Sunday, June 19, 2016

அப்பாக்களின் தினம்

-- ருத்ரா இ.பரமசிவன்



மரம்
தான் நிற்பதை மறந்து
தன் நிழல் பார்த்து
தன் முகம் தேடியது.
அதில் தன் துடிப்பு தெரிந்தது.
கனவு காணக்கூட‌
மறந்த தன் வாழ்க்கை ஓட்டத்தின்
மிச்ச சொச்சங்களை
அந்த நிழலில்
கனவாக்கியது.
அடடே!
தன் கனவுகளுக்கா
இந்த மாணிக்கக் கைகளும் கால்களும்
என்று
அந்த நிழலின் கன்னத்தை
நுள்ளி விளையாடியது மரம்.
தன் ஏக்கங்களும் பெருமூச்சுகளும்
அந்த நிழலுக்குள் நிழலாய்
அப்பிக்கிடந்ததன்
மூலம் எது
என்று
அந்த மரம் தேடியது!
அந்த நிழல்
ஒரு புழுக்கூடு போல்
அசைந்தது.
ஒரு நாள் அந்த "கோக்கூன்" உடைந்து
எங்கும் வர்ணப்பிரளயம்.
என் கருப்பு நிழலுக்கு
ஏது இத்தனை வர்ணக்குழம்புகள்?
மரம் வியந்து போனது.
பிஞ்சு நிழல் கீற்றின் குரல்
அப்பா...
என்றது!
யாரது? யாரது?
மரம் பரிதவித்துக்கேட்டது.
பெரிய நிழல் சொன்னது..
நீ யாரப்பா?
அது என் குழந்தை?
நான் அதன் அப்பா!
அப்படி யென்றால்
நான் யார்?
மரம் கேட்டது?
மீண்டும்
அதே கேள்வியை கேட்கும் முன்
இடையில்
கோடரி விழுந்தது.
மரம் போய்விட்டது!
ஆனால்
நிழல் மட்டும் அங்கு இருந்தது.






______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
 

No comments:

Post a Comment