Saturday, January 19, 2019

தமிழ் ஆள; தமிழ் பேசு...

—  வித்யாசாகர்


          ஜென்மராஜ், ப்ரஷாத், ஹரிஷ், ஹிருதிக், கௌரி, சாந்தினி, சௌமியா, சோபியா, மிளன், ராபர்ட், ஆல்வின், நிஷா, அமித், முஸ்தாக், வித்யா, வித்யாசாகர் என பல பெயர்களை நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனாலும் இவையெல்லாம் தமிழ்ச்சொல் அல்ல எனும் ஏக்கம், மறுப்பு, வருத்தமும் நம்மிடையே இப்போதெல்லாம் எண்ணற்றோருக்கு உண்டு.



          என்றாலும் மொழி வளர்ச்சி, வாழ்வுநிலை, சுற்றத்தார் பொருத்து மொழியும் பல மாறுதலுக்கிணங்க தானே திரிந்தும் கலந்தும் விடுகிறது. எனவே எதையும் முற்றிலும் தமிழில்லை என்று அகற்றிவிடலாமா? அல்லது தனித்தமிழ் அல்ல என்று ஒதுக்கலாமா? எல்லாம் தமிழ்தான் ஆயினும் கலப்புத்தமிழ் இல்லையா என்று வருந்தியே நகர்வதா???

          இவையெல்லாம் சமஸ்கிருத, ஹிந்தி மற்றும் பிற மொழிச் சொற்கள் அல்லது பிற மொழிக் கலாச்சாரத்தால் வந்த சேர்ப்புகள் இல்லையா ? என்றாலும், அனைத்து மொழிக்குமே தாய் ‘நம் ஆதி மொழி’ தமிழ் தான் என்பதிலும் எண்ணற்றோருக்கு உலகளவில் மாற்றுக் கருத்தில்லையே.



          எனவே இவையெல்லாம் தமிழுக்கு பிறமொழிகளிடமிருந்து வந்துள்ளது என்பதை விட, தமிழிலிருந்து தான் பிற மொழிகள் வந்துள்ளன என்பதை உலகமே இதோ மெல்ல மெல்ல ஏற்று வருகிறது. இவ்வருட கனடா ஜப்பான் லண்டன் அமெரிக்கா வளைகுடா நாடுகள் என உலகளாவிய பல பொங்கல் தினக் கொண்டாட்டங்களும் அதற்கொரு சான்று.

          என்றாலும் குழந்தைகளுக்கு பெயரிடுகையில், விளக்கமளிக்க அவசியமற்றவாறு தனித்தமிழில் மிக அழகாக எவ்வித சார்புமற்று வைக்கலாம். வெண்ணிலா, அறிவு, செல்வன், மதிநிறை, குறள், அருவி, மல்லி.. என்றெல்லாம்.

          வெள்ளைக்காரர்கள் இப்படித்தான் அவர்கள் மொழிக்கு நிறைவாக, ஸ்டவ், ஸ்ட்ரீட், ட்ரீ, ஸ்டீல், கேவ், மூன், கேட், ஃபிஷ், ஜாஸ்மின், காட் என்றெல்லாம் வைக்கிறார்கள்.

          நாம் கூட முன்பு இப்படியெல்லாம் வைத்திருந்தோம்; சிவப்பு, செவலை, கருப்பு, தேனு, அடுப்பு, பறி, சூரியன், சந்திரன் என்றெல்லாம் நிறைவாக நம் சொல்லினிக்க மொழியினிக்க வைத்திருந்தோம்.

          ஏனென்றால்  பெயர் என்பது ஒருவரை அழைக்க, குறிப்பிட என்றாலும் வாழ்நாள் முழுவதும் வெற்றி வெற்றி என்று அழைப்பதொரு போற்றுதலும் இல்லையா? தாத்தா போல வரவேண்டும், பாட்டி போல இருக்க வேண்டும், சூரியனைப்பொல ஒளிர வேண்டும், அருவி போல நிறைய வேண்டும் எனப் பலவாறு எண்ணற்ற மேற்கோள்கள், எதிர்பார்ப்புகள், நன்னெறி கொண்ட சிந்தனைகள், மொழிச் சீர் கொண்ட சொற்கள், பலவகைகள், தவிர நேர்மறை எண்ணங்கள் புக, வர, வளர என பல ஆழப் பார்வை பெயர் வைக்கையில் உளம்நிறைவதுண்டு.

          இடையே கூட ஒரு குழந்தைக்கு ‘மதிநிறைச் செல்வன்’ என்று வைத்தோம், அவர்கள் வீட்டில் மதி என்றழைக்கிறார்கள், அழைக்க ஏதுவாக இருக்குமென்று.

          அப்படி மதி, குயில், அகில், முகில், குறள், வெள்ளி, வாணி, அருள், மணி, சுடர், பாரி, ஓரி, நீதி, கொடை, தனம், அன்பு, நதி, மணி, முத்து, மரகதம், பவளம், குழலி, எழிலி, குறளி, வெண்பா என எண்ணற்ற அழகிய தமிழ் சொற்கள் பெயர்கள் மிகச் சிறப்பாக நம்மிடையே உண்டு அவற்றையெல்லாம் நாம் பார்த்து பார்த்து வைத்துப் பழக பழக மேலுள்ள கலப்புவகைப் பெயர்களின் மீதான ஆசை தானே ஒழியும். பின் பழக்கமும் அங்ஙனம் மெல்ல மாறிவிடும்.

          பிறமொழி புகுதலை தடுத்து நிறுத்துகையில் தான் நம் மொழியின் வளம் மிகப் பெருகும். இது நமது தமிழுக்கென்று மட்டுமல்ல அவரவர் தாய்மொழிக்கும் பொருந்தும்.

          வெறுமனே, ஒரு எண்ண பரிமாற்றம் தானே மொழி என்றெண்ணக்கூடாது. தகவலறிவிக்கத் தானே என்று விட்டுவிடலாகாது தமிழை நம்மால். மொழி தான் நிலத்தைப் பிரிக்கிறது என்பார் ஐயா கவிஞர் வைரமுத்து.

          அங்ஙனம் நிலம் பிரிகையில் இனம் மாறிவிடுமோ எனும் நெடிய பதட்டம் இருக்கிறது. சான்றுகளை நாம் பல மாநிலப் பிரிவுகளின் வழியே கண்டுதான் வருகிறோம். அன்று நாம் சேர்ந்து கட்டிய நதியிலிருந்து வரும் தண்ணீரின்றி மொழிவாரியாகப் பிரிக்கப்படுகிறது.

          ஆக, இனம் மாறிக்கொண்டால் பழக்கவழக்கங்கள் சிதையும். அல்லாது, வெற்றிக் குவிப்புகள் இடம் மாறிவிடும். வரலாறு பிழையாக பிழையாக பேசப் புறப்பட்டு விடுவர் பலர். எண்ணற்ற குழப்பங்கள் மொழி திரிவதால் காலமாற்றங்களிடையே நிகழ்ந்துவிடும்.

          எனவே மொழிமீது அக்கறை கொள்ளுங்கள். அவரவர் மொழிமீது அவரவர் அக்கறை கொள்ளுங்கள். தெலுங்கு பேச சந்தர்ப்பமோ, ஹிந்தி பேச சூழலோ, ஆங்கிலம் பேச கட்டாயமோ இருப்பின் அங்கே கசடற பேசுவோம். பேசப் பயிற்சி எடுப்போம்.

          பல மொழி கற்றுக்கொள்வது பல மனிதர்களைப் புரிய அணுக ஏற்க மறுக்க வாதிடச் சொல்லித்தர வணிகம் செய்ய தேவைப்படும். பிற மொழிகளைக் கற்றல் என்பது திறனைக் கூட்டும். அவர்களின் பண்பாடு, வரலாறு உயர் குறிப்புகள் என அனைத்தையும் அறியலாம் தவறில்லை.

          ஆனால் எவ்வாறு அம்மொழிகளைக் கற்று மிக நேர்த்தியாகப் பேசுகிறோமோ; அங்ஙனம் நம் மொழியையும் அதன் செழுமையோடு பேசுவதும் உச்சரிப்பதும் எழுதுவதும் பகிர்வதும் இன்றியமையாத ஒன்றாகும். எம்மொழியும் செறிவோடு பேசுகையில் கேட்கையில் அழகுதாம்.

          ஆயினும் நமக்கு நமது தமிழ் மிகச் சிறப்பான ஒன்றாகும். மூப்பு நிறைந்த நமது மொழியைப் பிற மொழிகளைக் கலந்து சிதைப்பது நல்ல அறிவன்று. நீங்களே அதைத் தனித்து தமிழில் பேச பேச முற்றிலும் உணர்வீர்கள்.

          எனவே முதலில் நேரம் சொல்வதில், வழி சொல்வதில், பெயரிடுவதில், தொழில் துவங்குவதிலிருந்து துவங்குங்கள். இவை தான் இன்றைய முழுச் சான்றுகள் நாம் நமது அழகு தமிழை சிதைத்துவிட்டோம் என்பதற்கு.

          எனவே அங்கிருந்து துவங்கி எங்கும் நிறைந்த மொழி எம் தமிழை ஒரு தமிழரின் மரபு அறிய, மறம் உணர்த்த, மாண்பு நிலைக்கத் தூக்கி பிடித்திருப்போம். தவறில்லை. மெல்ல மெல்ல வெறியின்றி குழப்பம் விடுத்துத் தெள்ளு தமிழில் பேசி நமக்குள் நாம் மகிழ்வோமே உறவுகளே.

          தவறாக எண்ணாதீர்கள், இவையெல்லாம் என் அறிவிற்குப் பட்டது. எல்லாம் சரியென்றில்லை. பிற கருத்துக்களும் அமையலாம். அவரவர் கருத்தை நான் ஏற்கத் தயார் எனினும் தமிழ் நம் மூலம் என்பதை எல்லோருமே அறிகிறோம், பிறகதை அழகுறப் பேசுவதற்கு, பெயர் சூட்டுவதற்கு தமிழை எப்போதும் நம் இனியதொரு அடையாளமாக வைத்திருப்பதற்குத் தயங்குவானேன்.

          குறைந்த பட்சம் வீட்டில் பிறமொழி கலப்பின்றி பேச முயலுங்கள். நண்பர்களோடு உறவினர்களோடு அக்கம்பக்கம் பழகுகையில் தூய தமிழ்பேசி பழகுங்கள். குழந்தைகள் நம்மிடம் பேசுகையில், குழந்தைகளிடம் நாம் பேசுகையில், குழந்தைகள் பிறரிடம் பேசிப் புழங்குகையில் பிறமொழி கலவாமல் பேசச் சொல்லிக்கொடுங்கள்.

          குழந்தைகள் நம் வரம். தமிழ் அவர்களுக்கு நாம் தரும் வரம். அதை உடைக்காது தருவோமே? எனக்கு நம்பிக்கையுண்டு; இப்போதெல்லாம் நம் மக்கள் மிக அறிவாகச் செறிவாக பாரம்பரியம் கெடாது வாழத்துவங்கி விட்டனர். எனவே தமிழையும் அழகாக உணர்வோடு சேர்த்து கலப்பின்றி பேசி மகிழ்வாரென்று எனக்குப் பெரிய நம்பிக்கையுண்டு.

          என்றாலும் ஒன்று உண்மை. மொழி சார்ந்து நாமெல்லாம் சிந்திக்க பழகிவிட்டோம். இனி; நம் காதுகளில் பேசக்கேட்கும் பேசப்படும் தமிழும் மேலும் இனித்துவிடும் என்பது சத்தியம்.

          அதற்கு நன்றி. வணக்கம். வாழ்க!!


குறிப்பு: நீ முதலில் வித்யாசாகர் என்ற பெயரை தமிழில் வையிடான்னு திட்டி விடாதீர்கள். ஒன்று; வித்யா என்பது அன்று என் இறந்த தங்கையின் பெயர். அதனால் இன்று எனது மகளின் பெயர். எனவே அஃதென் பெயரும் கூட... எல்லாவற்றையும் விட, அறிவுக்கடல்னு தமிழில் வைத்தால் மிக அதீதமாகிவிடலாம். நான் கடல் அல்ல; நீங்களெல்லாம் கலந்திருக்கும் கடலின் ஒரு துளி.



தொடர்பு: வித்யாசாகர் - www.vithyasagar.com;  (vidhyasagar1976@gmail.com)






No comments:

Post a Comment