—— முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
ஈராயிரம் ஆண்டு பழமையுடைய சங்கத் தமிழ்ப் பாக்களைப் பாடிய புலவோர்தம் காலந்தொட்டு தற்காலக் கவிஞர்கள் வரை பெண்களின் ஒளி மிகுந்த எழிற்முகத்திற்கு முழுமதியினை ஒப்பிட்டுக் காட்டுவது இலக்கிய மரபாகும். பக்தி இலக்கியக் கவிகளும் இதற்கு மாறுபட்டவர் அல்லர். திருச்சிற்றேமம் எனும் சோழநாட்டுத் தேவாரத் தலத்தில் பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் தம் பத்து பாடல்களிலும் இருபது முறை திங்களின் சிறப்பினை எடுத்துரைத்துள்ளார். பத்து முறை பெண்களின் முகத்திற்கு ஒப்பிட்டுக் காட்டுவதோடு பத்து முறை பிறை சூடிய பெம்மானின் சிறப்பினை இப்பதிகத்தில் சுட்டியுள்ளார்.
இதே சோழநாட்டுத் திருப்புகலூர் வர்த்தமானீச்சரத்தில் தேவாரம் பாடும் போது காழிப்பிள்ளையார்,
முயல்வளாவிய திங்கள் வாள்முகத்து அரிவையில் தெரிவை
இயல்வளாவியது உடைய இன்னமுது எம்பிரான்
என்று குறிப்பிட்டுள்ளார். இப்பாடலடியில் வாள் போன்று ஒளி பொருந்திய நிலாவில் முயல் உருவம் காணப்பெறுவதாகவும், அந்நிலவு முகம் அரிவை எனப்பெறும் இருபது முதல் இருபத்தைந்து வயதுடையதும், தெரிவை எனப்பெறும் இருபத்தாறிலிருந்து முப்பது வயதுடையதுமாகிய பெண்களின் பருவகாலத்து பொலிவுடைய முக அழகிற்கு ஒப்பானது என்றும், அதனைத் தலையில் சூடியவன் சிவபெருமான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவன் சூடியுள்ளது இளநிலா என்பதும் அது முழு நிலாவாகத் திகழும் போது அதில் முயல் உருவம் காணப்பெறுவதாகவும் சுட்டியுள்ளார்.
தமிழின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றின் பாடலொன்றில் (எண். 141) கரிகால் சோழனின் இடையாறு எனும் ஊர் பற்றியும், வேங்கடமலையின் சிறப்பு குறித்தும் கார்த்திகை மாதத்தில் நிகழும் விளக்கீடு வைக்கும் திருக்கார்த்திகைப் பெருவிழா பற்றியும் நக்கீரர் விரிவுபட எடுத்துரைத்துள்ளார். அப்பாடலில்,
மழைக்கால் நீங்கிய மாகவிசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர மதி நிறைத்து
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலைதூங்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவறஅறிய
விழவுடத் அயர...
எனப் பாடியுள்ளார்.
அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள் என்பது உரோகினி எனும் விண்மீன் சந்திரனுடன் கூடும் நாளாகிய கார்த்திகை மாதத்து முழுநிலவு நாளாகும். ஐப்பசி மாதத்து அடைமழை நீங்கி கார்த்திகை முழுநிலவு நாளில் குளிர்ந்த நிலவு இருப்பதோடு தெளிவான சந்திரனின் உருவத்தில் முயல் உருவம் கறையாகத் தெரிவதை நக்கீரர் கண்டே இப்பாடலைப் பதிவு செய்துள்ளார். சங்க காலம் தொட்டு முழு நிலவில் முயல் உருவம் கறையாகத் தெரிவதை தமிழ் மக்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர்.
திருஞானசம்பந்தரின் காலத்திற்குப் பின்பு எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானார் நீத்தல் விண்ணப்பம் 35ஆம் பாடலில்,
மென் முயல் கறையின் அரும்பு அரதேர்வைத்து அணிந்தாய்
என்று குறிப்பிட்டு சிவபெருமான் தலையில் சந்திரனையும் பாம்பையும் எதிர் எதிராக வைத்து அணிந்துள்ளார் என்றும் அந்த சந்திரன் முயல் உருவத்தைக் கறையாகக் கொண்டது என்றும் உரைத்துள்ளார்.
சோழப்பெருமன்னன் இரண்டாம் குலோத்துங்கனின் மதியமைச்சராகத் திகழ்ந்த சேக்கிழார் பெருமான் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தின் 43ஆம் பாடலில் முல்லையும் குறிஞ்சியும் திணை மயக்க முறுவதை விவரிக்கும் போது முல்லை நிலத்திலிருந்த குறுமுயல் வானில் தோன்றிய முழு மதியில் காணப்பெறும் முயல் உருவத்தைத் தனது இனமாய முயல் என்று நினைத்து அதனை அணைந்திட மலை உச்சியை அடைவதாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அதனை,
புணர்ந்த ஆனிரைப் புறவிடைக் குறுமுயல் பொருப்பின்
அணைந்த வான்மதி முயலினை இனமென அணைந்து
மணங்கொன் கொல்லையில் வரகுபோர் மஞ்சன வரைக்கார்
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்
எனக் குறிப்பிட்டுள்ளார்.
முழுமதியில் தோன்றும் கறையினைத் திருவள்ளுவர்
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப்போல
மறுவுண்டோ மாதர் முகத்து (குறள். 1117)
என்று சுட்டிக்காட்டியுள்ளார். நாலடியாரில் பதினாறு மற்றும் பதினேழாம் பாடல்கள் திங்களில் காணப்பெறும் மறுவி னைச் சுட்டுகின்றன.
குறிப்பாக 17ஆம் பாடலில் சந்திரனில் காணப்பெறும் கறையினை முயலாகவே சித்திரிக்கின்றது.
ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய
அம்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
என்பதே அப்பாடலடியாகும். உயர்ந்தோரைச் சார்ந்தோரின் சிறப்பு இதனால் வலியுறுத்தப் பெறுகின்றது.
முழுநிலா நாளில் சந்திரனில் முயல் உருவம் காணப்பெறுவதைக் கண்ட தமிழ்நாட்டுச் சிற்பி ஒருவன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அவன் கட்டுவித்த ஓமாந்தூர் சிவாலயத்து உட்கூரையில் (விதானத்தில்) கிரகண நாளில் பெரும்பாம்பு ஒன்று சந்திரனை விழுங்குவதாகக் கூறப்பெறும் புராண அடிப்படையில் சிற்பக்காட்சி ஒன்றை வடித்துள்ளான். அதில் உள்ள முழுச் சந்திரனில் முயல் ஒன்றின் உருவம் காணப் பெறுகின்றது. அதனைக் கண்டு படம் எடுத்த தொல்லியல் வல்லுநர் கி. ஸ்ரீதரன் என்ற நண்பர் அக்காட்சியினை அளித்து உதவினார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் சந்திரனில் காணப்பெறும் கறையினை முயல் உருவாகவே கண்டு மகிழ்ந்திருந்துள்ளனர். பிற்காலத்தில் நம் பாட்டியரும் அன்னையரும் நமக்குச் சந்திரனைக் காட்டி அதில் காணப்பெறும் மறுவை ஔவையார் வடை சுடும் உருவம் எனக்கூறி சோறூட்டுவர். நாமும் அக்கற்பனையில்தான் இருந்தோம். கட்டுரையினைப் படித்தபிறகு முழு நிலாவினை உற்றுப்பாருங்கள் முயல் திகழும் காட்சியைக் காண்பீர்.
-----
No comments:
Post a Comment