Tuesday, January 8, 2019

நவீன நாடக உருவாக்கமும் சமூகத் தேவையும்

  கோ. பழனி




தமிழில் நவீன நாடகம், வீச்சாக முன்னெடுக்கப்பட்டதென்பது நாடகப் பயிற்சிப் பட்டறைகளிலிருந்தே தொடங்குகிறது. தேசிய நாடகப்பள்ளியில் கற்று வந்த பேரா. சே. இராமானுஜம் அவர்களின் தன்முனைப்பால், காந்தி கிராமம் கலாச்சார ‘அகாதமி’ சார்பில் முதல் பயிற்சிப்பட்டறை ஜீன் 20 – 26, 1977இல் நடந்தது. இரண்டாவது, 01.11.1978 முதல் 10.01.1979 வரை 70 நாட்கள் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது. இப்பட்டறையின் இயக்குனராக இருந்தவர் காஷ்மீரத்துக்காரரான பன்ஸிகௌல். மூன்றாவதாக 1980இல் செப்டம்பர் 01ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சென்னையில் பாதல்சர்க்கார் நடத்திய பயிற்சிப் பட்டறை. இம்மூன்று பயிற்சிப் பட்டறைகளும் தமிழில் நவீன நாடக முயற்சிகள், நாடகக் குழுக்கள் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தவை. குறிப்பாக, 1978இல் மதுரை நிஜநாடக இயக்கம், சென்னை பரிக்ஷா, வீதிநாடக இயக்கம் ஆகிய குழுக்கள் உருவாயின. அதற்கும் முன்பே 1977இல் கூத்துப்பட்டறை என்கிற முழுநேர நாடக இயக்கம் ந. முத்துசாமி மற்றும் பிரக்ஞை வீராசாமி போன்றோர்களால் முன்னெடுக்கப்பட்டு செயல்படத் தொடங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1984இல் நிஜநாடக இயக்கத்தின் ‘துர்க்கிர அவலம்’ நாடகம் தென்மண்டல நாடக விழாவில் கலந்துகொண்டு பிறமொழி நாடகங்களுடன் போட்டியிட்டு தேசிய நாடக விழாவிற்குத் தேர்வு செய்யப்பெறுகையில் ‘தமிழ் நாடகம்’ என்பதான கருத்துருவின் தேவை உணரப் பட்டதாக (1988: 67) பேரா.மு.இராமசுவாமி குறிப்பிடுகிறார். மேலும் “நம் பாரம்பரியக் கலை மரபைப் பின்பற்றி ஒரு தமிழ் நாடகம் உருவாக வேண்டும். ஆனால், நாடகம் சொல்லும் கருத்து, உலகத்து மனிதனுக்கும் சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும்” (மேற்படி) என்பதான கருத்து அழுத்தம் பெற்றதாகவும் அவர் கூறுகிறார். அது மட்டுமல்லாது எழுபது, எண்பதுகள் காலகட்டமானது பல்வேறு தேசிய இனங்கள் தத்தம் இனப்பிரச்னைகளுக்காக உரத்து குரல் எழுப்பிய காலகட்டம் என்பதையும் நவீனநாடக உருவாக்கத்தோடு ஒப்புநோக்கிப் பார்க்க வேண்டும்.

ஆடல், பாடல் ஆகியன நமது மரபு வழியான நிகழ்த்துமுறையாகவும் கதை தழுவிய கூத்தே நாடகமாகவும் எண்ணப்பட்டு வந்திருக்கின்றன. மனித வாழ்க்கையில் ஆடலும் பாடலும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன என்பது மறுக்கமுடியாது. பாடல், ஆடல் மரபிலிருந்து தங்கள் கருத்தை அடுக்குமொழி, கவித்துவ மொழி வழியாக திராவிடர் இயக்க நாடகங்கள் எடுத்துப்பேசின. குறிப்பாக, இந்நாடகங்கள் சமூக உணர்வுகளையும் பகுத்தறிவு சிந்தனைகளையும் வெளிப்படுத்தின என்று கூறலாம்.

தொன்மையான, திராவிட அடுக்குமொழி நாடகப் போக்குகளிலிருந்து மாறுபட்டு, சமகாலத்திற்கான நவீன நாடகங்கள் மேற்சுட்டிய நாடகப் பயிற்சிப் பட்டறைகளிலிருந்தே உருவாக்கம் பெறுகின்றன. இவ்வாறு உருவாக்கம் பெற்ற நவீன நாடகங்கள் மேடைகளிலும் மக்கள் மத்தியிலும் நிகழ்த்தப்பட்டன. மரபு வழியான உள்ளீடுகளிலிருந்தும் நிகழ்த்து முறைகளிலிருந்தும் மாறுபட்டன. இந்தப் பின்புலத்தில் பல நவீன நாடகக்காரர்கள் உருவாகி, செயல்படத் தொடங்கினர். நான் சந்தித்த – செயலாற்றிய சில நாடகக்காரர்கள், அவர்கள் உருவாக்கிய நாடகங்கள், அவற்றின் சமூகத் தேவைகள் ஆகியவற்றை முன்வைத்து இக்கட்டுரையில் விவாதிக்க விழைகிறேன்.

பேரா. சே. இராமானுஜம்:
நவீன நாடகத்தின் பன்முகங்களை நுட்பமாக அறிந்தவர் பேரா. சே. இராமானுஜம். பள்ளி நாடகங்கள் – சிறுவர் அரங்கம் என்பதைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு தனது நாடகப் படிப்பைத் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் முடித்தவர். திருச்சூர் நாடகப் பள்ளியில் உதவி இயக்குநராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது நெறியாள்கையில் புறஞ்சேரி, வெறியாட்டம், நாற்காலிக்காரர், மௌனக்குறம், அண்டோரா, செம்பவளக்காளி, தங்கக் குடம் போன்ற பல்வேறு தமிழ் நாடகங்களும் பல மலையாள நாடகங்களும் உருவாக்கம் பெற்றுள்ளன. நாடக உருவாக்கம், பயிற்சிப் பட்டறை, நாடகப் பனுவல் உருவாக்கம், நாடக ஆய்வுகள் என தன்வாழ்நாள் முழுவதும் பயணப்பட்டவர் பேராசிரியர். இவரின் நாடகப் படைப்புகள் எளிமையும் நேர்த்தியும் கொண்டவை. தன் படைப்புகளில் வலிந்து அரசியலைப் புகுத்துவது இவரிடம் இல்லை. இருப்பினும் இவரது படைப்புகள் சமகால அரசியலையும் கலை நேர்த்தியையும் வெளிப்படுத்தி நிற்கும். இவரின் நெறியாள்கையில் உருவான நாடகங்கள் அனைத்துமே மற்ற நாடகக்காரர்களுக்குப் பாடங்களாக விளங்குபவை. அந்த வரிசையில் வெறியாட்டம், நாற்காலிக்காரர், மௌனக் குறம் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கன.

வெறியாட்டம், கி.மு. 400களில் வாழ்ந்த கிரேக்க நாடகக்காரர் யூரிபிடிசின் ‘ட்ரோஜன் விமன்’ (ட்ராய் நகரத்துப் பெண்கள்) என்கிற நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது. ட்ராய் நகரத்துப் பெண்கள் பெலெப்பொனேஷிய யுத்தத்தில் கணவர்களையும் உடைமைகளையும் இழந்த அவலத்தை மையமிட்டது இந்நாடகம்.

பேரா. இராமானுஜம் இந்நாடகத்தின் அடியிழையாக ஒப்பாரியை இணைத்து, ட்ராய் நகரத்துப் பெண்களின் அவலத்தை வெளிக்காட்டி இருப்பார். இது, அந்நாடகம் நிகழ்த்தப்பட்ட காலத்தில் பார்வையாளர்களால் ஒரு குறியீடாகப் பார்க்கப்பட்டது.

பெண் 1:     மூத்தவளே பேரரசி

முதியவளே எம்மரசி

எல்லோரும்: பெருந்தேவி நாச்சியாரே

பெண்களுமே தெண்டனிட்டோம்

பெண் 2:     சேதியென்ன சொல்லுமம்மா?

சோர்ந்தழவும் காரணமேன்?

பெண் 3:     புலம்பித் தவித்திடவும்

புதிதாகச் சேதியுண்டோ?

பெண் 4:     அழுது தவித்திடவும்

அடுத்தேதும் சேதியுண்டோ?

பெண் 5:     தோல்விக்கு நம்நாடு

தோரணங்கள் கட்டியதும்,

பெண் 6:     வீழ்ச்சிக்கே நம்நாடு

வாசல் தெளித்ததுவும்

பெண் 1:     ஓலமிட்டு அழுதிடவே

கோலமிட்டு நின்றதுவும்

எல்லோரும்: தஞ்சம் புகுந்திடவே

தரையேது மில்லாது

நெஞ்சங்கள் விம்முவதும்

நெடுமூச்சு வளர்வதுவும்

பெருந்தேவி கதையாச்சு

பெண்டிர் எங்கள் கதையாச்சு

நடந்தகதை இவையெல்லாம்

நாங்கள் அறிந்த கதை

பிறந்த துண்டோ ஏதேனும்

புலம்பலுக்குப் புதுக்கதைகள்?

(சி.அண்ணாமலை (தொ.ஆ); 2003: 245)

போர் நிகழ்வு எவ்வாறு இருக்கும் என்பதும் போரின் விளைவு என்னவாக இருக்கும் என்பதும் ஈழத்தை – ஈழத்தின் நிகழ்வுகளை உற்று நோக்கியவர்கள் நன்கு அறிவர். உலகம் முழுவதும் போரின் கோரமுகம் பலரின் கண்முன் இன்றும் வந்துபோய்க் கொண்டே இருக்கிறது. இந்தப் பின்புலத்தில் வெறியாட்டம் நாடகத்தின் ஒப்பாரி, ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளையும் அதன் விளைவுகளையும் பார்வையாளர்களின் மனவெளியில் திரையிட்டுக் காட்டியது. கி.மு. 400இல் எழுதப்பட்ட ட்ராய் நகரத்துப் பெண்கள் நாடகத்தை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழும் மக்களுக்கும் பொருந்துவதாக பேரா. சே. இராமானுஜம் வாசித்து உருவாக்கியுள்ளார்.

ந. முத்துசாமி எழுதிய நாற்காலிக்காரர் நாடகத்தை நெறியாள்கை செய்த சே. இராமானுஜம், அந்நாடகத்தில் வரும் சீட்டுக்கட்டு, கோலிக்குண்டு குழுக்களை முதல் உருவாக்கத்தில் சிறுவர்களாகவும் பிறிதொரு உருவாக்கத்தில் முதியவர்களாகவும் காட்சிப்படுத்தி இருந்தார்.

இந்நாடகத்தில் விளையாட்டு என்பது ஒரு குறியீடாகக் கொள்ளப்பட்டது. அதாவது, விளையாட்டு என்பது ஓட்டு அரசியல். நாடகத்தில் வரும் இரு குழுவினரும் விளையாடும் ஆட்டங்கள் மாறிக்கொண்டே வந்து வாழ்க, ஒழிக விளையாட்டாக மாறி, காக்கைக் குடுவையில் கல் போட்டு தண்ணீரை மேலெழுப்பும் விளையாட்டாக நகர்ந்து, அது கலவரமாக மாறி, அதனால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருந்த நாற்காலிக்காரர் பாதிக்கப்படுவது வரை அத்தனையும் குறியீடுகளாகப் பார்வையாளர்களை வந்தடைகின்றன. ஓட்டு அரசியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் வெகுமக்களாகவே இருக்கின்றனர் என்பதையும் இந்நாடகம் உணர்த்துகிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் வாழும் நமக்கு எல்லா காலத்திற்கும் பொருந்துவதாக இந்நாடகம் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பெண்களை சகஉயிரியாகப் பார்க்காத மனோநிலையும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் காலம் காலமாக இச்சமூகத்தில் இருந்து வருகிறது. வேட்டையாடி உணவு சேகரித்து, பகிர்ந்து உண்டு வாழ்ந்த – வாழும் சமூகங்களிடையே இந்தப் போக்குகள் மிகமிகக் குறைவே. குற்றாலக் குறவஞ்சியில் வரும் சிங்கன் – சிங்கி, குறவஞ்சி தெருக்கூத்தில் வரும் குறத்தி, சமகாலத்துப் பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையம், மக்கள் கூடுகின்ற இடங்கள், ஆற்றங்கரை, மலை, சந்திரமதி, திரௌபதை, சீதை ஆகியோரின் காலங்கள் எனப் பல சூழல்களை காட்சிகளாக்கி மௌனக்குறம் நாடகத்தை நெறியாள்கை செய்துள்ளார் பேரா. இராமானுஜம்.

காலம் காலமாக பெண் எவ்வாறு பார்க்கப்பட்டாள், இன்று எவ்வாறு பார்க்கப்படுகிறாள் என்பதை மலையின சிங்கன் – சிங்கி பாத்திரங்கள் வழி எடுத்துக்காட்டுகிறது மௌனக்குறம். ‘பெண்ணினத்தை பண்டமாக, அடிமையாகப் பார்க்கும் இந்தச் சமவெளிச் சமூகமே வேண்டாம்’ என்று சிங்கனும் சிங்கியும் மலைக்கே திரும்பிச் செல்வதாக இந்நாடகத்தை நிறைவு செய்கிறார் பேராசிரியர்.

மாற்றுப் பாலினரும் பெண்ணும் ஆணும் சரிநிகர் சமம் என்று எப்போது இந்தச் சமூகம் மாறுகிறதோ, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எப்போது இல்லாமல் போகிறதோ அக்காலம் வரை மௌனக்குறம் போன்ற நாடகங்களின் தேவை இருக்கவே செய்யும்.

மேலே குறிப்பிட்டதுப் போல பேரா. சே. இராமானுஜம் தம் நாடகங்களில் நேரடியாக அரசியல் பேசுவதில்லை. கலைத்துவத்தோடு நுட்பமாக அரசியலைப் பொதித்து வைப்பது அவரின் தனித்தன்மை என்பதற்கு மேலே சுட்டிய நாடகங்கள் துளி சான்று.

பேரா. மு. இராமசுவாமி:
தொடக்க கால நவீன நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு தனது ஆளுமையை வளப்படுத்தக் கொண்டவர் பேரா. மு. இராமசுவாமி (முரா). இவர் நாடகத்தின் பால் தீராப் பற்றுக் கொண்டவர். மதுரையில் 1978ஆம் ஆண்டு நிஜநாடக இயக்கம் இவரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் தொடங்கிய பிறகு ஒவ்வொரு ஆண்டும் நாடக விழாக்களை மதுரையில் நடத்திய பெருமைக்குரியவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைப் பேராசிரியராகவும் தலைவராகவும் செயலாற்றியவர். நாடக நெறியாள்கை, நடிப்பு, நாடகப் பயிற்சிப் பட்டறைகள், ஆய்வு என இவரது நாடக வெளி சார்ந்த பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வீதி நாடகத்தில் தொடங்கிய முராவின் தமிழ் நாடக வெளிச் செயற்பாடுகள் அழுத்தமான அரசியல் உள்ளீடுகளைக் கொண்டவை. துர்க்கிர அவலம், ஸ்பார்ட்டகஸ், சாபம்? விமோசனம்!, முனி, கலிலியோ, கட்டுண்ட பிராமிதியஸ், கலகக்காரர் தோழர் பெரியார் போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கன. இருபந்தைந்திற்கும் மேற்பட்ட நாடகங்களை முரா நெறியாள்கை செய்துள்ளார்.

நடுவணரசின் சங்கீத நாடக அகாதமி நடத்திய தென் மண்டல நாடக விழாவில் 1984ஆம் ஆண்டு இவரின் துர்க்கிர அவலம் என்கிற நாடகம் நிகழ்த்தப்பட்டபோது, அந்நாடகம் அனைத்து மொழியினரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்நாடகம் கிரேக்க நாடகமான ஆண்டிகனியைத் தழுவியது.

வானியல், அறிவியல் உண்மைகளை உலகிற்குச் சொன்ன கலிலியோ நாடகத்தை பல பள்ளிகளிலும் நடத்தியது நிஜநாடக இயக்கம். மத அடிப்படைவாதத்திற்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான அறிவுச் செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களுள் கலிலியோவும் ஒருவர். அவரைப் பற்றியும் அவரது கண்டுபிடிப்புகள் பற்றியும் மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தேவையை நிறைவு செய்தது இந்நாடகம். இதில் கலிலியோவாக நடித்த முரா அவர்களின் வேடப்பொருத்தம் குறிப்பிடத்தக்கது.

முனி, சங்கீத நாடக அகாதமியின் நிதி உதவித் திட்டத்தில் உருவாக்கம் பெற்ற நாடகம். கவிஞர் மலைச்சாமி இந்நாடகப் பனுவலை உருவாக்கினார். இந்நாடகம், உண்டு உறைவிடப் பயிற்சிப் பட்டறையின் வழியாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1995ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. முனி நாடகத்தின் மேடை அமைப்பு இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று. மகாபாரத – அர்ச்சுனன் தபசு தெருக்கூத்தில் பயன்படுத்தப்படும் தபசு மரத்தின் சிறு வடிவம் இந்நாடகத்தில் கையாளப்பட்டது. அர்ச்சுனன் தபசு மரம், ஆணாதிக்கத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது. அதே பொருண்மையில் முனியில் பயன்படுத்தப்பட்ட தபசு மரம், பெண்ணிய அரசியலை பளிச்சென வெளிப்படுத்தியது.

பலரைப் போலவே, தொப்புளான் ராஜாவால் பாதிப்புக்குள்ளான ஒருத்தி முனி. தொப்புளான் ராசாவின் பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்ல, முனி தன் நாக்காலேயே ராசாவைச் சுழற்றி இறுக்கிக் கொன்று விடுகிறது. பழமரபுக் கதையை அடியொற்றி, மலைச்சாமியால் உருவாக்கப்பட்ட இந்நாடகப் பனுவலை பல்வேறு பரிமாணங்களோடு பெண்ணிய அரசியல் பேசும் நாடகமாக உருவாக்கினார் முரா. தொப்புளான் ராசாவைப் போன்றோர் இந்த மண்ணில் இருக்கும் வரை முனி தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பாள்.

கிரேக்க நாடகக்காரன் ஈஸ்கைலஸ் கி.மு. வில் எழுதிய ‘புராமிதியஸ் பவுண்ட்’ என்கிற நாடகத்தை 2002ஆம் ஆண்டு இவர் நெறியாள்கை செய்தார். புராமிதியஸ் அதிகாரத்திற்கு மட்டுமே சொந்தமாக இருந்த நெருப்பை, அனைத்து மக்களும் பயன்கொள்ளும் வகையில் பரவலாக்கி விடுகிறான். அதனால் அதிகாரம் அவனை மலையுச்சியில் சிலுவையில் அறைந்து, நரிகளுக்கும் கழுகுகளுக்கும் இரையாக்குகிறது. இந்நாடகத்தில் நெருப்பு ஒரு குறியீடு. நெருப்பு என்பதை அறிவாகவும் செல்வமாகவும் கொள்ளலாம். உலக மக்கள் அனைவரும் பயன்கொள்ள வேண்டிய ஒன்றை, ஓரிடத்தில் குவித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராகப் போராடி மாண்டு போனவர்களை மக்கள் இன்றளவும் போற்றி வருகின்றனர். அத்தகையவர்களுள் ஒருவனாகத்தான் புராமிதியஸ் திகழ்கிறான். இந்நாடகத்தின் தேவை, என்றென்றைக்கும் உண்டு என்றே தோன்றுகிறது.

கலக்காரர் தோழர் பெரியார் தமிழகத்தின் பல ஊர்களில் நிகழ்த்தப்பட்ட நாடகம். பெரியாரின் கருத்துக்களை இந்த மண் அறியும். ஆனால், பெரியார் கம்யூனிச சித்தாந்தத்தை உள்வாங்கிய ஒரு தோழர் என்பதை இந்நாடகம் வெளிப்படுத்துகிறது. கறுப்புச் சட்டை பெரியாரை சிவப்புச் சட்டைப் பெரியாராக, தன் அரசியல் பார்வை சார்ந்து மேடையேற்றியவர் முரா.

பெரியாரின் வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை ஒரு கதையைப் போல காட்சிப்படுத்தியது இந்நாடகம். எளிமையான மேடைப் பொருட்களைப் பயன்படுத்தி இந்நாடகத்தைப் பல இடங்களில் மேடையேற்றுவதற்கு ஏற்ப உருவாக்கியிருந்தார் பேராசிரியர். பெரியார் இந்த மண்ணை விட்டுப் பிரிந்து பல ஆண்டுகள் ஆகிப்போன சூழலிலும் சாதி மத வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம் போன்றன இன்றும் குறைந்தபாடில்லை. இவை பெரியாரின் காலத்தைக் காட்டிலும் மேலும் வீச்சாக இருப்பதாகவே தோன்றுகிறது. ஆக, பெரியாரின் கொள்கைகளை இன்னும் வீச்சாக முன்னெடுத்துச் செல்லவேண்டிய தேவை உள்ளது.

இளைய பத்மநாதன்:
ஈழத்தைச் சார்ந்த நாடகக்காரர் இளைய பத்மநாதன் (பத்தண்ணா). இவர், போர்ச்சூழல் காரணமாகத் தமிழகத்திற்குப் புலம் பெயர்ந்தவர். தமிழகத்திற்கு வந்தவர் ஆங்காங்கே நடக்கும் கூட்டங்கள், நாடக நிகழ்வுகள், நாடக விழாக்கள் ஆகியவற்றில் கலந்துகொண்டு விவாதங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு சூழலில் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வீ. அரசு அவர்களுக்கும் நாடகக்காரர் அ. மங்கை அவர்களுக்கும் அறிமுகம் ஆகியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, நாடக ஆர்வலர்களையும் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத் துறை மாணவர்களையும் இணைத்து உருவாகியிருந்த பல்கலை அரங்கத்தோடு 1989 முதல் பத்தண்ணா செயல்படத் தொடங்குகிறார்.

பத்தண்ணா நாடக நெறியாளுனராகவும் பனுவல் ஆசிரியராகவும் செயல்படுபவர். இடதுசாரி அரசியல் பின்புலம் உள்ள இவர், தமிழகத்திற்கு வருவதற்கு முன் ஈழத்தில் நாடகங்கள் செய்து கொண்டிருந்தவர். நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி பங்கேற்பாளர்களுக்கு ஆடல், பாடல், நடிப்புப் பயிற்சிகள் அளித்து நடிகர்களாக உருவாக்கிய பிறகு பனுவலுக்குள் செல்வது பத்தண்ணாவின் முறை. தமிழ் மரபு சார்ந்த ஆடல், பாடல் உத்திகளை நவீன நாடகத்திற்கு உந்துதலாக இருக்க வேண்டும் என்பது பத்தண்ணாவின் கருத்து. அவ்வாறு உருவாக்கப்படும் நாடகமே தமிழ் அடையாளம் சார்ந்த நாடகமாக இருக்க முடியும் என நம்பிச் செயல்படுபவர். அவரது வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், “உலகின் எந்த மூலையிலிருந்தும் நாடகப் பனுவல்களை எடுத்து நாடகமாக உருவாக்கத் தயார். ஆனால், அந்தப் பனுவலை தமிழ் அடையாளம் சார்ந்த நாடகமாக உருவாக்கவே நான் முனைவேன்” என்பார். அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு கண்களுக்கு அப்பால் என்கிற ஈழத்துப் படைப்பாளி நந்தியின் பனுவலை வீதி நாடக வடிவில் உருவாக்கினார். கண்ணப்ப நாயனார் கதையை அடியொற்றிய இந்நாடகம், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை எழுப்பியது.

ஜெர்மன் நாட்டு நாடகக்காரன் பெர்ட்ரோல்ட் பிரெக்ட் எழுதிய விதியும் விதிவிலக்கும் (Exception and the Riule) என்கிற நாடகப் பனுவலைத் தழுவி, பல்கலை அரங்கத்தினர் உருவாக்கிய ஒரு பயணத்தின் கதையை 1990ஆம் ஆண்டு நெறியாள்கை செய்தார் பத்தண்ணா. இந்நாடகத்தில் புதையல் தேடிச் செல்லும் முதலாளிக்கு வழிகாட்டியும் சுமைகளைத் தூக்கிச் செல்லும் கூலியும் முதன்மையான பாத்திரங்கள். பயணத்தின் போது முதலாளி ஓய்வெடுக்கத் தங்கிய அறைக்குக் கூலி செல்கிறான். அப்போது சந்தேகித்த முதலாளி கூலியை கொலை செய்து விடுகிறான். அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. நீதியரசர் ‘முதலாளி குற்றவாளி அல்ல’ என்று தீர்ப்பளிக்கிறார்.

உழைக்கும் மக்களின் நிலையும் இடைத்தரகர்களின் நிலையும் முதலாளி வர்க்கத்தின் பண்புகளும் இந்நாடகத்தில் வெளிப்படுகின்றன. ஆடல், பாடலோடு நிகழ்த்தப்பட்ட ஒரு பயணத்தின் கதை வர்க்க அரசியலை அழுத்தமாகப் பேசியது.

பத்தண்ணா எழுதிய தீனிப்போர் நாடகப் பனுவலை அ. மங்கை நடுவணரசின் சங்கீத நாடக அகாதமியின் நிதி உதவியுடன் நெறியாள்கை செய்தார். இந்நாடகம் 1992ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. நாட்டு விலங்குகளுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர், உணவு இடைவேளையின் போது தாவர உணவு ஙீ புலால் உணவு என்பதாக உருமாறி நாடகம் நிறைவுறுகிறது. பேரா. சே. இராமானுஜம் அவர்களின் வெறியாட்டம் ஈழத்துப் போர்ச் சூழலோடு இணைத்துப் பார்க்கப்பட்டது போலவே, தீனிப்போரும் பார்க்கப்பட்டது.

1993ஆம் ஆண்டு ஏகலைவன் நாடகத்தை நெறியாள்கை செய்தார் பத்தண்ணா. மகாபாரதக் கதையில் குருபக்தியை வலியுறுத்தச் சொல்லப்பட்ட ஏகலைவன் கதையின் மறுவாசிப்பு இந்நாடகம். தெருக்கூத்தின் ஒப்பனையை இந்நாடகத்தில் இடம்பெற்ற பாண்டவர்கள் பாத்திரங்களுக்குப் பயன்படுத்தினார் பத்தண்ணா.

மற்ற நாடகங்களைப் போலவே இதுவும் ஆடல், பாடல் சார்ந்தே உருவாக்கப்பட்டது. போர்ப்பயிற்சி பெற்ற அரசர்களைக் காட்டிலும் வில்வித்தையில் சிறந்திருந்த வேடன் ஏகலைவனின் ஆற்றலைப் பொறுக்காத அரச குலம், சூழ்ச்சியால் அவனது திறமைகளை அழிக்கும் அரசியலைப் பேசுகிறது இந்நாடகம். ஆற்றல் சுரண்டல்கள் இருக்கும் வரை ஏகலைவனின் தந்தையைப் போன்றோரின் கேள்விக் குரல்கள் ஒலிக்கத்தான் வேண்டும்.

கோ. பழனி:
1989ஆம் ஆண்டு தொடக்கம் பல்கலை அரங்கில் செயல்படத் தொடங்கிய கோ. பழனி நடிகராக, இசைஞராக, நெறியாளுனராக தமிழ் நாடக வெளியில் இயங்கிக் கொண்டிருப்பவர். டிசம்பர் – 6 (வீதி நாடகம் – 1993), பாஞ்சாலி (1995), தடி (1998) ஆகிய நாடகங்களை பல்கலை அரங்கின் வாயிலாகவும் அந்நியர்கள் (1999), கத்திரிக்கா ராஜா (2004), விளக்குகள் (2005) ஆகிய சிறார் நாடகங்களையும் ஒத்திகை (தஞ்சாவூர்) நாடகக் குழுவின் வழி சாம்பான், ஒத்தல்லோ (2000 – 2001) ஆகிய நாடகங்களையும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் முகங்கள் நாடகக் குழுவின் வழி வியூகம் (2014), ஒரு ஊர்ல…!? (2016) ஆகிய நாடகங்களையும் நெறியாள்கை செய்துள்ளார். பயிற்சிப் பட்டறைகள் (பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், சீர்திருத்தப் பள்ளி சிறார்கள்), நாடக ஆய்வுகள் என்று தமிழ் நாடக வெளியில் இயங்குபவர்.

மதச் சார்பற்ற நாடான இந்தியாவில் 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. விக்கிரமாதித்தனிடம் வேதாளம் கேள்வி எழுப்பும் கதையம்சத்தை எடுத்துக்கொண்டு மசூதி இடிக்கப்பட்டது சரியா? தவறா? என்று விவாதித்தது டிசம்பர்-6. மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதநேயம் மிக்கவர்கள் இத்தகைய போக்குகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய கடமையை இந்நாடகம் வலியுறுத்துகிறது.

தடி, சாம்பான் ஆகிய நாடகங்கள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரலை எழுப்பியவை. தடி, சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழிலைச் செய்பவரின் பின்புலம் சார்ந்தது. சாம்பான், ‘குடித்தொழிலாக பறையடிக்க முடியாது’ என்று மறுத்த தஞ்சைப் பகுதியைச் சார்ந்த குருமூர்த்தி என்பவரின் வலதுகைக் கட்டைவிரல் வெட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. சாம்பான் நாடகத்தை இந்தியாவின் வீதிநாடக பிதாமகன் என்று அறியப்பட்ட பாதல் சர்க்கார் அவர்கள் பார்த்து, மகிழ்ந்து பாராட்டினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஷேக்ஸ்பியரின் நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட நாடகம் ஒத்தல்லோ. இந்நாடகத்தில் வரும் பாத்திரங்களின் பண்புகளுக்கு ஏற்ப, விலங்குகளின் முகங்கள் தலைக்கிரீடங்களாக அணிவிக்கப்பட்டன. விக்டோரியன் அரங்கைப் போன்றே பிரம்மாண்டமான தூண்களும் கேடயங்களும் பயன்படுத்தப்பட்டன. ஒத்தல்லோ, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குறியீடாக இந்நாடகத்தில் உருவகிக்கப்பட்டான்.

பாஞ்சாலி மராட்டி மொழி நாடகப் பனுவலைத் தழுவி தமிழில் நிகழ்த்தப்பட்ட நாடகம். இந்நாடகத்திற்கான நிதி உதவியை தில்லி ‘கதா’ அமைப்பு வழங்கியது. இந்நாடகம் மகாபாரதக் கதையில் வரும் திரௌபதை பாத்திரத்தை மறுவாசிப்பு செய்து, மராட்டியில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் அடையாளம் சார்ந்த ஆடல், பாடலை உள்வாங்கி பெண்ணிய அரசியலை முன்வைத்து நிகழ்த்தப்பட்டது. இந்நாடகத்தை விமர்சனம் செய்த ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், Colour Full Faces என்று பாராட்டி இருந்தது.

பூர்வகுடி மக்களை, மண்ணிற்கு அந்நியமான மாற்றார்கள் – ஆள்பவர்களை வளைத்துப்போட்டு – எவ்வாறெல்லாம் அழித்தொழித்து, வளங்களையும் வனங்களையும் அபகரித்துச் செல்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் நாடகம் வியூகம்.

காடுகள் அழித்தொழிப்பு
கனிம வளங்கள் அழித்தொழிப்பு
காற்று அழித்தொழிப்பு
நீர் வளங்கள் அழித்தொழிப்பு
மலைகள், மனித இனங்கள் அழித்தொழிப்பு
அழித்தொழிப்புகள் தொடர்கின்றன.  மனிதரைத் தவிர வேறு எந்த உயிரியும் அழித்தொழிப்புகளில் ஈடுபடுவதில்லை. மனிதருள் எவர் இவ்வகைச்செயல்களில் ஈடுபடுகின்றனர்? யாருக்காக?

அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, நகர வளர்ச்சி, நாகரீக வளர்ச்சி… என்பன போன்றவை எல்லாம் யாருக்கானவை? யாரை நோக்கியவை? இயற்கை வளங்கள் மனித இனத்தால் தம்வயப்படுத்திக் கொள்ளப்பட்ட காலம்தொடங்கி, மாபெரும் அழிவுகளைச் சந்தித்த காலம் என்பது இம்மாதிரியான ‘வளர்ச்சி’ ஏற்பட்ட காலத்தில்தான்.

அத்தியாவசிய தேவைகளுக்காக மனிதர்கள், இயற்கையை வளைத்துக் கொண்டது போய், அதி உற்பத்திக்காக வியூகங்கள் தீட்டி, தங்கள் ‘விஸ்வரூப’க்கைகளை விரித்துச் சுருட்டிய – ஆக்கிரமித்த இயற்கை வளங்கள் எத்தனை எத்தனை?! வளர்ச்சி என்ற பெயரில் மண்ணையும் மலையையும் காட்டையும் கடலையும் அவற்றை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிரிகளையும் இராட்சத எந்திரங்களால் அழித்து மனித உடல்கள்மீது ஆலைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர் இந்த வியூக‘மனிதர்கள்’ என்பதை உரத்துப் பேசிய நாடகம் இது.

இலாப நோக்கத்திற்காக மட்டுமே மண்ணின் நலனையும் மைந்தர்களின் நலன்களையும் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாது அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனம் உள்ளவரை இதுபோன்ற நாடகங்கள் அவசியமாகின்றன.

சிறார்கள், நாட்டின் வருங்காலத் தூண்கள். அவர்களது உலகம் கற்பனை ஆற்றலும் படைப்பாளுமையும் மிக்கது. எதிர்க்க வலுவற்ற இந்தப் பிஞ்சுகள் பெரியோர்களால் பல்வேறு வதைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இவற்றை முன்வைத்து நகர்கிறது ஒரு ஊர்ல…!?

சிறார்கள் ஆடிப்பாடி, ஓடி, மண்ணில் உருண்டு புரண்டு, கதை கேட்டு, கதை பேசி, சண்டையிட்டு, சுவற்றில் வரைந்து, பொம்மைகள் செய்து, விளையாடி, கூச்சலிட்டு கொண்டாட்டத்தோடும் குதூகலத்தோடும் நேரம் மறந்து, பெரிய புத்தி மனிதர் இல்லாத வனங்களில் பறவைகளோடு பறவைகளாய், மரங்களோடு மரங்களாய், செடிகளோடு செடிகளாய் வாழ ஆசை கொள்கின்றனர்.

ஆனால் ஒழுக்கம், நீதி, அறம், மரியாதை, சரி, தப்பு என்று எத்தனையோ நெறிகளை பெரியோர்கள் குழந்தைகளுக்காகவே உருவாக்கி வைத்திருப்பது போல் தோன்றுகிறது. வயதிற்கேற்ப சிறார்களை வாழ அனுமதியுங்கள். ஆண் – பெண் வேறுபாடுகள், சாதி மத பேதங்கள், ஏழை – பணக்காரன், வேலைச்சுமை, முதல் மதிப்பெண் என்று எந்த விஷ விதைகளையும் அவர்கள் நெஞ்சில் விதைக்காமல் குழந்தைகளாகவே கொஞ்ச காலமாவது, படைப்பு உலகத்தோடு வாழ வழிவிடுங்கள் பெரியோர்களே! என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்நாடகம்.

தமிழ் நாடக வெளிக்கு பல்வேறு நவீன நாடகப் பனுவல்களை வழங்கியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ந. முத்துசாமி. இவரது பனுவல்கள் பலராலும் ஆற்றுகைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்திரா பார்த்தசாரதி, பரிக்ஷா ஞாநி, கே. ஏ. குணசேகரன், பிரளயன், இரா. ராஜு, அ. மங்கை, அ. ராமசாமி, கருஞ்சுழி ஆறுமுகம், கே. எஸ். இராஜேந்திரன்,  ஆடுகளம் ராமாநுஜம், வெளி ரெங்கராஜன், கருணா பிரசாத், முருகபூபதி, வேலு சரவணன், பார்த்திபராஜா… எனப் பலரும் தமிழ் நாடக வெளியில் காத்திரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இக்கட்டுரையின் எல்லை கருதி முதலிலேயே குறிப்பிட்டது போல, என் அனுபவம் சார்ந்து சில நவீன நாடகக்காரர்கள், அவர்களின் நாடக உருவாக்கம், எனது நாடக உருவாக்கம், அவற்றின் உள்ளீடுகள் ஆகியன பற்றி இங்கு விவரித்துள்ளேன். விரிவாகப் பதிவாக்க வேறொரு களம் காத்திருக்கிறது. அதில் சந்திக்கலாம்.

 

துணை நின்ற நூல்கள்: 
அண்ணாமலை சி., நாடகம் பதிவும் பார்வையும், காவ்யா, சென்னை, 2003.
இராமசுவாமி மு., தமிழ் நாடகம் நேற்று இன்று நாளை, ருத்ரா.  தஞ்சாவூர், 1998.
———–, ‘சாபம், விமோசனம்?’ ருத்ரா பதிப்பகம், தஞ்சாவூர். 2000.
———– (பதி)., இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகங்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 1999.
இராமானுஜம் சே., ‘மௌனக்குறம்’ சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை, 1996.
குணசேகரன் கே. ஏ., இன்றைய தமிழ் நாடகச் சூழல், தன்னானே, பாண்டிச்சேரி, 1999.
————-., கே. ஏ. குணசேகரன் நாடகங்கள், என். சி. பி. எச்., சென்னை, 2004.
பகவதி கு., (பதி) தமிழ் நாடகம் – நேற்றும் இன்றும், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 2000.
பழனி கோ., வியூகம், கனலி பதிப்பகம், சென்னை, 2015.
மங்கை அ., பெண்-அரங்கம்- தமிழ்ச்சூழல், ஸ்நேகா, சென்னை, 2001.

No comments:

Post a Comment