— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
முன்னுரை:
தமிழில் செய்யுள் வடிவம் என்பது மிகப்பழமையானது. சங்ககாலத்து மக்கள் தமக்குள் உரையாடிய பேச்சு வழக்கு உரைநடையாய் இருந்துள்ளமை இயல்பு. எனினும், எழுத்து வடிவத்தில் கருத்துப்பரிமாற்றம் நிகழ்ந்தது பெரும்பாலும் செய்யுள் நடையாகவே இருந்தது எனலாம். செய்யுள் இயற்றியோர் அப்புலமை பற்றியே புலவர் என்னும் பெயர் பெற்றார் எனலாம். புலவரே அன்றி, அவரைப் புரந்த ஆட்சியாளரும் தமிழில் கொண்ட புலமையால் செய்யுள் யாத்துள்ளனர். எந்நேரமும் அரசியலின் அழுத்தம் சூழ்ந்த நிலையில் ஆட்சிக்கட்டிலில் இருந்த அரசரும் கலையுள்ளம் கொண்டிருந்தனர் என்பதையும், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் சுவையையும் நுகர்ந்து வாழ்ந்தார்கள் என்பதையும் வரலாற்று வாயிலாக அறிகிறோம்.
செய்யுள் இயற்றிய சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், சோழன் நல்லுருத்திரன், சோழன் நலங்கிள்ளி, தொண்டைமான் இளந்திரையன், பாண்டியன் அறிவுடை நம்பி, பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற பழந்தமிழ் மன்னர்கள் இருந்தார்கள். பிற்காலத்தே வந்த மன்னர்களுள், மகேந்திர பல்லவன் ”மத்தவிலாசப்பிரகசனம்” நாடக நூல் எழுதியதும், பல்லவ மன்னன் நந்திவர்மன் தமிழ் மீது கொண்டிருந்த பற்றால், அறம் வைத்துப்பாடிய “நந்திக்கலம்பகம்” நூலைக் கேட்டு உயிரிழந்ததும், குறுநில மன்னர் கொங்கு வேளிர் “பெருங்கதை” எழுதியதும் எனப் பல்வேறு செய்திகளை நாம் அறிந்திருக்கிறோம். இவ்வாறு, அரசர்களுக்கும் தமிழுக்குமான உறவு நெருக்கம் கொண்டது. பல்லவர் காலக் கல்வெட்டுகளைப் படித்துக்கொண்டிருக்கையில், பல்லவ மன்னன் அபராஜித வர்மன் இயற்றிக் கல்வெட்டில் பொறித்துவைக்கப்பட்டதாக ஒரு வெண்பாப் பாடலைப் படிக்க நேர்ந்தது. அதைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் இந்தப்பதிவு.
திருத்தணி:
திருத்தணி என்றதும் முருகன் கோயில்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அவ்வூரில் வீரட்டானேசுவரர் கோயில் என்னும் பெயரில் ஒரு சிவன் கோயில் உண்டு. இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பெற்றது. கல்வெட்டுகளில் திருத்தணியின் பழம்பெயர் “திருத்தணியல்” என்று காணப்படுகிறது.
பல்லவர் கல்வெட்டு:
மேற்படி வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறைத் தென் சுவரில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று பாடல் வடிவில் அமைந்துள்ளது. பாடலின் வடிவம் வெண்பா. இக்கல்வெட்டின் வரியில், வெண்பாவைப் பாடியவர் பல்லவ அரசரே என்று குறிப்பிட்டுள்ளது. இக்கல்வெட்டு, தென்னிந்தியக் கல்வெட்டுகள் நூலின் பன்னிரண்டாம் தொகுதியில் (கல்வெட்டு எண் : 94) உள்ளது.
கல்வெட்டும் அதில் உள்ள வெண்பாவும்:
ஸ்வஸ்திஸ்ரீ
திருந்து திருத்தணியல் செஞ்சடை ஈசர்க்கு
கருங்கல்லால் கற்றளியாநிற்க - விரும்பியோ(ன்)
நற்கலைகளெல்லாம் நவின்ற சீர் நம்பி அப்பி
பொற்பமைய செய்தான் புரிந்து
இ வெண்பா பெருமானடிகள் தாம் பாடி அருளுத்து
கல்வெட்டுச் செய்திகள்:
கல்வெட்டு, நம்பி அப்பி என்பவர் திருத்தணிச் சிவன்கோயிலைக் கற்றளியாகக் கருங்கல்லைக் கொண்டு கட்டுவித்தான் என்பதை அரசனே தன் வெண்பாப்பாடல் மூலம் அறிவிக்கிறான் எனக்கூறுகிறது. எனவே, இதற்கு முன்னர் கோயில், செங்கல் கட்டுமானமாக இருந்தது என்றும், நம்பி அப்பி என்பவன் கல் கட்டுமானமாகக் கட்டுவித்தான் என்பது தெரிகிறது. கோயில் கட்டுவித்த பணியை, ஒரு வெண்பாப் பாடல்மூலம் அரசனே பாராட்டி மகிழ்கிறான். கல்வெட்டு பொறிக்கப்படும்போது அரசனே இடை புகுந்து தமிழில் ஒரு வெண்பாவைப் பாடி அருளுகிறான் என்பது ஓர் அரிய செய்தி. இக்கோயிலின் இன்னொரு கல்வெட்டில், இதே நம்பி அப்பி ஊரில் உள்ள உழுகுடிகளிடமிருந்து ஆயிரம் குழி நிலத்தை விலைக்கு வாங்கிக் கோயிலுக்குக் கொடையாக அளிக்கிறான் என்னும் செய்தியும், இக்கொடைச் செய்தி அபராஜித வர்மனின் பதினெட்டாவது ஆட்சியாண்டில் கல்வெட்டில் பொறிக்கப்படுகிறது என்னும் செய்தி உள்ளது. இக்கல்வெட்டில் கோயிலின் பெயர் வீரட்டானம் எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மேற்படி வெண்பாக் கல்வெட்டில் ”இ வெண்பா பெருமானடிகள் தாம் பாடி அருளு(வித்)தது” என்னும் வரி பல்லவ மன்னன் அபராஜிதனே என நூலின் பதிப்பாசிரியர் நிறுவுகிறார்.
சான்றுகள்:
I. A. R. No. 114 of 1925; S. I. I. Vol. XII. No. 94.
2. சாசனத் தமிழ்க்கவி சரிதம். பக். 26.
படம் உதவி:
வரலாறு விரும்பிகள் சங்கம் Varalaru Virumbigal Sangam - VVS
@pswhatsapp
https://www.facebook.com/pswhatsapp/photos/pcb.1941550629408298/1941550536074974/?type=3&theater
___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி : 9444939156.
No comments:
Post a Comment