Tuesday, October 2, 2018

வேட்டவலம் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலச் செக்கு கல்வெட்டு

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தின் பெரிய ஏரிக்கரையில் செக்கு கல்வெட்டு ஒன்று  கண்டெடுக்கப்பட்டது.  மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின்  குழுவினர் செல்லங்குப்பம் கிராமத்திற்கு சென்று பெரிய ஏரிக்கரையின்  மண்ணில் புதைந்திருந்த கல் செக்கைத்  தோண்டி எடுத்து ஆய்வு செய்தனர். ஆய்வில் அந்தக் கல் செக்கைச்  சுற்றி கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்ததும், அது  சோழர்  காலம் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. கூரியூரை சேர்ந்த பெருவன் என்ற சினபகையின் மகன் சேந்தன் என்பவர் இந்தச் செக்கை செய்து கொடுத்துள்ளதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தச் செக்கில் எடுக்கப்படும் எண்ணெய்யில் ஒரு ஆழாக்கு தினமும் மகாதேவர் என்ற இறைவனுக்கு வழங்க முறை செய்யப்பட்டுள்ளது என்றும்,  இறைவனுக்கு நாள்தோறும் வழங்கப்படும் எண்ணெய், தர்மத்தைக் காப்பவர்களின் கால்தூசி, என் முடிமேல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதாக வரலாற்று ஆய்வு நடுவம் குழுவினர் கூறினார். மேலும், "இந்தச் செக்கு கல்வெட்டு  இவ்வூரில் கிடைத்தது அரிய கல்வெட்டு. இந்தக் கல்வெட்டில் குறிக்கப்படும் மகாதேவர் என்பது சிவனைக் குறிக்கிறது. மேலும், செல்லங்குப்பத்தில் அழிந்துபோன சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் மேலும் கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்றும் கூறினார். கல்வெட்டு குறித்த மேலதிகத்  தகவலைத் தினகரன் செய்தியில் காணலாம். 


கல்வெட்டு வாசிப்பு: து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
திருவண்ணாமலை, வேட்டவலம், செல்லங்குப்பம் செக்குக் கல்வெட்டு மற்றும் பிற துண்டுக்கல்வெட்டுகளின் பாடம்:
          செக்குக் கல்வெட்டின் படம் படிக்கும்படியாய்த் தெளிவாக இல்லை. காணொளியைப் பார்த்துச் செக்குக் கல்வெட்டையும் பிற துண்டுக்கல்வெட்டுகளையும் ஓரளவு படித்தேன்.


செக்குக் கல்வெட்டின் பாடம்:
1 ஸ்வஸ்திஸ்ரீ கூரியூர் பெரு
2 ளான் சின்பகை மகன் செக்கு
3 மாதேவர்க்(கா)………க
4 த்தான் இது

குறிப்பு: மின்னஞ்சலில் உள்ள செய்திக்குறிப்பின்படி, சின்பகை என்பானின் மகன் செய்த செக்கு என்பது மேற்படிப் பாடத்தின் மூலமும் உள்ளது. மாதேவர் என்பதும் சிவன்கோயில் இறைவனைக் குறிப்பதே. கல்வெட்டு கிடைத்த ஊரின் பழம்பெயர் கூரியூர் என்பதாகத் தோன்றுகிறது. சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.



துண்டுக்கல்வெட்டுகள்:

துண்டுக்கல்-1   பாடம்:

1 ங்க சோழதேவ
2 லத்திற் கடியி
3 (டி) குழி நானூ
4 . . . . . .  நாட்ட

குறிப்பு: நிலக்கொடை பற்றிய கல்வெட்டாகலாம். குழி என்பது ஒரு அளவை. 144 சதுர அடிப்பரப்பு ஒரு குழி எனப்படுகிறது.



துண்டுக்கல்-2   பாடம்:

1 டிச் செங்குறை நாட்டு
2 இதன் கிழக்குத் தடியே
3 (வி)னாற் குழி ஆயிரத்தை
4 திருமஞ்சனப்புற

குறிப்பு: இந்தக்கல்வெட்டும் நிலக்கொடை பற்றிக்கூறுகிறது. செங்குறை நாடு என்னும் ஒரு நாட்டுப் பிரிவைக் கல்வெட்டு குறிக்கிறது. திருவண்ணாமலை-வேட்டவலம் பகுதி செங்குறை நாட்டுப்பிரிவில் இருந்துள்ளது எனலாம்.  தடி என்பது ஒரு துண்டு வயல்நிலத்தைக் குறிக்கும். கோயிலின் இறைத்திருமேனியை நீராட்டுவதற்கு (திருமஞ்சனம்) உண்டான செலவினங்களுக்காக நிலக்கொடை அளிக்கப்பட்டுள்ளது என்பதைத் திருமஞ்சனப்புறம் என்னும் தொடர் குறிக்கிறது.



துண்டுக்கல்-3   பாடம்:

1 ஷமேஷமாக விட்ட நிலம்
2 குத் தடியிரண்டு குழி இரு
3 த்தைஞ்சினால் நிலம்
4 கோலால் ஒன்றும் கூரி

குறிப்பு: இந்தக்கல்வெட்டும் நிலக்கொடை பற்றிக்கூறுகிறது.  இங்கு இரண்டு துண்டு வயல் நிலம் குறிக்கப்படுகிறது. நிலம் கூரியூரில் கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். கூரி.. என்னும் சொல் வழி இதை யூகிக்கலாம். நிலம் ஒரு வகைக் கோலால் அளக்கப்பட்டிருக்கிறது. துண்டுக்கல்வெட்டில் கோலின் பெயர் சுட்டும் எழுத்துகள் இல்லை.



துண்டுக்கல்-4   பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ  த்ரிலோகமாதேவி
2 புரத்து வியாபாரி தண்டலங்
3 கிழாந் சூரியந் பெருமாளாந சமை
4 ய சேநாபதி தந்மம் இக்கொழு
5 கை

குறிப்பு :  இக்கல்வெட்டு சற்றே முழுச் சொற்றொடரைக் கொண்டுள்ளது. திரிலோகமாதேவிபுரம் என்னும் ஊர் குறிக்கப்பெறுகிறது. ஊர்ப்பெயரில் உள்ள புரம் என்பது, இவ்வூர், வணிகர்கள் தங்கியிருந்து வணிகம் செய்த நகர் என்பதைக் குறிக்கும். அதற்கேற்ப இக்கல்வெட்டில் வியாபாரி என்னும் சொல்லைக் காண்கிறோம்.  சமையம் (சமயம் அல்ல) என்பது ஒரு கூட்டமைப்பைக் குறிக்கும் சொல். இங்கே, ஊரளவில் இயக்கிய ஒரு குழு அல்லது கூட்டமைக் குறிப்பதாகலாம். இந்த அமைப்பில் இருந்த சமைய சேநாபதி (தலைமை)ப் பொறுப்பில் இருந்த ஒரு வணிகனான சூரியன் பெருமாள் என்பவன் கொடை (தந்மம்) அளித்துள்ளான். இவன் தண்டலம் என்னும் ஊரின் கிழான் பொறுப்பையும் ஏற்றவன் என்பது தண்டலங்கிழாந்” என்னும் தொடரால் அறியப்படுகிறது. கொடைப் பொருள், கல்வெட்டின் இறுதியிற் சொல்லப்படும் “தந்மம் இக்கொழுகை” என்னும் தொடரால் அறியலாகும். கொழுகை என்னும் சொல் கல்வெட்டு அகராதியில் காணப்படவில்லை. ஆனால், “கொள்கை” என்னும் சொல், அகராதியில் “ கவசம்; லிங்கத்தின்மீது கவிக்கும் மூடி” என்னும் பொருளில் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டில் காணப்படும் ”கொழுகை” இந்தக் “கொள்கை”யின் திரிபாக இருக்கலாம். எனில், கொடையாளி சிவலிங்கத்தின் மீது கவசமாகப் பதிக்கும் கொழுகையைக் கொடையளித்துள்ளான் என்பதாகப் பொருள் கொள்ளல் பொருந்தும்.  இதனால், கோயிலும் சிவன் கோயில் எனக் கருத வாய்ப்பு மிகுதி. சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.  



துண்டுக்கல்-5   பாடம்:

1 [கூ]ரியூர் மலையமான் மலையனாயனான  வீரராக்ஷஸச் சேதியரயனுக்கு
2 ழி நாலும் தென்வடக்குப் பழந்தேவதானமான நெடு(வா)துக்கு வடக்[கு]
3 யும் திருத்துக்குழியிருநூறும் ஆகக் குழி ஆஇயரத்து நானூற்றெழுப
4 . . . . . . . .  பிடாரி கோயில் கிழக்கு வழிக்கு மேற்குக்

குறிப்பு:  இந்தக் கல்வெட்டின் மூலம், கூரியூர் மலையமான்களின் ஊர் என்பது புலனாகிறது. திருவண்ணாமலை (திருக்கோவிலூர்) பகுதி மலையமான்களின் நாட்டுப்பகுதி என்பது வரலாற்றுச் செய்தி. இராசராச சோழனின் தாயார் மலையமான் ஒருவரின் மகள் என்பதும் நாம் அறிந்த ஒன்று. கல்வெட்டு, மலையமான்களில் ஒருவனான வீரராட்சசச் சேதிராயன் காலற்றது என்பதும் புலனாகிறது. இக்கல்வெட்டும் நிலக்கொடை பற்றிக் கூறுகிறது. மொத்தம் ஆயிரத்து நானூற்று எழுபது குழி நிலம் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. நிலத்தின் எல்லைகள் பற்றிய குறிப்பில், கோயிலுக்கு ஏற்கெனவே  தேவதானமாக ஒரு நிலம் அளிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. மேலும், சிவன் கோயிலுக்கருகில் ஒரு பிடாரி கோயில் (கொற்றவை கோயிலாக இருக்கலாம்) இருந்துள்ளது என யூகிக்கவும் எல்லைக் குறிப்பு உணர்த்துகிறது. கொடை நிலமான ஆயிரத்து நானூற்று எழுபது குழியில் இருநூறு குழி நிலம் திருத்து நிலமாக இருந்துள்ளது என்பது பெறப்படும். திருத்து (பெயர்ச்சொல்), பண்படுத்தப்பட்ட நிலத்தைக் குறிக்கும்.







___________________________________________________________

கல்வெட்டு வாசிப்பு -  து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.

தினகரன் செய்தி: 
வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலச் செக்கு கல்வெட்டு:வரலாற்று ஆய்வு நடுவம் கண்டெடுப்பு, 2018-09-07;  (http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=433813) 

காணொளி:
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் கிராமம் பெரிய ஏரிக்கரையில் கிடைத்த  செக்கு கல்வெட்டு 
காணொளி:  https://www.youtube.com/watch?v=8Dv3Xp2NTEI





No comments:

Post a Comment