Tuesday, October 9, 2018

காவிரியின் வடக்கே முசிறி-பெரம்பலூர் பகுதியில் பண்டைய பௌத்தச் சுவடுகள்

 – தேமொழி           தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நூல்  (1940) முதற்கொண்டு,   தொடர்ந்து  பல பெளத்த ஆய்வாளர்கள் குறிப்பிட்ட புத்தர் சிலைகள் வரை யாவற்றையும் தொகுத்து, சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட  "தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம்" என்ற நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது. தமிழக அரசால் 1998 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நூலில், தமிழகத்தில் காணப்பெறும்  புத்தர் சிலைகளென  19 புத்தர் சிலைகள் காணப்படுகின்றன எனக் குறிப்பிடும் பெளத்த சிலைகள் ஆய்வாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், தொடர்ந்து தனது களஆய்வுகள் மூலம் மேலும் ஒரு 65 புத்தர் சிலைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தியுள்ளார். 

          கால்நூற்றாண்டிற்கும் முன்னர் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தொடங்கி,  வரலாறு கூறும்  அக்கால  சோழமண்டலத்தில் (அல்லது பிந்தைய ஆங்கிலேயர் ஆட்சியில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர், ஒருங்கிணைந்த திருச்சி, மற்றும் புதுக்கோட்டை ஜில்லா பகுதிகளில்) புத்தர் சிலைகளைத் தேடி ஆய்வு மேற்கொண்டு பற்பல புத்தர் சிலைகளை தமிழரின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளரான முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள். சோழர் ஆட்சியின் இறுதிக்காலம் வரை  பௌத்தம் செழித்திருந்தது என்பது ஆய்வுவழியாக இவர் கண்டறிந்த செய்தி. மேலும்  இவர், சில சிலைகளை புத்தர் என்று அறிந்தோ அல்லது அறியாமலோ  மக்கள் வணங்கி வழிபட்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்.  

          இந்நாட்களில் மேற்சொன்ன  திருச்சி தஞ்சை மாவட்டங்களும் தேவைக்கேற்பவும் காலமாறுதலுக்கேற்பவும் பற்பல மாவட்டங்களாகப்  பிரிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் கிடைத்து வரும் புத்தர் சிலைகளில் பெரும்பான்மை அமர்ந்த கோலத்தில் தியானம் செய்யும் புத்தரின் உருவங்கள். புத்தரின் சிலையுருவத்தின் தலையில் ஞானத்தை உணர்த்தும் தீச்சுடர் வடிவில் முடி, நீண்டு தொங்கும் காதுகள், இதழ்களில் புன்னகையுடன் கண்களைச் சிறிதே மூடிய நிலையில் அமைதியான முகம், பரந்த மார்புடனும்  திரண்ட தோள்களுடனும் மார்பில் மேலாடையும் இடையில் ஆடையும் அணிந்திருக்கும் நிலை, கையில் தர்மசக்கரக்குறியும்   நெற்றியில் திலகக்குறியும் போன்ற அடையாளங்கள் என்ற  பொதுக் கூறுகளுடன் கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் புத்தர் சிலைகளே பெரும்பாலும் சோழமண்டலப் பகுதியில்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.           பா.ஜம்புலிங்கம் வெளிக்கொணர்ந்த புத்தர் சிலைகளில் சற்றே மாறுபட்டு கவனத்தைக் கவர்வது "மீசை வைத்த புத்தர்" சிலை (பார்க்க: தமிழ்முரசு நாளிதழ் -  ஜூலை 1999 செய்தி).   திருச்சி மாவட்டத்தின்  முசிறி வட்டத்தில் மங்கலம்  என்ற சிற்றூரின் அரவாண்டியம்மன் கோவில் (அரவாயி அம்மன் கோவில் எனவும் அழைக்கப்படும் இக்கோயிலின் புவியிடக் குறியீடு: 11.050535, 78.480055) அருகே கண்டுபிடிக்கப்பட்ட  இச்சிலை கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.  மீசையுடன் காணப்படும் இதுபோன்ற புத்தர் சிலை இதுவரை தமிழகத்தில் வேறெங்கும் காணப்பெறவில்லை.  முன்னாட்களில் இந்த முசிறி-ஆத்தூர்-பெரம்பலூர்  பகுதி வணிகத்தலமாக இருந்திருக்கக்கூடும் என்பதும், பல புத்தர் சிலைகள் காணப்படும் இப்பகுதியில்  பௌத்தம் அக்காலத்தில் செழித்திருந்திருக்கக்கூடும் என்பதும், அங்கு வணிக நோக்கில் வந்தவர் இந்தச் சிலையை உருவாக்கியிருக்கக்கூடும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இச்சிலையின்  பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்க உருவங்களும்  காணப்படுகின்றது. இது சோழமண்டலத்தில் உள்ள பிற புத்தர் சிலைகளில் இருந்து வேறுபட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு. 
 

          பாகிஸ்தான் பகுதியில், காந்தார கலைவடிவ புத்த சமய சிற்பங்களின் பாணியில் வடிக்கப்பட்டுள்ள, மீசையுடன் கூடிய 'போதிசத்துவ மைத்ரேயர்' (கிமு 3 - 4ம் நூற்றாண்டு) சிலையின் வடிவத்தைப் போல, மீசையுடன் கூடிய இந்த  6 அடி உயரப் புத்தர் சிலையைப் பா. ஜம்புலிங்கம் அடையாளம் காட்டிய  பின்னர், சிலை புத்தரின் சிலை எனத் தெளிவாகத் அறிந்த பின்னரும், அப்பகுதி மக்கள் புத்தரை 'செட்டியார்' என அழைக்கத் தொடங்கியதாகவும், அரவாண்டியம்மனைக் குலதெய்வமாகக் கொண்ட அவர்கள்  'அருள்மிகு செட்டியப்பன் சுவாமி' என்றழைத்த இந்த மீசை புத்தருக்கு அங்கு ஒரு கோவில் கட்டி வழிபட விருப்பம் தெரிவித்ததாகவும் அன்று வெளிவந்த நாளிதழ் செய்தி கூறுகின்றது.            பொதுவாக, சோழ நாட்டில் புத்தரை சிவனார், அமணர், சாம்பான், செட்டியார், நாட்டுக்கோட்டைச் செட்டியார், பழுப்பர் எனப் பலவாறான பெயர்களில் அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.   தஞ்சாவூர்-மன்னார்குடி சாலையில் பெரண்டாக் கோட்டையில் உள்ள புத்தர் சிலையை, அது புத்தர் என அறியாது ஊர்மக்கள்  ‘சாம்பான்’ என்றும், அய்யம்பேட்டையில் 'முனீஸ்வரன்' என்றும், பெருஞ்சேரியில் 'ரிஷி'என்றும் கூறி வழிபட்டு வருகிறார்கள். 

          புத்தர் உயிர்க்கொலையை மறுத்தவர். ஆனால், மங்கலம் அரவாண்டியம்மன் கோயிலிலோ பிராணிகளைப் பலி கொடுப்பது வழக்கம்.  இதனால் புத்தருக்கு தனியாக சந்நிதி ஒன்று கட்டி, அங்கு புத்தர் சிலையை எழுந்தருளச் செய்து, பலியிடும் நாட்களில் அதைப் புத்தர் காணாதவாறு, புத்தருக்கு முன்னர் ஒரு  திரைச் சீலை அமைத்து மூடிவிடுவதை வழிபடும் மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். 

          காவிரியின் வடகரையில் முசிறி அருகே அமைந்துள்ள மீசை புத்தர் போலவே; காவிரியின் வடகரையில் பெரம்பலூர் செல்லும் வழியிலும், திருச்சிக்கு வடக்கே 80 கி.மீ. தொலைவில் புத்த சமயம்  தழைத்திருந்து இன்று மறைந்து போனதன்  அடையாளமாகத் தொல்லியல் தடயங்களாகப் பற்பல புத்த சிலைகள் காணப்படுவதை, மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வரலாற்று ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில் கொடுத்துள்ளார்.  அப்பகுதி அவ்வாறே கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 
                    "பயணநேரம் என்னவோ மூன்று மணிநேரந்தான். ஆனால், வழியெங்கும் விரவிக் கிடந்த புத்தர் சிலைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டே சென்றதால்தான் அவ்வளவு நேரம். ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் புத்த மதம் தழைத்தோங்கியிருந்திருக்க வேண்டும். சைத்தியங்களும் விகாரைகளும் அங்கு இருந்திருக்க வேண்டும். புத்தம் சரணம் கச்சாமி என்ற பிக்குகளின் சரண கோஷங்கள் இரவு பகலாக அந்தப் பகுதிகளில் எதிரொலித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் தெருவுக்கு ஒன்று வயலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அத்தனை புத்தர் சிலைகள் எப்படி வந்திருக்க முடியும்? அதிலும் அமர்ந்த நிலையிலிருந்த ஒரு சிற்பம் கிட்டத்தட்ட ஆறு அடிக்குப் பிரம்மாண்டமாக இருந்தது. இதில் வருத்தம் தரக்கூடிய சுவாரசியமான நிகழ்ச்சி என்னவெனில், 'இதை புத்தர் என்று யார் சொன்னது? இவர் கொங்குச் சாமியார்!' என்று அங்கே இருந்தவர்கள் கூறியதுதான்" 
- ச. கமலக்கண்ணன்

          முசிறி-மங்கலம் மீசை புத்தரை செட்டியார் என அப்பகுதி மக்கள் அழைப்பது போலவே, பெரம்பலூர் மாவட்டம் தியாகனூர்ப் பகுதி மக்களும் புத்தரை கொங்குச் சாமியார் என அழைக்க விரும்புகிறார்கள். கிடைத்துள்ள இரு   6 அடி  உயரச் சிலைகள் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஒரு புத்தர் சிலைக்குத் தூண்களுடன் அமைந்த சிறு கோவிலும் (புவியிடக் குறியீடு: 11.560897, 78.780151), வயல்வெளியில் கிடைத்த மற்றொரு புத்தர் சிலைக்கு  தியாகனூர்ப் பகுதியில் தியான மண்டபம் ஒன்றும் உருவாக்கி (புவியிடக் குறியீடு: 11.558442, 78.779749) புத்தர் சிலையை வழிபாட்டிற்குரிய சிலையாகவும் மாற்றிவிட்டிருக்கிறார்கள் அவ்வூர் மக்கள்.  

          கோவிலில் இந்துக்கடவுளை வழிபடும் முறையிலேயே பூசைகள், வழிபாடுகள், அலங்காரங்கள்,  சர்க்கரைப்பொங்கல் சுண்டல் படையல்களுடன்  இந்தச் சாக்கிய முனி வழிபடப்படுகிறார்.  பெரம்பலூர் மாவட்டத்திலும், சேலம் மாவட்ட  தியகனூர் பகுதியைச் சுற்றி மேலும் பல புத்தர் சிலைகள் இருப்பதாக நாளிதழ் செய்தியொன்றும் கூறுகிறது.  ஆறகழூர், வீரகனூர், பரவாய், ஓகளூர் சிற்றூர்களும் கிராமங்களும் கொண்ட இப்பகுதியில் காணப்படும் புத்தர் சிலைகளை பொதுவாக 'பெரம்பலூர் புத்தர்கள்' என்று குறிப்பிடும் முறை இன்று வழக்கத்தில் உள்ளது. ஒரு சில சிலைகளைத் தவிர்த்து பெரும்பாலானவை தலை துண்டிக்கப்பட்டோ அல்லது சிதைக்கப்பட்டோ அழியும் நிலையில் உள்ளன. இப்பகுதி இலக்கியத்தில் மகதநாடு என்று அழைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது. 

          சில புத்தர் சிலைகள்,  குறிப்பாக அரியலூர் மாவட்டத்தின் கீழக்கொளத்தூர், அரியலூர், கங்கைகொண்ட சோழபுரம் இடங்களில் கிடைத்த புத்தர் சிற்பங்கள்  கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டாலும், பெரம்பலூர் புத்தர் சிலைகள் பல பொதுவெளியில் பாதுகாப்பின்றியே உள்ளன என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கவலை.  சிலநாட்கள் கழித்து அதே இடத்திற்கு மீண்டும் ஆய்விற்குச் செல்லும்பொழுது சிலைகள் சிதைக்கப்பட்டோ, காணாமலே போய்விடுவதோ பெரும்பாலோர் எதிர்கொள்ளும் அனுபவங்கள்.  தொல்லியல் ஆர்வலர்கள்  தனிப்பட்ட ஆர்வத்தில் களஆய்வு செய்து கண்டுபிடிக்கும் தொல்லியல் சிலைகளும் தடயங்களும் உடனடியாக பாதுகாப்புள்ள அருங்காட்சியகங்களுக்கு அரசால் மாற்றப்படுமானால் சிலைத்திருட்டுகளும் தவிர்க்கப்படும், நம் வரலாற்றுச் சின்னங்களையும் அழிவில் இருந்து காக்கலாம்.  வரலாற்றை  அறிவதிலும் மீட்டெடுப்பதிலும் இந்தத் தொல்லியல் தடயங்களின் முக்கியத்துவத்தை பொதுமக்களும் உணர வேண்டும், அரசும் பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும். 

சான்றாதாரங்கள்: 
1. சோழநாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை, பா. ஜம்புலிங்கம், தமிழ்க்கலை, தமிழ் 14, கலை 3, ஏப்ரல் 2009, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு. 

2. தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம், (2-ஆம் பகுதி), தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை, 1998.

3. மயிலை.சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1957 

4. முசிறி அருகே 6 அடி உயர புத்தர்சிலை கண்டுபிடிப்பு, தமிழ்முரசு, ஜூலை 8, 1999, பக்கம் 7. 

5. மீசை வைத்த புத்தர்! சோழ நாட்டில் புத்தர் சிலைகளைத் தேடி ஒரு வாழ்நாள் பயணம்.   முனைவர் பா. ஜம்புலிங்கம், தி இந்து தமிழ்,  பிப்ரவரி 27, 2015.  

6. வல்லமை தாராயோ?, ச. கமலக்கண்ணன், வரலாறு, இதழ் 3,  அக்டோபர்-நவம்பர், 2004, டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்

7. Buddha at the crossroads, A., Srivatsan, Perambalur: The Hindu,  (9 June 2012).

8. Meditation centre inaugurated, Staff Reporter, Salem: The Hindu,  (29 June 2013).

9. Aravayi Amman Temple-Mangalam -  http://www.tn.gov.in/trichytourism/other.htm

புவியிடக்குறிப்புக்கள்:
Ancient Buddha Idol - Mangalam; Mangalam, Tamil Nadu 621205, India (11.050535, 78.480055)
Buddha Temple Salem Tamil Nadu, Salem, Tamil Nadu 636101, India (11.560897, 78.780151)
Buddhar Kovil, Thiyaganur, Tamil Nadu 636101, India (11.558442, 78.779749)

படங்கள் உதவி:
திரு. மகாத்மா செல்வபாண்டியன் - https://www.facebook.com/mahathma.selvapandiyan
விக்கிபீடியா
________________________________________________
தொடர்பு:
முனைவர். தேமொழி (jsthemozhi@gmail.com)2 comments:

 1. பெரம்பலூர் , "மகத நாடு என அழைக்கட்டது '
  அரிய தகவல்கள்.
  மிக்க நன்றி.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  வணக்கம்

  ReplyDelete
 2. நன்றி... """மகத நாடு என அழைக்கட்டது""" ஆம் !!!! பார்க்க: இந்து நாளிதழ் செய்தி """Recalling its history and quoting literature, officials said that Thalaivasal and Aragalur were earlier called as ‘Mhada Nadu’ and Buddhist followers worshipped the statue.""" (https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/meditation-centre-inaugurated/article4862675.ece)

  ReplyDelete