Friday, September 28, 2018

கலைஞரின் சமூகப் பயணம்

— முனைவர் அரங்கமல்லிகா



          இந்திய அரசியலில் தொடர்ந்து கவனிக்கத்தக்க ஓர் ஆளுமை, முத்துவேல் கருணாநிதி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) ஒரு பகுதியாக இருந்து உறுப்பினர்களை நிறுவி 1969 இல் இருந்து கட்சியை வழி நடத்தி வந்தவர். தமிழ்ச் சமூகத்தின் மீதும் விளிம்பு நிலை மக்கள் மீதும் அவருக்கு இருந்த வளர்ச்சிசார் சிந்தனைகளின் பேரார்வம்தான் தமிழ்நாட்டின்  தலைசிறந்த  முதலமைச்சராகக் கலைஞரை உயர்த்தியது.  ஒரு நீண்ட நெடிய தமிழ்ப் பாரம்பரியப் பண்பாட்டை வளர்த்தெடுத்த பெருமை கலைஞருடையது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து ஒரு வலிமையான ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும், இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் திசைக்காட்டியாகவும் தி.மு.கழகம் உயிர்ப்புடன் இருந்து வரச் செய்தவர். தன் கட்சியினரையும், தோழமைக் கட்சியினரையும் திறம்பட வழிநடத்தி வந்தவர்.

          “கலைஞர்” என மக்களின் மனங்களில் நிறைந்தவர். தமிழ் இலக்கியத்தில் அவருக்கு ஆழ்ந்த புலமையுண்டு. சமூகத்தின் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் திராவிட எழுத்துக்களில் கலைஞரின் எழுத்துக்குத் தனி இடமுண்டு. புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வரும் இக்காலத்தில் நவீனத் தொழில்நுட்பம் சார்ந்தும் இயங்கி தன் சிந்தனைகளைப் பதிவிடுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். ஏறத்தாழ இரண்டு லட்சம் முகநூல் வாசகர்களின் வாசிப்பிற்குச் சிந்தனை விதைத் தெளித்தவர். இந்தத் தொழில்நுட்ப அறிவு ஆர்வம் தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு மானுட வளர்ச்சியின் அடையாளமாகத் திகழ்கிறது.

          இலக்கிய ஆர்வம் தமிழ்த்திரை உலகிலும் தொடர்வதற்குப் பயனளித்தது. திரைக்கதை, வசனம், எழுதுவதில் வல்லவரான கலைஞர் சமூகத்தில், மூடநம்பிக்கைகளோடு வாழ்ந்து வரும் மக்களின் செயல்பாடுகளைக் கண்டித்தவர். விதவைகள் மறுமணம், தீண்டாமை ஒழிப்பு மற்றும் சுயமரியாதைத் திருமணம் போன்றவற்றை வசனங்களாகப் பேசவைத்தவர், குறிப்பாக இந்து பிராமண ஆதிக்க எதிர்ப்பைப் ‘பராசக்தி’ வசனத்தில் வைத்து இன்றும் சமூகத்தின் முரணைச் சிந்திக்கச் செய்திருக்கும் கலைஞரின் சமூக நுண்ணறிவு கவனிக்க வைத்தது.

          தமிழுக்குச் செம்மொழி தகுதிபெற்று செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தை உண்டாக்கிய பெருமை அவருக்குண்டு. ஒன்பதாவது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 இல் கோவையில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை ஈழத் தமிழர்கள் புறக்கணித்தனர். தமிழ்த் தேசியவாதிகளில் சிலரும் கலந்துகொள்ளவில்லை. எனினும் அம்மாநாட்டினைக் கலைஞர் மிகச் சிறப்பாக நடத்தினார். தமிழ் படித்த இளைஞர்கள், தமிழ்மொழியில் ஆய்வு செய்த ஆய்வியல் மாணவர்கள் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறும் அறிவிப்பை எதிர்நோக்கினர். தமிழியல் துறையில் வல்லமை பெற விரும்பிய கலைஞர் அவர்களுக்கு தமிழ்நாட்டில் தமிழ்ப்படித்து ஆய்வில் முனைவர்களாக இருப்பவர்களுக்கு வேலையில் முன்னுரிமை, தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க இயலாத காலத்தின் கைதியாகக் கலைஞர் இருந்தது காலத்தின் கொடுமை என்றே சொல்ல வேண்டும்.

          திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலையும் கலை இலக்கியப் பண்பாடும் வளமும் நிறைந்த செம்மொழியுமான தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வேண்டுகோள் வைத்தவர் கலைஞர். அவ்வேண்டுகோள் வெற்றிபெறமுடியாது போனாலும் தமிழுக்காக தமிழ்மொழிக்காகப் பாடுபடுவதை எந்நாளும் எந்நொடியும் நிறுத்தாதவர் கலைஞர் அவர்கள். சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதும் இவரது சிறந்த வழிமுறைகளில் ஒன்று. பல்வேறு தொடர்கள்: குறிப்பாக இராமானுஜர், தென்பாண்டிசிங்கம் ஆகிய தொடர்களினூடே சமூகத்தை எளிய மக்களுக்குப் புரியவைக்க முயற்சித்தவர். கலை உணர்வும் தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றும் பிரச்சார தொனி உடையவை எனக் கலையியல் வாதிகள் பலரும் குற்றம்சாட்டுவதுண்டு. ஆனால் அழகியல் தன்மையோடு உலகளாவிய இலக்கியத் தரத்தை மையமிட்டு எழுதுவதே சிறந்த எழுத்தாளர் எனக் கட்டுக்கதைகள் படைக்கும் சிலருள் கலைஞர் பொருந்தமாட்டார் என்பது உண்மை.

          சட்டசபையில் கேள்வி- பதில் நேரத்திலும் கூட தமிழ் உணர்வோடு பொருந்திய நகைச்சுவையோடு பதில் அளிப்பதில் அவருக்கு இணையான அரசியல்வாதி யாருமில்லை. அவருடைய படைப்புகளில் வரும் கதை மாந்தர்கள் சமுதாய மாற்றத்திற்கானவர்களாகப் படைத்துக்காட்டுவது அவரின் தனிச்சிறப்பு. மற்ற இலக்கியவாதிகளைப் போல, புரியாமல் எழுதுவதே சிறந்த இலக்கியம்; உலக இலக்கியமே உன்னத இலக்கியம் என்று சொல்லிக்கொண்டு, தமிழகக் கலைகள், வரலாறு மறந்து அந்நியத்தின் பால் ஈர்க்கப்பட்டவர் அல்ல.

          தம் அரசியல் வாழ்க்கையில் தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், ஒரு ரூபாய்க்கு அரிசி போன்ற பல புரட்சிகர திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழக ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பட அயராது உழைத்தவர். மாநிலப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தத் தொழில்துறையில் பல முன்னேற்றங்களைச் கொண்டு வந்தவர்.

          1957 இல் அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து முதல்முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலம் தொடங்கி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் அரசியல் கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளித்தது வரை கலைஞர் தமிழக அரசியலின் சாணக்கியராகப் பரிணமித்திருப்பதை வரலாறு பேசித்தான் ஆகவேண்டும்.

          புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் சிந்தனைகளை மனங்கொண்டாலும் தனக்கான பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்ள தமிழ்மொழியை அச்சாரமாகக் கொண்டு செயல்பட்ட கலைஞர் தமிழர்களின் அரசியல் அடையாளம் என்பது மறுக்க முடியாதது. இவ்வாறு கலை, இலக்கியம், அரசியல், ஊடகம், பொதுவாழ்க்கை என்ற அனைத்திலும் காலத்தை வென்று நிற்பவர் கலைஞர்.



___________________________________________________________
தொடர்பு:
முனைவர் அரங்கமல்லிகா
இணைப் பேராசிரியர், இயக்குநர்
எத்திராஜ் மகளிர்  கல்லூரி, சென்னை – 600 008
arangamallika@gmail.com

No comments:

Post a Comment