Saturday, May 15, 2021

இலங்கையில் சிங்களவர்

நூல் திறனாய்வு: முனைவர்.க.சுபாஷிணி

இலங்கையில் சிங்களவர்
 - இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும் - 
நூலாசிரியர்: பக்தவச்சல பாரதி



மானுடவியல் துறையில் சீரிய வகையில் செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களுள் ஒருவர் பக்தவச்சல பாரதி. இவரது ஏனைய நூல்களான தமிழர் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழகப் பழங்குடிகள் போன்ற ஏனைய சில நூல்களின் பட்டியலில் இணைவது தான் `இலங்கையில் சிங்களவர்` என்ற தலைப்புடன் வெளிவந்திருக்கும் இந்த நூல். ஏறக்குறைய 200 பக்கங்களைக் கொண்டிருந்தாலும் இந்த நூல் சிங்களவர் வரலாறு, பண்பாடு, சமூக நிலை, மரபணு ஆய்வு என்று நுணுக்கமாக பல தகவல்களை வழங்குவதால் இந்த நூல் கூறும் முக்கிய விஷயங்களைத் தனித்தனியே ஆராய்வது அவசியமாகின்றது.

தமிழக வரலாற்றை ஆராய முற்படும் பலரும் தமிழக நில எல்லைக்குள் ஆய்வுக் களத்தை அமைத்துக் கொள்வது இயல்பு. இதற்கு மாற்றாக தமிழகத்திற்கு அருகில் இருக்கும் இலங்கையில் தனது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூலை அவர் எழுதுவதற்கு அவருக்குக் கிடைத்த நேரடி அனுபவங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. நூலாசிரியர் மூன்று முறை வெவ்வேறு காரணங்களுக்காக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யக் கிடைத்த தனது வாய்ப்பையும் அதன் தொடர்ச்சியாக அவர் ஏற்படுத்திக் கொண்ட பல்வேறு தீவிர வாசிப்பு, கலந்துரையாடல்கள் மற்றும் நூல் ஆய்வு என்ற அடிப்படையிலும் இந்த நூல் அமைந்திருக்கின்றது.

இலங்கையைப் பற்றி ஆராய முற்படும் எல்லோருக்கும் பொதுவாகவே ஆய்வுக்கவனம் `தமிழர்கள், தமிழ்மொழி` என்ற அடிப்படையில் அமைவதுண்டு. ஆனால், இந்த நூல் இலங்கையில் சிங்களவர் பற்றி பேசுகிறது. `சிங்களவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்கள்; பௌத்தத்தைத் தனது சமயமாக கடைப்பிடிப்பவர்கள்; ஆயினும் திராவிட பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள்`, என்ற கருத்துடன் நூலைத் தொடங்குகிறார் நூலாசிரியர். வரலாற்று ஆய்வுகளில் நமக்கு அருகில் இருக்கும் நாடுகளைப் பற்றிய, அங்கு வாழ்கின்ற மக்களின் சமுதாய நிலை பற்றிய ஆய்வுகளிலும் எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி ஆராய்ச்சி நோக்கம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதை நூலில் குறிப்பிடுகிறார்.

இலங்கை ஏறக்குறைய இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய நிலப்பகுதியின் ஒரு பகுதியாக இருந்து அதன் பின்னர் கடல் ஏற்றத்தால் தனித்தீவாகியது.  சிங்கள, சிஹல போன்ற சொற்கள் பொ.ஆ. 3 முதல் 5ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சொல். ஆயினும் ஈழம் (ஈலம்) என்னும் சொல் மிகப் பழங்காலத்தில் வழக்கில் இருந்தது என்பதைச் சான்று கூற பல எடுத்துக்காட்டுகள் வழங்குகின்றார். சங்க இலக்கியத்தில் ஈழம் என்ற சொல்லைக் குறிப்பிட்டு வருகின்ற செய்யுட்கள் இடம்பெறுகின்றன. ஏறக்குறைய 4500 ஆண்டுகளுக்கு மேலாக இத்தீவினை ஈழம் என்று அழைக்கும் மரபு இருந்துள்ளது என்பதை நூலாசிரியர் முன்வைக்கின்றார்.

இலங்கை வரலாறு எனும் போது மகாவம்சமும், தீபவம்சமும், சூளவம்சமும் முக்கியத்துவம் பெறுபவை. இவை கூறும் செய்திகளின் அடிப்படையில் இலங்கையில் மக்கள் குடியேற்றம் பொ.ஆ. முதலாம் நூற்றாண்டில் விஜயனின் தலைமையில் நடந்தது எனக் குறிப்பிடப்படுகிறது. இதனை வாசிக்கும் போது எல்லோருக்கும் எழுகின்ற கேள்வி, இலங்கைத் தீவில் விஜயனின் வருகைக்கு முன்பு வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன? அவர்களது இன அடையாளம் என்ன? அவரது பண்பாடு எது? போன்றவையாகும்.

இலங்கைத் தீவில் பன்னெடுங்காலமாக வாழ்ந்த மக்களுள் பூர்வகுடிகளான நாகர் இன மக்கள் என்னும் இக்கருத்தை வலியுறுத்தும்  வகையில் அமைந்த தொல்லியல் ஆய்வுகள் அண்மைய கால கண்டுபிடிப்புகளில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக யாழ்ப்பாணத்திற்கு அருகே மன்னார் தீவுக்கு அருகே உள்ள கட்டுக்கரை பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வில் நாகர் பண்பாட்டுச் சான்றுகள் பல கிடைக்கப் பெற்றமை குறித்து அந்த அகழாய்விற்குத்  தலைமை தாங்கிய பேராசிரியர் புஷ்பரட்ணம் அவர்களது கட்டுரைகள் நமக்கு நல்ல சான்றுகளாக அமைகின்றன. இந்த நாகர் மக்கள் தமிழர்களின் மூதாதையர்கள். தென்னிந்தியாவில் கிடைப்பது போல தொல்தமிழ்  தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள் இன்று இலங்கைத் தீவில் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக அனுராதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கிடைத்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக சிங்களமொழி உருவான பொ.ஆ 5ம் நூற்றாண்டுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தத் தீவில் தமிழ் மொழியும் தமிழ் பேசும் மக்களும் வாழ்ந்தார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இந்த அடிப்படையில் இலங்கைத் தீவிற்குக் குடிபெயர்ந்த சிங்கள மக்களின் மரபணு, பண்பாடு, சமயம், சமூக நிலை, வரலாறு ஆகியவற்றை ஆராய்வதே இந்த நூலில் அடிப்படை நோக்கமாக அமைகிறது.

மகாவம்சத்தை மொழிபெயர்த்த  ஜெர்மானியரான வில்கம் கெய்கர் (1938),  இலங்கைக்கு வந்த விஜயன் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து புறப்பட்டு வந்தவன் என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். அதனடிப்படையில் காணும்பொழுது அனேகமாக பஞ்சாப், குஜராத் ஆகிய பகுதிகளிலிருந்து வந்தவர்கள் சிங்களவர்களின் மூதாதையர்கள் என்ற எண்ணம் ஏற்படக்கூடும். ஒரு சில ஆய்வாளர்கள் சிங்களவர்கள் இன்றைய ஒரிசா மாநில பகுதியிலிருந்து வந்தவர்கள் என்றும் ஒரு சிலர் இன்றைய வங்காளதேசம் நாட்டின் நிலப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்றும் குறிப்பிடுகின்ற ஆய்வுகளையும் காண்கிறோம். இத்தகைய குழப்பத்தைத் தெளிவு படுத்த மரபணு ஆய்வு என்பது முக்கியமாகிறது.

இந்த நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் நூலாசிரியர் சிங்கள இன மக்களின் மரபணு ஆய்வுகளை விரிவாக அலசுகிறார். இலங்கையில் இன்று நாம் காணும் போது அங்கு வாழ்கின்ற மக்களை சிங்களவர், இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், மலாய்க்காரர்கள், வேடர்கள், பர்கர் (டச்சு போர்த்துகீசிய நாட்டவர்கள்) என்ற வகையில் பிரிக்கலாம். மரபினக் குழு C, F, H, L, R2, J2 O3, R1A1, என்ற வகையிலும் இன அடையாளக் கூறு M130, M89, M69, M20, M124, M172, M122, M17   அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சிங்களவர் மரபணு எந்த இனக் குழு மற்றும் மரபின குழு வட்டத்திற்குள் வருகிறது என்பதை நூலாசிரியர் இந்தப்பகுதியில் விளக்குகின்றார்.  M17 இன அடையாளக் கூறு கிழக்கு ஐரோப்பிய மக்களுக்கு உரியது. இதனை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர்கள் இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்கள். உதாரணமாக பஞ்சாபியர் குஜராத்தியர் மராத்தியர் ஆகியோரிடம் மிக அதிகமாக காணப்படுகின்றது. அதேபோல மேற்குவங்கப் பிராமணர்களிடம் 72% அளவும் பிராமணர்களிடம் 48% அளவு உள்ளன. அதேபோல தென்னிந்தியாவில் ஐயங்கார் பிராமணர்களிடம் 31% , செஞ்சு பழங்குடிகளிடம் 26% இது காணப்படுகிறது என்ற செய்தியையும் குறிப்பிடுகிறார். இதற்கு எதிர் மாறாக M20 இன அடையாளக் கூறு மத்தியக் கிழக்கில் இருந்து இந்தியாவுக்கு ஏறக்குறைய 32,000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த மிகப்பெரிய எண்ணிக்கையில் அமைந்த குழு என்றும்,  இந்த மரபணு மூலத்தைக் கொண்ட மக்களே இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் மிக அதிகம் இருக்கின்றனர் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 

இலங்கை மானுடவியல் ஆய்வுகளில் குறிப்பாக மரபணு ஆய்வு எனும் பொழுது இந்த நூலில் நூலாசிரியர் 6 ஆய்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றார்.

1. டாக்டர் கிர்க் ஆய்வு - இவரது ஆய்வு The legend of Prince Vijaya: A study of Sinhalese origins.1976ம் ஆண்டு வெளிவந்தது. இவரது ஆய்வின் படி இன்றைய சிங்களவர்களின் மரபணுக்களை ஆராய்ந்தபோது சிங்களவருக்கும் தமிழருக்குமான தொடர்பு நெருக்கமாக இருப்பதும் ஏனைய பஞ்சாபியர் குஜராத்தியர் வங்காளியரோடு ஒப்பிடும்போது  நெருக்கம் குறைந்து இருப்பதும் வெளிப்பட்டது. சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையே உள்ள தூரமும் சிங்களவருக்கும் வங்காளியருக்கமான தூரமும் ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதை இவரது ஆய்வுகள் சுட்டிக் காட்டின. ஆக வங்காளியர்கள் முன்னர் திராவிட மொழி சமூகத்தாராக இருந்து பின்னர் இந்தோ-ஆரிய மொழி தாக்குதலுக்கு ஆட்பட்டு அந்த மொழியை ஏற்றுக் கொண்டு இருத்தல் வேண்டும் என்கிறது இவரது ஆய்வு.

2. டாக்டர் சாஹா ஆய்வு - இவரது ஆய்வுகள் இலங்கை சிங்கள மக்கள் வங்காளியர்களைவிட இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழருடனும் மரபணு ரீதியில் நெருங்கிக் காணப்படுகின்றனர் என்பதைக் காட்டுவதாக அமைகின்றது. வங்காள மக்களோடு சிங்களவர்களுக்குத் தொடர்பு உண்டு எனும் பழங்கதை காலம் காலமாக இருந்து வந்தாலும் அதனை மெய்ப்பிக்கும் வகையிலான மரபணு நெருக்கம் இந்த இரண்டு இனக் குழுவினருக்கும் இல்லை என்று அவர் குறிப்பிடுகின்றார். ஆனால்,  வரலாற்றின் ஒரு காலகட்டம் வரை சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  ஒத்த மரபணு (gene pool) கொண்டவர்களாக இருந்து பின்னர் பல்வேறு சமூக நிலை மாற்றங்களின் அடிப்படையில் சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்தனர் என்று இவரது ஆய்வு குறிப்பிடுகிறது.

3. பாத்திஹா ஆய்வு (முதல் கட்டம்) - இந்த ஆய்வு மரபணு நெருக்கத்தை ஆராயும்போது சிங்களமக்கள் தமிழர்களுடன் மரபணு அடிப்படையில் மிகவும் நெருங்கிக் காணப்படுகின்றனர் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றது.

4. பாத்திஹா ஆய்வு (இரண்டாம் கட்டம்) - சிங்களவர்களுக்கும் இந்தியாவின் மேற்குப் பகுதியில் வாழும் மக்களுக்கும் நேரடியான மரபணு உறவு ஏதும் இல்லை என்று குறிப்பிடுவதோடு  மரபணு நெருக்கம் வங்காளியருடனும் தமிழருடனும் நெருக்கமாக இருக்கிறது என்றும் வெளிப்படுத்துகிறது.

5. டாக்டர் சத்ரியா ஆய்வு - genetic distance analysis என்ற ஆய்வு முறையின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், தென்னிந்திய முஸ்லிம்கள் அனைவரும் நெருக்கமான உறவு கொண்டவர்கள் என்றும், குஜராத்தியர், பஞ்சாபியர், வடமேற்கு இந்தியப் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குழுவாக காணப்படுகின்றனர் என்றும், வங்காளியர் தனி ஒரு குழுவாக காணப்படுகின்றனர்   என்றும், இலங்கை வேடர்கள் மரபணு ரீதியில் தனித்த ஓர் இனக்குழுவாக காணப்படுகின்றனர் என்றும்  ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியது. சத்ரியா ஆய்வின் மிக முக்கிய பங்களிப்பாகக் கருதப்பட வேண்டியது சிங்கள மக்களின் இனக்குழு உருவாக்கத்தில் ஏறக்குறைய 70 விழுக்காடு மரபணு நெருக்கம் இந்தியத் தமிழரின் மரபு கொண்டதாக இருக்கிறது என்பதாகும்.

6. டாக்டர் டுமாஸ் கிவிசில்டு ஆய்வு -இந்த ஆய்வின் படி இலங்கை சிங்களவர் மரபணு அடையாளக் கூறுகள்,  இந்தியாவிற்கு ஆரியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வந்து சேர்ந்த தென்னாசிய திராவிட சமூகங்களுக்கு உரிய மரபணு அடையாளக் கூறுகள் M20, M124, M172 ஆகியவை மிக அதிகமாக, அதாவது ஏறக்குறைய 26.6% இருப்பதாக வெளிப்படுத்தியது.

மேற்குறிப்பிட்ட அனைத்து ஆய்வுகளையும் விரிவாக விளக்கி, சிங்களவர்கள் இதுகாறும் பொதுவாக குறிப்பிடப்பட்ட வகையில் பொ.ஆ முதலாம் நூற்றாண்டு வாக்கில் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையில் பெரும் கூட்டமாக இலங்கைக்குப் புலம்பெயர்ந்தவர்கள் எனும் வாதம் தவறானது என்பதையும், சிங்களவர்கள் தென்னிந்தியாவில் தோற்றம் பெற்றவர்கள் தான் என்ற கருத்தையும் நூல் நிலைநாட்டுகிறது.

இத்தகைய ஆய்வுகள் இலங்கைத்தீவில் பெருவாரியாக வாழும் சிங்களவர்களும் தமிழர்களும் அடிப்படையில் ஒரே மரபணு கூறுகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமைகின்றது.


[புகைப்படம்:  அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயத்தில் உள்ள போதி மரம், கோயில்]

இந்த நூலின் மூன்றாவது அத்தியாயம் சிங்களச் சமூகத்தில் சாதி முறை பற்றி ஆராய்கிறது. பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகம் என்பதால் முழுமையாக பௌத்த சமூக நெறிகளை உள்வாங்கியதா  சிங்களப் பௌத்த நிலை என்றால், அது இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கின்றது. ஆக சிங்களப் பௌத்தம் என்பதை அடிப்படை பௌத்த நெறிகளுள் மாற்றம் செய்து கொண்ட ஒன்றாகக் காண வேண்டியது இதனைப் புரிந்து கொள்ள அவசியமாகின்றது.  இந்தியச் சமூகம் போன்ற சாதி அமைப்பு ஒன்று சிங்களச் சமூக அமைப்பில் அடிப்படையாக இருப்பதை இந்த அத்தியாயம் வெளிப்படுத்துகிறது.

நூலாசிரியர் ஏராளமான பல நூல்களை இந்தப் பகுதிக்கு அடிப்படையாக எடுத்துக் கொண்டாலும் மிக முக்கியமாக இரண்டு நூல்கள் வழங்குகின்ற செய்திகள் இந்த அத்தியாயத்தில் மிகப்பரவலாகக் கையாளப்படுகின்றன. Bryce Ryan எழுதிய Cast in modern Ceylon: The Sinhalese system in transition (1953) என்ற நூல் மிக அதிகமாகவும் Richard Fick எழுதிய The social organisation in North-East in Buddhas time (1920) ஓரளவும்  கையாளப்பட்டுள்ளன.

புத்தர் காலத்தில் மனு கூறிய நான்கு வருணப் பாகுபாட்டை இலங்கை சூழலில் காணவில்லை என்கிறது ரிச்சர்ட் ஃபிக் அவர்களது ஆய்வு. தொழில்முறை சார்ந்த குடிகள் அமைப்பே சிங்களவர் சூழலில் இருந்தது என்பதை இது குறிப்பிடுகிறது. இந்தியச் சூழலில் சங்க இலக்கியத் தரவுகள் தருகின்ற குடி முறையிலான சமூக அமைப்பு போன்ற ஒரு முறையே இது எனலாம்.

சிங்கள மக்களிடையே, எவ்வகையில் சாதி என்ற கருத்தாக்கம் முதன்முதலாக தோன்றியது என்பது கண்டி மலைப்பகுதியில் ஒரு தொன்மமாக வழக்கில் உள்ளது. இதனை நூர் யால்மண் தான் எழுதிய Under the Bo tree (1971)  என்ற நூலில் குறிப்பிடுகிறார். இந்தத் தொன்மத்தின் படி சிங்கள மக்களின் புராணகால மூதாதையராக மகா சம்மாத என்பவர் இருந்ததாகவும், அவருக்கு வேண்டிய பணிகளைச் செய்வதற்காக பல்வேறு சாதிகளை அவர் உருவாக்கி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பெயரை அவர் இட்டார் என்கிறது இந்தப் புராணக்கதை.

இந்தியச் சூழலில் வர்ணாசிரம அடிப்படையில்  பிராமணர்கள் சாதி அடுக்கின் உயர்ந்த நிலையில் வைக்கப்படுகின்றனர். ஆனால் இலங்கையில் சிங்களவர் சாதிப் படிநிலை வரிசையில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கொவிகம  (விவசாயத் தொழில்) என்ற சாதி உயர் சாதியாக குறிப்பிடப்படுகிறது. இதே படிநிலை வரிசையை இலங்கைத் தமிழர் சூழலிலும் நாம் காண்கிறோம். வெள்ளாளர் அல்லது வேளாளர் எனக் குறிப்பிடப்படும் சமூகமே இலங்கைத் தமிழ் சாதி வரிசையில் உயர் அந்தஸ்தைப் பெறும் சாதியாக வழக்கில் இருக்கின்றது. ஆக இது ஓர் ஒற்றுமையைப் புலப்படுத்துகிறது. அதாவது இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவர்களாயினும் தமிழராயினும் விவசாயக் குடிகளே சாதி கட்டமைப்பு வரிசையில் முதலிடத்தைப் பெறுகின்றனர் என்பதே!

நூலின் இந்தப் பகுதி ஒவ்வொரு சாதி குழுவினரைப் பற்றியும் அடிப்படைத் தகவல்களை வழங்கியிருக்கின்றது. சிங்களவர் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள இன்றும் நடைமுறையில் இருக்கும் இந்தச் சாதிக்  கட்டுமான அமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள இந்த விளக்கம் நிச்சயம் உதவும் என்பதால் சிறு குறிப்பாக அவற்றைத் தொடர்ந்து காண்போம்.

1. கொய்கம அல்லது கொவிகம - இதன் பொருள் `நிலத்தை உழுது பயிர் செய்வோர்` என்பதாகும். இலங்கையின் சமூக அமைப்பில் உயர் சாதியினராக கருதப்படுபவர்கள் இவர்கள். சிங்கள  மக்கள் தொகையில் 1960ம் ஆண்டு கணக்கின்படி 60% இவர்கள் இருக்கின்றனர். இச் சாதிக்குள் பல கிளை சாதிகள் உள்ளன. 

2. கராவ - இவர்கள் சிங்கள மீனவர்கள். ஆய்வாளர்களின் கருத்தின்படி இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து சென்றவர்கள். இலங்கையில் கரையார் எனும் தமிழ் மீனவர்களை ஒத்தவர்கள் இந்தச் சாதி குழுவினர். இந்தச் சமூகத்தில் பௌத்தர்கள், கிறித்தவர்கள் என இரண்டு பிரிவு இருக்கின்றது. குறிப்பாக நீர்கொழும்பு பகுதியில் கிராம மக்கள் முழுமையாக கத்தோலிக்கர்களாக உள்ளனர். இவர்கள் தங்களை சத்திரியர் வம்சத்தினர் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகின்றனர். மீன் பிடிக்கும் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள்.

3. சலாகம - இவர்களும் தென்னிந்தியாவிலிருந்து பிற்காலத்தில் குடியேறியவர்கள் என்றும் இவர்களுக்குச் சாலியர் என்று ஒரு பெயர் ஒரு காலத்தில் இருந்தது என்றும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தென்னிந்திய சாலியர் சமூகத்தவர் போன்றே இவர்கள் கண்டி பகுதியில் நெசவாளர்களாக இருந்தனர். தொன்மையான டச்சு ஆவணங்களை ஆராயும்போது குறிப்பாக 1250ல் சீன வணிகர்களின் உதவியுடன்  இவர்களின் மூதாதையர்கள் இலங்கை வந்து சேர்ந்தனர் என்ற குறிப்புகள் கிடைக்கின்றன.

4. துராவ - இவர்கள் கள் இறக்கும் சாதியினர். கரையோரப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

5. நவண்டண்ண - தமிழகத்தில் பஞ்ச கம்மாளர்கள் எனக் குறிப்பிடப்படும் சமூகத்தை ஒத்தவர்கள். சிங்கள மக்கள் பெரும்பாலும் இவர்களை `ஆசாரி` என்றே அழைக்கின்றனர் என்பது இங்குக் கவனிக்கப்பட வேண்டியது. சிங்கள மொழியில் பல தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் உள்ளன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைகிறது. இவர்கள் தங்களைப் பிராமணச் சாதியிலிருந்து தோன்றியவர்கள் எனப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றனர். தமிழகத்தில் திராவிட பஞ்ச கம்மாளர்கள் தங்களை விஸ்வகர்மா பிராமணர் என்று கூறிக் கொள்வது போல இவ்வழக்கம் தொடர்வதை உற்று நோக்க வேண்டியுள்ளது.

6. ஹண்ணாலி - சிங்களச் சமூகத்தில் தையல்காரர்கள் தனிச் சாதியாக இடம்பெற்றிருக்கின்றனர். மன்னராட்சி காலத்தில் அரண்மனைக்குத் துணி தயாரிக்கும் பணியில் இருந்தார்கள். இன்றைய நவீன இலங்கையில் இச்சமூகத்தினர் சாதி அடையாளத்தை இழந்து இருக்கின்றார்கள். இன்றைய நிலையில் கண்டியில் தமிழ் பேசும் தையல்காரர்கள் நிறைந்து விட்டார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

7. ஹுணு - பாரம்பரியமாக சுண்ணாம்பு சுடும் தொழில் செய்பவர்கள். மிகச் சிறிய அளவில் இவர்கள் எண்ணிக்கை உள்ளது.

8. ஹேன - சலவைத் தொழில் செய்பவர்கள். சிங்கள மக்கள் வாழும் எல்லாப் பகுதிகளிலும் இந்தச் சமூகத்தினர் வாழ்கின்றனர். இந்தியாவில் டோபி என அழைக்கப்படும் சமூகத்தவர் போன்றவர்கள். சிங்களச் சமூகத்தில் உயர்குடி சாதியினருக்குச் சலவை ஊழியம் செய்வது இவர்களுடைய பாரம்பரியத் தொழில். பூப்பு, இறப்பு சடங்குகளின் போது தீட்டுத் துணிகளை நீக்குவதும், திருமணத்தில் பழைய துணிகளைப் பெறுவதும் சடங்கு சம்பிரதாயங்களைக் கவனிப்பதும் இவர்களின் முக்கிய வேலை.

9. வகும்புர -  வெல்லம் காய்ச்சும் தொழில் செய்பவர்கள்.  இலங்கையின் தொழில் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறும் சமூகத்தினர். வணிகம் முதலாளித்துவம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுபவர்களாக வசதி படைத்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

10. ஹின்னா -சாலியர் சமூகத்தினருக்கு வண்ணார் தொழில் செய்பவர்கள். பழங்காலத்தில் இவர்கள் சிங்களச் சமூக அடுக்கில் மிகவும் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட்டனர்.

11. படஹல - சிங்களக் குயவர்கள். இலங்கைத் தீவின் எல்லாப் பகுதிகளிலும் களிமண் கிடைப்பதால் இவர்கள் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.

12. பணிக்கி -  தமிழகத்தில் அம்பட்டர் என வழங்கப்படும் சாதியினருக்கு ஒப்பான சமூகநிலை படைத்தவர்கள். அம்பட்டர் என்ற தமிழ் வழக்குச்சொல் சிங்கள மொழியில் `எம்பட்டியோ` என்றும் வழங்கப்படுகிறது.

13. வெள்ளி துரயி -  இவர்கள் பொ.ஆ. 289 ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து அனுராதபுரம் வந்தடைந்தார்கள் என்று ஒரு குறிப்பு உள்ளது. புனித போதி மரத்தைக் காவல் காப்பதற்காக இந்தியாவிலிருந்து வந்தவர்கள். இன்றைக்குக் கோயில் பணியோடு தொடர்புடையவர்கள் மட்டுமே வெள்ளி துரயி என்ற சமூக அடையாளத்தைக் கொண்டுள்ளனர். பௌத்த மதத்தின் புனித குறியீடான போதி மரத்தைக் காவல் செய்பவர்கள் எனும் தகுதி இவர்களுக்குப் பெருமை சேர்க்கிறது.

14. பண்ண துரயி - துரயி சாதியின் ஒரு பிரிவாக இவர்கள் அமைகிறார்கள். இவர்கள் மன்னர் ஆட்சியின் போது அரச குடும்பத்துக்குச் சொந்தமான குதிரை யானை போன்ற கால்நடைகளுக்குப் புல் அறுத்துப் போடும் வேலை செய்பவர்களாக இருந்து வந்துள்ளனர்.

15. பெரவா - மேளக்கருவி வாசிக்கும் சாதியினர். சிங்களச் சமூகத்தில் சற்று தகுதி குறைந்தவர்களாக குறிப்பிடப்படுகிறார்கள். ஜோசியம் பார்த்தல் நெசவு செய்தல் சாமியாடி விடதல் போன்ற தொழில்களும் செய்கின்றனர். தமிழகத்தில் மேளக்கருவி (பறை)  வாசிக்கும் பறையர் சாதியில் ஒரு பிரிவினர் நெசவுத் தொழில் செய்து வந்ததை எட்கர் தர்ஸ்டன் தனது தென்னிந்தியச் சாதிகளும் குடிகளும் தொகுதி 6ல் குறிப்பிடுகின்றார் என்பதும்  இங்குக் குறிப்பிடத்தக்கது.

16. பட்கம் பெரவா - சிறிய எண்ணிக்கையில் இருப்பவர்கள் ஈமக்கிரியை நிகழ்வுகளில் மேளம் அடிக்கும் சாதியின் ஒரு பிரிவினர்.

17. கொண்ட துரயி - இந்தச் சமூகத்தினர் பாரம்பரியமாகக் கையில் வேலேந்தி போதி மரங்களைக் காவல் காப்பவர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். மன்னர்களின் பல்லக்குகளைத் தூக்கிச் செல்பவர்களாக இருந்தனர்.

18. பட்கம் - கண்டிப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் அடித்தள சாதியினர். உயர்சாதியினர் வீடுகளில் வேலைகளுக்கு ஈடுபடுபவர்கள். தமக்கென சொந்தமான நிலமற்றவர்கள். கூலி வேலை செய்பவர்கள்.

19. கவிக்கார - வட்டார சாதியினராக அறியப்படுபவர்கள். இச் சமூகத்துப் பெண்கள் நடன மாந்தர்களாக ஆண்கள் பாட்டுக் கலைஞர்களாக இருக்கின்றனர். கோயில்களில் பெண்கள் நடனம் ஆடுவதும் ஆண்கள் பாணர் தொழிலைச் செய்வது இச்சமூகத்தினர் தொழிலாக அமைகிறது. 

20. ஒலீ - கோயில்களில் நடனம் ஆடுபவர்களாகவும் திருவிழாக்களில் பங்களிப்பவர்களாகவும், விழாக்களில் அசுரர்களை வதம் செய்யும் பாவனைகளைச் செய்பவர்களாகவும் உள்ளவர்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சாதியினர்.

21. தெய்வ கட்டர -  இதனைத் தமிழ்ப் படுத்தினால் `தமிழ் புறச்சாதிகள்` என்ற பொருள் வருகிறது. இவர்கள் உடல் தோற்றம் நடை உடை பாவனையிலும் வாழ்க்கை முறையிலும் சிங்கள மக்களாகவே காணப்படுகின்றனர் என்றாலும் சிங்கள மக்கள் இவர்களை `தமிழ்ப்புறச்சாதிகளாக` அடையாளப்படுத்துகின்றனர். இலங்கையை ஆண்ட எல்லாளன் எனும் தமிழ் மன்னனின் படை வீரர்கள் `தெய்வ கட்டர` என அழைக்கப்பட்டனர். காலப்போக்கில் இவர்கள் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு கலப்படைந்து விட்டாலும் இன்றும் தமிழ்ச் சாதி மரபினர் என அடையாளப் படுத்தப் படுகின்றனர்.

22. பலீ - தமிழகத்தில் புதிரை வண்ணார்கள் போன்று அடித்தள சாதி சமூக மக்களின் அழுக்குத் துணிகளைச் சலவை செய்யும் வண்ணார்களாக உள்ளனர்.

23. கஹலபெரவா - இலங்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் ஒன்று. ஈமக்கிரியை நிகழ்வுகளில் மேளம் அடித்தல், பிணம் எரித்தல், அடக்கம் செய்தல், குப்பை அள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை மிக நீண்ட காலமாக சிங்களச் சமூகத்தில் செய்துவரும் மரபினர்.

பொதுவாகவே சிங்கள மக்கள் மொழியின் அடிப்படையில் ஒன்றுபட்டாலும் சாதிப்பிரிவு கட்டமைப்பைச் சார்ந்தே இவர்களது சமூக அமைப்பு அமைந்திருக்கின்றது.  

இந்தியாவில் உள்ளது போன்ற சாதி கட்டமைப்பு சிங்களச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றி அமைந்திருப்பதை மானுடவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆரம்பக் காலத்தில் தொழில் அடிப்படையில் அமைந்த சமூகப் பிரிவுகளாக இருந்த நிலை மாறி இந்திய வர்ணாசிரமத் தத்துவத்தின் தாக்கத்தின் அடிப்படையில், அதனை உள்வாங்கிய வகையில் விரிவான சாதி அமைப்பைக் கொண்டதாக வளர்ச்சி கண்டு விட்டதைக் காண முடிகிறது. இலங்கை வரலாற்றைக் கூறும் நூல்களில் ஒன்றான சூளவம்சம் குறிப்பிடுவதுபோல இலங்கை பௌத்த அரசு சார்ந்த நடவடிக்கைகளில் இந்திய வைதீக தொடர்புகள் இருந்தமையையும் நாம் இங்குக் கவனிக்க வேண்டியுள்ளது. 

குறிப்பு: சிங்களவர் சமூகச் சூழலை விரிவாக அறிந்தவர்களும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  மேலுள்ள செய்திகளில் ஏதேனும் தவறான குறிப்புகள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டலாம். இது சிங்களவர் சமூக அமைப்பைப் புரிந்து கொள்ள மானுடவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும்.



srilanka - suba.jpg

மானுடவியல் ஆய்வுகளில் இனங்களின் உறவுமுறை கட்டமைப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறும் ஒரு கூறு. நூலின் நான்காவது அத்தியாயம் சிங்களச் சமூகத்தில் உறவுமுறை பற்றி மிக விரிவாக ஆராய்கிறது.

மகாவம்சம், சூளவம்சம் மற்றும் ஏனைய பிற புராணக் கதைகள் கூறுகின்ற வரலாற்றுச் செய்திகள் இலங்கை சிங்களவர்களுக்கு வட இந்தியத் தொடர்பு இருப்பதை வலியுறுத்துகின்றன. ஆனால் மரபணு ரீதியான ஆய்வுகளை நோக்கும்போது அவை தென்னிந்திய மக்களுடன், அதிலும் குறிப்பாக திராவிட இன மக்களுடன் மரபணு நெருக்கம் இருப்பதைப் பலப்படுத்துகின்றன. இவர்கள் இனத்தால் சிங்களவர்; மொழியால் இந்தோ - ஆரிய மொழி பேசுபவர்கள்; மதத்தால் பவுத்தர்கள்; பண்பாட்டால் தென்னிந்தியர்கள் என்று ஆய்வாளர் Cordrington (1926) கூறுவதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இக்கூற்றை உறுதி செய்வதாகவே அமைகிறது சிங்கள இன மக்களிடையே உள்ள உறவுமுறை வழக்கங்கள்.

"சமூகத்தில் மனிதர்கள் மன உறவாலும் இரத்த உறவாலும் பிணைக்கப்பட்டுள்ளனர். நாம் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படும்  உறவுமுறை சொற்கள் உறவின் தன்மைகளையும் பண்புகளையும் வரையறுத்துள்ளன; திருமண விதிகளைக் கூறுகின்றன; திருமண விருப்பங்களைத் தெரிவிக்கின்றன; மணமுறையில் கையாள வேண்டிய தவிர்ப்புகளையும் விலக்குகளையும் சுட்டிக்காட்டுகின்றன; உறவினர்களிடையே பேணவேண்டிய நடத்தை முறைகளை ஒழுங்கு செய்கின்றன" என ஓர் இனத்தின் உறவுமுறைகளின் முக்கியத்துவம் பற்றி நூலாசிரியர் தெளிவுபடுத்துகின்றார்.

இலங்கை சிங்கள மக்களின் உறவு முறை குறித்த விரிவான ஆய்வினை நிகழ்த்தியவர் துருக்கி நாட்டு மானிடவியல் அறிஞர் நூர் யால்மண். இவரது ஆய்வு சிங்கள மக்களின் உறவு முறையானது (1962) திராவிட முறை சார்ந்தது என்பதை வெளிப்படுத்துகின்றது. இந்த ஆய்வினை விரிவாக்கி அவர் எழுதிய நூல் Under the Bo tree: Studies in caste kinship and marriage in the interior Ceylon, 1971 என்ற பெயரில் வெளிவந்தது. இதேபோல எட்மண்ட் லீச் ஆராய்ந்து எழுதி வெளியிட்ட A village in Ceylon: A study of land tenure and kinship (1961), என்ற நூலும், இலங்கையின் மூத்த இனவியல் அறிஞர் எம் டி ராகவன் எழுதி வெளியிட்ட The Karava of Ceylon: Society and culture (1961) ஆகிய நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் சில நூல்களையும் நூலாசிரியர் சிங்கள தமிழ் உறவு முறைகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டும் ஆதாரங்களை இந்த அத்தியாயத்தில் சான்றாகக் காட்டுகின்றார்.
இன்று உலகளாவிய நிலையில் ஆறுவகை உறவுமுறை அமைப்புகள் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றன அவை பின்வருமாறு:
1. எஸ்கிமோ முறை
2. ஓமஹா முறை 
3. குறோ முறை
4.. இராகுவர் முறை (திராவிடர்கள்)
5.  ஹவாய் முறை
6. சூடானிய முறை
இதில் இராகுவர் முறை என்பது ஆஸ்திரேலிய முது குடிகள், இலங்கை வேடர்கள், இலங்கைச்  சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், தென்னிந்தியச் சமூகங்கள், வட இந்தியாவில் வாழும் பூர்வ திராவிடர்கள், தென்னிந்தியாவும் வட இந்தியாவும் சந்திக்கும் எல்லையோரத்தில் வாழும் மராட்டியச் சமூகத்தார், நடு இந்தியச் சமூகத்தார் ஆகியோரிடம் பரவலாகக் காணப்படும்  உறவு முறையாகும்.

திராவிட உறவு முறையின் தனிச்சிறப்பு என்பது என்னவெனில் தாய்வழி உறவினர்களும் தந்தை வழி உறவினர்களும் சமச்சீர் உரிமையோடு அணுகும் முறையாகும்.  உதாரணமாகப் பாட்டி என்றோ தாத்தா என்றோ அழைத்தால் அவை இரண்டும் தாய் தந்தை ஆகிய இரண்டு வழி பாட்டன்களையும், பாட்டிகளையும் குறிக்கின்றன. அதேபோல பேரன் பேத்தி ஆகிய சொற்களும், இன்னும் பல சொற்களும் அமைகின்றன.

திராவிட உறவு முறைக்கு உள்ள மற்றொரு சிறப்பு ஒவ்வொரு நபருக்குமான உறவு கூட்டத்தை பெரும் பிரிவாகப் பிரித்துக் காண்பது. உறவினர்களில் ஒரு சாதியினர் அண்ணன்-தம்பி முறையில் வருபவர்கள்; மற்றொரு பிரிவினர்  மாமன்-மச்சான் முறையில் வருபவர்கள். இந்த உறவு முறை பிரிவு திராவிட உறவு முறையில் அடித்தளத்தில் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது. தமிழ் உறவுமுறைச் சொற்கள் அனைத்தும் இந்த முறை கோட்பாட்டை முன்வைத்து உறவினர்களை இரண்டு பெரிய வகைகளாகப் பிரித்து விடுகின்றன என்கிறார் நூலாசிரியர்.

உறவினர் சுற்றத்தை திருமண உறவு அல்லது ரத்த உறவு என்ற இரண்டு பெரிய வகையில் பிரிக்கும் முறை திராவிட உறவு முறையில் மட்டுமே காணக் கூடியதாக அமைகிறது. இதற்கு நேர்மாறாக ஹிந்தி உறவுமுறையை ஒப்பிட்டுப் பார்த்தால் அங்குத் தாய்வழி தந்தைவழி உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி உறவுச் சொல் இருப்பதைக் காண முடியும். இது திராவிட உறவு முறையிலிருந்து அடிப்படை வேறுபாடாகும் என்பதையும் நூலாசிரியர் விவரிக்கின்றார்.

திராவிட உறவு முறையின் அடிப்படை அமைப்பாக்கத்தில் பழங்காலத்திலிருந்து திராவிட மக்கள் உறவுமுறை வழக்கில் கொண்டுள்ள உறவுத் திருமண முறை, அதாவது cross cousin marriages ஒரு முக்கியக் கூறாக அமைகின்றது. திராவிட உறவு முறையை ஆராய்ந்த தாமஸ் டிரவுட்மன் ( 1981) இது நேற்று இன்று தோன்றிய ஒரு வழக்கு அல்ல, மாறாக வரலாற்றின் ஊடாக கட்டமைந்த உருவாக்கம் ( historical construct) என்று விரிவாக ஆய்வு மூலம் நிரூபித்துக் காட்டியதையும் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் இன வேறுபாடு - தமிழர் சிங்களவர் என்ற பாகுபாடு பௌத்தர் சைவர் என்றில்லாமல் திராவிட உறவுமுறை என்பது இலங்கைத் தீவு முழுவதும் ஒரே முறையிலேயே அமைகிறது. இன்றும் புழக்கத்தில் உள்ள சிங்கள உறவுமுறைச் சொற்கள் சிலவற்றை ஆசிரியர் உதாரணத்திற்குப் பட்டியலிட்டிருக்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கே புரிதலுக்காக வழங்குகின்றேன்.
சிங்களம்: அப்பா, அப்புச்சி - தமிழ்: அப்பா
சிங்களம்: அம்மா, மவு - தமிழ்: அம்மா
சிங்களம்: மாமா, மாமாண்டி - தமிழ்: தாய்மாமன், அத்தையின் கணவர், மாமனார்.    
சிங்களம்: ஐயா - தமிழ்: அண்ணன்
சிங்களம்: அக்கா - தமிழ்: அக்கா 
சிங்களம்: லொகு அக்கா - தமிழ்: மூத்த அக்கா   
சிங்களம்: சகோதரி - தமிழ்: உடன் பிறந்தவள்
சிங்களம்: சகோதரா - தமிழ்: உடன் பிறந்தவன்
சிங்களம்: மினிஹ, புருசய்யா - தமிழ்: கணவன்
சிங்களம்: பவுலா, கனு - தமிழ்: மனைவி
மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் தாத்தாவைக் குறிக்கச் சொல்லப்படும் சிய்யா/சிய்யான் என்ற சொல்லின் திரிபாக `சியா` என தாத்தாவை அழைக்கும் வழக்கமும் சிங்களவர்களிடம் காணப்படுகிறது. சிங்கள உறவு முறையில் நேர் திராவிடச் சொற்கள் அதிகமாகவும், அதோடு இடைக்காலச் சிங்களச் சொற்களும் கலந்திருப்பது தெரிகிறது.

சிங்கள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் என்ற வகையிலும், சிங்கள மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் என்ற அடிப்படையிலும் ஒப்பாய்வுகள் செய்யப்படுவதும், அது பற்றிய ஆய்வு முடிவுகள் வெளிவந்து அவை பெரும் வகையில் கலந்துரையாடப்படுவதும் அவசியம். ஏனெனில் தமிழர், சிங்களவர் என்ற இரண்டு வெவ்வேறு இனங்கள் எனக் காண்பதை விட ஒரே இனத்தின் ஒரு பிரிவாக, அதாவது பண்டைய திராவிட தொல்குடி மரபின் ஒரு பிரிவே சிங்களவர்கள் என்ற முடிவுக்கே நம்மை  மானுடவியல் ஆய்வுகள் இட்டுச் செல்கின்றன!




2018 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டு இரண்டு முறை நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது அங்குள்ள பௌத்த விகாரை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அந்தக் கோயிலில் உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் நமக்கு நன்கு பரிச்சயமான விநாயகர், லட்சுமி, சிவன் ஆகிய தெய்வங்களின் சிற்பங்கள் சிங்கள முகத்துடன் சிறிய சிறிய கோயில்களில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டபோது ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு நண்பர்களுடன் பேசி கேட்டு அறிந்து கொண்ட போது பௌத்த ஆலயங்களில் இத்தகைய தமிழர் வழிபாட்டில் இடம்பெறுகின்ற தெய்வ வடிவங்களும் அவற்றுக்கான சன்னிதிகளும் இருக்கின்றன என்று அறிந்து கொண்டேன். சமயம் சார்ந்த ஒற்றுமைகள் என்பது ஒருபுறமிருக்க, மொழியில், பண்பாட்டில் உள்ள ஏராளமான ஒற்றுமைகள் பற்றியும், முறையான ஆய்வுகள் இலங்கையின் இரண்டு பெரும் இனங்களான சிங்களவர்கள்-தமிழர்கள் ஆகிய இரண்டு இனங்களுக்கும்  இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கும்.

சிங்களவர் உறவுமுறை பெயர்களில் ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருப்பதைக் காண்கின்றோம். சில உதாரணங்களை முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.   பொதுவாக இந்தியாவில் தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வது போல, சிங்களவர் சமூகச் சூழலில் `கண்டி சிங்களவர்` அதாவது மலைநாட்டுச் சிங்களவர் என்றும் தீவைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளில் வாழ்கின்றவர்கள் `கரையோரச் சிங்களவர்` என்றும் நில அடிப்படையில் அடையாளப்படுத்தப் படுகின்றார்கள். இவர்களுள் மலைநாட்டுச் சிங்களவர் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

கண்டி சமூகத்தில் இரண்டு வகை திருமண முறை இருப்பதைக் காண்கிறோம்.
1. பின்னா - இவ்வகை திருமணத்தில் கணவன் தன் மனைவி வீட்டிற்குச் சென்று வாழ்வது வழக்கம். இந்த வாழும் முறை அதாவது சிங்கள மொழியில் 'வாசகம' என்பது மருமக்கட்தாய முறைப்படி மனைவி வீடாக அமைகிறது.

2. இதற்கு மாறாக திருமணத்திற்குப்பின் மனைவி தன் கணவர் வீட்டிற்குச் சென்று வாழும் முறை 'தீக' என அழைக்கப்படுகிறது. 

இந்த இரண்டு வகை திருமணப் பிரிவுகளும் கண்டி சமூகத்தில் அதாவது மலைநாட்டுச் சிங்களவர் சமூகத்தில் உள்ளன. இந்த இரண்டு பிரிவினரும் திராவிட உறவு முறையைப் பின்பற்றுகின்றனர்.  ஆக, திராவிட சமூக அமைப்பில் இன்றும் தாய்வழிச் சமூக முறையும் தந்தை வழி சமூக முறையும் தொடர்வதை நாம் காண்பது போல, மலைநாட்டுச் சிங்களவர் சமூகத்திலும் இது இயல்பாக இருப்பதைக் காண முடிகிறது.

இலங்கையில் பேசப்படுகின்ற சிங்கள மொழியின் ஒரு உறவு மொழியாக 'மஹல்' மொழி அமைகிறது. இது இலட்சத் தீவுகளிலும், மாலத்தீவுகளிலும் பேசப்படும் மொழியாகும் என்பதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

சிங்கள மொழி ஒரு இலக்கிய மொழியாக உருவானது பொ.ஆ. 10ஆம்  நூற்றாண்டு காலவாக்கில் தான். சிங்கள எழுத்தின் வரிவடிவமானது தென்னிந்திய  சாய்வுக் கோடு வகையில் விளங்குகிறது என்று கூறும் அறிஞர் கோலின் மாசி காவின் (Colin Masica, 1991) கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.

இலங்கையின் மேற்குப் பகுதியில் வாழ்ந்துவந்த பூர்வகுடிகளான நாகர்கள் இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வாழ்ந்தவர்கள் என்பதும், இந்தப் பூர்வீக நாக மன்னர்களின் சின்னங்களாக சிங்கமும் பனை மரமும் இருந்தன என்பதும், பிற்காலத்தில் இலங்கையில் இந்தப் பூர்வகுடிகள் பௌத்த மதத்தைத் தழுவிய பின்னரும் கூட சின்னங்களைக் கைவிடாமல் இருப்பதும் முக்கியத்துவம் பெறும் ஒன்று. இந்தச் சிங்கமும் பனைமரமும் தமிழகச் சேர மன்னர்களுக்கு உரிய சின்னங்கள் என்பதையும் நாம் ஒப்புநோக்க வேண்டியுள்ளது.

பண்பாட்டு அடிப்படையில் திராவிட பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருக்கும் சிங்களவர்களின் மொழி இந்தோ-ஆரிய மொழியாக இருக்கின்றது என்பதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டி இருப்பதைப் பார்த்தோம். இந்தக் கலப்பு எப்படிச் சாத்தியமானது என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது. சிங்களவர்களின் மிக ஆரம்பக்கால இடப்பெயர்வு என்பது தென்னிந்தியப்  பகுதிகளின் ஊடாக நடந்தேறியது என்றும், அவர்கள் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய பகுதிகளோடு மிக நீண்டகாலமாக இனத் தொடர்பு கொண்டிருந்தாலும் தென்னிந்தியப் பகுதிகளுக்கு வந்து, மிக நீண்ட காலங்கள் வாழ்ந்து, தென்னிந்தியப் பெண்களைத் திருமணம் செய்து, தமிழ் பவுத்தத்தைத் தழுவி, தமிழ்த்  தேசத்தோடு உறவாடி, தென்னிந்தியக்  கிராம தெய்வங்களை வணங்கி வழிபட்டு தங்கள் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக இணைத்துக் கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து இலங்கை சென்று அடைந்தார்கள் என்று கருத வாய்ப்புள்ளது.

பூர்வ வட இந்தியர்கள், அதாவது இந்தோ-ஆரிய மொழி பேசுபவர்கள்  உறவுத் திருமணங்களைத் தங்கள் பண்பாட்டில் கொண்டிருப்பதில்லை. அவர்களது திருமண முறை உயர்குல  முறை, அதாவது hypergamy என்ற அமைப்பில் அடங்கும். இது திராவிட திருமண முறையான உறவுத் திருமணங்கள் என்ற கருத்தாக்கத்தில் இருந்து முற்றிலும் மாறுபடும் ஒரு முறையாக அமைகிறது என்பதை இங்குக் காண வேண்டும்.

உறவுத் திருமணங்கள் தென்னிந்தியச் சமூகத்தில் தொன்று தொட்டு நடைமுறையில் இருப்பதற்குக் காரணம் வேளாண்மை. நிலமும் நீரும் சமூக வாழ்வியல் அமைப்பில் முக்கிய இடம் பிடிப்பதால் இவை திருமணத்தால் குறைந்து விடக்கூடாது என்பதற்காகத் திராவிட பண்பாட்டில் ஏற்படுத்திக்கொண்ட முறையே உறவுத் திருமணங்களாகும், என்கிறார் நூலாசிரியர்.

பண்பாட்டு ஒற்றுமை எனக் காணும்போது சிங்களவர்கள் கண்ணகி வழிபாடு செய்வதும், விநாயகர் வழிபாடு செய்வதும், விஷ்ணு, முருகன், வள்ளி ஆகிய தெய்வங்களின் வழிபாடுகளைச் செய்வதும், கேரளத்தின் கதகளி நடன வகையை ஏற்று உள்வாங்கிக் கொண்டதும்,  உணவுப் பழக்கவழக்கங்களில் கேரள பழக்கவழக்கங்கள் மிகுந்து இருப்பதும் முக்கியமான கூறுகளாகும்.

ஆக, வட இந்தியாவிலிருந்து வந்த விஜயன் வட இந்தியப் பின்னணியோடு சிங்கள அரசைத் தோற்றுவித்து சிங்களவர்கள் உருவானார்கள் என்ற புராணக்கதையை முழுமையான வரலாறு என்று கொள்ளாமல், மகாவம்சம் சூளவம்சம் மற்றும் ஏனைய புராணங்களில் உள்ள ஏராளமான கதைகளை வாய்மொழி கதைகளின்  ஆவணப்படுத்தல் என்ற அடிப்படையில் அவற்றை ஆராய வேண்டியது அவசியமாகிறது. 

வாய்மொழிக் கதைகள் இன வரலாற்று மீட்டுருவாக்கத்திற்கு மிக முக்கியமானவை என்பதை உலகளாவிய மானுடவியல் ஆய்வுகள் சுட்டிக் காட்டுவதை நூலாசிரியர் வலியுறுத்துகின்றார்.

ஆசிரியர் இந்த அத்தியாயத்தின் இறுதியில் கூறும் ஒரு கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. "பன்மை இனத்துவம் கொண்ட நாடுகளில் இன வரலாறு வரலாற்றின் அனைத்துப் பரிமாணங்களிலும் ஊடுருவியிருக்கும். அதனை முற்சாய்வு  ஏதுமின்றி ஆராயும்போது மட்டுமே புதிய உண்மைகள் வெளிப்படும். சிங்கள இனத்துவத்தையும் இந்த வகையில் ஆராய வேண்டும்."


நூலின் ஐந்தாம் அத்தியாயம் சிங்கள மக்கள் வாழ்வியலில் திருமண முறைகள் பற்றி ஆராய்கிறது. இப்பகுதியின் தொடக்கத்திலேயே நூலாசிரியர் ஆரிய மணமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உறவுமுறை திருமண அமைப்பை அடிப்படையாகக் கொண்டது சிங்களத் திருமண முறை, அதாவது திராவிட முறை பழக்க வழக்கங்களோடு தொடர்பு கொண்டது என்று நிலை நிறுத்துகிறார். அதற்கு மேலைநாட்டு அறிஞர்கள் H.W.Codrington, நூர் சால்மன், மற்றும் இலங்கை ஆய்வாளர் மானிடவியலர் எம் டி ராகவன் அவர்களது ஆய்வுகளையும் சான்றாகப் பயன்படுத்துகின்றார்.

அடிப்படையில் காணும்போது சிங்களச் சமூகத்தில் திருமண முறை அகமணத்தைக் கொண்டது என்பதைக் காணமுடிகிறது. `கொய்கம` சாதி அமைப்பில் விரிவான கிளை சாதிகள் உள்ளன. ஆகவே அகமண தன்மையை உறுதியாகப் பின்பற்றும் சமூகமாக இது அமைகிறது. திராவிட அகமணதன்மை என எடுத்துக் கொள்ளும்போது கிளைச் சாதிகளுக்குள்ளேயே காணப்படும் வகையரா/பரம்பரை/கூட்டம்/குலம்/கிளை/கொத்து/இல்லம் என அழைக்கக்கூடிய பிரிவுகளுக்கு உள்ளே திருமண உறவுகள் எவ்வகையில் கட்டமைக்கப்படுகின்றன என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.

சிங்களச் சமூகத்தவர்களது விதிகளின்படி பங்காளி உறவுடைய எவரும் அவர்களுக்குள் திருமணம் செய்து கொள்வதில்லை. ஏனெனில் அவர்கள் அண்ணன்-தம்பி அல்லது அக்காள்-தங்கை உறவாகக் கருதப்படுகின்றனர். முறைப்பையன் தனது முறைப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள உரிமை கோரப்படுவதும் சிங்களவர்  வழக்கத்தில் இருக்கிறது. முறைப்பையனுக்குப்  பதிலாக வேறு ஒருவரை அப்பெண் திருமணம் செய்ய நேரிட்டால் மணப்பெண் அந்த முறைப்பையனுக்கு 100 வெற்றிலை கொடுத்து அனுமதி கேட்கவேண்டும் என்ற சடங்கும் சமூகத்தில் நடைமுறையில் இருப்பதாக நூல் குறிப்பிடுகிறது.

தென்னிந்தியாவில் சில பூர்வகுடிகளிடம் இன்றும் தாய்வழி சமூக முறை இருக்கின்றது. நூர் சால்மன் தனது நூலில் ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார். அதாவது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு தமிழர்களிடம் தாய்வழிச்சமூகமுறை மிச்சசொச்சம் இருக்கின்றது என்பதை இவரது ஆய்வு குறிப்பிடுகின்றது. திருமணம் செய்துகொள்ளும் ஒரு ஆண்,  பெண்ணின் வீட்டில் திருமணத்திற்குப் பிறகு சென்று வாழ்வது என்பது கண்டி பகுதியில் அதிகம் வழக்கிலிருக்கும் முறை என்றும், இது 'பின்ன' என்று குறிப்பிடப்படுகின்றது என்றும், தந்தைவழி குடும்ப முறையில் மணப்பெண் கணவன் வீட்டில் சென்று வாழ்வது முறையாகக் கருதப்படுகின்றது என்றும், இதனை 'தீக' என்று சிங்களவர் குறிப்பிடுகின்றனர் என்பதையும் நூலாசிரியர் தெரிவிக்கின்றார்.

'தீக' திருமண முறையில்  பெண் வீட்டார் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பதும் வழக்கில் இருப்பதைக் காணமுடிகிறது. இந்த வழி திருமண முறையில் பெண்ணுக்கு அசையா சொத்துகள் மட்டுமே பங்கு உண்டு என்றும், அதனை விற்பதற்குப் பெண்ணுக்கு உரிமை இல்லை என்றும், பயிரிடும் உரிமையை மட்டும் அவள் தன் உடன்பிறந்தோருக்குக் கொடுக்கலாம் என்றும், ஆனால் அதில் வரும் வருமானத்தைக் கண்டிப்பாக கேட்டுப் பெற மாட்டாள் என்றும், யார் பயிரிடுகிறார்களோ அவர்கள் நினைத்து எதைக் கொடுக்கிறார்களோ அதனைப் பெற்றுக் கொள்வார்  என்றும் அறிய முடிகின்றது. இதனைக் காணும்போது மிக உறுதியான ஆணாதிக்க மரபு வழிமுறையாக இதனைக் கருதலாம்.

திருமண நிகழ்வில் விருந்துபசாரம் செய்தல், நல்ல நேரம் பார்த்தல், மணமகள் வீட்டில் மணமகன் வருகையைக் கொண்டாடுதல், ஆடை மாற்றுதல் சடங்கு, கால் பெருவிரல்களைக் கயிற்றால் கட்டுதல் ஆகியவற்றோடு பெண்கள் பாலி மொழியில் அமைந்த பழம்பெரும் பாடலாகிய `ஜெயமங்களசூத்திரா` பாடலைப் பாடுவது, அதன் பின்னர் தேங்காய் உடைத்தல், மாமா உறவு வழி சடங்குகள், முறைப்பையன் இருந்தால் அவன் மணப்பெண்ணை விட்டுக் கொடுக்கும் சடங்கு என வரிசையாக சடங்குகள் அமைகின்றன. திருமணம் மணப்பெண் வீட்டில் நடக்கும் வீட்டிற்கு அருகிலேயே ஒரு  தற்காலிகக் குடிசை அமைக்கப்படும் என்றும் அதனை வண்ணார்கள் அமைத்து அலங்கரித்துக் கொடுக்கின்றனர் என்றும் அறிய முடிகிறது. தாலிகட்டுவது போல ஒரு சின்னத்தை அணிவிக்கும் முறை சிங்களத் திருமணங்களில் இல்லை என்றே தெரிகிறது. 

பல கணவர்கள் அதாவது சகோதரர்கள் ஒரு பெண்ணை மணந்து வாழும் முறை தம்பகல்லே, மஹா கண்டென ஆகிய பகுதிகளில் இருந்ததை நூர் யால்மன் (1971) பதிகின்றார். அதேபோல பல மனைவியர் உள்ள ஆண்களின் குடும்பங்கள் சிலவற்றையும் தாம் கண்டதாக இவரது ஆய்வு வெளிப்படுத்துவதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார். இதற்குப் பெரும்பாலும் நிலங்களும் சொத்தும் பிற குடும்பங்களுக்குச் சென்று விடக்கூடாது என்ற கருத்தே அடிப்படையாக அமைகிறது.

இன்றைய காலச்சூழலில் சிங்களச் சமூகத்தவர் பண்பாட்டில் திருமண முறைகள் மேற்கத்திய வழக்கங்களையும் உள்ளடக்கிய வகையில் பல மாற்றங்களுடன் திகழ்கின்றது. இன வேறுபாட்டைக் களைந்து சிங்கள மக்கள் தமிழ் மக்கள் என வேறுபாடின்றி கலப்புத் திருமண நிகழ்வுகளும் இன்றைய இலங்கையில் கண்கூடு.


புகைப்படம்: இலங்கை மலையகத்தில் பதுளை நகரில் அமைந்துள்ள முதியாங்கனை ரஜ மகா விகாரையில்.

வரலாற்றுக் காலத்தின் தொடக்கம் முதலே தாய்த் தெய்வ வழிபாடு என்பது உலக மக்களின் அனைத்துச் சமூகங்களிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுவதை இன்றைய தொல்லியல் அகழாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்தில் தாய்த் தெய்வ வழிபாடு என்பது தொன்மையான வழிபாட்டுக் கூறுகளில் ஒன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் கண்ணகிக்குத் தமிழகத்தில் கோயில்கள் இருக்கின்றன. தமிழகத்திற்கு அருகிலுள்ள இலங்கையில் கண்ணகி எப்படி வழிபடப்படுகிறாள் என்பதைத்தான் நூலில் ஆறாவது அத்தியாயம் பேசுகிறது.





நூலாசிரியர் ஆய்வாளர்கள் சிலரது ஆய்வுகளை இந்தப் பகுதிக்கு முக்கியச் சான்றுகளாகப் பயன்படுத்துகின்றார். அதில், பேராசிரியர் ஒபயசேகர எழுதிய The cult of the Goddess Pattini (1984),  பேராசிரியர் ரிச்சர்ட் கொம்ரிட்ச் எழுதிய, Food for 7 Grandmothers: Stages in the universalisation of the Sinhalese ritual, (1971), லூத்மினா மீர்வொர்த்-லெவினா எழுதிய The Hindu goddess Pattini in the Buddhist popular belief in Ceylon (1916), L.S.Hiatt எழுதிய The Pattini cult of Ceyon Tamil Perspective (1973) ஆகியவை வெகுவாக இந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி மேலும் பல நூல்களையும் இந்தப் பகுதியில் நூலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். அவை அனைத்தும் கண்ணகி சிங்களப் பண்பாட்டில் வகிக்கும் முக்கியத்துவம் பற்றி நமக்கு வியப்பூட்டும் வகையில் உள்ள சிங்கள இலக்கியங்களாக அமைகின்றன.

கஜபாகு மன்னன் இலங்கையில் நிலவி வந்த பஞ்சத்தைப் போக்குவதற்கு தமிழகம் சென்று கண்ணகி சிலையைக் கொண்டுவந்து ஆடி மாதத்தில் விழா எடுத்தான், என இதன் பூர்வீகத்தை ஒரு மரபு பேசுகிறது. இந்த கஜபாகு பொ.ஆ 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்.

பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டில் பௌத்தம் முழுமையாக இலங்கையில் பரவத் தொடங்குவதற்கு முன்பு இலங்கைத் தீவு முழுக்க நாட்டார் வழிபாட்டு மரபு தெய்வங்கள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. அவற்றுள் நாக வழிபாடு, இயற்கை வழிபாடு என்பதோடு கண்ணகி வழிபாடும், ஏழு பெண் தெய்வங்களின் வழிபாடும்,  'கிரி அம்மா' என்ற பெண் தெய்வ வழிபாடும் அடங்குகிறது.

சிங்களவரின் பௌத்த மத அடையாளத்துக்குக் குறைவில்லாத வகையில் சிங்களப் பண்பாட்டில் கண்ணகி தெய்வம் 'கண்ணகி தெய்யோ' அல்லது 'பத்தினி தெய்யோ' எனச் சிறப்பிக்கப்படுகிறார். அடிப்படையில் கடவுள் கோட்பாட்டை மறுக்கும் பவுத்தம் இலங்கையைப் பொறுத்த வகையில் கண்ணகி தெய்வத்தையும் மற்றும் தமிழ் நிலத்தில் நன்கு பரிச்சயமான விநாயகர், முருகன், விஷ்ணு, சிவன் ஆகிய நான்கு தெய்வங்களையும் உள்ளடக்கிய தெய்வீக மரபைக் கொண்டிருப்பதையும் காண்கிறோம். இலங்கை பௌத்தம் தேரவாத பௌத்த சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் கூட தாய் தெய்வ வழிபாடு இங்கு கண்ணகி வழிபாடாக முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கண்ணகி தொன்மத்தை மூன்று வெவ்வேறு வகையில் குறிப்பிடுகின்றார்கள்.
1. நாக தெய்வமான நாக அரசனின் கண்ணீரில் இருந்து பிறந்தவள்
2. நீலத்தாமரையில் இருந்து தோன்றியவள்
3. பாண்டிய மன்னனின் தோட்டத்து மாமரத்திலிருந்து பிறந்தவள்
மேற்கூறிய மூன்று தொன்மங்களுமே கண்ணகியின் பிறப்பை அசாதாரண நிகழ்வாகக் காட்டுகின்றன. 

சிங்கள மக்களின் வழிபாட்டு மரபில் கண்ணகி தெய்யோவைப் பன்முகத்தன்மை கொண்ட கடவுளாக வழிபடுகின்றனர்.
1. கண்ணகி வளமைக்கும் ஆரோக்கியத்திற்குமான தெய்வம்.
2. கண்ணகி பௌத்த மதத்தைக் காத்து வரும் தெய்வம்
3. கண்ணகி இலங்கைத்தீவைக் காக்கும் காவல் தெய்வம்

கண்ணகி வழிபாட்டிற்கு முன்னர் ஏழு பெண் தெய்வங்கள் வழிபாடு என்பதும் சிங்களவர் மரபில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக அமைந்துள்ளது. இது தமிழ்நில மரபில் உள்ள சப்த கன்னியர் அல்லது ஏழு கன்னிமார் என்ற வழிபாட்டு மரபோடு ஒப்பீடு செய்யத்தக்கது.

நூலாசிரியர் சிவன், முருகன், விநாயகர், விஷ்ணு ஆகிய தெய்வங்களைக் குறிப்பிடும் போது நூலில் `இந்து தெய்வங்கள்` எனக் குறிப்பிடுகின்றார்.  `இந்து மதம்; என்ற ஒரு அடையாளப்படுத்துதல்  ஆங்கிலேய காலனித்துவக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வழக்கம் என்பதன் அடிப்படையில் நூலாசிரியர் இதனை `பண்டைய தென்னிந்திய தொல் தெய்வ வழிபாடுகள்` எனச் சுட்டுவது பொறுந்தும் என்று கருதுகிறேன்.   லிங்க வழிபாடும்  இவ்வகையில் தொல்  தெய்வ வழிபாடு என்ற வகையிலே சுட்டப்பட வேண்டும்.  

கண்ணகியைச் சிங்களவர்கள் ஒரு தொன்மையான பௌத்த தெய்வமாகவே கருதுகிறார்கள். ஏறமல பத்தினி தெய்வம் புத்தர் நட்ட மாவித்தில் இருந்து தோன்றியவள் என சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு கட்டத்தில் மைத்திரி புத்தர் வடிவில் கண்ணகியை இனம் காணவும் சிங்களவர் முற்பட்டனர். அடுத்த கட்டத்தில் பத்தினி தெய்வமான கண்ணகி போதிசத்துவர் எனும் நிலையிலிருந்து பரிநிர்வாண நிலைக்கு உயர்த்தப்பட்டார்.  மேலும் இத்தகைய பல தொன்மங்கள் கண்ணகியைப் பௌத்த சமயத்துடன் பின்னிப் பிணைத்துக் காட்டுவதைத்  தீவிரமாக முயன்றுள்ளன.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை கண்ணகி தமிழ் தெய்வம் அல்ல; மாறாக சிங்களப் பௌத்தர்களுக்கே உரிய  முக்கிய தெய்வம். இன்று இலங்கை முழுவதும் கண்ணகிக்குப் பல கோயில்கள் உள்ளன.

இன்று கண்ணகி தெய்யோ சிங்களவர் பண்பாட்டில் பிரிக்கப்பட முடியாத முக்கிய இடத்தை ஏற்றிருக்கும் ஒரு தெய்வம் என்பது வியப்பளிக்கும் உண்மை.

குறிப்பு: இலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றி 2019ஆம் ஆண்டு நான் இலங்கை சென்றிருந்தபோது பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களை ஒரு பேட்டி கண்டிருந்தேன்.  அதனை ஆர்வமுள்ளோர் கேட்டு மேலும் தெளிவு பெறலாம். https://youtu.be/OnnKg427H3Q


கண்ணகி வழிபாடு சிங்களப் பண்பாட்டில் பின்னிப்பிணைந்து இருப்பது போல முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஒரு வழிபாடாக அமைகிறது முருகன் வழிபாடு. தமிழர்கள் அறுபடை வீடுகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதிர்காமக் கந்தன் சிங்களவர்களது 'கதரகமத் தெய்யோ' என்று வழிபடும் ஒரு கடவுளாகவும் அமைகிறார். சிங்களப் பண்பாட்டில் முருகன் வழிபாடு - தமிழ் மரபின் தாக்கமும் சிங்கள மரபின் விரிவாக்கமும், என்ற பொருளில் இந்த நூலின் ஏழாவது அத்தியாயம் அமைகிறது.

இலங்கையின் மூன்று பூர்வகுடிகள் முருகனைத் தங்களது கடவுளாகச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
1. சிங்களப் பௌத்தர்கள் 
2. இலங்கைத் தமிழர்கள்
3. இலங்கை வேடர்கள்

நூலின் இந்த இயலில் சில முக்கிய நூல்கள் ஆய்வுக்குப் பயன்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு B.Paffenberger , எழுதிய The Kataragama pilgrimage Hindu Buddha's interaction and its significance in Sri Lanka polyethnic social system, 1979, என் டி ராகவன் ஆய்வில் வெளிவந்த India in Ceylonese history: Society and culture 1969 மற்றும் பேராசிரியர் என் சண்முகலிங்கன் எழுதிய கதிர்காம முருகன் சமூக மானிடவியல் தரிசனம் 2014, பேராசிரியர் டெஸ்மணட் மல்லிகாரச்சி எழுதிய சிங்களப் பௌத்த வர்த்தகர்களின் உடல்மொழி 2003, ஆகிய நூல்களை நூலாசிரியர் பல இடங்களில் சான்று குறிப்பிடுகின்றார்.

இவர்கள் மட்டுமன்றி இலங்கை இஸ்லாமியர்களும் கதிர்காம கடவுளை வணங்குகின்றனர் என்பதும் ஒரு கூடுதல் தகவலாக அமைகிறது.

இலங்கைத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் ஊவா மாகாணத்தின் புத்தளம் பகுதியில் இருக்கின்ற 'தியனகம' என்ற பெயர் கொண்ட காட்டின் நடுவில் அமைந்திருக்கின்றது கதிர்காமம். சிங்களப் பௌத்தர்களைப் பொருத்தவரை,
1. சிங்களப் பௌத்தர்களது தொன்மையான குடியேற்றங்களில் ஒன்று கதிர்காமம்.
2. அங்கிருக்கும் அரசமரம் தேவநம்பியதீசன் அநுராதபுரத்திலிருந்த  அரசமரத்திலிருந்து கொண்டுவந்து நட்ட கிளை என மகாவம்சம் குறிப்பிடுகிறது.
3. மரபுவழி சிங்கள இலக்கியமான `கந்த உபாத` எனும் இலக்கியம் தமிழ் அரசனான எல்லாளனை வெற்றி கொண்டதால் நேர்த்திக்கடனாக துட்டகைமுனு என்ற அரசன் கட்டியது இந்த ஆலயம் என்கிறது.
4. மகாசேனன் என்ற சிங்கள மன்னனின் மறுபிறப்பு கதிர்காமக் கந்தன் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இதன் அடிப்படையை வைத்து இன்று வரை பௌத்தமத ஆலய பரிபாலனச் சட்டத்தின் கீழ் கதிர்காமம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சிங்களவர் வருகைக்கு முன்னரே கதிர்காம முருகன் தமிழர்களின் கடவுளாகக் கொள்ளப்படுகின்றார். துட்டகைமுனு அதனை ஒரு சிங்களவர் ஆலயமாக மாற்றி அமைத்திருக்கக் கூடும் என்றே தமிழர்கள  கருதுகின்றனர்.  குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளான திருமுருகனின் கோயில் இது என்றும், சமஸ்கிருதத் தொடர்பின்றி மக்கள் வழிபாடு செய்யும் வகையில் இந்தக் கோயில் அமைந்திருக்கின்றது என்பதும் தொல்காப்பியம் குறிக்கும் `கந்தழி` வழிபாடு இது என்றும் குறிப்பிடலாம் என மு.கணபதிப்பிள்ளை (1967) குறிப்பிடுவது இங்கு ஒப்பிட வேண்டியிருக்கிறது.



வேடர்களைப் பொருத்தவரை,  வள்ளி தமது தமக்கையாகவும் கந்தன் தனது மைத்துனனாகவும் பலர் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். அக்காவை மணமுடித்த கந்தனுக்கு வருடந்தோறும் எடுக்கப்படும் பெருவிழாவில் கலந்து கொள்வது நமது கடமை என வேடர்கள் ஒவ்வொருவரும் நம்புகின்றார்கள். வேடர் குலத் தலைவன் மகள் வள்ளியைக் களவு மணம் புரிந்த இடமாக கதிர்காமத்தை இலங்கை வேடர் சமூகம் நம்புகின்றது. சூரனைத் தாக்கிக் கொன்ற பின்னர் வள்ளியை மணம் புரிய வந்த இடம் இதுவே என நம்புகின்றார்கள்.  கதிர்காமத்திற்கு மேற்கே 3 மைல் தொலைவில் மாணிக்க கங்கை நதிக்கரையில் செல்லக்கதிர்காமம் அமைந்திருக்கின்றது. இங்கு ஒரு பிள்ளையார் கோயிலும் இருக்கின்றது.  முருகனின் வேண்டுகோளின்படி யானையாக பிள்ளையார் தோன்றி வள்ளி திருமணத்திற்கு உதவினார் என்ற புராண கதையும் வேடர்கள் வழக்கில் இருக்கின்றது.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வியலில் தமிழர் கடவுளாகவே கதிர்காம கடவுள் கருதப்படுகின்றார். கதிர்காமத்தில் மிக நீண்ட காலமாகவே முருகனுக்கு நைவேத்தியமாக மான் இறைச்சி படைக்கப்பட்டு வந்தது. 1960 களுக்குப் பிறகு கதிர்காமத்தைப் புனித நகரமாக இலங்கை அரசு பிரகடனப்படுத்திய பிறகு மான் இறைச்சி படைப்பது நிறுத்தப்பட்டது என நூலாசிரியர் கூறுவது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது. ஆக மான் இறைச்சி முருகக் கடவுளுக்குப் படைத்த பண்பாட்டுக் கூறுகளைக் காணும்போது பழங்குடி சமூகத்தின் வழிபாட்டு மரபை உணர்த்துவதாக அமைகிறது.

கதிர்காமத்தைப் போலவே கண்டியிலும் இருக்கும் கதரகமா கோயில் இலங்கை சிங்களவர் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறும் ஒரு கோயிலாக அமைகிறது. அதிலும் குறிப்பாக சிங்கள வணிகர்கள் இந்த முருகன் கோயிலை தங்களது வழிபாட்டின் முக்கிய அங்கமாக கருதுகின்றனர். சிங்கள வணிகர்கள் ஒவ்வொரு நாளும் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை தங்கள் மரபாகவும் கொண்டிருக்கின்றனர். சிங்கள மக்களின் முருக வழிபாட்டு முறையில் உடலில் சிறிய இரும்பு முட்கள் மற்றும் ஆணிகளைத் துளைத்து வேண்டுதல் வழிபாடு செய்வது வழக்கில் இருப்பதை ஓபயசேகர (1988) அவர்களது ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. கதிர்காமத்தில் தூக்குக் காவடி எடுக்கும் இஸ்லாமியர்களும் இத்தகைய வழிபாட்டில் இணைந்து கொள்கின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை கதிர்காமம் மற்றும் கண்டி கதிரகமத் தெய்யோ என்ற வடிவில் முருகவழிபாடு தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியாகத் தொடர்கிறது.

இலங்கை சிங்களவர் வரலாறு பற்றி நீண்டகாலமாகவே வட இந்தியத் தொடர்புகளை மட்டுமே உறுதிசெய்யும் வரலாற்றுப் பின்னணி செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம் ஆகிய புராணக்கதைகளை மூல பாலி மொழியிலிருந்து மொழிபெயர்த்த ஜெர்மானியரான வில்கெம் கெய்கர் மற்றும் மாக்ஸ்முல்லர் போன்றவர்களின் சிங்களவர்கள் வட இந்தியப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்ற வகையிலான கருத்தாக்கமும் ஒரு காரணம். இது மட்டுமன்றி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் பரணவிதான எழுதிய இலங்கை வரலாறு, அதாவது இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் சிங்கள மன்னன் துட்டகாமினிக்கும் இடையில் நடைபெற்ற போர் பற்றிய செய்திகள் இன்றுள்ள தலைமுறையினர் வரை செல்வாக்கு செலுத்தி வருகிறது என்று கூறுகிறார் நூலாசிரியர். 

மேற்குறிப்பிட்ட இந்தக் கருத்தாக்கங்கள் இலங்கையிலேயே நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வரும் தமிழர் இலங்கைக்கு  அன்னியர் என்ற பார்வையை முன்வைத்து துட்டகாமினி தொடுத்த போர் சிங்கள மக்களுக்கான ஒரு விடுதலைப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது.


இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரத்தில் ஆட்சி செய்தவன் தமிழ் மன்னன் எல்லாளன். இவனைப் பற்றி பௌத்த பிக்கு மகாநாமதேரர்  தனது நூலான மஹாவங்ச என்ற நூலில் விளக்கியிருந்தாலும் அதற்கு விளக்கம் கூறும் சிங்களத் தேசியவாத வரலாற்றாசிரியர்கள் இதற்குத் தவறான விளக்கங்களைக் கூற முற்பட்டனர் என்பதும் இது ஒரு பக்கச் சார்பாக அமைந்துவிட்டது என்றும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

சிங்கள மொழி வளர்ச்சி பெற்ற விதத்தை நான்கு கட்டங்களாக அறிஞர்கள் பிரிக்கின்றனர்.
1. ஸ்ரீலங்கா பிராகிருதம் இது பொ.ஆ.மு. 400க்கும் முந்தியது
2. தொடக்கக்காலச் சிங்களம் பொ.ஆ 400 இல் இருந்து 700 வரை
3. இடைக்காலச் சிங்களம் பொ.ஆ 700 இல் இருந்து 1200 வரை
4. தற்காலச் சிங்களம் பொ.ஆ 1200 முதல்

இன்றைய நிலையில் இலங்கையில் ஏழு முக்கிய மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
1. சிங்களம் 2. தமிழ் 3. திவேகி (மாலத்தீவில் பேசப்படும் மொழி) 4. அரபு 5. கிரியோல -  மலேசியாவிலிருந்து வந்து சேர்ந்த மலாய் மக்கள் பேசும் பல கலப்புகள் கொண்ட ஒரு மொழி 6. போர்த்துகீசியமும் சிங்களமும் கலந்த வகையில் போர்த்துக்கீசிய வம்சாவழியினர் பேசும் ஒரு கலப்பு மொழி 7. சாமுண்டி வேடர்கள் பேசும் ரோடியா மொழி.

நூலாசிரியர் நூலில் குறிப்பிடும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் காணும் போது சிங்கள மொழியின் வளர்ச்சியைக் கீழ்க்காணும் வகையில் காணலாம்.
1. இலங்கை பூர்வ குடியினர் வழக்கில் இருந்த 'எளு' என்பது சிங்கள மொழியில் ஆரம்பக்கால மொழியாக இருந்தது.
2. புத்த மதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பொ.ஆ.மு 3ம் நூற்றாண்டில் பவுத்தர்கள் வருகையால் மகதி மொழி இலங்கைக்கு வந்தது. இது பாலி மொழியாக வளர்ச்சி பெற்றது.
3. இலங்கையில் கலையும் அறிவியலும் வளரத் தொடங்கிய காலகட்டத்தில் சமஸ்கிருதம் அறிமுகமானது.
4. சமஸ்கிருதம் கலந்த மொழியில் இருந்த மகாயான அல்லது வைத்தூலிய பௌத்த மதப் பிரிவு இலக்கியங்கள் வழியாகவும் சமஸ்கிருதம் பரவியது. இதன் காலம் பொ.ஆ 3ம் நூற்றாண்டு.
5. அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவின் இன்றைய கேரள  (அன்றைய தமிழகம்) பகுதியிலிருந்து அரசியல் மாற்றங்களின் காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறிய பௌத்தர்களும் சமணர்களும் இலங்கைத் தீவிற்கு வந்த நிகழ்வும் நடைபெற்றது. இக்காலகட்டத்தில் சிங்களத்தில் சமஸ்கிருதப் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.
6. சிங்கள இலக்கிய உருவாக்கம் நடைபெற்ற காலம் பொ.ஆ. 1250.
7. சிங்கள மொழி இலக்கணமும் தொடரிலும் திராவிடம் சார்ந்திருக்கின்றன.
8. கால ஓட்டத்தில் மேலும் பல ஐரோப்பிய மொழிகளையும் உள்வாங்கிய வகையில் இக்காலச் சிங்கள மொழி உள்ளது
சிங்கள இலக்கியங்கள் எனக் காணும் போது அதில் பழமையானது 'சித்தத் சங்கரவா'  எனும் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். 

இந்த நூல் இரண்டு வகையான எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டுள்ளது. 
1. எளு வரி வடிவம் (பாலி மற்றும் சமஸ்கிருத மொழிகள் கலக்காதவை) 
2. மிஸ்ர என்னும் பாலி மற்றும் சமஸ்கிருத ஒலிகள் கலந்த கலப்பு வடிவம். 
இந்த நூல் வீரசோழியத்தைத் தழுவி எழுதப்பட்டது. இதனை எழுதியவர் சங்கராஜா அனோமதச்சி. இன்றைய சிங்கள மொழியின் மாற்றங்களிலும் வளர்ச்சியிலும் இலங்கையில் பௌத்த மத அறிமுகம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது கண்கூடு.

சாதாரணமாகப் பார்த்தாலே சிங்கள மொழியின் எழுத்து வரிவடிவம் தமிழ் வட்டெழுத்து வகையில் அமைந்திருப்பதைக் காணலாம். இன்றைய மலையாள எழுத்துக்கு மிக நெருக்கமான வகையில் இந்த எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. சிங்கள மொழி உருவான சமயத்தில் பொறிக்கப்பட்ட சிகிரியா கல்வெட்டுக்களைக் காணும்போது அதில் பல இடங்களில் தமிழ் மலையாள சிங்கள எழுத்துக்களும் கலந்திருப்பதைக் காண்கின்றோம்.  

சிங்களப் பண்பாடு மொழி ஆகிய இரண்டுமே திராவிடமொழி மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்து அமைந்திருக்கின்றன. புராணங்களைச் சார்ந்த கருத்தாக்கங்களை விலக்கிவிட்டு, மொழியியல், மரபணு மற்றும் மானுடவியல் பார்வையில் ஆய்வுகளைத் தனிச்சார்பற்ற நிலையில் மேற்கொள்ளும்போது தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்த முடியும். 

சிங்கள வாழ்வியல் மொழி பண்பாடு என விரிவான பல்வேறு தகவல்களை வழங்கும் சிறந்த ஓர் ஆய்வு நூலாக இந்நூல் அமைகிறது. வரலாற்று ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும். 

-சுபா



No comments:

Post a Comment