Monday, October 1, 2018

கலிங்கத்துப்பரணி காட்டும் கொற்றலை

 –  மு.முத்தரசு


கொற்றலை ஆறு வரலாறு:
பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் சொல்லப்படுகிறது. இந்த ஆறு கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் 93 கி.மீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கி.மீ தொலைவும், தமிழகத்தில் 222 கி.மீ தொலைவும் பாய்ந்து சென்னைக்குத் தெற்கே 100 கி.மீ தொலைவிலுள்ள வயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதற்கு மொத்தமாக ஏழு துணையாறுகள் உள்ளன. அவற்றுள் செய்யாறு முதன்மையானதாகும். வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, மேல்மொணவூர், வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவை இந்த ஆற்றின் கரை பகுதியில் அமைந்துள்ளன.

பாலாற்றிலிருந்து பிரிந்த கிளை ஆறுதான் கொற்றலையாறு. பாலாற்றிற்குப் பழைய வழித்தடம் ஒன்று இருந்தது. அது நாளடைவில் தடம் மாறித் தற்பொழுது புதிய வழித்தடத்தில் பாய்கிறது எனப் புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

கொற்றலை ஆறு அல்லது கொசஸ்தலை எனப்படும் ஆறு திருவள்ளூர், சென்னை போன்ற வடதமிழகத்தில் பாயும் ஆறாகும். வட ஆற்காடு மாவட்ட பகுதிகளே இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகும். ஆற்றின் மொத்த நீளம் 136 கி.மீ தொலைவு. சென்னை நகருக்குள் 16 கி.மீ பாயும் இந்த ஆறு ஆந்திரத்தின் கிருஷ்ணாபுரம் தொடங்கி, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக, பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து சென்னை வழியாகப் பாய்ந்து எண்ணூர் வங்கக்கடலில் கலக்கிறது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு மேலே தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, மீஞ்சூர் அருகே உள்ள வள்ளூர் அணைக்கட்டு ஆகியன பாசனத்திற்குப் பயன்படுகிறது.

கொற்றலை என்ற பெயர் மருவி இன்று கொசஸ்தலை ஆறு என வழங்கப்படுகிறது. இப்பெயர் மாற்றத்திற்குக் காரணம் அன்றைய காலச் சமூக அரசியல் மாற்றமே எனலாம். அது கொற்றலையாறு, குயத்தலை ஆறு, கொசஸ்தலை, குசைத்தலை, குறல்தலை ஆறு, குறத்தியாறு எனப் பல பெயர்களில் மருவியுள்ளதை அந்தந்தக் காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதிவுசெய்கின்றன.

ஆற்றின் ஒவ்வொரு பெயர்களும் பல வரலாற்றுக் கதைகளைத் தாங்கி நிற்கின்றன. இந்த வரலாற்றுப் புராணக் கதைகள் ஆறு பாயும் பகுதிகளில் வாழக்கூடிய மக்களால் சொல்லப்பட்டு வருகிறது. கதை சொல்லக்கூடிய மக்கள் தங்கள் வாழ்வியலோடு சில நாட்டுப்புறத் தெய்வங்களான நீர்நிலை சார்ந்த ஏழு கன்னித் தேவதைகள் பற்றியும் ஆறு உருவான வரலாற்றைப் பற்றியும் குறிப்பிடுகின்றனர் என்பதைக் கௌதம சன்னாவின் குறத்தியாறு என்ற நூலின் வழி அறியலாம். பொதுவாக, தமிழகத்தில் நீர்நிலை சார்ந்த தெய்வங்களாக ஏழு கன்னிமாரைக் குறிப்பிடப்படுவதை நாட்டுப்புற இலக்கியங்கள் பதிவுசெய்கின்றன.

கலிங்கத்துப்பரணி பாடல் வழி அறியலாகும் கொற்றலை ஆறு:

கலிங்கத்துப்பரணி பாடிய ஆசிரியர் செயங்கொண்டார் சோழநாட்டில் உள்ள தீபங்குடி என்ற ஊரில் பிறந்தவர். இவரது காலம் கி.பி பதினோராம் நூற்றாண்டாகும். பரணி இலக்கியம் அபயன் என்கிற குலோத்துங்கச் சோழன் கலிங்க நாட்டைத் தன்னகப்படுத்த வேண்டி தன்னிடம் முதன்மந்திரியாகவும், தளபதியாகவும் இருந்த வண்டைநகர் கருணாகரத் தொண்டைமானைக் கலிங்கப்போருக்கு அனுப்பினான். கலிங்கப் போரைச் சிறப்பித்துப் பாடுவது கலிங்கத்துப்பரணியாகும்.

கலிங்கத்துப்பரணி கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடுபாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, இந்திரசாலம், இராசபாரம்பரியம், பேய்முறைப்பாட்டு, அவதாரம், காளிக்குக் கூளி கூறியது, போர் பாடியது, களம் பாடியது ஆகிய உறுப்புகளைக் கொண்டு பாட்டுடைத்தலைவனின் இயல்பு, சிறப்பு, வெற்றி முதலியவற்றைப் புகழ்ந்து அளவடி முதலாக அனைத்துச் சீரானும் ஈரடித் தாழிசைகளால் புறப்பொருள்கள் தோன்ற பாடுவது ‘பரணி’ இலக்கியத்தின் இலக்கணம் ஆகும்.

காளிக்குக் கூளி கூறியது என்ற பகுதியில் ஆறு பல கடந்தனர் என்ற தலைப்பில் கருணாகரத் தொண்டைமான் தன் படைகளோடு கடந்து சென்ற வழியில் ஆறுகள் பல கடந்து கலிங்க நாட்டுடன் போர் செய்யச் சென்றுள்ளனர் என்ற குறிப்பு இடம்பெறுகிறது. இதனை,
பாலா றுகுசைத் தலைபொன் முகரிப் பழவா றுபடர்ந் தெழுகொல் லியெனும்
நாலா றுமகன் றொருபெண் ணையெனும் நதியா றுகடந் துநடந் துடனே.

வயலா றுபுகுந் துமணிப் புனல்வாய் மண்ணா றுவளங் கெழுகுன் றியெனும்
பெயலா றுபரந் துநிறைந் துவரும் பேரா றுமிழிந் ததுபிற் படவே.

கோதா வரிநதி மேலா றொடுகுளிர் பம்பா நதியொடு சந்தப்பேர்
ஓதா வருநதி யொருகோ தமையுடன் ஒலிநீர் மலிதுறை பிறகாக.
(கலிங்க. காளிக்குக் கூளி கூறியது, ஆறு பல கடந்தனர், பா.56 - 58)
என்ற பாடலின் வழியாகப் பண்டைய சமூகத்தில் பாய்ந்த ஆறுகளைப் பற்றி நன்கு அறியமுடிகிறது.

பாலாறு - மைசூர் பீடபூமிக்கு அருகில் தோன்றி, வட ஆற்காடு செங்கற்பட்டு வழியாக ஓடுகிறது. குசைத்தலை - வட ஆற்காட்டில் உள்ள காவேரிப்பாக்கத்தில் தோன்றி திருவள்ளூர் பொன்னேரியில் கடலில் கலக்கிறது. பொன்முகரி - திருகாளத்தியில் பாயும் ஆறாகும். வடபெண்ணை - மைசூர் பீடபூமியில் தோன்றி அனந்தபுரம், கடப்பா, நெல்லூர் வழியாகப் பாய்கிறது. கோதாவரி மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப்பிரதேச்தை வளப்படுத்தி, பின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் வழியாகக் கலிங்கத்துப் பரணி இலக்கியம் தோன்றிய அன்றைய காலகட்டத்தில் பாய்ந்த பல ஆறுகள் இன்றும் இருக்கின்றன என்பது தெளிவுற முடிகிறது.

செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி அடியொற்றி அறிஞர் அண்ணா கலிங்கராணி எனும் நூலைப் படைத்துள்ளார். அந்நூலில் ஆறுகளைப் பற்றிப் பின்வருமாறு,
“குலோத்துங்கனின் படைகள் பூங்காவுக்குள் புகுவதுபோல் இங்கு வந்து சேருமோ! இடையே பாலாறு, குசைத்தலை, முகரி, கொல்லி, பெண்ணை, வயலாறு, மண்ணாறு, பேராறு, கோதாவரி, கம்பை, கோதமை ஆகிய பல நதிகளைக் கடக்க வேண்டும். கலிங்கத்தின் மீது பாயுமுன் அந்தப் படைகள் களைத்துப்போகும். ஆகவே, அவற்றை முறியடித்தல் எளிது என்பேன். மேலும் சோழ மண்டலம் சுபீட்சமாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பெருமையாகப் பேசப்படுகிறது. அரசே! அந்தச் சுபீட்சமே போர்த்திறனை மாய்த்துவிட்டிருக்கும், மங்கச் செய்வதாயிருக்கும். எனவே சோழனின் சூரப்புலிகளுக்குக் கலிங்கம் அஞ்சத் தேவையில்லை. அஞ்சுவோருக்கு நாம் வளைகள் பரிசு தருவோம்! வாளேந்தும் கரங்களுக்குக் கலிங்கத்தில் பஞ்சமில்லை”
எனப் பதிவு செய்துள்ளார். வளம் நிறைந்த சோழ நாட்டை மறந்து கலிங்கநாட்டுடன் போர் செய்யப் பல ஆறுகளைக் கடந்து செல்கிறான். கடந்து செல்லும் ஒவ்வொரு ஆறும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. ஆற்று வளம் நிறைந்த நாடான சோழ நாட்டின் பெருமையைப் பேசுவதை அறிந்து கொள்ளமுடிகிறது.

கொற்றலை ஆறு அன்றைய காலகட்டத்தில் குசைத்தலை என்ற பெயராக மருவி வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் இதன் வாயிலாக அறியலாம். குசைத்தலை ஆறு பல்வேறு ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட மொழிக்கலப்பால் பிற்காலத்தில் கொசஸ்தலை ஆறாக மாறியிருக்கும் என்பது புலனாகிறது. கொசஸ்தலை என்ற பெயரே தற்காலத்திலும் புழக்கத்தில் இருக்கின்றன.

கொற்றலை ஆறு உருவானதற்கான வாய்மொழிக் கதைகள்:
கொற்றலை ஆறு உருவானதற்கான வாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு குறத்தியாறு என்ற காப்பிய நாவல் தோன்றியிருக்கிறது. இதில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. கொற்றலை ஆறு பாயும் திருவள்ளூர் மாவட்டம் மொண்ணவேடு என்ற கிராமத்தில் ஆறு உருவானதற்கான வாய்மொழிக் கதைகள் நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அந்தக் கதைகள் இன்றைய காலகட்டத்திலும் மக்கள் சிலரால் சொல்லப்படுகின்றன. அவை பின்வருமாறு

“குறத்தி தன் குழந்தையுடன் வெயில் மிகுந்த காலகட்டத்தில் ஆற்றைக் கடக்கும் பொழுது வெம்மையின் காரணமாகக் குழந்தையைக் கீழே போட்டுக் குழந்தை மீது ஏறி நின்று விட்டதாகக் கதை அம்மக்களால் வழங்கப்பெறுகின்றன” குழந்தையை திண்ண ஆறு குசைத்தலை ஆறு என்று அந்தக் கிராமத்து மக்களின் வாய்மொழியாக வழங்கப்படுகின்றன என்பதைத் தமிழ்ப் புதின வரலாறு கௌதம சன்னாவின் குறத்தியாறு என்ற ஆய்வேட்டின் வழி அறியமுடியும்.

மற்றொரு வரலாற்றுக் கதை திருவள்ளூர் மாவட்டம் பூண்டிக்கு அருகில் உள்ள ஒதப்பை என்ற கிராமத்தில் உள்ள மக்களால் சொல்லப்படுகின்றன. அவை “சிவ பெருமான் பார்வதியைக் குறத்தி வேடம் அணிந்து குறை கூடையுடன் சென்று கொசஸ்தலை ஆறு பாயும் ஒதப்பை கிராமத்தில் தண்ணீர் வாங்கிக் கொண்டு வரச் சொன்னாராம் அதை ஏற்ற பார்வதி குறத்தியாக மாறி தண்ணீர் வாங்கிக்கொண்டு திரும்பும் அந்த நேரத்தில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியதால் மறு கரைக்குச் செல்ல முடியாத பார்வதியைச் சிவபெருமான் அந்தக் கிராமத்திலிருந்து அங்கு வாழும் மக்களைத் தரிசிக்க வேண்டும் என்பதாகவும் வருடத்திற்கு ஒருமுறை உற்சவம் நடத்த வேண்டும் என சிவபெருமான் கூறியதாக” அந்த மக்களால் புராணக்கதை சொல்லப்படுகிறது. குறத்தியம்மனுக்கு இந்தக் கிராமத்தில் சிலை வைத்துக் கோயில் எழுப்பப்பட்டிருப்பது மேலும் சிறப்பாகும். இதுபோன்ற பல்வேறு கதைகள் ஆறு பாயும் பகுதிகளில் வாழக்கூடிய மக்களால் சொல்லப்பட்டு வருகின்றன.

கொற்றலை ஆறு காட்டும் தமிழர் வாழ்வியல்:
இந்தியத் தொல்லியல் துறை வரலாற்றில் சிறப்பானதொரு இடத்தைக் கொற்றலையாறு பிடித்திருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வேலூர் மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டைக்கு அருகில் பாலாற்றிலிருந்து கிளை ஆறாகப் பிரிந்து செல்லும் ஆறு கொற்றலையாக மாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளுர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

கொற்றலை ஆறு பாயும் பூண்டிக்கு அருகில் தொல் மனிதர்கள் வாழ்ந்த பழமைவாய்ந்த பகுதிகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதிகளில் பழைய கற்கால ஆயுதங்கள் காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் பழைய கற்காலப் பண்பாட்டை, ‘சென்னைக் கைக் கோடாரி தொழிற்கூடம்’ (MADRAS HAND AXE INDUSTRY) எனக் குறிப்பிடுகின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

தொல்பழங்கால மனிதர்கள் வாழ்ந்திருப்பதும் ஆறு ஓடும் பகுதிகளில் கற்காலக் கருவிகள் கிடைப்பதும் மேலும் கொற்றலையாற்றுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைகிறது.

FATHER OF THE PRE- HISTORY OF INDIA எனப் போற்றப்படும் ROBERT FOOTE தனது நினைவேட்டில் (GSI MEMOIR - 1873) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். அவை,

“இந்தக் கொற்றலை ஆற்றின் கழிமுகப் பகுதி, சிற்றாறுகளால் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. முற்காலத்தில் ஓச்சேரி பகுதியிலிருந்து, பாலாறு வடகிழக்காகப் பாய்ந்து புலிகாட் ஏரியில் சங்கமித்திருக்க வேண்டும். இன்றைய ஆரணியாறு, கொற்றலை ஆறு, கூவம், அடையாறு போன்றவை பாலாறு மற்றும் கிளை நதிகளின் தொல் தடங்களாக இருக்கக் கூடும்” எனும் கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்தினை அடியொற்றி ‘பாதை மாறிய பாலாறு’ எனும் தலைப்பில் சிங்கநெஞ்சன் எழுதிய கட்டுரை   தினமணியில்  (23.07.2005) அன்று வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாக,
தமிழ்ச் சிற்றிலக்கிய வகையான கலிங்கத்துப்பரணியில் அன்றைய காலகட்டத்தில் பாய்ந்த பாலாறு, குசைத்தலை, முகரி, கொல்லி, பெண்ணை, வயலாறு, மண்ணாறு, பேராறு, கோதாவரி, கம்பை, கோதமை போன்ற ஆறுகளைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆற்றுவளம் நிறைந்த நாடாகத் தமிழகம் திகழ்ந்ததை இதன்வழி அறியலாம். குசைதலை ஆற்றைக் கடந்து குலோத்துங்கன் கலிங்க நாட்டோடு போர் புரியத் தனது படைகளோடு செல்கிறான் என்ற பதிவு இடம்பெறுகிறது. குசைத்தலை எனும் ஆறு கொற்றலை ஆறு, குறில்தலையாறு, குறத்தியாறு என மருவியதை அறியலாம். தற்காலத்தில் தோன்றிய குறத்தியாறு எனும் காப்பிய நாவலில் கொசஸ்தலை ஆறு தோன்றிய வரலாற்றை மக்கள் வாழ்வியலோடு பல நாட்டுப்புறக்கதைகளை இணைத்துக் கூறுகின்றனர் என்பது புலனாகிறது. கொற்றலை ஆறு பாய்கின்ற பகுதியில் தொல் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் காணப்படுவதோடு ஏராளமான கற்கருவிகள் கிடைப்பது தொல்லியல் ஆராய்ச்சியில் கொற்றலை ஆறு நீங்காத இடம்பிடித்திருப்பதை உணரலாம். கலிங்கத்துப்பரணி காட்டும் கொற்றலையாறு செழிப்பு வாய்ந்ததாக விளங்கியதோடு அக்காலத்தில் பல ஆறுகள் ஓடின. இன்றும் அந்த ஆறுகள் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன. இயற்கையைப் போற்றி, நீர் மேலாண்மையை முறையாகப் பராமரித்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, தமிழகத்தில் பாய்கின்ற ஆறுகளை முறையாகப் பாதுகாக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.


துணை நின்ற நூல்கள்:
1. புலியூர்க் கேசிகன், கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை, முதற்பதிப்பு - 2014.
2. கௌதம சன்னா, குறித்தியாறு, கிழக்கு பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை, இரண்டாம் பதிப்பு – 2014.
3. இரா. சந்திரசேகரன், தமிழ்ச் சிற்றிலக்கியங்கள், நாம் தமிழர் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை, முதற்பதிப்பு – 2012.

ஆய்வேடு:
1. மு.முத்தரசு, தமிழ்ப் புதின வரலாறு : கௌதம சன்னாவின் குறத்தியாறு, ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 2018. ________________________________________________________________________
தொடர்பு:
மு.முத்தரசு
ஆய்வியல் நிறைஞர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை – 600 005

No comments:

Post a Comment