— கோ. செங்குட்டுவன்
இதுவும் வரலாறு மீட்பு தான்…
ஒரே மண்டபம். ஆனால் இரண்டு விநாயகர் சிற்பங்கள்.
பின்னால், பலகைக் கல்லில் பிரம்மாண்டமாய் காட்சி தருபவர், பல்லவர் காலத்திய, இடம்புரி விநாயகர். ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவர்.
முன்னால் இருப்பவர், குட்டி விநாயகர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தபோது, யாரோ ஒரு பக்தரால் குடியேற்றப் பட்டவர்!
விழுப்புரம் வட்டம், திருவாமாத்தூர், அபிராமேசுவரர் கோயில் வளாகத்திற்குள் தான் இந்தக் காட்சி. பல்லவர் காலத்திய விநாயகருக்கு, சோழர்கள் மண்டபம் கட்டி இருக்கின்றனர்.
ஆனால், அண்மைக் காலத்திய அறநிலையத் துறையினர் புது பிள்ளையாருக்கு அனுமதி கொடுத்து விட்டனர். இதுபற்றி நம்முடைய தொல்லியல் ஆய்வாளர்கள், அறநிலையத்துறை கவனத்துக்கு எடுத்துச் சென்று, புதுப் பிள்ளையாரை அகற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் துறையினர் ஏற்றுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது தான் அதிசயம்!
நேற்று, இந்தக் கோயிலில் கல்வெட்டு மீட்புப் பணி நடந்தது. அப்போதுதான் ஒரே அறையில் அடைபட்டுக் கிடந்த இரண்டு விநாயகர்களுக்கும் விடுதலைக் கிடைத்தது.
கரிகால சோழன் மீட்புப் படையினர் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் குழுவினர் புதிய விநாயகரை வெளியே அழைத்து வந்தனர். கோயிலின் வடக்கில் உள்ள வன்னி மரத்தடிக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிறப்பாக அமர வைக்கப்பட்டார்.
இதுவும் ஒரு வகையில் வரலாற்று மீட்பு தான்.
இதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த கல்வெட்டு ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்… நன்றிகள்…
___________________________________________________________
தொடர்பு: கோ. செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
https://www.facebook.com/ko.senguttuvan
No comments:
Post a Comment