இந்தியாவின் பீலே என்று வர்ணிக்கப்பட்ட இந்தியக் கால்பந்தாட்ட வீரர் நாகேஷ் அண்மையில் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார்.
தமிழகத்தின் வடசென்னையின், காக்ரேன் பேசின் சாலையில் அமைந்துள்ள அரிநாராயணப் புரத்தில் பிறந்து வளர்ந்தவர் நாகேஷ். தனது அசாத்தியத் திறமையினால் இந்தியக் கால்பந்தாட்ட அணிக்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தலித் சமூகத்தில் பிறந்தவர் என்கிற ஒரே காரணத்தினால் விரைவிலேயே அவர் இந்திய காற்பந்தாட்ட அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஆயினும் இந்திய கால்பந்தாட்ட ரசிகர்களின் நாயகனாக அவர் திகழ்ந்தார். கேரளத்திற்கு அவர் விளையாடச் செல்லும்போதெல்லாம் அவருக்கு ரசிகர்கள் கட்அவுட் வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். திரையரங்குகளில் நாகேஷ் வருகையைப் பற்றின அறிவிப்புகள் ஸ்லைடு மூலமாகக் காண்பிக்கப்பட்டன. அந்த அளவிற்கு நாகேஷின் புகழ் பரவியிருந்தது. மேற்கு வங்கத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே அவர் வைத்திருந்தது மட்டுமின்றி தெற்காசிய நாடுகளிலும் அவர் தனது முத்திரையைப் பதித்திருந்தார்.
தனது திறமைக்கேற்ற உரிய அங்கீகாரத்தினை இந்திய அரசிடமிருந்து அவரால் தன் வாழ்நாளில் பெற முடியாலே போய்விட்டது. சாதி எனும் அரக்கன் அவருக்கான சர்வதேச வாய்ப்பினைத் தடுத்தது, ஒழித்தது. ஆயினும் அவர் பெற்ற புகழ் அத்தனையும் அவரது சொந்த முயற்சியினாலேயே அவர் பெற்றார். நூற்றுக்கணக்கான கால்பந்தாட்ட வீரர்களை அவர் உருவாக்கினார். அவரிடம் பயின்றவர்கள் இன்றும் இந்தியாவில் பல அணிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை துறைமுக அணிக்கான பயிற்சியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று, வடசென்னையில் கால்பந்தாட்டத்தை பயிற்றுவித்து வந்தார். தமிழகத்தின் கால்பந்தாட்ட விளையாட்டுக்கான அடையாளமாகத் திகழ்ந்தவர் அவர். வடசென்னையின் முத்திரையாகவும் வாழ்ந்தவர்.
எனது பள்ளி நாள்களில் அவரிடம் கால்பந்தாட்ட பயிற்சி செய்திருக்கிறேன். சிறுவர்களிடம் அவர் பழகும் பாணி எளிமையானது. அவரோடு கால்பந்தாட்டம் விளையாடிய நாட்கள் கொஞ்ச நாட்கள்தான். அவரிடம் பந்து ஒரு குழந்தையைப் போல தவழும். அவர் சொல்வதை மட்டுமே கேட்கும். அதையெல்லாம் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். நாகேஷ் மறைந்த இந்தச் சூழலில் கனத்த இதயத்தோடு அதை அசைபோட்டுப் பார்க்கிறேன்.
பெரும் திறமைசாலிகளைச் சாதியின் சாபக்கேடு எரிமலையைப் போல நெருப்பும் புகையுமாக மூடி மறைக்கிறது என்பதற்கு நாகேஷ் அவர்களின் திறமையான வாழ்வும் ஒரு சான்று.
18 ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசு இதழுக்காக நாகேஷ் அவர்களைப் பேட்டி எடுத்தோம். நான், தோழர். புனித பாண்டியன், பத்திரிக்கையாளர் மீனா மயில் ஆகியோர் போய் பேட்டி எடுத்தோம். அந்தப் பேட்டி தலித் முரசு இதழில் இடம் பெறவில்லை. இது எனக்கு கடும் குற்றவுணர்வாக இன்றும் நிற்கிறது. பேட்டியின் போது நாகேஷ் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. யதார்த்தமாகப் பேசினார். கடும் விரக்தி மட்டும் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
”இந்திய அணியிலிருந்து ஏன் வெளியே வந்தீர்கள் என்று நான் கேட்டேன்”. நாகரீகம் கருதியே அப்படிக் கேட்டேன். அவர் முகம் மாறியிருந்தது. ”வெளியேற்றப்பட்டேன். அதற்குச் சாதிதான் காரணம் என்பது தெரியும், ஆனால் அதை அவர்கள் நேரடியாகக் காட்டவில்லை”, என்று சொன்னது இன்றும் நினைவிருக்கிறது. நாகேஷ் தமது சாதனைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். எதிர்காலம் பற்றின எந்த நம்பிக்கையும் அவரிடம் அப்போது தெரியவில்லை. மதுப்பழக்கம் அவரை ஆக்கிரமித்து, மன அழுத்திலிருந்து சற்று ஆறுதல் அளித்திருக்கும் போலும்.
நாகேஷின் வீடு முழுமைக்கும் கோப்பைகள் நிரம்பி இருந்தன. ஆனால், அவரின் மனது தகுந்த அங்கீகாரம் பெறாததனால் அழுத்தத்தினால் நிரம்பி இருந்தது. ஆயினும் தான் நேசித்த கால் பந்தாட்டத்தைத் தனது இறுதி வரை அவர் விடவில்லை.
உலகின் முன்னணி கால்பந்தாட்டக்காரரின் வாழ்வு துயரமாக முடித்து வைக்கப்பட்டது. இந்திய சாதி அமைப்பு எனும் மனநோயின் பரிசு இது.
வடசென்னையில் இந்திய முகம் ஒன்று மறைந்தது.. நாகேஷ் அவர்களின் புகழ் நீண்ட நாட்கள் அவரது ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் .
-கௌதம சன்னா
No comments:
Post a Comment