Sunday, October 14, 2018

தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கும் தீர்மானங்கள்

தமிழ் மரபு அறக்கட்டளை முன் வைக்கும் தீர்மானங்கள்:


          வரலாற்றுக் காலம் முதல் தற்காலம் வரை தமிழ் மரபு பல்வேறு கூறுகளோடும் பல்வேறு மாற்றங்களோடும் பல்வேறு உள்வாங்கல்களோடும், சிறப்புக்களோடும், வீழ்ச்சிகளோடும், எழுச்சிகளோடும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பழங்குடி சமூகங்களாக இருந்து  நாகரிகமடைந்து அரசுகளும் பேரரசுகளும் நகரக் கட்டுமானங்களும்  புனிதச் சின்னங்களும் இலக்கிய வளங்களும் கொண்ட தமிழர்களின் வரலாறு, கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், தொல்லியல் ஆய்வுகள், வழக்காறுகள், நாட்டார் கலைகள், வாய்மொழி இலக்கிய வகையினங்கள், கோயில்கள், குலமரபுச் சின்னங்கள், இலக்கியங்கள் மற்றும் நவீனக் காலத்திற்குத் தம்மை உருமாற்றிக் கொண்ட  ஆவணங்களாகச் சிதறிக் கிடக்கின்றன. இவற்றை ஒருமுகப்படுத்தித் தொகுத்து பரந்து பட்ட ஆய்விற்கு உட்படுத்துவதின் மூலமே துல்லியப்படுத்தப்பட்ட தமிழர்களின் வரலாறு கிடைக்கும். இதன் மூலம் மட்டுமே உலக அரங்கில் தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவத்துவத்தை உறுதி செய்ய முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டோடு தனது பயணத்தைத் தொடர்ந்து  தமிழ் மரபு அறக்கட்டளை முன்னெடுக்கிறது. 


1. தமிழர் வரலாறு மற்றும் மரபுகளைப் பாதுகாக்கின்ற வகையில்  தமிழகத்தின் கிராமங்கள், சிற்றூர்கள், நகரங்கள், பெரு நகரங்கள் ஆகிய பகுதிகளில் அருங்காட்சியகங்களை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட வேண்டும். கல்லூரிகளில் உள்ள வரலாற்றுத் துறை, தமிழ்த்துறை,  ஓலைச்சுவடி மற்றும் அரிய ஆவணங்கள் துறை, கடலாய்வுத் துறை போன்ற துறைகளின் மாணவ மாணவியரிடையே செய்முறைப் பயிற்சியில் உள்ளுர் அருங்காட்சியக பராமரிப்பு என்பது அறிமுகப்படுத்தப்பட்டுச் சேர்க்கப்பட வேண்டும். அப்படிச் சேர்க்கப்படுமாயின் தமிழகத்தின் வட்டாரங்கள் அளவில் அருங்காட்சியகங்களை உருவாக்க முடியும். தமிழகத்தின் எல்லாக் கலை, வாழ்வியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் உலகத்திற்கும் கொண்டு சேர்க்க முடியும். இந்த வட்டார அருங்காட்சியகங்களைக் கல்லூரிகளிலோ அல்லது அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலோ ஒரு சிறிய இடத்தில் அமைப்பதின் மூலம் உருவாக்கலாம். கடந்த ஈராண்டுகளில் தமிழ் மரபு அறக்கட்டளை வழியாக சில கல்லூரிகளிலும் தனியார் பள்ளிகளிலும் இந்த அருங்காட்சியகத் திட்டத்தைத் தன்னார்வமாகச் செயல்படுத்தி வருகிறோம் என்பதை இங்கே பதிவு செய்வதில் மகிழ்கிறோம். வட்டார அருங்காட்சியகங்களில் கிராமப்புற வாழ்வியல்  தகவல்கள், கைவினைப் பொருட்கள் மட்டுமின்றி, மக்கள் பண்பாட்டு நடவடிக்கைகளான கூத்து, பாடல்கள், நடனங்கள், கதைகள் மற்றும் நிகழ்த்துக் கலைகளில் விழியப் பதிவுகளின் (வீடியோ) படிகள் வைக்கப்பட வேண்டும். 
 
2. தமிழகத்திற்கு வெளியே அயல்நாடுகளில் உள்ள ஆவணப்பாதுகாப்பகங்களில் பாதுகாக்கப்படுகின்ற  ஓலைச்சுவடிகள் அங்கு சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டாலும் அவை தொடர்பான ஆய்வுகள் நிகழ்த்தப்படாமலேயே இருக்கின்றன. இந்த ஆவணங்கள் தமிழக மற்றும் தமிழர் வரலாற்றுத் தகவல்களை வெளிப்படுத்தக்கூடிய முக்கிய ஆவணங்களாகும்.  தமிழ் மரபு அறக்கட்டளை இதுவரை ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ள ஐரோப்பிய ஆவணப்பாதுகாப்பகங்களிலுள்ள தமிழ் அரிய ஆவணங்கள் முறையாக மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு அவை தமிழக பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

3. கல்வெட்டு, ஓலைச்சுவடி வாசிப்பு என்பது தற்போது கல்லூரிகளின் தமிழ்த்துறைகளில் ஒரு பாடமாக இல்லாத நிலை இருக்கின்றது. இந்த நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் கல்வெட்டுக்களையும் ஓலைச்சுவடிகளையும் வாசிக்கும் திறன் படைத்தோர் இல்லாத நிலை உருவாகும் அபாயகரமான சூழல் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் கல்லூரிகளில் துணைப்பாடமாக அல்லது பட்டயப் பாடமாகத் தொல்லியல் பாடத்தை அறிமுகம் செய்யும் முயற்சியைத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

4. தமிழர் மரபு விளையாட்டுக்களையும் வீர விளையாட்டுக்களையும் உலகம் தழுவிய வகையில் மீள் அறிமுகம் செய்யப்படவேண்டியது அவசியம். உடலுக்கு ஊக்கத்தையும் உள்ளத்திற்கு மலர்ச்சியையும் தரக்கூடியன தமிழர் மரபு விளையாட்டுக்கள். இப்பாரம்பரிய விளையாட்டுக்களைப் பற்றிய அறிமுகம் இல்லாத தலைமுறையாக இன்று நமது இளம் தலைமுறையினர் வளர்வதும் இவ்விளையாட்டுக்களைப் பெரியோரும் படிப்படியாக வழக்கில் இருந்து ஒதுக்கி வருவதும் கண்கூடு. நுணுக்கமான தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை நாம் மறப்பது நமது பாரம்பரியத்தில் ஒரு பகுதியை இழப்பதற்குச் சமமாகும்.     தமிழ் மரபு அறக்கட்டளை இதனைக் கருத்தில் கொண்டு தமிழர் வழக்கில் இருந்த பல்வேறு விளையாட்டுக்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இதனை இவ்வாண்டின் முக்கிய நடவடிக்கையாக மேற்கொண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களை அறிந்து கொள்வது அவற்றை இல்லங்களில் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது என்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற கருத்தினை முன் வைக்கின்றது.

5.  தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சித் துறையாக மாற்றப்பட்டு கீழடி உள்ளிட்ட அனைத்து அகழ்வாராய்ச்சிப் பணிகளையும் சுயமாக மேற்கொள்ள வேண்டும். இந்த அகழ்வாய்வுத் துறையில் அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர்கள்,  வரலாற்று ஆய்வாளர்கள்,  கல்வெட்டு ஆய்வாளர்கள், வரலாற்று பொறியியல் ஆய்வாளர்கள், நாணயவியல் ஆய்வாளர்கள், சுவடி ஆய்வாளர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட அறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வு ஆணையம் (Tamil Nadu History Research Council/Commission) தன்னாட்சி பெற்ற ஒரு அமைப்பின் கீழ் தமிழகத்தின் வரலாற்று ஆய்வு மற்றும் தொகுப்பு நிகழ்த்தப்பட வேண்டும்.

6.  வைகை நதிக்கரை நாகரிகம் தொன்மையானது. இந்தியத் தொல்லியல் துறையின் பணியை மேற்கொண்டு தமிழகத்தின் வைகை நதிக்கரையோரத்துப் பகுதியில் அகழ்வாய்வுகளை 2014 முதல் மத்திய தொல்லியல் துறையின் சார்பில் நடத்தி சங்க கால நகரமொன்றினைத் தனது ஆய்வின் வழி வெளிப்படுத்தினார் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன். 

இந்த அகழாய்வில் குறிப்பிடத்தக்க பெரும் எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தமிழகத்தில் முதன்முறையாகச் சங்க கால நகரமொன்று இந்த ஆய்வின் வழி கண்டறியப்பட்டது. வீடுகள், கிணறுகள், தொழிற்கூடங்கள், அலங்காரப் பொருட்கள், வடிகால்கள் எனப் பல தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இக்கண்டுபிடிப்பானது சங்ககாலத்தில் தமிழகத்தில் வளமான நகர நாகரிகம் இருந்ததை உறுதிசெய்வதாக அமைந்தது. கரிமவேதியல் ஆய்வின் படி இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. 

காவிரிப்பூம்பட்டினத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வு, பின்னர் ஆதிச்சநல்லூரில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்விற்குப் பின்னர் மிகப்பெரிய அளவில் பேசப்படுகின்ற ஒரு அகழ்வாய்வாகக் கீழடி அகழ்வாய்வு அமைகின்றது.  

ஆதிச்சநல்லூரில் ஜெர்மனியின் டாக்டர்.யாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார். இங்குக் கிடைத்த அகழ்வாய்வுச்சான்றுகள் அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அறிகின்றோம். பின்னர் லூயிஸ் லப்பிக் என்ற பிரஞ்சுக்காரர் 1904லும், அலெக்ஸாண்டர் ரீ என்ற ஆங்கிலேயர் 1905லும்  அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர் என அறிகின்றோம். இவை சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படாமல் பாதுகாப்பில் மட்டும் இருப்பதாக அறிகின்றோம். 2004ல் இந்திய அரசின் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டவை பற்றிய அறிக்கை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட வெளியிடப்படவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த அகழாய்வில் கி.மு1800 என அறியப்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. இறந்தோருக்கான முறையான ஈமச்சடங்குகள் நடந்தமையை உறுதி செய்யும் தாழிகள் கிடைக்கப்பட்டன  அவற்றில் உள்ள எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு அவை தொல்தமிழ் எழுத்துக்கள் என்றும் கண்டறியப்பட்டன. இங்குக் கண்டெடுக்கப்பட்ட தாழிகளைக் காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது என்ற போதிலும் அது இன்று செயல்படாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. 

உலகளாவிய அளவில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடைபெறும் இடங்களில் அங்குக் கிடைக்கப்பெற்ற அரும்பொருட்களைக் காட்சிப் படுத்துவதுதான் இயல்பு. ஆனால் இன்று நாம் ஆதிச்சநல்லூரிலும் சரி கீழடியிலும் சரி இங்குக் கிடைத்த அரும்பொருட்களைக் காட்சிப்படுத்த வாய்ப்பில்லாமல் இருப்பது வரலாற்றின் மேல் நமக்கு அக்கறையில்லாத தன்மையினை தான் வெளிப்படுத்துகின்றது. மிக இயல்பாக நடைபெற வேண்டிய விசயங்களுக்குக்குக் கூட போராட வேண்டிய சூழ்நிலை எழுவது ஏன் என்ற கேள்வியே மேலோங்குகின்றது. 

கீழடி நான்காம் கட்ட அகழ்வாய்வில் நமக்கு மேலும் ஏறக்குறைய 7000 சங்ககால அரும்பொருட்கள் கிடைத்திருக்கின்றன என்பது இந்த ஆய்வு மேலும் வைகை நதிக்கரை பகுதியில் விரிவாகவும் விரைவாகவும் தொடரப்பட வேண்டும் என்ற கருத்தினையே வலியுறுத்துகிறது.  

இன்றைக்கு ஏறக்குறைய 2500 ஆண்டுகள் வாக்கில் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வாழ்வியல் அமைப்புக்களின் வெளிப்பாடுகளைக் கீழடி அகழ்வாய்வு புலப்படுத்தியுள்ளது. இவை வெளிப்படுத்தும் முறையான கட்டுமான அமைப்பு பண்டைய தமிழர்தம் வாழ்வியல் மேன்மையை உலகுக்கு அறிவிப்பதாக அமைகின்றது. ஆக கீழடியில் அகழ்வாய்வினை மேற்கொண்டு இச்செய்திகளை வெளியிட்ட திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் கீழடி தொடர்பான ஆய்வறிக்கைகள் வெளியிடப்படுவதில்  தடைகள் ஏற்படக்கூடாது என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை வலியுறுத்துகிறது. 

இதன் தொடர்ச்சியில், கீழடியில் இங்குக் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் காட்சிப்படுத்தும் ஒரு பிரத்தியேக அருங்காட்சியகம் கீழடியிலேயே அமைக்கப்பட வேண்டும் என்பதையும் தமிழ் மரபு அறக்கட்டளைக் கேட்டுக் கொள்கின்றது. இதே போல ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் முறையாகச் செயல்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது. இவை மட்டுமன்றி தமிழகத்தின் பண்டைய கடற்கரை நகரங்களில் விரிவான் தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்படத் தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்றும் தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது.




வெளியீடு
முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
14.10.2018

No comments:

Post a Comment