Saturday, May 15, 2021

உள்ளொன்று வைத்து ...


--   துரை.ந.உ.

கவி.காளமேகம் :  சொற்சிலம்பம் ஆடுவதில் வித்தகர். ஒருகல்லின் இருமாங்காய் என்பதே பெரும் சாதனையாகக் கருதப்படும் காலத்தில், ஒரு கல்லால் இருமர மாங்காய்களைச் சாய்த்தவர் இவர்.  உள்ளொன்று வைத்து, வெளியொன்று சொல்லுவதில் இவரை வெல்ல ஆளில்லை என்றே உறுதியாகக் கூறிவிடலாம்.  சான்றாக, ஈசன் குடும்பத்தைப் பற்றிய இவரின் வாழ்த்துப் பாக்களைப் பார்ப்போம். மேலாக., கேலியும் கிண்டலுமாய் இருப்பதுபோலத் தோன்றும் பாக்களுக்குள், ஆழ்ந்து கவனித்தால் வாழ்த்தும் உட்பொருள் நிறைந்திருக்கும் .

சிவன் :
கவி.காளமேகத்தின்  வெண்பா :
கண்டீரோ பெண்காள் கடம்பவனத்து ஈசனார்
பெண்டீர் தமைச்சுமந்த பித்தனார் - எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பை இட்டார்
அக்காளை ஏறினா ராம்

பொருள் விளக்கம் : 1
நேரடியாய் - பெண்பித்தன், தங்கைக்குத் தீவைத்து, அக்காவை ஏமாற்றினார் -

என்னும் கேலிப் பொருள் தரும் துரைவெண்பா(டல்) :

பெண்களே காண்பீர்! கடம்பவனத்து ஈசனவன்
பெண்களைத் தூக்கி அலைந்திடும் பித்தனவன்,
திக்கெட்டும், தங்கையின் மேல்நெருப்பை ஏற்றினார்,
அக்காவை ஏமாற்றி னார்!

பொருள் விளக்கம் : 2

மறைமுகமாய் - பெண்ணைத் தலையில் தாங்குபவர், பெண்ணுக்குச் சரிபாதி பங்களித்தவர், உலகுக்கு ஒளியேற்ற தீச்சட்டி ஏந்தி நந்தியில் வலம் வருபவர் -

என்னும் வாழ்த்துப் பொருள் தரும் துரைவெண்பா(டல்) :

கண்டாயோ பெண்ணே! கடம்பவனத்து ஈசனவன்,
கங்கைஉமை யாளைச் சுமந்தலையும் சித்தனவன்,
எண்திசையும் நன்குஒளிர கையில்தீச் சட்டியுடன்,
நந்தியின்மேல் ஏறினா ராம்!

--



No comments:

Post a Comment