Sunday, October 14, 2018

அங்காள ஈஸ்வரி அம்மன் கதைப்பாடல் (முத்தாலம்மன் கதைப் பாடல்*)



தானானே தானானே தாணத்தந்தம் தானானே
தொந்திக் கணபதியே கந்தனுக்கு முன்பிறந்த
கணபதியே வாருமையா
முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே
கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே
முத்தாலே தண்டைகொஞ்ச  முன்நடவாய் பிள்ளையாரே
சொல்வாக்கு தப்பாதே சக்கம்மாள் தாயாரே
மாராடி பாசிக்காரி மகிழ்வுடனே வரம்கொடம்மா
முள்கோட்டைத் தாயேநீ முன்நின்று வரம்கொடம்மா
சேவல்கொடி அழகன்அவன் திருச்செந்தூர் வேலன்அவன்      (10)
தமிழுக்கு அதிபதியாம்  நல்லதமிழ் தாருமைய்யா
முருகா சரஸ்வதியே சதுர்முகனார் தேவியரே
என்நாவில் குடியிருந்து நல்லோசை தாருமைய்யா
காளியம்மன் தன்கதையை கருத்துடனே நான்பாட
மாரியம்மன் தன்கதையை மனம் மகிழ்ந்து நான்பாட
என்தாயே ஈஸ்வரியே  வலதுபுறம் வந்திடம்மா
வனத்தில் பிறந்தவளாம் வனபூஜை கொண்டவளாம்
பச்சரிசி வனத்திலேயும் மகிடனும் ஆண்டு வந்தான்
எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுரானே மகிடனுமே
அரக்கிமகன் அரக்கனாம் அரனேசிவனே யெனறு    (20)
அருந்தவமும் செய்யுறானாம்
கரக்கண்டரைப் பார்க்கவே கடுந்தவமும் செய்யுறானாம்
ஈஸ்வரனை தான்நினைச்சு இருந்துதவம் செய்யுறானாம்
மகிடனோட தவபூஜை  தானறிந்தார் ஈஸ்வரனும்
கைலாச லோகம் விட்டு கரக்கண்டரும் வாராராம்
தவத்திலிருக்கும் மகிடனே தகுந்தவரம் கேளு என்றார்
என்குழந்தை பாலகனே என்னவரம் வேண்டுமென்றார்
என்னைப்போல் ஆண்பிள்ளை எனக்கு எதிரியும் ஆகவேண்டாம்
ஆண் பிள்ளை கையாலே  எனக்கு அழிவே வேண்டாமையா
என்று தானே மகிடனுமே வரமுந்தானே கேட்டானாம்      (30)
கேடு கெட்ட அரக்கனுக்கு கேட்ட வரம் கொடுத்தாராம்
அவன் ஆடுறானாம் பாடுறானாம் அட்டகாசம் பண்ணுறானாம்
தவம்செய்யும் முனிவரோட தவத்தை யெல்லாம் அழிக்கிறானாம்
முப்பத்து முக்கோடி  முனிவர்களும் தேவர்களும்
ஒன்றாக சேர்ந்து கொண்டு மகிடன் செய்யும் கொடுமைதனை
எம்பெருமான் கண்ணனிடம் முறையிடவே போறாகளாம்
வைகுண்டம் போறாகளாம் பார்த்தாரே எம்பெருமான்
ஆண்பிள்ளை கையாலே அழிவில்லை மகிடனுக்கு
பெண்பிள்ளை கையாலே அழிவுண்டு என்று தானே
முறையாகத் தெரிந்து கொண்டு ஏது செய்வோம் என்று தானே      (40)
எம்பெருமான் பார்க்கையிலே சிவனாரின் பூஜைக்கு
தரணிதனில் பூவெடுத்தாள் என் தாயே நாக கன்னி
நாககன்னி நாகராசா செய்துவரும் பூஜைதனை
தானறிந்தார் மாயவனும்
கையினால் பூவெடுத்தால் காம்பழுகி போகுமுன்னு
விரலாலே பூவெடுத்தால் வெந்தழுகி போகுமுன்னு
தங்கத்தினால் ஊசி கொண்டு  தனி மலரும் தானெடுத்தாள்
என்தாயே நாககன்னி
வெள்ளியினால் ஊசி கொண்டு விழி மலரும் தானெடுத்தாள்
என்தாயே நாககன்னி      (50)
தண்ணியையும் திரட்டினாளாம் அரனோட பூஜைக்கு
என்தாயே நாககன்னி நாககன்னி நாகராசா
சிறப்புடனே பூஜைதனை  செய்துவரும் வேளையிலே
கொங்கு பெருத்த வனம் கொன்றைகள் பூத்த வனம்
மூங்கில் பெருத்த வனம் முனிவர்கள் ஆளும் வனம்
ஏலக்காய் காய்க்கும் வனம் ஈஸ்வரியாள் ஆண்ட வனம்
சாதிக்காய் காய்க்கும் வனம் தவ முனிவர் ஆண்ட வனம்
அந்த வனத்திலேயும்  அண்ணனும் தங்கையுமாய்
நாககன்னி நாகராசா பூஜைசெய்யும் வேளையிலே
வட்டமிடும் கருடனுடன் வாராரே எம்பெருமான்      (60)
பார்த்தாளே நாககன்னி என்தாயே நாககன்னி
வயத்துல கர்ப்பமாச்சி என்தாயே நாககன்னி
அழுது புலம்பினாளாம்  என்தாயே நாககன்னி
அண்ணனிடம் வந்தாளாம் பார்த்தாரே நாகராசா
பூஜைக்கு வேண்டாமென்று அடித்தல்லோ விரட்டிவிட்டார்
என்தாயே நாககன்னி அழுது புலம்பிக் கொண்டு
ஒட்டாரம் காட்டுக்குள்ளே பரிதவிச்சி நின்னாளாம்
என்தாயே நாக கன்னி
ஒன்னாவது மாத்தையிலே உடம்பெல்லாம் நோகுதின்னா
2வது மாத்தையிலே தலையும் தான் சுத்துதின்னா      (70)
3வது மாத்தையிலே  முகமெல்லாம் வெளுத்து நின்னா
4வது மாத்தையிலே நடையும் தளர்ந்து விட்டா
5வது மாத்தையிலே அடிவயிறும் கனக்குதின்னா
6வது மாத்தையிலே அரனாரை நினைச்சாளாம்
என்தாயே நாக கன்னி
7வது மாத்தையிலே ஏங்கி நின்னு அழுதாளாம்
8வது மாத்தையிலே எட்டெடுத்து வைக்கவில்லை
என் தாயே நாக கன்னி
9வது மாத்தையிலே தயங்கிநின்னு தான்அழுதாள்
10வது மாத்தையிலே பார்வதியைத் தான்நினைச்சா      (80)
என்தாயே நாககன்னி பார்த்தாளே பார்வதியும்
குறிசொல்லும் பாப்பாத்தி  வேடம்கொண்டு பார்வதியும்
கூடை இடுப்பில்கொண்டு பிரம்பும்தான் கையில்கொண்டு
என்தாயே ஈஸ்வரியே வாராளே பார்வதியும்
என்தாயே ஈஸ்வரியே அழுவவேண்டாம் கலங்கவேண்டாம்
வலதுபுறம் நான்இருக்கேன் என்றுசொல்லி பார்வதியும்
தன்னையும் தான்காட்டினாளாம் கருத்தையும்தான் மாத்தினாளாம்
ஒட்டாரம் காட்டுக்குள்ளே ஒத்தநல்ல குலவைபோட்டு
என் தாயே ஈஸ்வரியே ஏழுபேரும் பிறந்தாளாம் 
1வது பிறந்தவளாம் காளியம்மன் பிறந்தாளாம்      (90)
2வது பிறந்தவளாம் மாரியம்மன் பிறந்தாளாம்
3வது பிறந்தவளாம்  முத்துமாரி பிறந்தாளாம்
4வது பிறந்தவளாம் ராக்காச்சி பிறந்தாளாம்
5வது பிறந்தவளாம் துர்க்கையம்மன் பிறந்தாளாம்
6வது பிறந்தவளாம் பேச்சியம்மன் பிறந்தாளாம்
7வது பிறந்தவளாம் முத்தாலம்மன் பிறந்தாளாம்
என்தாயே ஈஸ்வரியே
அவள்அழகு பிறந்தஇடம் அயோத்திநகர் பட்டினமாம்
என்தாயே ஈஸ்வரியே
பம்பை பிறந்தஇடம் பளிங்குமா மேடையிலே      (100)
என்தாயே ஈஸ்வரியே
பிரம்பு பிறந்த இடம் பிச்சாண்டி சன்னதியாம்
சடையே பிறந்ததம்மா சதுரகிரி மேடையிலே
என்தாயே ஈஸ்வரியே
சிலம்போ பிறந்ததம்மா சிவசக்தி மேடையிலே
உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச மேடையிலே
என்தாயே ஈஸ்வரியே நாககன்னி நாககன்னி
கடமையும்தான் முடிஞ்சிருச்சு நல்லபதவி தாரேன்என்று
சொல்லியே பார்வதியும்  சிவலோகம் அனுப்பிவைச்சா
என்தாயே ஈஸ்வரியே      (110)
அக்காதங்கை ஏழுபேரும் அடங்காத தேவகன்னி
ஊட்டுநல்ல வேண்டுமென்று பரமனையும் பார்க்கப்போனாள்
என்தாயே ஈஸ்வரியே மலையாம் மலைகடந்து
வனமாம் வனம்கடந்து வந்தாளே ஏழுபேரும்
என்தாயே ஈஸ்வரியே
எமனோட வாசலிலே எருமைக்கடா காவுகொண்டாள்
பரமனோட வாசலிலே பால்பசுவை காவுகொண்டாள்
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாரே பரமனுமே மோசம்போனோம் என்று சொல்லி
தர்ப்பப்புல்லை புடுங்கினாரே வைரவனை படைச்சாரே       (120)
வைரவனை கையில்கொண்டு வாராளே வனப்பளிச்சி
என்தாயே ஈஸ்வரியே
பச்சரிசி வனத்துலேயும் மகிடாசுரன் உறங்குறானே
அவனையும்தான் கொன்றுவாம்மா
வரமும் தாரேன் என்று பரமனுமே சொன்னாரே
என்தாயே ஈஸ்வரியே
போனாளே ஏழுபேரும்  உறங்குறான் மகிடாசுரன்
என்தாயே ஈஸ்வரியே
பனை மரத்தை தான் புடுங்கி பந்துபோல வீசினாளாம்
என்தாயே ஈஸ்வரியே       (130) 
மகிடனோட சண்டைபோட்டா
மணிக்குடலைத் தான்பிடுங்கி மாலைபோல் போட்டாளே
என்தாயே ஈஸ்வரியே
எலும்பையும் தான்முறிச்சி இரத்தத்தையும் குடிச்சாளாம்
என்தாயே ஈஸ்வரியே
அக்காதங்கை ஏழுபேரும் கைலைமலை போறாளே
கோபத்தோட வாராளே  என்தாயே ஈஸ்வரியே
பரமனிடம் வந்தாளே மகிடனை அழித்துவிட்டோம்
வரமுந்தானே வேண்டுமின்னு என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாரே பரமனுமே ஒருவண்டி முத்தெடுத்து      (140)
காளியிடம் கொடுத்தாரே என்தாயே ஈஸ்வரியே
பச்சைமுத்தை தான்எடுத்து  பவளம்போல கொடுத்தாரே
முத்துக்களைத் தானெடுத்து பூலோகம் போகச் சொல்லி
பரமனும் சொன்னாரே என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாளே ஏழுபேரும் ஏச்சிப்புட்டான் என்றுசொல்லி
பச்சைமுத்தைத் தான்எடுத்து பரமனுக்கே போட்டாளே
என்தாயே ஈஸ்வரியே
உச்சியிலே போட்டமுத்து உடம்பையும்தான் துளைக்குதின்னார்
மார்புல போட்டமுத்து மார்பையும்தான் துளைக்குதின்னார்
கணுக்காலில் போட்டமுத்து  காலெல்லாம் நோகுதின்னார்       (150)
கண்ணுல போட்டமுத்து கண்ணே தெரியலன்னார்
காந்துதே காந்துதே காந்தாரி போட்ட முத்து 
எரியுதே எரியுதே ஏழுபேரும் போட்ட முத்து
என்றுசொல்லி பரமனுமே ஏங்கிநின்னு அழுதாரே
என்தாயே ஈஸ்வரியே  பார்த்தாளே பார்வதியும்
தலைவாழை இலைவிரிச்சு சங்கரனை படுக்கவைச்சா
ஈனாத வாழையிலே ஈஸ்வரரை படுக்கவைச்சா
அண்ணனையும் தான்நினைத்தாள் என்தாயி பார்வதியும்
பார்த்தாரே மாயக்கண்ணன் குழலோடு வந்தாரே
காராம் பசுவும் கொண்டு  கக்கத்திலே கம்பளியாம்      (160)
எங்கமாயக் கண்ணனுக்கு கடைவாயில் சங்குழலாம்
எங்கமாயக் கண்ணனுக்கு
நானூறு மாட்டுலேயும்  நடுப்பாலை பீச்சி வந்தார்
எங்கமாயக் கண்ணன் கெண்டியிலே பாலெடுத்து
எங்கமாயக்கண்ணன் கடைவாயில் ஊத்தினாராம்
என்தாயே ஈஸ்வரியே
பச்சைமுத்தைத் தான்வாங்கி வறுத்துநல்லோர் கொடுத்தாரே
முந்தியையும் தான்ஏந்தி முழங்காலும் தானும்போட்டு
பார்வதி தேவியுமே மடிப்பிச்சை கேட்டாளே
வேர்வையும் வழித்துப் போட்டா வேப்பமரம் ஆனதுல்ல       (170)
வேப்பக்குலையை தான்ஒடிச்சி  பரமனுக்கு வீசிவிட்டா.
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தாளே ஏழுபேரும் அடங்காத தேவகன்னி
முத்தையும்தான் இறக்கினாளாம்  பரமனுமே எழுந்துவிட்டார்
என்தாயே ஈஸ்வரியே
பரமனிடம் விடையும்பெற்று பூலோகம் காக்கப்போறோம்
என்றுசொல்லி ஏழுபேரும்  பூலோகம் போய்ச்சேர்ந்தார்.
என்தாயே ஈஸ்வரியே
ஒட்டாரம் காட்டோரம் ஓலை பறிகொடுத்தா
தில்லைவனக் காட்டுக்குள்ளே சேலை பறிகொடுத்தா      (180)
என்தாயே ஈஸ்வரியே
வந்து இறங்கினாளாம் மக்களுக்கு முத்து போட
என்தாயே ஈஸ்வரியே
பார்த்தார்கள் பெரியவர்கள் நாட்டுப் பெரியவர்கள்
நல்லமனிதர் ஒன்றுகூடி ஏதுசெய்வோம் என்றுஎண்ணி
எம்பெருமானை வேண்டிநிற்க  எம்பெருமான் அருளாலே
அக்காதங்கை ஆறுபேர்க்கும் அவரவர்க்கு ஏற்றதொரு
ஆலயமும் ஏற்படுத்தி ஆறுகால பூஜைகளும்
ஆண்டுக்கொரு திருவிழாவும் அனைவருமே சேர்ந்துவந்து
ஆலயத்தில் கூடிமகிழ உலகத்  தாயான      (190)
எங்க முத்தாலம்மனுக்கு
தனித்துநின்ன தாயான தங்கமுத்தா லம்மனுக்கு
வாருமம்மா முத்தாளம்மா உனக்கேத்த ஆலயமும்
நாங்கள் அமைத்துதாறோம் என்றுசொல்லி மக்களெல்லாம்
சொல்லி வருகையிலே என்தாயே முத்தாளம்மா
எனக்கேத்த கோயிலும் எங்குமே இல்லையே
எனக்கேத்த இடமும்தான் முச்சந்தியாம் என்றுசொல்லி
என்தாயே முத்தாளம்மா அன்றுபிறந்து அன்றழிவேன்
மக்கள் செய்யும் பூஜையிலே  மனமுவந்து வந்திடுவேன்
என்றுமே சொன்னாளாம் அன்றுபிறந்து அன்றழிவேன்      (200)
வணங்கிநின்ற மக்களுக்கு வரங்களும் நான்கொடுப்பேன்
செட்டியாரு செய்துவரும் உருவத்திலே நான்வருவேன்
அன்றுபிறந்து அன்றுஅழிவா என்றுதானே அறிந்துகொண்டு
7வது தாயான  எங்க முத்தாலம்மனுக்கு
ஏற்றதொரு இடமுந்தானே முச்சந்தியாம் என்றுசொல்லி
என்தாயி முத்தாளைக்கு மக்கள்செய்யும் பூஜையிலே
அக்காதங்கை ஆறுபேரின் அருள்வாக்கும் கிடைத்திடுமாம்
என்றுமே அறிந்துகொண்டு அம்மாவந்து இறங்கியிருக்கா
குளுமையும் தான்செய்ய வேண்டும்  என்தாயே ஈஸ்வரியே
என்று பெரியவர்கள் உண்மையாகப் பேசிக்கொண்டு      (210)
முளைப்பாரி போடவேண்டும் சாம்பானைக் கூப்பிட்டு
ஒருவீடு தப்பாம சாட்டிவாடா சாம்பாகுட்டி
என்று நல்லோர் சொன்னார்கள் என்தாயே ஈஸ்வரியே
திருமுகத்து பெண்களெல்லாம்  ஒருமுகமாய் கூடிநின்று
சின்னகொட்டான் பெட்டிகொண்டு தெருக்களெல்லாம் பயிரெடுத்து
வாங்களம்மா தோழிமாரே அம்மாவுக்கு முளைபோட
என்தாயே ஈஸ்வரியே
காரா மணிபயிறு கலந்துவைச்ச தட்டப்பயறு
சிறு பயறும் தானெடுத்து என்தாயே ஈஸ்வரியே 
கம்பங் கொல்லையிலே கம்பந்தட்டை எடுத்துவந்து      (220)
சம்சாரி படப்புலயும் சம்பாவைக்க ரெண்டெடுத்து
என் தாயே ஈஸ்வரியே
ஆட்டாந் தொழுதிறந்து ஆட்டெருவ தான்எடுத்து
மாட்டாந் தொழுதிறந்து மாட்டெருவ தான்எடுத்து
என்தாயே ஈஸ்வரியே
குசவனாரு சுல்லையிலே குடத்தோடு எடுத்துவந்து
வட்டவட்ட ஓடுதட்டி என்தாயே ஈஸ்வரியே
ஆட்டெருவ கீழ்பரப்பி  அம்மாமுத்த மேல்பரப்பி
மாட்டெருவ கீழ்பரப்பி மாரிமுத்தை மேல்பரப்பி
என்தாயே ஈஸ்வரியே      (230)
முளைபோட்ட மூணாம்நாளு  முளைகளெல்லாம் பீலிவிட
பீலியிட்ட சத்தம்கேட்டு பெண்களெல்லாம் நீராடி
நீராடி நீர்தெளித்து நீலவர்ணப் பட்டுடுத்தி
வாங்களம்மா தோழிமாரே வளைஞ்சிநின்னு கும்மியடிப்போம்
என்தாயே முத்தாளம்மா
வெள்ளிக் கிழமையன்று வெள்ளிரதம் போலிருப்பா
என் தாயே முத்தாளம்மா
சனிக்கிழமை இரவுகொண்டு சல்லிவேரும் போட்டிடுமாம்
ஞாயிற்று கிழமையன்று நல்லமுளை கொண்டிடுமாம்
என்தாயி முத்தாளைக்கு என்தாயி ஈஸ்வரிக்கு       (240)
பச்சைமண்ணை எடுத்துத்தானே பாங்குடனே பீடம்செய்து
என்தாயி முத்தாளைக்கு  என்தாயி ஈஸ்வரிக்கு
ஈரமண்ணை எடுத்துத்தானே இன்பமுடன் பீடம்செய்து
பாலரெல்லாம் ஒன்றுசேர்ந்து பாங்குடனே பீடம்கட்டி
பாசத்துடன் அழைத்திடுவோம் என்தாயி முத்தாளையும்
செட்டியொரு தானாக செய்துவரும் உருவத்திலே
துள்ளியே வந்திடுவாள் பாலர்கள் செய்துவைத்த
பீடத்திலும் வீற்றிருப்பாள் என்தாயி முத்தாளையும்
செவ்வாய் கிழமையன்று வெளியேற நினைச்சிடுவா
என்தாயே முத்தாளம்மா  பெண்களெல்லாம் ஒன்றுகூடி      (250)
குளித்து திலகமிட்டு என்தாயே முத்தாளம்மா
தூத்து தொளிக்கச்சொன்னா தோரணங்கள் கட்டச்சொன்னா
வேப்பிலையும் தோரணமும் வாங்கரும்பும் சாத்துவாராம்
மாவிலையாம் தோரணமாம் எங்கமுத்தா லம்மனுக்கு
கோழி கொழுக்கட்டையாம்  முட்டை முருங்கைக்காயாம்
என்தாய்க்குப் படைச்சிவச்சி உறுமிக்கொட்டும் தான்முழங்க
கொட்டுமேளம் தான்முழங்க முளைப்பாரி தலையில்வைச்சி
ரதவீதி சுத்திவந்து என்தாயி முத்தாளம்மா
முச்சந்தியில் வீற்றிருப்பா காதோலை கருகமணி
இடதுபுறம் வீற்றிருக்க  மஞ்சளையும் குங்குமமும்      (260)
வலதுபுறம் வீற்றிருக்க என்தாயி முத்தாளைக்கு
பானக்காரம் கரைச்சிவைச்சி வேப்பம்பாலும் கரைச்சிவைச்சி
துள்ளுமாவும் இடிச்சிவைச்சி என்தாயி முத்தாளைக்கு
இளநீர்க்கண் திறந்துவைச்சி சித்தாடை உடுத்திவைச்சி
எலுமிச்சை மாலைபோட்டு  நிறமாலை தானும்சாத்தி
என்தாயி முத்தாளைக்கு
தென்னம்பூவை சிரசில்வைச்சி கும்பக்கலயம் தானும்வைச்சி
முத்துப்போல இலங்குறாளாம்  எங்கள் முத்தாளம்மா
வெண்பொங்கல் தானும்வைச்சி அழைக்கிறோம் மாதாவே
வருந்தி அழைக்கிறேனே வனக்கிளியே வந்திடம்மா      (270)
கூப்பிட்டு நான்அழைச்சேன் குயில்மொழியே வந்திடம்மா
என்தாயே முத்தாளம்மா மஞ்சள் சேலைக்காரி
மாராடி பாசிக்காரி  மடிநிறைந்த மகிழம்பூவாம்
அடுக்குமல்லி தொடுக்குமல்லி ஆனந்தமாய் பிச்சிரோஜா
என்தாயே ஈஸ்வரியே
கூப்பிட்ட சத்தமும்தான்  கோவிலுக்கு கேக்கலையோ
அழைக்கிற சத்தமுந்தான் ஆலையமும் கேக்கலையோ
கல்லான உன்மனசு கரையவேணும் இந்தநேரம்
இரும்பான உன்மனது இளகவேணும் இந்தநேரம்
என்தாயே முத்தாளம்மா ஆறுபேரும் வாராளாம்      (280)
பம்பையும் தான்முழங்க  உறுமிக் கொட்டும் தான்முழங்க
ஆனந்தமா வாராளே வாராளே வாராளே
மாகாளி வாராளம்மா சிலம்போசை கேட்குதம்மா
காவிநல்ல பட்டுடுத்தி காளியம்மன் வாராளே
மஞ்சள்நல்ல பட்டுடுத்தி மாரியம்மன் வாராளே
முகத்து அழகுக்காரி  முத்துமாரி வாராளே
அரக்குநல்ல பட்டுடுத்தி ராக்காச்சி வாராளே.
சிவப்புநல்ல பட்டுடுத்தி துர்க்கையம்மன் வாராளே
பச்சைநல்ல பட்டுடுத்தி பேச்சியம்மன் வாராளே
முத்துமுத்தாய் பட்டுதுலங்க முத்தாளம்மா வாராளே      (290)
என்தாயே ஈஸ்வரியே
ஏற்றதொரு பட்டுடுத்தி ஏழுபேரும் வாராளே
ஒத்தநல்ல குலவைபோட்டு ஓங்காரி வாராளம்மா
குற்றம்குறை இருந்தாலும் ஏழைமக்கள் பூஜையம்மா
குணமயிலே ஏத்துக்கம்மா என்தாயி முத்தாளம்மா
சாமக்கோழி கூவையிலே சேவலையும் காவுகொண்டா
மஞ்சள்பாலைத் தான்குடிச்சா பானக்காரம் தான்குடிச்சா
துள்ளுமாவும் சாப்பிட்டாளாம் வெண்பொங்கலும் சாப்பிட்டாளாம்
என்தாயி ஈஸ்வரியாள்  வயிறுநல்லா குளிர்ந்திருச்சி
பசியும்நல்லா அடங்கிருச்சி மனசும்நல்லா நிறைஞ்சிருச்சி      (300)
மக்களுக்கு நல்லவரம் தந்தேன் என்று 
என்தாயே ஈஸ்வரியாள்
மஞ்சளையும் காக்கவேணும் குங்குமத்தைக் காக்கவேணும்
உழைக்கிற மக்களுக்கு உள்ளம்மகிழ வரம்கொடம்மா
என்தாயே முத்தாளம்மா நாளைக்கு பயணமின்னு
ஏங்கிநின்னு அழுதாயோ முகம்கோணி நின்னாயோ
என்தாயி முத்தாளம்மா  வருந்தாதம்மா ஏங்காதம்மா
வருகிற வருசத்திலே வளரும்பிறை நாளையிலே
உன்னையும் தான் அழைக்கிறோமே
முளைப்பாரி தானும்போட்டு  குளுமையும் தான்செய்திடுவோம்      (310)
என்று சொல்லி மக்களெல்லாம் ஒரு முகமாய் நிக்கையிலே
என் தாயி முத்தாளம்மா என்தாயி ஈஸ்வரியாள்
மனம்மகிழ்ந்து போறாளே மகிழ்ச்சியுடன் போறாளே
என்தாயே முத்தாளம்மா
அன்றுபிறந்து அன்றழிவா அரசிலையில் வீத்திருப்பா
ஒரு நாளிருந்துமே
உலகமே ஆண்டிடுவா உத்தமியாம் முத்தாலம்மா
சித்திரைத்தேர் ஓடுதம்மா சிவகாசி வீதியிலே
சிவகாசி பத்ரகாளி சேவிப்போர்க்கு வரம்தருவா
ஆயிரங் கண்ணுடையாள் அனைவரையும் காத்திடுவாள்      (320)
சக்கம்மா தாயிஅம்மா  சமயம்வந்து வரம்கொடுப்பா
சிவகாசி மாரியம்மா சீக்கிரம் வரம்கொடுப்பா
இருக்கன்குடி மாரியம்மா இருந்துநல்லா வரம்கொடுப்பா
சமயபுரம் மாரியம்மா சாய்ந்திருந்து வரம்கொடுப்பா
கண்ணபுர மாரியம்மா கண்ணையும்தான் கொடுத்திடுவா
வேற்காட்டு மாரியம்மா வேண்டும்வரம் தான்கொடுப்பா
கடும்பாடி மாரியம்மா கருத்தையும்தான் கொடுத்திடுவா
கோவியனூர் மாரியம்மா கேட்டவரம் தான்கொடுப்பா
பாளையத்து மாரியம்மா பார்த்திருந்து வரம்கொடுப்பா
முன்னிருக்கும் முத்தாளம்மா பூடத்தின் அருகினிலே்      (330)
நின்றுபாடும் அருந்தவப் புதல்வி யம்மா
என்தாயே முத்தாளம்மா
மங்களமாம் மங்களம் எங்கும் நிறைந்திருக்கும்
மங்களம்

(முற்றும்)




*  சிவகாசி வட்டார வாய்மொழிப் பாடல்கள் தொகுப்புப் பணி: தகவல் தந்தவரும் திரட்டியவரும் அங்காள ஈஸ்வரி அம்மன் பாடல் என்று தான் தலைப்புக் கொடுத்து உள்ளனர். ஆனால் உள்ளே அந்தப் பெயரே இல்லை. முத்தாலம்மன் என்ற பெயர் தான் உள்ளது. அதனால் தான் அடைப்புக்குறிக்குள் அப்பெயரை இட்டு உள்ளேன்.
— முனைவர் ச.கண்மணி கணேசன்





________________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)

No comments:

Post a Comment