Monday, October 8, 2018

இணைய ஊடகங்களில் தமிழ் - தாக்கங்களும் வளர்ச்சியும்

–  முனைவர்.க.சுபாஷிணி 



               பதிப்புத்துறை என்பது தற்சமயம் அச்சுப் பதிப்பு முறையைக் கடந்து இணையப் பதிப்பு முயற்சிகளாக, மின்பதிப்பாக்கங்களாக வலம் வரும் காலம் இது. ஓலைச்சுவடியிலிருந்து தமிழ் கற்ற காலமென்பது படிப்படியாக, அதிலும் குறிப்பாக18ம் நூற்றாண்டின் இறுதியில் குறைய, அச்சுப்பதிப்புக் கருவிகள் பெருக பதிப்பாளர்கள் பரவலாக சுவடி நூலிலிருந்து அச்சுப் பதிப்பிற்குத் தமிழ் நூல்களைக் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்ட அதே வேளை புதிய நூல்கள் நேரடியாக அச்சுப் பதிப்பாக அச்சகத்தார் பலரால் வெளியிடப்பட்டன. கணினி தொழில் நுட்பம்,வளர்ந்து விட்ட இன்றைய காலகட்டத்தில், தமிழ் நூல் பதிப்புக்கள் என்பவை அச்சுப் பதிப்பு மட்டுமே என்ற நிலையைக் கடந்து மேலும் ஒரு புதிய பரிமாணம் எடுத்துள்ளது. இணைய ஊடகத்தின் வழியாகத் தமிழ் வலம் வரும் இக்காலம் உலகளாவிய அளவில் தமிழ் வளர்ச்சிக்கு ஒரு பொற்காலமாகும். 




               நூல்களைப் போலவே சஞ்சிகைகள் வெளியீடு என்பதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெறும் பங்காற்றியுள்ளது. தமிழகத்தில் ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் சஞ்சிகைகள் பல வெளிவந்தமை பற்றி பலரும் அறிந்திருப்போம். இத்தகைய முயற்சிகள் உலகில் தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகள் சிலவற்றிலும் குறிப்பிடத்தக்க வகையில் நிகழ்ந்திருக்கின்றன. 



               சென்ற 20ம் நூற்றாண்டின் ஆரம்பக்கால கட்டங்களில் தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் முயற்சியாகச் செந்தமிழ்ச் செல்வன் என்ற ஒரு சஞ்சிகை வெளியிடப்பட்டது. இதன் ஒரு சஞ்சிகையின் பிரதி தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் மின்னூலாக வைக்கப்பட்டுள்ளது. அதனைத்   தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் காணலாம். இதே போல மலேசிய சிங்கையிலும் இலங்கைத் தீவிலும் சஞ்சிகைகள் பல தமிழ் ஆர்வலர்கள் சிலரால் குறிப்பிடத்தக்க வகையிலான முயற்சிகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டன. 

               ஆசிய நாடுகள் சிலவற்றில், 19ம் நூற்றாண்டின் இறுதிக் கால கட்டங்களில் நிகழ்ந்த தமிழ் முயற்சிகளை அறியும் போது வியப்பில் ஆழ்கின்றோம். சிங்கையில் 1875ம் ஆண்டில் சிங்கை வர்த்தமாணி என்னும் சஞ்சிகை வெளியிடப்பட்டது. சி.கே.மஹ்தும் சாஹீப் என்பவரது முயற்சியால் இந்த இதழ் தொடர்ந்து சிங்கையில் பிரசுரிக்கப்பட்டு வந்தது. குலாம் காதீர் நாவலர் என்னும் தமிழ் ஆர்வலர் அன்றைய மலாயாவின் பினாங்குத் தீவில் 1883ம் ஆண்டில் வித்யா விசாரணி என்ற ஒரு சஞ்சிகையைத் தொடங்கியிருக்கின்றார். இதே காலகட்டத்தில் வித்யா ஷேடனன் என்ற ஒரு பத்திரிக்கை வெளிவந்தது என்ற செய்தியையும் அறிய முடிகின்றது. இலங்கையின் கண்டியிலிருந்து முஸ்லிம் நேசன் என்ற ஒரு பத்திரிக்கையும் அக்கால கட்டத்தில் வெளிவந்துள்ளது. உள்ளூர் எழுத்தாளர்கள் மட்டுமன்றி பர்மா, சைகோன், சிங்கை மலாயாவிலிருந்தும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் அக்கால கட்டத்திலேயே இந்தச் சஞ்சிகையில் இடம்பெற்றன என்பதையும் அறிய முடிகின்றது. 

               பினாங்குத் தீவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாத வார சஞ்சிகைகள் வெளிவந்திருக்கின்றன. 1887ம் ஆண்டில் ஹிந்து நேசன் என்ற பத்திரிக்கை வெளி வர ஆரம்பித்தது. 1912ம் ஆண்டில் சில மாதங்களுக்கு மட்டும் என்ற வகையில் ஞானாசிரியன் என்ற வாரபத்திரிக்கை வெளிவந்து பின்னர் அது தினசரி பத்திரிக்கையாக ஜனோபகாரி என்ற பெயருடன் வலம் வர ஆரம்பித்தது. மலாயாவில் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியினால் 1.1.1887ம் நாள் அதிகாரப்பூர்வமாக்கப்பட்ட Book Registration Ordinance என்ற சட்டத்தின் கீழ் மலாயா சிங்கையில் வெளியிடப்படும் அனைத்து பதிப்பாக்கங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் இப்பகுதியில் வெளியிடப்பட்ட மாத வார தினசரி பத்திரிக்கைகளோ நூல்களோ எதுவாயினும் அதில் மூன்று படிவங்கள் பிரித்தானிய அரசுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் ஒரு படிவம் இங்கிலாந்தில் உள்ள பிரித்தானிய நூலகத்தில் இடம் பெற வேண்டும் என்ற சட்டம் அப்போது இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் விளைவாக இன்று பிரித்தானிய நூலகத்தின் சேகரிப்புக்களுக்கான அட்டவணையைக் கவனிக்கும் போது 1887 தொடக்கம் 1914 வரையிலும் மலாயா சிங்கையில், தமிழ் மொழியில் இக்காலகட்டத்தில் 34 தமிழ் மாத, வார தினசரி பத்திரிக்கைகள் வெளிவந்துள்ளன என்ற தகவலை அறிய முடிகின்றது. இவை மின்னூல்களாக பிரித்தானிய நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. 

               கணினி தொழில்நுட்பத்தின் வழி மின்னாக்க முயற்சிகள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் ஜெர்மனியில் மிக விரிவாக வளர்ந்த ப்ரோஜெக்ட் குட்டன்பெர்க் (http://www.gutenberg.org/ ) எனப்படும் திட்டம் உலக மொழிகள் அனைத்திலும் உள்ள நூல்களை மின்னூலாக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றது. பல நூலகங்களின் மின்னாக்கப்பணிகளுக்கு அடிப்படை கருத்தாக்கத்தை வழங்கிய ஒரு முயற்சியாக இத்திட்டம் அமைந்தது. பிரித்தானிய நூலகம் அதன் எல்லா சேகரிப்புக்களையும் மின்னாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டமையினால் அங்குள்ள ஏனைய மொழி படைப்புக்கள் மின்னாக்கம் பெற்றமையைப் போலவே இந்திய மலாயா சிங்கை நாளிதழ்களும் நூல்களும் கூட மின்னாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. மின்னூல்களாகக் கிடைக்கும் இவற்றைப் பெற விரும்புவோர் பிரித்தானிய நூலகத்தைத் தொடர்பு கொண்டு மின்னூலைப் பெற வாய்ப்பும் உள்ளது. 

               பரவலான கணினி மற்றும் இணையத் தொழில்நுட்ப வளர்ச்சி என்பவை ஏற்படுவதற்கு முன் பலரது தீவிர தமிழ்ப்பற்றின் காரணத்தினாலும் முயற்சிகளினாலும் வெளி வந்த படைப்புக்கள் பல சேகரிக்கப்படாமலேயே அழிந்தன. அச்சு இதழ்களாக அந்தந்த நாட்டு ஆவணப் பெட்டகங்களிலும் கிராம நூலகங்களிலும் முடங்கிக் கிடக்கின்ற நிலை மட்டுமே ஏற்படும் போது, பொது மக்கள் பார்வைக்குப் பரவலாக அவை கிடைக்கும் நிலை ஏற்படுவதில்லை. ஆனால் இணையப் பரப்பில் மின்னூலாக்கம் என்ற முயற்சிகள் பரவலாக இயங்க ஆரம்பித்த பின்னர் பல சஞ்சிகைகளை இணையத்தில் மின்வடிவத்தில் காண முடிகின்றது. 

இணையத்தில் தமிழ் நூல் மின்னாக்கம் எனும் பொழுது இவ்வகை முயற்சிகளை பொதுவாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: 
1. அரசாங்க நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், ஆவணப் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகியவை சஞ்சிகைகளை மின்வடிவத்தில் மாற்றி அவற்றை இணைய வெளியில் வெளியிடுவது . 
2. தன்னார்வக் குழுக்களும் பதிப்பகத்தாரும் இணைய வெளியில் சஞ்சிகைகளை மின் வடிவத்தில் வெளியிடும் முயற்சிகள்.
3.தனிநபர் முயற்சிகளின் வழி வெளியிடப்படும் மின்சஞ்சிகைகள் பழம் சஞ்சிகைகளின் மின்னாக்கங்கள். 

               இணைய வெளியில் மின்னூல்கள், மின்சஞ்சிகைகள் வெளியீடு என்பது மட்டுமன்றி விரிவான வகையிலும் கருத்துப் பரிமாற்றங்களும் உடனுக்குடன் பதிப்பித்தல் என்ற முயற்சிகளும் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து விரிவாகிக் கொண்டே வருகின்றன என்பதைக் காண்கின்றோம். மடலாடற் குழுக்கள் இவ்வகையில் இயங்குபவையே. கருத்துப் பரிமாற்றத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு இயங்கும் இவ்வகைத் தளங்கள் இவ்வகை முயற்சிகளில் ஈடுபடுவோரை மிக ஈர்ப்பதால் தட்டச்சு செய்தல், தங்கள் கருத்துக்களை ஏனையோருடன் இணைய வெளியில் பகிர்ந்து கொள்தல் என்ற முயற்சிகளில் இறங்கி தங்கள் தமிழ் அறிவை படிப்படியாக உயர்த்திக் கொண்டு எழுத்தாளர்களாகப் பரிமளித்திருக்கும் நிலையில் பலர் இன்று உதாரணங்களாக இணைய உலகில் வலம் வருகின்றார்கள். இதற்கு ஒரு படி மேலாக ஃபேஸ்புக் தளங்கள் இயங்குகின்றன. தமிழிலேயே தட்டச்சு செய்து பலரும் மிகுந்த ஈடுபாட்டுடன் தங்கள் தமிழறிவு மேம்படும் வகையில் நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டு கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்துகின்றனர். 

               இத்தகைய முயற்சிகளினால் தமிழ் இலக்கியப் படைப்புக்களின் பரப்பும் அதன் எல்லையும் மேலும் விரிவடைந்த நிலை பெருகி வருவதைக் காண முடிகின்றது. தமிழ் இலக்கியப் படைப்புக்கள் முன்னர் படைக்கப்பட்ட இலக்கியங்களின் உட்பொருளிலிருந்து மேலும் விரிவாகி ’அயலகச் சூழலில் தமிழ்’ என்ற வகையில் தமிழ் பண்பாட்டுக் கூறுகளையும் அயலக சமூகப் பின்னணியின் சமூகக் கூறுகளையும் கலவையாகக் கொண்டு பரிமளிக்கும் நிலை உருவாகியுள்ளது என்பதைக் காண முடிகின்றது. முன்பை விட தற்காலத்தில் அதிகமான பயண இலக்கியங்கள், அயலக பின்னணி சார்ந்த இலக்கியங்கள், புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை நிலையை விவரிக்கும் இலக்கியங்கள், விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட படைப்புக்கள் என்ற வகையில் வெளிவருகின்றன. நம் கண் முன்னே காணும் சமூக அவலங்களைப் பழகிப் போன பார்வையுடன் காணும் தன்மை மறைந்து மாறுபட்ட கோணத்தில் காணும் இலக்கியங்களும் கூட உருவாகின்றன. விரிவான வாசிப்பு, உடனுக்குடன் படைப்புக்களைச் சீர்செய்து மாற்றி தரவுகளைச் சேர்த்து வளம் மிக்க படைப்புக்களாக வழங்கும் நிலை என்பது இணைய ஊடகம் வழங்கியிருக்கும் நல்வாய்ப்பு என்றே கூறலாம். 

               இணைய ஊடகங்களில் வெளி வரும் பதிவுகள் எல்லா வேளைகளிலும் சிறப்பானவை என்றும் தரத்தில் உயர்ந்தவை என்றும் கொள்வதற்கு இல்லை என்பதும் மறுக்கப்பட இயலாது. அவசரமாகத் தட்டச்சு செய்து எழுத்துப் பிழைகளைச் சரிபார்க்காமலேயே, உடன் பதிலளிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் தட்டச்சுதல் என்பன போன்ற நடவடிக்கைகளினால் தட்டச்சுப் பிழைகள் நிறைந்த எழுத்துப் பதிவுகளையும் இணையத்தில் பரவலாகக் காண்கின்றோம். இது மட்டுமன்றி இணையத் தொழில் நுட்ப அறிவு கொண்டோர் எவரும் ஒரு பதிப்பாளராகலாம் என்ற நிலை சுலபமாக வாய்ப்பதால் பலரும் இணையத்தில் சஞ்சிகைகள் நடத்துவது என்பது பரவலாகி விட்டது. இதில் முக்கியக் கேள்வியாக அமைவது படைப்புக்களின் தரம் எவ்வகையில் அமைந்திருக்கின்றது என்பதே. ஆக இத்தகைய விஷயங்களை உற்று நோக்கி அதனைச் சீர் செய்து தரமான இலக்கியப் படைப்புக்களையும் தமிழ் கருத்துப் பரிமாற்றங்களையும் செய்து வருவது விரிவானால் தமிழ் இலக்கிய வளர்ச்சி கணினி மற்றும் இணைய ஊடகங்களின் வாயிலாக பலதரப்பட்டோரையும் சென்று அடைவதோடு தமிழ் மொழிக்கு மிகச் சிறந்த வளர்ச்சியை வழிகாட்டும் என்பது உண்மையாகும்!

[2014 தினமணி ஆண்டு விழாவில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.]



________________________________________________
தொடர்பு:
முனைவர்.க.சுபாஷிணி   (ksubashini@gmail.com)




No comments:

Post a Comment