Sunday, May 23, 2021

சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் - நூல் மதிப்புரை

தேமொழி 


தன் ஊரைப் பற்றிய முதல் ஆய்வு நூலாக எழுதிய  'வடலூர் வரலாறு', அடுத்து 'தமிழரின் வரலாற்றுப்பதிவுகள்', என்ற தொடர் வரலாற்று ஆய்வு நூல்களின் வரிசையில் 'சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும்'   என்ற நூலையும் வெளியிடுகிறார் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியின்  வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ஜெ ஆர் சிவராமகிருஷ்ணன் அவர்கள். 



தலவரலாறு என்று ஒரு ஊரின், கோயிலின் நம்ப இயலாத புராணக் கதைகள் கொண்ட நூல்களைப் பார்த்து, படித்து அத்தகைய நூல்கள் மீது ஒவ்வாமை கொண்டவர்களுக்கு; சிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின் மையம் இருக்கிறது என்று அறிவியல் எனும் பெயரில் பகிரப்படும் கட்டுக்கதைகள் படித்துக் கடுப்பானவர்களுக்கு; இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு, தொல்லியல் செய்திகள் போன்ற தரவுகளின் அடிப்படையில் ஒரு ஊரின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் படிப்பது ஆறுதலாக இருக்கிறது. தமிழக வரலாற்றுச் சிறப்பு  மிக்க ஊர்கள் அனைத்தையும் இவ்வாறு அவற்றின் வரலாற்று அடிப்படையும் அறிய ஆர்வமும் எழுகிறது. 

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பது போல,  சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி என்பது ஒரு சொல்வழக்கு.  அவ்வாறே,  உங்கள் வீடு மதுரையா  அல்லது சிதம்பரமா என்பதும்;  அதாவது வீட்டில் யார் அதிகார நிலையில் உள்ளார்கள் கணவரா மனைவியா என்பதை அறிய குறிப்பிடும் ஒரு வழக்கமும்  உண்டு.   இது போல ஆன்மிகம் மாற்றும்  சமூகவியல் வழக்காறுகளில் இடம் பெறும்  சிதம்பரம் என்பது அதன் பிற்காலப் பெயர், முன்னர் அவ்வூரின் பெயர் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் பெரும்பற்றப்புலியூர் என்று இருந்தது என்பதை ஒரு வரலாற்றுத் தகவலாக நூல் மூலம் அறிய முடிகிறது. சிதம்பரத்தில்  நூலில் பல வரலாற்றுச் செய்திகள் புதியவனாகவும் கருத்தைக் கவர்வனவாகவும் உள்ளன.  

தேவாரக் காலத்தில் தில்லையின் புவிசார் அமைப்பை 'கழி சூழ் தில்லை' என்று  (கழி சூழ் தில்லையுள் - தேவா-சம்:866/2) அந்த இலக்கியம் குறிப்பிடும்.  ஆகவே, சிற்றம்பலத்தில் கூத்தாடும் சிவன் எழுந்தருளியுள்ள கோயில் தில்லை மரங்கள் (Excoecaria agallocha) சூழ்ந்த கழிமுகப் பகுதியின் உப்பங்கழி சதுப்புநிலக்காடுகளில் இருப்பது என்றும்;  பக்தி இலக்கியங்களின் வழியே ஊரின் பழம்பெயர் தில்லை என்பதை ஏறத்தாழ எல்லோருமே அறிந்திருப்போம்.  கோயில் சிற்றம்பலம் என்பது காலப்போக்கில் சிதம்பரமாக மருவி, பிற்காலத்தில் அதுவே ஊரின் பெயராகவும் மாறிவிட்டது என்பதையும் அறிந்திருப்போம். ஆனால் முதலாம் இராஜேந்திர சோழன், தனது புதிய தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் கட்டப்பட்ட காலத்தில் (கி.பி.1014 முதல் கி.பி. 1022) அது முற்றுப்பெறும் வரை  தில்லையை ஒரு  8 ஆண்டுகளுக்குத் தனது தற்காலிகத் தங்குமிடமாகவும், அரசியல் தலைமையிடமாகக் கொண்டிருந்தார்.  அந்தக் காலகட்டத்தில்  கடல்கடந்து  இந்தியப் பெருங்கடல் பரப்பில் செய்த பல போர்கள்,  இலங்கையை வென்றது, அரபிக்கடல் பகுதியில் இருந்த பழந்தீவு பன்னீராயிரம் பகுதியில் போர்  நிகழ்த்தி வென்றதும் அதே காலம்தான்  என்பது புதிய தகவல். இதற்கு இப்பகுதியின் கடல் நீரோட்டமும், தேவிக்கோட்டை  பகுதியில் கடல்  கலம் செலுத்தும் ஆழமுடன் போர்க்கப்பல்களின்  துறைமுகமாக அமைந்திருக்கக் கூடியதாகவும் இருந்திருக்கக் காரணமாக இருக்கலாம் என்று  ஆசிரியர் கருதுகிறார்.  இதுவும் ஓர் அரிய வரலாற்றுத் தகவல். 

முதலாம்  இராஜேந்திரசோழனின் ஆட்சிக்காலத்தில் பெரும்பற்றப்புலியூர் 11 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்திலிருந்து சுமார் ஒரு 450 ஆண்டுகளுக்கு, சற்றொப்ப பொது ஆண்டு 1500கள்  வரை 'தனியூர்' என்ற சிறப்புடன் தன்னாட்சி நடத்தும் நிலையில்  இருந்திருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. அத்துடன்  அரசர்களின் அதிகாரத் தலையீடு இல்லாவிட்டாலும்கூட, மன்னர்களின் தனிக் கவனத்திற்கு உள்ளான ஊராக சிதம்பரம் இருந்திருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது. பொதுவாகவே தனியூர்கள் என்பவை 10 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஊர்களாக இருந்தன என்பது நூலால் அறியக்கூடிய ஒரு சிறந்த வரலாற்றுத் தகவல். 

ஒரு பகுதியில் நிகழும் சமூக மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பங்கள், கல்வியியல் மேம்பாடு, தொழில் வளர்ச்சி, மொழியாளுமை, கலை, கட்டடக் கலை போன்றவற்றையும்;  அவற்றில் நிகழக்கூடிய படிநிலை மாற்றங்கள் போன்றவற்றையும்  தீர்மானிக்கும் காரணிகளில் முதன்மையாக விளங்குவது அப்பகுதியின் நிலவியல் கூறேயாகும் என்ற கருதுகோளை  நூலாசிரியர் அடிப்படையாகக் கொள்கிறார். அதன் கூறுகளைப் பலகோணங்களில் ஆராய்ந்து  ஒரு ஊரின் நீடித்த நிலைத்தன்மையை நிலவியலின் புவிசார் கூறுகளே தீர்மானிக்கின்றன என்ற அடிப்படை கோட்பாடே சிதம்பரம் இன்று வரை நீடித்திருக்க முதன்மைக் காரணமாகும் என்பது  இந்த நூலின் சாரம். 'சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும்' என்ற நூலின் தலைப்பிற்கு ஏற்ப, அதிலிருந்து திசை விலகாமல் தொல்லியல் கல்வெட்டுகள், இலக்கியங்கள் தரவுகள் மூலம் தனது கருத்தை நிறுவுகிறார் ஆசிரியர். 

ஊர்கள் தோன்றுவது இயல்பாகவும் இருக்கலாம், ஒரு திட்டமிடப்பட்ட குடியேற்றமாகவும் இருக்கலாம். ஆற்றங்கரையில் நாகரீகம் வளர்ந்தது.  ஆற்றோரம் உழவுக்கு, குடிநீருக்கும் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் மனித குடியேற்றம் நிகழ்வது, பின்னர் அது சீரமைத்தலுக்கு உள்ளாகி கட்டுப்பாட்டிற்குள் வருவது இயல்பாக ஊர் உருவாகும்  முறை. பெரும்பாலும் இதுவே வழக்கம்.  திட்டமிட்டு இடத்தைத் தேர்வு செய்து  புது ஊர் உருவாக்குவது  பெரும்பாலும் குறைவாகவே இருப்பது வழக்கம்.  திட்டமிடப்பட்ட ஊர்களின் தோற்றத்தின் காரணங்கள் அழிவுக்குப் பின் புது வாழிடம், பற்றாக்குறை காரணமாக புதிய விரிவாக்கம்  போன்றவற்றைக் காட்டலாம்.  இன்றைய  சந்திரபாபு நாயுடு திட்டத்தில் ஆந்திராவின் அமராவதி  போன்று திட்டமிட்டு உருவாக்கப்படும் புதிய ஊர்கள் குறைவு. 

சிதம்பரமும் அவ்வாறு திட்டமிடப்பட்ட ஊர் என்பதற்கு என்னென்ன சான்றுகள் ? 
இனவரைவியலைத் தீர்மானிப்பது மானுடம் சார்ந்த நிலவியல் அமைப்பாகும். நில வியல் அமைப்பும் அதன் சூழலும் சாதகமாகும் பட்சத்தில் அங்கே பண்பட்ட நாகரிகம் தோற்றம் பெறுமென்பது இனவரைவியலின் முதன்மைக் கோட்பாடாகும் என்ற அறிமுகத்துடன் நூல் துவங்குகிறது. மனித உறைவிடங்களின் மொத்தத் தொகுப்பு ஊர். அந்த ஊரின் தோற்றமும் அமைப்பும் என்ற கோணத்தில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. 

சிதம்பரம் பகுதிக்கான புவியமைப்பு வரை படத்தின் (Geomorphological mapping) தரவுகள் சொல்வது, கடற்பகுதி வெள்ளத்தால் பாதிப்பிற்கு உள்ளாவதைத் தடுக்கும் பொருட்டு 14 மீட்டர் உயரம் கொண்ட மணல் எக்கரில், அல்லது மணற்குன்றில் கோயில் அமைக்கப்பட்டு, அதைச் சுற்றி ஊர் அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க மரத்தினால் கட்டப்பட்டிருந்த சிற்றம்பலம் எனப்போற்றப்படும் மன்றத்தை காடவர்கோன் சிம்மவர்மன் அமைத்தான் என்று தொடங்குகிறது ஊரின் தோற்றத்தின் வரலாறு. பல்லவர், சோழர், பிற்காலப் பல்லவர், பாண்டியர், நாயக்கர் காலங்களில் படிப்படியான முறையில் வளர்ச்சி அடைந்த ஊர் என்பதற்கு தொல்லியல் கல்வெட்டுச் சான்றுகளாக 237 கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவற்றில் பதிவாகியுள்ள  கோயில் நிர்வாகம், அதிகாரிகள், கணக்கர்கள், நிலம், செல்வம்  போன்ற தகவல்கள் மூலம் கோயில் மற்றும் ஊரின் வளர்ச்சியை அறிய முடிகிறது.  இக்கல்வெட்டுகளில் மூன்றில் ஒரு பங்கு சோழர் காலற்றவை, மற்றுமொரு மூன்றில் ஒரு பங்கு பாண்டியர்களின் கல்வெட்டுகள், பிறிதும் ஒரு மூன்றில் ஒரு பங்கு பல்லவர், நாயக்கர், மற்றும் பிற துண்டு கல்வெட்டுகள். கல்வெட்டுகள் தரும் செய்திகள் மூலம் ஊர் உருவாக்கத்திலும் கோயில் திருப்பணிகளிலும் சோழர்களின் பங்களிப்பே பெரும்பான்மை  இருந்துள்ளதைக் காட்டுகிறது.  மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு அவர்களின் பங்களிப்பு ஊர் உருவாக்கத்தில் அமைந்துள்ளது. சோழர்கள்  தங்களது குலதெய்வமான  தில்லைக் கூத்தனின் கோயிலையும், அப்பகுதி மக்களின் வாழ்வு சிறக்க ஊரினையும் தொடர்ந்து வளர்த்து வளப்படுத்தியுள்ளார்கள்.  

தெருவிளக்கு அமைப்பது, வீதியின்  அகலத்தை  200 அடிகளுக்கு அதிகரிப்பது, குடியிருப்பு வளாகங்கள், குளங்கள்,  ஊர் விரிவாக்கம், கோயில் விரிவாக்கம், விக்கிரம சோழன் திருச்சுற்று திருமாளிகை, கோயிலின் மேற்கு கோபுரம், கடற்கரைப் பெருவழி, கடற்கரை தேவிக்கோட்டை வரை பசுமை தோப்புகள்  என்று தென்னிந்தியாவின் முதல் பசுமை நகரம் என்று கூறும் அளவிற்கு விக்கிரம சோழன் காலத்தில் தில்லை  பலவகையிலும் மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது மகன் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில், இன்றும் பயன்பாட்டில் உள்ள நாற்புறமும் கூடங்களோடு கூடிய திருக்குளம், கிழக்கு கோபுரம் எனத்  தொடர்ந்து கோயிலும் ஊரும் விரிவடைந்துள்ளது. 

மக்கள் அமைதியாக வாழ்வதற்கான வாழ்வியல் சூழலில் எந்தப் பற்றாக்குறையும் ஏற்பட்டுவிடாமல் அவர்களின் நலனைத் தொடர்ந்து கவனித்து அனைத்து மக்கள் நல  வாழ்வை முன்னிறுத்தி தன்னிறைவு பெற்ற வாழிடங்களாக அமைய  அக்கால அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகளையும் எடுத்துவந்தன என்று கூறுகிறார்  ஆசிரியர். இக்கொள்கைக்கு உதவும் நோக்கில் பண்டைய காலத்தில் ஊர் உருவாக்கத்தின்  கட்டுமான அலகுகளாக கூரம் செப்பேடு கூறும் தகவலையும் சுட்டிக் காட்டுகிறார்.  பொது ஆண்டு ஏழாம் நூற்றாண்டுக் காலத்தில் ஆட்சி செய்த முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி.670  685) என்ற பல்லவ மன்னர் வெளியிட்ட கூரம் செப்பேட்டின் வாயிலாக,  ஊர் உருவாக்கத்தின்  அடிப்படை முக்கிய அலகுகளான 9 கூறுகளாக;  [1]  விவசாய உற்பத்திக்கு ஏற்ற தரமான மண்வளம், [2] நிரந்த நீர் மேலாண்மைத்திட்டம், [3] தண்ணீர் பகிர்மான அலகுகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு, [4]  கட்டுமானத்திற்கு ஏற்ற தரமான மண், [5] சமூகவியல் மையமாக கோயில் மற்றும் மண்டபங்கள், [6] கூள வாணிக பெருமக்கள், [7] கருவி தயாரிப்போர், [8] அறச்செயல்களுக்கான நிரந்தர வைப்பாக வழங்கப்பட்ட தானங்கள், [9] பொது இடுகாடு போன்றவை இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். 

அரண்மனை வளாகத்தை மையப்படுத்தி தலைநகரையும், கோயிலை மையப்படுத்தி புதிய ஊர்களை உருவாக்கி அதில் மக்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தினர் அக்கால மன்னர்கள். இதுதான் ஊர்மயமாக்கலின் முதல் படிநிலையாகும். நீரும், வயலும் சூழ்ந்த இடமே ஊர் உருவாக்கத்தின் முதல் நிலை என்று கூறும் ஆசிரியர்,  இவை  எவ்வாறு சிதம்பரத்தில் செயல்படுத்தப்பட்டது என்று தொல்லியல் சான்றுகளின் உதவி கொண்டு ஆராய்கிறார்.  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்புகள், நீர் மேலாண்மை, நூலகம் அல்லது சரஸ்வதி பண்டாரம், ஆவணக்களரி பண்டாரம், பல்தொழில் பின்புலம் கொண்ட புதிய மக்கள் குடியேற்றங்கள் உருவாக்கம், மருத்துவச்சாலை, உணவுச்சாலை, கலை, கல்வி வளர்ச்சி  என்ற பல பிரிவுகளில் சிதம்பரம் வளர்ச்சியைச் சான்றுகளுடன் முன்வைக்கிறார். சிதம்பரத்தின் நிலவியல் அமைப்பு ஊர் தொடர் வாழிடமாக தொடரக்  காரணம், ஊர் உருவாக்கிய மன்னர்கள் - கையாண்ட மக்கள் நலன் சார் அலகுகள் ஊர் தொடர்ச்சிக்குக் காரணம்  என்று கூறி, சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் எவ்வாறு இன்றும் அது சிறந்த வாழிடமாக இருப்பதற்கான காரணங்களை எளிய முறையில் சிறப்பாக விளக்கியுள்ளார் வரலாற்றுப் பேராசிரியர்.  அவருக்கு எனது பாராட்டுகள். எனது கோணத்தில் மேலும் பல கல்வெட்டுத் தகவல்களைப் பார்க்க விரும்பியிருந்தேன், சிதம்பரம் கோயில் கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டால் மேலும் ஆய்வாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்பது எனது பரிந்துரை. 


நூல் திறனாய்வு: 
சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் 
முனைவர் ஜெ ஆர் சிவராமகிருஷ்ணன் 
பேராசிரியர் - வரலாற்றுத்துறை 
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி 
தஞ்சை 
வெளியீடு - 2021
---

No comments:

Post a Comment