Monday, October 1, 2018

புறநானூற்றுப் பாடல்கள் குறித்து உ.வே.சா அவர்களின் கருத்து

 – தேமொழி 


எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறென்பது எட்டாவதாகும். புறநானூறு என்பது கடவுள்வாழ்த்துச் செய்யுள் முதலிய 400 அகவற்பாக்களை உடையது. பண்டைய காலத்தில் 400 பாடல்களைக் கொண்ட ஒரு தொகை நூலாக  இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யாரென்று அறிய இயலவில்லை. 

உ.வே.சாமிநாத ஐயர்: 

புறநானூற்றுப் பாடல்களின் முதற்பதிப்பு 1894  இல் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களால் அச்சுப் பதிப்பாக வெளியிடப்பட்டது.  அதைத் தொடர்ந்து,   1923, 1935, 1950, 1956, 1962- ஆண்டுகளிலும் மறுபதிப்புக்களாக  மொத்தம் ஆறு பதிப்புகள் அவராலும் அவரது குடும்பத்தாராலும்  வெளிவந்துள்ளன. தொடர்ந்து பின்னர் பல பதிப்புகளும்  இன்றுவரை வந்துள்ளன. பற்பல ஓலைச் சுவடிகளைப் படித்து,  அவற்றைக் கையெழுத்துப் படியாக உருவாக்கி,  பாட வேறுபாடுகளைக் கவனத்தில் கொண்டு, அவற்றைப் பல பிரதிகளுடனும் ஒப்பிட்டு சீர்தூக்கிப் பார்த்துச்  செப்பனிட்டு,  சரியான வரிகளைக் கண்டறிந்து  அச்சுப் பதிப்பாக வெளியிட்ட  உ.வே.சா அவர்களின் பணியைப் போற்றாத தமிழர் இருக்க வழியில்லை.  முதல் மூன்று பதிப்புகள் உ.வே.சா அவர்களாலும்,  நான்காவது பதிப்பு  1950 இல் அவர் மகனாலும்,  பின்னர் வெளியான பதிப்பு பேரன் எழுதிய முகவுரையுடனும் வெளியாகியுள்ளது.

தமிழ் மண்ணின் வரலாறு, தமிழக அரசர்கள்  வரலாறு, அவர்களைப் பற்றி பாடிய புலவர்களின் வரலாறு, அக்கால தமிழ் மக்களின் வரலாறு எனப் பற்பல செய்திகளையும் நாம் இன்று  அறிய இயல்வது  உ.வே.சாமிநாத ஐயர் அவர்களால் என்றால் அது மிகையன்று.    உ.வே.சா அவர்கள் புறநானூற்றுப்  பாடல்களின் வரிசை எண்களை மட்டுமே அவர் நூலில்  குறிப்பிட்டுள்ளார். இன்று  நூல்களில் காணும் பாடல்களின் தலைப்புகள் பின்னர் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்கப்பெற்ற பாடல்களின் தலைப்புகளும் இன்றைய நூல்களில் வேறுபடுவதுண்டு.  

புறநானூற்றுப் பாடல்களைப் பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, பாடல்களுக்குரிய திணைகளும் துறைகளும், பாடல் குறித்த சிறப்புச் செய்திகள், மற்றும் உரையின் இயல்பு, சொற்பொருள் விளக்கம்  முதலியவற்றின் அகராதி என அவர்  எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளை உள்ளடக்கிய நூல் உ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பட்ட புறநானூற்று நூல் என்பது குறிப்பிடத்தக்கது.  

உ.வே.சா.  சீவகசிந்தாமணிப் பதிப்பிக்கும் பணியில் இருந்த காலத்தில் புறநானூற்றுக்கு உரை ஒன்றுள்ளது என்ற செய்தியும்,  அந்த உரையின் சுவடி ஒன்றும் அவருக்குக் கிடைத்தன.  பல புறநானூற்றுச்  சுவடிகளை உ.வே.சா தேடித் தொகுத்தபோது,   புறநானூற்றுப் பாடல்களுக்கான உரைகள்  முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே உ.வே.சா. அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றது.  இருப்பினும்   அந்த உரையெழுதிய உரையாசிரியர் இன்னாரென்றும் தெரியவில்லை.   மேலும் இந்நூலுக்கு இதையும்விட மற்றொரு  பழைய உரையொன்று இருந்துள்ளதையும்  அந்த  உரையாசிரியரின் குறிப்புகள் மூலமும்  அறிய முடிகிறது.  ஆனால்,  அந்த உரையும்  நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள பழையவுரையின் ஆசிரியர் அடியார்க்குநல்லாருக்கு முற்பட்டவராக இருக்கக் கூடும் என்பது உ.வே.சா.வின் கணிப்பு.  முதல்  266 பாடல்களுக்குமான உரை உ.வே.சா.வின் குறிப்புரையோடு பதிப்பிக்கப்பட்டுள்ளது.  

உரையற்ற பாடல்களுக்கு உரை எழுத வேண்டும் என்று உ.வே.சா.  எண்ணியிருந்ததை அறிய முடிகிறது.  கீழ்க்காணும் ஆறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பாடல்  ஒன்றின் மூலம் அவர் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவதைக் காணலாம்.

"வறனான் மிக்குலர்ந்து பசி வருத்தமிக வாடுமுயிர் வருக்கஞ் செவ்வை
உற நானிலத்து முகில் மழை பொழிந்தாலென ஐங்கை ஒருகோட்டு  எந்தாய்
புறநானூற்று இருநூற்று இசையுறு அமையைந்தின் மிகைப்பொலி பாக்கட்தேர்
உற  நான் அப்பதவுரையும் குறிப்புரையும் எழுதவருள் உதவுவாயே."

உ. வே.சா. அவர்கள், புறநானூறு - இரண்டாம் பதிப்பிற்கான ஏற்பாட்டைச்  செய்தபோது பாடியது  இப்பாடல் என்றும்,  எழுதப்பட்டது 1906ஆம் ஆண்டு அக்டோபர் 13, 14 ஆம் நாட்களில் என கி. வா. ஜகந்நாதன் தாம் தொகுத்த உ. வே.சா. எழுதிய பாடல்களின் தொகுப்பான "தமிழ்ப்பா மஞ்சரி-2" என்ற நூலில் குறிப்பிடுகிறார் (பார்க்க நூலின் பக்கம் - 99).

இனி புறநானூறு குறித்து உ.வே.சா. வின் அறிமுகத்தில் அறிவோம்  ...   
[குறிப்பு: உ.வே.சா. வின் பாடல் பொருள் விளங்கும் வகையில் சொல் பிரித்து இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது, அவரது பாடலை அவர் எழுதிய வகையிலேயே இங்கே  http://www.tamilvu.org/slet/l1280/l1280pag.jsp?bookid=28&page=603 படிக்கலாம்]

"பண்டைக் காலத்தே இத்தமிழ் நாட்டிலிருந்த சேர சோழ பாண்டியர்களாகிய முடியுடை வேந்தர், சிற்றரசர், அமைச்சர், சேனைத்தலைவர், வீரர் முதலிய பலருடைய சரித்திரங்களும், கடையெழு வள்ளல்களின் சரித்திரங்களும், கடைச்சங்கப் புலவர் பலருடைய வரலாறுகளும், அக்காலத்துள்ளாருடைய நடை முதலியனவும், இன்னும் பற்பலவும் இந்நூலால் நன்கு புலப்படும். இந்நூற்செய்யுட்களாற் பாடப்பட்டவர்கள் ஒரு காலத்தாரல்லர்; ஒரு குலத்தாரல்லர்; ஒரு சாதியாரல்லர்; ஓரிடத்தாருமல்லர். பாடியவர்களும் இத்தன்மையரே. இவர்களில் அந்தணர் சிலர்; அரசர் பலர்; வணிகர் பலர்; வேளாளர் பலர்; பெண்பாலாரும் உளர்.
முன்னாளிடையே இந்நாடாண்ட
காவலர் பல்லோர் பாவலர் பல்லோர்
மாசரிதத்தை ஆசற விளக்கிச்
சொற்சுவை பொருட்சுவை துவன்றி எஞ்ஞான்றும்
ஒப்புமை இல்லாத் திப்பிய நடையுடைத் [5]
திறப்பாடமைந்த இப் புறப்பாட்டுக்கள்
தெய்வ வணக்கம் செய்யுமின் என்பவும்
அறத்தின் பகுதியை உறத்தெரிப்பனவும்
பாவ வழியை நீவல் நன்று  என்பவும்
இம்மைப் பயனொடு  மறுமைப் பயனைச்  [10]
செம்மையின் வகுத்துத் தெரிவிப்பனவும்
அந்தணர் இயல்பைத் தந்து உரைப்பனவும்
அரச நீதியை உரை செய்வனவும்
வணிகர் இயல்பைத் துணிவுறுப்பனவும்
வேளாண் மாக்களின் தாளாண்மையினை  [15]
இயம்புவனவும் வயம்புரி போர்க்கு
முந்துறும் அரசரைச் சந்து செய்வனவும்
ஒற்றுமைப் பயனைச் சொற்றிடுவனவும்
வீரச் சிறப்பை ஆரத் தெரிப்பவும்
இல்லறமாகிய நல்லறம் உரைப்பவும் [20]
துறவறமதனத் திறவிதின் தெரிப்பவும்
மிடித் துன்பத்தை எடுத்துரைப்பனவும்
வண்மையும் தண்மையும் உண்மையும் திண்மையும்
என்னும் இவற்றைப் பன்னுகின்றனவும்
அளியையும் ஒளியையும் தெளிவுறுப்பனவும் [25]
தம்மைப் புரந்தோர்தாம் மாய்ந்திடவே
புலவர்கள் புலம்பி அலமரல் தெரிப்பவும்
நட்பின் பயனை நன்கு இயம்பனவும்
கல்விப் பயனைக் கட்டுரைப்பனவும்
நீர்நிலை பெருக்கென நிகழ்த்துகின்றனவும் [30]
மானந்தன்னைத்தாம் நன்குரைப்பவும்
இளமையும் யாக்கையும் வளமையும் நிலையா
என்றே இசைத்து நன்றேய்ப்பனவும்
அருளுடைமையினை மருளறத் தெரிப்பவும்
தரமறிந்து ஒழுகென்று உரனுற விதிப்பவும் [35]
அவாவின் கேடேதவாம் இன்பென்பவும்
இனியவை கூறல் நனிநலன் என்பவும்
உழவின் பெருமையை அழகுற உரைப்பவும்
நன்றி அறிக என்று இசைப்பனவும்
கொடுங்கோன்மையினை விடுங்கோள் என்பவும் [40]
தவத்தின் பெருமையைத் தவப்பகர்வனவும்
மடியெனும் பிணியைக் கடிமின் என்பவும்
கொலையெனும் பகையைத் தொலைமின் என்பவும்
நல்லோர்ப் புணர்ந்து புல்லோர்த் தணந்து
தாழ்வு ஒன்றின்றி வாழ்மின் என்பவும் [45]
சுற்றம் புரக்கும் நற்றிறம் உரைப்பவும்
கற்பின் திறத்தைக் கற்பிப்பனவும்
மக்கட்பேற்றின் மாண்பு உரைப்பனவும்
கணவனே இழந்த மணமலி கூந்தலார்
தீப்பாய் செய்தி தெரிவிப்பனவும் [50]
கைம்மை விரத வெம்மை விரிப்பவும்
இன்னும் பற்பல பன்னுவனவுமாய்ச்
செப்புநர் எவர்க்கும் எய்ப்பிடை வைப்பாய்
அரும்பெறன் மரபில் பெரும்பயன் தருமே. [54]
என்று ஒருவாறு பொதுப்படத் தொகுத்துக் கூறுவதன்றி இன்ன பாடல் இத்தன்மையது இன்ன பாடல் இத்தன்மையதென்று தனித்தனியே எடுத்துக்காட்டி இவற்றின் அருமை பெருமைகளைச் சீராட்டிப் பாராட்டுதற்கு ஒரு சிறிதும் வல்லேனல்லேன்."

புறநானூறு முதல் பதிப்பு (1894 ன்) முகவுரையில் நூலை அறிமுகப்படுத்தும் முகமாக உ.வே.சா.  இவ்வாறாக உரைநடை வடிவில்  கூறியுள்ளார். (http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/religion/puran-aanuurumuulamum_uraiyum.pdf#page=11)   

இதே கருத்துகளைப்  பின்னர் பாடல்  வடிவிலும் அடுத்து வெளியிட்ட இரண்டாம் பதிப்பு முதற்கொண்டு கொடுத்துள்ளார்.  (http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/others/tcl/purananooru%20mulamul%20uraiyum.pdf#page=16

இப்பாடலின்வழி தமிழின் பண்டைய இலக்கியம் ஒன்று எத்தனை எத்தனைக் கருத்துகளை வாழ்வியல் முறைகளை நமக்குச் சொல்கிறது என்பதை நூலைத் தொகுத்த  உ.வே.சா.  சுட்டுகிறார் என்பதை நாம் அறியலாம்.  ஆனால் இந்நாட்களில் பெரும்பாலோர் பண்டைய இலக்கியங்கள் தமிழரின் பண்புகளாக "காதலையும் வீரத்தையும்" கூறுகின்றன என்று மட்டுமே  குறுக்கிவிடும்  நிலையும் வழக்கத்தில் உள்ளது. 

இக்கருத்தையே; 
"சங்ககால இலக்கியங்கள் காதலையும் போர்த்திறத்தையும் மட்டுமே சொல்லி இருப்பதாகப் பரவலாக உள்ள ஓர் கருத்து கற்றறிந்தவர்களால் வன்மையாக மறுத்துக்   கூறப்படவில்லை.   புறநானூற்றை மட்டுமே பார்த்தால் கூட, மனித மாட்சி, நீர் மேலாண்மை, கற்றவர் சிறப்பு, மழலையர் போற்றல், கல்வியின் மேன்மை, முறையாக அரசாளும் நெறிமுறைகள் என்ற பல கோட்பாடுகள் குறிப்பிடப் பெற்று இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாய், அனைத்துலகும் அனைத்து மானிடரும்  எம் அங்கம் என்று உணர்ந்து தெளிந்ததும் அற்றைத் தமிழர்தம் போக்காய், வாழ்வியல் நெறிமுறையாய் இருந்ததுவும் கூறப்பட்டிருக்கிறது,"  என்று கோ. பாலச்சந்திரன்,​ இ. ஆ. ப. (ஓய்வு) "தனது அற்றைத் தமிழர் நோக்கும் இற்றைத் தமிழர் போக்கும்" என்ற உரையில் குறிப்பிடுகிறார். 

இந்தப் பாடலில் கவனத்தைக் கவர்வது என்னவெனில், "இவர்களில் அந்தணர் சிலர்; அரசர் பலர்; வணிகர் பலர்; வேளாளர் பலர்" என்று முன்னுரையிலும்;  தொடர்ந்து மீண்டும் பாடலில் "அந்தணர் இயல்பைத் தந்து உரைப்பனவும், அரச நீதியை உரை செய்வனவும், வணிகர் இயல்பைத் துணிவுறுப்பனவும், வேளாண் மாக்களின் தாளாண்மையினை  இயம்புவனவும் [12-16 வரிகள்] என்று வர்ணாசிரம பிரிவு முறையில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகளின் அடிப்படையில்  உ.வே.சா. சிந்தித்துள்ள முறை.  

இன்று எண்ணிம வடிவத்தில் புறநானூறு இணையத்தில் உலாவருகிறது என்றால் அதன் மூல காரணம் உ.வே.சாமிநாத ஐயர்  அவர்களே. 




________________________________________________

சான்றாதாரங்கள்:
[1]
புறநானூறு, மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்யகலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகள் கொண்டது; ஆறாம் பதிப்பு, 1962. இந்நூலில்  'மூன்றாம் பதிப்பின்' முகவுரையும் கொடுக்கப்பட்டுள்ளது 

[1.1]முதற்பதிப்பு:
புறநானூறு மூலமும் உரையும் - உ. வே.சாமிநாதையர் - உ.வே.சா - முதற்பதிப்பு - 1894

[1.2]இரண்டாம்பதிப்பு:
புறநானூறு மூலமும் உரையும் - உ. வே.சாமிநாதையர் - உ.வே.சா - இரண்டாம்பதிப்பு - 1923

[2] 
உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் இயற்றிய  'தமிழ்ப்பா மஞ்சரி-2', கி. வா. ஜகந்நாதன், உ. வே. சாமிநாத ஐயர் நூல் நிலையம், 1962. 

[3]
அற்றைத் தமிழர் நோக்கும் இற்றைத் தமிழர் போக்கும்; கோ. பாலச்சந்திரன்,​ இ. ஆ. ப. (ஓய்வு), மின்தமிழ்மேடை - 14, தமிழ் மரபு அறக்கட்டளை காலாண்டிதழ், ஜூலை 15, 2018 - பக்கம்-5.

________________________________________________


நன்றி: 'சிறகு' இணைய இதழ் 

________________________________________________
தொடர்பு:
முனைவர். தேமொழி (jsthemozhi@gmail.com)







No comments:

Post a Comment