Friday, January 11, 2019

உண்டாலம்ம இவ்வுலகம்!

—  சொ.வினைதீர்த்தான்


பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (182). புறநானூறு.

பாடலின் பின்னணி: இப்பாடலில், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, மனித நேயத்தோடு “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர்” உள்ளதால்தான் இவ்வுலகம் நிலைபெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற உயர்ந்த கருத்தைக் கூறுகிறான்.

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.


கொண்டு கூட்டு: இவ்வுலகம் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே உண்டு எனக் கூட்டுக.

உரை: இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும், அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டார்கள்; யாரையும் வெறுக்க மாட்டார்கள்; சோம்பலின்றிச் செயல்படுவார்கள்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்; புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்; பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; மனம் தளர மாட்டார்கள். இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல், பிறர்க்காக வலிய முயற்சியுடன் உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

சிறப்புக் குறிப்பு:
திருக்குறளில் பல அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் இப்பாடலில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, விருந்தோம்பல், அன்புடைமை, வெகுளாமை, அறிவுடைமை, மடியின்மை, தீவினையச்சம், ஊக்கமுடைமை, புகழ், ஈகை, ஒப்புரவு, பண்புடைமை ஆகிய அதிகாரங்களின் மையக்கருத்துக்களை இப்பாடலில் காணலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு குறட்பாக்களின் கருத்துகளுக்கும் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காண்க.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் - 82)
பொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தது அன்று.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். (குறள் - 428)
பொருள்: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். (குறள் - 996)
பொருள்: பண்புடையவர்கள் பொருந்தி இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது;. அவர்கள் இல்லையேல் அது மண்ணினுள்ளே புதைந்து மறைந்து போகும்.




தொடர்பு: சொ.வினைதீர்த்தான்
karuannam@gmail.com





No comments:

Post a Comment