Saturday, September 29, 2018

மகரவிளக்குச் சுடரில் மனிதம்!!

--  ருத்ரா இ.பரமசிவன்.






இருமுடி தாங்கு.
கல் முள் பாராமல்
உயரம் கண்டு
சளைக்காமல்
முன்னேறு.
ஏன்? எதற்காக? என்ற
கேள்விகளும்
அந்த கேள்விகளே
விடைகளாகி
விஞ்ஞானமாகிப்போன‌
ஒரு கண்ணுக்குத்தெரியாத‌
மாயமூட்டை தானே
இந்த இருமுடி.
படித்தவர்கள்
மெத்தப்படித்தவர்கள்
படிக்காதவர்கள்
கண்ணுக்கு முகமூடி போட்டு
வெல்டிங் செய்யும் தொழிலாளிகள்
பாரஞ்சுமக்கிறவர்கள்
எல்லோருமே
சுமக்கின்ற இந்த பக்தியில்
மதங்கள் இல்லை.
கடவுள்கள் இல்லை.
சமுதாயப்பிரளயத்தின்
சிறு பிஞ்சாய்
சிறிதிலும் சிறிதான‌
சமுதாய தாகமாய்க்கூட‌
இது மலையேறிக்கொண்டிருக்கலாம்.
இதில் எப்படி
பெண்மை எனும் தாய்மை
விலக்கப்பட்டது.
அந்த "மாதவிலக்கு" தான்
விலக்கியதா?
அது விலக்கப்படவேண்டியதல்லவே!
நம் ஆன்மாவை விளக்கும்
மகரவிளக்கே அது தானே.
உயிர் ஊற்றின் இந்த‌
ரத்தம் சுரந்த
தாய்ப்பாற்கடலில் தானே
பரந்தாமன் படுத்துக்கொண்டு
முதல் தோற்றம் எனும் அந்த‌
பிரம்மத்தின்
நாபிக்கமலத்தை உயர்த்திப்
பிடித்துக்கொண்டிருக்கிறான்.
ஓங்கி உலகளந்த அந்த உத்தமத்தை
ஓங்கி ஒலிக்கப்பாடியதே
அந்த பெண்மை தானே.
"பெண் அசிங்கம்"என்றும்
அது வேதச்சுவடிக்குள் கரையான்கள்
என்றும்
பாஷ்யம் சொல்பவர்களே
இதன் மூலம் உங்கள்
அத்வைதத்தையும் அல்லவா
குப்பையில் எறிகிறீர்கள்!
பேரிடர் இதனால் தான் வந்தது
என்றீர்கள்.
இப்போது தான் புரிந்தது
அந்த சமூக அநீதியை
எதிர்த்து அல்லவா வந்தது
அந்த பிரளயம் என்று.
மதவாதிகளே
இப்படி உங்கள் முகம்
அசிங்கப்பட்டு நிற்கும் அந்த‌
களங்கம் துடைக்கப்பட‌
துடைப்பம் தந்த அந்த‌
நீதியரசர்களுக்கு எங்கள் வந்தனங்கள்.




படம்: இணையத்தில் இருந்து - temple.dinamalar.com

 ________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் ( ruthraasivan@gmail.com)

No comments:

Post a Comment