Saturday, May 1, 2021

தொல்காப்பியம் காட்டும் பண்டைய போர்களும், போர் முழக்கம் செய்யும் தொழிலாளர்களும்

தொல்காப்பியம் காட்டும் பண்டைய போர்களும், போர் முழக்கம் செய்யும் தொழிலாளர்களும் 

——    ம. ஆச்சின்


முன்னுரை :
இயற்கையின் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்றவாறே ஒவ்வொரு நிலத்துள் வாழும் உயிரினங்களின் செயல்கள் யாவும் அமைகின்றன. அது மட்டுமின்றி, புற உலகினில் தம்மைத் தகவமைத்துக் கொண்டு வாழும் உயிரினங்கள் பிற உயிரினங்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சூழலையும் முதன்மை அம்சமாய் பெற்றே உயிர்களின் வாழ்வு அமைகின்றது. இவ்வுயிரினங்களிலேயே மனிதன் தனித்த வளர்ச்சியை எய்தினான். மனிதனைப் பொறுத்தமட்டில் வேட்டையாடுதலில் தொடங்கிய பயணம் கால்நடை வளர்ப்பு, சிறு சாகுபடியெனப் புத்துயிர் பெற்று, உற்பத்திக் கருவிகளை உருவாக்கி, நிலையானதொரு வாழ்வைத் தொடங்கினான் எனலாம். எனின், இஃது பெரும் போராட்டத்தின் விளைவேயாகும்.

இனக்குழு வாழ்வில் வேட்டையில் கவனம் செலுத்தியவன், உணவுக்கான பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. உணவுப் பற்றாக்குறையே அதன் முதன்மை காரணி என்பர் சமூகவியலாளர். அதன் பின்னர் தனிநபருக்குரிய சொத்தாய் மாற்றம் பெற்ற காலம் தான் போராட்டத்தின் விளைவுகளை எல்லையில்லாது தோற்றுவித்தது. ஒரு குழு பிற குழுவை அடிமைப்படுத்துவதும், ஒரு குழுவிலுள்ளோரையே அக்குழுவிலுள்ள சிலர் அடிமைப்படுத்தியும், உற்பத்தி செய்யவும், ஏவல் தொழில் செய்யவும் நிர்ப்பந்தப்படுத்தியும் போரிட்டு வெற்றி பெற்று வரவும் எனப் பலவகையில் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

குறிப்பாக அடிமைச் சமூகம், மன்னர் சமூகத்தில் மேற்கூறிய காரணங்களே முதன்மை காரணியாய் இருந்தன. போர்கள் அடிப்படையில் செல்வப் பெருக்கம், எல்லையை விரிவுபடுத்துதல், மண்ணாசை, வலிமை கருதுதல், யார் பெரியவன் எனும் போக்கு, ஒரு குடும்பத்திற்குள்ளான முரண் ஆகியன அடிப்படைக் காரணியாய் அமைந்திருக்கின்றன என்பர். இவற்றுள், கி.மு. இறுதி - கி.பி. தொடக்கக் காலத்தில் நிகழ்ந்த போர் முறைகளையும், அதன் பின்புலங்களையும் சுருக்கமாக நோக்கி ஆராயலாம்.

தொல்காப்பியம் காட்டும் பண்டைய போர்கள்:
war.JPG
தமிழுலகில் முதலிலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் பண்டைப் போர் பற்றி பல கருத்துக்கள் காணப்படுகிறது. ஒவ்வொரு நிலப்பகுதிக்கு ஏற்பவே போர்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை ‘புறத்திணையியல்’ எனும் இயலின் வழியாக புரிந்துகொள்ள முடிகின்றது.

உதாரணமாக; 
1. மலையும், மலை சார்ந்த பகுதிகளிலும் (குறிஞ்சி) ஆநிரைகளை கவர்தல், அதனை மீட்டலுக்குமான போர்கள். 
2. காடும், காட்டைச் சார்ந்த பகுதிகளிலும் (முல்லை) தன்மை மதியாத வேந்தனை எதிர்த்தும், காட்டு வளம் மீது கொண்ட ஆசையின் பொருளாலும் நிகழ்ந்த போர்கள். 
3. வயலும், வயலைச் சார்ந்த பகுதிகளிலும் (மருதம்) எயிலை முற்றுகையிட்டு நாட்டைக் கைப்பற்றுதலும், எயிலைக் காத்து தம் நாட்டை பாதுகாத்தலுக்குமான போர்கள். 
4. கடல், கடல்சார்ந்த மணற்பகுதிகளில் (நெய்தல்) வலிமை குறித்த போர்கள் - என நான்கு வகைப் போர்கள் நிகழ்ந்ததாக தொல்காப்பியத்தின் புறத்திணையியலில் மிகத் தெளிவாக தொல்காப்பியர் எடுத்துரைத்துள்ளார்.

இவை அடிப்படையில் ஆநிரை கவர்தல் மீட்டலுக்குமான போர்கள் - அந்நிலப்பகுதியில் ஆநிரைகளே செல்வமாகக் கருதப்பட்டன.  
மண்ணாசைப் போர்கள் - காடும் அதன் செழிப்பும் முக்கிய காரணமாயிருக்கலாம்.  
எயில் முற்றுகை பாதுகாத்தல் - நாட்டின் செல்வமும், எயிலைக் கைப்பற்றினால் நாட்டையே கைப்பற்றியதாக கருதியிருக்கலாம்.  
வலிமைப் போர்கள் - உற்பத்தி பெருக்கமும், பண்டமாற்றும் யார் அப்பகுதியில் ஆள்வது என வலிமையை நிரூபிக்க சேர, சோழ, பாண்டியர் என பலரும் போரிட்டு இருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

மேற்கூறியவை தொல்காப்பிய இலக்கணம் பதிவு செய்த போர் முறைகளாகும். இப்போர் முறையின் அடிப்படையிலேயே சங்க இலக்கியத்துள் பல பாடல்கள் காணப்படுகின்றன. பண்டைய சமூகச் சூழலையும், போர் பற்றியும், தமிழகத்தை ஆண்ட மன்னர் பற்றியும், வரலாற்றுக் கருவூலமாம்; புறநானூறு, பதிற்றுப்பத்து மற்றும் அகப்பாடல்கள் வழியாகவும், தொல்பொருள் ஆராய்ச்சிகள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள், மெய்கீர்த்திகள், நாணயங்கள், பயணக் குறிப்புகள், ஆவணங்கள் என இன்ன பலவற்றிலும் பண்டைய சமூகத்தில் போர், அதன் முறைகள் பலவற்றையும் காண முடியும்.

சங்க காலம் சுமார் கி.மு. 400 – கி.பி. 200:
உற்பத்திக் கருவிகளுக்கு ஏற்பவே உற்பத்தி உறவுகள் அமைகின்றன. உற்பத்தி உறவுகளுக்கு ஏற்பவே மக்களின் வாழ்வு அமைந்தன. குறிப்பாக மனிதகுலம் கற்களும், கம்புகளையுமே முதன்மை ஆயுதமாய் பயன்படுத்திய காலம் மாறி இரும்பால் பல உற்பத்தி கருவிகளையும், ஆயுதங்களையும் பயன்படுத்திய காலம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. சங்க நூல்களை ஆராய்ந்து, பல்வகைப்பட்ட ஆயுதங்களை பண்டைய காலத்தில் மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக,

“அடார், அம்பறாத்தூணி, அம்பு, அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளகடி கருவி (தட்டை), குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை யெஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேல், வேலுறை” (பக். 82 - புறநானூறு, கழகம் உரை) போன்றவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

போர் முழக்கம் செய்யும் தொழிலாளர்:
போர் செய்கின்ற காலத்தில் “போர் முழக்கங்கள் முழங்க குறுந்தடியால் வேகமாக அடித்துக் கொண்டு செல்லும் தொழிலாளர்கள். அவர்கள் அடிக்கும் போது தோள் பகுதியே புண்பட்டு போய்விடும். அவர்கள் போர்க்களத்தின் முன்னணியிலே நிற்பர். இதனை, “போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து இறாஅ லியரோ பெரும! நின் தானை ஃ இன்னிசை இமிழ் முரசியம்பக் கடிப்பி கூஉப் ஃ புண்தோள் ஆடவர் போர்முகத்து இறுப்பக காய்ந்த கரந்தை மாக்கொடி விளைவயல்” (பா. 40, ப.பத்து) என்று உரைக்கும்.

சங்ககாலத்தில் வீடுகள்:
war2.JPG
'குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்'  என்ற கூற்றுக்கு ஏற்பத் தொடக்கத்தில் மனிதன் மரக்கிளைகளையும் மலைக் குகைகளையும் தன் வாழிடமாகக்கொண்டிருந்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொடிய விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவற்றில் வாழ்ந்த மனிதன், மழை, புயல், பனி முதலிய இயற்கை உற்பாதங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபாட்டுடலானான். இலை, தழை, புல் முதலியவற்றாலும் கழிகளாலும் குடிசைகள் அமைத்து வாழக்கற்றுக் கொண்டான். அவற்றை, இலைவேய் குரம்பை, புல்வேய் குரம்பை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஈந்தின் இலைகளால் மனிதன் அமைத்து வாழ்ந்த ‘எய்ப்புறக் குரம்பை” குறித்தும் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த எயினர்களும் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த இடையர்களும் குறிஞ்சி நிலத்திலும், முல்லை நிலத்திலும் அரண்களும் குடியிருப்புகளும் அமைத்து வாழ்ந்தது குறித்தும் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகள் முன்னர்க் கூறப்பட்டுள்ளன.
            
இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வானது, சமூகமாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாறிய நிலையில், தாய் வழிச்சமூகம் படிப்படியாக மாறி தந்தை வழிச் சமூகம் தோன்றியது. ஆணாதிக்கம் தலையெடுத்தது: பெண் அடிமையாக்கப்பட்டாள். தந்தை வழிச்சமூகத்தின் தலைவர்களாக இருந்த ஆண்கள் அடிமைச் சமூகத்தில் ஆண்டைகள் ஆயினர். உழைக்கும் மக்களும் பெண்களும் அடிமையாக்கப்பட்டனர். அடிமையாக்கப்பட்டது. தெரியாமலே அடிமையாயினர். அவர்களின் உழைப்பால் பெறப்பட்ட மிகுவிளைச்சலும் உபரி உற்பத்தியும் அவர்களைச் சென்றடையவில்லை. ஆண்டைகளால் உறிஞ்சப்பட்டது. ஆண்டைகள் தம் ஆடம்பரம் மிக்க சுயநலமான சுகபோக வாழ்க்கைக்காக அவற்றைக் கவர்ந்து கொண்டனர். அடிமைச் சமூகத்தில் உற்பத்தி பெருகி உபரி நிலை ஏற்பட்டிருந்தும் கூட உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை. தாழ்நிலையிலேயே இருந்தது. வேட்டைச் சமூகமாக வாழ்ந்த கால கட்டத்தில் இருந்தது போன்ற பற்றாக்குறையான நிலையே அவர்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நீடித்தது. உழைக்கும் மக்களது உழைப்பின் பயன் ஆண்டைகளால் சுரண்டப்பட்டதே இதற்குக் காரணம் ஆகும்.

இரும்பு கண்டுபிடிக்கப்பட்டதன் பயனாகத் தொழில்கள் வளர்ந்தன. கொற்றொழில், தச்சுத்தொழில், மண் பாண்டத்தொழில், நெசவு முதலிய தொழில்கள் வளர்ந்தன. ஆனால் இத்தொழில்களைச் செய்த தொழிலாளர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.கைத்தொழில் வளர்ச்சியால் கட்டடக்கலை பெரிதும் வளர்ந்தது. ஆண்டைகள் மற்றும் அரசர்களின் சுகபோக வாழ்க்கைக்காக வசதி மிக்க வளமனைகள் பல கட்டப்பட்டன. அவர்களின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளும் கொத்தளங்களும் அமைக்கப்பட்டன. கோட்டைகளைச் சூழ ஆழம்மிக்க அகழிகள் அகழப்பட்டன. அவற்றின் பெருமையும் சிறப்பும் குறித்துச் சங்க இலக்கியங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் கூறுகின்றன. மனைகள் மற்றும் மதில்களின் உயர்ச்சி குறித்து,

‘விண்டோய்மாடத்து விளங்கு சுவருடுத்த நன்னகர் (விளங்குகின்ற மதில் சூழ்ந்த விண்ணைத்தீண்டும் மாடங்களையுடைய நகர்) என்றும்.
‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’ (சுட்ட செங்கல்லால் செய்யப்பட்ட உயர்ந்த புறப்படை வீட்டைச் சேர்ந்த மதில் ) என்றும்
‘இடஞ்சிறந்துயரிய எழுநிலை மாடம்’ (தனக்குள்ள இடமெல்லாம் பொன்னாலும் மணியாலும் சிறப்புப் பெற்று உயர்ந்த ஏழுநிலைகளையுடைய மாடம்) என்றும் ‘மலைபுரை மாடம்’ என்றும் அவை பேசுகின்றன.

‘வான மூன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயாமாடம்’
(ஆகாயத்துக்கு முட்டுக்காலாக ஊன்றி வைத்த ஒரு பற்றுக் கோடு போல விண்ணைத் தீண்டும்படி ஓங்கினதும் தன்னிடத்துச் சார்த்திய ஏணியால் ஏறுதற்கரிய தலைமையினையுடையதும் கற்றை முதலியவற்றால் வேயாது தட்டோடிட்டுச் சாந்து வாரப்பட்டதுமான மாடம் ) என்று நூல்கள் புகழ்கின்றன.

அரசர்கள் அமைத்த அகழிகள் கோட்டைகள் மற்றும் கொத்தளங்கள் குறித்து,

‘மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண் போர்க் கதவின்
மழையாடு மலையின் நிவந்த மாட மொடு
வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து வான மூழ்கிச்
சில் காற்றிசைக்கும் பல் புழை நல்லில்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெரு’

(மண்ணுள்ள அளவும் ஆழ்ந்து நீல மணி போலும் நீரையுடைய கிடங்கினையும் தேவருலகிலே செல்லும்படி உயர்ந்த பலகற்படைகளையுடைய மதிலினையும் பழைய தாகிய வலி நிலைபெற்ற வாயிலில் தெய்வத்தையுடைத்தாகிய நிலையினையும் நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய செருவினையுடைய கதவினையும் மேகம் உலாவும் மலை போல் ஓங்கினமாடத்தோடே, வைiயாறு இடைவிடாது ஓடுமாறு போன்ற மாந்தரும் மாவும் வழங்குகின்ற வாயில் என்றும் ( மண்டபம் , கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என்றாற் போலக் கூறுபாடாகிய பெயர்களைத்தாம் பெறும்படி உயர்ந்து, தேவருலகிலே சென்று தென்றற்காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நன்றாகிய அகங்கள் ) என்றும் மதுரைக்காஞ்சி ( 531 – 59 ) கூறுகிறது.

தச்சர் முதலிய தொழில் வல்லார் அம்மனைகளை வகுத்தமைத்தது குறித்து. "நூலறிபுலவர் நுண்ணிதின் கயிறிட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர்மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇய ஓங்குநிலை வரைப்பு”  - நெடுநல்வாடை : 74-77

(சிற்பநூல் அறிந்த தச்சர் கூடுதலாக நூலை நேரே பிடித்து திசைகளைக் குறித்துக் கொண்டு அத்திசைகளில் நிற்கும் தெய்வங்களையும் குறைவறப்பார்த்து பெரிய பெயரினையுடைய அரசர்க் கொப்பமனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் கூறுபடுத்தி, இவ்விடங்களையெல்லாம் சேரவளைத்து உயர்ந்த மதிலின் வாயில்) என்று, அடிமைகளான தொழிலாளர்கள் அவற்றை ஆண்டைகளுக்காகச் சிறப்புற அமைத்தது குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

மண்ணைக் குழைத்து மதில் எழுப்பி ஈந்தின் இலையும் தினைத் தாளும் வரகு வைக்கோலும் கொண்டு கூரை வேய்ந்த நிலை மாறியது. சுட்ட செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு மதில்களும் மனைகளும் கட்டப்பட்டன. மாடங்கள் தட்டோடிட்டுச் சாந்துவாரப்பட்டன. இதனை’ செம்பியன்றன்ன செஞ்சுவர்” என்று சங்க நூல்கள் கூறுகின்றன. அம்மனைகளின் அகற்சிக்கும் உயர்ச்சிக்கும் சான்றளிக்கின்றன.

இவ்வாறு, அரசரும் ஆண்டைகளுமான சுரண்டும் வர்க்கத்தாரின் ஆடம்பரமான சுகபோகத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் வானுற உயர்ந்த வளமனைகள் பல வசதிகளோடு அழகுற அமைக்கப்பட்டன. இவற்றை அமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அடிமைகளின் உழைப்பு அளவற்றது. ஆண்டைகளுக்காகவும் அரசர்களுக்காகவும் அரண்மனைகளும் வளமனைகளும் அமைத்துக் கொடுத்த அடிமைகளான உழைப்பாளிகள் ஓட்டையும் பொத்தலுமான குடிசைகளில் ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிகளில் ஒதுங்கி வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்கள் வாழும் சேரிகளைப்பாடுவதும் கூடத்தீட்டு என்று புலவர்கள் கருதினர் என்பதையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. அடிமைகளின் வாழ்வில் அன்று தொடங்கிய இந்த அவலம் இன்றும் தொடர்வது மனித சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஆகும். 

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்:
வல்லாண்மை மிக்க தாவரங்கள், வல்லாண்மையில்லாத தாவரங்களை அழித்து வாழும். “வல்லாண்மையே வாழும்” என்ற நியதி தாவரங்களுக்கும் உண்டு! இன்றைய சமுதாயம் காடு போலத்தான் விளங்குகின்றது! பழத்தோட்டம் போல் அல்ல!

வைத்த பழத்தோட்டத்தில் ஒழுங்கு இருக்கும்! எல்லாம் வாழும்! அழிப்பு இல்லை! பழத்தோட்டம் போன்ற சமுதாய அமைப்பே, மறுமலர்ச்சி இலக்கியப் படைப்பாளிகளின் நோக்கம்!

மானிட சமுதாயம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன! மானிட சாதியின் வரலாறு, வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டே யிருக்கிறது! இனிமேலும் ஓடும்!

இந்த வரலாற்று ஆற்றில் அருமையான தெள்ளிய நீரும், சில சமயங்களில் செங்குருதியும், சில சமயங்களில் சாக்கடையும் ஓடும்! ஏன்? சில சமயங்களில் ஓடும் சாக்கடையில் குப்பையும் கூளங்களும் சேரும்பொழுது ஓடமுடியாமல் தேங்கி நிற்பதும் உண்டு இந்த மாதிரியான சூழ்நிலைகளில் வரலாற்றை, அதன் தேக்கத் தன்மை அறிந்து மாற்றி இயக்குவதை “மறுமலர்ச்சி” என்று வரலாற்றாசிரியர்கள் புகழ்வர்.

“கால மோவிரை கின்ற தோர்சிறு
கணமும் மீளுமோ? ஏழை இப்பெரும்
ஞாலம் மீதுறை நாட்களோ, சில!
நான் தெளிந்திட வேண்டும் உண்மைகள்
சால வுள்ளன! ஓய்வ றிந்திலன்
சலிப்பி றந்துழைக் கின்ற வேளையில்
ஓலம் இட்டெனை உணவு தேடென
உரற்று வாய்வயி றே!இஃ தென்தொழில்?”
(குலோத்துங்கன் கவிதைகள் பக். 30)

காலத்தைக் காத்துப் பயன்படுத்துவோம்! வாரீர்! காலத்தை முறையாகப் பயன்படுத்துவோர் வாழும் நாடு வளரும்! 

மறுமலர்ச்சி என்பது புதியன வேட்டல்! பழைய தலைமுறையைச் சேர்ந்தவன் குறிசொல்லும் கோணங்கி! பாரதி மறுமலர்ச்சிக் கவிதையில் முடிசூடா மன்னன்! ஏன். அவன் தன் வட்டங்களையும்கூடத் தாக்கியவன்! புரட்சிச் சிந்தனையாளன்! பாரதி, புதிய கோணங்கியாக நின்று, நமது நாட்டின் மறுமலர்ச்சிக்குக் கட்டியம் கூறி வரவேற்கின்றான்!

முடிவுரை:
ஆம்! உலகத்தை இயற்றும் உன்னதமான ஆற்றல் உழைப்பிற்கு உண்டு. உழைப்புக்கு ஈடாக உலகத்தில் பிறிதொன்றில்லை! உழைப்பே உலக வரலாற்றில் உயிர்ப்பு! “கைவருந்தி உழைப்பவர் தெய்வம்” என்றான் பாரதி எங்கே உழைப்பிருக்கிறதோ, அங்கே மனத்திற்கு ஊசலாட்டமில்லை!

உழைப்புள்ள இடத்தில் மனம் தூய்மையாக இருக்கும். உழைப்பாளர் மனம், இறைவனின் சந்நிதியாகும். உழைப்பாளிகள் வாழ்வர்; வாழ்வித்து வாழ்வர், உழைப்பாளிகள் யாரொருவருக்கும் தீங்கு செய்யார். இக் கருத்துக்களை அழகுற விளக்கும் பாடல் ஒன்று இதோ;

“உழைக்கின்ற நோக்கம் உறுதியாயிட்டா 
கெடுக்குற நோக்கம் வளராது  - மனம் 
கீழும் மேலும் புரளாது”

இது பட்டுக்கோட்டையின் பாடல், உழைப்பு ஆற்றல் வாய்ந்தது. நல்ல ஆற்றல் வாய்ந்த உழைப்பாளி வாய்ப்புக்களை எதிர்பார்த்துக் காத்திருக்க மாட்டான். அவனே வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்வான்.

உழைக்கும் உள்ளம் பெற்ற ஒருவன் தனக்கு வாய்த்திருக்கிற கருவிகள், களங்கள், வசதிகள் ஆகியவை பற்றிக்கூடக் கவலைப்பட மாட்டான்! “பொறியின்மை யார்க்கும் பழியன்று” என்ற வள்ளுவம், இவன் வாழ்க்கையின் விளக்கம். ஏன், உடலில் ஊனம் இருந்தால்கூட அவன் அஞ்சுவதில்லை. திடமான மனத்துடன் திறமை சான்ற உழைப்பைச் சாதனமாகக் கொண்டு உலகில் வெற்றி பெறுகின்றான். 

குறிப்பு:
1.பா.பிரபு பிரிவு: தமிழ்நாடு வெளியிடப்பட்டது: 15 டிசம்பர் 2017
பண்டைய போர் முறைகளும், மரபுகளும்.
2.சங்ககாலத்தில் வீடுகள்
தாமுSat Oct 31, 2009 8:05 pm by தாமு. 2
3.சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்  (1993) 
ஆசிரியர் குன்றக்குடி அடிகளார்.


ம. ஆச்சின்
முதுகலை முதலாமாண்டு 
பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர் 




No comments:

Post a Comment