Tuesday, September 18, 2018

யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த “தமிழ்த்தூது” தனிநாயகம் அடிகள்

யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த “தமிழ்த்தூது” தனிநாயகம் அடிகள்


திருமதி.வலன்ரீனா இளங்கோவன்,
யாழ் பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம்,
குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்.





ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிலுள்ள தீவுக் கூட்டங்களில் தொலைவிலுள்ள யாழ் நெடுந்தீவைச் சேர்ந்தவர் ஆசிரியர் நாகநாதர் கணபதிப்பிள்ளை.  இவர் சிறுவயதில் கத்தோலிக்க மதத்தைத் தழுவி யாழ் சம்பத்திரிசியர் கல்லூரியில் பயின்று, பின்னர் அக்கல்லூரியின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் திருமணப்பருவத்தை அடைந்ததும் ஊர்காவற்றுறை கரம்பன் நல்லூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கத்தோலிக்க சமயத்தவரான செசி இராசம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களின் மூத்த மகனாக 1913ம் ஆண்டு ஆவணித்திங்கள் இரண்டாம்நாள் பிறந்தவரே தனிநாயகம் அடிகள் ஆவார். இவருக்கு ‘சேவியர்’ என்ற திருமறைப்பெயர் இடப்பட்டது. எனினும் தந்தையின் குலமுறையை நினைவுபடுத்துவதற்காக தனிநாயகம் என்ற பெயர் சொல்லப் பெயராகச் சூட்டப்பட்டது.

சேவியர் தனிநாயகம் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் தமது கல்வியைத் தொடர்ந்து கற்றார். பாடசாலையில் படிப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய தனிநாயகம் தமிழ், ஆங்கிலம், பொதுத்திறமை என எல்லாவற்றிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்து, போட்டிகளில் பங்குபெற்றுப்  பலபதக்கங்களையும், பரிசில்களையும் பெற்றார். கல்லூரி மாணவ வெளியீட்டு இதழின் ஆசிரியராக இருந்தார். தனது 16ஆவது வயதில் உயர்வகுப்புப் பரீட்சையில் விசேட திறமையுடன் சித்திபெற்றார்.

இவர் உயர்படிப்புப் பெறும் தகுதி இருந்தும் உத்தியோகம் பெறும் வாய்ப்பு இருந்தும் கூட இவற்றை எல்லாம் விடுத்து இறையருள் பெற்று துறவுபூண திடமனங்கொண்டு துறவுபூண்டு தனது 17ஆவது வயதில் கொழும்பு புனிதர் பேணாட் திருமறைக்குருகுலப் பயிற்சி நிலையத்தில் துறவுப் பயிற்சியை ஆரம்பித்தார். பெற்றோர்களின் வளர்ப்பும் கல்லூரிக் குருக்களின் அறிவுரையுமே இவரைத் துறவுநிலை பெறச் செய்தன.

தனிநாயகம் சமய இறையியல், தத்துவ இயல், மனிதவுரிமை இயல் ஆகிய பாடநெறிகளை ஆர்வத்துடன் பயின்று வந்தார். தமிழ், சிங்கள, லத்தீன் ஆங்கிலமொழிகளை ஆய்வுமுறையில் கற்றறிந்தார். இவரது கற்கை காலத்தில் பலதடைகள், இன்னல்கள் ஏற்பட்ட போதும் இறையருளால் தென்னிந்திய ஆயர் ஒருவரின் ஆதரவு கிடைக்கப்பெற்று ரோமாரிபுரி சென்று “ஊர்பான்” குருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 6 ஆண்டுகள் பயின்று சமய உயர் பட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இக்காலத்தில் இருவருடன் பல நாட்டிலுமுள்ள பலமொழிகள் பேசும் குரு மாணவர்கள் பலர் பயின்று வந்தனர். இவர்களுடன் நட்புக் கொண்ட தனிநாயகம் ஒவ்வொரு நாட்டவரின் மொழிகள், பண்பாடு, பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டார். அத்தோடு எமது தாய்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையையும், தூய்மையையும் தமிழர் பண்பாட்டையும், மற்றோருக்கு அறிமுகப்படுத்தினார்.

“வத்திக்கான்” வானொலி நிலையத்தில் முதன்முதலில் தமிழில் ஒலிபரப்புச் செய்தபோது இவருக்கு இச்சந்தர்ப்பம் கிடைத்தது.

1938ஆம் ஆண்டு பங்குனித்திங்கள் 19ஆம் நாள் “குருத்துவம்” என்னும் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர் அன்று முதல் சுவாமி சேவியர் தனிநாயமாக அழைக்கப்பட்டார். இவர் தனது முதல் மறைப் பணியை தென்னிந்திய தூத்துக்குடி மேற்றிராசனத்தில் தொடங்கினார். அங்கு வடக்கன் குளத்தில் உள்ள புனித தெரேசா உயர்நிலைப் பள்ளியின் அதிபராகவும், பங்குத் தந்தையாகவும் பதவி பெற்றுச்சிறப்பாகப் பணிபுரிந்து வந்தார். சமயத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் தமிழ்த்துறையிலும் உயர்பட்டம் பெறவேண்டும் என்று சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கலை பயின்று முதுமாணி (M.A)  பட்டத்தையும், இலக்கிய முதுமாணிப் பட்டத்தையும் (M.L)   பெற்றுக்கொண்டார். தமிழிலும், கல்விமுறையிலும் ஆய்வு நடத்தி ஆற்றல்பெற்று விளங்கினார். வெளிநாடுகளில் தமிழின் தனிப்பெருமை பற்றி விளக்கவுரைகள் வழங்கும் வாய்ப்பு அடிகளாருக்குக் கிடைத்தது.

உலகத் தமிழ்த்தூது பணியில் முதற்கட்டமாக 1950-51 ஆம் ஆண்டுகளில் வடதென்னமெரிக்கா, ஜப்பானிய பல்கலைக்கழகங்களுக்கு சென்று சொற் பொழிவாற்றினார்கள். 1951ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்விழாவில் இலக்கியச் சிறப்பியல்புகள் பற்றிய ஆய்வுரையை நிகழ்த்திப் பல பேரறிஞர்களின் பாராட்டைப் பெற்றார்.

1952இல் இலங்கைப் பல்கலைக்கழக தத்துவவியல், கல்வியியல் இவற்றுக்கு உதவிவிரிவுரையாளராகப் பதவி ஏற்றுப் பணிபுரிந்ததுடன் முதுமாணிப் பட்டதாரி வகுப்புப் பேராசிரியராகவும் கடமையாற்றினார். 1954இல் இந்தியா, மலாயா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று தமிழ்மொழிக் கலாச்சாரம் பற்றிச் சொற்பொழிவுகள் நடத்தினார். 1955இல் கம்போடியா, மலாயா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் முதலிய நாடுகளுக்குச் சென்று தமிழ்த்தூது விரிவுரைகள் ஆற்றினார். 1957இல் இங்கிலாந்து சென்று ஆய்வு நடத்திக் கலாநிதி (P.hD) பட்டத்தைப் பெற்றார். 1961இல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய கலைப்பீட விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் கடமை புரிந்தார்.

அத்தோடு, மலாயாவில் உயர்வகுப்புகளில் தமிழ்ப்பாடப் பிரதம பரீட்சகராகவும், சர்வகலாசாலை மாணவர் ஒன்றிய முக்கிய உறுப்பினராகவும், நூற்குழு அங்கத்தவராகவும், மலாயாக் கல்வித்துறை ஆலோசகராகவும் இருந்து பல பணிகளைச் செய்துவந்தார். 1964இல் ஜெர்மனி கல்விப் பரிமாற்ற நிறுவன ஆதரவில்; ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா ஆகிய நாடுகளில் விரிவுரைகள் நிகழ்த்தினார். அத்தோடு இவர் தமிழ் வளர்ப்பு நிறுவனங்கள், இயக்கங்களை உருவாக்கி சாதனை படைத்து அழியாப் புகழை ஈட்டிக்கொண்டார்.

1941இல் இவர் அமைத்த தமிழ் இலக்கியக் கழகம் இன்றும் சிறப்பாக தமிழ்ப்பணிகளைப் புரிந்து வருகின்றது. 1964இல் இந்தியாவின் தலைநகர் டில்லியில் நடைபெற்ற உலகக் கலைகளில் 24ஆவது மாநாட்டில் அனைத்துலக தமிழாட்சி மன்றத்தை உருவாக்கினார். 15 நாடுகளைச் சேர்ந்த 60 உறுப்பினர்கள் இம்மன்றத்தின் முதல் உறுப்பினர்களாக இணைந்தார்கள். இம்மன்றம் இலங்கை, இந்தியா, மலாயா போன்ற நாடுகளில் நிறுவப்பட்டது. இம்மன்றத்தின் மாநாடு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. தொடர்ந்து பிரான்ஸ், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மகாநாடுகளை நடாத்தி வந்தார். பல்வேறு நாடுகளிலும் தமிழ்விருத்திச் சங்கங்களையும், பண்பாட்டுக் கழகங்களையும் நிறுவி தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஊக்கமளித்து வந்தார் தனிநாயகம் அடிகள்.

1952இல் கத்தோலிக்க எழுத்தாளர் சங்கத்தை ஏற்படுத்தி அதன் இயக்குநராக இருந்து பலசமயப் பணிகளைப் புரிந்து வந்தார். அத்தோடு மொழி, சமயம், பண்பாடு, வரலாறு பற்றிய பல நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு வந்துள்ளார். 1952இல் தமிழ்ப்பண்பாடு எனும் ஆங்கில முத்திங்கள் வெளியீட்டை ஆரம்பித்து உலகப் பேரறிஞர்கள் பலரது ஆக்கங்களையும் பிரசுரித்து வந்தார். 15 ஆண்டுகள் தொடர்ந்து இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து பெருந் தொண்டாற்றி வந்தார்.

மேலும் “தமிழ்த்தூது” என்னும் நூலையும் தமிழில் வெளியிட்டார். இந்நூல் சென்னைப்பல்கலைக்கழகப் பாடநூலாக இருந்தது. இந்நூல் ஒருமொழி ஒப்பியல் நூலாகக் கூறப்படுகின்றது. 1966 இல் “ஒன்றே உலகம்” எனும் உலக சுற்றுலாச் செய்திகளைத்தரும் நூல் ஒன்றையும் வெளியிட்டார். இவர் பல ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் நூல் வடிவில் பதித்தார்.

கல்வியில் உயர் பட்டங்கள் பெற்று, துறவியாகி, பன்மொழிப் பண்டிதராகி பிரசாரம் மற்றும் பிரசுரப் பணிகளைச் செய்து நல்லாசிரியராகி, பேரறிஞராகி தமிழ்த்தூதுவராய் தரணியெங்கும் சென்று தமிழ் முழக்கம் செய்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் 1980ஆம் ஆண்டு புரட்டாதி திங்கள் முதல்நாள் இறைபதம் அடைந்தார்.

“வாழ்க தமிழ்த்தூதின் புகழ்”

யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த “தமிழ்த்தூது” தனிநாயகம் அடிகள் நினைவு தினம் 01.09.2018


___________________________________________________________
தொடர்பு:
திருமதி.வலன்ரீனா இளங்கோவன்
(valanteenaelangovan@gmail.com)
யாழ் பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம்,
குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்.




No comments:

Post a Comment