Tuesday, May 4, 2021

அழ நாடு - நூல் மதிப்புரை

அழ நாடு - நூல் மதிப்புரை 

——   முனைவர்.க.சுபாஷிணி 

அழ நாடு - எனக்குப் பரிச்சயமில்லாத ஒரு பெயர். இதுவே நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எழுப்பி விடுகிறது. அழ நாடு எனக் குறிக்கப்படுவது எது என்பதை விளக்குவதிலிருந்து நூலாசிரியர் நூலின் பயணத்தை வடிவமைத்திருக்கிறார்.  இன்றைய தேனி மாவட்டத்தின் பழைய பெயர் அழ நாடு. இந்தப் பெயர் கொண்ட பிற்காலப் பாண்டிய மன்னர்கள் காலக் கல்வெட்டுக்கள் பலவற்றை இதற்குச் சான்று அளிக்கின்றார். இது தேனி மாவட்டம் முன்னர் அழ நாடு அல்லது அள நாடு என்று வழங்கப்பட்டு வந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.




இந்த நூலில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு என்னவென்றால், ஒரு நகரம் அல்லது ஊரைப் பற்றிய வரலாறு என்ற வட்டத்திற்குள் மட்டும் அடங்கிவிடாது, தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறைக்கு புதியவர்களாக இருப்பவர்களுக்கு தொல்லியல் பற்றிய ஓர் அறிமுகம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தையும் மையமாகக் கொண்டு சில குறிப்பிடத்தக்க முக்கிய பகுதிகளையும் இந்த நூலில் இணைத்திருப்பது தான். அந்த வகையில் நூல் தொல்லியல்  துறையில் அடங்கி இருக்கின்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் அவற்றின் விளக்கங்கள், காலம் அறிதல் என்ற வகையில் கி.மு கி.பி என்ற பொதுவான வழக்கங்களில் இருந்து பொ.ஆ.மு, பொ.ஆ என்ற வகையில் வரலாற்று ஆண்டு முறை விவரிக்கப் பட வேண்டியதன் அவசியத்தை விளக்குகின்றது, மிக எளிமையாக.

 அதன் தொடர்ச்சியாக தமிழின் எழுத்து மாற்றங்கள் என்ற தலைப்பில் தமிழி, வட்டெழுத்து, சோழர்கால தமிழ் வளர்ச்சி, கிரந்த எழுத்துக்கள் என சில எளிய விளக்கங்களையும் இணைத்திருக்கிறார். இதைப்போலவே நூலின் இறுதியில் இன்றைய தேனி பகுதி முன்னர் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆட்சி எல்லைக்கு உட்பட்டதாக இருந்தமையால் பாண்டிய மன்னர்கள் பெயர்களைத் தாங்கிய பட்டியலையும் நூலில் இணைக்கின்றார். அந்தவகையில் சங்ககால பாண்டியர், முற்காலப் பாண்டியர்கள், இடைக்காலப் பாண்டியர்கள், பிற்காலப் பாண்டியர்கள் என பாண்டிய மன்னர்கள் பற்றிய நீண்ட பட்டியலும் அதன் பின்னர் மதுரையை ஆட்சி செய்த சுல்தான்களின் பெயர்கள், அவர்களது ஆட்சிக் காலம் அதன் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நாயக்க மன்னர்களின் பெயர்கள், காலம் என இந்தப் பகுதி நூலுக்கு பொதுவான பல செய்திகளையும் வழங்குவதாக அமைகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுத் தடயங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு ஒன்று திரட்டி இந்த நூலில் வழங்க வேண்டும் என்று ஆசிரியர் செய்த முயற்சி நூலில் வெளிப்படுகிறது. அந்த வகையில் இந்த மாவட்டத்தில் உள்ள பாறை ஓவியங்கள், நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், சமணச் சிற்பங்கள், பௌத்த சின்னங்கள், கோயில் கல்வெட்டுகள், கண்ணகி பற்றிய செய்திகள், ஓலைச்சுவடிகள், சதிக்கல், வீரக்கல் செப்பேடுகள் என விரிவான வரலாற்றுச் சின்னங்கள் நூலில் குறிப்பிடப்படுகின்றன.

இந்த நூலில் இடம்பெறுகின்ற அனைத்துத் தகவல்களும் பெரும்பாலும் தமிழகத் தொல்லியல் கழக வெளியீடான ஆவணம் இதழில் வெளிவந்த பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு திரட்டப்பட்ட தகவல்களாக அமைகின்றன. அவற்றோடு தேனி மாவட்டம் பற்றிய ஏனைய பிற வரலாற்று ஆய்வாளர்கள் வழங்கியுள்ள பல்வேறு கட்டுரைகள் நூல்கள், செய்திகள் ஆகியவற்றைத் தாங்கிய தொகுப்பாகவும் அமைகின்றன.

நூலில் குறிப்பாக பாறை ஓவியங்கள் பற்றிய பகுதி மற்றும் புலிமான் கோம்பை கல்வெட்டு  பற்றிய செய்திகள் விரிவாகவே வழங்கப்பட்டிருக்கின்றன. நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றும் அவை இருக்கின்றன நில எல்லை குறியீடுகள் (Google coordinate) வழங்கப்பட்டிருப்பது இந்தச் சின்னங்களைத் தேடிச்செல்லும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக உதவும் ஒன்று. இதனைத் திட்டமிட்டு நூலை வடிவமைத்த நூலாசிரியர் பாராட்டுதலுக்கு உரியவர்.

தேனி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் இந்த நூலை ஒரு கையேடாகவே பயன்படுத்தலாம். அந்த அளவிற்கு நூல் தேனி மாவட்டத்துச் சின்னங்களைப் பட்டியலிட்டு தகவல் வழங்கியிருக்கின்றது. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு தொல்லியல் பயணத்தைத் திட்டமிட்டு தேனி மாவட்டத்துச் சின்னங்களை நேரில் சென்று காண இந்த நூல் நிச்சயம் வரலாற்று ஆர்வலர்களுக்குப் பயனளிக்கும்.

---
நூல்: அழ நாடு - தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்
நூலாசிரியர்: அ.உமர் பாரூக்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்




No comments:

Post a Comment