Wednesday, June 1, 2016

பெண் எனும் நுட்பம்

-- ருத்ரா இ.பரமசிவன்



பெண்ணே
உன் நெருப்பு பார்வைக்குள்
ஒரு குளிர்ந்த‌
காஷ்மீர்ச்சோலையையும்
பொதித்து வைக்கும்
நுட்பம் தெரிந்தவள் நீ.
ஈடன் தோட்டத்து
ஆப்பிளும் நீயே!
இலவங்காட்டு
பஞ்சடைத்த பழமும் நீயே.
அகரமுதல என்று
நீ ஆரம்பித்தாலும்
அதில்
இவர்கள்
காமத்துப்பாலை மட்டும்
எதிர்பார்த்து
பேசிக்கொண்டிருப்பார்கள்.
ஜெயகாந்தனிலிருந்து
ஸ்டீஃபன் கிங் வரை
நீ நாவல்கள் அளப்பாய்.
இவர்களும்
எமிலி சோலாவையும்
ஹெரால்டு ராபின்ஸையும்
தொட்டுக்காட்டுவார்கள்.
குறுந்தொகையிலிருந்து
"கல்பொரு சிறு நுரையை"
நீ ஓவியம் தீட்டுவாய்.
சிலபேர் மட்டும்
"முளிதயிர் பிசைந்த‌
மென்காந்தள் விரல்"
என்று
உன்னுடன் மல்லாடுவார்கள்.
சமூக அரசியல்
காட்டுக்குள் நீ சென்றால்
அந்த‌
நிர்பயாவைத்தொடாமல்
இருக்கமாட்டாய்.
இவர்களும்
அந்த ஆண்களுக்கு
தூக்குக் கயிறு சகிதம்
கோபக்கனல் காட்டுவார்கள்.
அப்போது
"என்னம்மா! பேசிகிட்டே இருக்கியே
எனக்கு பசிக்குது அம்மா"
என்று
எட்டு வயது குறும்பெண்
குட்டைப்பாவாடையில்
உன் எதிரே வந்து நிற்பாள்.
நீயோ
அப்போதும்
பெர்னார்ட் ஷாவின்
ஆர்ம்ஸ் அண்ட் தி மேன் ல்
வரும்
கேப்டன் ப்ளண்ட்ச்லி எனும்
சாக்கலேட் கிரீம் சோல்ஜரைப்பற்றி
நையாண்டித்தனம்
செய்து கொண்டிருப்பாய்.
அப்போது தான் தெரிந்தது
இவர்கள் கையில் எல்லாம்
லாலி பாப் என்று.



______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________

No comments:

Post a Comment