் தோன்றியது என்று இக்கட்டுரையின் ஏழாம் பகுதியில் கண்டோம். ஆனால், சக்ர என்னும் செங்கிருதச் சொல்லில் இருந்தே தமிழ்ச்சொல் ஆகிய சகடு / சகடம் தோன்றியது என்ற கருத்தே இதுவரையிலும் நிலவி வருகிறது. உண்மையில் இக்கருத்தானது மீள்பார்வை செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதனை இக்கட்டுரையின் முடிவில் தெரிந்து கொள்ளலாம்.

            ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாகக் கருதப்படும் சுமேரியப் பண்பாடு, மாய்கோப் பண்பாடு, முந்தை கூர்கன் பண்பாடு, கிழக்கு ஐரோப்பா பண்பாடு போன்ற பண்பாட்டினர் தான் உலகில் முதன்முதலில் சக்கரங்களைப் பயன்படுத்தியதாக விக்கிப்பீடியா கூறுகிறது. ஆனால், இந்தப் பண்பாடுகளில் யார் முதன்முதலில் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்ற கேள்விக்குச் சரியான விடையை இன்னும் காணமுடியவில்லை என்று அதே விக்கிப்பீடியா கூறுகிறது. அதுமட்டுமின்றி, உலகில் முதன்முதலில் சக்கரங்களை வண்டியில் பயன்படுத்தவில்லை என்றும் பானைசெய்யும் குயவர்கள் தான் சக்கரங்களை முதன்முதலில் பயன்படுத்தினர் என்றும் கூறுகிறது.

            மேற்கூறிய நான்கு விதமான பண்பாடுகளையும் பார்த்தால் அவை வெவ்வேறு நாட்டினைச் சார்ந்தவை என்பது புலப்படும். இத்தனைப் பண்பாடுகளைப் பற்றிக் கூறிய ஆய்வாளர்கள் ஏன் இந்தியாவின் தொன்முது பண்பாட்டினராக வாழ்ந்துவந்த சங்கத் தமிழரின் பண்பாட்டினைப் பற்றிக் கூறவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. உண்மையில், உலகின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்துவந்த இப் பண்பாட்டினர்கள் சக்கரங்களைக் கண்டறிந்து மட்பாண்டத் தொழிலுக்குப் பயன்படுத்திய அதே சமயத்தில்தான் இந்தியாவில் சங்கத் தமிழர்களும் ஆழிகளைப் பயன்படுத்தலாயினர் என்று உறுதியாகக் கூறலாம். தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் எச்சங்களை இக்கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்ளலாம். இதைப்பற்றிய விரிவான செய்திகளைக் கீழே காணலாம்.

ஆதிச்சநல்லூர் தாழிகள்:
            தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் என்னும் ஊரானது தொல்தமிழகத்தின் பண்பாட்டுத் தொட்டில் என்று கருதப்படுகிறது. அந்த அளவுக்கு அங்கே தொல்தமிழர் பண்பாட்டின் எச்சங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. 2004 ஆம் ஆண்டு செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் பலனாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஈமத்தாழிகள் கிடைத்துள்ளன. இத்தாழிகளுக்குள் இறந்த மனிதர்களின் எலும்பின் எச்சங்களும் கிடைத்துள்ளன. காரணம், சங்ககாலத் தமிழரின் பண்பாட்டின்படி இறந்தவர்களை முதுமக்கட் தாழி எனப்படும் மண்ணால் செய்யப்பட்ட பெரிய பெரிய தாழிகளுக்குள் (பானைகள்) வைத்துத்தான் புதைப்பார்கள். இதைப்பற்றிய செய்திகள் பல சங்க இலக்கியப் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.



            இந்த ஈமத்தாழிகளுக்குள் இருந்த எச்சங்களின் வயதானது கார்பன் டேட்டிங் முறைப்படி 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து, ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னரும் அந்த ஊரில் தமிழர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும் அத் தமிழர்கள் மண்தாழிகளை உருவாக்கத் தெரிந்தவர்கள் என்பதும் உறுதியாகிறது. சக்கரங்களின் உதவியின்றி இவ்வளவு பெரிய மண்தாழிகளை அதுவும் சரியான வடிவில் உருவாக்க இயலாது என்பதால் அவர்கள் கண்டிப்பாகச் சக்கரங்களைப் பயன்படுத்தி இருக்கவேண்டும் என்பதும் உறுதியாகிறது. இக்கூற்றுக்கு ஆதாரமாக உள்ள சங்கப் பாடல்கள் சிலவற்றையும் கீழே காணலாம்.



சான்று எண்: 1
கலம் செய் கோவே கலம் செய் கோவே
இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர்உலகம் எய்தினன் ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இரு நிலம் திகிரியா பெரு மலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே - புறம்.228

பொருள்சுருக்கம்: நெடுமா வளவன் என்னும் மன்னன் இறந்துவிட்டான். அவனைப் புதைப்பதற்கு ஈமத்தாழி தேவைப்படுகிறது. மற்றவர்களைப் போலன்றி இம் மன்னன் கொடையிலும் வீரத்திலும் மிகப் பெரியவன் என்பதால் இவனை மிகப்பெரிய தாழிக்குள் வைத்துத்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று விரும்பும் புலவர் பானைசெய்யும் குயவனைப் பார்த்து இவ்வாறு கேட்கிறார் : " பானைசெய்யும் பெரும் குயவனே ! நெடுமாவளவனுக்கான ஈமத்தாழியை எவ்வாறு செய்யப் போகிறாய்?. இந்த மண்ணுலகத்தையே சக்கரமாகவும் பெரிய மலையினையே மண்ணாகவும் கொண்டு இம்மன்னனுக்கான ஈமத்தாழியைச் செய்ய உன்னால் முடியுமா?. ".

            புலவர் இந்த மண்ணுலகத்தினைச் சக்கரமாகக் கருதியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஆம், இந்த மண்ணுலகம் ஒரு சக்கரத்தினைப் போல எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பதால்தான் புலவர் அதனை ஒரு சக்கரமாகக் கொள்ளச் சொல்கிறார். சக்கரத்தின்மேல் வைத்துச் செய்யப்படும் மண்ணுக்குப் பதிலாக பெரிய மலையினையே மண்ணாகக் கொள்ளச் சொல்கிறார். இந்த அருமையான உவமையிலிருந்து பெறப்படும் வரலாற்றுச் செய்தி இதுதான்: சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த குயவர்கள் சக்கரங்களைக் கொண்டே பானைகளை உருவாக்கி இருக்கின்றனர்.

சான்று எண்: 2
.... வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனை கல திகிரியின் குமிழி சுழலும்      
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் ... - மலை.475

பொருள்விளக்கம்: வயலில் வெண்ணெல்லை அரிவோர் எழுப்பிய உடுக்கை ஒலியைக் கேட்டு அஞ்சிய எருமைக் கடாவொன்று தனது கூட்டத்தைப் பிரிந்து வேகமாக ஓடியது. அப்போது நிலத்தில் தேங்கியிருந்த நீரின்மேல் அதன் கால்கள் பதியவும் அதிலிருந்து வட்டவட்டமாக அலைகள் தோன்றிக் கொண்டே இருந்தன. இதைப் பார்ப்பதற்குக் குயவன் பானைசெய்யப் பயன்படுத்தும் சக்கரம் சுற்றுவதனைப் போலத் தோன்றியது.

            இப்பாடலில் வரும் 'வனைகலத் திகிரி' என்பது குயவன் பானை வனைய / செய்யப் பயன்படுத்தும் சக்கரத்தைக் குறிப்பதாகும். இதிலிருந்து, சங்ககாலத் தமிழர்கள் பானைசெய்வதற்குச் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்னும் செய்தியினைப் பெறமுடிகிறது.

முடிவுரை:
            இதுவரை கண்டதிலிருந்து சங்ககாலத் தமிழகத்தில் சக்கரங்கள் இழுவைத் தொழிலுக்கு மட்டுமின்றி மண்பாண்டத் தொழிலுக்கும்  பயன்படுத்தப்பட்டு வந்தன என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த தொல்பொருள் எச்சங்களின் வயதின்படி தமிழகத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சக்கரங்களைக் கொண்டு மண்பானைகள் செய்யப்பட்டது என்றும் அறியப்பட்டது. இவ் இரண்டையும் இணைத்துப் பார்க்குமிடத்து, சக்கரங்கள், மண்பாண்டங்கள் மற்றும் வண்டிகளை உருவாக்கும் அறிவியலைத் தமிழர்கள் பிறரிடமிருந்து கற்கவில்லை என்பதும் சக்ர என்ற சொல்லில் இருந்து சகடு என்னும் தமிழ்ச்சொல் தோன்றவில்லை என்பதும் உறுதியாகிறது. இக் கூற்றுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சக்கரம், மண்பாண்டம், வண்டி தொடர்பான தமிழ்ச்சொற்கள் பலவும் எப்படியெல்லாம் திரிந்து இந்தியாவின் பிறமாநில மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை பிறிதொரு  கட்டுரையில் விரிவாகக் காணலாம்.





___________________________________________________________
தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/




Saturday, June 2, 2018

முகநூல்


——    திருத்தம் பொன். சரவணன்


முகநூலில் முகம்புதைத்து 
அகம்தொலைக்கும் அன்பர்களே
கடந்தோடும் காலமதில்
கணப்பொழுதே கேளுங்களேன்.

நொடிக்குவொரு அஞ்சல்
உடனுக்குடன் பகிர்தல்
உவக்குமாறு கெஞ்சல்
உவப்புகண்டு மகிழ்தல்

எதுமெய்? எதுபொய்?
அறியவேண்டாமா உண்மை?
எதுசரி? எதுதவறு?
அலசவேண்டாமா நன்மை?

சாதிக்கொரு சங்கமுண்டு
வீதிக்கொரு மன்றமுண்டு
பாதிக்கப்பட்ட மக்களின்
நீதிக்கொரு இடமுண்டா?
நாதியற்ற ஏழைகளின்
வேதனையைப் பகிர்வோமே.

அரசியல் பேசினாலும்
ஆன்மீகம் பேசினாலும்
சீர்கெட்டுப் போகாமல்
நேர்படவே பேசிடுவோம்
சாதீயம் போற்றாமல்
சாதனைகள் பகிர்வோமே.

முகிலென்றால் மழைபொழியும்
முகமென்றால் அன்புமொழியும்
முகநூலில் முகம்புதைத்து 
அகமதனைத் தொலைக்காமல்
முகநூலில் அகம்விதைத்து
முகம்மலரச் செய்வோமே. 

(குறிப்பு: அகம் = அன்பு )


________________________________________________________________________
தொடர்பு:  திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
https://thiruththam.blogspot.in/





மதுரைக் காதல்

——    திருத்தம் பொன். சரவணன்





கடாஅம் கமழும் களிமத யானைக்
காலுறக் கவ்விய கடுப்புடைக் கராஅம்
மேந்தோல் அன்ன பாகல் செழுங்கனி
மேவர மொசிக்கும் முயிற்றினம் போல
பெருஞ்சோறு அருந்தி பரிசிலும் பெறீஇயர்
பொருநர் பாணரொடு கூத்தரும் வரிப்ப
ஆனாது அளித்த அடிசில் நறுநெய்
நாகம் அசைந்தென நெடுவழி ஒடும்
தேனார் பூம்பொழில் மதுரை யதனில்
வானார் மதியின் காய்வெண் ணிலவில்
பூணாகம் பெறும் பெருங்கல் நாட
பொருள்வயின் எமைநீர் பிரிந்தே செல்விரேல்
வரும்வரை தாங்குமோ தெய்ய ?
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு
மறுகியே மாளும் என்னுயிரே!



________________________________________________________________________
தொடர்பு:  திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
https://thiruththam.blogspot.in/2018/02/7.html

Sunday, May 27, 2018

உயிர்த்தெழு தமிழா


——    திருத்தம் பொன். சரவணன்

உயிர்த்தெழு தமிழா உடைத்திடு தடைகளை
மயிர்த்திரள் நாமென்று நினைத்திடும் மடையர்களை
புடைத்திடு தமிழா புயலென வீசிடு
படைத்திடு புதியதோர் தமிழகப் பொன்னாடு !

பொங்கும் தமிழ்பேசும் பொலிகாளை இளைஞர்களே
சிங்கம் போலெழுந்து நீங்கள் சீறிவிட்டால்
தங்கும் இடமின்றித் தீயவர்கள் தெறித்தோட
அங்கே தோன்றிடுமே தமிழகப் பொன்னாடு !

காகம் விரித்திட்ட காவிரி ஆறெங்கே?
தாகம் எடுத்திட்டால் குடிக்க நீரெங்கே?
மேகம் பொய்த்தாலும் முயன்று தளராமல்
போகம் மூன்றெடுத்த உழவன் தானெங்கே?

நெல்விளைந்த மண்ணெல்லாம் கல்விளைந்த கட்டிடமாய்
புல்முளைத்த இடமெல்லாம் புதுப்புது நகர்களாய்
சொல்விளைந்த பள்ளிகளே சீர்கெடுக்கும் பாழிகளாய்
வல்வினையோ இதுவென்று வாளாது இருக்கலாமா?

கடமை கண்ணியம் சிறிதுமில்லை கட்டுப்பாடும்
காசெடுக்கச் சென்றால் இயந்திரத்தில் தட்டுப்பாடும்
கண்முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டும்
விண்ணென்று வெகுளாமல் வீற்று இருக்கலாமா?

கோடிகள் கொண்டோடிக் கொடியோர்கள் வாழ்ந்திருக்க
வாடிய வயிறுடனே உழவர்கள் சாகலாமோ?
கூடிய கொள்ளையர்கள் கொட்டம் அடங்கிடவே
மூடிய கைகொண்டு முகங்களைப் பெயர்த்தெறி !



________________________________________________________________________
தொடர்பு:  திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
https://thiruththam.blogspot.in/2018/02/7.html

Thursday, February 8, 2018

சங்க இலக்கியத்தில் பூனை


——    திருத்தம் பொன். சரவணன்





முன்னுரை:
    பூனை - என்றதும் குறுகுறு மீசைமுடிகளுடன் கண்களைச் சுருக்கிக்கொண்டு மியாவ் என்று கத்தும் அந்த அழகிய குட்டி விலங்கினை யாருக்கும் நினைவு வராமல் இராது. இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக வீட்டிற்குள் நுழைந்து பாலைக் குடித்துவிடும் பூனை இப்போதெல்லாம் பகலிலும் அந்த வேலையைச் செய்கிறது. பாலுக்குக் காவல் பூனையா? என்று கேட்ட காலமெல்லாம் போய் இப்போது பூனைகளை வீட்டிலேயே செல்லமாக வளர்க்கிறார்கள். நாயினைப் போலவே பூனைக்கென்று தனிப்பட்ட உணவுவகைகளும் வந்துவிட்டன. நாயினைப் போலன்றி, வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் செல்ல விலங்கான பூனைகளைச் சங்க காலத்தில் தமிழர்கள் தங்கள் வீட்டில் வளர்த்தார்களா என்பதைப் பற்றியும் சங்க இலக்கியங்களில் பூனைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளையும் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

பூனை - பெயர்களும் காரணங்களும்:

    பூனை என்னும் விலங்கினைக் குறிக்க வெருகு, வெருக்கு, பிள்ளை, பூசை ஆகிய பெயர்களே சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாம் தற்போது புழங்கிவரும் பெயரான பூனை என்ற பெயர் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பது வியப்புக்குரியது. ! இவற்றுள்,

வெருகு, வெருக்கு ஆகிய பெயர்கள் இவ் விலங்கின் வெருவுதல் அதாவது அஞ்சுதல் பண்பினாலும்
பிள்ளை என்ற பெயர் குழந்தையைப் போல இரவில் ஓசையெழுப்பும் பண்பினாலும்
பூசை என்ற பெயர் பூப்போல பலமற்ற உடலினை உடையது என்ற பொருளிலும் ஏற்பட்டிருக்கலாம்.

    பூசை என்னும் பெயரே பின்னாளில் பூஞை என்றும் பூனை என்றும் மருவியிருக்க வேண்டும். பல்வேறு இந்திய மொழிகளில் பூனைகளைக் குறிக்கும் பெயர்கள் சங்க இலக்கியத் தமிழ்ப் பெயர்களை ஒட்டியே அமைந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தி - பில்லி - சங்க இலக்கியப் பெயரான பிள்ளை என்ற பெயரில் இருந்து மருவியது.
மலையாளம் - பூச்சா - சங்க இலக்கியப் பெயரான பூசை என்ற பெயரில் இருந்து மருவியது.
தெலுங்கு - பில்லி - சங்க இலக்கியப் பெயரான பிள்ளை என்ற பெயரில் இருந்து மருவியது.
கன்னடம் - பெக்கு - சங்க இலக்கியப் பெயரான வெருகு என்ற பெயரில் இருந்து மருவியது.

சங்க இலக்கியத்தில் பூனை:
    சங்க இலக்கியத்தில் பேசப்பட்டுள்ள பூனை காட்டுப்பூனை ஆகும். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த இந்த காட்டுப்பூனையின் விலங்கியல் பெயர் ஃபெலிஸ் சாவஸ் ( Felis chaus ) ஆகும். காடுகளில் மட்டுமின்றி காடுகளுக்கு அருகில் உள்ள ஊர்களிலும் இவை வசித்தன. காட்டுப்பூனையின் கடைவாயில் உள்ள கோரைப்பற்கள் நீண்டு கூரிதாய் இருந்ததாகவும் பார்ப்பதற்கு இவை முல்லைமலரின் கூரிய மொட்டுக்களைப் போலத் தோன்றியதாகவும் இலக்கியம் கூறுகிறது. காட்டுப்பூனையின் காலடி விரல்கள் குவிந்தநிலையில் இருந்ததாகவும் அது இலுப்பைப் பூவினைப் போலத் தோன்றியதென்றும் கூறப்பட்டுள்ளது. காட்டுப்பூனையின் கண்கள் இரவிலும் ஒளிரும் தன்மை கொண்டவை என்று கூறுகிறது. இரவு நேரங்களில் எலியினை வேட்டையாடி உண்ணும் காட்டுப்பூனையானது சில நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்பட்ட கோழிகளையும் வேட்டையாடிக் கொன்றுண்ட செய்திகள் கூறப்பட்டுள்ளன. காட்டுப்பூனையின் உடலில் பல நிறங்கள் உண்டென்றும் வரையப்பட்ட ஓவியம் போல அது இருந்ததாகவும் கூறுகிறது. காட்டுப்பூனையின் குட்டிகளின் உடலில் இருந்த மயிர் வெள்ளைநிறத்தில் புசுபுசுவென்று இலவம் பஞ்சு போல இருந்ததாகவும் தாயினைச் சுற்றி குட்டிகள் இருந்தபோது பார்ப்பதற்கு வானத்தில் நிலவினைச் சுற்றி விண்மீன்கள் இருந்ததைப் போலத் தோன்றியதாகவும் இலக்கியம் குறிப்பிடுகிறது. சங்ககாலத் தமிழர்களின் வீட்டில் பூனை வளர்க்கப்பட்டதாகச் செய்திகள் எதுவும் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்படவில்லை.

சங்க இலக்கியத்தில் காட்டுப்பூனை குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களில் விரிவாகக் காணலாம்.
1. பூனையின் மயிர்
2. பூனையின் பல்
3. பூனையின் கண்கள்
4. பூனையின் காலடி
5. பூனையின் உணவு
6. பூனையும் குட்டிகளும்

1. பூனையின் மயிர்:


 
    பூனையின் பல சிறப்பு அம்சங்களில் அதன் மயிரும் ஒன்று. புசுபுசுவென்று பஞ்சினைப் போல மென்மையான மயிர் அதன் உடல் முழுவதும் மூடியிருக்கும். பூனையை வளர்ப்பவர்கள் அடிக்கடி அதனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சுவதற்கான காரணங்களில் பூனையின் மென்மயிரும் ஒன்று. பூனையின் உடல் மயிரில் பல நிறங்கள் உண்டு. உடல் முழுவதும் அழகிய வண்ணத்தில் நேர்த்தியான பல கோடுகளைக் கொண்டிருந்த ஒரு காட்டுப்பூனையானது பார்ப்பதற்கு வரையப்பட்ட ஒரு ஓவியம் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

எழுதி அன்ன கொடி படு வெருகின் - அகம். 297

    காட்டுப்பூனையின் குட்டிகளின் உடலில் புசுபுசுவென்று பொலிந்திருந்த மென்மையான வெண்ணிற மயிரினை இலவ மரத்தின் பஞ்சுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் அகப்பாடல்.

பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை - அகம். 297

    இப்பாடலில் வரும் பூளை என்பது இலவ மரத்தின் பஞ்சினைக் குறிக்கும்.

2. பூனையின் பல்:



    பூனையின் வாய்க்குள் பார்த்தால், சிறிய கோரைப்பற்கள் சிலவற்றுடன் மேல்தாடையில் நீண்ட கோரைப்பற்கள் இரண்டும் கீழ்த்தாடையில் நீண்ட கோரைப்பற்கள் இரண்டும் இருக்கும். இரையினைக் கிழித்துச் சாப்பிட இந்த நீண்ட கோரைப்பற்கள் உதவுகிறது. வெண்ணிறத்தில் கூர்மையுடன் விளங்கும் இந்த நீண்ட கோரைப்பற்களுக்கு உவமையாக வெண்ணிறத்தில் பூத்திருக்கும் முல்லை மலரின் கூரிய மொட்டுகளைச் சங்கப் புலவர்கள் பல பாடல்களில் பாடியுள்ளனர். அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே சான்றாகக் காணலாம்.

வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு.240

பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் - அகம். 391

பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய
பாசிலை முல்லை முகைக்கும் - புறம். 117

பூத்த முல்லை வெருகு சிரித்து அன்ன
பசு வீ மென் பிணி குறு முகை அவிழ்ந்த - குறு. 220

    முல்லையின் மலராத கூரிய மொட்டுக்களைப் பார்த்த போதெல்லாம் புலவர்களுக்குப் பூனையின் கூரிய நீண்ட கோரைப்பற்களே நினைவுக்கு வந்ததனை மேற்பாடல் வரிகள் கூறாநிற்கின்றன. அருகில் உள்ள படத்தில் முல்லையின் கூரிய மலர் மொட்டும் பூனையின் நீண்ட கோரைப்பல்லும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

3. பூனையின் கண்கள்:


 
    பூனையின் சிறப்பு அம்சமே அதன் கண்கள் தான். பூனையின் கண்கள் மற்றும் பார்வையினைப் பற்றி விக்கிப்பீடியா இவ்வாறு கூறுகிறது: " பூனைகள் சிறந்த இரவுப்பார்வையைக் கொண்டுள்ளன. குறைந்த அளவிலான ஒளியை டபீட்டம் லூசிடம் என்ற இமைப்பானது கண்ணின் விழித்திரைக்குப் பின்னால் குவிப்பதால் குறைந்த அல்லது மங்கலான ஒளியிலும் துல்லியமான பார்வைத்திறன் கொண்டுள்ளன. இவை மனிதனுக்குப் பார்க்கத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளியிலேயே பார்க்கக்கூடிய திறன் படைத்தவை. "

    விக்கிப்பீடியா கூறுவதைப் போலவே நள்ளிரவு நேரத்திலும் பூனையின் கண்கள் ஒளிர்வதைக் கீழ்க்காணும் சங்கப்பாடலும் உறுதிசெய்கிறது.

வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க - அகம். 73

    இரவிலும் ஒளிவீசும் பூனையின் கண்களைப் போல ஒளிவீசுகின்ற பெரிய முத்துப் போன்ற கண்கள் இமைகளுக்கு இடையில் விளங்க .. என்பது மேற்பாடல் வரிகளின் பொருளாகும். இவ்வாறு புலவர் கூறுவதன் காரணம், தலைவனைச் சந்திக்கத் தலைவியானவள் நள்இரவு நேரத்திலும் புறப்படத் தயாராகி விட்டாள். தலைவனைச் சந்திக்கப் போகும் ஆவலினால் பூனையின் கண்களைப்போல அவளது முத்துப் போன்ற பெரிய கண்கள் இரவிலும் ஒளிர்கின்றனவாம். என்ன ஒரு உவமை !. இப்பாடலில் வரும் முலை என்பது மார்பகங்களைக் குறிக்காமல் கண்ணிமைகளைக் குறிக்கும். இதைப்பற்றி கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?. என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

    மேற்பாடலைப் போலவே, எலிவேட்டை ஆடிய வேட்டுவச் சிறுவர்களின் கண்களும் ஆண் காட்டுப்பூனையின் கண்களைப் போல இருளில் ஒளிர்ந்ததாகக் கீழ்க்காணும் புறப்பாடல் கூறுவதைப் பாருங்கள்.

வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை
......... வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்
...... பருத்தி வேலி கருப்பை பார்க்கும் - புறம். 324

4. பூனையின் காலடி:


 
    பூனையின் காலடியானது விரிந்து பரந்திராமல் குவிந்தநிலையில் காணப்படும். நடக்கும்போது ஓசையேதும் கேட்காத வண்ணம் இருக்க இத்தகைய குவிந்த காலடி அமைப்பு உதவுகிறது. இதனால் பூனை தனது இரையினை மிக அருகில் நெருங்க முடிகிறது. பூனையின் காலடி விரல்கள் குவிந்திருப்பதைக் கூறும் சங்கப்பாடல் கீழே:

குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை - அகம். 367

    வீடுகளில் பூனை வளர்ப்பவர்கள் ஒரு பாதுகாப்பிற்காகப் பூனையின் கால்விரல் நகங்களை வெட்டிவிடுவர். ஆனால் காட்டுப்பூனையின் கால் விரல்கள் உருண்டு திரண்டு கூரிய நீண்ட நகங்களுடன் காணப்படும். இவை பார்ப்பதற்கு நீண்ட கூரிய மருப்புடன் கூடிய இலுப்பைப்பூவின் குவிந்த மலர் மொட்டுக்களைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் அகப்பாடல் கூறுகிறது.

வெருக்கு அடி அன்ன குவிமுகிழ் இருப்பை - அகம். 267

    அருகில் உள்ள படத்தில் பூனையின் காலடித்தடமும் இலுப்பைப் பூவின் வடிவமும் ஒப்பிடப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது.

5. பூனையின் உணவு:


 
    காட்டுப்பூனையின் முதன்மை உணவுகளாகக் குழிமுயல், எலி போன்ற சிறு விலங்குகளை விக்கிப்பீடியா கூறுகிறது. விக்கிப்பீடியா கூறுவதைப் போலவே கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடலும் நள்ளிரவில் பூனையானது வீட்டில் திரியும் எலியினை வேட்டையாடி உண்பதைப் பற்றிக் கூறுகிறது.

நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு - குறு.107

    காடுகளில் குழிமுயல், எலி போன்றவை கிடைக்காதபோது காட்டுப்பூனைகள் வீடுகளில் வளர்க்கப்படும் சேவல் மற்றும் பெட்டைக்கோழிகளை வேட்டையாடிக் கொன்றுண்ணும். காதலி ஒருத்தி தனது காதலனுடன் இரவில் சேர்ந்து மகிழ்ந்திருக்கும்போது திடீரென்று கூவித் துயில் எழுப்பிய சேவலுக்கு " காட்டுப்பூனையின் வாய்ப்பட்டு ஒழிவாயாக " என்று சாபம் விடுவதாகக் கீழ்க்காணும் பாடல் அமைந்துள்ளது.

தொகு செம் நெற்றி கணம்கொள் சேவல்
..... பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகி
..... யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே - குறு.107

    காட்டுப்பூனை ஒன்று வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல்கோழியைக் கொன்றுண்ண, அது கண்மூடி அயரும் வேளையினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காட்சியினை கீழ்க்காணும் அகப்பாடல் அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவருகிறது.

கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர்
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்
கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் - அகம். 367

    வேங்கை மரத்தருகில் வரகின் கதிர்கள் பெரும் போராகக் குவித்து வைக்கப்பட்டிருக்க, அதன் பின்னால் இருந்தவாறு குவிந்த அடிகளை உடைய ஆண் காட்டுப்பூனையானது, தனது பெண் துணையின் பசியினைப் போக்குவதற்காக, முருக்கம்பூப் போன்ற உச்சிக்கொண்டையினை உடைய சேவல் கோழியானது கண் அயரும் வேளையினை எதிர்நோக்கிக் காத்திருந்ததாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

    சங்ககாலத் தமிழர்கள் தமது வீட்டில் வளர்க்கப்பட்ட சேவல் கோழி மற்றும் பெட்டைக் கோழிகளைக் காட்டுப்பூனைகள் தாக்கிக் கொல்லாதிருக்கச் சுற்றிலும் வேலி அமைத்திருந்தனர். ஆனால் காட்டுப்பூனைகள் இரவு நேரத்தில் இந்த வேலிகளின் மேலிருந்தவாறு கோழிகளை நோட்டம் விட்டு வேட்டையாடின. இதனால் இவற்றை 'வேலி வெருகு' என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. இதைப்பற்றிய ஒருசில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மனை உறை கோழி குறும் கால் பேடை
வேலி வெருகு இனம் மாலை உற்று என - குறு. 139

ஊர் முது வேலிப் பார்நடை வெருகின்
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை - புறம். 326

6. பூனையும் குட்டிகளும்:
    பெரிய பூனையைக் காட்டிலும் அதன் குட்டிகள் தான் மிக அழகாக இருக்கும். வீட்டுப்பூனையோ காட்டுப்பூனையோ எதுவானாலும் தாய்ப்பூனைக்கும் அதன் குட்டிகளுக்கும் இடையிலான பாசம் அதிகம். பல சமயங்களில் தனது சிறிய குட்டியினைப் பூனைத் தன் வாயினால் கவ்வியவாறு தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். தாய்ப்பூனை எங்கு சென்றாலும் அதன் பின்னாலேயே அதன் குட்டிகள் தொடர்ந்து செல்லும். இதனை ஒரு அழகான உவமையுடன் கீழ்க்காணும் பாடலில் புலவர் கூறுவதைப் பாருங்கள்.

பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் - அகம். 297

    காட்டுப்பூனையின் குட்டிகள் தன் தாயினைச் சூழ்ந்தநிலையில் இருந்ததனை வானத்தில் விண்மீன்கள் நிலவினைச் சூழ்ந்து இருந்ததனைப் போலத் தோன்றியதாக மேற்பாடலில் கூறுகிறார் புலவர். இதிலிருந்து, அந்தக் காட்டுப்பூனை மற்றும் குட்டிகளின் உடலில் வெண்மை நிறம் மிக்கிருந்ததனை அறியமுடிகிறது.

முடிவுரை:
    சங்க இலக்கியங்களில் காட்டுப்பூனைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளைக் கண்டோம். சங்ககாலத் தமிழர்கள் வீடுகளில் பூனை வளர்க்கவில்லை என்றே தெரிகிறது. அப்படி வளர்த்திருந்தால் வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடு, மாடு, நாய், கோழிகளைப் பற்றிக் கூறியதைப்போல வீட்டுப்பூனைகளைப் பற்றியும் பதிவுசெய்திருப்பர். ஆனால் காலம் மாறமாற தமிழர்களுக்குத் தமது வீடுகளிலும் பூனைகளை வளர்க்கவேண்டிய தேவை ஏற்பட்டது. காரணம், அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த நெல் முதலான தினைகளை எலிகளும் பெருச்சாளிகளும் கவர்ந்து சென்றுண்டன. இவற்றைக் கொல்வதற்காகவே வீடுகளில் பூனைகளை வளர்க்கலாயினர். ஆனால் வளர்ப்புப் பூனைகளுக்கும் காட்டுப்பூனைகளுக்கும் குணவேறுபாடுகள் உண்டு; இரண்டின் விலங்கியல் பெயரும் வேறுவேறு. வீட்டுப்பூனைகள் எலிகளையும் பெருச்சாளிகளையும் வேட்டையாடியதே ஒழிய வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகளைத் தாக்காமல் நட்புடன் பழகத் துவங்கின. இப்படியாக மனித சமுதாயத்துடன் பூனைகள் இயைந்து வாழ்ந்த நிலையில், பூனை தொடர்பாகப் பல பழமொழிகளும் உருவாயின. " ஆனைக்கு ஒரு காலம்; பூனைக்கு ஒரு காலம் " என்பது அவற்றுள் ஒன்று.



________________________________________________________________________
தொடர்பு:
திருத்தம் பொன். சரவணன் (
vaendhan@gmail.com)
https://thiruththam.blogspot.in/2018/02/7.html