Tuesday, October 2, 2018

இராமலிங்க விலாசம் அரண்மனை

—  சொ.வினைதீர்த்தான்


இராமேசுவரம், இராமநாதபுரம் கடற்கரைப் பகுதிகளின் காவலர்களாக 400 ஆண்டுகள் விளங்கியவர்கள் சேதுபதி மன்னர்கள். கிபி1600 முதல் 1800 வரை மன்னர்களாகவும் பிறகு ஆங்கிலேய ஆட்சியில் நாடு சுதந்திரம் பெறுகிறவரையில் இராமநாதபுரம் சமஸ்தான அதிபதிகளாகவும் திகழ்ந்தவர்கள். அவர்களில் கிழவன் சேதுபதி (1690-1710) தங்களுடைய குலதெய்வம் பெயரில் கட்டிய அரண்மனை "இராமலிங்க விலாசம்" இன்றும் இராமநாதபுரத்தில் தமிழர் கட்டிடக்கலைக்குச் சான்றாகப் பொலிவுற விளங்குகிறது.



"சத்தியமேவ ஜெயதே. இந்திய நாட்டின் சமய பண்பாட்டுச் சிறப்பினை மேலைநாடுகளில் பரப்பி வெற்றிப் பரணியுடன் தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தரது புனித பாதத்துளிகள் பட்ட முதல் புனித இடம்" என்று பாஸ்கர சேதுபதி கல்வெட்டில் பதிந்து வைக்க 25.1.1897ல் அமெரிக்காவிலிருந்து திரும்பிய விவேகானந்தர் இங்கு கால் பதித்தார்.

பெருமைக்குரிய இராமலிங்க விலாசம் அரண்மனையை இராமநாதபுரத்திற்கு 27.8.2018 ஒரு பயிற்சிக்குச் சென்றபோது தரிசித்து வந்தேன். இவ்வரண்மனையில் தற்போது தொல்லியல்துறை அருங்காட்சியகம் அமைத்துப் பராமரித்து வருகிறது. தங்கத்தாலான இராஜராஜேஸ்வரி விக்ரகம் அருள்பாலிக்கிற கோவிலும், ஜமீன் வாரிசுகள் வாழும் பிற பகுதிகளும் வளாகத்தில் உள்ளன. கோவிலில் நவராத்திரி விழா பிரசித்தம்.



இவ்வரண்மனையில் தான் வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையன் ஜாக்சன் துரை சந்திப்பு 1798ல் நிகழ்ந்தது.

அருங்காட்சியகத்தில் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், ஓவியங்கள், செப்புக்காசுகள், சிற்பங்கள், வளரி முதலிய ஆயுதங்கள், ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சேதுபதிகளின் அளப்பரிய பணிகளில் சில:
1.இரேமேசுவரம், திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை கோவில் கலை.
2.நீர்ப்பாசனம், கூத்தன் கால்வாய், சேதுபதி மடை, ஏரிகள் என தீர்க்க தரிசனம்.
3.சமயப் பொறை! இந்து, இசுலாமிய, கிருத்தவ, சமண ஆலயங்களுக்குக் கொடை.
4.தமிழ்ப் புலவர்கள் ஆதரவு. பாஸ்கர சேதுபதி சகோதரர் பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்றுவித்தல்.
5.இசை, நடனம், ஓவியக் கலைகள் வளர்த்தல். பணிகள் நீள்கின்றன!

அரண்மனை திருமலை நாயக்கர் மஹால் ஒத்த கல்தூண்கள் கொண்ட மகா மண்டபம், அர்த்த மண்டபம், இராமர் பீடம் என்னும் கருவறையுடன் கோவில் அமைப்பை உடையது. மேல்தளமும், வசந்த மண்டபம் போன்ற உப்பரிகையும் காணத்தக்கவை.



கட்டிடத்தின் நெடிய பெரிய சுவர்கள் முழுவதும் ஓவியங்கள் பலப்பல வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளது அரண்மனையின் பெருஞ்சிறப்பு! தெலுங்கு, தமிழ் அடிக்குறிப்புகள் உள்ளன.1710ல் முத்து விசய ரகுநாத சேதுபதியின் பட்டாபிசேகம் தீட்டப்பட்டுள்ளதால் ஓவியங்களின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியெனக் கருதுகிறார்கள். அன்றைய உடை, கலை, உருவங்கள், வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றை அறியத் தருகிற ஓவியங்கள் இன்றும் பொலிவுடன் காட்சி தருகின்றன. சரியான ஒளி அமைப்பு இருந்தால் கூடுதலாகக் கண்டு மகிழலாம்.



1.தசாவதார ஓவியங்கள்.
2.பாகவதக் காட்சிகள்
3.தர்பார், அயல் நாட்டுத் தூதர் வரவேற்பு, ஆடல் பாடல் காட்சிகள்
4.போர்க்காட்சிகள், வேட்டையாடுதல்
5.மன்னரும் அரசியும் இரதி மன்மதன் போல பெண்கள் குழுவாலான யானை, குதிரை மீது அமர்ந்து மலர் அம்பு விடுதல்.
6. அகம், புறம் காட்சிகள்.
காணக் கண்கோடி வேண்டும்.








இந்த அழகிய கலைக்களஞ்சியம் வெளிநாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாகப் பராமரிக்கப்படும், எப்படியெல்லாம் கொண்டாடப்படும் என்ற ஏக்கம் எழுந்தது.



___________________________________________________________
தொடர்பு: சொ.வினைதீர்த்தான்
karuannam@gmail.com






No comments:

Post a Comment