Wednesday, January 9, 2019

கண்ணீரை வெல்லும் வானம்பாடிகள்.. (வெளிநாட்டு வாழ் தமிழர்கள்)

——    வித்யாசாகர்


கூடுகளைத் தேடாமல் சிறகுகளுக்குள் அடங்கிக்கொண்டவர்கள் நாங்கள். கதகதப்பிற்கு மாறாக நெருக்கத்தின் வெப்பத்தால் தகித்தாலும் ஒற்றுமையெனும் வலிமைக்காய் கைகால் முடங்கிக்கொண்டு லட்சிய முழக்கத்தை நிறுத்திக்கொள்ளாத நெறியுள்ள வானம்பாடிகள் நாங்கள். எங்களுக்கு கனவு பறப்பதாக இல்லை வாழ்வதாக இருக்கிறது, ஆம் அது எல்லோருக்குமான வாழ்வு.

சிக்கித் தவித்து துடித்து பசியில் வாடி, ஏழ்மையில் நலிந்து, எதற்கும் விலைபோனவர்களாய் வாழும் இலவச விரும்பிகளான எம் சமுதாயத்திற்கு ஓர் விடிவு வேண்டும். நாங்கள் சிறகடித்து பறக்கும் வானத்தைப் பற்றி பேசுவதேயில்லை, பசியை எல்லோருக்கும் போக்கிடாத கனவுதனை தீதென்று எண்ணி அஞ்சுகிறோம்.

ஆதி மனிதர்களான நம்மிடம் எல்லையற்ற பலமும் அறிவும் இருக்கிறது, மரபூரிய மாண்பும் மறமும் விஞ்சியிருக்கிறது, ஆயினும் ஏன் எங்குக் காணினும் இரண்டாம் பட்சமாய் எட்டித் தள்ளப்படுகிறோம்? எட்டித் தள்ளியபின்னும் எதற்கு அஞ்சி நிற்கிறோம்? யார் எம் சிறகுகளை உடைப்பவர்? கனவுக்குத் துயிலும் தூக்கத்தை எம் விடுதலையோடுச் சேர்த்து, கொண்டுபோனவர் எவர்? எமக்குத் தெரியும்’ யாருமில.

ஆம்; யாருமில எமை வஞ்சித்தவர். எங்களை எம்மினத்தை யாராலும் தோற்கடிக்கவோ ஏமாற்றவோ முடியாது, ஆனால் தோற்க எங்கோ பிசகி எப்படியோ நாம் தயாராகிவிட்டோம். ஏமாற ஏனோ சம்மதித்து சம்மதித்து பெரியதொரு சதியின் பள்ளத்தில் விழத் தானே பழகிக்கொண்டோம். அதிலிருந்து நாமெல்லாம் வெளியே வருகையில், தம் எண்ணத்துள் தாம் வென்றுநிற்கையில் எமது அடுத்த தலைமுறைக் குஞ்சுகள் நாளை விண்ணில் தானே பறக்கத் துவங்கிவிடும்.

எனவே நாங்கள் எங்கள் தூக்கத்தைத் தொலைத்து எமது தலைமுறையின் கனவுகளுக்கு விடைதனை  தேடி கடல் தாண்டி அலைகிறோம். எமது விடுதலை இதோ எங்களின் சட்டைப்பையில் உண்டென்று எங்களின் பிள்ளைகள் நம்பும் புள்ளியில் எங்களின் ஏக்கங்களுக்கும் நாளை சிறகு முளைத்துவிடும்.

அதற்குச் சான்றாகத்தான் நாங்கள் கூடுகளாய்ப் பிரிந்துகொள்வதில்லை. மாறாக ஒற்றைக் கூட்டிற்குள் அடங்கிப் போகிறோம். ஏதோவொரு நாட்டிற்குள்ளும் தமிழர்களாக மட்டுமே அடையாளப் படுகிறோம். அந்தத் தமிழரெனும் கூட்டிற்குக் குச்சிகளை தேடியலைந்து தங்கக் கம்பிகளை முடைந்துவிட்ட எங்களின் சேர சோழ பாண்டிய மன்னர்களான பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நன்றி.

ஏதோ முடிந்தது வாழ்வென ஓய்ந்துவிடாமல் எப்பொழுதும் உழைப்பு உழைப்பு வெற்றி வெற்றி என்று  நாடு நாடாகத் தேசம் தேசமாக ஓடி ஓடி எங்கும் எப்பொழுதும் எதற்கும் தளர்ந்து நின்றுவிடாமல் உழைத்து உழைத்து முன்சென்ற எங்களின் கனவுத் தொழிற்சாலைகளுக்கும், அனைத்து வியர்வை வைரங்களுக்கும், எங்களன்பு உழைப்பாளிகளான மொத்த வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கும்  இந்த மழைநேரத்து உதவிக்கான மாண்பு சொறிந்த நன்றி. வெறும் குச்சிகளை தங்கக் கம்பிகளாக்கிய பல தொழிலாளர்களுக்கும்  முதலாளிகளுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் நன்றி. 

வெறும் நன்றியோடு நிற்பதெங்கே, வாருங்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமைத் தேரிழுப்போம். மழை வெள்ளம் இடி மின்னல் எது வரினும் நாம் ஒன்றே என கூடி நிற்போம். நம்மில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளெல்லாம் இடிந்துபோகட்டும் இனி. அன்புத் தீயிட்டு எரிப்போம் தீயெண்ணத்தை. அதில் சாதித் திமிரது இருந்தாலும் பொசுங்கிப்போகட்டும். வானத்து விண்மீன்களை இழுத்து எம் வரிகளுள் கட்டிவைப்போம். காதலர்கள் கைகோர்த்துச்செல்கையில் பின்னே வண்ணங்களாய் மின்னட்டுமந்த விண்மீன்களெல்லாம். வாழ்க்கையை மிக அழகியலோடு வாழ்வோம், வருங்காலத்திற்கு நல்லதாக நம் வரலாறு மிஞ்சட்டும் தோழர்களே..

வாய்மையையும் உழைப்பையும் அறத்தையும் ஒவ்வொரு சொல்லுக்கும் போற்றுவோம்; வாழ்ந்தவர் தமிழரென்று இந்த உலகம் தானே நமை அடையாளங் கண்டுகொள்ளட்டும். அன்று பறக்கும் தமிழரின் வெற்றிக் கோடிக்கு மகிழ்ச்சியின் வண்ணங்களும், இனி நாம் ஒற்றுமையில் தோற்காத ஒற்றை நிறமுமே பூசப்பட்டிருக்கட்டும்.

வாழ்க எந் தமிழர்தம் நாடு; வளர்க எம்மக்கள்..



தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)



No comments:

Post a Comment