Friday, June 24, 2016

தமிழகத்தில் அரிதான 1000 ஆண்டுகள் பழைமையான நந்தி சிற்பம் தமிழ் எழுத்துக்களுடன் கண்டுபிடிப்பு

-- சு.ரவிக்குமார்

திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த க.பொன்னுச்சாமி, ச.ரஞ்சித், ரா.செந்தில்குமார் மற்றும் பொறியாளர் சு.ரவிக்குமார் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் திருப்பூர் - காங்கேயம் சாலையில் பண்டைய காலத்தில் கல் மணிகள் அதிகம் கிடைத்து ரோம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட படியூரில் இருந்து தெற்கே 3 கி.மீ தொலைவில் உள்ள சின்னாரிப்பட்டி கிராமத்தில் இருக்கும் கம்பத்தீஸ்வர்கோவிலில் 1000 ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய நந்திச் சிற்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இதைப்பற்றி ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறியாளர் சு.ரவிக்குமார் மேலும் கூறியதாவது,

திருவள்ளுவர் பெருந்தகை உழவர் உலகத்துக்கு அச்சாணி என்பார். அந்த உழவர்க்கே அச்சாணியாக விளங்குபவை காளைகள். தமிழர்களின் 3000 ஆண்டுப் பாரம்பரிய வாழ்வுடன் பசுவும்,காளைகளும் கலந்து உயர்வு பெற்றன. சிந்து சமவெளி நாகரிக இடங்களில் இருந்து கிடைக்கும் சுடு மண்ணாலான காளை உருவங்கள், காளைச் சின்னம் பொறித்த முத்திரைகள் இவற்றை மெய்ப்பிக்கின்றன. காளைகள் தமிழர் தம் பண்பாட்டையும் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பறை சாற்றி நிற்கின்றன. தமிழ் மக்களின் விழுமியங்களைப் பிரதிபலிக்கின்றன. தமிழர்கள் வாழ்க்கையை எப்படி நோக்கினர் என்பதை எடுத்துக்கூறுவது காளைகள் தியாகத்தை வலியுறுத்துவது காளை நல்ல சிந்தனைகளையும் ஆன்மீக எழுச்சியினையும் ஊட்ட வல்லது காளை. மனித குலமேம்பாட்டுக்கான தமிழ்நெறி விழுமியங்களைச் சுட்டி நிற்பது காளையாகும். எனவே தான் காளையும் கவியும் தமிழ் பேசும் மக்களை ஐக்கியப்படுத்தும் தன்மை வாய்ந்தவை ஆயின. அதனால் தான் தமிழர்கள் தாம் வணங்கிய இறைவனையும் ஆவினத்தோடு தொடர்பு படுத்தினார்கள். தாங்கள் ஊர்தியாகப் பயன்படுத்தியது போல் தூய வெண்ணிற நந்தியைத் தாம் வணங்கிய இறைவனுக்கும் ஊர்தியாக அமைத்தனர்.அதனையே கொடியாகவும் கொடுத்து வணங்கி வழிபட்டனர். இதனைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் புறம் கடவுள் வாழ்த்துப் பாடலில்

“ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப“

எனச் சுட்டுகிறார். நந்திக் கொடியாகவும் ஊர்தியாகவும் அமைவது போன்று அதன் துணையினமாகிய பசுவும் இறைவனை முழுக்காட்டப் பால், தயிர், நெய், அநீர், ஆப்பி என்று அனைத்தினையும் அளிக்கிறது. பெரும்பசுக் கூட்டத்துக்குத் தலைமை வகிக்கும் ஒருவன் மக்கள் கூட்டத்தின் தலைவனாகக் கருதப்பட்டான். இவ்வாறு பசுக்கூட்டத்தின் தலைவன் என்ற பொருளில் முன் வழங்கப்பட்ட “பசுபதி“ என்ற சொல் ஒப்புமை காரணமாக மனிதப் பசுக்கூட்டத் தலைவனாகிய இறைவனுக்கும் வழங்கி வரலாயிற்று. இச்சிறப்பினை மேலும் பறைசாற்றும் வண்ணம் சிவன் கோவில்களில் இலிங்கத்தின் திருமுன்பும், அம்மையின் திருமுன்பும் நந்தி அமைக்கப்பட்டு இருக்கிறது. சிவனுக்கு வாகனமும் நந்தியே கொடிச் சின்னமும் நந்தியேயாகும். அதேபோல் முல்லைத் தினைக் கடவுளாம் மாடுகள் மேய்த்திடும் கண்ணன்  “ஆநிரைகள் சூழப்பெற்ற சாயலிலேயே காட்சியளிக்கிறான். அவ்விறைவனை தமிழ்மக்கள் தொன்று தொட்டு பசுக் கூட்டங்களினிடையே வைத்துத்தான் வழிபாட்டு வருகின்றனர். அதேபோல் சென்ற திசை எல்லாம் வெற்றிக்கொடி பறக்கவிடப்பட்ட பல்லவ மன்னர்களும் நந்தியைத் தங்கள் தேசிய கொடியாகக் கொண்டிருந்தனர். பண்டைய தமிழ் இலக்கியத்தில் “கோ“ என்ற சொல் நாட்டுத் தலைவனைக் குறிக்கும் அதே சொல் பசுவுக்கும் காளைகளுக்கும் வழங்கும் பொதுச் சொல்லாகும். இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்ற நந்தியின் சிற்பம் கொங்கு மண்டலத்தில் “பட்டி“ எனும் சொல் “அடைப்பு“ எனும் பொருளில் கால்நடைகளை அடைக்கும் இடத்தைக் குறிப்பதாகும். இவ்வாறு பட்டி என்று முடியும் கிராமத்தில் நமக்குத் தமிழ் எழுத்துக்களுடன் நந்தி சிற்பம்  கிடைத்திருப்பது மிக மிகச் சிறப்பான ஒன்று. இச்சிற்பம்  90செ.மீ நீளமும்  50செ.மீ உயரமும் 8 வரி எழுத்துக்களைக் கொண்டதாகும்.


இவ்வெழுத்துக்களை வாசித்த உலகின் தலை சிறந்த தொல்லியல் அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர். எ.சுப்பராயலு அவர்களும் தமிழக  தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர் ரா. பூங்குன்றனார் அவர்களும் “ஸ்வஸ்தி ஸ்ரீ“ என்று தொடங்கும் இக்கல்வெட்டு இப்பகுதியை ஆண்ட பெரும்பாலகுறிச்சல்லியை சேர்ந்த காமிண்டன் தேவ நக்கனேன் என்ற அதிகாரியால் எடுக்கப்பட்டதாகும் என்றும், இது அவருடைய அல்லது அந்தக் கிராமத்திலுள்ள கால்நடைகள் நோய் வாய்ப்பட்ட போது அந்த நோய் குணமானவுடன்  அதற்கு உருவாரமாகச் செய்து வைத்ததாகும் என்றும் இந்நடைமுறை இன்றும் கொங்குப்பகுதியில் நீடிப்பதாகவும் இன்று மக்கள் மண்ணால் உருவாரம் செய்துவைப்பதாகவும் கூறினர். அரிதான இந்நந்தி சிற்பம் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்றனர்.


______________________________________________________
பொறியாளர் சு.ரவிக்குமார் BE.,M.I.E.,D.E.G.,
வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுமையம்
இயக்குநர்
9842255118
verarajendran1206@yahoo.in    
______________________________________________________



No comments:

Post a Comment